பாரதி பயிலகம் வலைப்பூ

Saturday, May 13, 2017

“நன்னெறி” Part I

                                                
"நன்னெறி"யில் 40 பாடல்கள். இந்தப் பதிவில் முதல் 5 பாடல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து அடுத்தடுத்தப் பாடல்கள் விளக்கத்துடன் வெளியாகும். படித்தபின் கருத்துக்களைப் பதிவு செய்ய வேண்டுகிறேன். நன்றி.

                     நீதி நூல்கள் வரிசையில்
                      “நன்னெறி”

நீதிநூல்கள் வரிசையில் “நன்னெறி” எனும் நூல் நமக்கு நன்மைகளைத் தரக்கூடிய வழிகளைச் சொல்வதால் அந்த பெயரைப் பெற்றிருக்கிறது. இதனை இயற்றியவர் துறைமங்கலம் சிவப்பிரகாச முனிவர். இவர் 1700 – 1742 காலகட்டத்தில் வாழ்ந்தவர். இது நாற்பது பாக்களைக் கொண்டது. விநாயகர் துதியோடு தொடங்குகிறது இந்த நன்னெறி எனும் பாடல் தொகுதி.

                          விநாயகர் வணக்கம்.

மின்னெறி சடாமுடி விநாயகன் அடிதொழ                                         நன்னெறி வெண்பா நாற்பதும் வருமே.

மின்னலின் ஒளிபோன்ற ஜோதியான சடாமுடி விநாயகனின் பாதங்களைத் தொழுதால் நல்ல நெறிமுறைகளைச் சொல்லும் நாற்பது வெண்பாக்களும் வருமே!

                                    நூல் 
                    1 . உபசாரம் கருதாமல் உதவுக

என்றும் முகமன் இயம்பா தவர்கண்ணும்
சென்று பொருள்கொடுப்போர் தீதற்றோர் - துன்றுசுவை 
பூவிற் பொலிகுழலாய் பூங்கை புகழவோ
நாவிற் குதவும் நயந்து?

தலைவாரிப் பூச்சூட்டி எழில் கொஞ்சும் குழலினாய்! சுவையான உணவினைக் கையால் எடுத்து நாவுக்கு அளிப்பது, அது தன்னைப் புகழவேண்டும் என்பதற்காகவா? இல்லையல்லவா. அதுபோலத்தான் தன்னை எப்போதும் முகஸ்துதி செய்யாமல் இருந்தாலும் அத்தகையவர்களின் துன்பங்களையும் நீக்குவதற்கு ஓடோடிப் போய் உதவி செய்வர் எவ்வித பலனையும் எதிர்பார்க்காத பெரியோர்கள்.


2 . வன்சொல்லும் இனிமையாகும்

மாசற்ற நெஞ்சுடையார் வன்சொலினிது ஏனையவர்
பேசுற்ற இன்சொல் பிறிதென்க - ஈசற்கு 
நல்லோன் எறிசிலையோ நன்னுதால்!  ஓண்கருப்பு
வில்லோன் மலரோ விருப்பு?

வேண்டியவர், வேண்டாதவர் என்ற விருப்பு வெறுப்பு நீங்கிய பெரியோர்கள் தவறினைக் கண்டால் யாராக இருந்தாலும் கடுஞ்சொல் சொல்லித் தவறைச் சுட்டிக் காட்டினால் அவர்கள் மீது வன்மம் கொள்ளலாகுமா? நம் தவறைச் சுட்டிக்காட்டித் திருத்திக் கொள்ளவேண்டுமென்கிற நல்லெண்ணத்தினால் அல்லவா அவர்கள் கடுஞ்சொற்களைச் சொல்கிறார்கள். அது இனிமை பயக்கக் கூடியவை அல்லவா? அப்படிப்பட்ட உயர்ந்தோர் அல்லாமல் ஏனையோர் சொல்லும் இனிய சொற்கள் கூட அப்படிப்பட்ட நன்மை கருதியவை அல்ல என்பதால் அவை துன்பம் பயக்கக் கூடிய சொற்களாக இருக்கும்.
இவ்வுண்மையை எடுத்துக் காட்ட இரு இலக்கியச் சான்றுகளைக் காணலாம். அது பெரிய புராணத்தில் வரும் சாக்கிய நாயனார் வரலாறு. சமண சமயம் சார்ந்த பல்லவ மன்னன் சிவலிங்கத்தை வழிபடுவதை விரும்பாததால், அந்த நாட்டில் இருந்த சாக்கிய நாயனார் தினமும் சிவலிங்கத்தின் மீது பூவாக ஏற்றுக்கொள்ள வேண்டுமென்ற வேண்டுகோளோடு கல்லை எடுத்துப் போட்டு வந்தார். சிவபெருமானும் அந்த கற்களைப் பூவாக ஏற்றுக் கொண்டு அவருக்கு வீடுபேறளித்தார். மற்றொரு நிகழ்ச்சி சிவபெருமானின் தவத்தைக் கலைக்க மன்மதன் கரும்பு வில்லில் பூவினால் ஆன அம்பை வைத்து செலுத்த சிவன் கோபம் கொண்டு அவனை எரித்ததாகப் புராணம் சொல்கிறது. இவ்விரண்டு வரலாறுகளும் மேற்சொன்ன நீதிகளை வலியுறுத்துவதா இருக்கிறதல்லவா.


                  3 . பெறுகின்ற வழியறிந்து ஒருபொருளை அடைக.

தங்கட்கு உதவிலர்கைத் தாமொன்று கொள்ளினவர் 
தங்கட்கு உரியவரால் தாங்கொள்க; - தங்கநெடுங்
குன்றினால் செய்தனைய கொங்காய் ஆவின்பால்
கன்றினால் கொள்ப கறந்து.

தங்கக் குன்றுபோல் தனங்களையுடைய பெண்ணே! பசுவிடம் பால் கறக்க வேண்டுமென்றால் அதன் கன்றினை அவிழ்த்துவிட்டு அது போய் தாய்ப்பசுவின் மடியில் வாய் வைத்து ஊட்டுகின்றபோது அதன் மடி சுரந்து ஏராளமான பாலைத் தருகிறது. நாம் அதனைக் கறந்து கொள்கிறோம் அல்லவா?

அதுபோல நமக்கு உதவுகின்ற மனப்பாங்கு இல்லாத ஒருவரிடம் ஏதேனும் தேவைப்படுகிறதென்றால் அவருடைய அன்புக்குப் பாத்திரமான ஒருவரின் உதவியோடு அவரிடம் நாம் விரும்பும் உதவியைப் பெற்றுக் கொள்ளலாம்.


4 . செல்வம் பயன்படுத்துவார்க்கே உரியதாம்

பிறர்க்குதவி செய்யார் பெருஞ்செல்வம் வேறு 
பிறர்க்குதவி ஆக்குபவர் பேறாம்; - பிறர்க்குதவி
செய்யாக் கருங்கடல்நீர் சென்று புயல்முகந்து
பெய்யாக் கொடுக்கும் பிறர்க்கு.

கடலில் இருக்கும் ஏராளமான நீர் உப்புத்தன்மை கொண்டது. அது மனிதனின் தேவைக்குப் பயன்படாது. ஆனால் காற்றும் வெயிலும் அந்த உப்பு நீரை மேகமாக்கி கரைக்குக் கொணர்ந்து மழையாகப் பெய்ய வைக்கும்போது அது மக்களுக்கெல்லாம் பயன்படுகிறதல்லவா?

அதைப் போல ஈயாக் கஞ்சனின் செல்வம் யாருக்கும் பயன்படாது. ஆனால் பயன் அறிந்த நல்லார் தங்கள் திறமையால் அந்த பூதம் காத்த செல்வத்தை மக்களுக்குப் பயன்படும் வகையில் செலவு செய்ய வைக்கலாம். கஞ்சனையும் தானதர்மம் செய்ய வைக்கும் திறனுள்ளவர்கள் மேலோர்.


5 . நட்பிற் பிரியலாகாது

நீக்கம் அறுமிருவர் நீங்கிப் புணர்ந்தாலும்
நோக்கின் அவர்பெருமை நொய்தாகும் - பூக்குழலாய் 
நெல்லின் உமிசிறிது நீங்கிப் பழமைபோல்
புல்லினும் திண்மைநிலை போம்.

கூந்தலில் மலர்சூடிய பெண்ணே! நெல்லைக் குத்தி உமியை நீக்கிய பின்னர், மீண்டும் அந்த உமியை முன்போல சேர்த்து வைத்தாலும், அந்த நெல்லை விதைத்து முளைக்க வைக்க முடியுமா? இயலாது அல்லவா?


நெருக்கமாய் இருந்து பழகிய நண்பர்கள் இருவர் நட்பு நீங்கிப் பிரிந்து போய், பின்னர் மீண்டும் நட்பாக இணைந்தாலும் அந்த நட்பின் பெருமை முன்போல சிறப்புடையதாய் இருக்குமா? இருக்காது என்பதை உணர்.

No comments: