பாரதி பயிலகம் வலைப்பூ

Friday, August 14, 2020

சுதந்திரப் போராட்டத் தியாகி ரா.நாராயண ஐயங்கார்.

       திருச்சி நகரத்தில் சகோதரர்களாக காங்கிரஸ் இயக்கத்தில் ஈடுபட்டவர்களில் ரா.நாராயண ஐயங்காரும் அவரது தம்பி ரா.கிருஷ்ணசாமியும் முக்கியமானவர்கள். இவர்களோடு சுதந்திரப் போரில் ஈடுபட்ட திருச்சி மாநகர சகோதர காங்கிரஸ் காரர்கள்: டி.வி.சுவாமிநாத சாஸ்திரி, டி.வி.பாலகிருஷ்ண சாஸ்திரி; எம்.எஸ்.கிருஷ்ணசாமி ஐயங்கார், எம்.எஸ்.ரங்கசாமி ஐயங்கார்; டி.எஸ்.திருஞாானசம்பந்தம், டி.எஸ். அருணாசலம், வேலாயுதம்பாளையம் எம்.கே.எம்.முத்து, கே.பாலகிருஷ்ணன் ஆகியோராவர்.

இதில் ரா.நாராயண ஐயங்காரின் தாயின் தியாகம் மிகவும் சிறப்பானது. மகாத்மாவிடம் பக்தியுடைய இந்த முதிய அம்மையார், காந்தி சுடப்பட்டு இறந்தார் என்ற அதிர்ச்சியான செய்தியைக் கேட்ட மாத்திரத்தில் மயங்கி விழுந்து உயிர் துறந்தார். இந்த ரா.நாராயண ஐயங்கார் பற்றிய சில சுதந்திரப் போராட்ட அனுபவங்களை இங்கு பார்க்கலாம்.

1916இல் ஐரிஷ் பெண்மணியான அன்னிபெசண்ட் அம்மையார் “ஹோம்ரூல் லீக்” எனும் அமைப்பைத் தோற்றுவித்து சுயாட்சிப் போராட்டமொன்றைத் தொடங்கினார். இவருடைய இந்த ஹோம்ரூல் கிளர்ச்சியில் அந்தக் காலத்தில் சுதந்திரப் போரில் ஈடுபட்டிருந்த எஸ்.சத்தியமூர்த்தி, ஏ.ரங்கசாமி ஐயங்கார், சி.பி.ராமசாமி ஐயர் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். முதலாம் “ஹோம்ரூல் மாணவர் கன்வென்ஷன்” என்ற பெயரில் முதல் மாநாடு சென்னையில் நடந்தது. இரண்டாவது மாநாடு திருச்சியில் நடைபெற்றது. இதில் பல கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

1917 ஜூன் 15ஆம் தேதி அன்னிபெசண்ட் அம்மையாரும், அருண்டேல், பி.பி.வாடியா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பிறகு தண்டனை தளர்த்தப்பட்டு இவர்கள் விரும்பினால் ஊட்டி, கோவை ஆகிய இடங்களில் எங்கேனும் தங்கிக் கொள்ளலாம் என்ற தளர்வும் அறிவிக்கப்பட்டது. 1918இல் காஞ்சிபுரத்தில் சென்னை மாகாண காங்கிரஸ் மகாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு சரொஜினி நாயுடு தலைமை தாங்கினார். அதில் அன்னிபெசண்ட்டும் கலந்து கொண்டார். ராஜாஜி முதன் முறையாக இந்த மகாநாட்டுக்கு வருகை புரிந்திருந்தார்.

1919இல் சென்னை மாகாண காங்கிரஸ் மகாநாடு திருநெல்வேலியில் நடந்தது. அச்சமயம் பஞ்சாபில் நடந்த படுகொலையை எதிர்த்து அட்வகேட் ஜெனரலாகப் பதவி வகித்து வந்த எஸ்.சீனிவாச ஐயங்கார் தனது பதவியை ராஜிநாமா செய்திருந்தார். அவரே இந்த திருநெல்வேலி மாநாட்டுக்குத் தலைமை வகித்தார்.

1921இல் திருச்சியில் நடந்த ஒரு நிகழ்ச்சி. அப்போது அங்கு பிரதாப்நாராயண வாஜ்பாய் என்பவர் மாணவர்களுக்கு இந்தி மொழி கற்றுக் கொடுத்து வந்தார்.  அவர் அந்தக் காலத்தில் திருச்சியில் காங்கிரஸ் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். அவர் எந்தவித ஆசாபாசங்களுக்கு ஆட்படாமல் திடசித்தத்துடன் வாழ்ந்த வரலாறு நம்மையெல்லாம் ஆச்சரியப்பட வைக்கும். வட நாட்டுக் காரரான அவர் தமிழ்நாட்டில் திருச்சியில் வந்து பொது நிகழ்ச்சிகளில் எல்லாம் கலந்து கொண்டு தேசப்பணியாற்றி வந்தார். அப்படி ஒருநாள் அவர் இந்தி வகுப்பு எடுத்து வரும்போது அவர் பெயருக்கு ஒரு தந்தி வந்தது. அதைப் பிரித்துப் படித்துப் பார்த்துவிட்டு, அதைத் தன் பாக்கெட்டில் வைத்துவிட்டு தொடர்ந்து பாடம் நடத்தி முடித்தார். கடைசியில் தந்தி வந்த விஷயம் என்னவென்று விசாரித்த போதுதான் தெரிந்தது, வடக்கே அவருடைய சொந்த ஊரில் அவரது மனைவி காலமானார் என்ற செய்தி அந்தத் தந்தியில் வந்திருந்தது என்பது. அத்தகைய மனவுறுதி உள்ளவர் அவர்.

ஒத்துழையாமை இயக்கத்திற்காக திருச்சி டவுன்ஹால் மைதானத்தில் ஒரு காங்கிரஸ் கூட்டம் நடைபெற்றது. இந்த பிரதாப்நாராயண வாஜ்பாய்தான் முக்கியப் பேச்சாளர். இவருடைய இந்தி பேச்சை திருச்சி வக்கீல் பாலகிருஷ்ண சாஸ்திரி என்பவர் மொழிபெயர்த்துச் சொல்லி வந்தார். அவர் உரை தேசத் துரோகம் என்று குற்றம் சாட்டி அவருக்கும் அவர் உரையை மொழிபெயர்த்த பாலகிருஷ்ண சாஸ்திரிக்கும் தலா ஒரு வருஷ சிறைதண்டனை கிடைத்தது. சிறை தண்டனையை அனுபவித்து விட்டு வெளிவந்த பிறகும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை இவர் கடுமையாக விமர்சித்துப் பேசிய குற்றத்துக்காக மீண்டும் ஓராண்டு சிறை தண்டனை கிடைத்தது இவருக்கு. சிறையிலிருந்து விடுதலையாகி வெளிவரும் போது அவர் உடல் நலம் கெட்டு இயலாத நிலைமையில் நண்பர் சுவாமிநாத சாஸ்திரியார் இல்லத்தில் இறந்து போனார். வடக்கில் அவர் ஊரில் மனைவி, உறவினர்கள் இவர்களையெல்லாம் விட்டுவிட்டு எட்டத்தில் திருச்சியில் காலமான அவருக்கு சுவாமிநாத சாஸ்திரியாரே இறுதிக் கடன்களைச் செய்தார்.

            அந்தக் காலத்தில் திருச்சியில் காங்கிரஸ் தலைமை அலுவலகம் இரட்டை மால் வீதியில் இருந்து வந்தது. இவரைப் போன்ற பல தியாக புருஷர்களை நாட்டுக்கு அறிமுகம் செய்த தொடக்க கால காங்கிரஸ் வரலாற்றில் இதுபோன்ற பல நிகழ்ச்சிகள் உண்டு. நாட்டுக்காக சர்வபரித்தியாகம் செய்த தியாகப் பெருமக்கள் வரலாற்றைத் தெரிந்து கொள்ளுதல் அவசியம்.


No comments: