பாரதி பயிலகம் வலைப்பூ

Sunday, July 3, 2011

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி குறித்து தமிழ் கூடல் எனும் வலைத்தளத்தில் 2007ஆம் ஆண்டில் வெளியான கட்டுரை இது. தமிழ் கூடலுக்கு நன்றி தெரிவித்து அதனை மறுவெளியீடு செய்திருக்கிறேன். மக்கள் இந்த அம்மையாரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்பதே நமது அவா! மீண்டும் நன்றி "தமிழ் கூடல்".

சாதனைப் பெண்கள்:முதல் இந்தியப் பெண்டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி

கூடல்.காம் - Thursday, August 02, 2007
Dr. Muthulakshmi Reddy -the first Indian woman doctor - Women Secrets of Success
பெண்கள் அடிமைகளாக, புழு-பூச்சிகளாகக் கருதப்பட்ட காலத்தில், பெண்களின் செயல்களுக்கு அதிகம் முக்கியத்துவம் இல்லாத காலத்தில் பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக புரட்சிப் பெண்ணாகத் தோன்றியவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி (Dr. Muthulakshmi Reddy).
அனாதைக் குழந்தைகளை எடுத்து வளர்த்து, அவர்களுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை அமைக்கும் அவ்வை இல்லம், புற்று நோய்க்கு உயர்தர சிசிக்சைகள் அளிக்கும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை போன்றவற்றை அமைத்தவர்.
அது மட்டுமல்ல, இந்தியாவிலேயே டாக்டருக்குப் படித்துப் பட்டம் பெற்ற முதல் பெண்மணி. அரசின் உதவித்தொகையால் வெளிநாடு சென்று உயர் கல்வி பெற்ற முதல் பெண். சட்டசபையில் அங்கம்வகித்த முதல் பெண். இப்படிப் பல நிகழ்வுகளில் முதல்பெண் மணியாகத் திகழ்ந்தவர் முத்துலட்சுமி ரெட்டி-மேலும், சமூக சிர்திருத்தவாதியாகவும், அஞ்சா நெஞ்சம் கொண்டவராகவும் வாழ்ந்தவர் இவர்.
புதுக்கோட்டை சமஸ்தானத்தில் திருக்கோகர்ணம் என்ற இடத்தில் கவுரவமான ஒரு குடும்பத்தில் 1886-ஆம் ஆண்டு பிறந்தார் முத்துலட்சுமி. நாராயண சாமி, சந்திரம்மாள் தம்பதியருக்குப் பிறந்த இவருக்கு சுந்தரம்மாள், நல்லமுத்து என்று இரண்டு தங்கைகள், இராமையா என்று ஒரு தம்பி.
முத்துலட்சுமியின் தந்தை நாராயணசாமி, புதுக்கோட்டையில் மகாராஜா கல்லூரியின் முதல்வராகப் பணியாற்றி வந்தார். முத்துலட்சுமிக்கு நான்கு வயதானபோது, திண்ணைப் பள்ளிக்கூடத்தில் þச்ர்க்கப்பட்டார். முத்துலட்சுமிக்கு வயதானபோது, படிப்பை நிறுத்த நினைத்தனர். ஆனால் முத்துலட்சுமி நன்றாகப் படித்ததால், தொடர்ந்து படிக்க வையுங்கள் என ஆசிரியர்கள் சிபாரிசு செய்யவே, உயர் நிலைப்பள்ளி படிப்பைத்தொடர வாய்ப்பு பெற்றார்.
மெட்ரிகுலேஷன் தேர்வு எழுதிய 100 பேரில், பத்துபேர் மட்டுமே வெற்றி பெற்றனர். அவர்களில் ஒரே மாணவி, அதிலும் முதல் மாணவி என்ற பெருமை பெற்றவர் முத்துலட்சுமி. அதனால் தொடர்ந்து அவர் கல்லூரியில் சேர்ந்து படிக்கத்தடை ஏதும் இல்லாமல் போனது.
சிறுவயதில் இருந்தே முத்துலட்சுமிக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்தது. எனினும் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் படிப்பில் கவனமாக இருந்தார். கல்லூரியில் படிக்கும்போது கண்பார்வை சற்று மங்கியது. அதற்குக் கண்ணாடி கூட போட்டுக் கொள்ளாமல் கல்லூரிப்பாடங்களுடன் ஷேக்ஸ்பியர் (Shakespeare), டென்னிசன் (Tennyson), மில்டன் (Milton), ஷெல்லி (Shelly) போன்ற மேல்நாட்டு இலக்கிய நூல்களையும் படித்தார். தனது 20 ஆவது வயதில் சென்னையில் உள்ள மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து மருத்துவப் படிப்பைப் பயின்றார்.
மருத்துவக் கல்லூரியில் சேரும்போது, புதிதான அந்தச் சூழ்நிலையால் பயந்திருந்த முத்துலட்சுமி வெகுவிரைவில் பயத்திலிருந்து மீண்டு, படிப்பில் முன்னேறுவதில் கவனம் செலுத்தினார். அறுவை சிகிச்சை தேர்வில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுத் தேறினார். இதனால் மருத்துவம் படித்துப் பட்டம் பெற்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமை பெற்றார்.
திருமண வயதை அடைந்த முத்துலட்சுமிக்குத் திருமணம் செய்து வைக்க பெற்றோர் விரும்பினாலும், அவருக்கோ திருமணத்தில் ஆர்வம் இல்லை. அவருடைய விருப்பமெல்லாம் படிப்பிலும், சமூகப் பணியிலுமே இருந்தது. இருப்பினும் சகோதர, சகோதரிகளின் வாழ்க்கையை மனதில் கொண்டு திருமணத்திற்கு சம்மதித்தார். அவருடைய எண்ணங்களுக்கேற்ற கணவனாக டி.சுந்தரரெட்டி அமைந்தார்.
அக்காலத்தில் அடையாறில் அன்னிபெசன்ட் (Anni Besant) அம்மையாரால் நிறுவப்பட்ட பிரம்மஞான சபையில், மூட நம்பிக்கைகள், அர்த்தமற்ற சடங்குகள் ஆகியவற்றைத் தவிர்த்து திருமணங்களை நடத்தி வந்தனர். அங்கேதான் முத்துலடசுமி-சுந்தரரெட்டி திருமணம் 1914-ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதத்தில் நடந்தது.
கணவன்-மனைவி இருவரும் மருத்துவப் பணியில் ஈடுபட்டனர். இந்த மனமொத்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் இராம்மோகன் திட்டக்குழுவின் இயக்குநராகப் பணியாற்றினார். இரண்டாவது மகன் கிருஷ்ணமூர்த்தி தாய்-தந்தையைப் போல மருத்துவரானார். பிற்காலத்தில் புற்றுநோய் சிகிச்சை நிபுணராகி அடையாறு புற்றுநோய் மருத்துவமனையை நிர்வகிக்கிறார்.
சரித்திரம் படைத்த பெண்மணிகள் வரிசையில் முத்துலட்சுமி ரெட்டி இடம் பிடித்தார். அந்தப் பெருமையை அவர் பெறக் காரணமானவற்றைத் தெரிந்து கொள்ளலாமே.
முத்துலட்சுமி ரெட்டியின் ஆற்றலை அறிந்த அரசாங்கம் பெண்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்கான விசேஷ பயிற்சி பெற, உபகாரச் சம்பளம் கொடுத்து அவரை இங்கிலாந்துக்கு அனுப்பியது. அங்கு 11 மாதம் தங்கி உயர் பயிற்சி பெற்றார்.
1926-ஆம் ஆண்டு 43 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட அகில உலகப் பெண்கள் மாநாடு, பிரான்சு நாட்டுத் தலைநகர் பாரீசில் நடைபெற்றது. அதில் இந்தியாவின் சார்பில் முத்துலட்சுமி ரெட்டி கலந்து கொண்டார். அப்போது அவர் நிகழ்த்திய செற்பொழிவில், ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் முன்னேற வேண்டும். பெண்களை அடிமைகளாக நடத்தும் வழக்கம் ஒழிய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அன்றைய சென்னை மாகாண சட்டசபைக்கு முத்துலட்சுமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் மூலம் சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி என்ற பெருமை பெற்றார்.
1925-ஆம் ஆண்டு சட்டசபைத் துணைத்தலைவராகத் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தப் பதவியில் இருந்த ஐந்தாண்டுளில் சில புரட்சி சட்டங்களைக் கொண்டு வந்து நிறைவேற்றினார். அவற்றில், தேவதாசி முறை ஒழிப்பு, இருதார தடைச் சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம், பால்ய விவாகங்களை தடை செய்யும் சட்டம் போன்ற சில குறிப்பிடத்தக்கவை.
அக்காலத்தில் வறுமையில் வாடிய பெண்களும் நடத்தையில் தவறிய பெண்களும் தங்களுக்குப் பிறந்த குழந்தைகளை குப்பைத் தொட்டியில் வீசிவிடுவது வழக்கம். அந்த மாதிரியான அனாதையாக்கப்பட்ட குழந்தைகளை வளர்த்து அவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்க உருவானதே அவ்வை இல்லம் அடையாறில் அமைந்துள்ள இதனை அமைத்தவர் முத்துலட்சுமி.
இதில் சேர்க்கப்படும் குழந்தைகளுக்குத் தாயாக இருந்த, அவர்களைப் படிக்க வைத்து, உரிய காலத்தில் தக்க மணமகளைப் பார்த்துத் திருமணம் செய்து வைப்பார்.
முத்துலட்சுமி, தனது கணவரின் மறைவிற்குப் பிறகு, கலக்கம் கொண்டாலும், விரைவில் மனதை திடப்படுத்திக் கொண்டார். மக்கள் சேவைக்கே தன் முழுநேரத்தையும் செலவிட ஆரம்பித்தார்.
முத்துலட்சுமி ரெட்டியின் தங்கை சுந்தரம்மாள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, தகுந்த சிகிச்சை இல்லாத காரணத்தினால் இளம் வயதிலேயே இறந்து போனார். காரணம் இக்கொடிய நோய்க்கு நல்ல மருத்துவ மனைகளே இல்லாமல் இருந்தது. தன் தங்கைக்கு நேர்ந்த கதி மற்றவர்களுக்கு ஏற்படக்கூடாது என்று, சென்னையில் புற்றுநோய் மருத்துவமனை அமைக்க உறுதி எடுத்தார். பலவிதங்களிலும் நிதி திரட்டினார். இன்று புற்று நோயாளிகளுக்குப் புகலிடமாக விளங்கும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்குப் பிரதமர் நேரு 1952-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அடிக்கல் நாட்டினார்.
முத்துலட்சுமியின் சேவைகளுக்காக மத்திய அரசு பத்ம பூஷண் விருது கொடுத்து கௌரவித்தது. பல சாதனைகள் புரிந்து, சரித்திரம் படைத்து, புகழ் பெற்ற முத்துலட்சுமி (Dr Muthulakshmi Reddy) 1968-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22-ஆம் தேதி மறைந்தார்.
அவர் மறைந்து விட்டாலும் அவருடைய சேவைகளை நினைவூட்டும் நினைவுச் சின்னங்களாக அன்வை இல்லமும், புற்றுநோய் ஆராய்ச்சி நிலையமும் விளங்கி வருகின்றன.

1 comment:

Unknown said...

அம்மையார் பிறந்த அந்த மண்ணில் பிறந்தேன் என்று எண்ணிப் பெருமைப் படுகிறேன். புதுக்கோட்டை அரசு மருத்துவ மனைக்கும் இவர் பெயர் சூட்டப்பட்டுல்லத்தை சிறுவயதில் கண்டிருக்கிறேன்.

"பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி
பேணி வளர்த்திடும் ஈசன்;
மண்ணுக் குள்ளே சிலமூடர் - நல்ல
மாத ரறிவைக் கெடுத்தார்."

"கண்கள் இரண்டினில் ஒன்றைக் - குத்திக்
காட்சி கெடுத்திட லாமோ?
பெண்க ளறிவை வளர்த்தால் - வையம்
பேதைமை யற்றிடுங் காணீர்."

"பட்டங்கள் ஆள்வதுஞ் சட்டங்கள் செய்வதும்
பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம்;
எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண்
இளைப்பில்லை கணென்று கும்மியடி!"

பாரதி வாழ்ந்த போதே அவனின் இந்த சத்தியமான வரிகள் சாத்தியமாகிருக்கிறது. அதை அவன் அறிந்திருந்தானோ என்றுத் தெரியவில்லை. அன்றைய சூழலில் பெண்மையைப் பற்றிய உயர்வான செய்திகள் பத்திரிகைகள் வெளியிட்டு சிறப்பிக்கும் வாய்ப்பு குறைவே!

பாரதி இன்னும் ஒரு நூற்றாண்டுக்கு எழுதி வைத்து விட்டுப் போய்விட்டான் என்பதை விட இந்த புவி உள்ளவரை அவன் கருத்துக்கள் தாம் வேத விளக்கமாகும் என்பதே உண்மை...
நன்றிகள் ஐயா!
http://tamizhvirumbi.blogspot.com/