பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, October 21, 2014

மதுரை நாயக்கர்

               முத்துவீரப்ப நாயக்கரின் வீரம்.

தமிழ்நாட்டில் சேர சோழ பாண்டியர்களின் ஆட்சி எல்லாம் முடிந்து விஜயநகர சாம்ராஜ்யம் விரிவடைந்த சமயம். தமிழ் பூமி எங்கணும் வேற்று மொழி பேசுவோர் அரசாளத் தொடங்கிய காலம். விஜயநகர மன்னர்களின் உறவினர்கள் தமிழ் நாட்டின் பல பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டு அங்கெல்லாம் அவர்கள் ஆட்சியை நிறுவினார்கள். செஞ்சி, தஞ்சாவூர், மதுரை ஆகிய இடங்களில் நாயக்க மன்னர்கள் கோலோச்சிய காலம் மொழிக்கு வேண்டுமானால் பின்னடைவு நேர்ந்திருக்கலாம், ஆலயங்கள் வளரவும், பக்தியும் கலைகளும் வளரவும் இந்த மன்னர்கள் பேருதவி புரிந்திருக்கிறார்கள். தென்னகத்தே ஒரு மாபெரும் இந்து சாம்ராஜ்யத்தைத் தோற்றுவித்தவர்கள் விஜயநகர மன்னர்கள் என்பதை அனைவரும் அறிவர். இதெல்லாம் 16ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற வைபவங்கள்.

மதுரையை ஆண்ட விஸ்வநாத நாயக்கர் உள்ளிட்ட மன்னர்களுக்கு ஒரு பேராசை உண்டானது. தங்கள் எஜமானர்களான விஜயநகர சாம்ராஜ்யத்தின் ஆளுகையிலிருந்து விடுபட்டுத் தாங்களே சுயேச்சையான யாருக்கும் அடங்கியிராத மன்னர்களாக இருக்க இவர்கள் விருப்பம் கொண்டனர். இவர்களுடைய இந்த உணர்வைப் புரிந்துகொண்ட விஜயநகர மன்னர்கள் தஞ்சாவூர் நாயக்க மன்னர்களை மதுரை நாயக்க மன்னர்களுக்குப் போட்டியாகத் தங்கள் சார்பில் துணையிருக்கும்படி பார்த்துக் கொண்டனர். தஞ்சையை ஆண்ட நால்வர் சேவப்ப நாயக்கர், அச்சுதப்ப நாயக்கர், ரகுநாத நாயக்கர், விஜயராகவ நாயக்கர் ஆகிய மன்னர்கள் தஞ்சையை எல்லா துறைகளிலும் மேம்படுத்தினர்.

மதுரையின் முதல் நாயக்க மன்னரான விஸ்வநாத நாயக்கர் விஜயநகர சாம்ராஜ்ய சக்கரவர்த்தி கிருஷ்ணதேவராயர் காலத்திலேயே மதுரையில் ஆட்சியைத் தொடங்கிவிட்டார். இவர் காலத்தில் அவரது ராஜ்யம் எழுபத்திரெண்டு பாளையங்களாகப் பிரிக்கப்பட்டு அவர்களிடம் வரிவசூல் செய்யும் பணியையும் தொடங்கிவிட்டார். இந்த பாளையக்காரர்கள் வசூலிக்கும் வரியில் மூன்றில் ஒரு பகுதியைத் தங்களுக்கும், ஒரு பகுதியை தங்கள் படைவீரர்களுக்கும், இன்னொரு பகுதியை மதுரை நாயக்கருக்கும் கொடுத்து வந்தனர். இப்படித்தான் தெற்கே பாளையக்காரர்கள் உருவானார்கள்.

மதுரை நாயக்க மன்னர்களின் ஆட்சியிலும் இவைகள் வளர்ந்தன என்றாலும், அடிக்கடி போரிலும், சதியிலும் அதிகமாகப் பாதிக்கப்பட்டார்கள். சொக்கநாத நாயக்கர் என்பவர் தன் தம்பி அழகிரி நாயக்கருக்குப் பெண் தரவில்லை என்று தஞ்சாவூரை ஆண்டுவந்த எண்பது வயதைக் கடந்த விஜயராகவ நாயக்கர் மீது போர்தொடுத்து அவர் தலையைப் போர்க்களத்தில் வெட்டி சாய்த்தனர். அதனைத் தொடர்ந்து விஜயராகவர் முன்னதாகவே ஏற்பாடு செய்திருந்தபடி அவர் போர்க்களத்தில் வீழ்ந்தவுடனேயே சொக்கநாத நாயக்கர் தன் தம்பிக்குப் பெண் கேட்டு அனுப்பினாரே அந்தப் பெண் உட்பட இருவர் தவிர மீதமுள்ள அத்தனை பெண்களையும் அந்தப்புரத்தினுள் வைத்து வெடிமருந்து வைத்துத் தகர்த்து அத்தனை பேரையும் எதிரிகள் கையில் மாட்டிவிடாதவாறு செய்து கொன்றுவிட்டனர். 

தஞ்சை விஜயராகவர் அழகிரி நாயக்கருக்குப் பெண்கொடுக்க மறுத்ததற்கும் ஒரு காரணம் இருந்தது. இதற்கு முன்பு மன்னர் திருமலைக்கு தஞ்சை நாயக்கர் வம்சத்துப் பெண்ணைத் திருமணம் செய்து கொடுத்திருந்தனர். அந்தப் பெண் மதுரையில் கொலை செய்யப்பட்டு விட்டாள். இந்த துக்க சம்பவத்தை மனதில் கொண்டுதான் விஜயராகவர் தங்கள் பெண்ணை மதுரையில் திருமணம் செய்து கொடுக்க மறுத்து விட்டார்.

தஞ்சை வடக்கு வீதி இராஜகோபாலசாமி கோயில் வாயிலில் நடந்த யுத்தத்தில் விஜயராகவ நாயக்கர் வெட்டி கொலை செய்யப்பட்டதை அடுத்து சொக்கநாத நாயக்கரின் தம்பி அழகிரி நாயக்கர் தஞ்சையை ஆளத் தொடங்கினார். அரண்மனைக்கு வெடிவைத்துத் தகர்த்தபோது கைக்குழந்தையாக இருந்த விஜயராகவ நாயக்கரின் மகன் ஒருவனை ஒரு வேலைக்காரி எடுத்துச் சென்று நாகைப்பட்டினத்தில் ஒரு செட்டியாரிடம் கொடுத்து வளர்த்து வந்தாள். தெலுங்கு பேசும் அமைச்சர் ராயசம் வெங்கண்ணா எனும் ஒருவர் அந்த பையன் சற்று வளர்ந்ததும் அவனையும் அவனுடன் நூற்றுக்கும் மேம்பட்ட குதிரைப் படைவீரர்களையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு பிஜப்பூர் சென்று அங்கு சுல்தான் அலிஅடில்ஷாவிடம் நடந்தவைகளைச் சொல்லி தஞ்சாவூர் இந்த சிறுவனுக்குத்தான் உரிமை, மதுரை அழகிரி நாயக்கனை அங்கிருந்து விரட்டிவிட்டு இவனை ஆட்சியில் அமரவைக்க உதவி கேட்டார். சுல்தான் சம்மதித்து அப்போது பெங்களூர் பகுதியில் இருந்த ஷாஜியின் மகனான ஏகோஜி எனும் மராட்டிய வீரரை தஞ்சைக்குச் சென்று அங்கு அரசை மீட்டு விஜயராகவ நாயக்கரின் மகனுக்கு ஆட்சியை வாங்கித் தரும்படி அனுப்பி வைத்தார். அவரும் வந்தார், வென்றார், அதுமுதல் தஞ்சை மராத்தியர் வசம் போயிற்று.

மதுரையில் இருந்த நாயக்கர்கள் நெடுங்காலம் அங்கு ஆட்சி புரிந்தார்கள். 1529இல் விசுவநாத நாயக்கர் காலத்தில் தொடங்கிய மதுரை நாயக்கர் ஆட்சி, தொடர்ந்து பல தலைமுறைகளைக் கண்டு இறுதியாக மீனாட்சியின் தற்கொலை நடந்த 1736இல் முடிவுக்கு வந்தது. திருச்சியில் இருந்த ராணி மீனாட்சியைப் பற்றி சந்தா சாஹேப் செய்த சதியால் மக்களிடையே தவறான எண்ணம் பரப்பப்பட்டது. அவமானம் தாங்காத ராணி மீனாட்சி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள்.

தஞ்சை விஜயராகவ நாயக்கர் மீது தன் தம்பி அழகிரிக்குப் பெண்கேட்டு வீண்சண்டை செய்து விஜயராகவரை யுத்த களத்தில் கொன்ற சொக்கநாதர் வாழ்க்கை அதன் பின் அமைதியாக இல்லை. தம்பி அழகிரி நாயக்கர் தஞ்சையிலிருந்து மராத்திய வீரர் ஏகோஜியால் விரட்டியடிக்கப்பட்டார். இவருடைய செயல்கள் இவர் புத்தி சுவாதீனமில்லாதவராகக் காட்டத் தொடங்கின. திருமலை நாயக்கர் மகாலை இடித்துத் திருச்சிக்குக் கொண்டு செல்ல வேண்டுமென்று இவர் விரும்பினார். மக்கள் அதிச்சி அடைந்தனர். இவரை பைத்தியக்காரன் என்று முடிவு செய்து இவரை ஆட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டு தம்பி முத்துலிங்க நாயக்கரை அரசராக்கினர்.

பதவி இழந்த சொக்கநாதர் சும்மா யிருப்பாரா. பதவி சுகம் கண்டவர்கள் எந்த வகையிலாவது மீண்டும் பதவியை எட்டிப் பறித்துவிட வேண்டுமென்று துடிப்பது இயல்புதான் அல்லவா. அந்த வகையில் சொந்த தம்பிக்கே துரோகம் செய்து பதவியைப் பிடித்தார். அப்படி அவருக்கு துரோகத்தில் பங்குகொண்டு உதவியன் ருஸ்தம்கான் எனும் படைத் தலைவன். பதவியிறக்கம் ஆன அரசனுக்கு மீண்டும் பதவியை வாங்கிக் கொடுத்த பிறகு ருஸ்தம்கான் சும்மா இருப்பானா? தான் பிடித்து வைத்த பிள்ளையார் அல்லவா இந்த சொக்கநாதர், ஆகவே அவரை தன் விருப்பப்படி ஆட்டிவைக்கத் தொடங்கினான் ருஸ்தம்கான். இப்படி ஆட்சியைக் குறுக்கு வழியில் பறித்துக் கொண்டவர்கள் செங்கோல் ஆட்சியா செய்வார்கள். ருஸ்தம்கானின் ஆட்சி கொடுங்கோல் ஆட்சியாக மாறி மதுரை மக்கள் தொல்லைகளுக்கு ஆளானார்கள். இவனது இந்தப் போக்கை விரும்பாதவர்கள் இவன் உயிருக்கே உலை வைத்துவிட்டார்கள். ஒருவழியாக ருஸ்தம்கான் இறந்தபின் சொக்கநாதர் இரண்டே ஆண்டுகள் ஆட்சி செய்துவிட்டு 1682இல் உயிர் நீத்தார்.

சொக்கநாதருடைய மறைவை அடுத்து அவரது மகன் கிருஷ்ண முத்து வீரப்ப நாயக்கர் ஆட்சிக்கு வந்தார். இவரை மூன்றாம் முத்து வீரப்ப நாயக்கர் என்பார்கள். இதற்கு முன்பாக இரண்டு பேர் இதே பெயரில் ஆட்சி புரிந்திருக்கிறார்கள். இந்த முத்து வீரப்ப நாயக்கர் தன் தந்தையார் காலத்தில் இழந்த சில பகுதிகளை மீட்டு மதுரை ராஜ்யத்தைச் சிறிது விஸ்தரித்துக் கொண்டார். இவர் எல்லா சமயங்களுக்கும் ஓரளவு உதவிகளைச் செய்து வந்திருக்கிறார் எனினும் பிற மதத்தாருக்கு எந்தவித தொல்லையும் கொடுத்ததில்லை.

இவர் காலமானபோது இவருடைய மனைவி முத்தம்மாள் அந்தக் கால அரச வம்சத்தாரின் வழக்கப்படி உடன்கட்டை ஏறவிரும்பினார். ஆனால் உடனிருந்தவர்கள் அவள் கர்ப்பமாக இருந்ததால் அவள் உடன்கட்டை ஏறுவதற்குச் சம்மதிக்கவில்லை. ரணி மங்கம்மாளும், அவள் மகள் ராணி மீனாட்சியும் பின்னர் பதவிக்கு வந்தார்கள் எனினும் முத்து வீரப்ப நாயக்கர் காலத்தில் நந்த ஒரு நிகழ்ச்சியை இப்போது நினைவு கூர்வது பொறுத்தமாக இருக்கும்.

மதுரையில் முத்து வீரப்ப நாயக்கர் ஆட்சி புரிந்த சமயம் டில்லியில் அவுரங்கசீப் பெரும் புகழோடும், வெற்றிகளைக் குவித்தும், எதிரிகளே இல்லை எனும்படி அமைத்துக் கொண்டு இந்தியா முழுவதுக்கும் சக்கரவர்த்தியாக முடிசூட்டிக் கொண்டு ஆட்சி புரிந்து வந்தார். இவர் இந்துக்களுக்கு இழைத்த கொடுமைகளைப் பல வரலாற்றாசிரியர்களும் எழுதி வைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள். வடக்கே இமயம் தொடங்கி, மேற்கே ஆப்கானிஸ்தான் வரையும் தெற்கே கன்யாகுமரி வரையிலும் அவனது ஆட்சி பரவிக் கிடந்தது.

தன்னுடைய மேலாதிக்கத்தை உலகுக்கு அறிவிக்கும் பொருட்டு அவர் ஒரு ஏற்பாடு செய்தார். இந்தியா முழுவதிலும் ஆங்காங்கே பல குட்டி குட்டி ராஜ்யங்கள் பரவிக் கிடந்தமையால், அவர்கள் அனைவரும் தன்னுடைய சாம்ராஜ்யத்துக்குக் கட்டுப்பட்டவர்கள், கப்பம் கட்ட வேண்டியவர்கள், அடிபணிந்து கிடப்பவர்கள் என்பதைத் தெரிவிக்கும் பொருட்டு தன்னுடைய பாதரட்சையொன்றை ஒரு யானையின் மீது அம்பாரி அமைத்து அதில் அந்த செருப்பை வைத்து, யானையோடு பெரும்படையொன்றையும் அனுப்பி தென்னாட்டிலுள்ள அத்தனை குட்டி ராஜ்யங்களுக்கும் அனுப்பி வைத்தார். இவரைப் பற்றிய ஒரு வரலாற்றுச் செய்தி உண்டு. இவர் தனக்குத் தேவையான தொப்பி, காலணி முதலியவற்றைத் தானே தைத்துக் கொள்வாராம். அப்படி அவரே தைத்த காலணியை அனுப்பியிருப்பார் போலும்.

அந்த யானை ஒரு ராஜ்யத்திற்குள் நுழையும்போது அதனை சகல ராஜ மரியாதைகளுடன் வரவேற்க வேண்டும். வரவேற்று அந்த யானையை அரண்மனைக்கு மேள தாளத்துடன் அழைத்துச் சென்று, சுல்தானின் செருப்பை மரியாதையோடு எடுத்துச் சென்று அந்த ராஜவின் சிம்மாசனத்தில் வைத்து வணங்கிய பிறகு சக்கரவர்த்திக்குக் கொடுக்க வேண்டிய கப்பப் பொருட்களைக் கொடுத்து விட வேண்டும். அப்படி செய்ய மறுப்பவர்கள் ராஜ்யத்தை டில்லி சிப்பாய்கள் போரிட்டு பிடுங்கிக் கொள்வார்கள். இப்படி வரிசையாக ஒவ்வொரு ஊராக இந்த ஊர்வலம் வந்து, மதுரைக்கும் வந்து சேர்ந்தது.

ஒளரங்கசீபின் இந்த செருப்பு ஊர்வலம் மதுரை எல்லையுள் முகலாய படைகள் யானையோடு நுழையும்போது முத்து வீரப்பரோ அவரது பரிவாரங்களோ அங்கே இருந்து வரவேற்கவில்லை. ஆத்திரமடைந்த முகலாயப் படைத் தலைவன் இந்த அரசன் ஏன் வரவில்லை. சுல்தானின் யானையை வரவேற்காதது ஏன் என்று ஆத்திரப்பட்டான். அரசருக்கு உடல்நலம் சரியில்லை, அதனால் அவர் வர இயலவில்லை என்று சொல்லப்பட்டதை படைத்தலைவன் ஏற்றுக் கொள்ளவில்லை.

மன்னன் திருச்சிராப்பள்ளியில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. சுல்தானின் யானை ஊர்வலம் திருச்சி நோக்கிச் சென்றது. அங்கும் மன்னன் முத்து வீரப்பன் எதிர்கொண்டு அழைத்து மரியாதை செய்யவில்லை. இதனால் ஆத்திரமடைந்த படைத்தலைவன் தன்னுடைய படைகளோடு புறப்பட்டு, சுல்தானின் செருப்பைக் கையில் எடுத்துக் கொண்டு மன்னனுடைய அரண்மனையிலுள்ள அரசவை மண்டபத்துக்குச் சென்றான். அங்கே உடல்நலமில்லை என்று சொல்லப்பட்ட முத்து வீரப்பர் கம்பீரமாக உட்கார்ந்து கொண்டிருந்தார்.

இந்தக் காட்சியைக் கண்ட படைத்தலைவன், மன்னருக்கு உடல்நலம் நன்றாகத்தான் இருக்கிறது; சுல்தானுடைய செருப்புக்குத் தக்க மரியாதை செய்யவும், சுல்தான் படைகளை மரியாதையோடு எதிர்கொண்டு அழைக்கவும் அவன் வராதது வேண்டுமென்றே அவமரியாதை செய்யும் பொருட்டுதான் என்று ஆத்திரமடைந்தான். 

சபை கூடியிருந்தது. முகலாய படை வீரர்கள் வரிசையில் அரசவையினுள் நுழைந்து வந்தனர். அவர்களுக்கு முன்பாக படைத்தலைவன் சுல்தானின் செருப்பை மரியாதையோடு கையில் ஏந்திக் கொண்டு மன்னனை நோக்கி வந்து கொண்டிருந்தான். அப்போது மன்னர் முத்து வீரப்ப நாயக்கர் உரத்த குரலில் அந்தப் படைத்தலைவனை நோக்கி, "அந்த செருப்பைக் கீழே போடடா!" என்று உரக்க உத்தரவிட்டார்.

அவர் உட்கார்ந்திருந்த தோரணையும், உரக்க ஆணையிட்டதையும் கேட்டு கலங்கிப் போய் அந்தப் படைத்தலைவன் அந்த ஒற்றைச் செருப்பைக் கீழே வைத்தான். கீழே வைக்கப்பட்ட அந்த ஒற்றைச் செருப்பை நோக்கி படி இறங்கிக் கீழே வந்த மன்னர், தன் ஒற்றைக் காலை அந்த ஒற்றைச் செருப்புக்குள் நுழைத்துக் கொண்டு படைத்தலைவனை நோக்கி இடி இடிப்பது போன்ற குரலில், " ஏன்? இதன் இன்னொரு செருப்பு எங்கே? உங்கள் சுல்தான் கொடுத்தனுப்பவில்லையா? என்னுடைய இரண்டு கால்களுக்கு இரண்டு செருப்பு வேண்டும் என்பதுகூட உங்கள் சுல்தானுக்குத் தெரியவில்லையா?" என்று அதட்டும் குரலில் கேட்டார்.

இதுபோன்ற சந்தர்ப்பங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும், என்ன செய்யவேண்டுமென்று அவனுக்கு ஆணையிடப் பட்டிருப்பதால், அவனும், அவனுடன் இருந்த வீரர்களும் தங்கள் வாட்களை உருவிக் கொண்டு மன்னர் மீது பாயத் தயாரானார்கள். அதற்குள் மன்னர் முத்து வீரப்பர் தயாராக நிறுத்தி வைத்திருந்த தனது படை வீரர்களுக்கு இவர்களைக் கோட்டைக்கு வெளியே விரட்டிவிட்டு வாருங்கள் என்று கட்டளை இட்டார்.

சுல்தானின் படைவீரர்களைப் போல பல மடங்கு அதிகமாக இருந்த நாயக்க மன்னரின் வீரர்கள் சுல்தான் சிப்பாய்களை விரட்டிக் கொண்டு போய் கோட்டைக்கு வெளியே துரத்திவிட்டு கோட்டைக் கதவை அடைத்துவிட்டு வந்து விட்டார்கள். அங்கு டில்லி சிப்பாய்கள் கோட்டையைத் தாக்க முயற்சி செய்தார்கள். கோட்டையைக் காவல் செய்து கொண்டிருந்த நாயக்க வீரர்கள் அந்த வீரர்களோடு போரிட்டு அவர்கள் அத்தனை பேரையும் வெட்டி வீழ்த்தினார்கள். அவர்களை முன்னின்று வழிகாட்டி போர் புரிந்தவர் மன்னன் முத்து வீரப்பர் என்பது வீரர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்தது. நாயக்க வீரர்களின் தாக்குதலைத் தாக்குப் பிடிக்க முடியாமல் ஓடிப்போன சில வீரர்கள் உயிர் தப்பிப் பிழைத்து டெல்லிக்குச் சென்று சுல்தானிடம் திருச்சிராப்பள்ளியில் தங்களுக்கு முத்து வீரப்பரால் நடந்த சோகத்தைச் சொல்லி வருந்தினர்.

இப்படி தெற்கே ஆண்ட சிற்றரசனிடம் அவமானப் பட்ட பிறகு டில்லி சுல்தான் ஒள்வரங்கசீப் செருக்கழிந்து இதுபோன்ற அநாகரிகமான செயலைக் கைவிட்டு விட்டான். எங்கெங்கோ போன போது இல்லாத எதிர்ப்பு தமிழ் மண்ணில் இருந்த ஒரு ராஜ்யத்தில் அரசாண்ட சிற்றரசனிடம் கண்டதும், அவனிடம் தான் அவமானப்பட்டதும் ஒளரங்கசீப் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்ச்சியாகத்தான் இருக்க வேண்டும்.












2 comments:

துரை செல்வராஜூ said...

அரிய செய்திகளுடன் இனிய பதிவு.. பொக்கிஷம்..

Unknown said...

மிகவும் தவறான செய்திகள் இதில் உள்ளன. மங்கம்மாளின் மகளாக மீனாட்சியை கூறியுள்ளது தவறு. அவர் மங்கம்மளின் மருமகள். அதே போல தனது மகனின் இளம் பருவத்தைக் கருத்தில் கொண்டு உடன் கட்டையேற உறவுகள் வற்புறுத்திய நிலையிலும் மறுத்த மங்கம்மாள் பற்றி அதிகம் ஒன்றும் கூறப்படவில்லை. மற்றபடி நாயக்க மன்னர்கள் பற்றிய அறியப்படாத தகவல்கள் இன்னும் ஏராளமாயுள்ளன.