பாரதி பயிலகம் வலைப்பூ

Sunday, July 3, 2011

ஆர். வெங்கட்ராமன்

ஆர். வெங்கட்ராமன்

இந்தியாவின் ஜனாதிபதி பதவி வகித்தவருள் இரண்டாவது தமிழர் ஆர்.வெங்கட்ராமன் அவர்கள். முதலாமவர் டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன். ஜனாதிபதி பதவிக்கு உரிய கெளரவத்தை, அறிவாற்றலை, திறமையை வெளிப்படுத்தியவர்களில் ஆர்.வி. அவர்களும் ஒருவர்.

அவர் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் என்பது இந்த மாவட்டக் காரர்களுக்கு பெருமை. இளம் வயது முதல் நாட்டுப் பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு முழுமையான வாழ்வு வாழ்ந்தவர் ஆர்.வி. தமிழகத்தில் அமைச்சராக இருந்த காலம் இம்மாநிலத்தின் பொற்காலம் எனலாம். அவர் காலத்தில்தான் அரசு போக்குவரத்துக் கழகம் உருவானது. அவர் காலத்தில்தான் தமிழகத்தின் பல இடங்களில் தொழிற்பேட்டைகள் தோன்றின. அவர் காலத்தில்தான் திருவெறும்பூரில் 'பெல்' தொழிற்சாலை, நெய்வேலி லிக்னைட் தொழிற்சாலை போன்ற பல தொழில்கள் தோன்றின. எளிமையும், நேர்மையும் அவருடைய கொள்கை. தலைவர் காமராஜ் அவர்களின் வலது கரம் போல இருந்து பணியாற்றி தமிழகத்துக்குப் பெருமை சேர்த்தவர் ஆர்.வி.

அவர் வரலாறு தமிழக அரசியல் காரணமாகவோ, அலட்சியம் காரணமாகவோ அல்லது என்ன காரணத்தினாலோ அவ்வளவாக பிரபலமாகாமலே இருந்து வருகிறது. தேவையற்ற
வர்களைப் பற்றி ஓகோ என்று எழுதிவரும் ஊடகங்களும் இவரைப் போன்ற ஒரு ஆக்க பூர்வமான தலைவரை திரைபோட்டு மூடப்பார்க்கிறது என்பது வருத்தத்துக்குரியது.

ஆர்.வி.அவர்கள் ஓர் உண்மையான தேசபக்தர். நாட்டின் முன்னேற்றத்தில் உண்மையான அக்கறை கொண்டவர். அவர் வாழ்நாளில் அவர் வகித்த எந்த பதவியானாலும் அந்தப் பதவிக்கு கெளரவமும், அந்தப் பதவியினால் நாட்டுக்கும் மக்களுக்கும் அளவற்ற சேவையைச் செய்தவர் என்கிற புகழுக்கு உரியவர். அவரை ஒரு சாதாரண அரசியல் வாதி என்பதைக் காட்டிலும் நாட்டு முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட ஒரு தீர்க்கதரிசி எனலாம். அவர் ஜனாதிபதியாக இருந்த காலம் அமைதியான அரசியல் இருந்த காலம் அல்ல. அவர் பதவிக் காலத்துக்குள் இரண்டு ஆண்டுகளுக்குள் மூன்று பிரதம மந்திரிகள் பதவி ஏற்றுக் கொள்ளும் நிலைமை எல்லாம் உருவானது.

அப்போது நடந்த அரசியல் சதுரங்கத்தில் நேர்மை தவறாமல், மனச்சாட்சிக்கும், அரசியல் சாசனத்துக்கும் உண்மையாக நடந்து கொண்டு தம்முடைய கெளரவத்தை உயர்த்தியவர் ஆர்.வி. இன்னும் சொல்லப் போனால் பொதுவாழ்வில் அவரைப் போல நேர்மையும், நாணயமும், சத்தியத்தின்பால் நாட்டமும் கொண்ட வேறொருவரை இன்று பார்ப்பது அரிது. வாசாலகமாகப் பேசவும், தன்னைத் தன் அளவுக்கு மீறி புகழ்ந்துகொள்வதும், இல்லாததை இருப்பதுபோல் காட்டிக் கொள்ளுவதும் போன்ற காரியங்கள் எதையும் அவரிடம் பார்க்கமுடியாது. அதுபோலவே காரியங்களைச் சாதித்துக் கொள்வதற்காகவும், சுயநலத்திற்காகவும் யாரிடமும், எந்தக் காரணம் கொண்டும் அவர் துதிபாடி காரியங்களைச் சாதித்துக் கொண்டது கிடையாது.

சுதந்திரப் போர் காலத்தில் மகாத்மா காந்தியடிகள், ஜவஹர்லால் நேரு, வல்லபாய் படேல் போன்றவர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றி நடந்த அதே நேர்மை சுதந்திர இந்தியாவிலும் அவர்களது கொள்கைகளைக் கடைப்பிடிப்பதில் காட்டியவர் ஆர்.வி. காந்தி, நேரு காட்டிய பாதையிலிருந்து சற்றும் வழுவாமல் கடைசிவரை ஒரு குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் இருந்தவர் ஆர்.வி. இனி கர்ம வீரர் காமராஜரின் வலது கரமான ஆர்.வி பற்றிய சுயவிவரங்களைப் பார்க்கலாம்.

இவர் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த ராஜாமடம் எனும் கிராமத்தில் 1910 டிசம்பர் 4இல் பிறந்தார். திருச்சி தேசியக் கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். சென்னை லயோலா கல்லூரியில் பொருளாதார முதுகலை பட்டம் பெற்றார். சென்னை சட்டக் கல்லூரியில் சேர்ந்து படித்து 1935இல் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராகப் பதிவு செய்து கொண்டார். வக்கீலாக பணியாற்றிக் கொண்டே இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டார். 1938இல் இவர் ஜானகி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். தேசபக்தி காரணமாக காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து பணியாற்றினார்.

1942இல் பம்பாய் காங்கிரஸ் 'வெள்ளையனே வெளியேறு' தீர்மானத்தை நிறைவேற்றியது. நாட்டின் தலைவர்கள் அனைவரும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். இளம் வக்கீலான ஆர்.வி. அப்போது அந்தப் போராட்டத்தில் தீவிரமாகக் கலந்து கொண்டு இரண்டு ஆண்டுகள் சிறை சென்றார். தொழிலாளர்கள் மீது அக்கறை கொண்ட ஆர்.வி. தொழிலாளர் நலச் சட்டத்திலும் ஆழ்ந்த அறிவு பெற்றிருந்தார், அதன் மூலம் தொழிலாளர்கள் போராட்டங்களுக்கு ஆதரவும், அவர்களுக்கு ஆதரவாக பல வழக்குகளில் வெற்றியும் பெற்றுத் தந்திருக்கிறார்.

ஆகஸ்ட் புரட்சியின்போது சிறை சென்று திரும்பியபின் ஆர்.வி. காங்கிரஸ் இயக்கத்தின் தொழிலாளர் பிரிவில் தீவிர பங்காற்றத் தொடங்கினார். 1949இல் இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு தமிழ்நாட்டில் Labour Law Journal எனும் இதழைத் தொடங்கி நடத்தினார். சென்னையில் பல தொழிற்சங்கங்களில் இவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொழிலாளர் நலனுக்காக இவர் அல்லும் பகலும் பாடுபட்டு, அவர்களின் அன்புக்கும், நன்றிக்கும் பாத்திரமானார். இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் இவர் காலத்தில் தமிழகத்தின் பல தொழில்களிலும் வளர்ந்து தொழிலாளர்களின் வாழ்வை நிச்சயிக்கும் முக்கியப் பணியில் ஈடுபட்டிருந்தது. ஐ.என்.டி.யு.சி. எனும் இந்தத் தொழிற்சங்கம் தொழிலாளர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கியமைக்கு ஆர்.வி. ஒரு முக்கிய காரணம்.

சட்ட ஞானமும், தொழிலாளர் சட்டங்களில் உள்ள ஆற்றலும் இவரை அரசியலுக்கு இழுத்துச் சென்றது. அரசியல் நிர்ணய சபையில் இவரும் ஒரு உறுப்பினர் ஆனார். இந்த சபைதான் ஒரு உப கமிட்டியை நியமித்து இந்திய அரசியல் சட்ட வரைவை உருவாக்க ஏற்பாடு செய்தது. அதில் ஆர்.வி. முக்கிய பங்கு வகித்தார். இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த 1950 முதல் சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத்தேர்தல் நடந்த 1952 வரையில் இவர் பாராளுமன்றத்தின் உறுப்பினராக இருந்து பாடுபட்டார். இவரது அயராது உழைப்பைப் பார்த்த தலைவர் காமராஜ் இவரை 1952இல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் நிறுத்தி வெற்றிபெறச் செய்தார். 1957 வரை இவர் அந்தப் பதவியில் இருந்தார். 1957இல் நடந்த தேர்தலிலும் இவர் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்றார். ஆனால் அங்கு அவர் நீண்ட காலம் பணியாற்றவில்லை. காரணம் அவரது சேவை தமிழகத்துக்குத் தேவைப்பட்டது. பெருந்தலைவர் முதல்வராகப் பதவி வகித்த போது இவர் சென்னைக்கு அழைக்கப்பட்டு, தொழிலாளர் நலத்துறை அமைச்சராகப் பதவி ஏற்றுக் கொண்டார். தொழிலாளர் நலம் தவிர, தொழில்கள், மின்சாரத் துறை, போக்குவரத்துத் துறை, வணிகவரித்துறை என்று பல துறைகளை இவர் கவனித்து வந்தார்.

பல வெளிநாடுகளுக்கு இவர் தொழிலாளர் நலம் குறித்த கூட்டங்களுக்கு அனுப்பப் பட்டார். நியுசிலாந்து நாட்டில் நடந்த காமன்வெல்த் நாடுகளின் பாராளுமன்ற கூட்டத்துக்கு இவர் பிரதிநிதியாகச் சென்றார். 1967இல் இவர் மத்திய மந்திரிசபையில் ஒரு அமைச்சரானார். அங்கு இவர் தொழில்கள், தொழ்லாளர் நலன், மின்சாரத்துறை, போக்குவரத்துத் துறை, ரயில்வே ஆகிய துறைக்குப் பொறுப்பு வகித்தார். யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் உறுப்பினராகவும் இருந்தார்.

1975 முதல் 1977 வரையிலான காலகட்டத்தில் இவர் "சுயராஜ்யா" பத்திரிகையின் ஆசிரியராகவும் இருந்திருக்கிறார். மத்திய அரசாங்கத்தில் அரசியல் விவகாரக் குழுவிலும், பொருளாதார விவகாரங்களுக்கான குழுவிலும் இவர் அங்கம் வகித்திருக்கிறார். 1977இல் தென்சென்னை லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று டெல்லி சென்றார். ஆனால் அந்த ஆண்டில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்து ஜனதா அரசு பதவி ஏற்றது. அப்போது ஆர்.வி. ஒரு எதிர்கட்சி எம்.பி.யாகவும் பணியாற்றியிருக்கிறார். பாராளுமன்ற வழக்கப்படி பொதுக்கணக்குக் குழுவுக்கு எதிர்கட்சி உறுப்பினர்தான் தலைவராக ஆவார்கள். அதுபோல அந்த ஆண்டு பொதுக்கணக்குக் குழுவுக்கு ஆர்.வி.தான் தலைவர்.

ஜனதா அரசு கவிழ்ந்து மறுதேர்தல் 1980இல் நடைபெற்ற போது இந்திரா காந்தி தலைமையில் காங்கிரஸ் அரசு மீண்டும் பதவிக்கு வந்தது. அப்போதும் ஆர்.வி. தேர்தலில் வெற்றி பெற்று இந்திய அரசின் நிதி அமைச்சராக பதவி ஏற்றார். 1983இல் அமைச்சரவை மாற்றம் நடந்தது. ஆர்.வி. பாதுகாப்பு அமைச்சராக ஆனார். இவருடைய காலத்தில் நமது ராணுவம் நவீனமயம் ஆவதற்கு உண்டான அனைத்துப் பணிகளையும் இவர் செய்தார். ஏவுகணைகள் இந்திய ராணுவத்தில் சேர்ப்பதற்கு இவர் ஆற்றிய பணி முக்கியமானது. அப்போது வான்வெளி ஆராய்ச்சித் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்த ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களை ஏவுகணை உற்பத்தித் துறைக்கு மாற்றியதும் ஆர்.வி.தான். அவர் காலத்தில் அந்தத் துறை அடைந்த வளர்ச்சி பற்றி சொல்லித் தெரியவேண்டும் என்பது இல்லை, அல்லவா?

1984இல் இந்திய துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறகு 1987இல் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 1992 வரையில் அந்தப் பதவிக்குக் கெளரவம் சேர்த்தார். இவர் காலத்தில்தான் மூன்றுக்கும் மேற்பட்ட பிரதமர்கள் குறுகிய காலத்தில் பதவிக்கு வரும் நிலைமையும், நாட்டில் கூட்டணி அமைத்து அரசு அமைக்கும் நிலைமையும் ஏற்பட்டது. அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் இவர் நேர்மையாகவும், சற்றும் பாரபட்சமின்றியும் நடந்துகொண்டது வரலாற்றில் இடம்பெற்றுவிட்ட நிகழ்ச்சி. ஆனாலும் நம் நாட்டில் குறிப்பாக தமிழ்நாட்டில் எத்தனை நல்லவரானாலும் அவருக்கும் ஒரு களங்கம் கற்பிக்கும் வழக்கம் உண்டு அல்லவா, அப்படி ஒரு சில கால நேரங்களில் அவரும் குறைகூறப்பட்டார்.
1950 முதல் 1960வரையிலான காலகட்டத்தில் ஆர்.வி. பல சர்வதேச அமைப்புகளில் அங்கம் வகித்துப் பணியாற்றியிருக்கிறார். சர்வதேச நிதித் துறையில் I.M.F. எனப்படும் International Monetary Fundலும், International Bank for Reconstruction and Development, Asian Development Bank ஆகியவற்றில் பதவி வகித்திருக்கிறார். ஐக்கிய நாடுகளின் சபையில் இந்தியாவின் பிரதிநிதியாகவும் இவர் இருந்திருக்கிறார். 1958இல் ஜெனீவா நகரில் நடந்த சர்வதேச தொழிலாளர் நல மாநாட்டில் இந்தியக் குழுவிந்த் தலைவராகச் சென்று கலந்து கொண்டிருக்கிறார். 1978இல் வியன்னா நகரில் நடந்த மகாநாட்டிலும் இவர் பங்கு பெற்றிருக்கிறார். ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் உள்ள United Nations Administrative Tribunal எனும் அமைப்பில் இவர் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார். 1968இல் இவர் அதன் தலைவராகவும் இருந்திருக்கிறார். 1979 வரை அவர் இந்தப் பதவியில் இருந்தார்.
இவருக்குப் பல விருதுகள் கிடைத்தன. ஆனால் இவர் பெயருக்கு முன்பு அவற்றைப் போட்டுக்கொண்டு பெருமைப் பட்டுக் கொள்ளவில்லை. சென்னை பல்கலைக் கழகம், பர்துவான் பல்கலைக்கழகம், நாகார்ஜுனா பல்கலைக் கழகம், பிலிப்பைன்ஸ் பல்கலைக் கழகம் ஆகியவை இவருக்கு கெளரவ Doctor of Law எனும் பட்டத்தைக் கொடுத்து கெளரவித்திருக்கிறது. ரூர்க்கி பல்கலைக் கழகம் இவருக்கு Doctor of Social Sciences எனும் பட்டத்தைக் கொடுத்தது. சென்னை மருத்துவக் கல்லூரியில் இவர் Honorary Fellowஆக இருந்தார். இந்திய சுதந்திரப் போரில் பங்குகொண்டு சிறை சென்றமைக்காக இவருக்குத் தாமரப் பட்டயம் கொடுத்து கெளரவிக்கப்பட்டது.

சோவியத் யூனியனுக்கு பெருந்தலைவர் காமராஜ் சென்றபோது இவரும் உடன் சென்றார். அப்போது இவருடைய அனுபவங்களையும் பெருந்தலைவரின் சுற்றுப்பயணம் குறித்தும் "Kamaraj's Journey to Soviet Countries" எனும் தலைப்பில் எழுதிய நூலுக்கு ரஷ்யாவிலிருந்து வெளிவந்த "Soviet Land" விருது 1967இல் கிடைத்தது. ஐக்கிய நாடுகள் சபையில் இவர் ஆற்றிய பணிகளுக்காகவும் இவர் கெளரவிக்கப்பட்டார்.

நிறைவாக இவரைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால், இவர் காஞ்சி காமகோடி மடத்தின் 68ஆவது பீடாதிபதியாக விளங்கிய மகாசுவாமிகள் என்று அழைக்கப்பட்ட ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் பக்தர். காஞ்சி மடத்தின் கெளரவ ஆலோசகர் இவர். அந்த மகா சுவாமிகள் இவருக்கு "சத் சேவா ரத்னா" எனும் விருதை வழங்கி ஆசீர்வதித்தார். இவர் தனது 98ஆம் வயதில் சிறிதுகாலம் உடல் நலக் குறைவால் டெல்லி மருத்துவ மனையில் 27-1-2009 அன்று காலமானார். இவருக்கு மனைவி ஜானகி வெங்கட்ராமன் மற்றும் மூன்று பெண்கள் உள்ளனர். 

1 comment:

Unknown said...

ஒரு நல்ல மனிதரைப் பற்றி தெரிந்துக் கொண்டேன்.
இந்த நல்ல தேசிய வாதியின் நூட்ட்றாண்டு விழாவை
அதி விமர்சியாக அவர் சார்ந்த இயக்கம் கொண்டாடியதா?
என்றால் இல்லை என்றே எண்ணத் தோன்றுகிறது...

நல்ல ஒரு தேச பக்தரை பற்றிய பதிவிற்கு நன்றிகள் ஐயா!
http://tamizhvirumbi.blogspot.com/