கிருத யுகம்
மகாகவி பாரதி "புதிய ருஷியா" என்ற பாடலை 'ஜார் சக்கரவர்த்தியின் வீழ்ச்சி' என்ற துணைத் தலைப்போடு பாடியிருக்கிறான். அந்தப் பாடலை
'மாகாளி பராசக்தி உருசிய நாட்டினிற் கடைக்கண் வைத்தாள், அங்கே
ஆகா வென்றெழுந்தது பார் யுகப் புரட்சி: கொடுங்கோலன் அலறி வீழ்ந்தான்'
என்று தொடங்கி, 'இரணியன் போலரசாண்டான் கொடுங்கோலன், ஜாரெனும் பேரிசைந்த பாவி' என்றும் ஜார்மூடன் 'தருமம் தன்னைத் திரணமெனக் கருதிவிட்டான்' என்றெழுதி அந்த நாட்டில் 'பொய் சூது தீமையெல்லாம் அரணியத்திற் பாம்புகள் போல் மலிந்து வளர்ந்தோங்கினவே' என்றும் வருந்துகிறான்.
'உழுது விதைத் தறுப்பாருக் குணவில்லை, பிணிகள் பலவுண்டு' ஆனால் 'பொய்யைத் தொழுது அடிமை செய்வார்க்குச் செல்வங்களுண்டு, உண்மை சொல்வோர்க் கெல்லாம் எழுதரிய பெரும் கொடுமைச் சிறையுண்டு, தூக்குண்டே இறப்பதுண்டு' என்று அங்கிருந்த நிலைமைப் படம் பிடித்துக் காட்டுகிறான்.
சில சொற்றொடர்கள் பாரதி புதிதாகக் கையாண்டவை. அவை அமரத்துவம் பெற்று நடைமுறையில் நமக்குப் பயன்பட்டு வருகிறது. அதில் ஒன்று: 'இம்மென்றால் சிறைவாசம், ஏனென்றால் வனவாசம்' என்பது.
ஜார் மன்னனின் வீழ்ச்சியைச் சொல்லும் போது பாரதி, 'இமயமலை வீழ்ந்தது போல் வீழ்ந்துவிட்டான் ஜார் அரசன்; இவனைச் சூழ்ந்து சமயமுளபடிக்கெல்லாம் பொய்கூறி அறம் கொன்று சதிகள் செய்த சுமடர் சடசடவென்று சரிந்திட்டார்' என்கிறான். (இங்கு சொல்லப்படும் 'சுமடர்' எனும் சொல்லுக்கு 'அறிவில்லாதவன்', 'கீழ்மகன்' என்று அகராதியில் பொருள் கூறப்பட்டிருக்கிறது).
'புயற்காற்றுச் சூறை தன்னில் திமுதிமென மரம் விழுந்து காடெல்லாம் விறகான செய்தி போலே' சுமடர்கள் சரிந்து விட்டார்களாம். பிறகு உருவான நிலை என்ன?
"குடிமக்கள் சொன்னபடி, குடிவாழ்வு மேன்மையுறக் குடிமை நீதி கடியொன்றில் எழுந்தது பார்!" என்கிறான். அப்படி எழுந்ததுதான் "குடியரசு" என்று உலகறியக் கூறிவிட்டார் என்று உலகில் குடியரசு தோன்றியதையும் அந்தக் குடியரசு யாருக்காக, யார் சொன்னபடி, யாருடைய மேன்மைக்காக என்பதையும் குறிப்பிட்டுக் காட்டிவிட்டான்.
இனி இங்கே யாருக்கும் அடிமைத் தளை கிடையாது. இங்கு இனி அடிமை என்று எவரும் இல்லை. இந்தச் செய்தியை உலகோரே அறிக! என்று பறைசாற்றுகிறான். யுகங்களில் ஒன்றான -- பசி, பிணி, மூப்பு, இறப்பு, துன்பம், பூசல், போட்டி, பொறாமை, அழிவு என்றெல்லாம் துன்பம் தரும் கலி வீழ்ந்துவிட்டான். கலி வீழ்ந்தபின் தோன்றுவது எது? அதுதான் கிருதயுகம்.
கலியின் கேடுகள் முடிந்தது, கலிதரும் துன்பம் தொலைந்தது. மக்களுக்குத் துன்பங்களை மட்டும் காட்டி நின்ற கலியுகம் சர்வாதிகாரியின் வீழ்ச்சியோடு முடிவுக்கு வந்தது என்பது பாரதி கருத்து. ஆங்கில ஏகாதிபத்தியத்தின் காலடியில் நசுக்கப்பட்ட பாரத சமுதாயத்தின் நாகரிகம், பண்பாடு, கல்வி இவைகளெல்லாம் ரஷ்யப் புரட்சிக்குப் பின் இங்கும் சுதந்திரக் காற்று வீசும். அந்நிய ஆதிக்கம் முடிவுக்கு வரும். மக்களால், மக்களுக்காக, மக்களே ஆளும் சூழ்நிலை வரும், அப்படிப்பட்ட சூழ்நிலைதான் நம்மை 'கிருத யுகத்துக்கு'க் கொண்டு செல்லும் என்பது பாரதியின் நம்பிக்கை.
இந்த நம்பிக்கை நடந்தேறியதா? அன்றைய இடுக்கண் மத்தியில் அமைதியிழந்திருந்த பாரதிக்கு ரஷ்யாவில் தோன்றிய விடிவெள்ளி, நம் பாரத நாட்டிலும் தோன்றும், அப்படித் தோன்றுகின்ற மக்களாட்சி மக்களுக்கு 'கிருத யுகத்தின்' பலன்களையெல்லாம் அள்ளிக் கொடுக்கும் என்று நம்பியிருந்தான். வா கிருத யுகமே வா என்று வரவேற்பு கொடுக்கிறான். எழுக கிருத யுகம் என்பது அவனது ஆணை!
யுகங்கள் முறையே, திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம், கிருதயுகம் என்பர். இந்நான்கு யுகங்களில் துவாபர யுகம் எப்போது முடிந்து, கலி எப்போது தொடங்கியது. மகாபாரத யுத்தத்தோடு துவாபரயுகம் முடிந்து கலி தொடங்கிவிட்டதாகக் கூறுவர். கலியின் கேடுகள் பெரியோர்கள் சொன்னபடிதான் நடந்து வருகின்றன. இது எத்தனை காலம் தொடரும். கிருத யுகம் எப்போது தொடங்கும்? இது துன்பத்தில் துவளும் அத்தனை உள்ளங்களும் விடை தேடுகின்ற வினா.
'பரித்ராணாய சாதூனாம், விநாசாய சதுஷ்கிருதாம், தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே' என்பது ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் வாக்கு. எப்போதெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம் ஓங்குகிறதோ அப்போதெல்லாம் நான் அவதரிப்பேன் என்கிறான் கண்ண பரமாத்மா.
கலியுகத்தின் கால அளவைக் கணக்கிட்டுச் சொல்லியிருக்கிறார்கள். அது நான்கு லட்சத்து முப்பத்திரெண்டாயிரம் ஆண்டுகளாம்! அவர்கள் கணக்குப்படி இப்போது கலி 5115 ஆண்டுகள் முடிவடைந்துவிட்டதாகத் தெரிகிறது. ஆகையால் கலி முடிய நாம் இன்னும் பல லட்சம் ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதுதான். இப்போதைக்கு நமக்கு இந்தத் துன்பங் களிலிருந்து விடுதலை இல்லை.
ஆனாலும், கலியுகத்துக்குள் ஒரு கிருத யுகத்தை உருவாக்க மனிதன் ஏன் முயற்சி செய்யக் கூடாது? முயன்றால் முடியாததும் உண்டா? எண்ணிப் பாருங்கள். நற்காலம் பிறக்க நாம் முயற்சி செய்வோம்.