உ
பாபநாசம் தாலுகா, அரையபுரம் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும்
அருள்மிகு ஸ்ரீவீரமாசக்தி பத்ரகாளியம்மன் துதி
==========
ஆக்கம்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், பாரதி இயக்கம், திருவையாறு.
காப்பு
புன்னைநல்லூர் மாரியம்மா, சமயபுரத் தாயே!
சென்னையின் வேற்காட்டில் வாழுகின்ற மாரி!
கன்யாகுமரி வாழ் கன்னித்தாய் குமரி
பன்னாரி அம்மா, பகவதியம்மன் தாயே,
ஊர்மக்கள் போற்றுகின்ற உக்ரகாளி அம்மா
உறையூரை ஆளுகின்ற வெக்காளி அம்மா
கருவூரில் குடிகொண்ட மாரியம்மா தாயே
அரையபுரம் வாழ்கின்ற அருள்சக்தி காளி!
நின்னைச் சரணடைந்த அடியார்கள் எல்லாம்
பணிந்து நிற்கின்றார், அருள் செய்வாயம்மா!
பாயிரம்
அண்டமெலாம் படைத்தவளை அன்பருள்ளம் வாழ்பவளை
எண்ணமெலாம் உணர்ந்தவளை இரங்கியருள் புரிபவளை
கண்ணாரக் கண்டு உளமார வணங்கி மனதாரப் புகழ்ந்து
தொண்டடிமை செய்து வணங்குவோம் பணிந்து.
நூல்
நீயே சரணமென கூவி அழைத்திடுவோம்
தாயே எமக்குறுதி தந்து காத்திடுவாய்
வாயால் தாய்புகழை அனவரதம் பேசிடுவோம்
ஓயாமல் உனதருளை அள்ளித் தந்திடுவாய். 1.
காளீ! வீரமாசக்தி எங்கள் பத்ரகாளியம்மா
நாளும் நின்மலர்த்தாள் நாடிப் பணிகின்றோம்
தாளில் வணங்கி அபயம் வேண்டுகின்றோம்
ஒளிகண்டு மலர்கின்ற மலர்போல அருள்புரிவாய். 2.
எண்ணுகின்ற காரியங்கள் இனிதே முடித்திடுவாய்
பண்ணுகின்ற பணிகளிலே வெற்றியைத் தந்திடுவாய்
துணையாக அம்மையே எப்போதும் இருந்திடுவாய்
நண்ணுகின்ற செயலனைத்தும் நின்னுடை செயலன்றோ? 3.
எண்ணிலா நன்மைகளைக் கணக்கின்றி தந்துவிடு
விண்ணவர் போலநாங்கள் வாழ்ந்திட வரம்தந்து
மண்ணிலே ஈடெவரும் இல்லையெனும் நிலையடைந்து
வண்மையும் வளமையும் வழங்கி அருள்செய்வாய். 4.
தானமும் தவமும் கல்வியும் தான்தருவாய்
வானத்துத் தாரகைபோல் வாழ்க்கையைத் தந்திடுவாய்
மானத்தொடு வீரமும் மாண்பும் மிகத்தந்து
ஞானக் குழந்தைகளாய் வாழும்வகை செய்திடுவாய். 5.
பூதங்கள் ஐந்தும் ஒன்றாய் சேர்ந்ததுபோல்
போதமாகி நின்றாய், பொறிகளைநீ கடந்தாய்
தீதனைத்தும் நீக்கி தெய்வஅருள் தருவாய்
வேதங்கள் உன்னுருவில் என்றும் நிலைத்திருக்கும். 6.
காலத்தைக் கடந்தவள் நீ, கடிதினில் வந்திடுவாய்
மாலவனின் தங்கையே எம் மனதினுள் புகுந்திடுவாய்
எல்லாத் திசைகளிலும் அண்டங்கள் அனைத்தினிலும்
செல்லும் திக்கனைத்தும் நின்புகழே நிலைத்திருக்கும். 7.
நீயே சரணமென நித்தநித்தம் கூவிடுவோம்
தாயே எங்களுக்கு நெஞ்சினில் உரம் தருவாய்
ஓயோம் ஒருபொழுதும் நின்புகழைப் பேசாமல்
பேய்மனம் கொண்டோர்க்கும் நற்கதியைத் தந்திடுவாய். 8.
சித்தத்தில் துணிவுகொண்டு சிந்தையில் அன்புகொண்டு
எத்திசையும் புகழ்மணக்க சீர்கொண்டு செல்வம்சேர
இத்தரையில் வாழ்ந்திருக்கும் இனிதான நாட்களெல்லாம்
புத்தியில் நினைவைத்து புகழோடு வாழ்ந்திருப்போம் . 9.
மையுற்ற கண்களும் பொன்னணி கலன்களும்
செய்கின்ற தீமைகளை உலகுக்குக் காட்டி
பொய்யுறு வாழ்க்கையை அண்டாமல் ஓட்டி
ஐயுறவின்றியே வாழ்வளிப்பாய் தாயே! 10.
கோதுடையார் உறவில் மயங்கியே களித்து
காதலும் இன்பமும் கணந்தோறும் வளர்த்து
எதுவும் இவ்வுலகில் இயல்பென நினைத்து
பூதலத்து வாழ்வின் இன்பத்தில் திளைத்து 11.
இன்பமும் துன்பமும் உணர்விடை வைத்து
முன்னும் பின்னும் துயர்களைக் கொடுத்து
துன்பம் நீங்கிட நினதடி பணிந்து
அன்பில் ஒன்றி நின்னையே சார்ந்தோம். 12.
தீது நேரிடினும் அச்சம் எமக்கில்லை
எதுவும் நடப்பதிங்கு நின்றன் செயலாலன்றோ
ஆதரித்து இங்கு அருள்புரிய வேண்டுகின்றோம்
போத நல்லருளை எப்போதும் தருவாயே! 13.
வேத மந்திரங்கள் எண்திசையும் ஒலிக்க
மாதவன் கண்ணனின் குழலிசையில் மிதக்க
சாதகப் பறவைகள் விண்ணில் பறக்க
ஓதுவோம் நின்புகழ் நாவென்றும் இனிக்க. 14.
காவி அணிந்திட்ட துறவுநிலை வேண்டா
பாவித்துத் தலைமேல் கற்றை முடிவேண்டா
ஆவிக்கு உற்றதோர் கருணையொன்றே போதும்
பாவிகள் எம்மைக் கரையில் சேர்த்திடு. 15.
தவமென்று பிரிதொரு சாதனையும் வேண்டா
சிவத்தை மனத்திலேற்றி சிந்தையை நேராக்கி
தவத்துக்கு அன்னையே நின்னையே துணைகொண்டு
பவமே துலங்கிட பேரருள் தருவாய். 16.
சக்தியென்ற நின்பெயரை நித்தநித்தம் ஓதுவதால்
சக்திதந்து எம்மனத்தில் உறுதிபட நின்றிருப்பாய்
சக்தியின் சந்நிதியில் மனமுருக வேண்டிநின்றால்
சக்திநீ பராசக்தி என்றும் துணையிருப்பாய். 17.
நலம்புரியும் சக்தீ, அரையபுரம் காளீ
வலம்வந்தோம் நின்னை சரணடைந்தோம் நின்னை
விலக்கிடுவாய் மக்கள் துன்பங்கள் எல்லாம்
புலப்படுவாய் கண்ணில் பாமரராம் எமக்கு. 18.
உயிரோடு உணர்வையும் ஓங்கி வளர்த்திடுவாய்
பயிர்களை வளர்ப்பதுபோல் பத்ரகாளீ நீயும்
வயிரம்போல் உடலையும், வண்ணமுறு மனத்தையும்
பாவித்து நலம்புரிவாய் அன்னையே தினமும். 19.
உலகினைக் காத்திட ஆதவனாய்த் திரிவாய்
மலையிலும் மண்ணிலும் மாரியாய் உதிர்வாய்
நலங்கள் அனைத்தையும் நல்கிடும் காளீ
குலத்தொடு மாண்பையும் கொடுத்திடு தாயே. 20.
அன்புறு சோதியாய் அருள்தரும் காளியாய்
இன்பமே என்றும் இருந்திடச் செய்வாய்
பன்பலிநீக்கி பயனுறு செயல்கள் ஊக்கி
மின்படு சக்தியாய்நீ மாநிலம்தனைக் காப்பாய். 21.
நயம்படு செயல்களை செய்துனை வணங்கி
தயங்கிடா மனமும் திடங்கொண்ட பணிவும்
தயவுடன் நின்னை பணிந்தெழும் எம்மை
வியப்புறு வண்ணம் காத்திடல் நின்கடன். 22.
நினைக்கும் பொழுதினில் நின்னுரு தோன்றவும்
ஊனினை உருக்கிநின் மாமலரடி பணியவும்
தானெனும் அகந்தையை அகழ்ந்தே எடுக்கவும்
தேனென ஒழுகும்நின் திருவருள் அருந்துவோம். 23.
விட்டில்பூச்சிகள் விளக்கிடை வீழ்தல் போல்
மட்டில் கேடுகள் விளைக்கும் செயல்களை
கூட்டியெம் வாழ்க்கையை துயர் கடலாக்கி
வாட்டும் நிலைமையை மாற்றிட விழைகிறோம். 24.
வல்லவர் வெல்லவும் வண்மைகள் பெருகவும்
நல்லவராக நாநிலத்து மக்கள் வாழவும்
வல்லமை மிக்க வீரமாசக்தி பத்ரகாளீ
நல்லருள் புரிவாய், நலங்களை அருள்வாய். 25.
நூற்பயன்
நலம் தருவாள், குணம் தருவாள், நீண்ட வாழ்வருள்வாள்!
பலம் தருவாள், கல்வியும் செல்வமும் கணக்கின்றி தான்தருவாள்!
நல்லோர் துணை தருவாள், கருணை மழை பொழிவாள்!
வல்லமைமிக்க அரையபுரம் காளி வீரமாசக்தியை வணங்குவோர்க்கே!
உ
பாபநாசம் தாலுகா அரையபுரம் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும்
அருள்மிகு ஸ்ரீ வீரமாசக்தி பத்ரகாளி அம்மன் அஷ்டோத்ரம்
---
1. ஓம் ஸ்ரீ வீரமாசக்தி பத்ரகாளி அம்மனே போற்றி
2. " மாசற்ற கருணையுடன் காத்திடும் தேவி போற்றி
3. " நலங்களை அள்ளித்தரும் தாயினும் இனியாய் போற்றி
4. " தூயவர் துதிக்கின்ற சக்தி அன்னையே போற்றி
5. " தத்துவம் விளக்கிடும் காவல் தெய்வமே போற்றி
6. " உலகம் வணங்கிடும் பரப்பிரம்ம சொரூபமே போற்றி
7. " பாவங்களை நீக்கிடும் பரமேச்வரியே போற்றி
8. " புண்ணியம் நல்கிடும் உலக நாயகியே போற்றி
9. " காத்திடும் கடவுளாய் விளங்குவாய் போற்றி
10. " அருவமே உருவமாய்க் கொண்டவா போற்றி
11. " துக்க மோக நிவர்த்திப்பாள் சீரடி போற்றி
12. " வீடுபேறு நல்கிடும் வீர சொரூபியே போற்றி
13. " பிரம்மத்தை உணர்த்திடும் பரம ரூபிணீ போற்றி
14. " பிரம்ம வித்தை பயிற்றிடும் வித்தகி போற்றி
15. " ஏகாந்த நிலை தந்து ஆனந்தம் அருள்வாய் போற்றி
16. " பிறவிப் பிணிக்கு நல்ல மருந்தானாய் போற்றி
17. " அச்சத்தை அழிக்கும் வீரமாகாளியே போற்றி
18. " வேதத்தின் தாயாய் விளங்கிடும் தேவே போற்றி
19. " எல்லையொன்றில்லா விசுவரூபியே போற்றி
20. " தத்துவ ஞானப் பெருங்கடலே போற்றி
21. " கோகுலக் கண்ணனின் சோதரி போற்றி
22. " தூய்மையின் வடிவாய்த் துலங்குவாய் போற்றி
23. " சம்சாரப் பெருங்கடலைத் தாண்டவைப்பாய் போற்றி
24. " சாத்திரங்கள் அனைத்தையும் படைத்தாய் போற்றி
25. " தாயாய் தோன்றி அருள் புரிவாய் போற்றி
26. " புண்ணிய தீர்த்தங்கள் ஆனாய் போற்றி
27. " நீயே அதுவானாய்" எனும் மந்திரமானாய் போற்றி
28. " சாந்தியை அருளும் சந்திரோதயமே போற்றி
29. " ஆனந்த நிலையை அருளிச் செய்வாய் போற்றி
30. " ஞானங்கள் அனைத்தையும் பொழிந்திடுவாய் போற்றி
31. " உள்ளத்து அழுக்கையெல்லாம் நீக்கிடுவாய் போற்றி
32. " உலகுக்குத் தர்மத்தை எடுத்துரைத்தாய் போற்றி
33. " உலகத்தை உய்விக்கும் உண்மையே போற்றி
34. " உயிர்கள அடியில் பணிந்திடும் தேவே போற்றி
35. " உலகத்தார் பூசிக்கும் பரதேவதையே போற்றி
36. " எழிலும் ஏற்றமும் உடையவளே போற்றி
37. " மாந்தர் பணிந்திடும் மகாசக்தி போற்றி
38. " மங்களம் நல்கிடும் மத்தகஜமே போற்றி
39. " சித்தாந்தக் கூட்டம் பணியும் ஜோதியே போற்றி
40. " சஞ்சலங்கள் நீக்கிடும் ஜகஜ்ஜனனீ போற்றி
41. " விசுவரூபியாய் விளங்கிடும் தாயே போற்றி
42. " அகிலம் வணங்கிடும் அன்னையே போற்றி
43. " முக்குணம் கடந்த முக்கண்ணியே போற்றி
44. " சஞ்சலம் தீர்த்திடும் தயாபரி போற்றி
45. " குணங்கள் உயர்ந்திட வரமருள்வாய் போற்றி
46. " நல்வழி காட்டிடும் குருவானாய் போற்றி
47. " பந்த பாசங்கள் நீக்கிடும் பவமே போற்றி
48. " மகிழ்ச்சியைப் பொழிந்திடும் லோகமாதா போற்றி
49. " சகல சாஸ்திர ஞான மூலமே போற்றி
50. " அட்சர ஆற்றல் மிக்காய் போற்றி
51. " சொல்லில் அடங்கா பெருமையே போற்றி
52. " சூட்சுமப் பொருளின் உருவமே போற்றி
53. " குறைவே இல்லாத சாச்வத பொருளே போற்றி
54. " நித்திய நலங்களைத் தருவாய் போற்றி
55. " சொல்லினில் அடங்கா சொரூபியே போற்றி
56. " ஞானியர் மதியில் ஒளிர்வாய் போற்றி
57. " சொல்லின் பொருளாய் அமைந்தாய் போற்றி
58. " அமைதியும் அடக்கமும் அளிப்பாய் போற்றி
59. " புதிய சொற்களில் பொருளானாய் போற்றி
60. " புவனத்தின் தாயாய் விளங்கினாய் போற்றி
61. " புவனம் போற்றிடும் புனிதமே போற்றி
62. " அழிவற்ற பொருளாய் விளங்குவாய் போற்றி
63. " விருப்பு வெறுப்பற்ற நித்திலமே போற்றி
64. " அறத்தை நிலைபெறச் செய்தாய் போற்றி
65. " தெய்வ குணங்களில் உயர்ந்தாய் போற்றி
66. " புலன்களை அடக்கிய சக்தியே போற்றி
67. " யோகங்கள் அனைத்தையும் அருள்வாய் போற்றி
68. " பாதை மாறாமல் காத்திடுவாய் போற்றி
69. " நலிந்தவரைப் பேணும் நம்பிக்கையே போற்றி
70. " சமத்துவம் நிலைத்திட அருள்வாய் போற்றி
71. " பேதங்கள் நீக்கி எமைக் காத்தாய் போற்றி
72. " வீழ்ந்தோர் மேம்பட மனம் வைத்தாய் போற்றி
73. " மாயையை மாயையால் மறைத்தாய் போற்றி
74. " சத்தியத்தின் உருவமாய் நின்றாய் போற்றி
75. " ஆத்ம பேதத்தை அறிய வைத்தாய் போற்றி
76. " ஞானமே உயர்வென்று உணரவைத்தாய் போற்றி
77. " தியாகமே உருவான சக்தியே போற்றி
78. " சேதமில்லா சக்தியாய் விளங்குவாய் போற்றி
79. " வீடுபேறு அளிக்கும் சக்தியே போற்றி
80. " பயன் நோக்காப் பணியைக் கற்பித்தாய் போற்றி
81. " சம்சாரக் கடலினுள் படகானாய் போற்றி
82. " பந்தங்களை நீக்கிய பத்ரகாளி போற்றி
83. " அண்டங்கள் கடந்த அருளுருவே போற்றி
84. " பிறவிப் பெருங்கடல் நீந்தவைத்தாய் போற்றி
85. " ஆன்மீக வெளியில் ஒளியானாய் போற்றி
86. " சேதமில்லா அண்ட ரூபிணியே போற்றி
87. " களங்க மொன்றுமிலா முழுநிலவே போற்றி
88. " சாந்தமும் தெளிவும் அருள்வாய் போற்றி
89. " தேஜசும் தீரமும் தந்திடுவாய் போற்றி
90. " சுபமெனும் சொல்லின் போருளே போற்றி
91. " தமோ குணம் நீக்கி ஒளி தருவாய் போற்றி
92. " உபநிடத்தின் சூட்சுமத்தை உணர்த்துவாய் போற்றி
93. " ஆன்ம யோகத்தில் சுடர்விடுவாள் போற்றி
94. " ஞானாமிர்தத்தை மழையாய் பொழிவாள் போற்றி
95. " காளிதாசனுக்குக் கவித்துவமாய் அமைந்தாய் போற்றி
96. " காளமேகப் புலவனுக்குக் கவிதந்தாய் போற்றி
97. " பக்தியெனும் பசுவிடம் அறப்பால் கறந்தாய் போற்றி
98. " உடலெங்கும் லட்சுமியாய் விளங்கிடும் பசுவே போற்றி
99. " விருப்பத்தை நிறைவேற்றும் காமதேனுவே போற்றி
100. " சுகந்த மலரணிந்த மாதேவி போற்றி போற்றி
101. " அறியாமை இருளை அகற்றினாய் போற்றி
102. " முத்தொழிலை முழுத்தொழிலாய் செய்வாய் போற்றி
103. " வழிதவறியோர்க்கு வழிகாட்டும் நெறியானாய் போற்றி
104. " தொல்லையைத் துரத்திடும் துர்கையே போற்றி
105. " பூரண பிரம்மத்தை உணர்த்தினாய் போற்றி
106. " களைத்தவர் நம்பும் காளியே போற்றி
107. " முக்காலம் உணர்ந்த கடவுளே போற்றி
108. " ஜகன்மாதா அரையபுரம் காளி, உலகமாதா போற்றி போற்றி
அரையபுரம் வீரமாசக்தி பத்ரகாளி அஷ்டோத்ரம் நிறைவு.
ஆக்கம்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம்
28/13, எல்.ஐ.சி.காலனி 5ஆம் தெரு, மருத்துவக் கல்லூரி சாலை,
தஞ்சாவூர்.7 # 9486741885. e.mail: privarsh@gmail.com
No comments:
Post a Comment