பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, August 27, 2013

கம்பன்

                           கம்பனின் காப்பியச் சிறப்பு

கம்பன் ஒரு ஒப்பற்ற புலவன். சங்க காலத்துக்கும், புதிய யுகத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் 12ஆம் நூற்றாண்டில் இருந்த தெய்வப் புலவன். தமிழோடு வடமொழியையும் போற்றி வந்த காரணத்தால் தமிழகத்தில் பல நூல்கள் வடமொழியிலினின்றும் தழுவி இயற்றப் பட்டிருக்கின்றன. தமிழ்ப் புலவர்கள் சம்ஸ்கிருதம் கற்கவில்லையென்றால் நமக்கு ஒரு கம்ப ராமாயணம் ஒரு வில்லி பாரதமோ அல்லது நள வெண்பாவோ கிடைத்திருக்க வாய்ப்பில்லை. அந்த வரிசையில் கம்பனின் காப்பியச் சிறப்புக் கருதியே மகாகவி பாரதி 'கம்பனைப் போல், வள்ளுவனைப் போல், இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை' என்று தலை நிமிர்ந்து சொல்லுகிறான். அந்த கம்பனின் காப்பியத்தில் தொட்ட இடத்திலெல்லாம் அழகும், கவிச்சுவையும் மிளிர்வதைப் பார்க்க முடிகிறது. சில இடங்களில் கம்பனின் வர்ணனைகளைப் பார்க்கும்போது, இப்படிக்கூட சிந்திக்க முடியுமா என்று வியப்படைகிறோம். அப்படிப்பட்ட சிறப்பான காட்சிகள் காவியம் முழுவதும் நிரம்பிக் கிடந்தாலும், அவற்றில் என் மனத்தைக் கவர்ந்த சில இடங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 

காவியத்தின் தொடக்கத்தில் நாட்டு வளம் குறித்து கம்பனின் வர்ணனையிலேயே அவனுடைய கற்பனை எட்டமுடியாத உயரத்துக்குச் சென்றுவிடுகிறது. கோசல நாட்டில் வறுமை என்பதே இல்லை என்பதைச் சொல்ல வந்த கவிஞன் அங்கு இரந்துண்பார் எவருமே இல்லை என்கிறான். இரப்பார் எவருமில்லை என்பதால் வள்ளல் தன்மையோடு கொடுப்பார் எவரும் இல்லையாம். பகை இல்லை என்பதால் அங்கு போர் என்பதே இல்லை, பொய் பேசுவோர் எவருமே இல்லையென்பதால் அங்கு வாய்மையின் சிறப்பு வெளிப்படவில்லை, மக்கள் கல்வியில் தேர்ந்தவர்களாக இருப்பதால் அறிவின் மேம்பாடு வெளிப்படவில்லை. இப்படி விளைவைச் சொல்லி வினைகள் எவை என்பதை அழகாகப் படம்பிடித்துக் காட்டுகிறார் கம்பர். அந்த சிறப்பு மிக்க கோசல நாட்டுக்கு மன்னனாக இருப்பவன் தசரதன். அவன் அந்த நாட்டு மக்களின் உயிர்கள் எல்லாம் ஒடுங்கி அடங்கும் உடலாக வாழ்ந்தான் என்கிறார், நாட்டுக்கு ஏதேனும் தீங்கு விளையுமென்றால், மன்னன் அவற்றைத் தீர்க்கும் மருந்தாக இருந்தானாம். இதுபோன்ற ஒப்பீடுகள் எல்லாம் எந்தக் காலத்துக்கும் பொருந்துவனவாக அமைந்திருக்கிறது அல்லவா? 

விசுவாமித்திர முனிவர் இராம இலட்சுமணர் இருவரையும் கானகத்தில் தான் நடத்தும் வேள்வியைக் காப்பதற்காக அழைத்துக் கொண்டு போகும்போது தாடகை எனும் அரக்கியைப் பற்றிக் கூறுகிறார். அந்தத் தாடகை எத்தனை அவலட்சணமானவள், கோரமானவள் என்பதைச் சொல்லப் புகுந்த முனிவர், இராமனை என்ன சொல்லிப் புகழ்கிறார் தெரியுமா? இராமா! உன் அழகைக் கண்டு பெண்கள் மோகிப்பது என்பது தவிர்க்க முடியாதது. ஆனால், ஆடவர்களாகப் பிறந்தவர்கள்கூட உன் அழகைக் கண்டு மயங்குமளவுக்கு வீரம் செறிந்த தோளையுடையவன் என்கிறார். அப்படிப்பட்ட அழகு தான் தெய்வீக அழகு என்பதில் கம்பருக்கு உறுதியான எண்ணம். பெருமாளின் அழகை வர்ணித்துக் கொண்டே வந்த ஆழ்வார், ஒரு கட்டத்தில் அவன் அழகை வர்ணிக்க முடியவில்லை என்பதற்காக "ஐயோ! என்ன சொல்லி அவன் அழகை வர்ணிப்பேன்" என்றாராம். அந்த நிலைமையைத்தான் கம்பரும் இங்கே அடைகிறார். 

 தாடகையை நான்கே வரிகளில் படம்பிடித்துக் காட்டி விடுகிறார் கம்பர். "இறைக்கடை துடித்த புருவத்தள்; எயிறு என்னும் பிறைக்கடை பிறக்கிட மடித்த பில வாயள் மறக்கடை அரக்கி, வடவைக்கனல் இரண்டாய் விறைக்கடல் முளைத்தென வெருப்பு எழ விழித்தாள்". கடுமையான கோபத்தால் நெறித்த புருவங்கள்; கோரைப் பற்கள்; வடவாக்கினி தீ இரு கண்களாக; ஏழுலகமும் கேட்டு ஆடும்படியாகக் கர்ச்சனை. இப்படித்தான் நமக்கு அந்த தாடகையை அறிமுகம் செய்கிறார். அந்த தாடகை மீது இராமபிரான் ஒரு அம்பைச் செலுத்துகிறார். அது வேகமாகச் செல்லுகிறது. எத்தனை வேகமாகச் செல்லுகிறது? அந்த வேகத்தை எதனோடு கம்பர் ஒப்பிடுகிறார் என்றால், "சொல்லொக்கும் கடிய வேகச் சுடுசரம்" என்கிறார். ஒருவன் சொல்லும் சொல்லுக்கு என்ன வேகம் உண்டோ அந்த வேகத்தோடு அவன் அம்பு தாடகை மீது பாய்கிறது. அந்தச் சொல்லொக்கும் கடிய வேகச் சுடுசரம், அல் ஒக்கும் நிறத்தினாள் மேல் விட்டதும், அது கல் ஒக்கும் அவள் நெஞ்சில் புகுந்து, அங்கு தங்காமல் கழன்று போய்விடுகிறதாம். எதைப் போல தெரியுமா? "புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருள்" போல இந்தக் காதில் புகுந்து அந்தக் காதின் வழியாகப் போவது போல் அந்த அம்பு உள் நுழைந்து கழன்று புறம் சென்று வீழ்ந்தது என்கிறார். 

தாடகை வதம் முடிந்த பின் விசுவாமித்திர முனிவர் இராம இலட்சுமணருடன் மிதிலையில் அந்த நாட்டு மன்னன் ஜனகன் வைத்திருக்கும் சிவதனுசைக் காண அழைத்துச் செல்கிறார். வழியில் இராமன் கால் தூசு பட்டு ஒரு கல் பெண்ணாகி எழுந்து நின்றாள். அவள்தான் அகலியை. அவள் வரலாற்றைச் சொல்லி விட்டு இராமனின் புகழ ஒரு பாட்டில் சொல்கிறார் கம்பர். என்ன அழகு? "இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம் இனி இந்த உலகுக்கெல்லாம் உய்வண்ணம் அன்றி, மற்று ஓர் துயர் வண்ணம் உறுவது உண்டோ? மைவண்ணத்து அரக்கி போரில் மழை வண்ணத்து அண்ணலே, உன் கைவண்ணம் அங்க்கு கண்டேன், கால் வண்ணம் இங்கு கண்டேன்". தாடகை மேல் அம்பு எய்தபோது உன் கைவண்ணம் கண்டேன், இங்கு உன் பாததூளி பட்டு ஒரு பெண் எழுந்தபோது உன் கால்வண்ணம் கண்டேன் என்று முனிவர் சொல்வதாக கம்பர் அழகுபட கூறுகிறார். 

மிதிலை மா நகர், அங்கு ஜனக மகாராஜன் தன்னுடைய சிவதனுசை எடுத்து வளைக்க எல்லா தேசத்து மன்னர்களையும் அழைத்திருந்தார். ஒருவராலும் அந்த வில்லை எடுக்கக்கூட முடியவில்லை. இராமபிரானைப் பார்த்து விசுவாமித்திர முனிவர் கண்களால் ஜாடை காட்டி, போ, எடுத்து வில்லை வளைத்து அம்பினைப் பூட்டு என்கிறார். உடனே இராமபிரான் எழுந்து நடக்கிறான். அந்த அழகைக் கம்பர் சொல்கிறார், "மாகம் மடங்கலும், மால் விடையும், பொன் நாகமும், நாகமும் நாண நடந்தான்" என்று.மாகம் மடங்கலும் என்றால் சிறப்புப் பொருந்திய சிங்கம் என்றும், மால் விடையும் என்றால் பெருமையுள்ள ரிஷபம் என்றும், பொன் நாகமும் என்றால் பொன்னிறமான மகாமேரு மலை என்றும், மற்றொரு நாகம் இங்கு யானை எனவும், இவை அத்தனையும் ஒருங்கு நடந்தாற்போல இராமன் நடந்தான் என்கிறார். வில் வைத்திருந்த பெட்டியை அடைந்த இராமன் அதனை ஒரு கையால் எடுக்கிறான், அதன் ஓர் முனையைக் காலில் வைத்து அழுத்திக் கொண்டு, நாணை இழுத்து அதில் அம்பை ஒரு கையால் பூட்டியதைக் கூட சரியாக ஒருவரும் கவனிக்க முடியாத கண நேரத்தில், ஒரு பெரும் ஓசை கேட்கிறது, அங்கு அந்த சிவதனுசு ஒடிந்து வீழ்வதைக் கன்டனர் இவ்வளவும் ஒரு கணப்போதில் நடந்து முடிந்து விட்டது என்பதைக் கம்பர் வாக்கால் பார்க்கலாம். "தடுத்து இமையாமல் இருந்தவர், தாளில், மடுத்ததும் காண் நுதி வைத்ததும் நோக்கார், கடுப்பினில் யாரும் அறிந்திலர்; கையால் எடுத்தது கண்டனர், இற்றது கேட்டார்." இங்கு சொற்களிலேயே அது நடந்த விதத்தைப் படம் பிடித்துக் காட்டும் அழகை என்னவென்று சொல்வது? 

திருமண இல்லம். மாப்பிள்ளை வீட்டாருக்குத் தங்கள் பிள்ளையின் தோற்றம், கம்பீரம் இவற்றில் பெருமை, பெண் வீட்டாருக்கோத் தங்கள் பெண்ணின் அழகு, பண்பு இவற்றில் நாட்டம். இராமபிரான் திருமணத்திலும் இந்த நிகழ்வு இல்லாமல் இல்லை. இதோ கம்பர் அந்தக் காட்சியை இப்படி வர்ணிக்கிறார். "நம்பியைக் காண நங்க்கைக்கு ஆயிரம் நயனம் வேண்டும், கொம்பினைக் காணும் தோறும், குரிசிற்கு அன்னதேயால், தம்பியயிக் காண்மின் என்பார், தவம் உடைத்து உலகம் என்பார், இம்பர் இந்நகரில் தந்த முனிவனை இறைஞ்சும் என்பார்." இராமனைப் புகழ்வதா, சீதாபிராட்டியைப் புகழ்வதா, தம்பி இலக்குவனைப் புகழ்வதா அல்லது அவர்களை இந்த நகருக்கு அழைத்து வந்த முனிவனைப் புகழ்வதா என்று மக்கள் கூட்டத்தில் போட்டா போட்டி. 

இராமன் வீதியில் நடந்து செல்கையில் மக்கள் அவரைக் கண்டு மகிழ்ந்து போகின்றனர். முழுமையாக இராமனை யாருமே பார்க்கவில்லையாம். காரணம் அவர்கள் பார்வை ஓரிடத்தில் மட்டும் தங்கி விடுகிறதாம். கம்பர் சொல்கிறார். "தோள் கண்டார், தோளே கண்டார், தொடுகழல் கமலம் அன்ன தாள் கண்டார் தாளே கண்டார், தடக்கை கண்டாரும் அஃதே வாள் கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடியக் கண்டார் ஊழ் கொண்ட சமயத் தன்னன் உருவு கண்டாரை யொத்தார்". 

அறுபதினாயிரம் ஆண்டுகள் இந்த பூமியை அறவழி பிறழாமல் ஆண்டு வந்த தசரதன் ஒரு நாள் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்க்கிறான். அப்போது அவனது காதருகில் ஒரு தலைமுடி வெண்மையாக இருந்ததைக் கண்டதும், அவன் எண்ணினான், தனக்கு முதுவை வந்துவிட்டது, ராஜ்ய பாரத்தை இனி தன் மகன் இராமனிடம் கொடுத்துவிட வேண்டுமென ஒரு கணத்தில் முடிவெடுத்தான் உடனே தனது மந்திராலோசனைக் கூட்டத்தைக் கூட்டுகிறான் என்கிறார் கம்பர். இராமன் தந்தையை வந்து கண்டதும், தசரதன் அவனைத் தன் தோளோடு தோள் வைத்துத் தழுவுகிறான். இது எப்படி இருக்கிறதாம்? கம்பர் சொல்கிறார், தான் இது நாள் வரை கட்டிக் காத்த இந்த சாம்ராஜ்ய பாரத்தை இந்த இராமன் தாங்க வல்லவந்தானோ என்று தன் தோளோடு அவன் தோளை வைத்து அளந்து பார்த்தது போல இருந்தது என்கிறார். என்னே உவமை! 

கைகேயி தன் மகன் பரதனுக்கு முடிசூட்ட வேண்டும், இராமன் கானகம் செல்ல வேன்டும் என்று கணவனிடம் வரம் கேட்பதற்காகத் தன்னைத் தயார் செய்துகொண்டு தரையில் படுத்துக் கிடக்கிறாள். அந்தக் காட்சியைச் சற்றுப் பார்த்தால் தெரியும் அதன் அழகு. "நவ்வி வீழ்ந்தன, நாடக மயில் துயின்றென்ன, கவ்வை கூர்தரச் சனகியாம் கடிகமழ் கமலத்து அவ்வை நீங்க்கும் என்று அயோத்தி வந்து அடைந்த தன்வை ஆம் எனக் கிடந்தனள், கேகயன் தனயை." மான் எப்போதும் துள்ளி விளையாடிக் கொண்டிருக்கும், அது கீழே விழுந்து கிடந்தாற்போலே, தோகை விரித்தாடும் மயில், அப்படி ஆடாமல் கீழே விழுந்து துயில் கொள்வதைப் போலே, செந்தாமரையில் வாசம் செய்யும் திருமகளாம் லக்ஷ்மி அயோத்தி நகரைவீட்டு நீங்கவும், அவள் இடத்திற்கு அவள் மூத்தவள் மூதேவி உள் நுழைந்தாற்போலே கேகயன் மகள் கீழே வீழ்ந்து கிடந்தாள் என்கிறார். 

கைகேயி தன் மகனுக்கு ராஜ்யம் என்று கேட்டதும் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த தசரதன் அவள் கேட்ட வரத்தின் விவரங்களை கேட்கிறான். கைகேயி சொல்கிறாள், "ஏய வரங்கள் இரண்டில் ஒன்றினால் என் சேய் உலகு ஆள்வது" சரி! அவ்வளவுதானே, உன் மகன் பரதனே நாட்டை ஆண்டு கொள்ளட்டும் என்று ஓரளவு மனம் தெளிந்த நிலையில், அடுத்து வருகிறது ஒரு பேரிடி. "சீதை கேள்வன் ஒரு வரத்தால் போய் வனம் ஆள்வது" இப்படி அவள் சொன்னதும்தான் தசரதன் இடியோசை கேட்ட நாகம் போல அரற்றி வீழ்ந்தான். அப்படிச் சொன்னவள் யார்? கைகேயி, அவளை கம்பர் சொல்வது "தீயவை யாவையினும் சிறந்த தீயாள்" என்று. 

நிகழ்ச்சியின் தீவிரத்தை நன்கு உணர்த்தக் கூடிய சொற்கள், விளக்கங்கள். இவைதான் கம்பச் சித்திரம் என்பதோ? இராமன் வரவழைக்கப்படுகிறான். கைகேயி இராமனிடம் உன் தந்தை உனக்கு இரண்டு கட்டளைகளை இட்டிருக்கிறார் என்கிறார். அவர் எனக்களித்த ஓர் வரத்தால் என் மகன் பரதனே நாடாளவும் என்று அவள் சொன்ன மாத்திரத்தில் இராமன் மனம் மகிழ்ச்சியால் துள்ளுகிறது. என் தம்பி பரதன், நாட்டையாள மிகப் பொருத்தமானவன் என எண்ணுகிறான். அடுத்து அவள் சொல்லுகிறாள், நீ போய் பதினாங்கு ஆண்டுகள் காட்டுக்குச் சென்று தவம் பல இயற்றி திரும்ப வேண்டும் என்று அந்த இராமனது முகம் அப்போது எப்படி இருந்தது. அதைக் கம்பர்தான் சொல்ல வேன்டும். "இப்பொழுது எம்மனோரால் இயம்புவது எளிதோ யாரும், செப்பரும் குணத்து இராமன் திருமுகச் செவ்வி நோக்கின் ஒப்பதே முன்பு, பின்பு அவ்வாசகம் உணரக் கேட்ட அப்பொழுது அலர்ந்த செந்தாமரையினை வென்றதம்மா". அடடா! இப்படிக்கூட மனிதன் உணர்வுகள் இருக்க முடியுமா? உனக்கு ராஜ்யாபிஷேகம் என்றபோது முகம் எப்படி சலனமின்றி மலர்ந்திருந்ததோ, அதே போல, நாடு உனக்கு இல்லை, காடுதான் என்றபோதும் அவன் முகம் அன்றலர்ந்த செந்தாமரை மலரை ஒத்திருந்தது என்றால் என்னே அவனது குணவிசேஷம். அதை கம்பரால் மட்டுமே எடுத்துக் காட்ட முடியும். 

பெரியவர்களைக் காண வருவோரில் பலர் தங்களுக்கு ஆகவேண்டிய காரியங்களுக்காக சிபாரிசு வேன்டி வருவார்கள். ஆனால் எந்தவிதமான பிரதிபலனையும் எதிர்பாராமல், வந்திருப்பவரைப் பற்றிய முழு விவரமும் தெரியாமல், உள்ளுணர்வு ஒன்றே வந்திருப்பவர் பரம்பொருள் என்பதான உணர்வுடன் இராமனைக் கானகத்தில் பார்க்க வருகிறான் சிருங்கிபேரம் எனும் இடத்தின் வேட்டுவ மன்னனான குகன். அவன் கூட உறவினர்கள், பரிவாரங்கள் புடைசூழ அந்த அமைதியான கானகத்தில் முனிவர்கள் தங்கியிருக்கும் இடத்துக்கு வருகிறான். ஓர் ஆசிரமத்தில் முனிவர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறான் இராமன். வாயிலில் பெருத்த ஓசை. இலக்குவன் போய் பார்க்கிறான். குகன் தன் பரிவாரங்களோடு வருவது கண்டு யார் என்கிறான். அதற்கு குகன் "ஐயனே, கங்கை நதியில் நாவாய்கள் ஓட்டும் வேட்டுவன் நான். தங்கள் கழல் சேவிக்க வந்தேன்" என்கிறார். 

அவனுக்கு இலக்குவன், இராமன் பேதம் கூட புரியவில்லை. இலக்குவன் சற்று இருங்கள் என்று உள்ளே சென்று இராமனை அழைத்துக் கொண்டு வெளியே வருகிறான். இராமன் குகனை அமரச் சொல்லியும் அவன் அமரவில்லை. குகன் சொல்லுகிறான், "ஐயனே, தேவரீர் அமுது செய்து அருளும்படியாகத் தங்க்களுக்குத் தேர்ந்தெடுத்த தேனும், மீனும் கொண்டு வந்திருக்கிறேன். அமுது செய்தருள வேண்டும்" என்கிறான். என்னவொரு அப்பாவித்தனமான அன்பு, மரியாதை, பக்தி. புன்சிரிப்போடு இராமன் முனிவர்களை மெல்லப் பார்த்தான். தவ ஒழுக்கம் பூண்டுள்ள நான் உண்ணுதற்கு இயலாதவற்றை கொண்டுவந்து படைக்கும் இவனது வெள்ளை உள்ளத்தையும், மிகுந்த அன்பையும் எண்ணி இராமன் நெகிழ்ந்து போகிறான். இராமன் சொல்கிறான், "உள்ளார்ந்த அன்போடு நீ கொணர்ந்த இவற்றை நாம் உண்தாகவே எண்ணிக்கொள்" எனும்போது அவன் மனம் அன்பால் கசிந்து போகிறது. பலன் கருதாமல் பிறர் செய்யும் உதவி உலகத்திலுள்ள வேறு எந்த பொருளிலும் மதிப்பு வாய்ந்தது என்பதை இங்கு கம்பர் உணர்த்துகிறார்.


2 comments:

துரை செல்வராஜூ said...

இராமகாதையில் இருந்து மக்கள் கற்றுக் கொள்ள வேண்டிய அறநெறிகள் ஏராளம்!.. நன்றி ஐயா!..

thanusu said...

சுருக்கமாக இன்று கம்பரையும், ராமாயனத்தையும் எழுதி அன்பை காட்டும் விதமாக கமபரின் எழுத்தாற்றலை எடுத்துக்காட்டிய ஐயா அவர்களுக்கு நன்றிகள்.