பாரதி பயிலகம் வலைப்பூ

Saturday, June 30, 2012

கனவுப் பூக்கள்!

 கனவுப் பூக்கள்!

                                  என் வி சுப்பராமன்
                                     12/1045, ஜீவன் பீமா நகர்
                                     சென்னை 600101
                                     26544950/9840477552
உறக்கக் கருவில் உதித்த மலர்கள்
மலர்ந்து உதிர்ந்த கனவுப் பூக்கள்!

விண்வெளிதனிலே நடந்து சென்றதும்
ஆழ்கடல் நீர்தனில் ஓடிச் சென்றதும்
மண்தரைதனிலே நீந்திச் சென்றதும்
சந்திரன் வீட்டில் கால் பதித்துவும்
சூரியன் வீட்டில் விருந்து உண்டதுவும்
செவ்வாய் வீட்டினில் கால்பந்து ஆடியதும்
உறக்கக் கருவில் உதித்த மலர்கள்
மலர்ந்து உதிர்ந்த கனவுப் பூக்கள்!

நானே,
மரத்தில் காயாய்க் காய்த்ததுவும்
    காய்களைப் பறித்துத் தின்றதுவும்
பழமாய்ப் பழுத்து நிறைந்ததுவும்
    பழுத்ததைச் சுவைத்து  மகிழ்ந்ததுவும்
பூவாய்ப் பூத்து குலுங்கியதும்
    பூவின் வாசம்நுகர்ந்து களித்ததுவும்
உறக்கக் கருவில் உதித்த மலர்கள்
மலர்ந்து உதிர்ந்த கனவுப் பூக்கள்!

எழுபது வயதினில் குழவியாய்ப் போனதும்
ஐந்து வயதினில் கிழமாய்ப் போனதும்
எண்பது வயதினில் பல் முளைத்ததுவும்
ஏழு வயதில்-
என்தலை வழுக்கையானதுவும்
உறக்கக் கருவில் உதித்த மலர்கள்
மலர்ந்து உதிர்ந்த கனவுப் பூக்கள்!

கைகளின்றி கப்பல் விட்டதும்
கால்களின்றி விண்தேர் விட்டதும்
கண்களின்றி சித்திரம் வரைந்ததும்
காதுகளின்றி இசைதனைக் கேட்டதும்
உறக்கக் கருவில் உதித்த மலர்கள்
மலர்ந்து உதிர்ந்த கனவுப் பூக்கள்!

கனவிலும் இயலாப் பணிகள் பலவும்
நினைவாய்ச் செய்தலும் எளிமையென்பேன்!
உறுதியும் ஊக்கமும் உதவி செய்யும்
ஊழ்வினைதானும் உருண்டே செல்லும்
நேர்மையும் நியாயமும் நிரம்பி நின்றால்
வாழ்வினில் வெற்றி இனிதாய்க் கிட்டும்!
எண்ணிய எண்ணம் அழகாய் முடியும்
பண்ணிய புண்ணியம் துணையாய் நிற்கும்!      

No comments:

Post a Comment

You can give your comments here