பாரதி பயிலகம் வலைப்பூ

Wednesday, August 19, 2020

1947 ஆகஸ்ட் 15 அன்று மகாத்மா காந்தி எங்கே இருந்தார்?

 

            1947 ஆகஸ்ட் 15 அன்று மகாத்மா காந்தி எங்கே இருந்தார்?                                    என்ன செய்து கொண்டிருந்தார்?

                   இந்தியா பிரிட்டன் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு சுதந்திர நாடாக உருவானது 1847 ஆகஸ்ட் 15 அன்று என்பது அனைவருக்கும் தெரியும். ஆகஸ்ட் 14 நள்ளிரவில் நடந்த இந்திய பாராளுமன்ற கூட்டத்தில் ஜவஹர்லால் நேருவின் உரை இன்று அனைவராலும் பேசப்படுகின்ற உரை. சரி! இந்திய சுதந்திரப் போராட்டத்தில் 1919 தொடங்கி தொடர்ந்து தலைமை வகித்துக் கலந்து கொண்டு போராடியவரும், மக்களால் “மஹாத்மா” என்று போற்றப்பட்டவருமான மகாத்மா காந்தி அன்றைய தினம் எங்கே என்ன செய்து கொண்டிருந்தார்? டெல்லியில் நடந்த கோலாகலமான கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு சுதந்திரத்தின் சுவாசக் காற்றை உணர்ந்து கொண்டிருந்தாரா? இந்திய பாராளுமன்றத்தில் இதர காங்கிரஸ் தலைவர்களுடன் இந்திய சுதந்திரத்துக்கான உரை நிகழ்த்திக் கொண்டிருந்தாரா? செங்கோட்டையில் கொடியேற்றி வணக்கம் செய்து கொண்டிருந்தாரா? இதை இன்றைய குழந்தைகள் அறிந்து கொள்ள ஆவலாயிருப்பார்கள் அல்லவா? ஆகையால் அன்றைய தினம், அதாவது 1947 ஆகஸ்ட் 15 அன்று இந்திய கோலாகலமாக சுதந்திர தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கும்போது, மகாத்மா காந்தி இருந்த இடம் கல்கத்தா. மகாத்மா காந்தி கல்கத்தாவில் என்ன செய்து கொண்டிருந்தார். இந்தியா சுதந்திரம் அடைந்தபோது அது இரண்டாக பிளவுபட்டு இருவேறு நாடாக, இந்தியா, பாகிஸ்தான் என்று உருவாயிற்று. நாட்டின் எல்லைப் பகுதிகளிலும், வேறு பற்பல நகரங்களிலும் கலவரங்கள் அதிகமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. மத அடிப்படையில் மக்கள் ரத்தக் களரியில் தவித்துக் கொண்டிருந்தனர். இனிப்பு வழங்கி, மகிழ்ந்து கொண்டாடப்பட வேண்டிய சுதந்திரம் வேதனையும், துன்பமும் கலந்த நாளாக விளங்கியது கொடுமையிலும் கொடுமை. இவற்றையெல்லாம் எண்ணித்தான் மகாத்மா காந்தி, தான் எந்தவித கொண்டாட்டங்களிலும் கலந்து கொள்ளப் போவதில்லை என்றும், மக்களிடையே ஒற்றுமை, அமைதியை நிலைநாட்ட பாடுபடுவேன் என்று சொல்லி கலவரம் உச்சத்தைத் தொட்டுக் கொண்டிருந்த கல்கத்தா அதன் சுற்றுப்புற இடங்களுக்குப் போய் மக்களிடையே பாடுபடுவேன் என்று சொல்லிவிட்டு கல்கத்தா புறப்பட்டுச் சென்றார். அவருடன் எல்லை காந்தி என்று பேசப்பட்ட கான் அப்துல் கஃபார்கானும் கூட இருந்தார். இவர்தான் இந்திய பிரிவினையை கடைசி வரை உறுதியாக எதிர்த்து நின்றவர்.

            அப்போது காந்தி சொன்ன வாசகம் என்ன தெரியுமா? “ஆகஸ்ட் 15ஐ என்னால் மகிழ்ச்சியோடு கொண்டாட முடியாது. உங்களை நான் ஏமாற்ற விரும்பவில்லை. அதே நேரத்தில் , உங்களையெல்லாம் கொண்டாடாதீர்கள் என்று சொல்லவும் மாட்டேன். துரதிர்ஷ்டவசமாக நாம் இன்று பெற்றிருக்கும் சுதந்திரமானது எதிர்காலத்தில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே தகராறுக்கான விதை விதைக்கப்பட்டிருக்கிறது . அப்படியிருக்கும்போது சுதந்திர ஒளியை நான் எப்படி ஏற்ற முடியும்? என்று ஜூலை மாதமே காந்திஜி சொல்லியிருந்தார்.

            1947 ஆகஸ்ட் 9ஆம் தேதியே அவர் வங்கத்திலுள்ள (இப்போது வங்கதேசம்) நவகாளி (NaoKhali) என்கிற இடத்தில் மதக்கலவரம் மிக உச்சத்தில் இருப்பதால் தான் அங்கே செல்லப் போவதாகச் சொல்லியிருந்தார். கல்கத்தாவுக்கு வந்து சேர்ந்த காந்தியை அங்கிருந்த தேசபக்தர்கள் இப்போது நிலவும் சூழலில் கிழக்கு வங்காளத்துக்குப் போக வேண்டாம் என்று வேண்டிக் கொண்டனர். மதக் கலவரத்தால் சிதைந்து போயிருந்த கல்கத்தா நகரத்தில் காந்திஜி அமைதியைக் கொண்டு வந்தால் அது வங்கம் முழுவதுக்கும் பலன் தரும் என்று நம்பினார்கள்.

            ஆகவே கல்கத்தாவில் காந்திஜி முஸ்லீம் மக்கள் அதிகம் வசிக்கும் ஹைதரி மன்சில் (Hyderi Manzil) என்கிற பகுதியில் தங்குவதற்கு முடிவு செய்தார்.  அங்கு தங்கியிருக்கும் போது அவரைக் காண நூற்றுக் கணக்கில் மக்கள் வந்து கூடினர். அப்போதெல்லாம் அவர் அங்கு கூடியிருந்தவர்களிடம் பேசினார். அவர் தங்கியிருந்த இடத்துக்கு வெளியில் “காந்தி திரும்பிப் போ” என்று அவர் முஸ்லீம்களுக்குச் சாதகமாக இருக்கிறார் என்ற கருத்தில் அவருக்கெதிராகக்  கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர்.

            ஆகஸ்ட் 13 தொடங்கி அவர் இரு தரப்பினரிடமும் வன்முறைகளைக் கைவிட்டு அமைதி காத்திட வேண்டிக் கொண்டிருந்தார். கோபத்தின் உச்சியில் இருந்த மக்களின் சில பிரிவினர் அவர் வேண்டுகோளை நிராகரித்து விட்டனர், அப்படியிருந்தும் காந்தி தன் முயற்சியைக் கைவிடவில்லை. ஒருசில தினங்களில் நல்ல பலன் கிடைக்கத் தொடங்கியது. அப்போது கடைசி கவர்னர் ஜெனரலாக இருந்த லார்ட் மவுண்ட் பேட்டன் சொன்னார், “பஞ்சாபில் 55,000 படை வீரர்கள் இருந்தும் அங்கு வன்முறை குறையவில்லை. வங்கத்திலோ ஒரே ஒருவர் காந்தி இருப்பதால் இங்கு மன்முறை கலவரம் அடங்கியிருக்கிறது” என்றார்.

            கல்கத்தாவில் இருந்த காந்திஜியை ராஜாஜி சென்று பார்த்துப் பேசினார். அப்போது காந்தி சொன்னார், “ நாட்டில் இந்துக்களும் முஸ்லீம்களும் ஒற்றுமை, பாதுகாப்போடு இருந்து ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டி தத்தமது வீடுகளுக்கு பாதுகாப்பாகச் செல்லும்வரை எனக்கு திருப்தி தராது” என்றார்.

Courtesy: Article by Kunal Majumthaar in “Catch News” website.

No comments: