பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, August 18, 2020

மகாத்மா காந்தியும் ஆகஸ்ட் புரட்சியும்.

     இரண்டாம் உலக யுத்தம் தொடங்கியது முதல் இந்திய சுதந்திரப் போராட்டக் களத்தில் பல விறுவிறுப்பான செயல்கள் நடக்கத் தொடங்கின. 1941 டிசம்பரில் ஜப்பான் ஆசியா கண்டத்தில் இருந்த பல இங்கிலாந்தின் காலனி நாடுகள் மீது போர்தொடுத்து பர்மா, மலாய் தீப்கர்ப்பம், இந்தோனேஷியா, சிங்கப்பூர் வழியாக முன்னேறிக் கொண்டிருந்தது. இந்தியாவின் தலைவாசல் வரையில் ஜப்பான் தன் படைகளை உள்ளே கொண்டு வந்து விட்டது. அதே காலகட்டத்தில் ஐரோப்பாவிலும், ஆப்பிரிக்காவிலும் ஹிட்லரின் நாஜிப் படைகள் வெற்றி மேல் வெற்றிகளைப் பெற்று முன்னேறிக் கொண்டிருந்தனர். அப்போது இங்கிலாந்துக்கு பிரதமராக பதவியேற்றிருந்த சர் வின்ஸ்டன் சர்ச்சில் இந்திய தலைவர்களிடம் போருக்கான முயற்சிகளில் அவர்களுடைய ஆதரவையும் ஒத்துழைப்பையும் கேட்டிருந்தார்.

            இந்த சூழ்நிலையில்தான் 1942 மார்ச் மாதத்தில் சர் ஸ்டாஃபோர்ட் கிரிப்ஸ்  என்பவர் இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்கு வந்து, காங்கிரஸ், முஸ்லீம் லீக் கட்சிகளின் தலைவர்களோடு சந்தித்துப் பேச வந்திருந்தார். அவர் அரசியல் ரீதியாக இந்தியாவுக்குச் சுதந்திரம் தவிர இதர சலுகைகள் சிலவற்றை அளிக்க பேச்சுவார்த்தை நடத்தினார். அவருடைய யோசனைகளை மகாத்மா காந்தியும், ஜவஹர்லால் நேருவும் ஏற்றுக் கொள்ளவில்லை. அது மட்டுமல்லாமல் காங்கிரசைப் பொறுத்த வரை இந்தியாவை மதரீதியாக இரண்டாகப் பிரிக்கும் யோசனையையும் முழுதுமாக நிராகரித்தார்கள். இந்த சூழ்நிலையில்தான் மகாத்மா காந்தி, ஒருபுறம் இங்கிலாந்து உலகப் போரில் ஈடுபட்டு போராடிக்கொண்டிருக்க, இந்தியாவுக்கு சுதந்திரம் அளிப்பது பற்றி எந்த உத்தரவாதமும் இல்லாத நிலையில், நாட்டைத் துண்டாடவும் தூது வந்தவரிடம் காந்தியடிகள் தாட்சண்யமின்றி நிராகரித்துத் திருப்பி அனுப்பியதுமே இங்கே ஒரு அரசியல் கிளர்ச்சிக்கு வித்திட்டு விட்டதாகக் கருத வேண்டும். 1942 ஆகஸ்ட் மாதம் இந்திய அரசியல் வானில் போராட்ட மேகம் சூழ பம்பாயில் காங்கிரஸ் மகாநாடு கூடியது.

            1942 ஆகஸ்ட் 8ஆம் தேதி பம்பாய் காங்கிரஸ் மகாநாட்டில் மகாத்மா காந்திஜியின் வழிகாட்டலின்படி ஜவஹர்லால் நேரு ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அது ஆங்கிலேய அரசு இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்கிற தீர்மானம் தான் அது. ஆங்கிலத்தில் அது “க்விட் இந்தியா” தீர்மானம் என்றார்கள். அந்தத் தீர்மானத்தின் மீது மகாத்மா காந்தி பேசுகையில் ஒரு கடுமையான எச்சரிக்கையை பிரிட்டிஷ் அரசுக்கு விடுத்தார். பம்பாயில் ஆகஸ்ட் க்ரந்தி மைதானத்தில் அவர் ஆற்றிய உரை பிரிட்டிஷ் அரசை இந்தியாவை விட்டு வெளியேறு என்று சொல்லி, அந்தப் போராட்டத்தில் தேசபக்தர்களை “செய் அல்லது செத்து மடி” (Do or Die) என்ற கோஷத்தையும் எழுப்பினார்.

            காந்தி சொன்னார், “நான் உங்களுக்கு ஒரு சுருக்கமான மந்திரத்தை உபதேசிக்கிறேன். அதை நீங்கள் உங்கள் இதயத்தில் பதித்துக் கொள்ளுங்கள். உங்கள் ஒவ்வொருவர் மூச்சுக் காற்றிலும் அந்த மந்திரத்தின் தாக்கம் வெளிப்பட வேண்டும். அந்த மந்திரம் தான் “செய், அல்லது செத்து மடி” (Do or Die) என்பது. அதைக் கேட்டுக் கொண்டிருந்த மக்கட் கூட்டம் ஆர்ப்பரித்து காந்தியின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டது.

            அந்தக் கூட்டத்தில் பேசிய காந்திஜி அரசாங்க ஊழியர்களை காங்கிரசின் சுயராஜ்ய கோரிக்கையை ஆதரிக்கும்படியும், ராணுவ சிப்பாய்களை தங்கள் சொந்த சகோதரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தக் கூடாது என்றும், நாட்டிலுள்ள சமஸ்தான மன்னர்களை தங்கள் மக்களின் உரிமையை மதித்து நடந்து கொள்ளவும், ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு அடிபணிய வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார். சுதேச சமஸ்தானங்களின் மக்கள் அனைவரும் தாங்கள் இந்தியப் பெருநாட்டின் குடிமக்கள் என்பதை உணர்ந்து, தங்கள் சுதேச மன்னர்கள் இதை ஏற்றுக் கொண்டால் மட்டுமே அவர்களை மன்னர்களாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றும் காந்திஜி சொன்னார்.

            1942 ஆகஸ்ட் 9ஆம் தேதி, காங்கிரஸ் தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, அபுல் கலாம் ஆசாத், பாபு ராஜேந்திர பிரசாத் போன்ற பெரும் தலைவர்கள் அனைவரும் தேசதுரோக வழக்கில் கைது செய்யப்பட்டனர். இந்தத் தலைவர்களை 1942இல் கைது செய்து,  உலக யுத்தம் 1945இல் முடியும் வரை எந்தவித நீதிமன்ற விசாரணையும் இல்லாமல் சிறையில் வைத்திருந்தார்கள். காங்கிரஸ் கட்சி தடை செய்யப்பட்டது. காங்கிரஸ் அலுவலகங்கள் சோதனையிடப்பட்டு சீல் வைக்கப்பட்டன. கட்சியின் நிதி அனைத்தும் முடக்கி வைக்கப்பட்டன. கலவரங்களால் நாடே பற்றி எரிந்து கொண்டிருந்தது.

            1942 ஆகஸ்ட் 9, 10 தேதிகளில் இந்தியப் பெரு நகரங்களிலும், சிற்றூர்களிலும் மக்கள் கொதித்தெழுந்து தெருக்களில் வந்து போராடத் தொடங்கினார்கள். எங்கு பார்த்தாலும் மறியல், ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் என்று நாடு அல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது. எங்கு பார்த்தாலும் காவல் துறை தடை உத்தரவு பிறப்பித்து அடக்குமுறையைக் கையாண்டார்கள். ஏராளமான பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டர்கள். அரசாங்கமும் கடுமையான அடக்குமுறைகளைக் கையாண்டது. போலீஸ் துப்பாக்கிச் சூடுகளும், தடியடிகளும் ஆங்காங்கே நடந்து கொண்டிருந்தன. காவல் துறையின் அடக்குமுறை நீடித்தது. 1942 ஆகஸ்ட்டில் தொடங்கி 1944 வரை எந்தவிதமான பேச்சு வார்த்தைக்கும் காங்கிரசை அழைக்காமல், தலைவர்களையும், தொண்டர்களையும் சிறையில் அடைத்து வைத்திருந்தது அரசாங்கம்.

            1942 ஆகஸ்ட் தொடங்கி அந்த ஆண்டின் இறுதியில் சுமார் 60,000 பேர் சிறையில் அடைக்கப்பட்டார்கள். 26,000 க்கும் அதிகமான பேர் சிலபல அரசியல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தண்டனை அளிக்கப்பட்டிருந்தார்கள். இந்திய பாதுகாப்புச் சட்டத்தின் படி சுமார் 18000 பேர் விசாரணையின்றி சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

            இத்தனை களேபரங்களுக்கிடையில் இந்திய மக்கள் மத்தியில் ஒரு சுதந்திர தாகம் பெருகி விட்டிருந்ததைக் காண முடிந்தது. அதுவரை இல்லாத அளவுக்கு பொதுமக்களின் பங்களிப்பு இந்த ஆகஸ்ட் போராட்டத்தில் மிக அதிகமாக இருந்தது. சிறைக்குச் செல்வதையோ, தடியடி படுவது, போலீஸ் துன்புறுத்தலுக்கு ஆளாவது என்பதெல்லாம் சாதாரண குடிமக்களுக்குக் கூட பங்கெடுப்பதில் வேகம் உண்டாகியது. இப்படி இந்தியாவையே புறட்டிப் போட்ட இந்த சுதந்திர வேள்வியில் மகாத்மா காந்தியின் ஆன்ம பலம் தான் மேலோங்கியிருந்தது. இந்தியாவில் இருந்த பல்வேறு அமைப்புகள் எல்லாம் இந்த “க்விட் இந்தியா” போரில் பங்கெடுக்காத போதிலும், காந்திஜியின் தலைமையில் இந்தப் போர் உச்சத்தை எட்டியது.

            இப்படி பல்வேறு அமைப்புகள், தலைவர்கள் இவர்களெல்லாம் இந்த ஆகஸ்ட் புரட்சியை புறக்கணித்த போதும், மனம் தளராமல் மகாத்மா காந்தி போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றதோடு, இதில் பங்கெடுக்காதவர்களை தனி மனிதர்களையும் சரி, அமைப்புகளையும் சரி எந்தவிதத்திலும் குறை சொல்லவே, குற்றம் சாட்டவோ இல்லை என்பதை கவனிக்க வேண்டும்.

            அதுதான் காந்திஜியின் தனித் தன்மை. வெற்றி பெற்றால் அது தன்னால் என்பதும், தோல்வி அடைந்தால் பிறரைக் குற்றம் சாட்டுவதுமான வழக்கம் காந்திஜியிடம் இல்லை. தான் ஒரு அழைப்பு விடுத்தால் அதை வெற்றிகரமாக ஆக்குவதில்தான் அவர் குறியாக இருந்தாரே தவிர, பிறரைத் தோல்விக்குக் குற்றம் சாட்டி தான் தப்பித்துக் கொள்ளும் வழக்கத்தை அவர் கையாண்டதே இல்லை. அதுதான் காந்திஜி. அவர் போன்ற தலைவர் கிடைத்தது இந்தியா செய்த புண்ணியம் என்றே சொல்லலாம். வாழ்க காந்திஜியின் புகழ்!

கட்டுரை ஆக்கம்:

தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், 28/13, எல்.ஐ.சி.காலனி 5ஆம் தெரு, மருத்துவக் கல்லூரி சாலை, தஞ்சாவூர் 613007. # 9486741885           

           

           

No comments: