ஆடிப்பூரத் திருவிழாவின் முதல்நாள் நிகழ்ச்சியாக திருவையாறு ஐயாறப்பர் ஆலயத்தில், அறம்வளர்த்தநாயகி சந்நிதி விழா மண்டபத்தில் நான் "மங்கையர்க்கரசியார்" எனும் தலைப்பில் உரையாற்றியது இது:
மங்கையர்க்கரசியார்
மங்கையர்க்குத் தனியரசி வளவர் குலக்
கொழுந்து
மன்னவர் சூழ் தென்னவர்க்கு மாதேவியார்
மண்
சங்கை கெடவமண் சமயஞ் சாடவல்ல
சைவ சிகாமணி ஞானத் தமிழிற் கோத்த
பொங்கு திருவருளுடைய போதவல்லி
பொருவி நெடுமாறனார் புயமேல் வாழுஞ்
செங்கலச முலையாட நருளாலின்பஞ்
சேர்ந்தவரைப் புகழ்ந்தடியேன் வாழ்ந்த
வாறே.
பங்கயச் செல்வி
பாண்டி மாதேவி பணி செய்து நாடொறும் பரவப்
பொங்கழலுருவன்
பூத நாயகனால் வேதமும் பொருள்களும் அருளி
அங்கயற்கண்ணி
தன்னொடும் அமர்ந்த ஆலவாயாவதும் இதுவே.
எல்லாம் வல்ல ஐயாற்றில் குடிகொண்ட
அருள் மிகுந்த பிரணதார்த்திஹரன் எனும் ஐயாறப்பர் அருளாலும், கைலை மலையில் அமர்ந்து
இப்பெருவுலகைக் காத்திடும் சிவபெருமான் அருளாலும் இறைவர்க்குப் பணிசெய்த அற்புதமான
பெண்டிரில் ஒருவரான மங்கையர்க்கரசியார் பற்றி பேச முன்வருகின்றேன்.
சமண சமயத்தின் கை ஓங்கி சைவம்
மங்கியிருந்த சமயமொன்று உண்டு. அதிலும் மன்னர்களின் ஆதரவும் அவர்களுக்குக் கிடைக்குமானால்
கேட்கவா வேண்டும். பண்டைய தமிழ் நாட்டில் அவ்வப்போது சைவத்துக்குத் தாழ்வு வந்ததுண்டு.
அந்த நேரத்திலெல்லாம் இறைவனின் அருட்பெற்ற பெரியோர்கள் வந்து சைவத்தைக் காத்து மனிதர்
உய்ய நல்வழி காட்டிச் சென்ற வரலாறு உண்டு.
அப்படி ஒரு நிலைமை தென் தமிழ் நாட்டுக்கு ஏற்பட்டிருந்தது. சைவத்துக்கு ஏற்பட்ட
இருண்ட காலமாக அந்தக் காலம் இருந்தது.
தென் தமிழகத்தின் தலை நகராம்
மதுரையம்பதி தமிழ்ச்சங்கங்கள் கண்ட அதிசய நகரம். அங்கு சைவம் கோலோச்சிய காலம் போய்
எங்கு திரும்பினாலும் சமணர்கள் இடையில் ஓலையால் முடைந்த பாயை இடையில் கட்டிக் கொண்டு,
கையில் மயில் பீலியுடன் நகர் முழுதும் வலம் வந்து கொண்டிருந்த காலம். சுந்தரேசுவரரும்
மீனாட்சி அம்மையும் கோலோச்சிய மதுரை சமணர்களின் ஆடுகளமாகத் திகழ்ந்த காலம் ஒன்று இருந்தது.
அதற்கு அந்த பாண்டிய நாட்டையாண்டு வந்த நெடுமாறன்
எனும் மன்னனே காரணம்.
எத்தனைதான் அறிவும் ஞானமும் வளர்ந்து
மக்கள் தெளிவு பெற்றிருந்தாலும் அவ்வப்போது இருள் மண்டி அஞ்ஞானம் ஆட்சி புரிவதும் வழக்கமாக
இருந்து வந்திருக்கிறது. எங்கும் பரவிக் கிடக்கும் காரிருள் ஒரு சிறிய தீக்குச்சியை
ஏற்றியதும் மறைவது போல, தீமைக்கு இடையே ஒரு பெரியோர் அவதரித்து அந்த அக இருளை முழுதுமாக
நீக்கிவிடுகிறார்.
அப்படி இருள் மண்டிக் கிடந்த
பாண்டிய நாட்டில் இரு தீப்பிழம்புகள் மீண்டும் அங்கு ஒளி பரவ காரணமாக இருந்தார்கள்.
அவர்களே பாண்டிய அரசியார் மங்கையர்க்கரசியாரும், அமைச்சராகத் திகழ்ந்த குலச்சிறையாரும்
ஆகிய இவ்விரு சைவ நன்னெறிச் செல்வர்களும் ஆவர்.
தீமைகளும், தீயவர்களும் கூட அங்கு
இருப்பவரில் இருவர் நல்லவர்களாகவும், மேன்மையுடையவர்களாகவும் இருப்பார்களானால் தீயவர்களும்
மாறிவிடுவார்கள். ஒரு மனிதன் நன்னெறிகளுடன் வாழவேண்டுமானால் இதுபோன்ற நல்லவர்களின்
ஒட்டுறவு நிச்சயம் தேவைப் படுகிறது. அப்படி உதவுகின்ற ஒருவர் இருந்துவிட்டால் வாழ்க்கை
இன்ப மயமாக இருக்குமென்பதில் ஐயமில்லை.
வைகை நதி பாய்ந்து வளம்பரப்பி
மீனாட்சி சுந்தரேசர் அருளாட்சி செய்யும் மதுரையம்பதி பாண்டிய நாட்டின் தலை நகரம். அங்கு
ஏழுலகங்களும் பெருமையுறும் வகையில் ஆட்சி புரிந்தவன் நெடுமாறன். சைவம் செழித்த தென்
தமிழ் நாடாம் பாண்டிய நாட்டில் சைவம் ஒளிகுன்றி சமணம் தலையெடுத்த காலமது. மன்னன் நெடுமாறனும்
சமணம் தழுவி சமணத் துறவியர் கையில் மயில் இறகு ஏந்தி நிற்க நாடாண்ட காலமது. சமணமே தவ
நெறியென்று அவன் புத்தியை மழுங்கடித்திருந்தனர் சமணர்கள். சமணர்களின் சூழ்ச்சிக்கு
ஆட்பட்டு கிடந்தான் நெடுமாறன். காலம் கடந்தபின் சைவத்தின் பெருமையை திருஞானசம்பந்த
மூர்த்தியின் கருணையால் உணர்ந்தபின் மீண்டும் சைவத்துக்கு வந்து சாதித்த பல செயல்களையும்
அறுபத்து மூவரில் ஒருவராய்த் திகழும் பெருமையையும் பின்னர் பார்க்கலாம்.
நிறைக் கொண்ட சிந்தயான் நெல்வேலி
வென்ற
நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும்
அடியேன்
என்று சுந்தரமூர்த்தி நாயனார்
அருளிச் செய்த திருத்தொண்டர் புராணத்தில் கண்ட இந்த நெடுமாறன்தான் இன்றைய வரலாற்றின்
கதா நாயகன்.
நற்குடிப் பிறந்து நற்செயல்கள்
செய்து நல்லோனாக வாழ்ந்து வரும் ஒருவனுக்கு விதிவசத்தால் சில இன்னல்கள் வந்துறுவது
இறைவன் வகுத்த செயல். அப்படித் துன்பத்தைக் கடந்தபின் அவனுக்கென்று சரியான வழியையும்
வகுத்து வைத்தவன் இறைவன். அந்த வழியில் வந்த நின்றசீர் நெடுமாறன் குறித்தும் அவன் மனையறம்
காத்த மாமணியாம் மங்க்கையர்க்கரசி பற்றியும் சிறிது இன்று பார்ப்போம்.
துன்பங்களும் சோதனைகளும் மனிதர்க
புடம்போட்டு எடுத்த பின்னர் அத்தகைய மனிதர்கள் மாந்தருள் மாணிக்கங்களாகத் திகழ்ந்ததை
நாம் பார்த்திருக்கிறோம். தென் தமிழகத்தைக் கட்டியாண்ட மன்னர்கள் மதுரை நகரைத் தலை
நகராகக் கொண்ட பாண்டியர்கள். அந்த பாண்டிய நாட்டில் நெடுமாறன் என்ற பெயருடைய பேரரசன்
ஆண்டு வந்தான். இவனுக்குக் கூன்பாண்டியன் என்றொரு பெயரும் உண்டு; காரணம் இவன் முதுகில்
சிறு கூன் விழுந்திருந்ததே. ஒருக்கால் அவன் மனத்தில் விழுந்த கூன் காரணமாக இந்தப் பட்டப்
பெயர் வந்திருக்கலாமோ? யார் கண்டார்கள்.
இந்த மனிதனுடைய நல்ல இதயத்தில்
அன்றைய காலகட்டத்தில் தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த சமணர்கள் விஷ வித்தை
விதைத்துவிட்டார்கள். சமணமே சமயங்களில் சிறந்தது என்பது அவன் மனத்தில் விதைக்கப்பட்ட
விதை. மதமாற்றம் என்பது அந்த காலத்திலேயே நடந்திருப்பது இதன் மூலம் தெளிவாகிறது. ஆகவே
சமணம் என்பது தன் உயிர்க்காற்றாக ஆனபின்பு பாண்டிய நாட்டில் சமணம் தவிர வேறெந்த சமயமும்
இருக்கக்கூடாது என்று எண்ணத் தொடங்கினான் பாண்டியன் நெடுமாறன்.
இப்படி பாண்டியன் சமயக் குழப்பத்தில்
சிக்கித் தவித்தாலும் அவனுக்கு அமைந்த வாழ்க்கைத் துணை சோழ தேசத்து இளவரசியாம் மங்ககையர்க்கரசி
என்பார் சதா காலமும் சிவபெருமானின் அருட்பெயரை உச்சரிப்பதே கடமையாகக் கொண்டவர். இவர்
ஒரு சிறந்த சிவபக்தை. அதுமட்டுமல்ல நெடுமாறன் செய்த புண்ணியம் அவருக்கு ஒரு நல்லமைச்சர்
அமைந்தார். அவர் பெயர் குலச்சிறையார். இவரும் ஒரு சிறந்த சிவ பக்தர். இவ்விருவரின்
முயற்சியால் மன்னன் சமணம் சார்ந்திருந்தாலும் நாட்டில் சைவமும் தழைத்து இன்னமும் உயிர்ப்போடு
விளங்கியது.
பாண்டியன் நெடுமாறனின் பத்தினியாகத்
திகழ்ந்தவர் சோழ ராஜகுமாரியாகப் பிறந்த மங்கையர்க்கரசியார் எனும் புண்ணியவதி. மாபெரும்
சைவக் குரவராகிய திருஞானசம்பந்தராலேயே பாராட்டிப் போற்றப்பட்டவர். சைவத்தை உயிர் மூச்சாய்க்
கொண்ட மங்கையர்க்கரசியார் தன் கணவனுக்குத் தொண்டாற்றி நாட்டையும், வீட்டையும் பரிபாலனம்
செய்ய உதவிக்கொண்டிருந்தார்.
சைவ சமயம் இல்லறம் குறித்தும்
நல்ல பல குறிக்கோளை வற்புறுத்தி வந்திருக்கிறது. இல்லற வாழ்வு இம்மைக்கு மட்டுமல்லாமல்
மறுமையின்பமான சிவபேறு குறித்தும் வழிகாட்டுவதாகும். இந்த காரணத்தால்தான் சைவத் திருமணங்களில்
மணமக்களை சிவ பார்வதியாகக் கருதி உமாமஹேஸ்வரராக திருமணச் சடங்குகளை நடத்துவது வழக்கம்.
தமிழிலக்கண நூலான தொல்காப்பியமும் வாழ்வின் லட்சியமாகச் சொல்லும் கருத்து கவனிக்கத்
தக்கது.
காமஞ் சான்ற கடைக்கோட் காலை ஏமஞ்
சான்ற மக்களொடு துவன்றி
அறம்புரி சுற்றமொடு கிழவனுங்
கிழத்தியுஞ் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பண்பே."
ஆக, இல்லறம் தாங்கும் தம்பதியர்
தங்களது ஆன்மிகப் பேற்றிலும் இருவரும் கருத்தாயிருக்க வேண்டுமென்பது தெரிகிறது. அப்படி
கணவனின் ஆன்மிகப் பேற்றில் கருத்தாயிருந்த மங்கையர்க்கரசியாரின் வரலாற்றை இனி பார்ப்போம்.
பாண்டிய நாட்டில் எங்கு திரும்பினாலும்
மயில்பீலியும், சமணத் துறவிகளும் பரவிக் கிடந்த நேரம். மன்னன் எவ்வழி, நாடும் அவ்வழி
என்று நாட்டினரும் சைவத்தைத் துறந்து சமணத்தைப் போற்றி வந்த காலம். மங்கையர்க்கரசியாருக்கு
சீர்காழியில் அவதரித்த ஞானக்குழந்தை திருஞானசம்பந்தரைத் தெரியும். அமைச்சர் குலச்சிறையாருக்கும்
ஞானக்குழந்தையின் சிறப்புகள் புரியும். இவ்விருவரும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வந்தனர்.
மன்னனின் சமணப் பேயை விரட்ட ஒரே வழி திருஞானசம்பந்தர் பிரான் தான் என்று முடிவுக்கு
வந்தனர். அமைச்சர் தன் ஆட்கள் மூலம் ஞானசம்பந்தரை அணுக முடிவு செய்தார்.
அப்போது சோழ தேசத்தில் திருமறைக்காடு
எனும் திருத்தலத்தில் ஞானசம்பந்தரும் திரு நாவுக்கரசரும் இருந்த நேரம். மதுரை அமைச்சர்
குலச்சிறையாரின் தூதர்கள் சென்று ஞானசம்பந்தரைக் கண்டு அமைச்சர் சொன்ன செய்திகளைச்
சொல்லி, மன்னன் நெடுமாறனை நல்வழிப்படுத்த ஞானசம்பந்தரால் மட்டுமே முடியும், அவர் மதுரை
வரவேண்டுமென வேண்டுகோள் விடுத்தனர்.
பாண்டிய மன்னனுக்குக் கிடைக்க
வேண்டிய பெருமைகள் எல்லாம் இந்த சமணப் பற்றால் கெடுவது பற்றித்தான் மங்கையர்க்கரசியார்
மனமுடைந்து நின்றார். அவர் அழைப்பையேற்று ஞானசம்பந்தர் மதுரை வந்தபோது பாடிய வரிகள்
"பானலங் கண்கள் நீர்மல்கப்
பவளவாய் குழறி யானும் என் பதியும் செய்த தவம் என்கொல்?" என்பது.
மங்கையர்க்கரசியாரும் குலச்சிறையாரும்
தூதனுப்பி ஞானசம்பந்த பெருமானை மதுரைக்கு அழைத்தனர். இவர்கள் அனுப்பிய தூதர்கள் சென்று
ஞானசம்பந்தரைச் சந்தித்தபொது அவர் அப்பருடன் வேதாரண்யம் எனும் திருமறைக்காட்டில் இருந்தனர்.
அங்கு மூடியிருந்த கோயில் கதவை ஞானசம்பந்தர் பாடித் திறக்க தரிசனம் முடிந்தபின் அப்பர்
பாடிய பத்து பாடல்களால் கதைவை மூடியிருந்தனர்.
அப்போது சம்பந்தர் அப்பரிடம்
மதுரை தூதர்கள் சொன்ன செய்தியைச் சொல்லி தான் மதுரை செல்ல வேண்டிய அவசியம் குறித்தும்
சொன்னார். அதனைக் கேட்ட அப்பர் துடித்துப் போனார். அப்பர் ஞானசம்பந்தரை நோக்கிச் சொன்னார்,
"பிள்ளாய்! பொறும்" சமணர்கள் மிகவும் பொல்லாதவர்கள். வஞ்சனைகளை எல்லையின்றி
செய்யும் வல்லமை படைத்தவர்கள். இளம் பிள்ளையாகிய தங்களை அவர்கள் வஞ்சனையால் கேடு செய்துவிடுவார்கள்.
அதுமட்டுமல்ல ஐயனே! இப்போது அமைந்திருக்கும்
கோள்களின் நிலைமையும் சாதகமாக இல்லை. என்ன செய்வீர். தங்க்களுக்கு ஒரு துன்பமென்றால்
எங்களால் எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்? கோள்கள் சரியில்லாத இந்த நேரத்தில் தாங்கள்
அங்கு செல்வது தகாது, தவிர்த்துவிடுங்கள் என்றார் அப்பர்.
அதற்கு சம்பந்தர் சொல்கிறார், "ஐயனே, நான் போற்றுவது சிவபெருமான் திருவடிகள்.
அப்படி சிவன் திருவடிகள் துணையிருக்க நாளும் கோளும் எமை என்ன செய்யும்? பரமனுக்குச்
செய்யும் தொண்டில் நமக்குப் பழுது ஒன்றும் வாராது." என்று சொல்லி ஒரு திருப்பதிகத்தைப்
பாடுகிறார். அந்தப் பதிகம் தான் "கோளறு பதிகம்" எனப் போற்றப்படும் அரிய தேவாரப்
பாடல். அது
ஞானசம்பந்தப் பெருமான் அத்தனை
உறுதியோடு சொன்ன பிறகு நாவுக்கரசருக்கு அவரைத் தடுக்கும் எண்ணம் இல்லை. சம்பந்தர் திருமறைக்காட்டை
விட்டுப் புறப்படுகிறார் என்றதும் அப்பர் தாமும் உடனே இவ்வூரைவிட்டு கிளம்ப முயற்சி
செய்ய, அவரைத் தடுத்து ஐயனே தாங்கள் இங்கு இன்னும் சிலகாலம் இருந்து வருவீராக என்றருளினார்.
ஞானசம்பந்தர் தாம் மதுரை செல்ல
முடிவு செய்ததும் மீண்டும் ஆலயத்தினுள் சென்று சிவபெருமானை வழிபட்டு பாதங்க்களைத் தொழுதெழுந்து
பாடிப் பரவிவிட்டு, திருவாவுக்கரசரைத் தொழுது அவரிடமும் விடைபெற்றுக்கொண்டு மதுரைக்கு
கிளம்பினார். பின்னர் தன்னுடைய முத்துச் சிவிகையில்
ஏறிக் கொண்டு ஐந்தெழுத்தை ஓதிய வண்ணம் புறப்படுகிறார். கூடியிருந்த மக்கள் அனைவரும் ஞானசம்பந்தர் சமணர்களை
எதிர்கொள்ள மதுரைக்குச் செல்வதால் அவரைக் காக்க வேண்டுமென்று சிவனிடம் வேண்டி ஹரஹர
மகாதேவா என கோஷமிடுகின்றனர். மறையோர் நாங்கு
மறைகளை ஓதி ஆசி வழங்கினார்.
திருமறைக்காட்டிலிருந்து புறப்பட்ட
திருஞானசம்பந்தர் தொடர்ந்து பயணம் செய்து அகத்தியம்பள்ளியை அடைகிறார். அங்கிருந்து
குழகர்கோயில், திருக்கடிக்குளம், இடும்பாவனம், திரு உஷத்தானம் முதலான திருப்பதிகளைக்
கடந்து விரைந்து சென்றார். வழியில் சோழ நாட்டுத் தலங்களைக் கடந்து பாண்டிய நாட்டின்
எல்லையை அடைந்தனர்.
வழி நெடுக முல்லை மணம் பரவும்
முல்லை நிலத்தையும், மறவர் வாழும் பாலை நிலத்தையும் கடந்து சென்றார். வழி நெடுக பெண்கள்
நீராடும் நீர் நிலைகள்; அந்தணர் வேதம் ஓதும் யாக சாலைகள், திருத்தொண்டர் குழுமிய திருமடங்கள்,
திருமணம் நடந்தேறும் மங்கல வாத்திய வகைகள் முழங்கும் இல்லங்கள், ஊர்கள் இவைகளைக் கடந்து
சென்றார்.
தென் பாண்டி நாட்டைக் கடக்கும்
போது அங்கு திருக்கொடுங்குன்றத்தை அடைகிறார். அது இப்போதைய பிரான்மலை. அங்கு கோயில்
கொண்ட சிவபிரானை வணங்கிச் செல்கிறார். தொடர்ந்து மலைகளையும் காடுகளையும் கடந்து செல்கிறார்.
இப்படிப் பயணம் செய்து அவர் பாண்டிய நாட்டின் எல்லையை அடைகிறார். மதுரைக்கு வடக்கே
ஆனைமலையைக் கடந்து இப்போது அவர் மதுரை நகரத்தின் எல்லையை அடைகிறார்.
இப்படி திருஞானசம்பந்தர் மதுரையை
அடையும் சமயம் அங்கு வாழும் சமணர்கள் தீய கனவுகளைக் கண்டனர். தங்களுக்கு அழிவு நேருவதாக
உணர்ந்தனர். துர் நிமித்தம் பலவற்றை சமணர்கள் உணர்ந்தார்கள். சமணப் பள்ளிகளிலும், சமண
மடங்களிலும் அசோக மரங்களின் உச்சியிலும் ஆந்தைகளும் கோட்டான்களும் அமர்ந்து ஓசையெழுப்பின.
சமணத் துறவிகளின் கரங்களில் இருந்த மயில் பீலிகள் நழுவிக் கீழே விழுந்தன. கால்கள் தடுமாற
இடக்கண்கள் துடித்தன. வரப்போகும் துன்பம் என்ன என்பதை அறியாமல் சமணரெல்லாம் தவித்தனர்.
இப்படி சமணர்கள் வருந்திக் கொண்டிருந்த
வேளையில் பாண்டிமா தேவியான மங்கையர்க்கரசியாரும், அமைச்சரான குலச்சிறையாரும் இருக்குமிடங்களில்
நல்ல நிமித்தங்கள் தோன்றின. மன்னன் கூன்பாண்டியனுக்கு
சமணர்களிடமிருந்து விடுதலை கிடைக்க சிவபெருமான் ஏதோவொரு வகையில் வழிவகுத்துவிட்டான்
என்பதை உணர்ந்தார்கள்.
அப்போது திருமறைக்காட்டுக்குச்
சென்ற தூதர்கள் மதுரை வந்து குலச்சிறையாரையும் மங்கையர்கரசியாரையும் சந்தித்து ஞானசம்பந்தப்
பெருமான் மதுரைக்கு வரும் செய்தியை அறிவித்தார்கள். அமைச்சர் ராணியை வணங்கினார். அதற்கு ராணி நம் தம்பிரான் ஞானசம்பந்தர் பெருமான் இங்கு எழுந்தருளுவதால்
அவரை எதிர்கொண்டு வரவேற்க ஆவன செய்யுங்கள் என்றார்.
அமைச்சரின் உத்தரவின் பேரில்
மதுரை நகரம் அலங்கரிக்கப்பட்டது. வருகின்ற
ஞானக் குழந்தையை வரவேற்க மதுரை நகரத்திலிருந்து வெகு தூரத்துக்கு மக்கள் கூட்டம் வரிசையில்
நின்று வணங்கி நின்றார்கள். மகாராணி மங்கையர்கரசியும்
அரசனிடம் அனுமதி பெற்று சொக்க நாதரை வழிபடச் சென்றுவிட்டு பரிவாரங்களுடன் ஞானசம்பந்தரை
வரவேற்கச் சென்றுவிட்டார்.
திருஞானசம்பந்தரின் முத்துச்
சிவிகை மதுரையின் வீதிகளில் பவனி வந்தது. சுற்றிலும் திரு நீறணிந்த தொண்டர்கள் சிவ
நாமத்தைச் சொல்லிக்கொண்டு வந்தனர். துந்துபிகள் முழங்க, வேதங்கள் ஒலிக்க, மக்களின்
குரலோசை கடல் அலைபோல் ஓசையெடுப்ப, ஞானசம்பந்தர் மதுரையில் படிந்துள்ள இருளைப் போக்க
எழும் உதய ஞாயிறையொப்ப நகருக்குள் வந்தார். பாண்டி நாடு செய்த தவப் பயனால் அங்கு படிந்த
சமணத்தின் புற சமயக் கறை மறைய சைவ நெறி தழைத்து ஓங்க "பரசமயக் கோளரி வந்தான்.
அமைச்சர் குலச்சிறை தன் கரங்களைத்
தலைமேல் கூப்பி ஓடிவந்து தரையோடு வீழ்ந்து சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார். இதனைக் கண்ட
மதுரை மக்கள் "தென்னவன் அமைச்சர் குலச்சிறையார் இங்கு வந்து பணிந்து அணைந்தார்"
என்று மகிழ்ந்தனர். அமைச்சர் குலச்சிறை வந்து
வணங்கிய காட்சி கண்டு ஞானசம்பந்தர் முகம் மலர்ந்தது. பல்லக்கிலிருந்து இறங்கி அமைச்சரை
அணைத்து அவர் கரங்களைப் பற்றித் தூக்கி அணைத்துக் கொண்டார்.
ஞானசம்பந்தர் கேட்டார், செம்பியர்
பெருமானின் குலமகளாம் மங்கையர்க்கரசியாருக்கும், உமக்கும் நமது சிவபெருமான் திருவருள்
பெருகும் நன்மைதான் சிறந்துளதோ? என வினவினார்.
அப்போது எதிரில் வானளாவிய சிவாலய
கோபுரம் தெரிந்தது. இதுவே ஆலவாய் அழகர் அமர்ந்தருளும் திரு ஆலவாய் என்றனர் மக்கள்.
உடனே திருஞானசம்பந்தப் பெருமான் எழுந்து நின்று வணங்கிவிட்டு "மங்கையர்க்கரசி
வளவன் கோன்பாவை" எனும் பாடலைப் பாடத் தொடங்கினார். "ஆலவாய் ஆவதும் இதுவே"
என்று இறுதி அடி பாடி முடித்தார். ஆலயத்தினுள் ஆலவாய் அழகரை தரிசித்து "நீலமாமிடற்று
ஆலவாயிலான்" எனத் தொடங்கும் திருவிருக்குக்குறள் பாடலைப் பாடினார்.
ஞானசம்பந்தப் பெருமான் ஆலயதுள்
நுழையும்போது அவர் எதிரில் நில்லாமல் மங்கையர்க்கரசியார் ஒதுங்கி ஓரமாக நின்று பக்தி
பரவசமாய் கண்களில் நீர்சோர அவரை வணங்கினார். அப்போது குலச்சிறையார் சம்பந்தருக்கு அரசியாரைக்
காட்டி, அதோ ஓரமாக நின்று கண்கள் பனிக்கத் தங்களை தரிசிக்கும் அவரே சோழ மன்னரின் மகளார்
மங்கையர்க்கரசி" என்றார். மகிழ்ச்சியோடு ராணியாரைத் தரிசிக்க ஞானசம்பந்தர் விரைந்து
வர மங்கையர்க்கரசியார் அவரை விழுந்து வணங்கினார். அவரைத் தூக்கி எழுப்பி அரசியைத் தேற்றினார்
சம்பந்தர் பெருமான். தன் வினை இன்றோடு முடிந்தது என்று அரசியும் பெருமூச்சு விட்டு
இறைவனுக்கு நன்றி செலுத்தினார்.
அரசியார் "யானும் என் பதியும்
செய்த மாதவம்தான் என்னே" என்று குழலிசை போல் பேசினார். அதற்கு ஞானசம்பந்தர்
"புறச் சமயத்தாரிடையிலே நம் சைவத் திருத்தொண்டை வழுவாமல் செய்து வாழ்வீர்! உம்மைக்
காணவே நாமும் வந்தோம்" என்றார். பின்னர் குலச்சிறையார் புறச் சமயத்தாரால் விளந்த
தீவினைகளை விளக்கமாய் உரைக்க சம்பந்தர் அதனைக் கேட்டுக் கொண்டிருந்தார். பின்னர் அவர் தங்க வேண்டிய திருமடத்தில் கொண்டு
போய் சுவாமியைச் சேர்த்தார் குலச்சிறையார்.
மதுரையில் ஞானசம்பந்தர் வரவையொட்டி
நிகழ்ந்த பரபரப்பான வரவேற்பைக் கண்ட சமணர்கள் கலக்கமுற்றனர். பொறாமை மனத்தில் பொங்க
அந்த சமணர்கள் அனைவரும் அன்று இரவே ஓரிடத்தில் கூடினர். மதுரையெங்கும் எதிரொலித்த திருப்பதிக
இசையின் பேரொலி அவர்களைத் துன்புறுத்தியது. உடனே ஓடிப்போய் தங்களுக்கு ஆதரவளித்து வரும்
பாண்டியன் நெடுமாறனிடம் சென்று முறையிட ஓடினார்கள்.
சமண முனிவர்கள் அரசனிடம் சென்று
நிற்கவும் மன்னன் கவலையுடன் என்ன நேர்ந்தது என்கிறான். அதற்கு அந்த சமணர்கள்
"நடக்கக்கூடாத தீங்கு நமக்கு நேர்ந்துவிட்டது" என்றனர். அது என்ன என்று சொல்லுங்கள்
என்றான் மன்னன்.
"மன்னா! உன் ஆட்சிக்குட்பட்ட
இந்த மதுரை மா நகரத்தினுள் சைவ வேதியர்கள் வந்துற்றார்கள். அவர்களைக் கண்டாலே தீட்டு
அல்லவா. அவர்களைக் கண்டதனால் நாங்க்கள் "கண்டுமுட்டு" ஆயினோம் என்று சொல்ல,
மன்னனும், ஆம்! இந்தச் செய்தியைக் கேட்டதனால் நானும் "கேட்டுமுட்டு" ஆயினேன்
என்றான். பின்னர் அந்த சைவர்கள் நம் நகரத்தினுள்
வரக் காரணம் என்ன என்றான். அவர்கள் எல்லாம் யார்? எங்கிருந்து வந்தார்கள் எனக் கேட்டான்.
சமணர்கள் சொன்னார்கள்,
"சோழ நாட்டில் சீர்காழி எனும் ஒரு பதி உண்டு. அங்கு ஒரு வேதியர் குலத்துதித்த
சிறுவன் ஒருவன் சிவஞானம் பெற்றவன் என்று சொல்லிக்கொண்டு அந்த வேதியச் சிறுவன் தன் அன்பர்கள்
கூட்டமொன்றை அழைத்துக் கொண்டு தன் முத்துஸ் சிவிகை மீதேறி எங்களோடு வாதிட வந்திருக்கிறான்"
என்றனர்.
அதற்கு பாண்டியன் நெடுமாறன் சொல்லுகிறான்,
"அப்படியா? அந்த வேதியச் சிறுவன் இங்கு வந்ததனால் நாம் செய்யக்கூடியது என்ன?"
என்றான்.
அதற்கு அந்தச் சமணர்கள் சொல்கிறார்கள்,
"அந்த அந்தணச் சிறுவனை நாம் வலிய விரட்டக்கூடாது. அவன் தங்கியிருக்கும் மடத்தை
நம்முடைய விஞ்சை மந்திரத்தால் தீப்பிடித்து எரியச் செய்தால் அவன் தானாகவே இங்கிருந்து
ஓடிவிடுவான்" என்றார்கள் அந்தக் கொடிய மனம் படைத்த சமணர்கள்.
சொல்லுவார் சொல்லும் முறையால்
சொன்னால், யார்தான் நம்ப மாட்டார்கள். பாண்டிய மன்னனும் சொற்பேச்சு கேட்டு அப்படியே
ஆகட்டும், இப்போதே செய்து விடுங்கள் என்று சம்பந்தர் மடத்துக்குத் தீமூட்ட அனுமதி வழங்கினான்.
அப்படிச் சொன்னானே தவிர அவன்
மனத்தை கவலை அரிக்கத் தொடங்கியது. என்ன செய்கிறோம், செய்வது நல்லதா, தீதா என்று புரியாமல்
கலக்கமடைந்தான். பள்ளியறைக்குச் சென்று கதவைத் தாளிட்டுக் கொண்டான். மஞ்சத்தில் வீழ்ந்தான்.
மன்னன் வந்த செய்தியறிந்து அங்கு விரைந்து வந்தாள் பாண்டிமாதேவியாம் மங்கையர்க்கரசி
அம்மையார். மன்னவன் முகத்தில் தவழ்ந்த கவலையின் குறிகளைக் கண்டு வருந்தினாள்.
"என் உயிரினும் உயிரான மன்னவா!
உமக்கு நேர்ந்த கவலைதான் என்ன? முக மலர்ச்சியோடு இருக்கும் தாங்கள் இன்று முகம் வாடியிருப்பதன்
காரணம் யாதோ?" என்று பாண்டிமாதேவி கேட்டாள்.
"தேவி! கேள். காவிரி வள
நாட்டிலுள்ள சீர்காழிப் பதியைச் சேர்ந்த சிறுவனொருவன் சங்கரன் அருளைப் பெற்று இங்குள்ள
நம் சமணர்களை வாதில் வெல்ல வந்திருக்கிறானாம். அந்தச் சிறுவனோடு வெண்பொடிப் பூசிய தொண்டர்களும்
வந்திருக்கிறார்கள். நீறு பூசிய அந்த சிவ நேசர்களைக் கண்டால் தீட்டு ஆகையால் நம் சமண
அடியார்கள் "கண்டுமுட்டு" ஆயினர். அச்செய்திகளைக் கேட்டதால் நாமும்
"கேட்டுமுட்டு" ஆயினோம். இதுவே நடந்தது, மனத்தில் கலக்கத்தைத் தந்தது"
என்றான் மன்னன்.
இதனைக் கேட்ட பாண்டிமாதேவி சொல்கிறாள்,
"இவ்வளவுதானே! அவர்களுடைய வாதம் தெய்வத் தன்மை உடைத்தாயின் வெற்றி வெற்றி பெறுவர்.
பின்னர் வெற்றி பெற்றவர் பக்கம் சேர்வதுதானே நேர்மை. இதற்காக ஏன் வருந்த வேண்டும்"
என்றான். இப்படி மகாராணியார் சொன்னாரே தவிர அவர் மனத்தில் மகிழ்ச்சி பொங்கியது. சீர்காழிச்
சிவச்செல்வரின் வருகை எம்மை இந்த சமணரின் தீங்கிலிருந்து காக்கப் போகிறது என மகிழ்ந்தாள்.
அப்போது அமைச்சர் குலச்சிறை அங்கு
வந்தார். அவரிடம் நடந்தவற்றை பாண்டிமாதேவி உரைத்தாள். அமைச்சர் கைகூப்பி நின்றுகொண்டு
"ஞானசம்பந்தர் சுவாமி இங்கு வந்து நமக்கு அருள் புரிந்தார். இனி அந்த சமணர்கள்
என்ன செய்வார்களோ, என்ன வஞ்ச்சனைகள் புரிவார்களோ" என்று அச்சத்தை வெளியிட்டார்.
அரசியும் மனம் கலக்கமடைந்து
"ஆம், வஞ்சகச் சமணர்கல் தீங்குகள் புரிவதில் வல்லவர்கள். இப்போது நாம் என்ன செய்வது?
அவர்கள் செய்யும் வஞ்சனையால் அந்த குழந்தைப் பெருமானுக்கு யாதேனும் தீங்கு நேரிடுமோ?"
என அஞ்சினார்.
இந்த நிலையில், மன்னனிடம் செய்தி
சொல்லிவிட்டுச் சென்ற சமணர்கள் ஒருவருமறியாமல் திருஞானசம்பந்தர் மடத்தை அடைந்தார்கள்.
மந்திரம் ஜெபித்து மடத்துக்குத் தீமூட்ட முனைந்தார்கள். ஆனால் அந்தோ, அவர்கள் மந்திரம்
பலிக்கவில்லை. தீ மூளவில்லை. இதனால் அச்சமுற்று அவர்கள் மீண்டும் ஆலோசித்தார்கள். மன்னன்
இந்த செய்தியறிந்தால் நம்மை மதிக்க மாட்டானே. இதற்கு ஒரு யுக்தி செய்தாக வேண்டும் என்று
தீர்மானித்துத் தீப்பந்தம் ஏற்றி மடத்துக்குத் தீ வைத்தார்கள். மடம் தீப்பற்றி எரிந்தது.
சிவனடியார்கள் ஓடிவந்து தீயை அணைத்தார்கள்.
சமணர்கள் செந்த தீங்கு இது, இதற்குக்
காரணம் பாண்டிய மன்னன் அன்றோ? இந்தத் தீங்குக்கு மன்னனே பொறுப்பு என்று சம்பந்தர் பாடத்
துவங்குகிறார். "செய்யனே திருவாலவாய்" எனும் திருப்பதிகத்தைப் பாடி சிவனடியார்கள்
வாழும் திருமடத்திற்கு சமணர்கள் இட்ட தீ, பையவே சென்று பாண்டியர்க்கே ஆகுக!" எனக்
கட்டளையிட்டார். தீ பையவே செல்க என்றதால் அது மெல்ல வந்து பாண்டியனை அடையுமுன்பு மன்னன்
மனம் மாறிவிடலாமே எனும் ஆதங்கம் அவருக்கு. திருஞானசம்பந்தர் சிவபெருமான் பெயரால் அந்த
தீ பாண்டியனை அடையட்டும் எனக்கூறியதால் அந்த தீ எனும் வெப்பு நோய் பாண்டியன் நெடுமாறனைச்
சென்று அடைந்து அவனைத் துன்புறுத்தலாயிற்று.
மறு நாள் சமணர் சம்பந்தர் மடத்துக்குத்
தீயிட்ட செய்தி மதுரை நகருள் காட்டுத்தீயாகப் பரவியது. செய்தி கேட்டு பாண்டிமாதேவியும்
அமைச்சர் குலச்சிறையாரும் மனம் வருந்தினர். ஆனால் தீ பரவாமல் அணைந்துவிட்டது எனும்
செய்தி ஆறுதலாயிருந்தது. இனி சமனர்களின் சூழ்ச்சி என்னவெல்லாம் செய்யுமோ என அச்சமடைந்தனர்.
அப்போது அரசனின் மெய்க்காப்பாளன் அரசரை வெப்பு நோய் பீடித்துவிட்டது எனும் செய்தியைச்
சொன்னான். இருவரும் ஓடிப்போய் மன்னனைப் பார்த்தார்கள்.
அங்கு மன்னன் வெப்பு நோயால் துடிதுடித்தான்.
வயிற்றில் தீப்பற்றி எரிவது போல் எரிச்சல். அரண்மனை முழுதும் அந்தத் தீயின் சூடு உணரப்பட்டது.
அரசன் உடல் கருகியது, சுருங்கியது, உலர்ந்தது. உணர்வும் உயிரும் நீங்குவது போன்ற நிலை.
அவனைச் சுற்று வாழைக் குருத்துக்களும், பச்சிலைத் தழைகளும் பரப்பப்பட்டன. அவையும் வெப்பத்தால்
கருகிப் போயின. வைத்தியர்கள் எதுவும் செய்ய முடியவில்லை. சமணர்கள் தொடத் தொட வெப்பு
அதிகமாயிற்று.
அப்போது மன்னன் மனதில் ஓர் ஐயம்.
நேற்று நாம் அந்த சீர்காழி சிறுவனுக்குச் செய்த தீங்கின் விளைவோ இது? என்பது அது. மன்னனைக்
காண வந்த சமணர்கள் குற்ற உணர்வோடு தங்கள் மயிற்பீலியினால் மன்னன் உடலை வருட அது இன்னமும்
வெப்பு நோயை அதிகமாக்கியது. பீலிகளும் கருகி உதிர்ந்தன. தங்கள் கமண்டல நீரையெடுத்து
அதன் மீது ஊற்றினர். அந்த நீர் தீயின் மீது நெய்போல விழுந்து தீ ஜுவாலையை அதிகமாக்கியது.
ஆத்திரமடைந்த மன்னன் சமணர்களை விலகிப் போங்கள் என்று கத்தினான்.
அப்போது பாண்டிமாதேவி மங்கையர்க்கரசியார்
அமைச்சர் குலச்சிறையாரிடம், "நேற்று அந்த ஞானசம்பந்தப் பெருமானுக்குச் செய்த தீங்குதான்
இப்படி வாட்டுகிறதோ" என்றார். அதற்கு அவர், "ஆம், முப்புரம் எரித்த முக்கண்
பெருமான் தன் அடியார்க்குச் செய்த தீங்குக்காக மன்னனை இப்படி வருத்துகிறார்" என்றார்.
இருவரும் ஒரு முடிவுக்கு வந்து
மன்னிடம் சென்று "மன்னா, தங்களுக்கு இந்த வெப்பு நோய் வந்த விதம் தெரியுமா? சீர்காழி
தந்த சிவ நேசச் செல்வர் திருஞானசம்பந்தர் பெருமானுக்கு சமணர்கள் தீயிட்டதால் வந்த வினை
இது" என்றனர். சமணர்கள் எந்த வகை மாயம் செய்தாலும் தங்கள் வெப்பு நோய் தீராது,
அதிகரிக்கும். மாறாக ஞானசம்பந்தர் வந்து தங்களுக்குத் திரு நீறளித்தால் தங்கள் நோய்
தீரும்" என்றனர். திருஞானசம்பந்தரின் நாமத்தைக் கேட்ட மாத்திரத்தில் மன்னனுக்கு
எரிச்சல் குறைந்தது. உடனே அமைச்சரிடமும், மாதேவியிடமும் சொன்னான், "ஞானச் செல்வரின்
அருளினால் எனக்கு இந்த நோய் தீருமென்றால், அவரை இங்கு அழைத்து வாருங்கள். என் பிணி
தீர்ந்தால் நான் அவர் பக்கம் சேர்வேன்" என்றான்.
உடனே திருமடத்துக்குத் தாங்களே
சென்று சம்பந்தர் பாதத்தில் வீழ்ந்து வேண்டி மன்னனுடைய நோயைத் தாங்கள் வந்து தீர்க்க
வேண்டுமென வேண்டினர். அதற்கு அவர் "எல்லாம் சிவபெருமான் கருணையினால்தான். அமணர்களின்
பாவச் செயல்கள் நீங்க சிவபெருமான் உள்ளக் குறிப்பறிந்து அரண்மனை வருவேன்" என்றார்.
உடனே ஆலவாய் ஆலயம் சென்று
"காட்டுமாவ திரித்துரி" எனும் திருப்பதிகத்தைப் பாடி பின் "வேதவேள்வியை"
எனும் பதிகம் பாடுகிறார். சிவனருள் பெற்றபின் சிவிகை ஏறி அரண்மனை வந்துற்றார். அவரை
வரவேற்ற மன்னன் தன் இருக்கைக்கு அருகில் பொற்பீடமொன்று அமைத்து அமரச் செய்தான். இதனைக்
கண்டு சமணர்கள் கொதித்தார்கள். அப்போதும் சூது வாது கொண்ட சமணர்கள், சீர்காழி சிறுவனால்
உம் நோய் தீர்ந்தாலும் எம்மால் தீர்ந்ததென்று நீர் சொல்ல வேண்டுமென்றனர். மன்னன் வஞ்சகத்துக்கு
உடன்படவில்லை. உங்களால் முடிந்தால் தீருங்கள், அவர் செயலின் பெருமையை நீங்கள் எடுத்துக்
கொள்ள முடியாது என்றான்.
ஞானசம்பந்தர் அரண்மனை வந்தார்.
பொற்பீடத்தில் அமர்ந்தார். சமணர்கள் பீதியடைந்தார்கள். மன்னன் செல்வரை நோக்கித் தமக்கு
எந்த ஊர் என்றான். அவர் "பிரமனூர் வேணுபுரம்" எனப் பாடினார். வாதம் தொடங்கியது.
சமணர்கள் பொங்கினார்கள். சீர்காழியார் அமைதியாய் வாதிடுங்கள் என்றார். ஆத்திரத்தில்
எழுந்தனர் சமணர். அம்மையார் மங்கையர்க்கரசி தலையிட்டு இந்தச் சமணர்கள் கொடியவர்கள்.
எம்பெருமான் ஞானசம்பந்தரை தனித்து இருக்க உத்தரவிடுங்கள். அவரால் முடியாவிட்டால் பின்னர்
இவர்கள் பார்க்கட்டும் என்றார், மன்னரும் சம்மதித்தார். அப்போது தன்னைச் சிறுவன் என்று
எண்ணி எனக்குத் தீங்கு நேருமோ என்று அஞ்சவேண்டாம், ஆலவாய் அண்ணல் எனக்குத் துணை நிற்பான்
எனும் பொருள்பட "மானினேர் விழி மாதராய்" எனும் திருப்பதிகத்தைப் பாடினார்.
அப்போது பாண்டியன் நீங்கள் தனித்தனியே
என் நோயைத் தீர்க்க முயற்சி செய்யுங்க்கள் என்றான். உடனே சமணர்கள் சென்று அவன் இடப்புறம்
நின்று மந்திர உச்சாடனம் செய்தனர். மன்னன் நோய் அதிகமாகியது. தாங்கிக்கொள்ள முடியாத
மன்னன் ஞானசம்பந்தரை அழைத்துத் தன் வலப்புறம் நின்று நோயைத் தீர்க்கும்படி சொன்னான்.
உடனே சம்பந்தர் "மந்திரமாவது நீறு" எனும் திரு நீற்றுப் பதிகத்தைப் பாடி
அந்தத் திரு நீற்றை அவன் வலப்புறத்தில் தடவினார். வலப்பக்க நோய் தீர்ந்து உடல் குளிர்ந்து
இருந்தது. இடப்புறம் தீயென எரிய வலப்புறம் ஞானசம்பந்தர் அருளால் நோய் தீர்ந்து குளிர்ந்தது.
மன்னன் சமணர்களைப் பார்த்து "சமணர்களே நீங்கள் தோற்றுவிட்டீர்கள், போய்விடுங்கள்
இங்கிருந்து" என்று சொல்லி ஞானசம்பந்தரிடம் ஐயனே என் இடது பக்கத்தையும் தாங்களே
குணப்படுத்தி விடுங்கள் என்றான். ஞானசம்பந்தரும் திரு நீறு பூசி அந்தப் பக்கத்தையும்
குணப்படுத்தினார்.
மன்னைன் வெப்பு நோய் தீர்த்த
ஐயனின் அடிகளில் மங்கையர்க்கரசியாரும், குலச்சிறையாரும் விழுந்து பணிந்து எழுந்தனர்."நாங்கள் பெருமையுற்றோம்,
மன்னரும் பிறவா மேன்மையுற்றார்" என்று மகிழ்ந்தார்கள். சமணர்கள் மருண்டனர். பயந்து
அஞ்சி பல சூதுகளை வகுத்து தீயாலோ, நீரினாலோ தீங்கு விளக்க எண்ணினார்கள். அனல்வாதம்
புனல் வாதம் நடந்தது. இறுதியில் சம்பந்தர் பெருமானின் சைவ நெறியே வெற்றி பெற்றது. சைவ
உலகில் மங்கையர்க்கரசியார் ஒரு நாயன்மாராக இன்றும் ஒளிவீசி நிற்கிறார் .
மங்கையர்க்கரசியார்
புகழ் வாழ்க! சைவ நெறி வாழ்க!
மறைஞான காழியூர்
சம்பந்தர் பெருமான் புகழ் வெல்க!
தென்னாடுடைய சிவனே போற்றி! என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!!