பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, November 8, 2012

தீபாவளி வாழ்த்துக்கள்!தீபாவளி வாழ்த்துக்கள்!

பாரதி இலக்கியப் பயிலகத்தின் இந்த வலைத்தளத்துக்கு வந்து என்னுடைய படைப்புக்களைப் படித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எனது இனிய தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அனந்த சக்தி

எறும்பு இறந்துபோன புழுவை இழுத்துச் செல்கிறது; எதனால்? சக்தியினால். தூமகேது அனேக லட்சம் யோசனை தூரமான தனது வாலை இழுத்துக் கொண்டு திசைவெளியில் மகா வேகத்தோடு சுழலுகின்றது; எதனால்? சக்தியினால். அந்த தூமகேது எழுபத்தைந்து வருஷத்தில் ஒரு மண்டலமாகத் தன்னைச் சுற்றி வரும்படி சூரிய கோளம் நியமிக்கிறது; எதனால்? சக்தியினால்.

ஓர் கன்னிகை பாடுகிறாள். நெப்போலியன் ஐரோப்பாக் கண்டம் முழுவதையும் வெல்லுகிறான். இவை இரண்டிற்கும் சக்தியே ஆதாரம். கண்ணுக்குப் புலப்படுவதும், ஊக்கத்திற்குப் புலப்படுவதுமாகிய வெளியுலகங்கூட எல்லையற்றதென்று பண்டிதர்கள் கண்டிருக்கிறார்கள். இந்த எல்லையற்ற உலகத்தை இயக்கும் சக்தி தானும் எல்லையற்றதாகும். அனந்தமானது. அதனினும் பெரிது. இவ்வித சக்தியை மனிதன் பாவனை செய்வதால் பலவிதப் பயன்களுண்டு.

"யத்பாவயஸி தத்பவஸி"

எதனைப் பாவிக்கிறாயோ நீ அதுவாக ஆகின்றாய்.

ஆனால், இங்ஙனம் பாவனை செய்வது லேசான காரியமென்று நினைத்துவிடலாகாது. உயிர் தழும்பியதும் கனல்வதுமான சிரத்தையுடன் பாவனை செய்ய வேண்டும். பொறி பறக்கும் பக்தியுடன் தியானம் செய்ய வேண்டும். இதனை வீண் கதையென்று நினைத்துவிட வேண்டாம். விடாமல் அனுஷ்டானம் செய்து பார்த்தால் இதன் பயன் தெரியும்.

துணிவு, உள்ளத் தூய்மை, ஏதாவதொரு மகத்தான லட்சியத்திலே அறிவை ஆணி கொண்டடித்தது போலப் பற்றுறச் செய்து கொள்ளுதல், லாப நஷ்டங்களிலே சிந்தனை இல்லாமை -- இவைதான் யோகத்தின் இரகசியம்.

-- "மகாகவி சுப்பிரமணிய பாரதியார்"

புருனெய் நாட்டிலிருந்து கவிஞர் தனுசு அனுப்பியிருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் நண்பர்கள் அனைவருக்கு உரித்தாக்குகிறேன்.

ஆழ்கடல் எனும்
வலை உலகில் கிடைத்த
முத்துக்கள்!

யாழ் ஒலியென
நான் நேசிக்கும்
ஓசைகள்!

வாழ்நாள்
நீட்டிக்க வைக்கும்
ஆசைகள்!

ஏழுலகிலும்
நான் விரும்பும் 
அதிசயங்கள்!

வானத்தில்
நான் விரும்பும்
வானவில்!

வையத்தில்
எதிர் பார்க்கும்
மழைமுகில்!

அங்கொன்று இங்கொன்றுமாய்
இருக்கும் 
புள்ளிகள்!

ஒன்றோடு ஒன்றாக 
இனைந்த
கோலங்கள்!

எனக்கு 
இவை யாவுமாகி
கிடைத்த 
நட்பு நெஞ்சங்கள்!

உங்கள் அனைவருக்கும்
மனம் நிறைந்த 
தீபாவளி
நல் வாழ்த்துக்கள்!

-தனுசு-

இருள் மறைந்து ஒளி பரவ
வறுமை மறைந்து வளமை பெருக
துயரம் மறைந்து இனியவை வளர
ஊழல் மறைந்து உலகம் சிறக்க
தீயவை மறைந்து நல்லவை உயர
பொய்மை மறைந்து வாய்மை விளங்க
அல்லவை மறைந்து நல்வழி திறக்க
அறியாமை மறைந்து அறிவு செழிக்க
இத்திரு நாளில் இறைவனை வேண்டுவோம்!

உறவினை வளர்த்து உயர்ந்து நிற்போம்
விளக்கின் ஒளியில் இறைவனைக் காண்போம்
நன்மை செய்து நலமே பெறுவோம்
நேர்மை காத்து நேயம் வளர்ப்போம்
நியாயம் உணர்ந்து நயம்பட வாழ்வோம்
நாணய்ம் காத்து பயனுற வாழ்வோம்!
உடல் நலம்பேணி மகிழ்வொடு வாழ்வோம்!


என் வி சுப்பராமன்   

தேன் சொட்டும் கவிதை
திகட்டாத அன்பு
வான் முட்டும் கற்பனை
வாஞ்சை மிகு வாழ்த்து 
கூன் பட்டாலும் 
கோணாத நட்பு
காணப் பட்டேன்
கவிதையின் கருவிலே
காணமல் போனேன் 
கவிதா உருவிலே
இன்பம் மனதிலே
இழையோடும் உணர்விலே
இணைய வகுப்பிலே
இணைந்தோம் இப்பிறப்பிலே
இருந்தும் களிப்போம்
இடைவிடா நட்பிலே!

தீப ஆவளி வாழ்த்துக்கும் 
தீம் பாட்டுக்கும் 
நன்றி! நன்றி!!
நன்றிகள் கவிஞரே!

இந்த தருணத்தில் உங்கள் அனைவருக்கும் எங்களது இனிய தீப ஆவளி வாழ்த்துக்கள்!
அன்புடன்,
ஆலாசியம் கோ.

No comments:

Post a Comment

You can give your comments here