ராஜாஜி கொண்டு வந்த புதிய கல்வித் திட்டம்
1952 முதல் 1954 வரை சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த ராஜாஜி அவர்கள் கொண்டு வந்த புதிய கல்வித் திட்டம் மிகப் பெரிய எதிர்ப்பு அலையை உருவாக்கி இறுதியில் அவர் பதவி விலகலில் கொண்டு போய் முடிந்தது. எதிருப்பு அலையைத் தொடங்கி வைத்தவர்கள் எதிர்க்கட்சியினராக இருந்த போதும், அதன் முடிவில் அவர் பதவி வகித்த காங்கிரஸ் கட்சியினரும் அந்த எதிர்ப்பில் ஈடுபட்டு ராஜாஜியின் நோக்கத்துக்குக் காரணங்களைக் கற்பித்ததன் விளைவாக அவர் பதவி விலகினார். உண்மையில் ராஜாஜி இந்தக் கல்வித் திட்டம் பற்றி சொன்ன கருத்துக்களும், அதனைக் கொண்டு வர காரணிகளையும் புரிந்து கொள்ள வேண்டுமானால், இந்தத் திட்டம் பற்றி ராஜாஜி என்ன சொன்னார் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
1953ஆம் ஆண்டில் அதாவது 58 ஆண்டுகளுக்கு முன்பு இந்தத் திட்டத்தை அறிமுகம் செய்தபோது அவர் செங்கல்பட்டில் பேசிய பேச்சை இப்போது பார்ப்போம். இனி ராஜாஜியுடன் ..........
"புதிய கல்வித் திட்டம் பற்றிய, பல்வேறு விவாதங்களையும், அந்த திட்டத்திற்கான ஆதரவுகளையும் குறித்து, அனைவரும் கவனம் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இந்த விஷயம் மிகவும் சிக்கலானது. பெரும் விவாதங்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. பல பெரிய விஷயங்கள் எந்தவிதக் கேள்வியும், பிரச்சனைகளும் இல்லாமல் ஏற்றுக் கொள்ளப் படுகின்றன. ஆனால் சில சிறிய விஷயங்கள், உரிய முறையில் புரிந்து கொள்ளப் படுவதில்லை. இத்தகைய உணர்வுகள் இயற்கையானதே. ஒரு பாறை அல்லது கல் என்பது ஆபத்தான பொருள் என்று நாம் அறிவோம். ஆனால் நம்மைச் சுற்றியுள்ள காற்றின் சக்தியினை நாம் அறிவதில்லை. ஆதாரக் கல்வித் திட்டத்தை நான் காற்றோடு ஒப்பிடுவேன். காற்று என்பது மரங்களை வீழ்த்திச் சாய்க்கும் அளவிற்கு வலிமையானதாகும். ஆதாரக்கல்வி என்பது கண்ணுக்குத் தெரியாத காற்றினைப் போல் எங்கும் பரவ வேண்டும். அத்தகைய ஆதாரக் கல்வியை நான் வாழ்க்கையின் சுவாசம் என்றுகூட அழைப்பேன்.
இந்த ஆதாரக் கல்வித் திட்டத்தின் பின்னால், பெரியதொரு சதி உள்ளது என்று சொல்வது வருந்தத் தக்கதாகும். இந்தத் திட்டத்தின் காரணகர்த்தாவாக நான் இருப்பதால், இத்திட்டத்தின் பின்புலத்தில் 'ஏதோ' இருக்கிறது என்ற சந்தேகம் சிலருக்கு வருகிறது. இறையருளால் இந்தத் திட்டத்தை வேறு யாரேனும் செயல்படுத்தியிருந்தால் வெற்றிகரமாக ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கும். இந்தத் திட்டம் பற்றி நான் முப்பது வருடங்களுக்கும் முன்னரே ஆலோசனை சொல்லியுள்ளேன். அந்தத் திட்டத்தை யாரேனும் செயல்படுத்துவார்கள் என்றும் எண்ணினேன். ஆனால் யாரும் அதைப் பற்றிக் கருதவில்லை. இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதைப் பற்றி, நான் கடந்த காலத்தில் முயற்சி எதுவும் மேற்கொள்ளவில்லை. எனது வயது முதிர்ந்த காலத்தில், இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்ற எண்ணம் கொண்டுள்ளேன். இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதை வேறு சிறந்த மனிதர்களிடம் ஒப்படைக்காமல், நான் ஏன் செய்ய வேண்டும் என்ற கேள்வியினை சிலர் எழுப்பக்கூடும். அது கேள்வியின் ஒரு பக்கமாகும். பல ஆண்டுகளாக செயல்படுத்தாத இந்தத் திட்டத்தினை, இப்பொழுதாவது செயல்படுத்த முயற்சிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டுள்ளேன். இந்தத் திட்டத்தைப் பற்றி சில காலத்திற்கு, மக்கள் என்னைத் தூற்றுவார்கள். பின்னர் அது ஓர் முடிவுக்கு வரும்.
இந்த எளிய திட்டத்தைப் பற்றி பெரும் எதிர்ப்புகள் ஏன் இருக்க வேண்டும் என்பது எனக்குப் புரியவில்லை. இந்திய வரலாற்றில், கல்வி சம்பந்தமான பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அத்தகைய சந்தர்ப்பங்களில் எவரும் எதிர்ப்பினைத் தெரிவிக்கவில்லை. பழங்காலத்தில் இந்திய வரலாறு படிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டது. பின்னர் இந்தப் படிப்புக்கான உத்தரவு மாற்றப்பட்டு, இந்திய வரலாறு படிப்பது, தடை செய்யப்பட்டது. அந்தச் சூழ்நிலையில் எவரும் எதிர்ப்பினைத் தெரிவிக்கவில்லை. அதேபோன்று, ஆங்கில வரலாறு படிப்பது கட்டாயமாக்கப்பட்டது. இந்த உத்தரவை நீக்க யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. உடற்கூறு தொடர்பான கல்விக்கும், இதே நிலைமைதான் ஏற்பட்டது. இந்த விஷயங்களைப் பற்றிய செய்திகள் எல்லாம் பத்திரிகைகளில் பிரசுரிக்கவோ, அல்லது மற்ற மேடைகளில் பேசப்படவோ இல்லை. பழங்காலத்தில் இருந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள். இந்த ஆதாரக் கல்வித் திட்டத்தை அறிமுகப் படுத்த நினைக்கும் நானோ துரதிர்ஷ்டசாலியாவேன்.
இந்தக் கூட்டத்தில் அமர்ந்திருக்கும் வேளையில், ஆதாரக் கல்வித் திட்டத்திறேகான எதிர்ப்புக்களின் காரணங்கள் என்னவாக இருக்கலாம் என்பதைப் பற்றிய கருத்துக்களை, உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நெடுங்காலமாக, சாதிமுறைகள் நடைமுறையில் இருந்து வந்தன. கலப்புத் திருமணங்களும், சமபந்தி போஜனங்களும் பல்வேறு சமூக அமைப்புக்களுக்கு மட்டுமே உரியதாக இருந்தன. ஒரு நெசவாளர் தன் குடும்ப விழாக்களை, தன்னைச் சார்ந்த சமுதாயத்தோடு நிறுத்திக் கொண்டார். சலவைத் திழிலாளர்களும், மற்றத் தொழில் செய்பவர்களும் அவ்வாறே செயல்பட்டனர். அத்தகைய மாந்தர்கள், தங்களை ஒரு கூட்டத்துக்குள் சுருக்கிக் கொண்டு, மற்றவர்களுடன் இயல்பாகவும், சுலபமாகவும் பழகவில்லை. ஆங்கிலேயர்கள் இந்த நாட்டிற்கு வந்த பின்னர், பள்ளிக்கூடங்களைத் திறந்தார்கள். கல்வி கற்கும் ஆர்வம் கொண்டவர்களைப் பள்ளிகளில் சேர்த்துப் படிக்கச் சொன்னார்கள். அந்தக் காலகட்டத்தில் இருந்த கல்வி முறையையும், நாம் தற்போது அறிமுகப்படுத்தவுள்ள, திருத்தி அமைக்கப்பட்ட கல்வி முறையையும் இணைத்துப் பேச வேண்டாம். அத்தகையப் பள்ளிகளில் கல்விக் கட்டணம் வசூலிக்கப்பட்டது. சில சந்தர்ப்பங்களில் வசூலிக்கப்படவில்லை. பள்ளிக்கூடங்கலின் நிர்வாகம் நகராட்சியின் வசம் ஒப்படைக்கப் பட்டிருந்தது.
குழந்தைகளைப் படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட பெற்றோர்கள், அந்தப் பள்ளிகளில் படிக்க வைத்தார்கள். காலப் போக்கில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இதற்கான காரணம் என்னவென்றால், பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு, பெரிய அளவிலோ அல்லது சிறிய அளவிலோ ஏதேனும் ஓர் வேலை கிடைத்தது. வேலை கிடைக்கப் பெற்றவர்களுக்கு, அதிக சுமையோ, கஷ்டங்களோ இல்லாமலே போதிய சம்பளம் கிடைத்தது. தற்போதைய சூழ்நிலையில் படித்தவர்களுக்கு வேலை கிடைக்காத நிலை உண்டாகி, அதன் காரணமாக ஏமாற்றம் கொண்டுள்ளனர்.
ஒரு குதிரைப் பந்தயத்தில் எல்லோரும் வெற்றி பெற முடியாது. வெற்றி பெற்றவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். தோற்றவர்கள் மனவருத்தம் கொண்டு, அரசாங்கம் ஏன் குதிரைப் பந்தயத்தைத் தடை செய்யக் கூடாது என்று கேட்கும் அளவிற்கு மன உளைச்சல் கொண்டுள்ளார்கள். இந்த மனச்சோர்வானது முதன் முறையாக குதிரைப் பந்தயத்திற்குப் போகும்போது ஏற்படுவதில்லை. குதிரைப் பந்தயத்தில் அனைவரும் வெற்றிபெற முடியாது. அதே போன்று, எல்லோருக்கும் அரசாங்க வேலைவாய்ப்புக்கள் கிடைக்காது. படித்தவர்கள் அனைவருக்கும் அரசாங்கம் வேலை கொடுக்க முடியாது என்ற உண்மையை பொதுமக்கள் உணர்ந்துள்ளார்கள். படித்தவர்களிடையே வேலை கிடைக்காதவர்கள் பலர் இருக்கிறார்கள். இந்த நிலைமை முன்னேற்றமடைந்த சமூகத்தினருக்கும் பொருத்தமாகும். படித்த எவருக்கும் வேலை கிடைக்கும் என்ற உறுதியான நிலைமை இன்று இல்லை.
தற்போதைய சூழ்நிலையில் மாணவர்கள் கல்லூரியில் இண்டர்மீடியட் வகுப்புக்கு மேல் படிப்பதில், அதிக உற்சாகம் காட்டுவதில்லை. எதிர் காலத்தில் எஸ்.எஸ்.எல்.சி. படித்த மாணவர்களுக்கும், மேற்கொண்டு படிப்பதில் அதிகம் ஆர்வம் காட்டாத நிலை ஏற்படக்கூடும். படித்தால்தான் வேலை கிடைக்கும் என்ற மனோபாவம், குழப்பமான எண்ணங்களை உருவாக்குகிறது. இது ஒருவிதமான நோய் போன்றது.
கல்வி என்பதன் உண்மையான பொருள் அறிவினைப் பெறுவது என்பதேயாகும். இந்தக் கோணத்தில் பார்த்தால் கல்வி என்பதன் அர்த்தம் தற்போது தவறாகக் கொள்ளப்பட்டுள்ளது. கல்வி என்பது வெறும் புத்தகப் படிப்பு மட்டும் அல்ல. தற்போது செயல்படுத்த உள்ள அடிப்படைக் கல்வித் திட்டமானது, கல்வி கற்கும் காலத்தை பாதியாகக் குறைத்து விடுகிறது. அதன் நடைமுறையானது நாம் உண்ணும் உணவில் பாதி உணவை உண்பதற்குச் சமமாகும் என்ற விமர்சனமும் எழுகின்றது. இது தவறாகக் கொள்ளப்பட்ட கருத்தாகும். அவ்வாறு அச்சம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. சாதி, மதம், தொழில் என்ற பாகுபாடுகளைக் களைந்து அனைவரும் இந்தக் கல்வியைப் பெற வேண்டும். அது வாழ்க்கையின் சுவாசம் போன்றதாகும்.
பிரிட்டிஷ்காரர்களின் காலத்தில் நிலவிய கல்வி முறையையும் தற்போதைய கல்வி முறையையும் மக்கள் பகுத்துணர்ந்து, தாரதம்மியத்தைக் கண்டு கொள்ள வேண்டும். உடல் உழைப்பால் வாழும் எளிய மக்களாக, கூலித் தொழிலாளி, சலவைத் தொழிலாளி அல்லது ரிக்ஷா இழுப்பவர் ஆகியோரின் குழந்தைகளுக்குப் படிக்கும் வாய்ப்புக்களை அளிக்க முடியுமா என்ற பெரிய கேள்வி எழுகின்றது. அவர்கள் ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டும் என்பது மிகவும் நல்ல விஷயமாகும். அந்த நிலைமையை எப்படிப் பெறுவது என்பதுதான் கேள்வியாகும். திறமை மிகுந்தவர்களை மட்டும் தயார் செய்ய வேண்டும் என்றும் சிலர் நினைக்கிறார்கள். எல்லோருக்கும் கல்வி என்ற வாய்ப்பை அளிப்பது அரசாங்கத்தின் கடமையாகும். கற்பதற்கும் வேலை வாய்ப்பு பெறுவதற்கும் அதிகமான தொடர்பு இல்லை. இந்த உண்மையைப் புரிந்து கொண்டால், புதிய கல்வித் திட்டத்தின் குறிக்கோளைத் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
குழந்தைகளுக்கு மூன்று மணி நேரத்தில் கற்பிக்கலாம் என்ற நிலைமை இருந்தால் அவர்களை ஐந்து மணி நேரத்திற்கு ஏன் தொல்லைப்படுத்த வேண்டும். ஒரு மாணவன் தனியாக விடப்பட்டால், அவன் மரத்தின் மீது ஏறுவான் அல்லது எதுவுமே செய்யாது சோம்பிக் கிடப்பான் என்றும் சிலர் எதிர்ப்புக்களைத் தெரிவிக்கலாம். இவ்வாறு விமர்சனம் செய்பவர்களின் எண்ணம் என்னவென்றால், ஆசிரியர்கள் தங்களது மாணவர்களை நாள் முழுவதும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், அந்தப் பொறுப்பு ஆசிரியர்களுக்கு மட்டுமே உண்டு என்றும் கருதுகிறார்கள். மாணவர்கள் முன்னதாகவே பள்ளியிலிருந்து வீட்டிற்கு வந்தால் பெற்றோர் ஏமாற்றம் கொள்கிறார்கள். இத்தகைய எதிர்ப்புகளை தெரிவிப்பவர்களைப் பற்றி நான் பரிதாபம் கொள்கிறேன்.
ஒரு திட்டத்தை செயல்படுத்தும் பொழுது பல வகையிலும் கலந்து ஆலோசிக்கலாம். பரிசீலனைகளையும் செய்யலாம். திட்டங்கள் வெற்றியடைய வேண்டுமானால், மக்கள் மனமாற்றம் கொள்ள வேண்டும். கிராமப் பகுதியில் உள்ள பகுதிகள் மக்களிடமிருந்து தனித்து விலகியே உள்ளன. இந்த நிலை மாற்றம் அடைய வேண்டும். ஒவ்வொரு கிராமமும் ஒரு 'பாலிடெக்னிக்'காக மாற வேண்டும். ஒவ்வொருவரும் ஒரு தொழிலைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் கருதுகிறேன். புதிய கல்வித் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் தொழில் முறைக் கல்வி பயில்வதற்கு எதிரானவர்கள் என்றே நான் கருத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.
ஒவ்வொருவரும் தனது கரங்களைப் பயன்படுத்தும் ஆர்வத்தை வளர்க்க வேண்டும். இத்தகைய விருப்பத்தினை இளம் பிராயத்திலேயே வளர்க்க வேண்டும். அத்தகைய பயிற்சி, நாட்டின் வளர்ச்சிக்கும், மேன்மைக்கும் துணையாக நிற்கும். திருத்தி அமைக்கப்பட்ட கல்வியானது நிறைந்த அளவில் உயர்படிப்புக் கல்விகளுக்கான வாய்ப்பினையும் அளிக்கிறது. நமது கரங்களைப் பயன்படுத்தாமல் இருந்தால், ஒரு கோழியானது இரண்டு இறக்கைகளை உடையதாக இருந்தாலும் பறக்காமல் இருப்பதைப் போன்றதேயாகும். வேலை கிடைக்காத பட்சத்தில் ஒருவன் தனது கரங்களைப் பயன்படுத்திப் பொருள் சம்பாதித்து வாழ்க்கையை நடத்த வேண்டும் என்பது எனது கருத்தாகும்.
முதலில் கல்வி கற்போம். அதன் பின்னர் தொழிலினைக் கற்றுக் கொள்வோம் என்று சிலர் ஆலோசனை அளிக்கிறார்கள். இந்தக் கருத்து எனக்கு ஏற்புடையது அன்று. இளம் பிராயத்தில் விஷயங்கள் மனதில் சுலபமாகப் பதிந்துவிடும். மக்கள் அனைவரும் குறிப்பாகக் கிராமத்தில் உள்ள அனைவரும் இந்தத் திட்டத்திற்கு ஆதரவு அளிக்கக் கேட்டுக் கொள்கிறேன். ஒரு கிராமத்தில் ஒரு மனிதனாவது குழந்தகளுக்கான வழிகாட்டியாக இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். அத்தகைய வழிகாட்டிகள் அதிக அளவில் முன் வந்தால் ஒரு சங்கமே அமைக்கலாம். வழிகாட்டிகள் அதிகம் படிக்காதவர்களாக இருந்தாலும் பாதகமில்லை. ஆதாரக் கல்வித் திட்டத்தில் கல்வி கற்றுவரும் குழந்தைகள், தங்களது கரங்களைப் பயன்படுத்துவதன் வாயிலாக, சிந்தனைச் செல்வத்தையும் வளர்த்துக் கொள்வார்கள் என்பதில் எனக்கு எந்தவித ஐயமும் இல்லை.
"இராஜாஜியின் உரைகள்" பாரதிய வித்யாபவன் வெளியீடு.
தமிழாக்கம்: திரு த.கணேசன், முன்னாள் நிலைய இயக்குனர், அகில இந்திய வானொலி, திருச்சிராப்பள்ளி. த.க.அகிலா.
4 comments:
இந்த குலகல்வி திட்டம் தான் பின்னாளில் இவரை அரசியலில் தோல்விகளை சந்திக்கவும் வழி வகுத்தது என்று பின்னாளில் அறிந்தேன்.
மூதறிஞர் கூறிய ஆதாரக் கல்வியை (வாழ்வாதாரக்) குலக் கல்வி என்று கூறியதாகக் கேள்வியுற்றிருந்தேன்.... குலக் கல்வி எனும் போது அதை அவன் விரும்பாத போது அதையே அவனுக்கு அளிக்க பள்ளிகள் முன் வரும் என்ற அச்சத்தால் தான் (அதாவது இன்றைய சூழலில் இட ஒதுக்கீட்டின் பொருட்டு அறிவும், விருப்பமும் இருந்தும் அந்தத் துறை கிடைக்காமல் வேறு வழியின்றி வேறொரு துறைக்குப் போவது போல்) அதை மறுத்து எதிர்ப்புக் கிளம்பியதாக நினைத்திருந்தேன்... இங்கே தொழிலுடன் கூடியக் கல்வி என்றே மூதறிஞர் கூறி இருக்கிறார் இதை எதிர்த்து இருக்க வேண்டியதே இல்லை.... இப்போதும் கூட "வோக்கேசனால் கோர்ஸ்" என்று மேனிலைப் பள்ளிகளில் சிலப் பிரிவுகளை வைத்து மின் மற்றும் மின்னணுவியல், எந்திர மற்றும் கணிப் பொறியியல்களைக் கற்றுத் தருகிறார்கள்... அது மிகவும் பயனுள்ளதாகவே இருக்கிறது. அதற்கு மேல் படிக்காதவர்கள் அது தொடர்பான கீழ்நிலை ஊழியராக எளிதில் சேர முடிகிறது.... ஆகா, கல்வியும் தொழிலும் சேர்ந்தே வந்திருந்தால் நன்றாகவே இருந்திருக்கும்.
இன்றும் கல்லூரிகளிலும் நடத்தும் பாடங்களுக்கு தகுந்த ஆய்வுக் கூடங்கள், பட்டறைகள் இல்லாமல் தான் இந்தியர்கள் வெறும் நூல்களின் பாராயண அறிவோடு வெளியில் வருகிறார்கள்.
மற்ற மேற்கத்திய, ஆசிய குறிப்பாக சீனாவோடு ஒப்பிடும் போது அங்கே படித்து வெளியில் வரும் ஒவ்வொருவரும் கல்வியோடு அது தொடர்பான அனுபவத்தோடு வெளியில் வருகிறார்கள் என்பது தான் இன்றைய சூழலில் உண்மையும் கூட.
இங்கே சிங்கப்பூரில் பள்ளியில் தொடக்க நிலை இரண்டாம் வகுப்பிலே மாணவர்களை தரம் பிரித்து விடுகிறார்கள்... அதாவது மொத்த மாணவர்களில் (வொவ்வொரு நிலையிலும்) முதல் முப்பது (வகுப்பின் அளவு அது தான்) மாணவனின் மதிப்பெண் அடிப்படையில் ஒரு வகுப்பிலும்.... ஆபடியே இரண்டு, மூன்று என்று ஒரே நிலையில் மூன்று தகுதிகளை அந்த வகுப்புகளுக்கு தந்து விடுகிறார்கள். இதை ஆங்கிலத்தில் "பேண்ட்" என்பார்கள். வருடக் கடைசியில் பெரும் மதிப்பெண்ணை வைத்து அடுத்த வருடம் அந்த மாணவன் மேலிருந்துக் கீழோ அல்லது கீழிருந்து மேலோ போவான்.... அப்படியே தேர்ச்சியே பெறாத கல்வியில் அவ்வளவு நாட்டம் இல்லாமல் திறமை வாய்ந்த மாணவாகள் கடைசியில் வரும் சில வகுப்பைச் சேர்ந்தவர்கள்.... தொழிற் கூடங்களுக்கு அனுப்பி பயிற்சியும்.. வேலையும் பெறுகிறார்கள்...
நன்றாக படிக்கக் கூடிய மாணவர்கள் முழுக்க முழுக்க மதிப்பெண் அடிப்படையிலே கல்லூரியில் இடம் பெற்றும்.. வேலைக்கும் சென்றும் அங்கேயும் திறமையாக பணியாற்றி கடைசியாக... பாராளுமன்றத்திற்கும்... பிரதமர்... அதிபர் என்ற நிலைக்கும் உயர்கிறார்கள்... இதில் என்ன வென்றால் அரசியல் அரசாங்கம் சார்தவைகளுக்குள் போக... தகுதிச் சான்றிதழ் வைத்து புடம் போடப் படுகிறது... இந்த மண்ணில் பிறந்தால் மட்டுமே போதும் அது தான் ஜனநாயகம் என்னும் வறட்டு வாதம் இல்லை..
ஆக, மூதறிஞரின் திட்டம் தவறாகப் புரிந்துக் கொள்ளப் பட்டது பெரும் நஷ்டமே...
இதுவரை அறிந்திடாத செய்தி நிறைந்தப் பதிவு பகிர்வுக்கு நன்றிகள் ஐயா!
ஆம்! மிகப் பெரும் அறிவாளியாக இருந்தும், சாதி, மத பேதங்களை நீக்கிவிட்ட சர்வஜன பிரதிநிதியாகவும் இருந்த அந்தப் பெருமகனாரைக் கேவலம் அரசியல் ஆதாயத்துக்காக, அவரை ஜாதி வெறியர் என்றும், ஜாதிக் கண்ணோட்டத்தோடு ஒரு வர்ணாசிரம கல்வி முறையைக் கொண்டு வந்து பார்ப்பான் பிள்ளை பார்ப்பானாகவும், தோட்டியின் மகன் தோட்டியாகவும் இருப்பதற்காக அவரவர் குலத் தொழிலைக் கற்க வேண்டுமென்று சூழ்ச்சி செய்கிறார் இந்த குல்லுகபட்டர் என்றெல்லாம் பிரச்சாரம் செய்தனர். இந்த சூழ்ச்சிக்கு அவர்கள் வழியிலேயே பதில் சொல்லத் தெரியாத மிக உயர்ந்த கொள்கை விளக்கமாகப் பேசிவிட்டுச் சென்றுவிட்டார் பெருந்தகை ராஜாஜி. அவரை குல்லுகபட்டர், நரி, கணவாய் வழி வந்தவர் என்றெல்லாம் இழித்து பேசியவர்களே, பதவிக்கு அவர் உதவுவார் என்றதும் மூதறிஞர் என்று புகழ்பாடினர். அதனால்தான் நான் எந்த இடத்திலும் ராஜாஜியை அவர்கள் அழைத்த அந்த பட்டத்தை, அதாவது "மூதறிஞர்" எனும் விருதைக் கொடுத்து எழுதுவதில்லை. போகட்டும்! அவருடைய இந்த ஆதாரக் கல்வி என்பதை பாரதியும் தனது "சுதேசிக் கல்வி" எனும் கட்டுரைத் தொடரில் மிக அழுத்தமாக எழுதியிருக்கிறான். அந்த பாரதியின் திட்டத்தை இவர்கள் எதிர்த்ததாகத் தெரியவில்லை. 1953இல் போதிய பள்ளிக்கூடங்கள் இல்லை. அனைவருக்கும் கல்வி எனும் திட்டத்தை உடனடியாக அமல்படுத்தி கிராமக் குழந்தைகள் அனைவரையும் பள்ளிக்குக் கொண்டு வரவேண்டுமென்று திட்டமிட்டார் ராஜாஜி. ஆனால் போதுமான பள்ளிக் கட்டடங்கள் கிடையாது. ஆசிரியர்கள் கிடையாது. ஆகவே நம் பள்ளிக் கல்வியில் பாடங்கள் மூன்று மணிக்கு மட்டுமே வரக்கூடியது என்பதை உணர்ந்து பாதி நாள் பள்ளி, பின்பாதி அவரவர்க்குத் தெரிந்த தொழில் கற்பது என்பதை அவர் தீர்மானித்தார். பிற்பகலில் அதே பள்ளி மற்ற மாணவர்கள் படிக்க உதவியது. அதே ஆசிரியர்கள் இருந்தனர். கிராமங்களில் என்ன தொழில் கற்க முடியும்? மண்பாண்டம் செய்வது, தறியில் நெய்வது, மரவேலை செய்வது, கொல்லுப்பட்டறை, கட்டட கட்டுமானம் இதுபோன்ற பலவேலைகளைக் கற்கலாம். அப்படிப்பட்ட வேலைகளை அவர்கள் குடும்பத்தில் செய்து வந்தால் அவர்கள் அங்கேயே கற்றுக் கொள்ளலாம், அப்படிப்பட்ட வசதிகள் இல்லாத பிள்ளைகள் ஏதாவது தொழில் தெரிந்தவரை அணுகி அவரிடம் பழகலாம் என்று திட்டமிட்டார். இதில் அவரவர் குடும்பத் தொழிலாக இருக்கும் தொழிலைக் கற்கலாம் என்பதை மட்டும் விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டார்கள் எதிர்ப்பாளர்கள். கூலிவேலை செய்பவன் அதே வேலையைச் செய்ய வேண்டுமாம், தர்ப்பைப் புல்லை வைத்துக் கொண்டு ஏமாற்றுபவன் அதே பார்ப்புத் தொழிலைச் செய்து வயிறு வளர்க்க வேண்டுமாம். சாதிப் பிரிவினைகளை அப்படியே வைத்துக் காப்பாற்றும் நோக்கத்தோடுதான் குல்லுகபட்டர் ராஜாஜி இந்தக் குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தார் என்றனர். என்ன சொல்லியும் இவர்கள் புரிந்துகொள்ளவில்லை. திராவிட இயக்கத்தார் என்று இல்லை, ராஜாஜியை அரசியல் எதிரியாகக் கருதிய காமராஜ் உட்பட அனைவரும் ராஜாஜியின் இந்தத் திட்டத்தை எதிர்த்தனர்.
மேதைகளின் திட்டங்களை சாதாரண மக்கள் புரிந்து கொள்ளாததன் விளைவு ஒரு நல்ல நிர்வாகியை இழந்தோம், எதிர்காலத்துக்கு நல்ல பலன் தரும் ஒரு அரிய திட்டத்தை இழந்தோம். ராஜாஜி பதவி விலகினார். காமராஜ் வந்தார். முன்பிருந்த நிலைமையை மாற்ற அவர் அதிக பள்ளிகளைத் தோற்றுவிக்க வேண்டியிருந்தது. ஓராசிரியர் பள்ளிகளைத் தொடங்கினார். பள்ளிகளில் நெரிசலைக் குறைக்க பகுதிநேர வகுப்புகளை அறிமுகம் செய்தார். பிள்ளைகளைக் கவர்ந்திழுக்க மதிய உணவுத் திட்டத்தையும், ஏற்றத்தாழ்வை குழந்தைகள் உணராமல் இருக்க சீருடைத் திட்டத்தையும் கொண்டு வந்தார். எது எப்படியாயினும், பி.ஏ., பி.காம்., பி.எஸ்.சி., எம்.ஏ., எம்.எசஸ்.சி. பட்டதாரிகள் அதிகமாகினர். அப்படிப் படித்த தொழில் மரபில் வந்த பிள்ளைகளும் தொழில் செய்வது கேவலம் என்று நினைத்து விவசாயத்தை நீங்கினர், குடும்பத் தொழிலை நீங்கினர், அரசாங்கப் பதவிகளுக்காக அலைந்தனர். வேலையில்லாத் திண்டாட்டம் அறுபது, எழுபதுகளில் தலைவிரித்தாடியது. சாஃப்ட்வேர் தொழிலும் கம்ப்யூட்டரும் அறிமுகமான பின்புதான் இந்த வேலையில்லாத் திண்டாட்டம் குறைந்தது. அரசின் இலவசங்கள் அதிகமான பிறகு சாதாரண வேலைகளுக்கு, மரம் வெட்டுதல், தோட்டம் சீரமைத்தல், வயல் வேலைகளுக்கு, நாற்று நடுதல், கதிர் அறுத்தல், தூற்றிப் புடைத்து நெல்லை மூட்டை கட்டுதல் போன்ற வேலைகளுக்கு ஆட்கள் கிடைக்காத சூழ்நிலையில் இவை அனைத்துக்கும் பல லட்ச ரூபாய் செலவில் இயந்திரங்கள் ஜப்பான், கொரியா, சீனா ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இலவசங்கள் ஏழ்மையை ஒழித்ததா? தொழில் வளத்தைப் பெருக்கியதா? இல்லை. சோம்பேரித்தனத்தைப் பெருக்கி குற்றங்களை அதிகப்படுத்திவிட்டது. இதற்கெல்லாம் சிகரம் போல குடிப்பழக்கம். குடிப்பது ஒரு சமுதாய அந்தஸ்து எனும் எண்ணம் பரவி, பள்ளி மாணவர்கள் கூட ஏதாவதொரு சந்தர்ப்பத்தைக் கொண்டாட 'தண்ணீர் பார்ட்டி' எனும் பெயரில் குடித்து வீணாகிறார்கள். தீர்க்கதரிசனம் இல்லாத பல திட்டங்களின் காட்டுக்கிடையில் ஒரு ஒளிவிளக்காக வந்த ராஜாஜியின் ஆதாரக் கல்வித் திட்டம் குழி தோண்டிப் புதைக்கப்பட்டது. இதனால் யாருக்கு என்ன ஆதாயம் கிடைத்தது. அந்த இறைவனுக்கே வெளிச்சம். உங்கள் பின்னூட்டம் என் மனத்தில் கிளப்பிய புயலின் எதிர் விளைவு இந்த விளக்கம். நன்றி.
Post a Comment