நான் படித்த பத்திரிகைகள்
நான் கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்ப் பத்திரிகைகளைப் படித்து வருகிறேன். ஐம்பதுக்குப் பிறகு நான் படித்த பத்திரிகைகள் நினைவில் இருக்கின்றன. அதற்கு முன்பாகவும் ஆனந்த விகடன் படித்த நினைவுகள் உண்டு. ஐம்பதில் "கல்கி" பத்திரிகையை மிகவும் விரும்பிப் படித்து வந்தேன். அதில் வந்த ஆசிரியர் கல்கியின் தொடர்கதைகளே அதற்குக் காரணம். அது தவிர ஒவ்வோராண்டும் கல்கி தீபாவளி மலரில் கல்கியின் ஒரு நெடுங்கதை வெளியாகும். அவை ஒவ்வொன்றும் அமரத்துவம் பெற்ற கதைகள்.
1950க்குப் பிறகு நான் படித்த வார இதழ்களில் "ஆனந்த விகடன்", "கல்கி", "குமுதம்" இவைகளே பிரதானமான இதழ்கள். அப்போதைய ஆனந்த விகடனின் அமைப்பே மிகவும் வித்தியாசமாக இருக்கும். அட்டைப் படத்தில் ஒரு நகைச்சுவைத் துணுக்கு படமாக வரையப் பட்டிருக்கும், கீழே அந்த படத்தின் வசனங்கள் காணப்படும். பொதுவாக அப்போதெல்லாம் அட்டைப் படங்களை ஓவியர் கோபுலு வரைந்திருப்பார். அவருடைய படங்கள் தனி முத்திரை பதித்தவை. ஒவ்வொரு பாத்திரப் படைப்பின் சிறப்புகளை அவர் வரையும் படங்கள் அழகாக வெளிப்படுத்தும் வண்ணம் இருக்கும். நகைச்சுவைப் படங்களை அவர் போல வரைந்தவர் வேறு யாரும் இருந்ததாகத் தெரியவில்லை. ராஜு என்ற பெயரிலும் பல பழைய படங்கள் உண்டு. சீமா சீரிஸ் எனும் பெயரில் கார்ட்டூன் படங்கள் இருந்தன. அரைகுறை படமும் அவசர பிச்சுவும் என்ற தலைப்பில் ஒரு படம் பாதி வரைந்து கொண்டிருக்கும்போது ஒரு அவசரக் குடுக்கை இது என்ன படம் என்பார், உடனே அதை வேறு மாதிரி வரைந்து முடிப்பார். இந்த சீரியல் படங்களும் சிறப்பாக இருந்திருக்கின்றன.
ஆனந்த விகடனின் முகப்பிலும், தலையங்கப் பகுதியிலும் 'விகடனின்' விசித்திரமான உருவம் காணப்படும். தலை உச்சியில் உச்சிக் குடுமி போல சிறிது உயர்ந்து காணப்படும். கழுத்தைச் சுற்றி தோளில் படரும் ஒரு பட்டைக் கரைப் போட்ட அங்கவஸ்த்திரம் இருக்கும். இவர்தான் விகடன். விகடனின் தலையங்கங்கள் நச்சென்று சுருக்கமாகவும், உறைக்கும்படியாகவும் இருக்கும். தலையங்கத்துக்கு எதிர்ப்புறம் ஒரு முழுப் பக்க கார்ட்டூன். பொதுவாக அன்றைய நாட்டு நடப்படி விளக்கும்படியான கருத்துப் படங்கள் அவை. பின்னாளில் கோபுலுவுக்குப் பிறகு அவர் இடத்தைப் பிடித்தவர் ராஜு. அதன் பின்னர் ஸ்ரீதர். அப்போதெல்லாம் ஆனந்த விகடனின் சிறப்பு அம்சம் என்னவென்றால், கலை, இலக்கியங்கள் சம்பந்தப்பட்ட விமரிசனக் கட்டுரைகளும், சிறு கதைகளும். நிச்சயம் ஓரிரு தொடர்கதைகள் உண்டு. லட்சுமி எழுதிய தொடர்கதைகள் குடும்பப் பெண்களின் கதைகளாக இருக்கும். பின்னர் ஸ்ரீ வேணுகோபாலன் எழுதிய கதைகள் என்று வெளிவந்தாலும், அறுபதுகளில் ஜெயகாந்தன் அவர்களுடைய முத்திரைக் கதைகள் வரத் தொடங்கிய பிறகுதான் அதன் மவுசு உச்சத்துக்குப் போனதாகச் சொல்லலாம்.
ஜெயகாந்தன் ஆனந்தவிகடனில் எழுதத் தொடங்கிய கதையே ஒரு கதை. ஆசிரியர் பாலசுப்பிரமணியன் அவர்கள் ஜெயகாந்தனை ஆனந்தவிகடனுக்குக் கதை எழுதித்தரக் கேட்டார். அப்போதெல்லாம் ஜெயகாந்தன் ஒரு தீவிர பொதுவுடமைக் கட்சி தோழராக விளங்கினார். அவரைப் பொறுத்து இந்த பத்திரிகைகள் எல்லாம் பூர்ஷ்வா பத்திரிகைகள். மேலும் அப்போது ஏதோ தொழிலாளர் பிரச்சினை வேறு விகடனில் இருந்தது. ஆகவே "ஓவர் டைம்" எனும் பெயரில் தொழிலாளர் சார்புடைய கதையை எழுதி அனுப்பினார். அது வெளியானது, அதுமட்டுமல்லாமல் தொடர்ந்து மாதம் ஒரு முத்திரைக் கதை எழுதிவரலானார். முத்திரைப் பதித்த பல கதைகள் அப்போது வெளியாகின. "அக்னிப்பிரவேசம்" அதில் ஒன்று. "யாருக்காக அழுதான்", "எனக்காக அழு", "ரிஷிமூலம்", "பாரிசுக்குப் போ", "சினிமாவுக்குப் போன சித்தாளு", "ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்" இப்படிப் பல.
இப்படி எண்ணற்ற கதைகள். ஒவ்வொன்றும் மிக உன்னதமான கதைகள்.
இவர் கதைகளில் அதிகம் பிரச்சினைக்கு உள்ளானது "அக்னிப் பிரவேசம்" கதைதான். இந்த கதையின் முடிவை ஏற்றுக்கொள்ள விரும்பாத பலரில் ஒருவர் முடிவை மாற்றி ஒரு கதையை எழுதி வெளியிட்டார். ஜெயகாந்தன் சிறுகதை மன்னன் என அறியப் பட்டவர். இந்த கதையின் தொடர்ச்சியாக "சில நேரங்களில் சில மனிதர்கள்" எனும் தொடர்கதையை எழுதினார். அமரத்துவம் பெற்றுவிட்ட அந்தக் கதை திரைப்படமாகவும் வெளிவந்தது. "யாருக்காக அழுதான்" கதையையும் சந்திரபாபுவை நடிக்க வைத்து திரைப்படம் எடுக்கப்பட்டது. இப்படி பத்திரிகையில் வெளிவந்த கதையும், திரைப்படங்களுமாக ஒருங்கிணைந்து செயல்பட்டது சிறப்பான காலம். அதற்கு முன்பு நாற்பதுகளில் கல்கி எழுதிய "தியாக பூமி" கதை வெளியான போதே திரைப்படம் எடுக்கப்பட்டு, அந்த படத்தின் ஸ்டில்கள் கதையோடு பிரசுரமானது ஓர் புதுமை அந்தக் காலத்தில்.
பின்னாளில் ஆனந்த விகடனிலிருந்து விலகி "இதயம் பேசுகிறது" எனும் பத்திரிகையைத் தொடங்கி நடத்திய மணியன் அவர்களுடைய கதைகளும் ஆனந்த விகடனில் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருந்தன. அவருடைய தொடர்கதைகளில் சிலவும் திரைப்படங்களாக வெளிவந்தன. அவரே சில படங்களையும் எடுத்தார். நாற்பதுகளில் ஆனந்த விகடனில் குறுக்கெழுத்துப் போட்டி பிரபலமாக இருந்து வந்தது. ஐம்பதுகளுக்குப் பிறகு அந்தப் பகுதி கிடையாது.
அடுத்ததாக "கல்கி" பத்திரிகை, இது ஆசிரியர் கல்கி ஆனந்தவிகடனை விட்டுப் பிரிந்து வந்த பிறகு ஆசிரியராக இருந்து வெளியிட்ட பத்திரிகை. திருமதி எம்.எஸ்.சுப்பலட்சுமி, திரு சதாசிவம் ஆகியோருடைய கூட்டு முயற்சியாலும், ராஜாஜியின் ஆசியோடும் நடந்த பத்திரிகை. இந்த பத்திரிகையின் உயிர் நாடி என்பது கல்கியின் தொடர்கதைகள். அவர் எழுதிய அமரத்துவம் பெற்ற "பொன்னியின் செல்வன்" பல முறை தொடராக வெளிவந்தது. "அலை ஓசை" இந்திய சுதந்திரப் போர் காலத்தில் நடந்த மதக் கலவரம் குறித்தெல்லாம் மிக அபூர்வமான செய்திகள், கராச்சியில் நடந்தவை போன்றவைகள் எல்லாம் படித்துப் பார்க்க வேண்டியவை. சுதந்திரப் போராட்ட வீரர் ஜெயப்பிரகாஷ் நாராயணனை ஆசிரியர் கல்கிக்குப் பிடிக்கும். அவரைப் போன்ற ஒரு கதா பாத்திரம் இதில் படைக்கப்பட்டது. அந்தப் பாத்திரம் தான் "சூர்யா". கிராமத்தில் உழுபவர்களுக்கு நிலம் சொந்தம் எனும் கருத்துடைய இந்த சூர்யா முடிவில் தன் தந்தையின் நிலங்களை உழவர்களுக்குப் பிரித்துக் கொடுக்கும் செய்தியும் இதில் உண்டு. பட்டாமணியம் கிட்டாவையர், சீதா, லலிதா, ராகவன், சூர்யா, துரைசாமி ஐயர் என்று இதில் வரும் கதாபாத்திரங்கள் உயிரோடு நடமாடுவது போன்ற பிரமையை ஏற்படுத்தும்.
இந்த "அலைஓசை" தொடர் கதையில் பத்திரிகை வாயிலாக சாஸ்திர விசாரம் ஆசிரியருக்குக் கடிதங்கள் மூலம் நடத்தும் இரு பெரியவர்கள் உண்டு. இவற்றை அவசியம் படித்துப் பார்க்க வேண்டும். இவர் மாற்றி அவர் கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்வர், ஒரு கட்டத்தில் ஆசிரியர் தன் குறிப்பில் இத்தோடு இந்த விவாதம் முற்றுப் பெறுகிறது என்று எழுதி முடித்து வைப்பார். நிஜத்திலும் அப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் நடந்து வந்ததை நினைவு படுத்தும் விதத்தில் கல்கி எழுதியது சுவையானது.
சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் அகிலன். இவருடைய "வேங்கையின் மைந்தன்", "பாவை விளக்கு" போன்ற அரிய படைப்புகள் வெளிவந்ததும் இந்த கல்கி பத்திரிகையில்தான். அகிலனுடைய கதைகளில் எல்லாம் இரு மனைவியர் அமைந்த குடும்பமும், பிரச்சினைகளும் மிக நளினமாகச் சொல்லப்படும். பாவை விளக்கில் சிதம்பரம் ஜெயராமன் தனது வெண்கலக் குரலில் பாடிய "காவியமா, இல்லை ஓவியமா" எனும் பாடலை இன்று மட்டும் கேட்டு ரசிப்பவர்கள் ஏராளம். அஞ்சல் துறையில் பணியாற்றிக் கொண்டு எழுத்துலகிலும் ஆட்சி செலுத்தியவர் அகிலன். 'கலைமகள்' மாதப் பத்திரிகையின் செல்லப் பிள்ளை இவர். இவர் தொடர்கதைகள் கல்கியில் வெளியான காலத்தில் அவைகளைப் படிக்கத் துடித்த இளம் உள்ளங்க்கள் ஏராளம். மிக எளிமையானவர் அகிலன். புதுக்கோட்டையை அடுத்த பெருமகளூர் ஆலயத்தில் இவர் தாய்மாமன் பணியாற்றியிருக்கிறார். இவருக்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டம் அந்த நாளில் இருந்தது.
தமிழ், தமிழிசை, சங்கீதம், இலக்கியம், கம்பன் போன்ற பல விஷயங்களுக்குக் கல்கி முக்கியத்துவம் அளித்து வந்தது. ரசிகமணி, ராஜாஜி, ம.பொ.சி.,ஜஸ்டிஸ் மகராஜன், எம்.எம்.இஸ்மாயில் போன்றவர்களின் எழுத்துக்கள் பெரிதும் கல்கியில் வெளியாகும். கம்பன் விழாச் செய்திகள் அதிகம் இடம்பெறும். திருமதி எம்.எஸ். பல ஊர்களில் நிதியுதவி கச்சேரிகள் நிகழ்த்தும் விளம்பரம் வெளியாகும். ஆகமொத்தம் கல்கி வீட்டில் அனைவரும் எப்போது வரும் என்று காத்திருந்து படிக்கும் பத்திரிகையாக மிளிர்ந்தது என்றால் மிகையல்ல.
அடுத்து "குமுதம்" இதழ். ஆசிரியர் எஸ்.ஏ.பி., பிரசுரகர்த்தர் எம்.ஏ.பார்த்தசாரதி, எம்.ஏ.,பி.எல்., என்ற இருவரின் கூட்டு முயற்சி இது. விற்பனையில் முதலிடம் பெற்று பல காலம் சிறப்பிடம் பெற்று விளங்கிய பத்திரிகை. ஆசிரியர் எஸ்.ஏ.பி. எழுத்துலகத்தாராலும், இலக்கியத் துறையினராலும் ஒருசேரப் பாராட்டப் பட்டவர். அவருடைய குண விசேஷங்களை அவர் பத்திரிகையில் உதவி ஆசிரியராக இருந்தவரும் மிகச் சிறந்த எழுத்தாளருமான திரு ரா.கி.ரங்கராஜன் பலமுறை எழுதியிருக்கிறார். இணை பிரியாமல் இருந்த ஆசிரியர், வெளியிடுபவர் உறவு பெரிதும் பொற்றப்பட்டது தமிழ் நாட்டில். இந்த பத்திரிகையின் விசேஷம் என்னவென்றால் இதில் ஓவியங்கள் வரைந்த ஒருவரின் இளமை ததும்பும் படங்கள். முதலில் இதில் படம் வரைந்து வந்தவர் 'வர்ணம்' என்று அறியப்பட்ட பஞ்சவர்ணம். பின்னர் ஜெயராஜ். இவ்விருவரின் படங்களிலும் இளமை துள்ளி விளையாடும். திரைப்பட நடிகைகளின் புகைப்படங்களைப் பார்த்து ஏங்கிய இளம் உள்ளங்கள் இவர்கள் இருவரின் படங்களைப் பார்த்தும் ஏங்கத் துவங்கின. அன்றைய இளசுகளின் (அடியேன் உட்பட) மனதைக் கவர்ந்த படங்களை வரைந்த இவ்விருவரையும் மறக்க முடியுமா? ராகி என்றொரு சித்திரக்காரர். ராதாகிருஷ்ணன் என்று பெயர். இவருடைய படங்களும் கார்ட்டூங்களும் சிறப்பானவை. அனைத்திலும் "குமுதம்" இதழின் சிறப்புக்குக் காரணமானவர்கள் என்றால் அவர்கள் அதன் துணை ஆசிரியர்களாக இருந்த திரு ரா.கி.ரங்கராஜனும், திரு ஜ.ரா.சுந்தரேசனும் ஆவார்கள். இவ்விருவரும் எழுதிக் குவித்து வரலாற்றில் இடம் பிடித்த செய்தியை தமிழ் பேசும் அனைவரும் அறிவர்.
"பட்டாம்பூச்சி" எனும் மொய்பெயர்ப்புத் தொடர், ரா.கி.ரங்கராஜன் மொழிபெயர்த்தது. ஒரு சரித்திரம் படைத்தது. ஹென்றி ஷாரியர் எனும் பிரெஞ்சு நாட்டுச் சிறைக்கைதி பிரெஞ்சு கயானாவில் சிறை வைக்கப்பட்டு அங்கிருந்து பலமுறை தப்ப முயற்சித்த வரலாற்றுச் சித்திரம் இது. புத்தகமாக வெளிவந்து நல்ல விற்பனையானது இந்த நூல். 'இது சத்தியம்' என்ற ரா.கி.ர. அவர்களின் கதையும் சினிமாவாக எடுக்கப்பட்டு நன்கு ஓடியது. ஜ.ரா.சுந்தரேசன் எழுதிய பல கதைகள் அமரத்துவம் பெற்றவை. இவருடைய சில கதைகள் சினிமாவுக்கும் சென்றன. "அப்புசாமி சீதாப்பாட்டி"யை யாராலும் மறக்க முடியுமா? ஆப்பிரிக்க அழகி இடிலி என்ற ஒரு பாத்திரம் படைத்த வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர் இவர். இளம் உள்ளங்களைக் கிரங்க அடிக்கும் சில வர்ணனைகள். ஒரேயொரு மாதிரிக்கு. "டீச்சர்" என்ற ஒரு கதை. அதில் எதேச்சையாக டீச்சரின் மார்பில் கை பட்டுவிடுகிறது ஒரு மாணவனுக்கு. பட்டுத் துணியில் அரைத்துக் கட்டிய சந்தனத்தைத் தொட்டது போல உணர்ந்தான் என்று எழுதியதை அன்றைய இளசுகள் மறக்கவில்லை.
'குமுதம்' இதழுக்கு பெருமை சேர்த்த கதாசிரியர்களில் எஸ்.ஏ.பி.யும் முக்கியமானவர். இவருடைய தொடர்கதைகளும் ஆர்வத்துடன் படிக்கப்பட்டன. ஜாவர் சீத்தாராமன் குமுதத்தின் ஒரு நிரந்தர எழுத்தாளர். சுஜாதா மற்றொருவர். இவர்களுடைய கதைத் தலைப்புகளே வித்தியாசமாக இருக்கும். ஆக மொத்தம் 'குமுதம்' இதழ் பல காலம் முதலிடம் பெற்று விளங்கியது.
நான் முன்பே குறிப்பிட்டபடி ஆனந்த விகடனிலிருந்து பிரிந்து சென்ற மணியன் வெளியிட்ட பத்திரிகை "இதயம் பேசுகிறது". இதே தலைப்பில் இவர் ஆனந்த விகடனில் தொடராக எழுதி வந்ததையே தன் பத்திரிகையின் பெயராக வைத்து விட்டார். இளமைக்குத் தீனி போடுவதில் இவரும் வல்லவர். இளமை கொஞ்சும் இவர் பத்திரிகை இவர் இருந்த வரை சிறப்பாக நடந்தது. தொலைக்காட்சி தமிழகத்தில் பரவலாக வந்து விட்ட காலகட்டத்தில் பொதிகை, சன், ஜெஜே போன்றவற்றில் செய்திகள் நிகழ்ச்சி ஒளிபரப்பாகத் தொடங்கின. அதில் நல்ல தோற்றமும், தெளிவான உச்சரிப்பும் உடைய சிலர் செய்தி வாசிப்பாளர்களாகப் பணியாற்றினர். அதில் பெண் செய்தி வாசிப்பாளர்கள் அணியும் உடை, ஆபரணங்கள் இவைகளும் பெண்கள் மத்தியில் பிரபலாம விளங்கின. ஆண் செய்தி வாசிப்பாளர்களும் உண்டு. இதில் ஈரோடு தமிழன்பன் என்பவர் உச்சரிப்பு அழுத்தம் திருத்தமாக இருக்கும். பெண்களில் ஷோபனா ரவி பிரபலமானவர். இளமை ததும்பும் தோற்றத்தில் அப்போது அறிமுகமானவர் பாத்திமா பாபு. அப்போது "இதயம் பேசுகிறது" இதழில் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர்களில் உங்களைக் கவர்ந்தவர் யார் என்று ஒரு கவிதைப் போட்டி வைத்தார்கள். அதில் அடியேனும் ஒரு கவிதை எழுதி அனுப்பி வைத்தேன். அது தேர்வாகி பிரசுரமானது. அப்படி நான் புகழ்ந்த அந்த செய்தி வாசிப்பாளர் யார் தெரியுமா? இன்றைக்கும் செய்தி வாசித்து வரும் பாத்திமா பாபு தான்.
மணியன் அவர்களின் கதைகள் சினிவாக்கும் சென்றன. அவரும் எம்.ஜி.ஆரை. வைத்து படம் தயாரித்தார். அவருக்குப் பிறகு அந்தப் பத்திரிகை நின்று போய்விட்டது. கல்கியில் உதவி ஆசிரியராக இருந்த பகீரதனும் விந்தனும் கூட பின்னர் தனியாக பத்திரிகைகளை நடத்தியிருக்கிறார்கள். வெகு ஜன பத்திரிகைகளைப் பற்றி பார்த்தோம். இவை அனைத்தும் வாரப் பத்திரிகைகள், இனி மாதம் இருமுறை வெளியான பத்திரிகைகள், மாதாந்தர பத்திரிகைகள், அரசியல் பத்திரிகைகள், சினிமா பத்திரிகைகள் இவைகளைப் பற்றியும் அடியேனுக்குத் தெரிந்த அளவில், பார்த்துப் படித்த அளவில் ஒரு சில விவரங்களைத் தருகிறேன். இவை அனைத்தும் என் நினைவில் இருந்தபடி கொடுத்திருக்கிறேன். சில முக்கியமான நபர்கள், கதைகள் இவை விட்டுப் போயிருக்கலாம். பொருத்தருள்வீர்.
இனி வாரப் பத்திரிகைகளில் அரசியல் பத்திரிகைகளையும் அதிகம் படித்திருக்கிறேன். அவற்றில் முதலிடம் வகிப்பது சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்களின் "செங்கோல்" பத்திரிகையைச் சொல்லலாம். செங்கோல் பத்திரிகையை அவர் தமிழரசுக் கழகத்தின் கெசட் என்பார். அவருடைய கொள்கை முழக்கங்கள் அனைத்தும் அதில் இடம்பெறும். அவருடைய கட்டுரைகள் மட்டுமே பத்திரிகை முழுவதும் இருக்கும். பல பிரச்சினைகள் குறித்து அவருடைய கருத்துக்களை இந்த செங்கோல் வாயிலாகத்தான் வெளியிடுவார். இவர் கட்டுரைகளைப் படித்தால் அவருடைய பொதுக்கூட்டப் பேச்சைக் கேட்பது போல இருக்கும். ஒவ்வொரு வாக்கியமும் அவர் பேசும்போதும் இலக்கணத்துக்குட்பட்டே அமையும். அவர் பத்திரிகைகளை நான் வாய்விட்டுப் படிப்பதுண்டு. நண்பர்கள் கேலி செய்தாலும் கவலைப்படுவதில்லை. அவர் கட்டுரைகளை அப்படி வாய்விட்டுப் படித்து வந்த காரணத்தினாலோ என்னவோ, அவருடைய நடை அப்படியே எனக்கு அமைந்து விட்டது. ஒரு வகையில் அவர்தான் எனக்குத் தமிழுக்கும், தமிழார்வத்துக்கும் ஆசான். சிலப்பதிகாரத்தையும், கம்பராமாயணத்தையும், மகாகவி பாரதியையும் அவர் எழுத்தின் தாக்கத்தால்தான் படிக்க நேர்ந்தது. ம.பொ.சி.யின் தாசனாகத்தான் நான் என்னை நினைத்துக் கொண்டேன்.
1954 அல்லது 1955 என்று நினைக்கிறேன், சென்னையை அடுத்த ஆவடியில் அகில இந்திய காங்கிரஸ் மகா நாடு நடந்தது. அதன் தலைவர் யு.என்.தேபர் என்பவர். நமது கர்ம வீரர் காமராஜ் அவர்கள் தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்து மகா நாட்டை நடத்தினார். அப்போது ம.பொ.சி. அவர்கள் காங்கிரசில் இல்லை. முந்தைய ஆண்டே அவரை காங்கிரசிலிருந்து வெளியேற்றி விட்டனர். அந்த மகா நாட்டில்தான் ஜவஹர்லால் நேரு சோஷலிச மாதிரியான சமுதாயம் அமைப்பது குறித்த தீர்மானம் கொண்டு வந்தார். அதைக் குறித்து ம.பொ.சி. அவர்கள் ஒரு கட்டுரை எழுதினார் "ஆவடியில் ஆண்டியப்பன்" எனும் தலைப்பில். நேருவின் இந்த சோஷலிச மாதிரியிலான சமுதாய அமைப்பு சாதாரண அடிமட்ட ஏழைக்கு உதவப் போவதில்லை என்பது அவருடைய கருத்து. பின்னர் பல வருஷங்கள் கழிந்தபின் அவரைச் சந்தித்த போது நான் கேட்டேன், "ஐயா! உங்கள் கட்டுரை படியே ஆண்டியப்பன் கள் சோஷலிசத்தால் பயனடையவில்லை அல்லவா?" என்றேன். ஆம், அதுதான் உண்மை என்றார் அவர்.
நல்ல தமிழ் எழுத, பேச அவருடைய நூல்களைப் படித்தால் போதும். கடினமான பண்டித நடையும் இல்லாமல், பாமரத் தமிழும் இல்லாமல், சாதாரணமான நல்ல தமிழில் பேசுவார், எழுதுவார். செங்கோலைப் படித்து பயன் பெற முடியாதவர்கள், இப்போது அவருடைய பேத்தியும், பேரங்களும் அவருடைய செங்கோல் இதழ்களைத் தொகுத்து நூலாக வெளியிட்டிருக்கிறார்கள், படிக்கலாம்.
செங்கோல் தவிர சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்கள் "தமிழன் குரல்" எனும் பத்திரிகையை சிலகாலம் நடத்தினார். நல்ல தமிழ், சிலப்பதிகார விளக்கம் முதலான நல்ல விஷயங்களோடு தமிழக அரசியலையும் அதில் எழுதி வந்தார். காங்கிரசில் இருந்து கொண்டே இவர் தமிழரசுக் கழகம் எனும் கலாச்சாரக் கழகத்தை நடத்தி வந்தார். இது பிடிக்காமல் காங்கிரசார் இவரை வெளியேற்றி விட்டனர். அதன் பின்னர் இவர் தமிழரசுக் கழகத்தை ஒரு நல்ல அரசியல், கலாச்சார இயக்கமாகவே நடத்தி வந்தார். பல போராட்டங்களைத் தமிழ் நாட்டு மக்களுக்காக நடத்தினார். திராவிட இயக்க எதிர்ப்பு மகா நாடுகளை நடத்தினார். இவர் ஒருவர்தான் அரசியல் மகா நாட்டுக்கு முதல் நாள் இலக்கிய மகா நாடுகளை நடத்தியவர்.
இவர் கட்சியைச் சேர்ந்தவர் கவி கா.மு.ஷெரீப். மிக அற்புதமான, பண்பான தலைவர், எழுத்தாளர், பேச்சாளர். இவர் சென்னை தேனாம்பேட்டை ஜானிஜாங்கான் தெருவில் இருந்து " தமிழ் முழக்கம்" எனும் வாரப் பத்திரிகையை நடத்தினார். அன்றைய தமிழ் நாட்டு அரசியலில் திராவிட இயக்கத்துக்கு எதிராக குரல் கொடுத்து எழுதிய தேசிய எழுத்தாளர் கவி.கா.மு.ஷெரீப். இவர் திரைப்படங்களில் பாடல்கள் எழுதி வந்தவர் என்ற முறையில் இவர் பிரபலமானவர். தமிழ் முழக்கம் உண்மையிலேயே தமிழுக்காக எழுப்பப்பட்ட முழக்கமாகவே அமைந்திருந்தது. அப்போது திரைப்படங்களில் பிரபலமாகத் தொடங்கினார் ஏ.பி.நாகராஜன். அவருடைய 'நால்வர்', 'பெண்ணரசி', 'நல்ல தங்கை', 'வடிவுக்கு வளைகாப்பு', 'மக்களைப் பெற்ற் மகராசி", 'டவுன் பஸ்', 'சம்பூர்ண ராமாயணம்' போன்ற பல படங்கள் வெற்றி பெற்றிருந்தன. இவரை ஆசிரியராகக் கொண்டு "சாட்டை" எனும் அரசியல் வார இதழையும் கவி கா.மு.ஷெரீப் வெளியிட்டார்.
அப்போது கண்ணதாசன் ஆசிரியராக இருந்து வெளியான "தென்றல்" பத்திரிகையில் "ராஜ தண்டனை" எனும் தொடர் வெளியாயிற்று. உடனே 'சாட்டை'யில் "தண்டனைக்குத் தப்பியவர்கள்' என்று தொடர் வெளியாயிற்று. இப்படி திராவிட இயக்கத்துக்கு எதிரான தமிழ் இயக்கமாக கவி கா.மு.ஷெரீப், ஏ.பி.நாகராஜன் பத்திரிகைகள் வெளியாகின. கவி கா.மு.ஷெரீப் போன்றவர்களை தமிழ் நாடு உரிய முறையில் போற்றவில்லை என்பது மிகவு வருத்தத்துக்குரிய செய்திதான். என்ன செய்வது. நல்ல பொருட்களுக்கு மரியாதை கிடைப்பதில்லை.
தேசிய பத்திரிகைகளைப் பற்றி மட்டும் சொல்லக் காரணம் எனக்கு அவற்றின் மீது இருந்த பற்றும், அவற்றை படித்த நினைவும் தான். திராவிட இயக்கப் பத்திரிகைகளும் ஏராளமாக வெளிவந்தன. அப்படி வந்த அனைத்தையும் நான் படித்ததில்லை. ஓரிரு பத்திரிகைகள் என் கவனத்தைக் கவர்ந்திருக்கின்றன. அவற்றில் "முரசொலி" வார இதழும், "தென்றல்" வார இதழையும் சொல்லலாம். முரசொலியை நடத்தி வந்தவர் மு.கருணா நிதி. வெளியீட்டாளர் என்று முரசொலி மாறன் பெயர் இருக்கும். இதில் அதிக சூடான தி.மு.க.செய்திகள் கருத்துக்கள் தான் இருக்கும். எனக்கு அந்த இயக்கத்தின் பால் ஈர்ப்பு இல்லாததால் நான் அதிகம் அவற்றைப் படித்ததில்லை.
ஒரு வேடிக்கை என்னவென்றால் பட்டுக்கோட்டையில் நான் ம.பொ.சியின் "செங்கோல்", "தமிழன் குரல்" ஆகிய பத்திரிகைகளுக்கும் கவி கா.மு.ஷெரீப்பின் "தமிழ் முழக்கம்", ஏ.பி.நாகராஜனின் "சாட்டை", ஏ.கரீீம் அவர்களின் "தமிழ் சினிமா" ஆகியவற்றுக்கு முகவராக இருந்த காலம் அது. அதே காலகட்டத்தில் என்னுடைய நெருங்கிய நண்பரும் என்.ஜி.ஓ.சங்கத்துக்கு பின்னாளில் மானில தலைவராக இருந்தவருமான சிவ.இளங்கோ அவர்கள் "முரசொலி", "தென்றல்", "முத்தாரம்" ஆகிய பத்திரிகைகளுக்கு முகவர். நாங்கள் இருவருமே பத்திரிகைகள் வரும் நாளில் அவற்றை வாங்கிக் கொண்டு வந்து சின்னக்கடை வீதியில் மணிக்கூண்டு எதிரில் உள்ள கடைகளில் விற்பனைக்காகக் கொடுத்து விடுவோம். நாங்கள் இருவரும் அவரவர் கருத்துக்களை ஆரோக்கியமாக விவாதித்துக் கொண்டாலும் சண்டை எதுவும் வந்ததில்லை. அவர் எழுதிய நாடகத்தில் நானும் நடித்திருக்கிறேன். அவருடன் அப்துல் சுபான், தேசிகன், கோட்டாகுடி கோவிந்தசாமி போன்ற நண்பர்களும் ஒன்றாக இருந்தோம் என்பது இனிமையான நினைவுகள்.
"தென்றல்" பத்திரிகை கவிஞர் கண்ணதாசனை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த பத்திரிகை. இதில் முக்கியத்துவம் என்னவென்றால், கடைசி பக்கத்தில் வெண்பாப் போட்டி இருக்கும். ஒவ்வொரு வாரவும் வெண்பாவுக்கு ஈற்றடி கொடுத்து பாடல் எழுதச் சொல்லுவார். ஏராளமான கவிதைகள் வெளியாகும். அவை யாவும் அற்புதமான வெண்பாக்கள். தமிழ் இலக்கியத்துக்குச் செய்த மாபெரும் சேவையாக இந்த வெண்பா போட்டி அமைந்தது. இதிலும் பல வரலாற்றுத் தொடர்களை கண்ணதாசன் எழுதினார். அப்போது திராவிட இயக்கத்திலும், நாத்திக வாதத்திலும் ஈடுபட்டிருந்த கண்ணதாசனை அப்போது அவ்வளவாகப் பிடிக்காது. பின்னர் அவர் தேசியத்துக்கு வந்த பிறகுதான் அவர் கவிதைகளை ஊன்றி படிக்கத் தொடங்கியதோடு, அவன் எத்தகைய மாபெரும் கவிஞன் என்பதையும் புரிந்து கொண்டேன். ஓருக்கால் அவன் தேசியத்துக்கு வராமல் இருந்திருந்தால் அவன் பெருமையை தெரிந்து கொள்ளாமலேயே போயிருப்பேனோ என்னவோ. பாரதிக்குப் பிறகு வந்த அந்த மாபெரும் கவிஞனை மதிக்கிறேன், போற்றுகிறேன்.
"முத்தாரம்" என்பது மு.கருணா நிதியால் வெளியிடப்பட்ட மாதாந்திர பத்திரிகை. பல்சுவை கொண்டு ரீடர்ஸ் டைஜஸ்ட் மாதிரியிலான பத்திரிகை. பல புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்ள இந்த பத்திரிகை உதவியது எனலாம். என்றாலும் அந்த முகாமின் பத்திரிகை என்பதால் அத்தனை ஆர்வமாகப் படித்ததில்லை நான்.
"தமிழ் சினிமா" என்பது ஏ.கரீம் என்பவரால் வெளியிடப்பட்ட பத்திரிகை. மாதமிரு முறை வந்தது. தமிழ் செய்தித் தாள் அமைப்பில் இருக்கும் இந்தப் பத்திரிகை. இதில் "தூரத்துப் பார்வை" எனும் தலைப்பில் ஒரு பெரிய கட்டுரை வெளியாகும். அது இன்றைய வம்பு பக்கங்களைப் போல பல நாட்டு நடப்புகளை விவாதிக்கும் பகுதி. அந்தப் பகுதிக்காகவே தமிழ் சினிமாவை வாங்குவார்கள். அந்த பத்திரிகை முகவரான எனக்கு வரும் தினத்தில் பலர் காத்திருந்து வாங்கிச் செல்வார்கள். அத்தனை மவுசு அந்த பத்திரிகைக்கு.
தமிழரசுக் கழக்த்தில் இருந்த பல தேசியத் தலைவர்களில் சின்ன அண்ணாமலையும் ஒருவர். இவர் 1942 வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போது ஹீரோ வாக ஆனவர். இவர் தேவகோட்டையைச் சேர்ந்த செல்வந்தர். தேசிய வாதி. இளைஞர். காங்கிரசில் சேர்ந்து 1942இல் சிறைப்பட்டு திருவாடனை ஜெயிலில் அடைக்கப் பட்டார். அப்போது மக்கள் ஒன்று திரண்டு வந்து சிறையை உடைத்து இவரை வெளியே கொண்டு போய்விட்டனர். பின்னர் நடந்த அடக்குமுறையில் துப்பாக்கிச் சூட்டில் பலர் இறந்தனர். அந்த சின்ன அண்ணாமலை ம.பொ.சியின் தொண்டர். தமிழரசுக் கழகத்தில் தலைவர். இவர் சென்னையில் ஒரு புத்தக வெளியீட்டாளர். இவர் புத்தக வெளியீட்டகம் ஒரு மினி காங்கிரஸ் அலுவலகமாக இருந்தது. பல திட்டங்கள் அங்கு வகுக்கப் பட்டன. இவர் "சங்கப் பலகை" என்றொரு பத்திரிகை தமிழரசுக் கழகத்துக்காக வெளியிட்டார். அதில் இவரது கேலியும் கிண்டலும் நிறைந்த நடையில் கட்டுரைகள் வெளியாகும். பழமொழிகளை உதிர்ப்பதில் இவருக்கு நிகர் எவரும் இல்லை. "கிடக்கிறதெல்லாம் கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மணையில் வை", "கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானம் ஏறி வைகுண்டம் போனானாம்" இப்படி பற்பல பழமொழிகள் அப்போது படித்தது இன்னமும் நினைவில் இருக்கிறது.
தமிழரசுக் கழகத்தின் தலைவர்களில் ஒருவரும், சென்னை மவுண்ட் சாலையில் உமா சினிமா தியேட்டரைக் கட்டியவரும் "ராஜராஜசோழன்" திரைப்படத்தைத் தயாரித்தவரும், மணிரத்தினத்தின் "அக்னி நட்சத்திரம்" படத்தில் வில்லனாக நடித்தவரும், பிரபல அட்டைப்பெட்டி தயாரிப்பாளருமான ஜி.உமாபதி "உமா" எனும் இலக்கியப் பத்திரிகையை நடத்தினார். இது அவருடைய பத்திரிகைதானே தவிர அதில் எழுதியதில்லை. அறந்தாங்கிக்கு அருகில் உள்ள பூவத்தங்குடி எனும் ஊரைச் சேர்ந்த பூவை ஆறுமுகம் என்பவர்தான் ஆசிரியர். இவர் மிக அற்புதமான எழுத்தாளர். நல்ல பல கதைகளை எழுதியிருக்கிறார். தமிழ் இலக்கிய உலகில் பாராட்டுப் பெற்றவர் இந்த பூவை எஸ்.ஆறுமுகம்.
திரு எம்.பக்தவத்சலம் முதலமைச்சராக இருந்த போது நண்பர் சிவ இளங்கோ மானில என்.ஜி.ஓ. சங்கத் தலைவராக இருந்தார். இவர் சில காலம் பணியிலிருந்து சஸ்பெண்டு செய்யப் பட்டிருந்தார். நல்ல எழுத்தாளரான சிவ.இளங்கோவை ஆசிரியராகக் கொண்டு "திராவிட மணி" எனும் பத்திரிகை வெளிவந்தது. அதில் என் பெயரில் சில தலைப்புகளில் சிவ.இளங்கோ எழுதி வெளியிடுவார், எனக்கும் ஒரு பிரதியை அனுப்பி வைப்பார். எங்கள் நட்பு அவருடைய கடைசி காலம் வரையிலும் தொடர்ந்தது.
நல்ல தரமான மாதப் பத்திரிகைகளில் "கலைமகள்" பத்திரிகை தனியிடம் பிடித்திருந்தது. நாராயணசாமி ஐயர் என்பவரால் தொடங்கப்பட்ட இந்த பத்திரிகைக்கு நெடுங்காலம் கி.வா.ஜகன்னாதன் ஆசிரியராக இருந்து வந்தார். நல்ல இலக்கியப் பத்திரிகை. இதில் நல்ல தரமான கதைகள் வெளிவந்தன. பல பெண் எழுத்தாளர்கள் இதில் எழுதி வந்தார்கள். அகிலன், ராஜம் கிருஷ்ணன், அனுத்தமா, சிவசங்கரி, கேப்டன் தி.சா.ராஜு போன்ற பிரபலங்கள் இதில் எழுதி வந்தனர்.
பழம்பெரும் எழுத்தாளரும் பல சரித்திரக் கதைகளின் ஆசிரியருமான விக்கிரமனை ஆசிரியராகக் கொண்டு "அமுதசுரபி" எனும் பத்திரிகை வந்தது. இப்போது அதன் ஆசிரியராக திருப்பூர் கிருஷ்ணன் இருந்து அதே பழைய பாரம்பரிய பெருமையைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறார். நிறைவாக, முடிவாக அல்ல, "சரஸ்வதி" எனும் பத்திரிகையைப் பற்றி சொல்ல வேண்டும். விஜயபாஸ்கர் என்பவரை ஆசிரியராகக் கொண்ட இந்த பத்திரிகையில் ஜெயகாந்தன் தொடக்க காலத்தில் எழுதியிருக்கிறார். அந்தக் காலத்தில் ஜெயகாந்தன் எழுதிய சில வரிகள் என் நினைவுக்கு வருகிறது. அது:-- "சீனத்துக் கடை வீதி; இது எங்கோ பீகிங்கிலோ, ஷாங்காயிலோ இருப்பதாக எண்ண வேண்டாம். தாய்த் தமிழ் நாட்டின் மையப் பகுதியில் அமைந்துள்ள இடம்தான் இது"....
இப்படி எனது பத்திரிகை நினைவுகளின் ஒரு பகுதியை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். விட்டுப் போயிருந்தால் மீண்டும் வருவேன். நன்றி.