பாரதி பயிலகம் வலைப்பூ

Saturday, March 1, 2014

மகா சிவராத்திரி நாட்டியாஞ்சலி

                  மகா சிவராத்திரியும் நாட்டியாஞ்சலி விழாவும்.


ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் வரும் மகாசிவராத்தியை முன்னிட்டு பல சிவாலயங்களில் நாட்டியாஞ்சலி எனும் நிகழ்ச்சி மிக விமரிசையாக நடைபெற்று வருகிறது. முதன் முதலில் சிதம்பரத்தில் தொடங்கிய இந்த விழா நாளாக ஆக பல சிவாலயங்களிலும் தொடங்கப்பட்டு வெகு சிறப்பாக நடைபெறுகிறது. சிதம்பரம் தவிர, தஞ்சாவூர் பெரிய கோயில், திருவையாறு ஐயாறப்பர் ஆலயம், கும்பகோணம் கும்பேசுவரர் ஆலயம், மாயுரம் மயூரநாதசுவாமி ஆலயம், திருநள்ளாறு, திருவாரூர், பந்தநல்லூர், நாகப்பட்டினம் ஆகிய ஊர்களிலும் இந்த நாட்டியாஞ்சலி விழா மிக சிறப்பாக நடைபெறுகின்றன. இந்த ஆண்டு முதல் திருநாவுக்கரசரோடு சம்பந்தமுள்ள திருவதிகை ஆலயத்திலும் தொடங்கப்பட்டு நடைபெற்றது.

இந்த நாட்டியாஞ்சலி எதற்காகச் செய்யப்படுகிறது என்பதைவிட இந்த விழா ஏற்படுத்தியிருக்கிற விழிப்புணர்வு, கலைகள் பற்றிய ஆர்வம், குழந்தைகள், பெண்கள் மத்தியில் உருவாகியிருக்கிற நாட்டிய ஆர்வம் இவை மகிழ்ச்சியளிக்கக்கூடியவைகளாக இருக்கின்றன. திருவையாற்றில் நடைபெற்ற நாட்டியாஞ்சலியில் கடந்த 27ஆம் தேதி இரவு தஞ்சை திருமதி சுலக்ஷணாவின் ஆராதனா நாட்டியப் பள்ளியிலிருந்து எல்.கே.ஜி.படிக்கும் நிலா என்ற பெயருடைய குழந்தை தாளம் தப்பாமல் மலர்ந்த முகத்தோடு பெரிய பெண்களுக்கு இணையாக ஆடியது கண்டு திரண்டிருந்த மக்கட்கூட்டம் அந்தக் குழந்தைக்குக் கொடுத்த ஆர்ப்பரிப்புடன் கூடிய பாராட்டு மகிழ்ச்சியளிக்கக்கூடிய நிகழ்ச்சி. அது போலவே அதே வயதுடைய மற்றொரு குழந்தை சென்னை வேலம்மாள் கலாலயத்திலிருந்து வந்து ஆடிய காட்சியும் மறக்க முடியாத காட்சிகள். சின்ன குழந்தை ஆடுகிறது என்பதல்ல இங்கு, அது தன்னுடைய அபிநயங்களையும், காலில் போடும் தாளத்தையும் அத்தனை அழகாக கிரகித்துக் கொண்டு பாவத்துடன் ஆடிய காட்சியை எவரும் மறக்க மாட்டார்கள். இப்போது கலைகளின் மீது குறிப்பாக நாட்டியக் கலையில் ஏற்பட்டிருக்கிற ஆர்வம் மகிழ்ச்சிக்குரியதாக உள்ளது.

மிகவும் புகழ்பெற்ற நடன மணிகளிலிருந்து, அண்டை மாநிலமான கர்நாடகாவிலிருந்தும் குச்சிபுடி, மோஹினியாட்டம் போன்ற ஆடல்களை இங்கு வந்து அவர்கள் ஆடும்போது இந்தக் கலையின் மேன்மையும், பெண்கள் குழந்தைகள் மத்தியில் ஏற்பட்டிருக்கிற கலை ஆர்வமும் புரிகிறது. இந்த ஆண்டு திருவையாற்றில் நடந்த ஐயாறப்பர் நாட்டியாஞ்சலி மூன்று நாட்களும் மிக சிறப்பான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.


கொடுக்கப்பட்ட குறுகிய காலவெளியில் சிலர் நாட்டிய நாடகங்களையும் நடித்துக் காட்டினர். சென்னை ஸ்ரீ கிருஷ்ணா நாட்டியாலயாவின் திருமதி கலா சீனிவாசன் குழுவினர் நடித்த "பூசலார் நாயனார்" வரலாறும், பெங்களூரு திருமதி அம்பிலி தேவி குழுவினரின் "நந்தனார் சரித்திரமும்" மிக சிறப்பாக அமைந்திருந்தது. சென்னை வேலம்மாள் கலாலயத்திலிருந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவிகள் வந்து கலந்து கொண்ட நடனங்கள் மக்கள் மனங்களைக் கொள்ளை கொண்டன.

இவர்கள் தவிர பிரான்சு நாட்டிலிருந்து வந்திருந்த சுவாதி இராகவன் என்பவரும், கோவையின் பெருமைக்குரிய லக்ஷ்மி மில்ஸ் குடும்பத்தைச் சேர்ந்த திருமதி ஜெயந்தி ராமச்சந்திரா அவர்களின் ஸ்ரீ சரண் அகாதமியிலிருந்து வந்த மாணவியர் மிக அற்புதமான நடனங்களை ஆடி மகிழ்வித்தனர். மும்பை காட்கோபரிலிருந்து செளந்தர்ய நாட்டிய கலாலயாவின் திருமதி பத்மினி ராதாகிருஷ்ணன் அவர்களின் மாணவியர் பெங்களூரு தீபா சசீந்திரன் அவர்களின் குச்சிபுடி நடனம், பெங்களூரு ஸ்வப்னா இராஜேந்திரகுமார் அவர்களின் மோகினி ஆட்டம் இவை சிறப்பாக அமைந்தன. தஞ்சைக்குப் பெருமை சேர்க்கும் திருமதி வடிவுதேவி அவர்களும், கடலூர் முனைவர் சுமதி சுந்தர் அவர்களின் மாணவிகளும் பங்கு பெற்று சிறப்பித்தனர்.

சென்னை சாய் நாட்டியாலயா திவ்யஸ்ரீ, பெங்களூரு வாசுதேவ் சந்தியா ஷெட்டி, சென்னை லலிதா கணபதி, கும்பகோணம் ஸ்ரீமதி நாட்டியாலயாவின் ஸ்ரீதரி, சென்னை முகப்பேர் இரா.காசிராமன், சென்னை ஹர்ஷிதா இவர்களோடு கும்பகோணம் கீதா அஷோக், வி.விஜயமாலதி, கவிதா விஜயகுமார் இவர்களும் பங்கு பெற்று சிறப்பித்தனர். மதுரை சற்குரு சங்கீத வித்யாசாலாவின் பாலா நந்தகுமாரின் மாணவியர், பண்ருட்டி சுரேஷ், நாமக்கல் ஜெயப்பிரகாஷ் ஆகியோரும் விழாவின் சிறப்புக்குத் துணை புரிந்தனர்.

ஆக சிவராத்திரி என்றதும் இனி நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியும், நடனக் கலைஞர்களும், குறிப்பாகப் புதிதாக கற்றுக் கொள்ளும் பள்ளி, கல்லூரி மாணவிகளின் திறமைகளும்தான் நமக்கு நினைவுக்கு வரும். இப்போது புரிகிறது நம் முன்னோர்கள் கலையையும் கடவுளையும் ஒருங்கிணைத்துப் பார்த்து வந்ததன் சிறப்பு. நடனக் கலை பயிலும் மாணவியர்களுக்கு பிரகாசமான வாய்ப்புகளும் எதிர்காலமும் உண்டு என்பது தெளிவாகத் தெரிகிறது. சிவபெருமானே முதன் முதலாக இந்த நடனத்தை ஆடி உலகுக்குக் கொடுத்துச் சென்றதால் இது ஒரு தெய்வீகக் கலையாகவே மதிக்கப்பட்டு வருகிறது. வாழ்க கலை, வளர்க நடனக் கலை.

No comments:

Post a Comment

You can give your comments here