பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, March 20, 2014

வேண்டாம் இவர்போல் ஒருவர்!


                                                  வேண்டாம் இவர்போல் ஒருவர்!


யார் ஆடினார், இனி யார் ஆடுவார்
பாராளும் தலைவர்களுள் இனி
யார் ஆடுவார் இவர்போல்  யார் ஆளுவார்?

இடியொன்று வீழ்ந்து மக்கள்
மடிந்தொழிந்து போனாலும்
கடுந்தவத்தில் ஆழ்ந்தவர்போல்
மூடிய கண்ணைத் திறக்கமாட்டார்.

கூடவே இருப்பவர்கள்
கோடி கோடியாய் சுருட்டினாலும்
கடைக் கண்ணாலும் பார்க்கமாட்டார்
மூடிய கண்ணைத் திறக்கமாட்டார்.

மீன்பிடிக்கப் போனவனை
அன்னியன் வந்து பிடித்துப் போனால்
மனம் நொந்து அவனை மீட்க
எண்ணமே கொள்ளமாட்டார்.

தான் பேசும் சொற்களெல்லாம்
தனக்கே கேட்காத இரகசியம்போல்
தனக்குள்ளே பேசுவது போல்
முனகுவதை நிறுத்தமாட்டார்.

பூனைபோல் கண்கள் மூடி
மோனத் தவத்தில் ஆழ்ந்து
ஆனவரை இங்கு எதையுமே காணாமல்
கனவுலகில் எப்போதும் உலவுவதை நிறுத்தமாட்டார்.

கண்ணெதிரே மக்கள் எல்லாம்
விண்ணதிர கோஷமிட்டால் அதை
மண்ணுக்குள் புதைத்துவிட்டு
தண்ணென்று அமர்ந்திருப்பார்.

பாரததேவி செய்த புண்ணியத்தால் அன்றோ
மாரத வீரன்போல மகானுபாவன் வந்தான்
வீரத் தலைவனிவன் மீண்டும் வந்தமர்ந்தால்
நரகமே வேறு வேண்டாம், நாமும் துறவு கொள்வோம்.


No comments:

Post a Comment

You can give your comments here