பாரதி பயிலகம் வலைப்பூ

Friday, August 5, 2011

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்


சுதந்திர வேங்கை

(இந்திய சுதந்திரத்தின் 64ஆம் ஆண்டு விழாவில் ஏனையோர் மறந்தாலும் நாம் மறக்காமல் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களை நினைவு கூர்வோம். காந்தி வழியல்லாது மாற்று வழியில், வீரம் செறிந்த வழியில் பாடுபட்ட அந்த மாவீரனுக்கு சுதந்திரத் திருநாளில் நம் நன்றியறிதலை உரித்தாக்குவோம். கவிஞர் திருச்சி தியாகராஜன் இயற்றி "வெளிச்சம்" எனும் நூலில் வெளியான அவரது பாடலில் இருந்து சில பகுதிகள் இங்கே ....) நன்றி: திருச்சி தியாகராஜன்.)

அடிமைக் குகையில் சிறைப்படுத்தி
ஆடிக் களித்த அந்நியரின்
கொடிய கரங்கள் முறிந்து விழக்
கொதித்த தேசப் பாசறையில்
சுடராய் எழுந்த சுபாஷ் போஸ்
தொடுத்த வார்த்தைப் பொறிகளினால்
அடக்கியாண்ட நெஞ்சமெல்லாம்
அதிர்ச்சி நோயால் கலங்கினவாம்.

வங்க மண்ணில் பிறந்தவரே
வாழ்வில் ஆன்ம நேயத்தைத்
தங்க வைத்தே மனமுருகத்
தாய்நாட்டிற்கே விடுதலையால்
பொங்கி வந்த உணர்ச்சியினால்
புதிய திருப்பம் தேர்ந்தெடுத்துச்
சிங்கக் குரலில் முழங்கி வந்தே
தேசப் பற்றில் ஈடுபட்டார்.

அகிம்சைப் போரால் விடுதலையை
அடைவ தென்றால் முடிந்திடுமா?
"பகைவன் நம்மை எளிதாகப்
பணிய வைப்பான், அதனாலே
தகுந்த வழியைத் தேர்ந்தெடுத்தேன்
தங்கள் வழிக்கு வாரு"மென்றே
அகத்தில் உறுதி கொண்டதனால்
அண்ணல் காந்தி வேறுபட்டார்.

இந்தி யர்கள் கோழையென
இட்லர் மொழிந்த இழிசொல்லின்
சிந்தை திருந்த வைத்ததுடன்
சீராய்த் தேச உடையணிந்தே
அன்று படத்தைப் பிடிக்கவைத்தே
ஆழ்ந்த நாட்டுப் பற்றுரைத்தார்
குன்று மலையாய்க் கோலமிடும்
கொள்கை கொண்டே பழகிவந்தார்.


சிங்கப் பூரை ஜப்பானும்
சேர்த்துக் கொண்ட நேரத்தில்
வங்க வேங்கை நேதாஜி
வந்தார் வீர உணர்வோடே
அங்கே வாழ்ந்த இந்தியரின்
அடிமைத் தளையை விடுவித்துச்
சிங்கக் குரலால் தாய்நாட்டுச்
சேவைக் காக அழைத்திட்டார்.

"இந்தி யாவில் சுதந்திரமாய்
இயங்கும் டில்லிக் கோட்டையிலே
சந்திக் கின்றேன்" எனக்கூறித்
தானாய் மறைந்த நேதாஜி
எந்த நிலையோ யாரறிவார்
எதையோ பலரும் பேசுகிறார்
விந்தை புரிந்த வரிவேங்கை
வேட்கை தீர்ந்தும் வரக்காணோம்.

சிவந்த அந்தத் திருமேனி
செம்மை வளர்த்த பெருநெஞ்சம்
கவரும் காந்தப் பேச்சாளர்
கள்ள மில்லாப் பண்பாளன்
எவரும் விரும்பும் பெருந்தலைவன்
எழுத்தில் இசையில் சீராளன்
கவிதைச் சோலைப் பூவண்டு
கண்ட கனவே பொய்யல்ல!

வாழிய நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பெருமை.

1 comment:

Anonymous said...

very good i slightly know about NETHAJI I NEED TO KNOW MORE ABOUT HIM , CAN U HELP ME ?