பாரதி பயிலகம் வலைப்பூ

Sunday, April 8, 2012

ஐயாறப்பர் (ப்ரணதார்த்திஹரன்) ஆலயம்


பஞ்ச நதி தீரத்தில் அமர்ந்துள்ள ப்ரணதார்த்திஹரன்.

தஞ்சை மாவட்டத்தில் காவிரிக் கரையில் அமைந்திருக்கும் திருத்தலம் திருவையாறு. இங்கு ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு அறம்வளர்த்தநாயகி உடனாய ஐயாறப்பர் (ப்ரணதார்த்திஹரன்) ஆலயம் இருக்கிறது. மிகவும் பழமை வாய்ந்த இந்தக் கோயில் கல்லணை கட்டிய கரிகால் பெருவளத்தான் காலத்தில் எழுப்பப்பட்டதாகத் திருத்தல வரலாற்றிலிருந்து தெரியவருகிறது. 

கரிகாலன் தேரில் வந்து கொண்டிருந்த போது வனப்பகுதியாக இருந்த ஓரிடத்தில் அவன் தேர் கீழிறங்கியதாகவும், அந்த இடத்தைத் தோண்டிப் பார்த்தபோது பூமிக்கடியில் அகப்பேய் சித்தர் நிஷ்டையில் இருந்ததாகவும், அவருடைய தவம் கலைந்ததால் என்ன செய்வாரோ என்று பயந்திருந்த மன்னனிடம் அவ்விடத்தை மேலும் தோண்டி அங்கு கிடைக்கும் பொருட்களைக் கொண்டு ஓர் ஆலயம் அமைக்கப் பணித்ததாகவும், அதுதான் இந்த ஆலயம் என்பதும் தெரிய வருகிறது. இந்த ஆலயத்தை கூர்ந்து கவனித்து வருகையில் தெரியவரும் உண்மை என்னவெனில் ஐயாறப்பர் எழுந்தருளியிருக்கும் மூலத்தானமும் அதன் மேல் அமைந்த விமானமும்தான் ஆதிகாலத்தியது என்பதும் அந்த மூலத்தானத்தைச் சுற்றியுள்ள மற்ற பகுதிகள் எல்லாம் பிற்காலத்தில் ஒவ்வொரு மன்னர்கள் எழுப்பியது என்பதும் தெரியவருகிறது. 

இந்த விமானத்தின் புனிதம் கருதியோ என்னவோ, பிற்காலத்தில் கட்டப்பட்ட மண்டபங்கள் இந்த விமானத்தோடு இணைக்கப்படாமல் சிறிது இடைவெளி விட்டே கட்டப்பட்டிருக்கிறது. இந்த விமானத்துக்கும் சுற்றுப்புற மண்டபங்களுக்குமிடையே மூன்றடி இடைவெளி காணப்படுகிறது.

இந்த ஆலயத்துக்கு 1971ஆம் ஆண்டு திருக்கயிலாய பரம்பரை திருத்தருமையாதீனத்தார் குடமுழுக்குச் செய்வித்திருக்கின்றனர். அதன் பின் இப்போது வருகிற தை மாதத்தில் (அதாவது 2013 ஜனவரி மாதத்தில்) குடமுழுக்கு செய்வதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வேலைகள் துரித கதியில் நடக்கின்றன. மூலத்தான விமானத்தையொட்டி அமைந்த மேற்கூரையின் மேல் தளம் முழுவதும் புதிய தட்டோடுகள் பதிக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டு விட்டன. மேல் மாடம் செல்ல படிகள் இருக்கின்றன. அதன் வழியாக மேல் கூரைக்குச் சென்று தளங்களையும் மூலத்தான விமானம் மற்றும் மற்ற விமானங்களைப் பார்க்கும்போது மூலத்தானத்து மேற்புறம் அமைந்துள்ள விமானம் முழுவதிலும் பல சித்தர்களின் உயிரோட்டமுள்ள சுதைச் சிற்பங்கள் இருப்பதைக் காண முடிகிறது. பொதுவாக தெய்வ விக்கிரகங்கள் மட்டுமே இருக்கக்கூடிய விமானங்கள் எங்கும் இருக்கும். ஆனால், இங்குள்ள விமானம் முழுவதும் பல சித்தர்கள், பல வடிவங்களில் உடல் ஒட்டி, எலும்புகள் தெரிய, வெற்றுடம்போடு, கெளபீனம் மட்டும் அணிந்து தலையில் ஜடாமுடிகளுடன், கழுத்தில் ருத்ராக்ஷ மாலைகள், மார்பில் பூணூல் துலங்க பற்பல தவக்கோலத்தில் இருக்கிறார்கள். அந்தச் சிற்பங்கள் நேரில் பார்ப்பதைப் போல மிக துல்லியமாக, அழகாக, அளவெடுத்தாற்போல உருவாக்கப்பட்டிருக்கின்றன. அந்த விமானம் சிறு செங்கற்களாலும், சுண்ணாம்பாலும் கட்டப்பட்டு சுதைவேலைப்பாடுகள் நிறைந்து காணப்படுகின்றன. சுற்றிலுமுள்ள மண்டபங்கள் அனைத்திலும் கருங்கற்கள் பயன்பட்டிருந்தாலும் இந்த கோபுரத்தில் மட்டும் சுண்ணாம்பு சுதை வேலைப்பாடுகளோடு, எண்ணற்ற சிறிய பெரிய சித்தர்கள் உருவம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதன் வரலாறும் உட்பொருளும் என்ன என்பதை ஆய்ந்தறிந்துதான் புரிந்து கொள்ள வேண்டும். பொதுவாக சித்தர்கள் உருவாக்கிய ஆலயங்களின் சாந்நித்யம் மிக சிறப்பாக இருக்குமென்பது பெரியோர்கள் கருத்து. எனவேதான் வெளியே அதிகம் தெரியாமல் பற்பல அற்புதங்கள் நிகழ்த்தி இங்கு வழிபடும் பக்தர்களுக்கு அரிய பெரிய சாதனைகளை ஐயாறப்பர் வழங்கி வருகிறார். இங்குள்ள ஐயாறப்பரின் லிங்க உருவம் பாறையில் செதுக்கப்பட்டது அல்ல சுயம்புவாக உருவானவர் மணலால் ஆனது என்கிறது தல வரலாறு.

இந்த கர்ப்பகிரகத்தைச் சுற்றியுள்ள ஒரு சுற்றுப்பிரகாரத்தில் அமைந்துள்ள தக்ஷிணாமூர்த்தி சந்நிதி வரை மட்டும் செல்லலாம். அதனைத் தாண்டி செல்ல அனுமதி இல்லை. காரணம் அங்கெல்லாம் சிவனின் சடாமுடி பரந்து விரிந்து கிடக்கும் பகுதி என்கிறார்கள். இந்த ஆலயம் குறித்து பல சிறப்பான செய்திகள் வெளிவந்திருந்தாலும், மூலத்தானத்து விமானத்தில் இத்தனை சித்தர்களின் உருவங்கள் இருப்பது அவ்வளவாக வெளியே தெரிந்திருக்கவில்லை. மேலும் இப்படிப்பட்ட சித்தர்களால் உருவான இந்த ஆலயத்துக்குச் சிறப்புக்கள் உண்டு என்பதைப் பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்கள். அந்த வகையில் திருவையாறு ஐயாறப்பர் ஆலயம் மிகவும் சிறப்புடையது. 

இந்த ஆலயத்தில் கும்பாபிஷேகத்தையொட்டி நடைபெறும் மராமத்துப் பணிகள் குறித்து சமீமாக சில பத்திரிகைகளிலும்  இந்த ஆலயத்தில் சோழர் கால சித்திரங்கள் அழிக்கப்பட்டு புதிதாக வரையப் படுகின்றன என்பது போல செய்திகளைப் பரப்பி பரபரப்பை உண்டாக்கி விட்டனர். இது குறித்து உண்மை நிலவரத்தை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு, இந்த ஆலயத்துக்கு தினமும் சென்று வருபவர்களும், இந்த ஆலய திருவிழாக்களில் முக்கிய பங்கு வகித்து சிறப்பாக நடைபெற பணியாற்றுகின்ற இயக்கங்கள் மூலமாகவும் உண்மை நிலைமையை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டியிருக்கிறது. இனி விஷயத்துக்கு வருவோம்.

இந்த பழமையான ஆலயத்துக்கு குடமுழுக்கு செய்வதற்காக ஆலயத்தில் பல திருப்பணிகள் பல உபயதாரர்களின் உதவியோடு நடந்து கொண்டிருக்கின்றன. ராஜகோபுரம், மேல கோபுரம், போன்ற பெரிய கோபுரங்களும், ஆட்கொண்டார் எழுந்தருளியிருக்கும் தெற்கு கோபுர வாசல் முதலிய இடங்களும் புனருத்தாரணம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன. தென் கயிலாயம் எனும் திருநாவுக்கரசர் சந்நிதி அமைந்த ஆலயம் ஏற்கனவே புதுப்பிக்கப்பட்டு விட்டது. ஆலயத்தின் உட்புறம் எண்ணெய் பிசுக்கும், வண்ணக் கலவைகளும் மூடியிருந்த திருவோலக்க மண்டபம் உட்பட அனைத்துத் தூண்களும் சுத்தம் செய்யப்பட்டு அதற்கு மேல் ரசாயனப் பூச்சு மேற்கொள்ளப் பட்டு வருகிறது. தூண்களில் எண்ணெயைய் தடவுவது, சிற்பங்களை சிதிலம் செய்வது போன்ற பல தீய பழக்கங்களால் இவை சீர்கேடு அடைந்திருந்தது. அவை இப்போது சரி செய்யப் படுகின்றன. 

உள்சுற்று பிரகாரத்தில் ஒரு மண்டபம் சுவர் வைத்து மூடப்பட்டிருந்தது. அந்த சுவர் இடிக்கப்பட்டு இப்போது அந்த விசாலமான மண்டபம் பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. இந்த மண்டபத்தில் சுற்றுச் சுவருக்கு பதிலாக இரும்பு கிரில்கள் பதிக்கப்பட்டு இங்கு விக்கிரகங்கள் பாதுகாப்பாக வைக்கப்படவிருக்கிறது. இந்த மண்டபம் அமைந்துள்ள உள்சுற்றுப் பிரகாரத்தில் அமைந்துள்ள திருச்சுற்று மாளிகையின் தென்பகுதியில் உள்ள சுவற்றில் எழுதப்பட்டுள்ள சித்திரங்கள்தான் இப்போதைய பிரச்சினைக்கு மூலமாக விளங்குகிறது.

உள்நிலை பிரகாரத்தில் முச்சத்தி சந்நிதி, முருகன் சந்நிதி, நவக்கிரகம், ஆதி விநாயகர் ஆகியவை அடங்கிய பிரகாரத்தில் தென்புற திருச்சுற்று மாளிகையின் சுவற்றில் 1958ஆம் வருஷம் தல புராணம் முதலியவை வண்ணக் கலவையால் படங்களாகத் தீட்டப்பட்டிருக்கிறது. அது இப்போது அழிந்து வண்ணம் மங்கி (புகைப்படங்களைக் காண்க), உருத்தெரியாமல் போய்விட்டபடியால் இப்போது அங்கு புதிதாக வண்ணம் தீட்டும் பணி தொடங்கப் பட்டிருக்கிறது. இந்த திருச்சுற்று மாளிகை கீழ் புறம் தவிர மற்ற தெற்கு, மேற்கு, வடக்கு ஆகிய மூன்று பகுதிகளிலும் மேல் மாடத்தோடு அமைந்திருக்கிறது. கீழ் திருச்சுற்றில் நடப்பதைப் போலவே படியேறி மேல் சுற்றிலும் நடந்து பார்க்கலாம். அப்படி கீழ் சுற்றில் தெற்குப் பகுதியில் மட்டும்தான் 1958இல் தீட்டப்பட்ட சித்திரங்கள் காணப்படுகின்றன. மற்ற பகுதிகள் கீழ் சுற்று, மேல் சுற்று உட்பட மேற்குப் புறம், வடக்கு புற சுவர்கள் அங்கெல்லாம் சிமெண்ட் அல்லது சுண்ணாம்பு மேல்பூச்சு இல்லை கருங்கற்கள் முழுவதுமாக தெரியும்படி கட்டப்பட்டிருக்கின்றன. அனைத்தும் கருங்கற்கள் அடுக்கப்பட்டுக் கட்டப் பட்டிருக்கின்றனவே தவிர அதில் எந்த சித்திரங்களும் இல்லை. 

இந்த 1958இல் தீட்டிய சித்திரம் அழிந்துவிட்டதால் அதன் மீது புதிதாக வண்ணம் தீட்டப்படுகிறது. இதை சில பத்திரிகையினர், யார் கொடுத்த விவரங்களோ தெரியவில்லை, இங்கு சோழர் கால சித்திரங்கள் அழிக்கப்பட்டு புதிதாக வண்ணம் தீட்டுவதாக எழுதி கண்டனம் தெரிவித்திருக்கின்றனர். அங்கு சோழர் கால சித்திரங்கள் இருந்திருந்தால் தொல்பொருள் ஆய்வாளர்களுக்கும், கல்வெட்டு ஆராய்ச்சியாளர்களுக்கும் தெரியாமல் போயிருக்குமா? மேலும் இந்த ஆலயம் பழமையானது என்பது தவிர எந்த மன்னனின் தலை நகரத்திலும் அமைந்திருக்கவில்லை. இங்கு சோாழர்கால ஓவியங்கள் மட்டுமல்ல, பின்னர் வந்த நாயக்கர்கள், மராத்தியர்கள் கால ஓவியங்களும் காணக் கிடைக்கவில்லை. 

இந்த பிரகாரத்தில் நவக்கிரக மண்டபத்துக்கு முன்பாக விக்கிரகங்கள் பாதுகாக்க ஒரு மண்டபத்துக்குச் சுற்றுச் சுவர் எழுப்பி பாதுகாப்பு செய்யப்பட்டிருந்தது. அந்த மண்டபத்தில் இருந்த சுவர்களை இப்போது இடித்துவிட்டு கனமான கிரில் பாதுகாப்பு செய்யப்படுகிறது. அந்த மண்டபத்தின் மேல் பகுதியிலும் இதுபோன்ற சமீப கால வண்ண ஓவியங்கள் அப்படியே இருக்கின்றன. அதே மாதிரியான ஓவியங்கள்தான் தெற்குப் பகுதி திருச்சுற்று மாளிகையிலும் வரையப்பட்டிருக்கிறது. 

இந்த ஓவியங்களை 1958இல் வரைந்த ஓவியர் இப்போதும் உயிரோடுதான் இருக்கிறார். அந்த படங்களின் கீழே வரைந்த தேதியும் (வண்ணப்பூச்சு 27-11-1958) காணக் கிடைக்கின்றன. மேலேயுள்ள இந்த சித்திரங்களைச் சுரண்டிப் பார்த்தால் அடியில் வேறு பழமையான சோழர் கால ஓவியங்கள் இருக்கிறதா என்பதையும் கண்டுபிடித்து விடமுடியும். தஞ்சை பெரிய கோயிலின் விமானத்தில் மேல் தளத்தில் அப்படிப்பட்ட சோழர் கால ஓவியங்களும், அதன் மீது வரையப்பட்ட நாயக்கர் கால ஓவியங்களும் கண்டுபிடிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. அப்படியெல்லாம் எந்த தகவலும் இல்லாமல் இங்கு நடைபெறும் திருப்பணி வேலைக்கு இடையூறு செய்வது போல சிலர் தவறான செய்திகளைப் பரப்பி வருவதற்கு பதிலாக இந்தத் துறையில் வல்லுனர்கள் சிலரை அழைத்து வந்து காட்டி உண்மையை வெளிப்படுத்தி இருக்க வேண்டும். 

1971க்குப் பிறகு இப்போது குடமுழுக்கு நடைபெறும் இந்த நேரத்தில் அழிந்து சிதைந்து போன 1958இல் வரையப்பட்ட சித்திரங்களை, அதிலும் கையால் தொட்டால் கையோடு வரும்படியான சாயக் கலவையால் வரையப்பட்டவற்றை புதுப்பிக்காமல் அதே நிலையில் வைத்தா குடமுழுக்கு செய்ய முடியும்? இதையெல்லாம் பொருட்படுத்தாமல் ஏனோதானோ வென்று தவறான செய்திகளைப் பரப்புவதால் பரபரப்புதான் ஏற்படுமே தவிர மக்களுக்கோ, இந்தப் பழம் பெருமை வாய்ந்த ஆலயத்துக்கோ எந்த நன்மையும் விளையப் போவதில்லை. ஆலயத்தை நிர்வகிக்கும் நிர்வாகிகளுக்கும், உள்ளூர் பொதுமக்களுக்கும் இது குறித்து அக்கறை இல்லாமல் போய்விடுமா? அப்படியே எதாவது தவறுகள் நடந்திருந்தால் உள்ளூர் மக்கள் பார்த்துக் கொண்டிருப்பார்களா? இப்படி எதற்காக தவறான செய்திகள் பரப்பப்படுகின்றன என்பது தெரியவில்லை.

எனவே அதுபோன்ற தவறான செய்திகளைப் பரப்பி மக்கள் மத்தியில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தாமல் ஆலய திருப்பணி நல்ல முறையில் நடைபெற அனைத்துத் தரப்பினரும் ஒருமுகமாக பாடுபடவேண்டும். இந்த புகார்கள் வெளிவந்ததால் கடந்து 35 ஆண்டுகளுக்கும் மேலாக இறை பணியும், சமூக பணிகளும், ஆலயத்தில் நாட்டியாஞ்சலி, ஆடி அமாவாசை கைலை காட்சி காணுதல், சித்திரைத் திருவிழா போன்றவற்றில் தீவிரமாக பங்குபெற்று வரும் திருவையாறு பாரதி இயக்கத்தின் சார்பில் பொறுப்பாளர்கள் சென்று ஆலயத்தை நன்கு ஆய்வு செய்த பிறகு உண்மை நிலைமையை விளக்கி பத்திரிகைகளுக்கு எழுதியிருக்கிறார்கள் திருவையாறு பாரதி இயக்கத்தார். இது குறித்து மேலும் உண்மை நிலைமையை அறிந்து கொள்ள விரும்புவோர் திருத்தருமையாதீனம் திருவையாறு கட்டளை விசாரணை முனைவர் குமாரசுவாமி தம்பிரான் சுவாமிகளைக் கண்டு பேசி தெளிவு பெறலாம் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம். 

இந்த ஆலயத்தின் பழமை, சித்தர்களால் நிறுவப்பட்டது என்கிற செய்தி, இந்த ஆலயத்தில் வழிபட்டு பல நன்மைகளைப் பெற்றிருக்கின்ற ஆயிரக்கணக்கான பொதுமக்களின் நல்லெண்ணம் இவற்றை மனதில் கொண்டு குடமுழுக்கு நடைபெறப் போகும் இந்த ஆலயத்துக்கு மக்கள் வந்து தரிசனம் செய்து பலனடைய வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம். அருள்மிகு அறம்வளர்த்த நாயகி (தர்மசம்வர்த்தினி அம்பாள்) சமேதராய் விளங்கும் ஐயாறப்பர் (பஞ்சநதீஸ்வர ஸ்வாமி, பிரணதார்த்திஹரர்) அனைத்து சம்பத்துக்களையும் வழங்குவார் என்பது திண்ணம்.

Issued by: Tiruvaiyaru Bharathi Iyakkam, 19, North Street, Tiruvaiyaru 613204  in the interest of the public at large.
அருள்மிகு ஐயாறப்பர் ஆலயம்

திருச்சுற்று மாளிகை ஓவியங்களின் நிலை

வரையப்பட்ட தேதியைப் பாருங்கள் 27/11/1958
பிரச்சினைக்குரிய ஓவியம் இருக்கும் திருச்சுற்றுச் சுவர்
புதிதாக வரையப்படும் ஓவியங்கள்
திருச்சுற்று மாளிகையின் தோற்றம்

விமானத்தில் இருக்கும் பல சித்தர்கள் சிலைகள்

அருள்மிகு ஐயாறப்பர் ஆலய முகப்பு
இரண்டாம் கோபுரம்
ஆலயத்தினுள் இருக்கும் திருக்குளம்
முச்சத்தி மண்டபமும் பின்புலத்தில் மேல கோபுரமும்
நூற்றுக்கால் மண்டபம்
நாட்டியாஞ்சலி நடக்கும் திருவோலக்க மண்டபம்
2ஆம் கோபுரம் 3ஆம் கோபுரம் இடைப்பட்ட பகுதி
அப்பருக்குக் கயிலைக் காட்சி கிடைத்த குளம்
வட கயிலாய ஆலயம்
தென் கயிலாய ஆலய கோபுரம்
அம்பாள் கோயிலுக்குச் செல்லும் வழி
ஆலய ஸ்தல புராணச் செய்திகள் தொகுப்பு புலவர் கோ.சுப்பிரமணியனார்

Those who are viewing this post may kindly express their opinion in the space provided for the same.


No comments: