பாரதி பயிலகம் வலைப்பூ

Friday, December 16, 2011

ராஜாஜியும் காமராஜரும்


ராஜாஜியும் காமராஜரும்


(இந்தக் கட்டுரையை எழுதியவர் ஒரு புகழ்பெற்ற காங்கிரஸ்காரர். நகைச்சுவையோடு நீண்ட நேரம் பேசக்கூடியவர். ஆவேசமாகவும் பேசுவார், கேட்போரை அழவும் வைத்துவிடுவார். சிரித்துச் சிரித்து வயிறு புண்ணாகும்படி பல பழமொழிகளை உதிர்த்துக் கிண்டலாகவும் பேசுவார். 1942இல் நடந்த வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் தமிழகத்தில் இவர்தான் பெரிய 'ஹீரோ' எனச் சொல்லும்படி நம்பமுடியாத சம்பவங்கள் நடந்தேறின. இவர் யார்? கட்டுரையைப் படித்து முடித்துவிட்டு இவர் யார் என்பதைப் பாருங்கள்.)

1942இல் ராஜாஜி காங்கிரசை விட்டு வெளியேறிவிட்டார். க்விட் இந்தியா இயக்கம் வன்முறை இயக்கம் என்பது அவர் கருத்து. அதன் பின்னர் அவரை காங்கிரசில் சேர்க்க சிலர் முயன்றனர். தமிழ் நாட்டின் காங்கிரஸ் தலைமை எதிர்த்தது. இந்த சூழ்நிலை குறித்த நமது 'புகழ்பெற்ற' கட்டுரையாளர் என்ன சொல்கிறார் என்பதை இந்தக் கட்டுரையில் காண்போம்.
Chinna Annamalai with Rajaji & MKT Bhagawathar

"காங்கிரசிற்கு ராஜாஜி வேண்டாம்" என்று தமிழ் நாட்டுக் காங்கிரஸ்காரர்களில் ஒரு பகுதியினர் கிளர்ச்சி நடத்தினர். இந்தக் கிளர்ச்சியைத் தலைவர் காமராஜ் ஆதரித்தார். மற்றும் பல காங்கிரஸ் தலைவர்களும் அதே எண்ணம் கொண்டு தொண்டர்களைத் தூண்டி வந்தனர். 

"காங்கிரசிற்கு ராஜாஜி வேண்டும்" என்று தலைவர்களில் ஒரு சாராரும், தொண்டர்களில் சிறுபான்மையினரும் வாதாடினார்கள்.

நான் சிறுவயது முதற்கொண்டே ராஜாஜியின் அடிச்சுவட்டைப் பின்பற்றி வந்தவன். அரசியலிலும் சரி, தமிழ்த் தொண்டிலும் சரி ராஜாஜி உடன் இருந்து பல காரியங்கள் செய்து வருபவன். ஆகவே "ராஜாஜி வேண்டும்" என்ற கோஷ்டியில் நான் சேர்ந்து பணிபுரிவது இயற்கையே. ஆனால் காமராஜ் என் மீது தனி அபிமானம் கொண்டிருந்தார். 1942 போராட்டத்தில் எனது 'சாகசம்' அவரைக் கவர்ந்திருந்தது. எனது நகைச்சுவைப் பேச்சு அவருக்கு மிகவும் பிடிக்கும்.

ஒரு நாள் நான் காமராஜ் அவர்களைப் பார்க்கப் போயிருந்தபோது என்னிடம் மிகவும் கோபமாக பேசினார். "ராஜாஜி 1942 போராட்டம் செய்தவர்களை எல்லாம் 'குண்டர்கள், பலாத்காரவாதிகள்' என்றெல்லாம் ஏசிப்பேசி நமது போராட்டத்தை எதிர்த்தாரே மறந்து விட்டீர்களா? 1942 போராட்டத்தை நடத்திய நீங்கள் குண்டரா? நான் குண்டாவா? இப்படிப்பட்டவர்களைக் காங்கிரசில் வைத்துக் கொள்ளலாமா? 1942 ஆகஸ்டில் தியாகம் செய்யாதவர்கள் காங்கிரசிற்கே வேண்டாம்" என்று பொரிந்து தள்ளினார்.

நாம் அமைதியாகச் சொன்னேன். "ராஜாஜியை ஆகஸ்ட் தியாகி இல்லை என்று சொல்லுகிறீர்கள். அதனால் என்ன, அவர் செப்டம்பர் தியாகி, அக்டோபர் தியாகி, நவம்பர் தியாகி, டிசம்பர் தியாகி -- பல ஆண்டுகளாகப் பல மாதங்கள் தியாகம் செய்த பெரியவரை - சிறந்த அறிஞரை நான் இழக்க விரும்பவில்லை" என்றேன்.

"காங்கிரஸ் தொண்டர்கள் பெரும்பாலோர் வேண்டாம் என்று சொல்லும்போது நீ மட்டும் ஏன் கிறுக்கனாக இருக்கிறாய்?" என்றார். "எனக்கு காந்தி கிறுக்கு - காந்தியடிகளை நம்பி காங்கிரசுக்கு வந்தவன். மகாத்மாஜி "ராஜாஜியை வேண்டாம்" என்று சொல்லவில்லையே. ராஜாஜியை ஏற்றுக் கொள்ளும்படிதானே 'ஹரிஜன்' பத்திரிகையில் எழுதியிருக்கிறார்."

"நீங்கள் எல்லாம் ஏன் காந்திஜி பேச்சை மீறுகிறீர்கள்? காந்திஜிக்கு விரோதமான இக்காரியம் செய்யும் உங்களுடன் நான் ஒருக்காலும் ஒத்துழைக்க மாட்டேன். காந்தியடிகளின் விருப்பத்தைத் தமிழ்நாட்டு மக்களுக்குப் பிரச்சாரம் செய்வேன்" என்றேன்.

"சரி, சரி போ - போய் அந்தக் கிழவனைக் கட்டிக் கொண்டு அழு" என்று சீறினார். நான் அமைதியாக வந்துவிட்டேன்.

அதன் பின்னர் "ராஜாஜி வேண்டும்", "வேண்டாம்" கிளர்ச்சி பெரிதாக நடந்தது. ராஜாஜியை காங்கிரஸ் உறுப்பினராக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் அபுல் கலாம் ஆசாத் அவர்கள் சேர்த்துக் கொண்டார். ராஜாஜியை வேண்டாம் என்று சொல்பவர்களை 'க்ளிக்' என்று மகாத்மாஜி ஹரிஜன் பத்திரிகையில் எழுதினார்.

உடனே காந்திஜியை கண்டனம் செய்து காங்கிரஸ் தொண்டர்கள் பலர் பேசினார்கள். சில ஊர்களில் காந்தியடிகளின் படங்கள்கூட எரிக்கப்பட்டன. இப்படியாகத் தமிழ்நாட்டில் காங்கிரஸ் அல்லோலப் பட்டது.

கடைசியில் ஒரு வழியாக ராஜாஜி மத்திய அரசில் மந்திரியானார். அத்துடன் அந்தப் பிரச்னை தீர்ந்தது. ஆனால் திரு காமராஜ் அவர்கள் அதன் பின்னர் ராஜாஜியை ஆதரித்தவர்களை நம்புவதில்லை. காங்கிரஸ் கமிட்டிகளில் எதிலும் வந்து விடாதபடி பார்த்துக் கொண்டார்.

நான் எப்போதும்போல் காங்கிரஸ் பிரசாரம் செய்து கொண்டிருந்தேன். நாளாக ஆக, தலைவர் காமராஜ் அவர்கள் பழையபடி என்னுடன் சுமுகமாகப் பழக ஆரம்பித்தார்கள்.

ராஜாஜி வங்காள கவர்னராகி, அதன் பின்னர் இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரலாகி மிகுந்த புகழுடன் பதவி விட்டு சென்னை வந்து தங்கியிருந்தார்.

1952 தேர்தலில் காமராஜ் சுற்றுப்பயணம் செய்யும்போது என்னைக் கூடவே கூட்டிக் கொண்டு போனார். ரொம்பவும் அன்பு காட்டினார். நானும் "இனி காமராஜ் நம்பிக்கையைப் பெற்று விடலாம் என்று மகிழ்ந்திருந்தேன். தேர்தலில் முதலமைச்சர் குமாரசாமி ராஜா தோற்றார். காங்கிரஸ் பெரும்பான்மை இழுபறியாகிவிட்டது. காமராஜ் பார்லிமெண்டுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில் காங்கிரஸ் மந்திரிசபை அமைப்பதானால் ராஜாஜியைத் தவிர வேறு யாராலும் சமாளிக்க முடியாது என்று குமாரசாமி ராஜா கருதினார். மீண்டும் ராஜாஜியை முதலமைச்சராகக் கொண்டு வருவதை காமராஜ் எதிர்த்தார்.

கடைசியில் சர்தார் வல்லபாய் படேலும், நேருஜியும் ராஜாஜிதான் முதலமைச்சராக இருக்க வேண்டும் என்று தீர்மானமாகக் கூறிவிட்டார்கள். காங்கிரஸ் மேலிடம் உத்தரவிட்டால் காங்கிரஸ்காரர்கள் கீழ்ப்படிய வேண்டியதுதானே? ஆனால் காமராஜ் எதுவும் கூறாமல் மெளனமாக இருந்து வந்தார்.

ராஜாஜி மந்திரிசபை அமைத்தார். கம்யூனிஸ்டுகள் வன்மையாக எதிர்த்தார்கள். "ராஜாஜி மந்திரிசபை எதிர்ப்புக் கூட்டம்" என்று மூலைக்கு மூலை போட்டார்கள். அவர்களுடன் காங்கிரஸ் எதிரிகள் அனைவரும் சேர்ந்து கொண்டார்கள்.

இந்நிலையில் காங்கிரஸ் கமிட்டிகள் மெளனமாகவே இருந்தன. காமராசரும் நமக்கென்ன என்பது போல வாளாவிருந்தார். இதை என்னால் கொஞ்சம் கூட பொறுக்க முடியவில்லை. நேராக காமராஜரிடம் போனேன். "இப்படி இருந்தால் எப்படி?" என்றேன்.

"என்ன செய்யச் சொல்கிறீர்கள்?" என்றார். "மந்திரிசபை காங்கிரஸ் மந்திரிசபைதானே. அதை ஆதரித்து நாம் கூட்டம் போட்டு எதிர்க்கட்சிகளின் போக்கை அம்பலப்படுத்த வேண்டாமா?" என்றேன்.

"ராஜாஜியை எவன் கொண்டு வந்தானோ அவன் செய்யட்டும். நான் ஒன்றும் செய்யப் போவதில்லை" என்றார்.

"நீங்கள் காங்கிரஸ் கட்சித் தலைவர். நடப்பது காங்கிரஸ் மந்திரிசபை. இதை ஆதரிப்பது ஒரு காங்கிரஸ்காரன் கடமை அல்லவா?" என்றேன்.

"ஆமா! கடமைதான். நீ வேண்டுமானால் உன் கடமையைச் செய்" என்று கோபமாகப் பேசினார்.

"கடமையைக் கண்டிப்பாகச் செய்வேன்" என்று கூறிவிட்டு திரு ம.பொ.சி.யிடம் போனேன். பின்னர் சி.சுப்பிரமணியத்தைச் சந்தித்தேன். கல்கி கிருஷ்ணமூர்த்தி முதலியவர்களைச் சந்தித்துப் பேசினேன்.

அதன் பலன் சென்னை கடற்கரையில் திரு ம.பொ.சி. தலைமையில் ராஜாஜி மந்திரிசபை ஆதரவுக் கூட்டம் பிரம்மாண்டமான முறையில் நடந்தது. ராஜாஜியும் வந்து கலந்து கொண்டார்.

பின்னர் பட்டி தொட்டிகளில் எல்லாம் மந்திரிசபைக்கு ஆதரவுக் கூட்டம் நடந்தது. கம்யூனிஸ்டுகள் ஒருவாறு அடங்கினார்கள். இவைகள் எதிலும் காமராஜ் அவர்கள் கலந்து கொள்ளவில்லை. என்மீது மீண்டும் அவர் கோபம் கொண்டார்.

ராஜாஜிக்கு இக்கட்டான நிலைமை உண்டானது. புதிய கல்வித் திட்டத்தைத் திரித்துக் கூறி ராஜாஜியை திராவிடக் கழகம் - முன்னேற்றக் கழகம் எல்லாம் எதிர்த்தார்கள். அப்போதும் தலைவர் காமராஜ் ராஜாஜிக்கு ஆதரவாக இருக்கவில்லை. அதனால் ராஜாஜி தன் பதவியை ராஜிநாமா செய்தார். பின்னர் காமராஜ் முதன் மந்திரியானார்.

ராஜாஜி பத்து ஆண்டுகளுக்குப் பிறகு திரு அண்ணாதுரை அவர்களுடன் கூட்டுச் சேர்ந்து 1967 தேர்தலில் காமராஜ் அவர்களையும் தோற்கடித்து, காங்கிரஸ் கட்சியையும் தோற்கடித்தார்.

ராஜாஜி - காமராஜ் சண்டையினால்தான், காங்கிரஸ் நாளாவட்டத்தில் பலவீனமடைந்தது. தேசிய சக்திகள் குன்ற தேச விரோத சக்திகள் பலமடைந்தன.

காமராஜ் அவர்களை முறியடிக்க ராஜாஜி அவர்கள் செய்த முயற்சியில் தி.மு.க. ஆட்சியில் அமர்ந்துவிட்டது. பின்னர் ராஜாஜி - காமராஜ் இருவரும் ஒன்று சேர்ந்தும் கூட தி.மு.க.வைத் தோற்கடிக்க முடியவில்லை. தேசிய சக்திகள் மீண்டும் தமிழகத்தில் தலைதூக்க முடியாதபடி ராஜாஜி காமராஜ் பகை செய்துவிட்டது.

அரசியலில் ராஜாஜி - காமராஜ் அபிப்பிராய பேதம் கொண்டிருந்தார்களே ஒழிய, தனிப்பட்ட முறையில் இருவரும் ஒருவரை ஒருவர் மிகவும் மதித்தார்கள்.

ராஜாஜி தன் கடைசி காலத்தில் தமிழ அரசைக் காமராஜரிடம் ஒப்படைக்க வேண்டுமென்று மிகவும் விரும்பினார். காமராஜரைப் போன்ற நாணயமான வாழ்க்கை உடையவர்கள் அரசியலில் கிடைப்பது அரிது என்று ராஜாஜி கருதினார். இதைப் பகிரங்கமாக எழுதினார், பேசினார்.

ஆனால் ராஜாஜியின் எண்ணம் நிறைவேறவில்லை. அவர் அமரரானார். சொன்னால் நம்பமாட்டீர்கள்! யாருக்கும் கண்ணீர் விடாத காமராசர், ராஜாஜியின் சடலத்தைப் பார்த்ததும் 'பொல பொல'வென்று கண்ணீர் சிந்தினார்.

(இதை எழுதியவர் யார் என்பதைத் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறதா? இவர் 1942 க்விட் இந்தியா போராட்டத்தில் தூள் கிளப்பியவர். இவருக்காக ஒரு ஊரின் சிறைக் கதவுகள் உடைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டவர். யார் இவர்? நாளைக்குச் சொல்கிறேனே, ஒரு சிறு சஸ்பென்சோடு. கண்டுபிடிக்க முடிந்தவர்களுக்கு சபாஷ், தமிழக வரலாற்றை நன்கு படித்தவர்கள் என்று பாராட்டுகிறேன்.)


"காமராஜ் - ராஜாஜி" குறித்து நேற்று வெளிவந்த கட்டுரையை எழுதியவர் திரு சின்ன அண்ணாமலை. அவருடைய "சொன்னால் நம்பமாட்டீர்கள்" எனும் நூலில் வெளியான கட்டுரை அது. இவர் செட்டிநாட்டில் தேவகோட்டையைச் சேர்ந்தவர். தமிழ் நூல்கள் வெளியீட்டாளர். தமிழ்ப் பண்ணை எனும் இவரது பதிப்பகம் பல எழுத்தாளர்கள் கூடும் இடமாக இருந்தது. இவர் 1942இல் கைது செய்யப்பட்டு திருவாடனை சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு வந்து சிறைக் கதவை உடைத்து இவரை வெளிக் கொணர்ந்தனர். பின்னர் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழந்தனர். இவர் காங்கிரஸ் கட்சியிலும் பின்னர் ம.பொ.சி.யின் தமிழரசுக் கழகத்திலும் இருந்தவர். தங்கமலை ரகசியம் போன்ற பல திரைப்படங்களை எடுத்தவர். சரோஜா தேவியை திரையுலகத்துக்கு அறிமுகம் செய்தவர். சிவாஜி ரசிகர் மன்றத்தைத் தோற்றுவித்தவர்.

2 comments:

thanusu said...

ராஜாஜியின் முழு சரிதமும் தெரிவித்த அய்யா அவர்களுக்கு மிக்க நன்றி.இதை போல இன்னும் பலரைப்பற்றி எழுதினால் நன்றாக இருக்கும்.

தமிழ் அருவியின் தமிழை நான் விரும்புகிறேன் .அவரின் அருமையான கவிதையை மகவும் ரசித்தேன்.

Unknown said...

ஒருகுகைக்குள் இரண்டு சிங்கங்கள் அதிலும் இரண்டும் அரசியல் சிங்கங்கள்...
ஒருவரை ஒருவர் பேணாதது பேராபத்தாய்ப் போனது...
இது வசிஷ்ட-விஸ்வாமித்திர உரசலாக இருந்திருக்கிறது...
இவர்கள் இருவரும் ஒற்றுமையாக இருந்திருந்தாலும் கூட கொஞ்ச காலம் தான் அது அவர்களின் காலம் வரை தான் இருந்திருக்கும்....
காரணம் காந்திய வாதிகளுக்கு காங்கிரசிலே பஞ்சம் ஆகிப் போனது....
மா.பொ.சி போன்றவர்களே அங்கிருந்து கிளம்பி திராவிடம் சார்ந்த மிதவாதிகளாலே மதிக்கப் படும் நிலைக்கு ஆளானார்...
தி.மு.க வின் மாற்றுக்காக நடுநிலையாளர்களின் ஏற்பாடாக அது (அ.தி.மு.க) உதித்தாலும்.... எல்லாம் கலப்பிடமானது தான் இவர்களுக்கு பின்பான அரசியல் கட்சிகள் யாவுமே....
எனினும் இப்போது இருக்கும் காங்கிரஸ், இந்திய தேசியக் காங்கிரஸ் இல்லை என்பதும் ஆறுதல் அளிக்கிறது...
இன்றைய சூழலில் அரசியல் என்பது அழுகிய குப்பையாகவே தெரிகிறது....

காந்தியைப் போன்ற ஆசான்களே சரி செய்ய முடியாத அரசியல் அமைப்பை... இன்றைய சூழலில் எண்ணிப் பார்க்கையில்... பரந்தாமன் தான் காக்கணும்...

ஒரு வரலாற்று சரிவு பற்றிய நிகழ்வுகள் அடங்கியப் பதிவு... அறிவார்ந்த நல்ல மனிதர்களும், அரசியலில் அரசியல் வாதிகளாகவே இருந்தும் இருக்கிறார்கள்... "பகைவனுக்கும் அருள்வாய் நன் நெஞ்சே" என்ற பாரதியின் சிந்தனையை வளர்க்காத எவ்வளவு பெரிய சான்றோனும் சரித்திர வழுக்களைத் தவிர்க்க முடியாது என்பதே உண்மையாகத் தெரிகிறது... நன்றிகள் ஐயா!

நண்பர் கவிஞர் தனசு அவர்களின் பாராட்டிற்கு நன்றிகளையும் கூறிக் கொள்கிறேன்...

வாழ்க!வளர்க!!நமது மகாகவியின் புகழ்!!!