பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, May 15, 2017

"நன்னெறி" Part II.


"நன்னெறி" 

இதன் முதல் ஐந்து பாடல்களையும் அதற்கானவிளக்கங்களையும்முன் பகுதியில் பார்த்தீர்கள். இந்த இரண்டாம் பகுதியில் ஆறு முதல் பத்து வரையிலான பாடல்களையும் அதற்கான விளக்கங்களையும் படிக்கலாம். இனி தொடர்ந்து ஒவ்வொரு பகுதியாக வெளியாகும்.

6 . தம்பதிகள் ஒற்றுமை

காதல் மனையாளும் காதலனும் மாறின்றித்
தீதில் ஓருகருமம் செய்பவே - ஓதுகலை 
எண்ணிரண்டும் ஒன்றுமதி என்முகத்தாய் நோக்கல்தான்
கண்ணிரண்டும் ஒன்றையே காண்.

பதினாறு கலைகளும் பொருந்திய நிலவுபோன்ற முகமுடைய பெண்ணே! நமக்குக் கண்கள் இரண்டு இருந்தாலும் ஒரு பொருளை பார்க்கும்போது இரு கண்களும் அந்தப் பொருளை ஒன்றுபோல காண்கிறதல்லவா அத்துணை ஒற்றுமை அவ்விரு கண்களுக்கும்.
அதுபோல காதல் மனையாளும், காதலனும் ஒருவருக்கொருவர் மாறுபட்ட மனத்தினராய் இல்லாமல் ஒரே நோக்கில் காரியங்களைச் செய்து வருவாரானால் நல்ல பலன் பெறுவர்.


7 . கல்விச் செருக்குக் கூடாது

கடலே அனையம்யாம் கல்வியால் என்னும்
அடலேறு அனைய செருக்கு ஆழ்த்தி - விடலே 
முனிக்கரசு கையான் முகந்து முழங்கும்
பனிக்கடலும் உண்ணப் படும்.

ஆழம் காணமுடியாத அகன்று விரிந்து பரந்து கிடக்கும் பெரிய சமுத்திரத்தைக் குறுமுனியாம் அகத்திய முனிவர் உள்ளங்கையில் எடுத்து ஆசமனம் செய்து அதனை உட்கொண்டு விட்டாரல்லவா. ஆகையால் ஒருவர் தன் கல்விச் செறுக்கால், தான் கல்வியில் சிறந்தவர், அனைத்தையும் அறிந்தவர் என்றெல்லாம் கர்வம் கொள்ளல் வேண்டாம். கர்வம் தலைக்கேறிவிட்டால் நிலைமை தலைகீழாக மாறிவிடவும் கூடும், எனவே தலைக்கனம் கூடாது என்கிறது இந்தப் பாடல். அது என்ன குறுமுனி அகத்தியர் கடலை ஆசமனம் செய்து குடித்துவிட்டார் என்கிற வரலாறு? பார்ப்போம்.

ஒருமுறை இந்திரனுக்கும் விருத்தாசுரன் எனும் அரக்கனுக்கும் யுத்தம் மூண்டது. இருவருக்கும் கடும் யுத்தம் நடந்தும் முடிவு கிட்டாததால் இந்திரன் தன் வஜ்ராயுதத்தைக் கையில் எடுத்தான். அதைக்கண்டு அஞ்சி அசுரன் ஓடிப்போய் கடலினுள் புகுந்து ஒளிந்து கொண்டான். கடலில் அசுரனைக் கண்டுபிடிக்க முடியாமல் இந்திரன் பிரமனிடம் கேட்க அவர் இந்திரனை அகத்திய முனிவரிடம் உதவி கேட்க அனுப்புகிறார். அப்போது அகத்தியர் கடல் சீரை கையளவு குறுக்கி, அதைத் தன் கையில் எடுத்து ஆசமனம் செய்து விழுங்கி விடுகிறார். ஒளிந்திருந்த அசுரன் மாட்டிக் கொண்டான் என்பது புராணம்.


8 . ஆறுவது சினம்

உள்ளம் கவர்ந்தெழுந்து ஓங்குசினம் காத்துக்
கொள்ளும் குணமே குணமென்க;  - வெள்ளம் 
தடுத்தல் அரிதோ?  தடங்கரைதான் பேர்த்து
விடுத்தல் அரிதோ விளம்பு.

சில நேரங்களில் மனிதன் அடக்க முடியாத கோபத்தை அடைகிறான். அப்போது பொங்கி எழுகின்ற சினத்தை இழுத்துப் பிடித்து, அந்தக் கோபம் வெடித்துச் சிதறி பிறரை வேதனைக்கு உள்ளாக்காமல் மனத்தை அடக்கி, கோபத்தைக் கட்டுக்குள் கொண்டு வருவதுதான் சிறந்த குணம். அது எப்படியென்றால் ஆற்றில் வெள்ளம் கட்டுக்கடங்காமல் பெருகி வருகிறது. அத்தகைய வெள்ளம் வரும் என்பதை எதிர்பார்த்து அதனைத் தடுத்து நீரைத் தேக்கவேண்டுமென்று வலிமையான அணையை எழுப்பி வெள்ளத்தைத் தடுப்பது சிரமமான காரியமா என்ன? அப்படி இல்லாமல் வரும் வெள்ளம் கரையை உடைத்துக் கொண்டு ஊருக்குள் போய் ஏராளமான சேதத்தை உண்டாக்கி விடுவது சரியா? தேர்ந்து இவற்றில் எது சரி என்பதை உணர் என்கிறது இந்தப் பாடல்.


                                      9 . துணையுடையார் வலிமையுடையார்

மெலியோர் வலிய விரவலரை அஞ்சார்
வலியோர் தமைத்தான் மருவின்; - பலியேல் 
கடவுள் அவிர்சடைமேல் கட்செவி யஞ்சாதே
படர்சிறையப் புள்ளரசைப் பார்த்து.

நாம் பலரோடும் நன்கு பழகுகிறோம். உயிருக்குயிராக நட்பு கொண்டாடுகிறோம். நமக்கு ஒரு தீமையென்றால் ஓடோடி வந்து உதவுகின்ற நட்பும் உண்டு அல்லவா. அப்படி நாம் நமக்கும் மேல் வலிமையுடையவராக இருப்பாராகில் பகைவர் எத்தகையவராக இருந்தாலும் அஞ்ச வேண்டியதில்லை. காரணம் நம்முடன் நட்புப் பாராட்டுபவர் நம் உதவிக்கு இருப்பார். வலிமை பொருந்திய எதிரியிடமும் நாம் அஞ்ச வேண்டியதில்லை.
இது எதைப் போலவென்றால், தன் பெருத்த சிறகை விரித்து வானில் பறந்து வரும் கருடனைப் பார்த்து நாகப்பாம்பு அஞ்சி குலை நடுங்கிப் போய் பதுங்கிவிடும். ஆனால் கயிலைமலை வாசனாம் சிவபெருமானின் தோளில் தவழ்ந்து விளையாடிக்கொண்டு அவர் சடாமுடிமேல் படமெடுத்து ஆடும் பாம்பு இந்த கருடனைக் கண்டா அஞ்சும்?. அஞ்சாது அல்லவா, அது போல.


10. தன்னலம் கருதலாகாது

தங்குறைதீர் வுள்ளார் தளர்ந்து பிறர்க்குறூஉம்
வெங்குறைதீர்க் கிற்பார் விழுமியோர்; - திங்கள் 
கறையிருளை நீக்கக் கருதாது உலகின்
நிறையிருளை நீக்குமேல் நின்று.


வானத்திலிருக்கும் சந்திரன் இரவில் நமக்கெல்லாம் ஒளி தந்து கொண்டிருக்கிறது. அந்த முழு நிலவை உற்று நோக்கினால், அதனுள் இருள் படிந்த கறை போன்று காணப்படுகிறதல்லவா? அந்த சொந்தக் கறையைத் தீர்க்க முயலாமல் சந்திரன் உலகிற்கு ஒளி வீசி இவ்வுலகத்தின் கறையை நீக்குவதைப் போல, பெரியோர்கள் தங்களுக்கு உள்ள குறைபாடுகள், துன்பங்கள் போன்றவற்றைத் தீர்த்துக் கொள்ள முயலுவதைக் காட்டிலும் துன்பப்படும் ஏனைய மக்களின் துயர்தனைத் தீர்க்கப் பாடுபடுவர் என்கிறது இந்தப் பாடல்.

No comments: