பாரதி பயிலகம் வலைப்பூ

Friday, March 28, 2014

வாக்கினை அளியுங்கள்!



ஞான கணபதியே கல்வித்தாய் கலைமகளே
மோன முதல்வோனே முத்தமிழும் தந்தவனே
வினைகளைக் களைவோனே நின்பாதம் சரணமய்யா
அன்றாட அரசியலை நான்பாட அருளுமய்யா.

எங்கோ பிறந்தவர்கள் இங்கு வந்து ஆண்டார்கள்
அங்கவரை விரட்டிடவே பாட்டன்மார் முயன்றார்கள்
தங்கத் தலைவர்கள் தியாகங்கள் புரிந்தார்கள்
இங்கு நாம் சுதந்திரத்தை இனிதே பெற்றுவிட்டோம்.

தியாகங்கள் செய்தவர்கள் இருந்தவிடம் தெரியவில்லை
மாயவித்தை செய்பவர்கள் ஊரெங்கும் நிறைந்துவிட்டார்
ஓயாமல் பொய்யுரைத்து ஊர்பணத்தைக் கொள்ளையிட்டார்
பேயாட்சி செய்பவரை எத்தனைநாள் பொருத்திருப்போம்.

நிலக்கரியை எடுப்பதற்கு யார்யாரோ உரிமை பூண்டு
பலகோடிப் பணத்தையிங்கு கொள்ளை யடிப்பதற்கு
நல்லவர்போல் வேடம்பூண்ட ஒருதலைவர் வழிவகுத்தார்
வல்லவராம் அவர் ஊழல் சந்தி சிரிக்கிறது.

காமன்வெல்த் நாடுகளின் விளையாட்டுப் போட்டிக்கு
நாமெல்லாம் காத்திருக்க, டெல்லியில் சிலர்கூடி
நமையெல்லாம் எமாற்றி கொள்ளை அடித்தார்கள்
ஊமையாய் மக்களெல்லாம் பார்த்து நின்றார்கள்.

கார்கில் எனுமிடத்தில் பாகிஸ்தான் படையெடுத்து
பார்த்திருக்கும் போதே நம்நிலத்தைக் கவர்ந்தார்கள்
வீரர் பல்லோரைப் படுகொலையால் வீழ்த்தினார்கள்
தீரர் நம்மவர்கள் போராடி வென்றார்கள்.

காதல் குடும்பத்தோடு அவ்வீரர்கள் வசித்திருக்க
ஆதர்ஷ் குடியிருப்பை மும்பையில் கட்டினார்கள்
எதிலும் கொள்ளையிடும் கூட்டமொன்று உட்புகுந்து
அதிலும் பங்குபோட்டு கல்லா கட்டினார்கள்.

அரசியல் பிரமுகர்கள் உல்லாச பயணம் செல்ல
தரமான ஹெலிகாப்டர் வாங்குதற்கு முயன்றார்கள்
தரகர்கள் உட்புகுந்து அதிலும் கமிஷன் பெற்றார்
அரசாங்கம் பதில் சொல்ல இப்போதும் தயங்குகின்றார்.

தொலைபேசி காலம் போய் கைபேசி வந்தபோது
தொலைதொடர்பு அமைச்சர் செய்த தில்லுமுல்லு காரியத்தால்
வலைபோட்டு சிலர் மட்டும் ஆதாயம் அடைந்துவிட்டார்
தொலைதொடர்பில் இழப்பு மட்டும் பலலட்சம் கோடிகளாம்.

எங்குபோய் சொல்லுவது; யாரிடம்போய் கதறுவது?
இங்கு அரசியல்வாதி செய்யும் அறங்கெட்ட செயல்களெல்லாம்
எங்கு போய் முடிந்திடுமோ, நாட்டையே அழித்திடுமோ?
சங்கூதி சுதந்திரத்தை சுடுகாட்டுக்கு அனுப்பிடுமோ?

தயங்காதீர் நாட்டோரே! துணிந்து நிற்பீர் காலம் மாறும்
மயங்காதீர் அரசியலார் இனிப்பான சொற்கள் கேட்டு
இயக்கங்கள் பல இருந்தும் யாருமிங்கிக் கேட்பாரில்லை
பயமின்றி இவர்கள் தோற்க அளியுங்கள் உங்கள் வாக்கை!





1 comment:

துரை செல்வராஜூ said...

அன்பின் இனிய புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள்!..
வாழ்க வளமுடன்!..