பாரதி பயிலகம் வலைப்பூ

Sunday, August 30, 2020

தஞ்சாவூரில் ஸ்ரீராமகிருஷ்ண மடம் கிளை உதயம்.

                                                                                                                                          

            பாரதத் திருநாட்டில் ஆன்மிகமும், தர்மமும் நிலைநிறுத்துவதற்காக அவதாரம் செய்தவர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர். அவருடைய சீடராக விளங்கிய சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் சிகாகோ நகரில் நடந்த உலக சர்வ மத மாநாட்டில் பங்கு பெற்று உரையாற்றிய பிறகு, இந்த உலகமே நம் பாரத நாட்டைத் திரும்பிப் பார்க்கத் தொடங்கியது. அந்த மகான் நாடு திரும்பிய பிறகு, நமது பாரம்பரிய மிக்க சநாதன தர்மம் வீறுநடை போடவேண்டுமானால், நாம் ஒரு நிலையான அமைப்பை உருவாக்கி மக்களைத் தர்ம மார்க்கத்தில் ஈடுபட வைக்க வேண்டுமென்கிற நோக்கத்தில் உருவானதுதான் ஸ்ரீராமகிருஷ்ண மடம். இந்த அமைப்பு 1897ஆம் ஆண்டு மே மாதம் முதல் தேதி உருவாக்கப்பட்டது. 123 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ராமகிருஷ்ண மடம் இப்போது உலகளாவிய வகையில் 214 கிளைகளைக் கொண்டு விளங்குகிறது. ஒரு புதிய, எழுச்சி மிக்க இந்தியாவை உலகுக்கு அளித்த முன்னோடிகளில் தலைசிறந்தவராக சுவாமி விவேகானந்தர் விளங்குகிறார். அவர் உருவாக்கிய இந்த ராமகிருஷ்ண மடம் நாடெங்கிலும் பரந்து விரிந்து மக்கள் பணியாற்றி வரும் நிலையில், வரலாற்று முக்கியத்துவமும், ஆன்மிக பலமும் கொண்ட நம் தஞ்சைப் பகுதியில் அந்த அமைப்பின் கிளை இல்லாதது பெரும் குறையாகவே இருந்து வந்தது. அந்தக் குறையை நீக்கி பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் பெயரால் இயங்கும் ராமகிருஷ்ண மடத்தின் கிளையொன்று பல காலம் திட்டமிட்டு 22 ஆகஸ்ட் 2020 விநாயக சதுர்த்தியன்று தஞ்சை சிவாஜி நகரில் உருவாக இருக்கிறது.

            தஞ்சை பெரிய கோயிலுக்கு மிக  அருகாமையில் உள்ள சிவாஜி நகரில் அமையவிருக்கும் இந்த மடம் தஞ்சை வாழ் மக்களின் ஆன்மீகத் தேடல்களுக்கும், மன அமைதிக்கும், மக்கள் சேவையில் ஈடுபடவுமான ஒரு பொதுநல அமைப்பாக உருவாக இருக்கிறது.

            தஞ்சையில் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் கிளையொன்று உருவாகும் இந்த நேரத்தில், இங்கு இதற்கு முன்பு ஸ்ரீராமகிருஷ்ண இயக்கத்தின் பணிகள், பல அமைப்புகளாலும், தனிநபர்களாலும், மிகச் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வந்தது என்கிற செய்திகளையும் நினைவு கூர்தல் சரியாக இருக்கும். தஞ்சைப் பகுதியில் முதன் முதலில்  1925லேயே ராமகிருஷ்ணர் பணி திருவையாற்றுக்கு அருகிலுள்ள திருநெய்த்தானம் (தில்லைத்தானம்) எனும் கிராமத்தில் டி.எஸ்.ஸ்ரீனிவாச ஐயங்கார் எனும் ராமகிருஷ்ணர் பக்தரால் பெண்களுக்கான ஒரு தொடக்கப் பள்ளி உருவாக்கபட்டது. முதலில் நாற்பது பெண் குழந்தைகளுடன் துவங்கிய இந்தப் பள்ளிக்கூடம், சிறிது சிறிதாக வளர்ந்து இன்று அவ்வூரில் ஸ்ரீராமகிருஷ்ண நடுநிலைப் பள்ளி என்ற பெயரில் ஒரு சிறந்த பள்ளிக்கூடமாகத் திகழ்ந்து வருகிறது. இந்தப் பள்ளியில் இருபாலரும் கல்வி பயிலவும், உண்டு உறைவிடப் பள்ளியாகவும் இப்போது விளங்கி வருகிறது.

            இந்தப் பள்ளிக்கூட நிறுவனரின் இளவல் டி.எஸ்.வீரராகவாச்சாரியார் என்பவர் தஞ்சாவூரில் கணபதி நகரில், நரிக்குறவர் இனத்துப் பிள்ளைகள் படிப்பதற்காக, ஸ்ரீராமகிருஷ்ணா துவக்கப்பள்ளி யொன்றைத் துவங்கினார். காலங்களைக் கடந்து அந்தத் தொடக்கப் பள்ளி, தற்சமயம் கணபதிநகர் செல்வராஜ் மேல் நிலைப்பள்ளி நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.

            தஞ்சை மாநகரில் அச்சகத் துறையில் பிரபலமாக விளங்கும் வெற்றிவேல் அச்சகத்தின் உரிமையாளர் கே.வி.பக்கிரிசாமிப் பிள்ளை ராமகிருஷ்ண பரமஹம்சரின் பரம பக்தராக விளங்கினார். அவர் தங்கள் அச்சகத்தில் ஸ்ரீராமகிருஷ்ணரின் பல திருவுருவப் படங்களைக் காட்சிப்படுத்தியிருப்பதோடு, தஞ்சை பெரிய கோயிலில் அமைந்துள்ள கருவூரார் சந்நிதியில் ஸ்ரீராமகிருஷ்ணரின் படத்தையும் வைத்து வணங்க ஏற்பாடு செய்திருக்கிறார். அவருடைய இல்லத்தில் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் திருவுருவச் சிலையை வைத்து தினமும் வழிபட்டு வந்தார், அந்த வழிபாடு இன்றளவும் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது.

            தஞ்சை மாநகருக்கு அந்தக் காலத்தில் ஸ்ரீராமகிருஷ்ணர், விவேகானந்தர் பக்தர்கள் விஜயம் செய்தால், அவர்களை வரவேற்று, தங்க வைத்து, அவர்களுக்கு வேண்டிய பணிவிடைகளை இவர் செய்து வந்தார். தஞ்சையில் ராமகிருஷ்ண இயக்கத்துக்கு முகவரியாக இருந்தது அவருடைய அச்சகமும், இல்லமும் தான்.

            1986ஆம் ஆண்டில் மடத்தின் முன்னாள் தலைவராக இருந்த ஸ்ரீமத் சுவாமி ரங்கநாதானந்தாஜி அவர்களின் வழிகாட்டுதலோடு, மக்கள் பணிகள் தஞ்சையில் மீண்டும் துவங்கி நடைபெறத் தொடங்கின. மனையேரிப்பட்டி மறுவாழ்வு இல்லத்தில் இருந்த தொழுநோயாளிகளுக்குக் குளிர்காலத்துக்குப் பயன்படும் வகையில் 300 பேருக்கு போர்வைகள் வழங்க ஏற்பாடு செய்தார். அதற்கான பொருளதவியை ராஜபாளையம் ரோட்டரி சங்கத்தாரிடம் பெற்றுத் தந்தார். மேலும் சில பணிகளைத் துவங்க அவர் ஆசி கூறியபடி தொடர்ந்து நடத்தி வந்தார்கள். மாலை நேர மருந்தகம் ஒன்று துவங்கப்பட்டு 1994 வரை மருத்துவக் கல்லூரிக்கு அருகில் உள்ள பவானி நகரில் செயல்பட்டு வந்தது. சுற்று வட்டாரத்திலுள்ள பல கிராமத்து மக்கள் இங்கு வந்து இலவச மருத்துவ சேவையைப் பெற்றுச் சென்றனர். சனிக்கிழமைகள் தோறும் சத்சங்கமும் அதே இல்லத்தில் நடைபெற்று வந்தது. பொது மக்களின் ஆதரவு இவற்றுக்கெல்லாம் மிகச் சிறப்பாக இருந்து வந்தது. ஸ்ரீராமகிருஷ்ண வாலண்டரி ஹெல்த் சர்வீஸ் என்ற அமைப்பின் மூலம் பல எளிய மக்கள் மருத்துவ உதவிகளைப் பெற முடிந்தது. மேற்கண்ட பணிகளை எல்.ஐ.சியில் பணிபுரிந்து வந்த ஸ்ரீராமகிருஷ்ண பக்தர் கி.முத்துராமகிருஷ்ணன் என்பார் தனது குடும்பத்து உறுப்பினர்களுடன் ஆர்வத்தோடு செய்து வந்தார். மருத்துவ உதவிக்கு சில மருத்துவர்கள் தாமாக முன்வந்து சேவை புரிந்து வந்தார்கள். இவற்றுக் கெல்லாம் சுவாமி தன்மயானந்தர் என்ற மூத்த துறவியின் ஆசியும் கிட்டியது.

            1993ஆம் ஆண்டில் அப்போதைய சென்னை மடத்தின் தலைவர் ஸ்ரீமத் சுவாமி ஸ்மரணானந்தாஜி அவர்கள் (இப்போது இவர் உலக அமைப்பின் தலைவர்) தஞ்சைக்கு விஜயம் செய்தார். அப்போது அவர் தஞ்சையில் ராமகிருஷ்ண மடத்தின் அங்கீகாரம் பெற்ற கிளையொன்று உருவாகவில்லையே என்ற தனது குறையை வெளியிட்டார். அதன் தொடக்கமாக, மடத்தின் பணிகள், சேவைகள் ஆகியவை பொதுமக்களுக்குச் சென்றடையும் வகையில் தஞ்சையில் “ஸ்ரீராமகிருஷ்ண, விவேகானந்த தொண்டர்கள் மாநாடு” ஒன்றைக் கூட்டுமாறு அறிவுரை வழங்கினார். அதன்படி 1993ஆம் ஆண்டு இறுதியில்  “ஸ்ரீராமகிருஷ்ண விவேகானந்த பக்தர்கள் மாநாடு” தஞ்சையில்  மூன்று நாட்கள் மிகச் சிறப்பாக நடந்தேறியது. பல்வேறு இடங்களிலிருந்து ஐநூறுக்கும் மேற்பட்ட பக்தர்களும் முப்பதுக்கும் மேற்பட்ட மடத்து  சாதுக்களும் வந்து கலந்து கொண்டு அந்த மாநாட்டைச் சிறப்பித்தனர். இந்த மாநாட்டின் தொடர்ச்சியாகத்தான் இப்போது பற்பல ஊர்களிலும் அதுபோன்றதொரு மாநாடு தொடர்ந்து கடந்த 27 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

            1994ஆம் ஆண்டு தொடங்கி தஞ்சையில் ஸ்ரீராமகிருஷ்ணரின் சேவைப் பணிகளை பேராசிரியை இந்திரா அவர்கள் ஈடுபட்டு மிகச் சிறப்பாகச் செய்யத் தொடங்கினார்.  புன்னைநல்லூர் அருள்மிகு மாரியம்மன் ஆலயத்துக்கு அருகாமையில் ஸ்ரீராமகிருஷ்ணருக்கு திருக்கோயிலொன்று அமைத்து நாள்தோறும் அங்கு வரும் பக்தர்கள் வழிபாடு செய்ய ஏற்பாடு செய்திருந்தார். அந்தப் பகுதியில் வாழ்ந்த நலிவுற்ற மக்களுக்கு அன்னதானமும், மருத்துவ சேவையும் அளித்து வந்தார். அந்த ஆலயம் தற்சமயம் ஸ்ரீராமகிருஷ்ண இயக்கத்திடம் ஒப்படைக்கபட்டு விட்டது.

            தஞ்சையில் நெடுநாட்களாக திரு சிவகுருநாதன் எனும் பக்தர் ஸ்ரீசாரதா ஆசிரமம் என்ற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கி, அதன் மூலம் அன்னதானப் பணிகளைச் செய்து வந்தார். தினந்தோறும் தஞ்சை பெரியகோயிலுக்கு எதிரில் சுமார் 60 பேருக்குக் காலை உணவுக்கும், அமாவாசைதோறும் ஆங்காங்கே உள்ள ஆதரவற்றோர் ஆசிரமங்களில் மதிய உணவுக்கும் அவர் ஏற்பாடு செய்திருந்தார்.  மூன்று ஆண்டுகளுக்கு மேலாக அவர் இந்தப்பணியில் ஈடுபட்டிருந்த சமயம், ஒரு நாள், தொழுநோயாளி இல்லம் ஒன்றுக்கு உணவு கொண்டு செல்லும் வழியில் நடந்த சாலை விபத்தில் அவர் மரணமடைந்தார். அந்த நல்ல உள்ளம் படைத்தவர் தொடங்கிய அந்த அரிய பணியினை, இப்போது தொடர்ந்து “அருள் ஒளி அன்னதான அறக்கட்டளை” எனும் அமைப்பு மிகச் சிறப்பாகச் செய்து வருகிறது.

            தஞ்சையில் திரு கெளதமன் என்ற பக்தர் “ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்” என்ற மடத்தின் மாத இதழை அன்பர்களுக்கு விற்பனை செய்து வந்தார். அவருடைய பணியின் காரணமாக பலருக்கும் மடத்தின் பணிகள் அறிமுகமாயின. அந்த பக்தர் இப்போது ஹோசூரில் குருதேவரின் பெயரால் பல அரிய சமூகத் தொண்டினை ஆற்றி வருகிறார்கள்.

            தஞ்சாவூரிலிருந்து திருவையாறு செல்லும் வழியிலுள்ள அம்மன்பேட்டை எனும் கிராமத்தில் வெட்டாற்றுக் கரையில் சுவாமி அம்பிகானந்தா எனும் திருப்பராய்த்துறை தபோவனம் சாது ஒருவர், ஆசிரமம் ஒன்றை நிறுவி ஆன்மீகத் தொண்டினை ஆற்றி வந்தார். அவர் முக்தியான பின்னர், அந்த ஆசிரமத்தை சுவாமி கிருஷ்ணானந்தா என்பார் அவர்கள் எடுத்து மிகச் சிறப்பாக நடத்தி வருகிறார்.

            இப்படிப் பலராலும், பல காலமாக தஞ்சையில் ஸ்ரீராமகிருஷ்ணரின் அருட்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக இப்போது மடத்தின் கிளையொன்று தஞ்சையில் விநாயகர் சதுர்த்தியன்று (22-08-2020) திறக்கப்படுகிறது. பரமஹம்சரின் ஆன்மிக வெள்ளம், சுவாமி விவேகானந்தரின் புத்துணர்வு தரும் அறிவுரைகள், இவைகளெல்லாம் மீண்டும் தஞ்சைத் தரணியில்  பரவத் தொடங்கிவிட்டது. இந்த மகத்தான ஆன்மீகப் பணியில் தஞ்சைவாழ் பெருமக்கள் அனைவரும் பங்கேற்று, எல்லா நலன்களும் பெற்று பெரு வாழ்வு வாழ இறைவனைப் பிரார்த்திப்போம். ஸ்ரீகுருமகராஜ்கி ஜெய்!

 

           

No comments: