பாரதி பயிலகம் வலைப்பூ

Sunday, November 25, 2012

ஆன்மிகம் தேவையா?


நான் படித்ததில் பிடித்தவை!
(நன்றி: "காலைக் கதிர் - வாரக் கதிர்")

ஆன்மிகம் தேவையா?

மனிதர்களுக்கு எவ்வளவுதான் வசதிகள் இருந்தாலும், கூடவே ஆன்மிக உணர்வும் இருக்க வேண்டும். ஆன்மிகம் என்பதுதான் மனிதனின் மன அமைதிக்குச் சிறந்த மருந்து. மற்ற ஜீவன்கள் ஆன்மிகத்தில் ஈடுபட முடியாது. மனிதனுக்கு அந்த வாய்ப்பு உள்ளது. வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

கோடி கோடியாகப் பணம் இருந்தாலும் மனமானது அதைப் பெருக்கவும், காப்பாற்றிக் கொள்வதிலேயுமே ஈடுபடும். இதில் உள்ள அக்கறை மற்றும் ஆர்வத்தை ஆன்மிக வழியில் செலுத்தினால், துன்பங்களை மறக்கலாம்; மன அமைதி பெறலாம்.

அந்தக் காலத்தில் அரசர்களெல்லாம் வயதாகி விட்டால், ராஜ்யத்தை மகனிடம் ஒப்புவித்து விட்டு தவம் செய்ய காட்டுக்குப் போய் விடுவர். அங்கேதான் மனம், ராஜ்ய விஷயங்களில் ஈடுபடாமல் பகவானிடம் ஈடுபடும். அப்படி போவதற்கு வைராக்கியம் வேண்டும். நாட்டை ஆண்டது போதும்; இனி ராஜ்யம் வேண்டாம்; இதைவிட உயர்ந்ததான பேரின்ப ராஜ்யத்தை அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்கள் கானகம் சென்று, தவத்தில் ஈடுபட்டனர். அதுதான் பகவானை அடையும் ஒரே வழி.

பரதர் என்ற சக்கரவர்த்தி, இப்படித்தான் எல்லாவற்றையும் துறந்து தவம் செய்யக் காட்டுக்குப் போனார். ஆனால், அங்கே ஒரு மான் குட்டியின் மீது அன்பும், பாசமும் வைத்ததால் தவம் குறைந்து மீண்டும் பிறவி எடுக்க வேண்டு வந்தது. அதனால், கொஞ்சம் கொஞ்சமாக இந்த ஆசாபாசங்களை விட்டுவிட்டு பகவானை அடையும் வழியைப் பார்க்க வேண்டும்.

இங்கே காணும், அனுபவிக்கும் சுகமெல்லாம் அநித்யமானது. சரீரமே ஒருநாள் அழியக் கூடியது; அப்படியிருக்க, சரீரம் அனுபவிக்கும் சுகம் மட்டும் நிரந்தரமானதா? இல்லையே! சரீரம் அழிந்தாலும் ஜீவன் அழிவதில்லை. அது பாவ புண்ணியங்களுக்குத் தக்கபடி மீண்டும் பிறவி எடுக்க வேண்டியுள்ளது.

எதன் மேலும் பாசம் வைக்காமல், பகவானிடம் பக்தி வைத்தால், பிறவிக்கடலைத் தாண்டலாம். மீண்டும் பிறக்க வேண்டியிராது. இது எல்லோருக்கும் சாத்தியமாகாது. ஆகவே, ஆன்மிக மார்க்கத்தில் பற்றுதலும், வைராக்கியமும் இருந்தால் இறைவனைச் சேரலாம். பந்த பாசங்களை விட்டுவிட யாருக்கு மனசு வரும்? முயற்சி செய்து பார்ப்பதில் தவறில்லையே!

(இதைத்தான் ஹிந்து மதமும், நமது புராண இதிகாசங்களும், பகவத் கீதை முதலான அனைத்து ஞான நூல்களும் கூறுகின்றன. இவற்றை மீண்டும் மீண்டும் படிப்போம், சிந்திப்போம், பயன்பெறுவோம்.")

No comments: