பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, November 27, 2012

உயரத்தின் அடித்தளம்


I am reproducing the mail received from my friend C.R.Sankaran. 

உந்துதலின் அளவுதான் உங்கள் உயரத்தின் அடித்தளம்
ஒரு ஜென் துறவியும், அவருடைய சீடர்களும் ஓரிடத்திலிருந்து வேறிடம் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் நடந்து சென்ற வழியில் ஒரு முயல் மிக வேகமாகக் கடந்து சென்றது. அந்த முயலைத் துரத்தியபடி ஒரு நரி ஓடியது.
நடந்த துறவி நின்றார். சீடர்களைத் திரும்பிப் பார்த்தார். ‘சீடர்களே! முயலும், அதைப் பின் தொடர்ந்து நரியும் ஓடுவதைப் பார்த்தீர்களா? முயலை நரி பிடித்துவிடுமா?என்று கேட்டார்.
குருவே! முயல் வேகமாக ஓடும் என்பது உண்மைதான். ஆனால், நரி முயலை விட வேகமாக ஓடும் ஆற்றலைப் பெற்றது. அதனால் நிச்சயம் இந்த நரி அந்த முயலைப் பிடித்துவிடும். இதில் கேள்விக்கு இடமேது?’ என்று சிரித்துச் சீடர்கள் தங்கள் அறிவின் ஆழத்தை வெளிப்படுத்தினர்..
சீடர்கள் சிரித்ததைப் பார்த்துக் குருவும் வாய்விட்டுச் சிரித்தார். ‘கேள்விக்கு இதில் இடமிருப்பதை உணர்ந்ததனால்தான் நான் உங்களுக்குக் குருவாக இருக்கிறேன். சிந்திக்க இதில் இடமில்லை என்று நினைப்பதனால்தான் இன்னமும் நீங்கள் சீடர்களாகவே இருக்கிறீர்கள்’ என்றார் குரு.கேள்விக்கும், சிந்தனைக்கும் இதில் எங்கே இடம்?’ என்று சீடர்கள் மீண்டும் ஒரே குரலில் கேட்டனர். ‘கேள்விகளால் நடத்தும் வேள்விகளால்தான் உலகத்தின் உண்மைகள் ஒவ்வொன்றும் புலப்படும். என் கேள்விகளுக்கு முதலில் நீங்கள் பதில் சொல்ல முயலுங்கள் என்ற துறவி ‘முயலும், நரியும் ஏன் ஓடுகின்றன? என்று கேள்விக் கணையைத் தொடுத்தார்..
நரியிடமிருந்து தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முயல் ஓடுகிறது. அந்த முயலைக் கவ்விப் பிடித்து உணவாக்கிக் கொள்ள நரி ஓடுகிறது என்று சீடர்கள் தெளிவாகப் பதில் தந்தனர்.உயிர் முக்கியமா? உணவு முக்கியமா? என்று அடுத்த கணையை வீசினார் குரு. ‘இது என்ன கேள்வி? இன்றில்லாமற் போனால் உணவை நாளை நாம பெறக்கூடும். ஆனால், இருக்கும் உயிரை இழந்துவிட்டால் திரும்பவும் அதை நாம் பெற முடியாதே! இழந்தால் பெறக்கூடிய உணவை விடவும், திரும்பப் பெறமுடியாத உயிர்தான் உலகத்தின் உயிரினங்கள் அனைத்துக்கும் முக்கியம்’ என்று ஒருவன் சொல்ல, மற்றவர் அனைவரும் அதை அழுத்தமாக அமோதித்தனர்..
சீடர்களே! இப்போது சிந்தியுங்கள். இழந்தால் பெறமுடியாத உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் உந்துதலுடன் முயல் ஓடுகிறது. பசிக்கு இரை தேடும் உந்துதலுடன் நரி ஓடுகிறது. உணவின் உந்துதலைவிட உயிரின் உந்துதல் பெரிதல்லவா! அதனால் அதிகபட்ச உந்துதலுடன் ஓடிக் கொண்டிருக்கும் முயலை நரியால் பிடிக்க முடியாது’ என்றார் குரு..
அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே முயல் ஒரு புதருக்குள் மறைந்து விட்டது. நரி எங்கே முயல் மறைந்தது என்றறியாமல் ஏமாற்றத்துடன் அங்குமிங்கும் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தது.உந்துதலின் அளவுதான் ஒவ்வொரு மனிதனின் உயரத்தின் அடித்தளம். இதை உணர்த்துவதுதான் இந்த ஜென் கதையின் நோக்கம்..
உந்துதல் இல்லாத மனிதவாழ்வில் சாதனைகளுமில்லை: சரித்திரமுமில்லை.முதல் உலகப் போரில் ஜெர்மானியப் படையில் இலட்சக்கணக்கான வீரர்களுள் ஒரு வீரனாய் துப்பாக்கி தூக்கிய இட்லர்தான் இரண்டாம் உலகப் போர் உருவாவதற்கே காரணமானான். பிரெஞ்சுப் படையில் ஒரு சாதாரண சோல்ஜராய் இராணுவ வாழ்க்கையைத் தொடங்கிய நெப்போலியன்தான் இங்கிலாந்தை அச்சத்தால் அலைக்கழித்த பிரெஞ்சுப் பேரரசின் சர்வாதிகாரியாய் சரித்திரம் படைத்தான்.ஆஸ்திரியாவைச் சேர்ந்த இட்லர் ஜெர்மனியின் ஆட்சியாளனாய் மாறியதும், மத்தியதரைக் கடலில் உள்ள கார்சிகா தீவில் பிறந்த நெப்போலியன் பிரான்சின் அதிகார நாற்காலியில் அமர்ந்ததும் வரலாறு அதுவரை கண்டிராத அதிசயங்கள்..
இந்த அதிசயங்கள் அரங்கேறியதற்கு அவர்கள் உள்ளத்தில் உருவெடுத்த உந்துதல்தான் அடிப்படைக் காரணம்..
கிரேக்கத்தின் சின்னஞ் சிறிய மாசிடோனியா நகரத்தின் சிம்மாசனத்தில் அமர்ந்த அலெக்சாண்டரை உலகாளச் செய்தது எது? உலகப் படத்தில் குண்டூசிபோல் இருக்கும் ரோமை செல்வம் கொழிக்கும் பேரரசாக சீசரை உருவாக்கச் செய்தது எது? உந்துதல்!.
செருப்பு தைப்பவனுக்கு மகனாகப் பிறந்த அபிரஹாம் லிங்கனை அமெரிக்க வல்லரசின் முதல் மகனாய் உயர்த்தியதும், அந்த அமெரிக்காவே வியந்து பார்த்த ஆன்ம ஞானி விவேகானந்தராய் நரேந்திரனை உருவாக்கியதும் அவரவர் போக்கில் உருவெடுத்த உந்துதலே!.
ஒன்றைச் செய்தாக வேண்டும் என்ற மனத்தின் முனைப்புதான் உந்துதல். ஒவ்வொருவர் வாழ்விலும் வெற்றிபெற சிந்தனைதான் முதலீடு; முனைப்புதான் வழிமுறை; கடும் உழைப்பே தீர்வு’ என்கிறார் அப்துல்கலாம்..
கனவு காணுங்கள். தீவிரமாகக் காணப்படும் கனவுகள் எண்ணங்களாக மாறி ஒருநாள் நிச்சயம் நனவாகும். உந்துதலோடு செயற்கடுவதற்கு ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு தேவை’ என்கிறார் கலாம்.வெற்றிக்கு வழி என்ன?’ என்ற தேடலிலேயே வாழ்க்கையைத் தொலைத்து விடலாகாது. வெற்றி என்பது சிலருக்கு மட்டுமே ஆண்டவன் விசேஷமாய் வழங்கும் ஆசீர்வாதமில்லை..
வெற்றியைக் கரம்பற்ற நாம் மூன்று படிகளில் ஏறினால் போதும். அந்த மூன்று படிகள்… ஆசைப்படு-ஆசைப்படுவதை அடையமுடியும் என்று நம்பு – அந்த நம்பிக்கை நிறைவேறும் வரை இடையறாது செயற்படு. இதுதான் வெற்றிக்கான மூலமந்திரம். இந்த சூத்திரத்தின் சூட்சுமத்தைப் புரிந்துகொண்டால் போதும். வெற்றித் தேவதையின் கைகளில் இருக்கும் மாலை ஒரு நாள் உங்கள் கழுத்தை அலங்கரிக்கும்..


1 comment:

  1. அழகான அருமையான கருத்து விளக்கம்
    பயனுள்ள அருமையான பதிவுக்கு
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete

You can give your comments here