பாரதி பயிலகம் வலைப்பூ

Sunday, September 8, 2013

விநாயகர் நான்மணி மாலை

                                             விநாயகர் சதுர்த்தி சிறப்புப் பாடல்.

பாரதியாரின் விநாயகர் நான்மணி மாலையில் இருந்து சில: .............
.

1. அகவல்

கற்பக விநாயகக் கடவுளே, போற்றி!
சிற்பர மோனத் தேவன் வாழ்க!
வாரண முகத்தான் மலர்த்தாள் வெல்க!
ஆரண முகத்தான் அருட்பதம் வெல்க!
படைப்புக் கிறையவன் பண்ணவர் நாயகன்
இந்திர குரு, எனது இதயத் தொளிர்வான்
சந்திர மவுலித் தலைவன் மைந்தன்
கணபதி தாளைக் கருத்திடை வைப்போம்;
குணமதிற் பலவாம்; கூறக் கேளீர்:
உட்செவி திறக்கும்; அகக்கண் ஒளிதரும்;
அக்கினி தோன்றும்; ஆண்மை வலியுறும்;
திக்கெலாம் வென்று ஜெயக்கொடி நாட்டலாம்;
கட்செவி* தன்னைக் கையிலே எடுக்கலாம்;
விடத்தையும் நோவையும் வெம்பகை யதனையும்
துச்சமென் றெண்ணித் துயரிலா திங்கு
நிச்சலும் வாழ்ந்து நிலைபெற்றோங்கலாம்;
அச்சம் தீரும்; அமுதம் விளையும்
வித்தை வளரும்; வேள்வி ஓங்கும்;
அமரத் தன்மையும் எய்தவும்
இங்கு நாம் பெறலாம்;
இஃதுணர்வீரே!

*கட்செவி=பாம்பு. 

2. விருத்தம்:

எனக்கு வேண்டும் வரங்களை
இசைப்பேன் கேளாய் கணபதி!
மனத்திற் சலன மில்லாமல்
மதியில் இருளே தோன்றாமல்,
நினைக்கும் பொழுது நின்மவுன
நிலை வந்திட நீ செயல் வேண்டும்,
கனக்குஞ் செல்வம், நூறு வயது
இவையும் தர நீ கடவாயே!

3. வெண்பா:

நமக்குத் தொழில்கவிதை, நாட்டிற் குழைத்தல்
இமைப்பொழுதுஞ் சோரா திருத்தல் - உமைக்கினிய
மைந்தன் கணநாதன் நங்குடியை வாழ்விப்பான்!
சிந்தையே, இம்மூன்றும் செய்.

4. அகவல்:

பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்,
கேட்கா வரத்தைக் கேட்க நான் துணிந்தேன்,
மண் மீதுள்ள மக்கள், பறவைகள்,
விலங்குகள், பூச்சிகள், புற்பூண்டு, மரங்கள்,
யாவும் என் வினையால் இடும்பை தீர்ந்தே
இன்பமுற்று அன்புடன் இணங்கி வாழ்ந்திடவே
செய்தல் வேண்டும், தேவ தேவா!

ஞானாகாசத்து நடுவே நின்று நான்
'பூமண்டலத்தில் அன்பும் பொறையும்
விளங்குக; துன்பமும், மிடிமையும் நோவும்,
சாவும் நீங்கிச் சார்ந்த பல்லுயிரெலாம்
இன்புற்று வாழ்க!' என்பேன்! இதனை நீ
திருச்செவிக் கொண்டு திருவுளம் இரங்கி,
'அங்ஙனே யாகு
'* என்பாய் ஐயனே!
இந்நாள் இப்பொழுது எனக்கு இவ்வரத்தினை
அருள்வாய்! ஆதிமூலமே! அனந்த
சக்தி குமாரனே! சந்திரமவுலீ!
நித்தியப் பொருளே! சரணம்
சரணம் சரணம், சரணமிங் குனக்கே!

(* 'ஸ்வஸ்தி மந்திரம்' சொன்னவுடன் மற்றவர்கள் 'ததாஸ்து' அதாவது அங்ஙனமே ஆகுக என்பர். அப்படி இறைவன் பாரதி சொல்லும் வாழ்த்துக்களுக்கு ததாஸ்து சொல்ல வேண்டும் என்கிறான்.)

5. விருத்தம்:

மொய்க்குங் கவலைப் பகைபோக்கி
முன்னோன் அருளைத் துணையாக்கி
எய்க்கும் நெஞ்சை வலியுறுத்தி,
உடலை இரும்புக் கிணையாக்கி
பொய்க்குங் கலியை நான் கொன்று
பூலோகத்தார் கண் முன்னே
மெய்க்குங் கிருத யுகத்தினையே
கொணர்வேன்; தெய்வ விதியிஃதே!


6. அகவல்:

விதியே வாழி! விநயகா வாழி!
பதியே வாழி! பரமா வாழி!
சிதைவினை நீக்கும் தெய்வமே, போற்றி!
புதுவினை காட்டும் புண்ணியா போற்றி!
மதியினை வளர்க்கும் மன்னே, போற்றி!
இச்சையும் கிரியையும் ஞானமும் என்றாங்கு
மூல சக்தியின் முதல்வா போற்றி!
பிறைமதி சூடிய பெருமான் வாழி!
நிறைவினைச் சேர்க்கும் நிர்மலன் வாழி!
காலம் மூன்றையும் கடந்தான் வாழி!
சக்தி தேவி சரணம் வாழி!
வெற்றி வாழி! வீரம் வாழி!
பக்தி வாழி! பலபல காலமும்
உண்மை வாழி! ஊக்கம் வாழி!
நல்ல குணங்களே நம்மிடை அமரர்
பதங்களாம், கண்டீர்! பாரிடை மக்களே!
கிருத யுகத்தினைக் கேடின்றி நிறுத்த
விரதம் நான் கொண்டனன், வெற்றி
தருஞ்சுடர் விநாயகன் தாளிணை வாழியவே!

- மகாகவி பாரதியார்.   

1 comment:

துரை செல்வராஜூ said...

மகாகவி பாரதியார் அருளிய ஸ்ரீவிநாயகர் நான்மணி மாலையுடன் சிறப்பான பதிவு!..நன்றி .. ஐயா!..