பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, September 16, 2013

தமிழ் நடிகை டி.பி.ராஜலக்ஷ்மி

                                                   தமிழ் நடிகை டி.பி.ராஜலக்ஷ்மி

தமிழ் நாட்டின் முதல் நடிகை, இயக்குனர் டி.பி.ராஜலக்ஷ்மியின் நூற்றாண்டு விழாவை இந்த மாதம் 19ஆம் தேதி கொண்டாட தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார். இவர் தஞ்சை மாவட்டம் திருவையாற்றில் 1911ஆம் ஆண்டில் பிறந்தவர்.   இவர் பிறந்த தேதி ஒரு மேஜிக் எண்ணாக இருக்கிறது  11‍ 11 1911.திருவையாறு பஞ்சாபகேச சாஸ்திரி ராஜலக்ஷ்மி என்பதன் சுருக்கம்தான் டி.பி.ராஜலக்ஷ்மி என்ற பெயர். தன் இளமைக்காலம் முதல் இசை, நாட்டியம், நாடகம் என்று கலைத்துறையில் ஆர்வம் கொண்டவர். நாடகக் கலை மேதை சங்கரதாஸ் சுவாமிகளிடம் இவர் நாடகங்களில் நடித்து வந்தார். 1936இல் (ஆம் 1936இல்தான்) இவர் மிஸ் கமலா என்று இவரே எழுதிய நாவலைப் படமாக இயக்கினார். முதல் பெண் இயக்குனர் எனும் பெருமையைப் பெற்றார். ராஜா சாண்டோ எடுத்த உஷாசுந்தரி, ராஜேஸ்வரி ஆகிய படங்களிலும் நடித்தார்.

இவர் நடித்த படங்கள் 23. இதில் இரண்டை இவர் இயக்கியிருக்கிறார்.
அவை முறையே "உத்தமி" (1943), பரஞ்ஜோதி (1945), காளிதாஸ் (1931), பாமா பரிணயம் (1936), சீமந்தினி (1936), தமிழ் தியாகி (1939), பூர்ணசந்திரா (1935), சுகுண சரசா (1939), ராஜேஸ்வரி (1930), அநாதைப் பெண் (1938), இதயகீதம் (1950), மிஸ் கமலா (1936), லலிதாங்கி (1935), உஷா சுந்தரி (1930), பக்த குசேலா (1935), பக்த குமரன் (1939), மதுரை வீரன் (1938), குலேபகாவலி (1935), கெளசல்யா பரிணயம் (1937), சாவித்ரி சத்யவான் (1933), நந்தகுமார் (1938), கோவலன் (1929), ஜீவஜோதி (1947). இவற்றில் இரண்டு மட்டும் இவர் இயக்கியவை.

இவருடைய 11ஆவது வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்டார். நாடகக் கலையில் ஈடுபட்டதோடு இந்திய சுதந்திரப் போராட்டத்திலும் கலந்து கொண்டார். இந்த பணிகளினால் இவர் குடும்ப வாழ்க்கையில் தொடர முடியவில்லை. திருமணமான அடுத்த வருஷமே இவர் கணவனைப் பிரிந்துவிட்டார். நாடகங்களை இவர் இயக்கத் தொடங்கினார். அந்தக் காலத்தில் ஸ்பெஷல் நாடகம் எனப்படும் நாடகங்களை நடத்தினார். சாதாரணமாக நாடகக் கம்பெனிகள் தங்கள் நடிக நடிகர்களை நிரந்தரமாகத் தங்களுடன் வைத்திருப்பார்கள். ஸ்பெஷல் நாடகம் என்றால் எப்போது நாடகம் போடுகிறார்களோ அப்போது தகுந்த நடிக நடிகைகளைக் கூப்பிட்டு நாடகம் நடத்துவார்கள்.

1930இல் இவர் சினிமாத் துறைக்குள் நுழைந்தார். அந்தக் காலத்தில் இவருடைய அழகைக் கண்டு இவரை "சினிமா ராணி" என்று புகழ்ந்தனர். இவர் தனது 20ஆம் வயதில் தன்னுடைய சக நடிகராக இருந்த டி.வி.சுந்தரம் என்பவரிடம் காதல் கொண்டார். ராஜலக்ஷ்மியிடம் தைரியமும், குறிக்கோளும் இருந்தன. அந்த நாட்களிலேயே இவர் குழந்தைத் திருமணத்தையும், சிசுக் கொலையையும் எதிர்த்திருக்கிறார். பெண் சிசுக் கொலையை சும்மா வாயால் எதிர்த்ததோடல்லாமல், அப்படி கொலை செய்யப்படவிருந்த ஒரு பெண் சிசுவை தத்து எடுத்து வளர்த்தும் வந்தார். அதன் பெயர் மல்லிகா. அந்த குழந்தை மல்லிகாவை தத்தெடுத்து, வளர்த்துத் திருமணமும் செய்து கொடுத்தார். இது தவிர இவரிடம் உதவி கேட்டு வந்த பல பெண்மணிகளுக்கு அவர் பல உதவிகளைச் செய்திருக்கிறார். இவருக்கே ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. 1936இல் பிறந்த அந்தக் குழந்தையின் பெயர் டி.எஸ்.கமலா. இந்தப் பெயரில்தான் மிஸ்.கமலா என்று அவர் தன்னுடைய முதல் சினிமாவை இயக்கினார்.

இவர் காலத்தில் வெளியான "குலேபகாவலி" என்று மூன்று மொழிகளில் எடுக்கப்பட்ட படத்தில் நடித்தார். இவர் தன் சொந்த சினிமா கம்பெனியையும் வைத்திருந்தார். அதன் பெயர் ராஜம் டாக்கீஸ். சென்னையில் இவர் வசித்த ராஜரெத்தினம் தெருவில் இவர் 10க்கும் மேற்பட்ட வீடுகள் வைத்திருந்தார். அந்தத் தெருவில் முதல் எண் உள்ள தனது வீட்டிற்கு "ராஜ்மஹால்" என்று பெயரிட்டிருந்தார். "இந்தியத் தாய்" எனும் பெயரில் ஒரு தேசபக்தி படத்தை இவர் இயக்கினார். அது தோல்வியைக் கண்டது. காரணம் அதில் இவர் வயது முதிர்ந்த பெண்ணாக நடித்ததுதான். இவருக்கு வயதாகிவிட்டது, கிழவியாகி விட்டார், அழகெல்லாம் போய்விட்டது என்று மக்கள் நினைத்து விட்டனர். அதற்குப் பிறகு அதிக பட வாய்ப்புகள் இவருக்குக் கிடைக்கவில்லை. படங்கள் இல்லை, வருமானம் இல்லை, கீழ்ப்பாக்கத்தில் இவருக்கு இருந்த சொத்துக்களை யெல்லாம் விற்கத் தொடங்கினார். வறுமையெனும் கொடிய வாழ்க்கையில் சிக்கினார்.

 இவருக்கு கலைமாமணி விருது கொடுக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சிக்குப் போகக்கூட வாகன வசதி இல்லாமல் இருந்த நிலையில் எம்.ஜி.ஆர் ஒரு காரையும் அதனுடன் தன்னுடைய உதவியாளரையும் அனுப்பி அவரை விழா மேடைக்கு அழைத்து வந்து கெளரவித்ததாக அவருடைய மகள் திருமதி கமலா சொல்லியிருக்கிறார்.

வாழ்வின் உச்சத்தையும், தாழ்வையும் பார்த்து அவர் உடல்நலம் கெட்டது. ரத்த அழுத்த நோய்க்கு ஆளானார். அதன் விளைவாக கைகால்கள் இயங்காமல் படுத்த படுக்கையானார். பெண் திருமதி கமலா தன் தாயாரை நன்கு கவனித்துக் கொண்டார். டி.பி.ராஜலக்ஷ்மி தன் எல்லா சொத்துக்களையும் விற்றுவிட்டாலும் ஒரே ஒரு வீட்டை மட்டும் வைத்துக் கொண்டிருந்தார். அதைத் தன் மகள் கமலாவுக்குக் கொடுத்து விட்டார். அப்படி கொடுக்கும்போது தன் மகளிடம் ஒரு வாக்குறுதி வாங்கிக் கொண்டார், அது எந்த நிலையிலும் அந்த வீட்டை மட்டும் விற்கக்கூடாது என்பதுதான் அது. வறுமை காரணமாக அந்த வீட்டையும் விற்க நேர்ந்தது. மனமொடிந்து போன டி.பி.ராஜலக்ஷ்மி நினைவிழந்த நிலையில் வாடகை வீட்டுக்குக் கொண்டு போகப்பட்டார். நினைவு வந்து தான் எங்கிருக்கிறோம் என்பதறியாமல் மகளிடம் கேட்டபோது அந்த அறை மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாகப் பொய் சொல்லி சமாளித்திருக்கிறார். தான் இன்னமும் அந்த "ராஜ்மஹால்" இல்லத்தில்தான் இருக்கிறோம் என்ற நினைவிலேயே இருந்தார்.

கமலாவின் மகனுடைய ஆண்டு நிறைவைக் கொண்டாட இவர் முயன்றபோது பணத்துக்கு என்ன செய்வது என்று யோசித்து தனக்கு பரிசாக வந்த கேடயமொன்றை உருக்கி குழந்தைக்கு மோதிரமும், நகையும் செய்து போட்டார். புகழின் உச்சியிலும், செல்வச் செழிப்பிலும் தவழ்ந்த டி.பி.ராஜலக்ஷ்மி அவர்களின் கடைசி நாட்கள் மகிழ்ச்சிக்குரியதாக இல்லை. வறுமை யாரை விட்டது? இந்த அற்புதமான பெண்மணி 1964இல் காலமானார். அவரை நினைவு கூர்ந்து தமிழக முதல்வர் அவருடைய நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவதை கலைஞர்கள் அனைவரும் வரவேற்று மகிழவேண்டும்.

குறிப்பு: திருவையாறு ஊரை ஒரு சுற்றுலாத் தலமாக உருவாக்கிட வேண்டுமென்று திருவையாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மரியாதைக்குரிய திரு ரத்தினசாமி அவர்களும், திருவையாறு ஊராட்சித் தலைவர் அவர்களும் வேறு சிலரும் முயற்சி எடுத்து பல தகவல்களை அரசுக்கு அளித்திருக்கின்றனர். அதில் திருவையாறு பாலாஜி எனும் சித்திரக் கலைஞர் கொடுத்த மனுவில் டி.பி.ராஜலக்ஷ்மி எனும் அரிய கலைஞர் பிறந்த ஊர் திருவையாறு என்றும், அவருக்கு அங்கு ஒரு சிலை நிறுவ வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.

1 comment:

  1. திரை வானில் மின்னிய தாரகை என்பதற்கு இது தான் அடையாளம் போலும்!.. வறுமையின் கொடுமையால் துன்பப்பட்ட நிகழ்ச்சிகள் வேதனையளித்தது.. நல்ல கலைஞர்கள் பெயர் நிலைத்திருக்க வேண்டும்!..

    ReplyDelete

You can give your comments here