பாரதி பயிலகம் வலைப்பூ

Saturday, June 30, 2012

நான் சாதிக்கப்பிறந்தவன்!

   சிறு பிள்ளைத்தனம்

நான்
சாதிக்கப் பிறந்தவன்!
என்ன சாதனையா
சொல்கிறேன்...

அழகு
அமைதி
அன்பு
ஆராதனை-யாவும் பிடிக்காது
அவைகளை அழித்து விடுவேன்.

எனக்கு
எந்த விளையாட்டும் தெரியாது
ஆனால்
என்னையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்
இல்லையெனில் ஆட்டத்தைக் 
கலைத்து விடுவேன்.

எனக்குப்  பாட தெரியாது
ஆனால்
என் பாட்டை ரசிக்கவேண்டும்
இல்லையெனில்
கழுதையை கத்த விடுவேன்.

எனக்குப் பேசத்தெரியாது
ஆனால்
என் பேச்சை
சொற்பொழிவு என பாராட்டவேண்டும்.

நான்தான்
எங்கும் பிரதானம்.
வேடந்தாங்கல் போனாலும்
வேட்டையே ஆடுவேன்!
வேதங்கள் ஓதும் இடமென்றாலும்
பாதஅணி விலக்க மாட்டேன்!

படித்துறையும் படிப்புத்துறையும்
இரண்டும் ஒன்றுதான்!
பத்தும் எனக்கு தெரியும்-நான்
ஊரில் உலாவிடும் சிங்கம்!

தற் புகழ்சியாம்
எனக்காம்!
என்னை நீங்கள்
தெரிந்துகொள்ள சொல்வதெல்லாம்
எப்படி
தற் புகழ்சியாகும்?

தலைகம் கூடாதாம்
சொல்கிறார்கள்.
எனக்கு
இலக்கணமே தெரியாதே!

நான்...
தான் எனும்
கர்வம் உள்ள
சாதிக்குப் பிறந்தவன்
சாதிக்க மாட்டேனா!

அதனால்தான் சொல்கிறேன்
நான்
சாதிக்கப்பிறந்தவன்!

-தனுசு-

No comments: