பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, August 6, 2012

சர்வாதிகாரிகளின் கோர முடிவுகள்


The following posts have already been published in this same Blog. long back. Just to remind you the same to the new comers, I am giving again the same posts for fresh reading. Kindly give me your feedback.


உலக சர்வாதிகாரிகளின் கோர முடிவுகள்


உலக சர்வாதிகாரிகளின் கோர முடிவுகள்

நாற்பத்தி இரண்டு ஆண்டுகள் உலக பயங்கரவாதத்தை ஊக்கி வந்தவரும், அமெரிக்கர்களாலும் மற்ற உலக சமாதானவிரும்பிகளாலும் "Mad Dog" என வர்ணிக்கப்பட்டவருமான லிபிய அதிபர் மும்மர் கடாஃபி காட்டில் வேட்டையாடப்படும் மிருகத்தைப் போல வேட்டையாடப்பட்டு, அரைகுறை உயிரோடு சாலைகளில் இழுத்துச் செல்லப்பட்டு கோரமாகச் சுடப்பட்டு இறந்த செய்தியைப் பார்த்தோம், கேட்டோம். என்னதான் வாழ்நாள் முழுவதும் சர்வ அதிகாரங்களோடும், மக்களை அச்சத்திற்காட்பட வைத்தபோதும், இதுபோன்ற சர்வாதிகாரிகளின் முடிவு இப்படித்தான் அமைந்து விடுகிறது. இது இறைவனின் கட்டளை போலும்.

இவருக்கு முன்பும் பல சர்வாதிகாரிகள் இருந்திருக்கின்றனர். அவர்களுக்கு ஏற்பட்ட இப்படிப்பட்ட கோர முடிவுகள் இவர்களுக்குத் தெரியாமல் இருந்திருக்குமா? தெரிந்துதான் இருக்கும். அப்படியிருந்தும் இவர்கள் ஏன் சர்வாதிகாரிகளாக, மக்களைக் கொடுமைப் படுத்தி அவர்களுடைய எதிர்ப்பை, ஆத்திரத்தை எதிர்கொண்டு இப்படி பரிதாபமாக உயிரிழக்க முன்வரவேண்டும். ஏன் தெரிந்தே பாழ் நரகக் குழிக்குள் அழுந்த வேண்டும்? இதெல்லாம் இவர்களுக்கும் ஒரு படிப்பினையாக இருக்க வேண்டாமா?

இவற்றைப் பற்றி யோசிக்கும் போது ஒரு உண்மைதான் புலப்படுகிறது. சர்வ வல்லமையும், சர்வ ஆளுமையும், சர்வ அதிகாரங்களும் அமைந்து விடுகிறபோது அறிவுக்கண் மூடிக் கொண்டு விடுகிறது. அது நியாயங்களைப் பார்ப்பதில்லை; மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்வதில்லை. மக்கள் ஆற்றாது அழுத கண்ணீரைத் துடைக்க முயற்சி செய்வதில்லை. ஆணவம் ஒன்றே மனம் முழுவதும் வியாபித்து விடுகிறது. விளைவு? இதுதான்.


நாஜி ஜெர்மனியின் அடால்ப் ஹிட்லர்:

இரண்டாம் உலக யுத்தம் நடந்த காலத்தில் யூதர்களுக்கு எதிரான மனித இனக் கொடுமைகளை ஈவு இரக்கம் இல்லாமல், அரக்க உள்ளத்தோடு அரங்கேற்றியவர் ஹிட்லர்.

முதல் உலகப் போரில் ஈடுபட்ட ஒரு போர்வீரன், தன் பேச்சுத் திறமையால், தோற்றத்தால், நடத்தையால் மற்றவர்களிடமிருந்து மாறுபட்டவராகத் திகழ்ந்த அடால்ஃப் ஹிட்லர், நல்லவிதத்தில் மாறுபட்டிருக்கலாமே! அப்படியில்லாமல் கொடுமை, இரக்கமின்மை, ஆணவம் இவற்றால் ஆட்கொள்ளப்பட்டு, அறிவுக்கண் மூடிவிட அநியாயங்களைக் கூச்சமில்லாமல் அரங்கேற்றிக்கொண்டிருந்தார்.

உலகம் ஒரு கோரமான போரைக் கண்டது. லட்சக்கணக்கில் மனித உயிர்கள் கருகி, சுடப்பட்டு, உயிர் இழந்தனர். நாடுகள் கபளீகரம் செய்யப்பட்டன. போலந்து வீழ்ந்தது. பிரான்சும் மற்ற ஐரோப்பிய நாடுகளும் ஹிட்லரின் மின்னல்வேகத் தாக்குதல்களால் செயலிழந்தன.

சோவியத் ரஷ்யாவுடன் செய்துகொண்ட சமாதான ஒப்பந்தம் மீறப்பட்டது. ஹிட்லரின் ராக்ஷசப் படைகள் சோவியத் யூனியனுக்குள் மாப்பிள்ளை போல நுழைந்து முன்னேறியது லெனின்கிராட் வரையிலும். அப்போது பனிக்காலம் தொடங்கவே ஜெர்மானியப் படை துவண்டது, பனியைத் தாங்கிக்கொள்ள முடியாத அவலம் ஏற்பட்டது. அதுவரை பின்னோக்கி ஓடிய ரஷ்யப் படை வெகுண்டெழுந்தது. நாசிப்படைகளை நாசம் செய்யத் தொடங்கியது. திரும்ப வந்த வழியே ஓடினார்கள், ஓடினார்கள் ஜெர்மானியர்கள்.

ரஷ்யர்களும் விடாமல் துரத்தித் துரத்தியடித்தார்கள். அந்த ஓட்டம் பெர்லின் நகரத்தின் பதுங்கு குழியொன்றுள் ஹிட்லரும், அவர் காதலியும் ஓர் அவசரத் திருமணம் புரிந்துகொண்டு தங்களையே போர்த்தீயில் ஆஹுதியாக்கிக் கொண்டு சுவடுபடாமல் மாண்டுபோன நிகழ்வும் நடந்தேறியது. இடைப்பட்ட காலத்தில்தான் அந்த ஹிட்லர் ஆடிய ஆட்டம்?

அடடா! மனிதகுலம் இனி நினைத்துக்கூட பார்க்க முடியாத கொடுமைகள். அதில் மிச்சம் மீதி இருந்த கொடுமையாளர்கள் நியூரம்பர்க் நகரில் நடந்த நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு மின்சார நாற்காலியில் தங்கள் நல்லுயிரை நல்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. வரலாறு ஒரு நீதிபதியாகத்தான் நடந்து கொள்கிறது.

ஹிட்லரின் அந்த கடைசி நிமிடங்கள். ............

தனது தளபதிகள், நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்கள் கூடி தரைக்கடியில் அமைந்த அந்த பங்கரில் அவசர ஆலோசனை நடந்தது. வேறு வழியில்லை. சோவியத் படைகள் தங்களை நெருங்கி வந்துவிட்டன. மேற்கத்திய நேச நாட்டுப் படைகள் இரு திசைகளில் பெர்லினுக்குள் நுழைந்து விட்டன. பிரான்சின் டி கால் ஒரு புறம், இங்கிலாந்தின் மாண்ட்கோமரி மறுபுறம், உள்ளே நுழைந்துவிட்ட அமெரிக்க ரஷ்யப் படைகள். இப்போதோ இன்னும் சிறிது நேரத்திலோ நம்மை கோழி பிடிப்பது போல அமுக்கிவிடுவார்கள். அதன்பின் நடைபெறப்போகும், அவமானங்கள், தண்டனைகள், மக்களின் வெறித்தனமான கோபத்தின் வெளிப்பாடுகள் இவைகள் எல்லாம் நம்மை அலங்க மலங்கடிக்கப் போகின்றன. என்ன செய்யலாம்?

1945 ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி. பெர்லின் நகரைக் காக்கும் நாசி படைவீரர்கள் துப்பாக்கி தோட்டக்கள், பீரங்கிக் குண்டுகள் எதுவும் இல்லாமல் தவிக்கிறார்கள் என்ற செய்தியை பீல்டு மார்ஷல் கீட்டெல் என்பார் ஹிட்லரிடம் சொல்கிறார். தனது முடிவு நெருங்கிவிட்டதை அறிந்த ஹிட்லர் இரண்டு நாட்களுக்கு முன்புதான் அவசரத் திருமணம் செய்துகொண்ட ஈவா பிரானுடனும் சேர்ந்து தனது உயிர்த்தியாகத்துக்குத் தயாராகிக் கொண்டிருந்தார். இல்லாவிட்டால் ரஷ்யர்களின் இரும்புப் பிடியில் சிக்கி பிராணனை விட வேண்டியிருக்குமே!

சயனைட் குப்பிகளை உட்கொண்டு இறக்கலாமா? சரி,  அது சரிவர வேலைசெய்யுமா என்பதை ஒரு நாய்க்கும் அதன் குட்டிகளுக்கும் கொடுத்துப் பார்த்து, அவை உடனடியாக சரிந்து மாண்டதைக் கண்டு, இது வேலை செய்யும் என்ற முடிவுக்கு வந்தனர். தரைக்கடியில் உள்ள பங்கரில் ஹிட்லரின் நம்பிக்கைக்கு பாத்திரமான அத்தனை எஸ்.எஸ். நாசிப் படைத் தலைவர்களும் கூடினர். பேச்சு மறைந்து அமைதி நிலவியது.

அப்போது ஹிட்லரும், ஈவாவும், அந்த பங்கரில் உள்ளுக்குள் உள்ளாக இருந்த மற்றொரு பங்கருக்குக் கதவை தாளிட்டுக் கொண்டு செல்லுமுன்பாக துணைக்கு நின்ற அத்தனை நாசிக்களிடமும் பிரியாவிடை பெற்றனர். பலமுறை, பலரும் முயன்றும் கொல்ல முடியாத ஹிட்லரின் உயிர் அன்று அவராலேயே பறிக்கப்பட விருந்தது.

ரஷ்யப் பிடியில் சிக்க வேண்டும். வேண்டாம் அந்தக் கொடுமை. அவர்களிடம் மிலான் நகரில் முசோலினி பட்டபாடுதான் தெரியுமே! 3.30 மணி. உலகத்தை அஞ்ச வைத்துக் கொண்டிருந்த ஹிட்லர் தனது கைத்துப்பாக்கியை எடுத்துத் தலையில் வைத்துக் கொண்டு சுட்டுக்கொண்டார். உலகமே அஞ்சிய அந்த உயிர் உடனடியாகப் பிரிந்தது. தலையிலிருந்து குருதி கொப்புளிக்க அருகிலிருந்த சோபாவில் சரிந்தது ஹிட்லரின் உடல். பக்கத்திலிருந்து மேஜையில் முட்டி நின்றது அவரது தலை. அருகிலிருந்த ஈவா சையனைட் விஷக் குப்பியை எடுத்துக் கடித்தாள். அவர் உயிர் பிரிந்து உடல் சரிந்தது.

முன்கூட்டியே நாசி அதிகாரிகளுக்கு இடப்பட்ட கட்டளைக்கிணங்க இவ்விருவர் உடலும் பங்கருக்கு வெளியே இழுத்து வரப்பட்டு நாலைந்து கேன் பெட்ரோலை அவற்றின் மீது ஊற்றி தீக்குச்சியொன்றை உரசி அவற்றின் மீது வீசப்பட்டது. உலகத்தை உரையவைத்த அவ்வுடல் தீப்பற்றி எரியத் தொடங்கியது. மணித்துளிகள் கரைந்து இரண்டு மணியானபின் அவையிரண்டும் கரிக்கட்டைகளாக மாறின. அந்த கரிக்கட்டைகளை ஒன்று திரட்டி சாம்பரை பூமிக்கடியில் அமைந்திருந்த பதுங்கு குழியொன்றில் பதுக்கி வைக்கப்பட்டது.

இப்படி அமைந்தது அந்த சர்வாதிகாரியின் முடிவு. "ஆடிய ஆட்டமென்ன, தேடிய செல்வமென்ன, கூடுவிட்டு ஆவிதான் போனபின்னே கூடவே வருவதென்ன" என்று நமது டி.எம்.எஸ். பாடிய வரிகள் நினைவுக்கு வருகிறதல்லவா? ஆம்! அதுதான் 'தன் வினைத் தன்னைச் சுடும்' எனும் வரிகளுக்கு விளக்கம்.



இத்தாலிய சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினி:

உலகமே திடுக்கிடும் வண்ணம், ஹிட்லருக்கும் முன்னோடியாய் வாழ்ந்த சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினி. இத்தாலி மட்டுமல்ல, உலக நாடுகளே இவரது ஃபாசிஸக் கொள்கையால் ஆட்டம் கண்டிருந்த நேரம். போரின் உக்கிரம் தாங்கமுடியாத நிலை ஏற்பட்டது.

முசோலினிக்கு ஏற்பட்ட நிலை என்ன தெரியுமா? 'கரடி விட்டால் போதும் கம்பளி மூட்டை வேண்டாம்' என்கிற நிலை. அது என்ன?

ஒரு ஆற்றில் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. கரையில் இருந்த ஒருவன் ஆற்று வெள்ளத்தில் கருப்பாக ஒரு மூட்டை அடித்துக் கொண்டு வருவது தெரிந்தது. அதோ! ஒரு கம்பளி மூட்டை, அதை இழுத்துக் கொண்டு வருகிறேன் பார் என்று வெள்ளத்தில் குதித்து நீந்திப் போய் அந்த மூட்டையைப் பிடித்தான். அது ஒரு கரடி. வெள்ளத்தில் சிக்கியிருந்த அந்தக் கரடி ஒரு பிடிமானம் கிடைத்ததும் இவனை நன்றாக இறுகப் பிடித்துக் கொண்டது. இவன் மூச்சுத் திணறினான். ஐயோ! எனக்குக் கம்பளி மூட்டை வேண்டாம், இந்தக் கரடி விட்டால் போதும்! என்று கதறி அழுதானாம். பிறகு என்னவாயிற்று! என்ன ஆகவேண்டுமோ அது ஆகியிருக்கும்.

சரி! இனி முசோலினியிடம் வருவோம். போரின் திசை மாறத் தொடங்கியது. இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்களும், ரஷ்யப் படையினரும் முசோலினியைத் தேடி அலைந்தனர். இவர் எப்படியாவது இத்தாலியை விட்டு வெளியேறி ஹிட்லர் இருக்குமிடம் போய்ச் சேர்ந்துவிட்டால் போதும் என்று ஓட்டமெடுத்தார். அவருடன் அவருடைய காதலியும், நடிகையுமான கிளாரா பெத்தாசி, பாசிச கட்சித் தலைவர்கள் பதினைந்து பேர் ஆகியோருடன் ஓடத் தொடங்கினார். தோல்வியின் விளிம்பில் இருந்து கொண்டு உயிர் பிழைத்தால் போதுமென்று ஓட்டமெடுத்த முசோலினியை விதி துரத்திக் கொண்டு வந்தது.

 1945ஆம் வருஷம் ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி, முசோலினியும் அவர் காதலியும் மிலான் நகரில் ஒரு விடுதியில் ரகசியமாகத் தங்கியிருந்துவிட்டுக் காலையில் மாறுவேடம் தரித்து, ஜெர்மானிய ராணுவ உடையில் தப்பி ஓட முயற்சி செய்கிறார்கள். வழியில் சில இத்தாலிய கம்யூனிஸ்ட் வீரர்கள் இவர்களை அடையாளம் கண்டுகொண்டு பிடித்து விடுகிறார்கள். அவர்களிடம் இவர் அப்போது சுதேசியம் பேசுகிறார். நானும் இத்தாலிக்காரன், நீங்களும் இத்தாலிக் காரர்கள், எங்களை எப்படியாவது போக விட்டுவிடுங்கள், நாங்கள் ஹிட்லரிடம் சென்று சேர்ந்து விடுகிறோம் என்று கெஞ்சினார் முசோலினி.

ஐயோ பாவம்! ஒழிந்து போகட்டும் என்று சுதேசி உணர்வுடன் அந்த இத்தாலியர்கள் இவரை விட்டுவிட்டார்கள். மேலும் சிறிது தூரம்தான் சென்றிருப்பார்கள். மறுபடியும் மிலானிலிருந்து சிறிது தூரத்திலிருந்த கிராமமொன்றில் ஒரு கூட்டத்தாரிடம் சிக்கிக் கொண்டனர். இவரது விதி. அவர்கள் ரஷ்ய கம்யூனிஸ்டுகள். இவருடைய சுதேசிக் கெஞ்சல்கள் அவர்களிடம் எடுபடுமா? பிடித்தார்கள். நடுத்தெருவில் முசோலினியையும், அவருடைய காதலியையும், கூட வந்த பாசிஸ்டுகளையும் சுட்டுக் கொன்றார்கள். எப்படி?

வாழ்நாளெல்லாம் உத்தரவிட்டே பழகிவிட்டதால் பழக்க தோஷத்தால், தன்னைச் சுட வந்த சிப்பாய்க்கும் இவர் உத்தரவு பிறப்பித்தாராம். "என் நெஞ்சிலே சுடு!" என்று. எப்போதும் அவர் உத்தரவு எத்தனை சீக்கிரம் நிறைவேற்றப்படுமோ, அதே போல அவனும் உடனே சுட்டான். முதல் குண்டு நெஞ்சில் பாய்ந்ததும் கீழே சரிந்து வீழ்ந்தார் முசோலினி. ஆனால் உயிர் பிரியவில்லை. கிட்டே வந்து பார்த்த சிப்பாய் உயிர் இருக்கிறது என்பது தெரிந்ததும் மீண்டுமொரு முறை நெஞ்சைக் குறிபார்த்து சுட்டான். முசோலினி பிணமானார்.

 பிணமாகிக் கீழே விழுந்து கிடந்த இவர்களுடைய பிணங்களை எத்தனை அவமானப் படுத்த வேண்டுமோ அத்தனை அவமானங்களைச் செய்தார்கள்.  பிணங்களின் முகத்தில் சிறுநீர் கழிக்க மக்கள் க்யூவில் நின்றார்கள். பிணத்தை எடுத்துக் கொண்டு மிலான் நகருக்கு வந்து நள்ளிரவில் அங்குள்ள ஒரு பெட்ரோல் ஸ்டேஷனுக்கு அருகில் கொண்டு வந்து போட்டனர். பின்னர் இவர்களை ஒரு கூரையின் விட்டத்தில் தலைகீழாகக் கட்டி தொங்கவிட்டார்கள்.

 பகல் பொழுதானதும் மக்கள் வந்து பார்த்து இப்படித் தொங்கும் இவர்களில் முசோலினியும் இருப்பது கண்டு செய்தியை ஊர் முழுவதும் பரப்பினார்கள். மக்கள் துக்கப்படுவதற்குப் பதிலாக உற்சாகத்தில் திருவிழாவாகக் கொண்டாடினார். பிணத்துக்குத் தரவேண்டிய மரியாதையைக்கூட மக்கள் இந்தப் பிணங்களுக்குத் தரவில்லை. மணிக்கணக்கில் மக்கள் பிணங்களின் முகத்தில் காரித் துப்பினார்கள்; காலால் உதைத்தார்கள், கல்லால் அடித்தார்கள்; கையில் கிடத்ததையெல்லாம் எடுத்து அடித்தார்கள்.அப்படி ஊரும், நாடும் வெறுக்கும் அளவுக்கு அவர் நடந்து கொண்டதாலா?

சர்வாதிகாரிகள் ஆட்டம் போடும் வரை சரிதான். வீழ்ந்து விட்டால் என்ன நடக்கும்? ஆம்! முசோலினிக்கு நடந்தது போலத்தான் நடக்கும். அவர் பிணத்தை மக்கள் படுத்திய பாட்டில் அவர் தலை உடைந்தது. ரத்த விளாராக அந்தப் பிணங்கள் மிலானில் தொங்கின. கசாப்புக் கடைகளில் மாமிசங்கள் தொங்கவிடப்படுவதைப் போல. சாதாரணமான நாட்களில் இதுபோன்ற காட்சிகள் நமது வயிற்றைப் பிசையும். வேதனையைத் தரும். ஆனால்? இங்கு, இப்போது? அவர்கள் உடல்கள் பட்ட பாடு, அவர்கள் அதுநாள் வரை அனுபவித்த சுகம், செளகரியம், ஆடம்பரம் அனைத்தும் கிழித்துத் தொங்கவிடப்பட்டது போல இருந்தது.

வேண்டாம். இனி எவருமே சர்வாதிகாரியாக ஆகவேண்டாம். நாம் நினைக்கிறோம். ஆனால் சந்தர்ப்பங்கள் அவ்வப்போது இதுபோன்ற சர்வாதிகாரிகளை உருவாக்கிக் கொண்டுதானே இருக்கிறது. யார், எப்போது சர்வாதிகாரியாக ஆவார் என்பது யாருக்குத் தெரியும்? சரித்திரம் தரும் பாடங்களைப் புரிந்து கொள்வோம்.


ருமானியா நாட்டின் சர்வாதிகாரி நிக்கோலஸ் சேசஸ்கோ:

இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகு ஐரோப்பா கண்டம் முழுவதும் கிட்டத்தட்ட சிவப்பாக மாறியது. மாபெரும் நாடான சோவியத் யூனியனின் வலுவான இரும்புக் கரங்கள் ஐரோப்பிய நாடுகளை கம்யூனிச நாடாக ஆக்கியது. மாறியது மட்டுமல்ல, அந்த நாடுகளின் மீதான சோவியத் யூனியனின் இரும்புப் பிடியும் தொடர்ந்து இருந்து வந்தன. அவர்களுக்கு எதிராக எழும் எந்த மக்கள் கிளர்ச்சிகளும் இரும்புக் கரம் கொண்டு நசுக்கப்பட்டன.

ஹங்கேரியில் இம்ரே நாகியின் தலைமையில் நடந்த வர்க்கப் புரட்சி, ரஷ்ய டாங்குகளின் இரும்புச் சக்கரங்களால் நசித்து ஒழிக்கப்பட்டது. புடாபெஸ்ட் நகரம் ரத்தக்களரியாக மாறியது. ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் உயிர் துறந்தவர் போக மிச்சமுள்ளவர்கள் அண்டாவ் நதியின் பாலத்தைக் கடந்து ஆஸ்திரியா நாட்டுக்குள் நுழைந்து உயிர் பிழைத்தார்கள். அதன் பிறகு பல ஆண்டுகள் ஐரோப்பா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தது. காரணம் மக்களின் கழுத்தை அழுத்தி வந்து அடிமைத் தளை.

இந்தச் சூழ்நிலையில் ருமானியாவை நிக்கோலஸ் சேசஸ்கோ எனும் சர்வாதிகாரி ஆண்டு வந்தார். அவருடைய ஆடம்பரமான மாளிகையும், வாழ்க்கை முறைகளும், ஆடை ஆபரணங்களும், கம்யூனிஸ்டுகள் வெறுக்கும் முதலாளி வர்க்கத்தின் ராஜாக்கள்கூட பெற்றிருக்க வில்லை என்பது உலக நாடுகளின் கணிப்பு.

 புக்காரஸ்ட் நகரத்து மக்கள் எழுச்சி பெற்றார்கள். மெல்ல சிவப்பு நாடுகளில் ஜனநாயக மூச்சுக் காற்றைச் சுவாசிக்க விரும்பிய மக்கள் தெருவுக்கு வந்து ஆர்ப்பாட்டம் செய்யத் தொடங்கினார். புக்காரஸ்ட் நகரம் விதிவிலக்கல்ல. அதிலும் ருமானியாவில் நடந்த அடக்குமுறை, ஆடம்பரம் இவற்றால் பாதிக்கப்பட்ட சாதாரண மக்கள் உயிரையும், உடைமைகளையும் இழக்கச் சித்தமாகத் தெருவுக்கு வந்தார்கள்.

போராட்டம் வலுவடைந்தது. உலகத்து மக்கள் பார்வை ருமானியாவின் பக்கம் விழுந்தது. கம்யூனிசத்தின் ஆணிவேரே ஆட்டம் கண்டு கொண்டிருந்த தருணத்தில் இவர் மட்டும் என்ன சாதித்து விட முடியும். மக்கள் சக்திக்கு முன்னால் சர்வாதிகார ஆட்சி நிலைத்து நிற்க முடியுமா? நிக்கோலஸ் புரிந்து கொண்டு விட்டார். தனது நாட்கள் எண்ணப்படுகின்றன என்பதையும் புரிந்து கொண்டார். எப்படியாவது தப்பிப் பிழைத்து ஓடிவிட்டால் என்ன என்று எண்ணினார். முயற்சி செய்தார். ஆனால் முடியவில்லை. கண்களில் எண்ணெயை விட்டுக் கொண்டு காவலிருக்கும் மக்கள் பிடித்து விட்டனர்.

இந்த நிலையில் 1989ஆம் வருஷம் புரட்சி கரைகடந்து சென்றது. மக்கள் அண்ணாந்து பார்க்கக்கூட பயந்திருந்த அதிபரின் மாளிகைக்குள் மக்கள் வெள்ளம் புகுந்தது. சர்வாதிகாரி தப்பிப்போக முடியாதபடி வளைத்துப் பிடிக்கப்பட்டதோடு மக்கள் நீதிமன்ற விசாரணைக்கும் உட்படுத்தப்பட்டார். நீதியின் முன்னால் கொண்டு வந்து நிறுத்தப்பட்டனர்.

மக்களின் வெறுப்புப் பார்வைகள் சுட்டெரிக்க இவர்கள் விசாரணை நடைபெற்றது. ஏராளமான சொத்துக்களைக் குவித்து வைத்திருப்பது தவிர படுகொலைகள் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் இவர்கள் மீது. பயத்தில் உடல் நடுங்க இவரும், இவரது மனைவி எலினாவும் விசாரணையை எதிர் கொண்டனர். விசாரணை வெறும் 90 நிமிடங்கள் நடந்தது. .

 தீர்ப்பு? ஆம்! உலகத்து சர்வாதிகாரிகளுக்குக் கிடைத்த தீர்ப்புதான் நிக்கோலஸ் சேசஸ்கோவிற்கும். என்ன செய்வது? துப்பாக்கியால் சுடப்பட்டு இறக்க வேண்டும் என்பது நீதியின் ஆணை. கணவன், மனைவி இருவரையும் தனித்தனியாகச் சுட்டுக் கொல்வது என்று முதலில் தீர்ப்பளித்தனர். ஆனால் அவர்கள் அழுது புரண்டு இருவரையும் ஒருசேர கொன்றுபோட வேண்டினர்.

சரி உங்கள் விருப்பப்படியே இருவரையும் ஒருசேர சுட்டுக் கொல்கிறோம் என்றனர். செய்தும் முடித்தனர். எப்படி? தீர்ப்பு சொன்னவுடன் இருவர் கைகளையும் பின்புறம் சேர்த்துக் கயிற்றால் கட்டினர். எலினாவால் அப்படி இறுக்கமாகக் கட்டியதைத் தாங்க முடியாமல் வலி வலி என்று கதறி அழுதாள். சிப்பாய்கள் இரக்கம் காட்டவில்லை. உங்களுக்கெல்லாம் யாரும் இரக்கம் காட்டமாட்டார்கள் என்றனர். கூடியிருந்த மக்கள், 'வெட்கம், வெட்கம்' என்று இவர்களை ஏசிக்கொண்டிருக்க இவர்கள் இழுத்துச் செல்லப்பட்டு சிப்பாய்களின் தானியங்கி துப்பாக்கிக்கு இரையாக ஆக்கிவிட்டனர்.

ஒரு சிப்பாய் சொன்ன செய்தி. முதல் குண்டு வரிசை நிக்கோலசின் முழங்காலில் பாய்ந்தனவாம். அடுத்து மார்பைத் துளைத்ததாம்; அடுத்தது எலினாவின் உடலை துளைத்துச் சென்றனவாம். நிமிடங்கள்கூட அல்ல, விநாடிகளில் அவ்விருவர் உடலும் பிணமாகி கீழே விழுந்தன சுற்றிலும் குருதி வெள்ளம் நிறைந்திருக்க. மற்றொரு சர்வாதிகாரி 1989 டிசம்பர் 25இல் மண்ணில் சரிந்த வரலாறு இது.


உகாண்டாவின் இடி அமீன்.

முன்சொன்ன சர்வாதிகாரிகளைப் போல இவருக்கு மக்கள் தண்டனை வழங்கவில்லை. இவர் உகாண்டாவைவிட்டு ஓடிப்போய் லிபியாவில் தங்கி லிபியாவிலிருந்து விரட்டப்பட்டு செளதி அரேபியா சென்று மறைந்து வாழ்ந்த காலத்தில் உயிரிழந்தார். ஆனால் இவர் சர்வாதிகாரியாக இருந்த காலத்தில் நடத்திய கொடுமைகள்தான் எத்தனை எத்தனை???

1971ஆம் ஆண்டு தொடங்கி 1979 வரையிலான காலகட்டத்தில் ஆப்பிரிக்க நாடான உகாண்டாவை ஆண்ட சர்வாதிகாரி இடி அமீனின் கொடுமைகளைச் சொல்லி மாளாது. சட்டம் ஒழுங்கைப் பற்றியோ, மக்களுக்கு நல்லாட்சி கொடுக்க வேண்டுமென்பதிலோ சற்றும் அக்கறையில்லாமலிருந்தவர் இடி அமீன். இவர் காலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கொலையுண்ட செய்தியைச் சொல்வதா? நாட்டைவிட்டு விரட்டப்பட்ட இந்திய வியாபாரிகள், குடியேறிகளின் துன்பங்களைச் சொல்வதா? அல்லது நாடு குட்டிச்சுவராக ஆனபின்பும், இவருடைய எதேச்சாதிகாரமான செயல்பாடுகளைச் சொல்வதா? எதைச் சொல்வது, எதை விடுவது?

இந்த கொடுமைக்கார உகாண்டாவின் சர்வாதிகாரி அந்த நாட்டின் வடமேற்குப் பகுதியிலுள்ள புகாண்டா எனும் ஊரில் பிறந்தவர். அதிகம் படிக்காத முரட்டுப் பேர்வழியான இவர் இளம் வயதிலேயே ராணுவத்தில் சேர்ந்து கொண்டார். இவருக்குக் குத்துச் சண்டையில் பிரியம் அதிகம்; அதில் இவர் தேர்ந்த வீரராக ஆகியிருந்தார். இதனால் இவரை ராணுவத்திலிருந்த பெரும் அதிகாரிகள் கவனிக்கலாயினர். உகாண்டா நாட்டின் Heavy Weight Champion எனும் பட்டத்தை இவர் 1951 முதல் 1960 வரை பெற்றிருந்தார். இவர் 25 ஜனவரி 1971இல் மில்டன் ஒபோடே எனும் நாட்டின் அதிபர் வெளிநாடு சென்றிருந்த சமயம், அவருக்கெதிராக ஒரு புரட்சியை ஏற்படுத்தி ஆட்சியை அபகரித்துக் கொண்டார். ராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றிய இடி அமீன் முதலில் நல்ல திறமைசாலிகளை நிர்வாகப் பொறுப்பைக் கவனிக்க நியமித்திருந்தார். ஆனால், அந்த அதிகாரிகள் சொல்லும் அறிவுரைகள், ஆலோசனைகள் எதையும் இவர் காதில் போட்டுக் கொள்வதில்லை. ராணுவத்தில் இவர் பிறந்த வடகிழக்குப் பிரதேசத்திலிருந்து இளைஞர்களை வரவழைத்து இவரே நேரடியாகத் தன் பொறுப்பில் அவர்களை நியமனம் செய்தார். அவர்கள் இவரிடம் மிகவும் பணிவோடு நடந்து கொண்டனர். இப்படி இவரால் நியமனம் செய்த ராணுவ வீரர்களை நம்பித்தான் இவர் நினைத்தபடி சர்வாதிகாரம் புரிந்து கொண்டிருந்தார்.

இவர் ஆட்சியைப் பறித்துக் கொண்ட உடன் இவர் செய்த காரியம் ஏராளமான லாங்கி, அச்சோலி எனப்படும் பதவி இழந்த அதிபர் ஒபோடேக்கு ஆதரவான படை வீரர்களைக் கொன்று குவித்ததுதான். தனது ராணுவ பலத்தை அதிகப்படுத்திக் கொள்வதற்காக இவர் இங்கிலாந்தையும், இஸ்ரேலையும் உதவி செய்ய வேண்டிக் கொண்டார். ஆனால் இவரது தரம், நடத்தை இவற்றை கவனித்த இந்த நாடுகள் உதவி செய்ய மறுத்தன. இதனால் இடி அமீன் ஆத்திரமடைந்தார்.

1872இல் இவர் எல்லா இஸ்ரேலியர்களையும் நாட்டைவிட்டுத் துரத்திவிட்டு, லிபியாவின் உதவியை நாடினார். லிபிய அதிபர் மும்மர் கடாபி உடனடியாக இவருக்குத் தேவையான உதவிகளைச் செய்யத் தயாரானார். இதன் மூலம் ஆப்பிரிக்க நாட்டிலேயே முதல் நாடாக உகாண்டா இஸ்ரேலுக்கு எதிரான நிலையை எடுத்ததோடு, இஸ்லாமிய நாடுகள் சார்பாகவும் நடந்து கொள்ளத் தொடங்கியது.

இஸ்ரேல் மீதிருந்த ஆத்திரத்தில் இவர் இரண்டாம் உலகப் போரில் அடால்ப் ஹிட்லர் செய்த யூதப் படுகொலையை நியாயப் படுத்தினார். உகாண்டாவின் தெற்குப் பகுதியில் அவருடைய ஆட்சிக்கு எதிராக எழுந்த எதிர்ப்பைக் காரணம் காட்டி டான்சானியா நாட்டின் மீது 1978இல் படையெடுத்தார். அந்த நாட்டின் எல்லையோரப் பகுதிகளை தன்வசம் எடுத்துக் கொண்டார். டான்சானியா நாடும் தனது ராணுவ பலத்தை அதிகப் படுத்திக் கொண்டு, தங்கள் எல்லையுள் புகுந்து ஆக்கிரமித்திருந்த உகாண்டா படை வீரர்களை 1979இல் உதைத்து வெளியேற்றியது. உதைவாங்கத் தொடங்கிய இடி அமீன் பயப்படத் தொடங்கினார். டான்சானியப் படைகள் உகாண்டாவின் உட்பகுதிக்குள்ளும் நுழைந்து தலைநகர் கம்பாலா வரை வந்து உகாண்டாவின் அதிபராக இருந்த இடிஅமீனைத் தூக்கி எறிந்தது.

உயிருக்குப் பயந்து இடி அமீன் லிபியாவுக்கு ஓடிவிட்டார். அந்த நாட்டில் சரணடைந்தார். அங்கு போன இடத்திலாவது சும்மா இருந்திருக்கலாமல்லவா? அங்கும் இவர் விஷமம் செய்யத் தொடங்கினார். இவரது படை வீரர்களுக்கும் லிபிய வீரர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இவர் லிபியாவை விட்டுத் துரத்தப் பட்டார்.

1980இல் இவர் திருட்டுத் தனமாக மறுபடியும் உகாண்டாவிற்குள் நுழைய முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் சாய்ரே நாட்டில் இவர் அடையாளம் காணப்பட்டு துரத்தப்பட்டார். இவர் செளதி அரேபியா நாட்டில் அடைக்கலம் புகுந்தார். இடி அமீனின் ஆட்சி உகாண்டா நாட்டுக்குப் பல பிரச்சினைகளைத் தோற்றுவித்தது. இவர் ஆட்சியில் உயிர்களுக்கு மதிப்பு இல்லை. யார், எப்போது, எப்படி கொல்லப்படுவார்கள் என்பது தெரியாமல் எங்கு பார்த்தாலும் அராஜகம் நடந்தது. மக்களுக்குப் பாதுகாப்பு இல்லை. ஆசிய குடியேறிகள் அராஜகமாகத் துன்புறுத்தப்பட்டு நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார்கள். ஆயிரக்கணக்கான இந்தியர்கள் சொத்து, சுகம், வீடு, வாசல் அனைத்தையும் விட்டுவிட்டு ஓடத் தொடங்கினார்கள். நாட்டில் எங்கும் லஞ்சமும் ஊழலும் பேயாட்டம் போட்டன. பொருளாதாரம் சீர்குலைந்தது. உற்பத்தியும் குறைந்து நாட்டில் வறுமை, பஞ்சம் தோன்றத் தொடங்கியது.

கொடுமைக்கு மறுபெயர் இடி அமீன்; பைத்தியக்காரச் செயல்களுக்கு இடி அமீன் என்றெல்லாம் பெயர் வாங்கியவர் இந்த நபர். தன்னை ஆப்பிரிக்காவின் பவித்திரமான பிரஜை என்று சொல்லிக் கொண்டவர் இவர். தனது 80ஆவது வயதில் செளதி அரேபியாவில் இவர் காலமானார். இவரது கடைசி நாட்களில் இவர் நினைவு இழந்து கோமா நிலையில் மருத்துவ மனையில் இருந்தார். சிறுநீரகம் செயலிழந்து இவர் உயிர் பிரிந்தது.

ஃபெர்டினாண்ட் எட்றாலின் மார்கோஸ்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபராக இருந்தவர் இந்த மார்கோஸ். பிலிப்பைன்சில் 11-9-1917இல் பிறந்த இவர் ஒரு வழக்கறிஞர். இவருடைய தந்தையும் ஒரு அரசியல் வாதியாக இருந்தவர். பிலிப்பைன்ஸ் நாட்டின் முதல் அதிபராக இருந்த மானுவல் ரோக்சாஸ் என்பவரிடம் இவர் வேலை பார்த்தார். 1966இல் இவர் நாட்டின் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தொடக்க காலத்தில் இவர் நாட்டின் வளர்ச்சியிலும், முன்னேற்றத்திலும் அக்கறை காட்டிவந்தார். விவசாயம், தொழில், கல்வி ஆகிய துறைகளில் நாட்டை நல்ல வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றார். நாட்டில் தொடங்கிய அரசியல் கொந்தளிப்பையடுத்து 1972இல் இவர் நெருக்கடி நிலையைக் கொண்டு வந்தார். ராணுவ ஆட்சி தொடங்கியது. இவருடைய அடுத்த கட்ட ஆட்சி ஊழல், பொருளாதார தேக்க நிலை, அரசியல் அடக்குமுறை இவற்றால் துவண்டு போயிற்று.

இவருடைய காலத்தில் இடதுசாரி பயங்கரவாதம் தலைதூக்கியது. ஆங்காங்கே தலைமறைவுப் புரட்சிக்காரர்கள் கொரில்லா தாக்குதல்களில் ஈடுபடலாயினர். இவர் காலத்தில் எதிர்கட்சித் தலைவராக இருந்த பெனிக்னோ அக்கினோ படுகொலைக்கு ஆளானார். அக்கினோ மார்க்கோசை எதிர்த்துத் தேர்தலில் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் மார்க்கோஸ் செய்த தில்லுமுல்லு காரணமாக அக்கினோ தோற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் நாட்டில் குழப்பமும் எதிர்ப்பும் அதிகமாகவே மார்கோஸ் அமெரிக்க நாட்டின் ஹவாய் தீவிற்குக் குடியேறிவிட்டார்.

இமெல்டா

அங்கு இவரும் இவரது மனைவி இமெல்டாவும் பிலிப்பைன்ஸ் நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்குலைத்தமைக்காகவும், கையாடல் செய்து கோடிக்கணக்கான பணத்தை கொள்ளை யடித்ததற்காகவும் குற்றம் சாட்டப்பட்டனர். மார்கோஸ் இறந்த பிறகு இமெல்டா பிலிப்பைன்ஸ் நாட்டுக்குத் திரும்பினார். அங்கு அவர் மீது சாட்டப்பட்ட குற்றங்களுக்காக வழக்கு நடந்தது. ஊழல், லஞ்சக் குற்றச்சாட்டுகளில் அவருக்கு தண்டனை வழங்கப்பட்டாலும், அது பிறகு விலக்கிக் கொள்ளப்பட்டது.

பிலிப்பைன்ஸ் நாட்டில் ஆளுமையில் இருந்த இந்த தம்பதியர் நாடு கடந்து ஹவாயில் தங்கி யிருக்க வேண்டிய நிலையும், சொந்த நாட்டிலேயே ஊழல் குற்றத்துக்காகத் தண்டிக்கப்பட்டதும் இந்த ஜனநாயக சர்வாதிகாரியின் வரலாற்றில் ஒரு கறை படிந்த நிகழ்ச்சியாகும்.

இவர்களைத் தவிர வேறு பல சர்வாதிகாரிகளும் இருந்திருக்கின்றனர். அவர்களுக்கும் இதுபோன்ற முடிவுகள்தான் கிடைத்திருக்கின்றன. இத்தனை விவரங்களையும் தெரிந்த பின்னரும் யாராவது சர்வாதிகாரியாக ஆகலாம் என்று கனவு காண்பார்களா? ஆகலாம், யார் கண்டது.

1 comment:

thanusu said...

இவர்களோடு இன்னும் எகிப்து முபாரக், பாகிஸ்தான் ஜியா ஹுல் ஹக், இராக் சதாம் ஹுசென் இவர்களையும் சேர்த்துக்கொள்ளலாம்.

அளவுக்கதிகமான மதுவும், அளவுக்கதிகமான அதிகாரமும் அறிவையும், கண்ணையும் மறைக்கும் என்பது, இங்கு கண்கூடு. இதில் இடி அமீன் செய்த கொடுமைகள் வித்தியாசமான கொடுமைகளாக இருந்தன. அவரது பர்சனல் டாக்டர் வழக்கமாக செய்யும் உடல் பரிசோதனை செய்ய அன்றும் வந்து பரிசோதனை செய்தார். செய்த பின் அவருக்கு பாலியல் நோயான V.T தாக்கி இருப்பதாக சொன்னார். இந்த செய்தியை கேட்ட நோய் தாக்கப்பட்டவர் யாராக இருந்தாலும் உடனே தனக்கு சிகிச்சை அளித்து விரைவில் குனப்படுத்தவே சொல்வார்கள். ஆனால் இவர் கோபப்பட்டார் ,தனக்கு நோய் இருக்கு என்று சொன்னதால் அந்த மருத்துவருக்கு தண்டனை தந்தார். என்ன தண்டனை தெரியுமா?

மருத்துவரின் மனைவியையும் மகளையும் கொண்டுவரசெய்து அவரின் முன்னாடியே அவர்களோடு உடல் உறவு கொண்டு இப்போது இவர்களுக்கும் அந்த வியாதி வந்துவிட்டது என்று சொல்லி காட்டு சரிப்பு சிரித்தாராம்.

அதே போன்று பிலிப்பின் மார்கோஸின் மனைவிடம் இருந்த காலனிகளின் என்னிக்கை அத்தனை அதிகம். பனிரெண்டு ட்ரக்குகளில் ஏற்றும் அளவுக்கு இருந்ததாம்.