பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, December 15, 2011

ராஜாஜி

ராஜாஜி அவர்களுடைய பிறந்த நாளையொட்டி வெளியாகும் சிறப்புக் கட்டுரை இது:

ராஜாஜி

1878 டிசம்பர் 10ஆம் தேதி தமிழகத்தின் அப்போதைய சேலம் மாவட்டத்தில் தொரப்பள்ளி எனும் ஊரில் ஓர் ஆண் மகவு பிறந்தது. பின்னாளில் அந்தக் குழந்தை இந்தியாவின் கவர்னர் ஜெனரலாகப் பணிபுரியும் என்று யார் எதிர்பார்த்திருப்பார்கள்? ராஜகோபாலன் எனும் நாமகரணம் பெற்ற இந்தக் குழந்தை பின்னர் ராஜகோபாலாச்சாரியாராக ஆகி பின்னர் ராஜாஜி என்றும் சி.ஆர். என்றும் அழைக்கப்பட்ட மேதை, தீர்க்கதரிசி, தலைசிறந்த அறிவாளி. இவருடைய 134ஆம் பிறந்த நாள் இந்த மாதம் 10ஆம் தேதி வந்து சென்றது. இந்த நேரத்திலாவது தமிழகம் தந்த இந்தப் பெரியோனின் வரலாற்றின் பக்கங்களைச் சிறிது புரட்டிப் பார்க்கலாமே!

சேலம் மாவட்டம் தொரப்பள்ளியில் பிறந்த ராஜகோபாலன் பெங்களூர் செண்ட்ரல் காலேஜிலும், பின்னர் சென்னை ராஜதானி கல்லூரியிலும் பயின்றார். சட்டம் படித்த இவர் 1900இல் அதாவது தனது 22ஆம் வயதில் வக்கீலாக தொழிலில் இறங்கினார். இவருடைய திறமை காரணமாக புகழ் பெற்ற வக்கீலாக இருந்தார். சேலம் நகரசபையில் முதலில் உறுப்பினராகவும் பிறகு அதன் சேர்மனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய சுதந்திரப் போர் சூடு பிடிக்கத் தொடங்கிய சமயத்தில் ரெளலட் சட்டத்திற்கு எதிரான போராட்டத்திலும், ஒத்துழையாமை இயக்கத்திலும் ஈடுபட்டார். வைக்கம் சத்தியாக்கிரகம் சட்டமறுப்பு இயக்கம் ஆகியவற்றிலும் பங்கு கொண்டார். 1930இல் வடக்கே காந்திஜி நடத்திய தண்டி உப்பு சத்தியாக்கிரகத்தைப் போல தெற்கே திருச்சியிலிருந்து வேதாரண்யம் வரை தொண்டர்களுடன் சென்று உப்பு எடுத்து சத்தியாக்கிரகம் செய்து முதன் முறையாக சிறையில் அடைக்கப்பட்டார். 1937இல் நாடு முழுவதும் நடந்த தேர்தலில் சென்னை மாகாண சட்டசபைக்கு நடந்த தேர்தலுக்குப்பின் இவர் மாகாணத்தின் பிரதமராக (அப்போது முதல்வரை அப்படித்தான் அழைப்பர்) தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டாம் உலகப் போரை இங்கிலாந்து அறிவித்தபின் 1940இல் இவர் பிரதமர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டார்.

இவர் சார்ந்திருந்த காங்கிரஸ் கட்சி 1942இல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தை நடத்தியபோது இவர் அதில் கலந்து கொள்ளவில்லை. காங்கிரசிலிருந்தும் விலகியிருந்தார். யுத்த நேரத்தில் நாம் இங்கிலாந்துடன் ஒத்துழைத்து நமது சுதந்திரத்துக்கு முயற்சி செய்ய வேண்டுமென்று விரும்பியதால், இவர் 1942 க்விட் இந்தியா இயக்கத்தில் ஈடுபடவில்லை. காங்கிரஸ் நாட்டு பிரிவினைக்கு ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு தெரிவித்திருந்தபோது, இந்து முஸ்லீம் கலவரங்களையும், படுகொலைகளையும் தவிர்க்கத் தனி நாடு ஏற்படுவதே சிறந்தது என்று எண்ணி இவர் முகமது அலி ஜின்னாவுடனும் முஸ்லிம் லீகுடனும் பேச வேண்டுமென்று விரும்பினார்.

1946இல் கீழ்வானில் இந்திய சுதந்திரத்தின் உதயம் தெரிந்த நேரத்தில் டெல்லியில் உருவான இடைக்கால மத்திய சர்க்காரில் நேரு தலைமையில் இவர் தொழில்துறை, விநியோகம், கல்வி மற்றும் நிதித்துறை அமைச்சராகப் பதவியேற்றார். 1947, 1948இல் இந்திய சுதந்திரத்துக்குப் பின் மதக்கலவரத்தால் பாதிக்கப்பட்டிருந்த மேற்கு வங்கத்துக்கு ஆளுனராக நியமிக்கப்பட்டார். அதன் பின் லார்டு மெளண்ட் பேட்டனுக்குப் பிறகு கடைசி கவர்னர் ஜெனரலாக 1948 முதல் 1950 வரை பதவி வகித்தார். 1951, 1952 காலகட்டத்தில் இவர் டெல்லியில் மத்திய சர்க்காரில் உள்துறை அமைச்சராகப் பணிபுரிந்தார். 

இந்தியா ஜனநாயக குடியரசாக அறிவிக்கப்பட்டு புதிய அரசியல் சாசனத்தின்படி முதல் பொதுத்தேர்தல் 1952இல் நடைபெற்றது. அதில் சென்னை மாகாணத்துக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெறவில்லை. எதிர்கட்சிகள் கம்யூனிஸ்ட்டுகளின் தலைமையில் பெருமளவில் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். ஜவஹர்லால் நேருவின் விருப்பப்பட்டியும், காமராஜ் போன்றோரின் சம்மதத்துடன் ராஜாஜியை அழைத்து சென்னை மாகாண முதலமைச்சராக ஆகும்படி வற்புறுத்தவே இவர் முதல்வர் ஆனார். 1953இல் இவர் கொண்டு வந்த ஆதாரக் கல்வியை எதிர் கட்சியும் காங்கிரசில் ஒரு சாராரும் இது 'குலக்கல்வி முறை' என்று குற்றம்சாட்டி எதிர்க்கவே, இவர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு 1954இல் வெளியேறினார்.

1959இல் இவர் காங்கிரசிலிருந்து விலகி சுதந்திரா கட்சி என்று தனிக்கட்சி துவக்கினார். சோஷலிசம் பேசிவந்த காங்கிரசை எதிர்த்து வலதுசாரி கொள்கைகளைக் கொண்ட கட்சி என்று பிரகடனப்படுத்திக் கொண்டு சுதந்திராக் கட்சி பிரபலமாக வளர்ந்து வந்தது. பெரும் புள்ளிகள் இந்தக் கட்சியில் சேர்ந்தனர். 1962, 1967, 1972 ஆகிய வருடங்களில் நடந்த தேர்தல்களில் இந்தக் கட்சி போட்டியிட்டது. சென்னை மாகாணத்தில் 1967இல் அறிஞர் அண்ணா தலைமையில் ஒரு தி.மு.க.அமைச்சரவை அமைய இவருடைய சுதந்திரா கட்சி தி.மு.கவுடனும் இதர கட்சிகளுடனும் ஒரு கூட்டணி அமைத்து போட்டியிட்டு காங்கிரசைத் தோற்கடித்து காரணமாக விளங்கியது. 1967இல் விழுந்த காங்கிரஸ் இன்று வரை தமிழகத்தில் எழவேயில்லை.

ராஜாஜி சிறந்த எழுத்தாளர், சிந்தனையாளர். ஆங்கிலத்திலும், தமிழிலும் நல்ல புலமை உடையவர். பாரத புண்ணிய பூமியின் தலைசிறந்த இதிகாசங்களான மகாபாரதத்தையும், இராமாயணத்தையும் நூலாக எழுதி வெளியிட்டவர். கர்நாடக இசையிலும் வல்லவர். இவர் எழுதிய "குறையொன்றும் இல்லை" எனும் பாடலைப் பாடாத பாடகர்களே இருக்க முடியாது. இவர் திருமதி எம்.எஸ்.சுப்புலக்ஷ்மிக்காக எழுதிக் கொடுத்து அவர் பாடிய பாடல்கள் உண்டு.

தமிழ்நாட்டு ஆலயங்களில் ஆலயங்களுக்குள் சில சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை அனுமதிக்காத நிலை இருந்து வந்தது. அதனால் இவர் தென் தமிழ் நாட்டில் மதுரையில் மதுரை வைத்தியநாத ஐயர் தலைமையில், பசும்பொன் தேவர் துணையுடன் மீனாக்ஷி ஆலயத்தில் ஆலயப் பிரவேசத்தை நடத்தி முடித்தார். ஹரிஜனங்கள் மேம்பாட்டுக்காக ராஜாஜியும் மதுரை வைத்தியநாத ஐயர் போன்ற அவருடைய ஆதரவுத் தலைவர்களும் அயராது பாடுபட்டனர்.

1937இல் இவர் பிரதமராக இருந்தபோது கட்டாய இந்தியைக் கொண்டு வந்தார், பின்னர் இவரே இந்தியை எதிர்த்துப் போராட்டங்களை நடத்தத் துணை புரிந்தார். மகாத்மா காந்தியின் மனசாட்சியின் காப்பாளர் என்று இவரை ஜவஹர்லால் நேரு வர்ணித்தார்.

1897இல் அலமேலு எனும் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நான்கு குழந்தைகள். இரு மகன்கள் இரு பெண்கள். 1916இல் இவரது மனைவி இறந்தார். இவரே குழந்தைகளுக்கு ஆதரவாக இருந்து வளர்த்தார். இவரது மகன்களில் ஒருவரான சி.ஆர்.நரசிம்மன் நாடாளுமன்ற உறுப்பினராக 1952லிருந்து 1962 வரை இருந்திருக்கிறார். 

1965இல் தமிழகத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டல் வலுத்தது. 1965 ஜனவரி 26 முதல் இந்தி அரசாங்க அலுவல் மொழியாக ஆகியது. இந்தி பேசாத மக்கள் மீது இந்தியைத் திணிக்கக்கூடாது என்று போராட்டம் வெடித்தது. 17-1-1965இல் திருச்சியில் இந்தி எதிர்ப்பு மகாநாட்டை ராஜாஜி கூட்டினார். அதில் இந்தி பேசாத மக்கள் மீது இந்தி திணிக்கப்பட்டால் இந்திய அரசியல் சட்டத்தை கடலில் தூக்கி எறியவேண்டுமென பேசினார்.

1967 தேர்தலில் தி.மு.க.வுடன் இவருடைய சுதந்திராக் கட்சி கூட்டணி அமைத்து தனது 88ஆம் வயதிலும் ஊர் ஊராகச் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். காங்கிரசை ஒழித்துக் கட்டுவதே தனது வாழ்வின் லட்சியம் என்று பேசினார். தேர்தலில் தி.மு.க. வென்றது. சிஎன்.அண்ணாதுரை முதலமைச்சர் ஆனார்.

அறிஞர் அண்ணாவின் மறைவுக்குப் பிறகு மு.கருணாநிதி தமிழகத்தின் முதலமைச்சர் ஆனார். 1971இல் இவர் மதுவிலக்கை தளர்த்திவிட்டு அதற்கு மாநிலத்தின் நிதிநிலைமைதான் காரணம் என்று கூறிவந்தார். சுந்தந்திராக் கட்சி இந்த மதுவிலக்குத் தளர்வை எதிர்த்து ஆதரவை நீக்கிக் கொண்டது.

1972இல் ராஜாஜியின் உடல்நிலை தளர்ந்து போயிற்று. 94 வயதை அடைந்த ராஜாஜி சென்னை அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். 1972 டிசம்பர் 25 கிருஸ்துமஸ் தினத்தன்று மாலை 5.44க்கு அவர் உயிர் பிரிந்தது. அவர் மகன் சி.ஆர்.நரசிம்மன் அவருக்குப் பக்கத்தில் இருந்தார்.

இலக்கிய உலகுக்கு அவர் அளித்த கொடை அதிகம். 1922இல் "சிறையில் தவம்" எனும் நூலை எழுதினார். தனது 1921, 22 ஆண்டுகளில் சிறை வாழ்க்கையை பிரதிபலித்தது இந்த நூல். 1951இல் இவர் இராமாயணத்தையும், மகாபாரதத்தையும் சுருக்கி நூலாக "வியாசர் விருந்து" என்றும் "சக்கரவர்த்தி திருமகன்" என்றும் நூலாக எழுதினார். 1965இல் இவர் "திருக்குறள்" நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார். பகவத் கீதை, உபநிஷத் பற்றி நூல்கள் எழுதி வெளியிட்டார். சாக்ரடீஸ் பற்றி "சோக்ரதர்" எனும் நூலை எழுதினார்.

1958இல் இவருக்கு சாஹித்ய அகாதவி விருது கிடைத்தது. கே.எம்.முன்ஷியுடன் இணைந்து இவர் பாரதிய வித்யா பவனை உருவாக்கினார். "இந்துயிசம் - ஒரு வாழ்க்கைத் தத்துவம்" எனும் நூலை எழுதி வெளியிட்டார். இவர் அணு ஆயுதங்களுக்கு எதிரானவர். வெளிநாட்டுப் பயணங்களை ஏற்காத இவர் அணு ஆயுத எதிர்ப்புக்காக அமெரிக்கா சென்று ஜனாதிபதி கென்னடியைச் சந்தித்துப் பேசியது வரலாற்றின் ஏடுகளில் பதிவான சிறப்பான செய்தியாகும். அவர் இவருக்கு அளித்த மரியாதை வேறு யாருக்கும் கொடுத்ததில்லை என்கின்றன அமெரிக்கப் பத்திரிகைகள்.

போற்றுவார் ஒரு புறம், இவரைத் தூற்றுவார் ஒரு புறமுமாக இவர் தன் வாழ்க்கையை நிஷ்காம்யகர்மமாக நினைத்துத் தனது 94ஆம் வயதில் அமரர் ஆனார். ராஜாஜி என்ற சொல்லுக்கு சுடர்மிகும் அறிவு என்று பொருள் கொள்ளும்படியாக அமைந்தது இவரது வாழ்க்கை. வாழ்க ராஜாஜியின் புகழ்.










2 comments:

Unknown said...

செவ்விய சிந்தனைச் சுடரொளியே!
சக்ரவர்த்தி ராஜகோபாலச் சாரியாரே!
ஏழையின் இதயம் கவர்ந்த தலைவன் நீ!
ஏற்றத்தாழ்வு போக்க அயராது உழைத்தவன் நீ!
இலக்கியம் படி(டை)த்தப் பேரறிவாளன் நீ!
இலக்கண அரசியல் வகுத்த இளங்கதிர் நீ!
அண்ணல் காந்தியின் சத்தியத் தேர் நீ!
அன்னை பாரதத்தின் அதிசய புதல்வன் நீ!
சாதி பேதம் களைய பாடுபட்டவன் நீ!
நீதி வழுவா வேதம் போற்றியவன் நீ!
ஆத்திகன், நாத்திகன் எனப்பேதம் பாராதவன் நீ!
சாத்திரமென்ற சிலப் பொய்களை மறுத்தவன் நீ!
இத்தனையும் ஒருங்கே பெற்றவன் நீ!
எத்தனை பெற்றும்; சிந்தனை சுடரே!
சீர்திருத்த செம்மலே சமநீதி வேண்டிய
விடிவெள்ளியே; விடியலை உணர்த்திய
உன்னை விளக்கி வைத்தது தான் ஏனோ?
வீணாய்ப் போக வேண்டிய விதியோ?
வீணர்களின் சதியோ? அந்தப்
பரந்தாமன் அன்றி யாரறிவார்...
செயற்கரிய செய்த பெரியோய்!
உன்னை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்
வாழிய நினது புகழ்!
வாழிய! வாழிய!! வாழியவே!!!

மாமேதையைகளை ஒதுக்கியே வீணாய்ப் போவது தமிழகத்தின் வாடிக்கையல்லவா? சாராய சமுதாயத்தில் இவர் எப்படி சக்ரவத்தியாக நிற்க முடிந்திருக்கும்.... அதனாலே நம்மைப் போன்றவர்களின் இதய சாம்ராஜ்யத்திலே என்றும் சக்ரவர்த்தியாக வாழ்கிறார், நம்மை ஆளுகிறார்.

அறிவுச் சுடர் பேரறிவாளர் ராஜாஜி அவர்களைப் பற்றிய பதிவிற்கு நன்றிகள் ஐயா!

ரசிகன் said...

சல்யூட்...