இந்தியாவில் 300 இராமாயணங்கள்
"விஜயபாரதம்" 6-1-2012 இதழில் "போலி அறிவுஜீவிகளின் இரட்டை வேடம்" எனும் தலைப்பில் ஒரு கட்டுரை வெளியாகியிருக்கிறது. இதில் டெல்லி பல்கலைக் கழகம் ஏ.கே.இராமானுஜம் என்பவர் எழுதிய 300 இராமாயணங்கள் எனும் கட்டுரை பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கும் செய்தியையும், அதை எதிர்த்து இடதுசாரி அறிவுஜீவிகள் எனப்படுவோர் எதிர்த்துப் போராடுவதையும் குறித்து அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த விவரங்களை முழுமையாகத் தெரிந்து கொள்ளாத வர்கள் இந்தக் கட்டுரையில் காணப்படும் கருத்துக்கள் எவை, ஏன் இந்தக் கட்டுரை நீக்கப்பட்டது என்பதைத் தெரிந்து கொள்ள விரும்பலாம். ஆகவே இந்த 300 இராமாயணங்கள் பற்றிய மேலும் சில விவரங்களையும், அது ஏன் நீக்கப்பட்டது என்பதற்கான விளக்கத்தையும் பார்க்கலாம்.
இந்தக் கட்டுரையின் ஆசிரியர் ஏ.கே.ராமானுஜம் என்பவர் மைசூர்க்காரர். மைசூர் பல்கலைக் கழகத்தில் ஆங்கில இலக்கியம் எம்.ஏ.படித்தவர். 1959இல் இவர் அமெரிக்கா சென்றார். பின்னர் அங்கேயே வசித்துவிட்டு 1993இல் காலமானார் என்று தெரிய வருகிறது. மொழியியல் அறிஞராக விளங்கியவர். இவரைப் பற்றிய ஒரு கட்டுரையில் இவர் தமிழின் வளமான மரபுகளை அறிந்தவர் என்றும், மேலை நாட்டவரி டையே சங்க இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துப் பரப்பியவர் என்றும், நம்மாழ்வார் பாடல்களையும் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறார் என்றும், கன்னட, தமிழ் இலக்கியங்களில் ஈடுபாடு உடையவர் என்பதும் தெரிய வருகிறது.
இவர் அமெரிக்காவிலுள்ள டெக்ஸாஸ் மாநிலத்திலுள்ள செளத் வெஸ்டர்ன் யுனிவர்சிடி யொன்றில் நடந்த கருத்தரங்குக்காக அனுப்பிய கட்டுரைதான் ஆங்கில தலைப்பிட்ட "Three Hundred Ramayanas" எனும் ஆங்கில கட்டுரை. இந்தக் கட்டுரையும், மேலும் சில கட்டுரைகளும் சேர்ந்து ஒரே நூலாக ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழக அச்சகம் வெளியிட்டது. அந்த நூலின் ஆசிரியர் ஏ.கே.இராமா னுஜனின் இந்தக் கட்டுரை இராமாயணக் காப்பியத்தை புதிய கோணத்தில் கொடுத்திருப்பதாகச் சொல்லியிருக்கிறார்.
பிரச்சினைக்குரிய இந்த 300 இராமாயணங்கள் எனும் ஏ.கே.இராமானுஜனின் கட்டுரை டெல்லி பல்கலைக் கழகத்தின் வரலாற்றுப் பாடத் திட்டத்தில் சேர்க்கப் பட்டது. அதற்கு பலத்த எதிர்ப்புக் குரல் எழுப்பியதாலும் இந்தக் கட்டுரை இந்திய வரலாற்றை, இராமாயணக் கதையைத் திரித்துக் கூறி அதன் புகழுக்குக் களங்கம் ஏற்படுத்துவதாலும், இதனைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்கக் குரல் எழும்பியது. வழக்கம் போல 'விஜயபாரதம்' இதழில் குறிப்பிடப்படும் அறிவுஜீவிகள் இந்தக் கட்டுரையை நீக்கக்கூடாது என்று பிடிவாதம் பிடித்தும், பல்கலைக்கழக நிர்வாகம் நீக்கியிருக்கிறது. அதற்கு அவர்கள் கூறும் காரணம் என்ன தெரியுமா? இந்தக் கட்டுரை இராமாயணத்தை விமர்சிக்கவில்லையாம், கேலி செய்யவில்லையாம், மாறாக இராமாயணத்தின் பல்வேறு பரிணாமங்களையும், பெருமைகளையும் எடுத்துக் காட்டுகிறதாம். ஆகையால் அந்தக் கட்டுரையை நீக்கக்கூடாதாம்.
இந்தக் கட்டுரை பற்றி எழுதியிருக்கும் ஒருவர் இந்தக் கட்டுரை இந்தி பேசும் பகுதியொன்றில் வழங்கப்பெறும் ஒரு நாட்டுப்புற கதையுடன் தொடங்குகிறது என்கிறார். அந்தக் கதை என்ன தெரியுமா? அயோத்தியில் இராமபிரான் தன் சபாமண்டபத்தில் இருக்கும்போது அவனுடைய மோதிரம் கழன்று கீழே விழுந்து விடுகிறதாம். அது விழுந்த இடத்தை துளைத்துக் கொண்டு கீழே கிழே அது போய்விடுகிறதாம். அதை எடுக்க அனுமனை ஏவ, அவனும் சின்னஞ்சிறு உருவம் எடுத்துக் கொண்டு அந்த துளை வழியாகப் போக, அந்த மோதிரம் போய்ச்சேர்ந்த பாதாள லோகத்துக்கு அனுமனும் போகிறானாம். அங்கிருக்கும் பூதங்களின் மன்னன் முன் அனுமன் கொண்டு செல்லப்படுகிறான். இராமனின் மோதிரத்தை எடுத்துச் செல்ல வந்திருப்பதாக அந்த பூத அரசனிடம் அவன் சொல்லுகிறான். அந்த மன்னன் ஏராளமான மோதிரங்களைக் காண்பித்து இதில் உன் இராமனின் மோதிரம் எதுவோ அதை எடுத்துக்கொள் என்கிறானாம். அனுமனால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதற்கு அந்த அரசன் இங்கு எத்தனை மோதிரங்கள் உள்ளனவோ, அத்தனை இராமன்கள் இருக்கிறார்கள். இப்போது ராமன் அயோத்தியில் இல்லை, அவன் அவதார நோக்கம் முடிந்துவிட்டது, அவன் வந்த நோக்கம் முடிந்துவிட்டதால் இந்த மோதிரமும் அவனிடமிருந்து நழுவிட்டது என்று சொல்லி நீயே போய்ப்பார் என்கிறான். இப்படியொரு கதை. இதுபோல பல இராமாயணங்கள் பல்வேறு பகுதிகளில் வழங்கி வருவதாக அவர் அந்தக் கட்டுரையில் சொல்லுகிறார்.
இந்திய மொழிகள் தவிர பல கிழக்காசிய நாட்டு மொழிகளிலும் இதுபோன்ற பல இராமாயணக் கதைகள் உண்டு என்கிறார் இந்தக் கட்டுரையில். கெளதம ரிஷி அகலியை கதையைப் பற்றிய ஒப்பீடுகளையும் இந்தக் கட்டுரையில் பல இராமாயணக் கதைகளைக் காட்டி எழுதியிருக்கிறார். குறிப்பாக வான்மீகத்துக்கும் கம்பனுக்குமுள்ள வேறுபாடுகளை இந்த அகலிகை கதை மூலம் விவரிக்கிறார்.
இப்படிப்பட்ட பல இராமாயணக் கதைகளில் விமலசூரி எனும் சமணர் பிராகிருத மொழியில் எழுதிய இராமாயணக் கதை பற்றியும் இவர் எழுதுகிறார். இந்த சமணமத இராமாயணத்தில் இராவணன் முன்னிலைப் படுத்தப் படுகிறான். இராவணன் சமண மதத் தலைவர்களில் ஒருவனாம். நல்லொழுக்கம் மிக்க இந்த இராவணன் விதியின் வசத்தால் சீதையின் மீது ஆசைப்பட்டு முடிவைத் தேடிக் கொள்வதாக வரலாறு.
மற்றொரு சமண சமய இராமாயணம். அதில் இராவணனின் மகள் சீதை என்று சொல்லப்படுகிறதாம். நம்மூர் ஆர்.எஸ்.மனோகரும் தன்னுடைய "இலங்கேஸ்வரன்" எனும் நாடகத்தில் இப்படித்தான் கதை சொல்லுகிறார். சமண மத இராமாயணம் தவிர, கன்னட மொழி இராமாயணம் ஒன்றைப் பற்றியும் குறிப்பிடப் படுகிறதாம். அதில் இராவணனும் மண்டோதரியும் தங்களுக்கு மகப்பேறு இல்லை என்பதால் காட்டுக்குச் சென்று உடலை வருத்தித் தவம் செய்கிறார்களாம். அப்போது ஒரு துறவி இவர்களிடம் ஒரு மாம்பழத்தைக் கொடுத்து சதைப் பகுதியை மண்டோதரியும், கொட்டையை மட்டும் இராவணன் எடுத்துக் கொள்ள வேண்டுமென்கிறார். ஆனால் இராவணன் வார்த்தை மீறி சதைப் பகுதியைத் தான் சாப்பிட்டு கொட்டையை மண்டோதரியிடம் கொடுக்கிறானாம். சதைப் பகுதியைச் சாப்பிட்ட இராவணனுக்குக் கர்ப்பம் ஏற்பட்டு சீதை அவன் மூக்கின் வழியாகப் பிறக்கிறாளாம். இப்படிப் போகிறது அந்த இராமாயணம்.
இப்படிப் பல இராமாயணக் கதைகளைச் சொல்லிவிட்டு, கம்பனைப் புகழ்ந்து அந்தக் கட்டுரையில் எழுதிச் செல்கிறார். இந்தக் கட்டுரையை டெல்லி பல்கலைக்கழகப் பாடத் திட்டத்திலிருந்து நீக்கும் விஷயம் பல ஆண்டுகளாக இருந்து வந்ததாகவும், பின்னர் அது நீதிமன்றத்துக்குச் சென்றதாகவும் தெரிகிறது. இப்போது இந்தக் கட்டுரை நீக்கப்பட்ட காரணத்தைப் பலரும் பலவிதமாக விளக்கிக் கொண்டிருக்கிறார்கள். வான்மீகியையும் கம்பனையும் ஒப்பிட்டு ஆசிரியர் கம்பனை உயர்த்திப் பேசுவதால் நீக்கிவிட்டார்கள் என்றும் ஒரு குற்றச்சாட்டு வருகிறது. ஏ.கே.இராமானுஜன் வரலாற்றுத் துறை சார்ந்தவர் அல்ல, ஆகையால் இதனை பி.ஏ. வரலாற்றுப் பாடமாக வைக்கக்கூடாது என்று நீக்கிவிட்டார்கள் என்றும் ஒரு குற்றச்சாட்டு.
இந்தக் கட்டுரை பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டதை குறைகூறும் அறிவுஜீவிகள், இதுபோன்ற கோணல் மாணல் இராமாயணக் கதைகளை உலவ விடுவது சரியல்ல என்பதை உணர்ந்திருந்த போதும், ஏதோ பெரிய இலக்கிய இழப்பைப் போல இந்தக் கட்டுரையின் உட்செறிவையும், அது ஏற்படுத்தும் தாக்கத்தையும் மாணவ சமுதாயம் இழந்துவிட்டதைப் போலப் புலம்புகிறார்கள். பெரும்பாலான இந்தியர்கள், இந்துக்கள் வழிபடும் இராமனைக் கேலிக்குரியவராக சித்தரிக்கும் இதுபோன்ற விஷமத்தனமான பிரச்சாரங்கள் முறியடிக்க வேண்டுமென்பதில் நாம் ஒற்றுமையாக இருப்பது ஒன்றே வழி!
2 comments:
எனக்கு தெரிந்ததெல்லாம் பள்ளியில் படித்த ராமாயனம் மட்டுமே.
இங்கு வந்துள்ளதோ பலப்பல .அவைகளின் போக்கையும் தெரிந்து கொண்டேன்
ஒரு இதிகாசத்தை!... இட்டுகட்டியக் கதைகளோடு ஒரே புத்தகத்தில் எழுதியது எத்தனை தவறு என்பதை அந்த நூலை எழுதியவர் உணராது போனாலும். இந்தியாவிலே ஒரு கல்வி நிலையத்தில் அதைப் பகுத்தறியும் தன்மை இல்லாது போனதும் துரதஷ்டமானது. தார்ப்பரியம் அறியாது அதற்காக வாதாடும் அந்த தகைமை இல்லாதவர்களும் பரிதாபத்துக்கு உரியவர்களாகிறார். இதையே உண்மையாக சாட்சியாகக் கொண்டு ஒரு கூட்டாம் எதிர் காலத்தில் வாதாடவும் வந்து நிற்கும் என்பதில் ஐயமில்லை.
நன்றிகள் ஐயா!
Post a Comment