பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, July 26, 2011

திருமதி நாகரத்தினம்மாள்.


திருமதி நாகரத்தினம்மாள்.

சற்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை விழா திருவையாற்றில் காவிரிக் கரையில் அமைந்துள்ள அவரது சமாதிக்கு அருகில் நடைபெறுகிறது. இன்று உலகம் முழுவதும் சங்கீத உலகில் ஸ்ரீ தியாகராஜரின் புகழ் பரவிக் கிடக்கிறது. சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை ஸ்ரீ தியாகராஜரின் சமாதி இருக்குமிடம் தெரியாமல் புதர் மண்டிக் கிடந்தது. அவரது கீர்த்தனைகள் அவருடைய சிஷ்ய பரம்பரையினரின் வாயிலாக பரவலாகப் பாடப்பட்டாலும், அவரது சமாதியில் குருபூஜை ஆராதனைகள் நடைபெறுவது 1905க்குப் பிறகுதான் தொடங்கியது. 1925இல் ஸ்ரீ தியாகராஜரின் சமாதி இருக்குமிடத்தை மிகவும் சிரமப்பட்டுக் கண்டுபிடித்து அதனை சீர் செய்து, மண்டபங்கள் எழுப்பி குடமுழுக்கு செய்து இன்று நாம் காணுகின்ற அளவுக்குத் தன் சொந்த பணத்தைச் செலவழித்து பாடுபட்டவர் நாகரத்தினம்மாள். அதன் பிறகு அவர் திருவையாற்ற்றிலேயே தங்கியிருந்து தன் கடைசி காலத்தை அங்கேயே கழித்தபின், தான் இறந்த பின் ஸ்ரீ தியாகராஜர் சமாதிக்கு எதிரேயே சமாதியடைந்தவர் திருமதி நாகரத்தினம்மாள். யார் இந்த நாகரத்தினம்மாள்? ஸ்ரீ தியாகராஜரின் பெருமையையும், அவருக்கு நடக்கும் ஆராதனை பற்றியும் அறிந்து கொண்ட அளவுக்கு தியாகராஜ பணியில் ஈடுபட்டுத் தன் உடல் பொருள் ஆவி அனைத்தையும் தியாகம் செய்த இந்த மாதரசி பற்றியும் சிறிது தெரிந்து கொள்ளலாமே!
                                                     Saint Thyagaraja's idol
1878 நவம்பர் 3ஆம் தேதி மைசூர் அரண்மனையைச் சேர்ந்த தேவதாசி குடும்பத்தைச் சேர்ந்த திருமதி புட்டலட்சுமி என்பவருக்கு மகளாகப் பிறந்தவர் நாகரத்தினம். தந்தையார் பெயர் சுப்பா ராவ், இவர் ஒரு வழக்கறிஞர். குழந்தை நாகரத்தினம் பிறந்த பிறகு சுப்பா ராவ் தன் மனைவி புட்டம்மாளைப் பிரிந்து சென்று விட்டார். ஆதரவில்லாமல் தன் ஒன்றரை வயது கைக்குழந்தையுடன் இருந்த புட்டலட்சுமி மைசூர் சமஸ்தானத்தில் பாடகியாக இருந்து வந்தார்.

மகள் நாகரத்தினத்துக்கு ஐந்து வயது ஆனபோது அவரை பள்ளியில் சேர்த்துப் படிக்க வைத்தார் தாயார். பள்ளிப் படிப்போடு இசையையும் சம்ஸ்கிருதத்தையும் தம்மையா சாஸ்திரியார் என்பவரிடம் கற்றுக்கொள்ளத் தொடங்கினார். வயது ஆக ஆக நாகரத்தினத்தின் இசை ஞானமும், பரத நாட்டியத்தில் திறமையும் பளிச்சிடத் தொடங்கின. ஒன்பதாவது வயதில் இவரது பாட்டையும், நடனத்தையும் கண்டு பிறர் பொறாமை கொள்ளுமளவுக்கு இவரது திறமை மெருகேறிக் கொண்டு வந்தது. பொறாமைக் காரர்கள் சிலர் நாகரத்தினம் பற்றிய பொய்யான செய்திகளைச் சொல்லி இவருக்குச் சொல்லித் தந்த ஆசிரியரை தடுத்து நிறுத்தினார்கள். புட்டலட்சுமி மனம் கலங்கினார். ஆசிரியர் சொல்லித்தராவிட்டால் தான் தற்கொலை செய்து கொள்வதாகவும் அச்சுறுத்தினார். எதுவும் பயனளிக்காத நிலையில் புட்டம்மாள் மைசூரை விட்டு வெளியேறினார். தன் மகளை இசையிலும், நாட்டியத்திலும் சிறந்த கலைஞராக ஆக்கும் வரை மைசூருக்குத் திரும்புவதில்லை என்று சபதம் மேற்கொண்டார்.
                                                         Satguru Sri Thyagarajaswami
தன் மகளுக்குத் தகுந்த இசை ஆசிரியரைத் தேடி இவர் சென்னைக்கு வந்தார். அங்கிருந்து காஞ்சிபுரம் பிறகு ஸ்ரீரங்கம் என்று பல ஊர்களுக்கும் சென்றார். எனினும் அவருக்குச் சரியான ஆசிரியர் அமையவில்லை. பிறகு மீண்டும் இவர் பெங்களூர் சென்று அங்கு ஒரு தகுந்த ஆசிரியரைக் கண்டுபிடித்தார். அவர்தான் வயலின் வித்வான் முனுசாமியப்பா என்பவர். ஸ்ரீ தியாகராஜரின் சிஷ்ய பரம்பரையில் வந்த ஒருவரிடம் இசை பயின்றவர் இந்த முனுசாமியப்பா. சிறுமி நாகரத்தினத்துக்கு இசை சொல்லிக் கொடுக்க முனுசாமியப்பா ஒப்புக் கொண்டார்.

நாகரத்தினத்துக்கு பதிமூன்று வயதான போது இசை, நாட்டியம் இரண்டிலும் நல்ல தேர்ச்சி பெற்று விளங்கினார். தாய்க்குத் தன் சபதம் நிறைவேறியதற்கும், தன் மகள் தலைசிறந்த இசை, நாட்டியக் கலைஞராக முழுமையடைந்ததற்கும் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தார். தன் மகள் கலைகளில் சிறந்து விளங்க வேண்டும், மற்ற பெண்களைப் போல் கலைகள் தவிர வேறு எதிலும் கவனம் செல்லக்கூடாது என்பதற்காக கடுமையாகக்கூடத் தன் மகளிடம் நடந்து கொண்டார். இசை, நடனம் தவிர சம்ஸ்கிருதம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் இவர் நல்ல தேர்ச்சி பெற்றார். தன் மகளை முழுமையான கலைஞராக ஆக்க தாய் புட்டம்மாள் தவித்த தவிப்பும், அவர் தன் சபதம் நிறைவேறிய பின் மைசூருக்குச் செல்ல வேண்டுமென்கிற ஆர்வமும் அவரை இரவு பகலாக பாடுபட வைத்தது. ஆனால் நாகரத்தினத்துக்கு பதினான்கு வயது ஆனபோது தாயார் புட்டலட்சுமி காலமானார். தன் மகள் தான் விரும்பிய படி இசையிலும் நாட்டியத்திலும் தலைசிறந்து விளங்குவார் என்று மனத் திருப்தியோடு அவர் கண்களை மூடினார்.
                                                     Saint Thyagaraja's Samadhi
தாயார் மறைவுக்குப் பின் நாகரத்தினம் இசைக் கச்சேரிகளைச் செய்யத் தொடங்கினார். மைசூர் அரண்மனையில் அவரது புகழ் பரவத் தொடங்கியது. அப்போது மைசூர் ராஜகுமாரி ஒருவர் பூப்படைந்த நிகழ்ச்சியில் நாகரத்தினத்தின் நாட்டியக் கச்சேரிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். மைசூர் அரசவையில் நாகரத்தினம் மிகச் சிறப்பாக நடனமாடினார். அவர் தந்தையாரும் தன் மகளின் நாட்டியத்தைக் கண்டு களிக்க நேர்ந்தது. இவரது திறமையைக் கண்டு மைசூர் சமஸ்தானத்தின் ஆஸ்தான நர்த்தகியாக இவர் நியமிக்கப்பட்டார். நடனத்துக்கு மட்டுமல்ல இசைத் துறைக்கும் இவர் மைசூர் ஆஸ்தான வித்வானாக ஆனார்.

நாகரத்தினத்துக்கு இருபத்தைந்து வயது ஆனபோது அவரது குரு முனுசாமியப்பா காலமானார். அவர் மறைவுக்குப் பின் குருபக்தி காரணமாக நாகரத்தினம் ஒவ்வோராண்டும் அவரது நினைவு தினத்தில் அன்னதானம் செய்து குருபூஜை செய்து வந்தார். நாகரத்தினத்தின் சம்ஸ்கிருத ஞானத்தையும், அவர் சம்ஸ்கிருத ஸ்லோகங்களை இசையில் வழங்கி வரும் அழகைக் கண்டு அவருக்குப் பல பரிசுகளை வழங்கி கெளரவித்தனர். இவர் இசை நிகழ்ச்சிகள் நடக்குமிடங்களிலெல்லாம் இவருக்கு தங்கப் பதக்கங்களும், தங்க அணிகலன்களும், பொன்னாடைகளும் வழங்கிக் கெளரவித்தனர். மக்கள் மத்தியில் இவர் பெரும் புகழ் பெற்றார். மைக் வசதிகள் இல்லாத அந்த காலத்தில் இவரது கணீரென்ற குரல் இவர் இசை நிகழ்ச்சி நடைபெறும் அரங்குகளில் கூடியிருக்கிற அனைவரும் கேட்கும்படியாக அமைந்திருந்தது.

மைசூரில் தொடங்கிய இவரது புகழ் அங்கிருந்து சென்னை வரை வந்தடைந்தது. சென்னையில் ராஜரத்ன முதலியார் என்பவர் இவரை ஆதரித்து வரத் தொடங்கினார். சென்னையில் இவரது இசையின் பெருமை பரவத் தொடங்கியது. சென்னையில் வீணை தனம்மாள் வீட்டின் அருகில் தனக்கென்று சொந்தமாக ஒரு வீட்டையும் வாங்கினார் நாகரத்தினம். இவர் தன்னுடைய கச்சேரிகள் குறித்தும், தனது வருமானம், செலவு ஆகியவற்றுக்குத் துல்லியமாக கணக்கு வைத்துக் கொண்டிருந்தார், வரிகளை ஒழுங்காகச் செலுத்துவதற்காக. இவர் தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல கச்சேரிகளைச் செய்து வந்தார். இவருக்கு பக்க வாத்தியமாக சிவசுப்பிரமணிய ஐயர் என்பவர் வயலின் வாசித்து வந்தார். இவரது இசையில் மயங்கி பொப்பிலி ராணி இவருக்கு "வித்யாசுந்தரி" என்ற விருதை வழங்கி கெளரவித்தார். பெண்களை, பெண் வித்வான்களை மதித்து இப்படிப்பட்ட விருதுகளை வழங்கும் பழக்கம் அந்த நாளில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நாகரத்தினம்மாள் ஒரு பெண் குழந்தையை தத்து எடுத்து வளர்த்து வந்தார். அந்த தத்துக் குழந்தையின் உண்மையான பெற்றோர்கள் நாகரத்தினம்மாளின் செல்வத்தின் மீது கண் வைத்து அவற்றை அபகரிக்கும் எண்ணத்துடன் அவரை விஷம் வைத்துக் கொல்லச் சதி செய்தனர். அந்த சிறு பெண்ணிடம் விஷம் கலந்த பாலைக் கொடுத்து நாகரத்தினம்மாளுக்குக் கொடுக்க வைத்தனர். ஆனால் அவர் மனதில் ஏதோ சந்தேகம் உதித்து அந்தப் பாலை அருந்த மருத்துவிட்டார். அந்த பால் பச்சை நிறமாக மாறியிருந்தது. அந்தச் சிறுபெண் பாலைக் கொடுக்கும் போதே உடல் நடுங்க அச்சத்துடன் கொடுத்ததும் நாகரத்தினத்துக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது. அந்த நேரத்தில்தான் தன்னிடம் உள்ள பணம், நகைகள்தானே இவர்களை இப்படிச் செய்யத் தூண்டியது என்ற எண்ணம் அவருக்கு உதித்தது. அந்த சிறுமியையும் மன்னித்து அனுப்பிவிட்டார். தான் இந்த செல்வங்களை உடனடியாக நீக்கிவிட வேண்டுமென்று உணர்ந்தார்.
                                            Musicians singing Pancharathna Krithis on Aradhana Day
இப்படிப்பட்ட நேரத்தில் உறக்கத்தில் நாகரத்தினம்மாளுக்கு ஒரு உள்ளுணர்வு ஏற்பட்டு ஸ்ரீ தியாகராஜரின் காட்சி தென்பட்டது. 1921ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஸ்ரீ தியாகராஜரின் திவ்ய தரிசனம் தனக்குக் கிடைத்ததாகவும், அதுமுதல் அவரது சமாதிக்குச் சென்று அஞ்சலி செலுத்த எண்ணம் கொண்டதாகவும் அவர் கூறினார். ஸ்ரீ தியாகராஜர் குறித்தோ அல்லது திருவையாறு பற்றியோ நாகரத்தினம்மாளுக்கு அதற்கு முன்பு எதுவும் தெரிந்திருக்கவில்லை. இந்த தியாகராஜ தரிசனத்துக்குப் பிறகு அவர் பல சங்கீதத் துறை சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரித்து திருவையாற்றுக்கு வந்து ஸ்ரீ தியாகராஜருடைய சமாதி இருக்குமிடத்தைத் தேடினார். ஆனால் அங்கு அவர் கண்ட காட்சி அதிர்ச்சியளிக்கக் கூடியதாக இருந்தது. அந்த சமாதியைச் சுற்றி ஒரே புதர் மண்டிக் கிடந்தது. அந்த இடம் அசுத்தமாக இருந்தது.

அது குறித்து அவரே சொல்கிறார். "மகான் ஸ்ரீ தியாகராஜருடைய சமாதி கேட்பாரற்று புதர் மண்டிக் கிடந்தது. அந்த இடம் பல் வகையாலும் அசுத்தப்பட்டுக் கிடந்தது. அந்த இடத்தைப் பார்த்து மனம் வருந்தி, இதனைச் சீர்செய்வதை என் வாழ்க்கையின் குறிக்கோளாக மேற்கொண்டேன். சுற்றிலும் பல சமாதிகளுக்கிடையே ஸ்ரீ தியாகராஜருடைய புகழ்வாய்ந்த ஆன்மா புதைபட்டுக் கிடக்கும் இடம் இதுதான் என்பதற்கு அடையாளமாக ஒரு கல்வெட்டுப் பதிக்கப்பட்டு அவ்விடம் பரிதாபமாகக் காட்சியளித்துக் கொண்டிருந்தது."

1921ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 27ஆம் தேதி சமாதியைச் சீரமைக்கும் பணிகளுக்கு அஸ்திவாரமிடப்பட்டது. அந்த இடத்தில் எத்தனை ஆழம் தோண்டலாம் என்பதில் வேலைசெய்தவர்களுக்குக் குழப்பம் இருந்தது. பலரும் பல தகவல்களைச் சொல்லிக் குழப்பினார்கள். பள்ளம் தோண்டும்போது சாம்பிராணி வாசனை வந்தால் நிறுத்திவிடுங்கள் என்றனர் சிலர். இல்லை இல்லை ஸ்ரீ ராம நாமா மெல்லிய குரலில் எழும், அப்போது நிறுத்தி விடுங்கள் என்றனர் வேறு சிலர். இப்படி எத்தனையோ குளறுபடிகள்.

அங்கிருந்த வாழைத்தோட்டத்தை நாகரத்தினம்மாள் ஒரு மராத்திய வம்சத்து ராணியிடம் வாங்கினார். அதற்கான சட்டபூர்வமான வேலைகளை திருவையாற்றில் இருந்த ஸ்ரீ ராஜகோபாலாச்சாரி எனும் வழக்கறிஞர் செய்து கொடுத்தார். இப்படிப் பணிகள் தொடங்கி நடந்து முடிந்து 1925 ஜனவரி 7ஆம் தேதி பூர்த்தியாகியது.

"குருநாதர் சற்குரு ஸ்ரீ தியாகராஜருடைய அனுக்கிரகத்தோடும், இசை விற்பன்னர்கள் பலருடைய ஆதரவோடும், குருநாதரின் பளிங்குச் சிலையொன்றைச் செய்து அங்கு பிரதிஷ்டை செய்தேன்" என்கிறார் நாகரத்தினம்மாள். மிக அதிகமான பொருட் செலவோடு ஸ்ரீ தியாகராஜரின் சமாதி ஆலயம் கும்பாபிஷேகம் 1925இல் செய்விக்கப்பட்டது.

ஆண்டுதோறும் குருநாதருக்கு ஆராதனைகளைச் செய்விப்பதற்கு போதிய இடம் அங்கு இல்லாமல் இருந்ததால், நாகரத்தினம்மாள் தன்னிடமிருந்த நகைகள் மற்றும் சொத்துக்களையெல்லாம் விற்று அருகில் இடத்தை விலைக்கு வாங்கி 1938இல் ஒரு மண்டபத்தையும், சமையலறையையும் கட்டி முடித்தார். அது வரை வெவ்வேறு இடங்களில் ஸ்ரீ தியாகராஜருக்கு ஆராதனைகள் நடைபெற்று வந்தன. சின்ன கட்சி என்று பெயர் பெற்ற சிலர் புஷ்ய மண்டபத் துறையிலும், பெரிய கோஷ்டி என்பவர்கள் சம்ஸ்கிருத கல்லூரி வளாகத்திலும் தனித்தனியாக ஆராதனைகளை நடத்தினார். பெங்களூர் நாகரத்தினம்மாள் வந்த பிற்பாடு அவர்கள் தலைமையில் பெண்கள் மட்டும் கலந்து கொள்ளும் விதமாக சமாதிக்கருகில் பந்தல் போட்டு அதில் அவர் நடத்தினார். முதல் இரண்டில் வாய்ப்புக் கிடைக்காத ஆண் பாடகர்களும் நாகரத்தினம்மாள் நடத்திய ஆராதனையில் கலந்துகொண்டு பாடினார்கள்.

இப்படி இவர்கள் குழுக்களாகப் பிரிந்து நடத்திய காலத்தில் 1940இல் சில பெரியவர்கள் சேர்ந்து இவர்களை ஒன்றுசேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள். அதன் பயனாகப் பிரிந்திருந்த கோஷ்டிகள் ஒன்று சேர்ந்து ஒற்றுமையாக ஆராதனையை நடத்தத் தொடங்கினார்கள். 1940இல்தான் ஸ்ரீ தியாகராஜரின் பஞ்ச ரத்தினக் கீர்த்தனைகளைப் பாடி ஆராதனை நடத்துவது என்பது நடைமுறைக்கு வந்தது. நாகரத்தினம்மாள் சம்ஸ்கிருத மொழியிலும் நல்ல புலமை பெற்றிருந்ததன் காரணமாக அவர் ஸ்ரீ தியாகராஜா அஷ்டோத்திர சத நாமாவளி எனும் தோத்திரத்தை உருவாக்கினார்.

1951இல் 'தி இந்து' பத்திரிகையில் ஒரு செய்தி வெளியானது. திருவையாற்றில் நடக்கும் ஸ்ரீ தியாகராஜ ஆராதனை விழாவில் இசை நிகழ்ச்சிகள் ஆடம்பரமாக நடைபெறுகிறதே தவிர பக்தி என்பது வெளிப்படவில்லை என்பது போல எழுதியிருந்தார்கள். அது முதல் ஆராதனை முறையாக பக்தி சிரத்தையோடு நடக்கத் தொடங்கியது. முன்பெல்லாம் பெண்கள் சமாதியில் பாடுகின்ற வழக்கம் இருக்கவில்லை. நாகரத்தினம்மாள்தான் பெண்களுக்கு அந்த உரிமையை வாங்கிக் கொடுத்த சமூகப் புரட்சியாளர்.

1952இல் நாகரத்தினம்மாளின் உடல்நிலை மோசமானது. அவரது உடலை சோதித்த டாக்டர் அவருக்கு ஒரு இஞ்செக்ஷன் கொடுக்க முயன்றார். அதனைத் தடுத்துவிட்ட நாகரத்தினம்மாள் சொன்னாராம், " என் உடல் முழுவதும் ஸ்ரீ ராம மந்திரம் பரவிக்கிடக்கிறது. அந்த உடலை ஊசியால் குத்த நான் விரும்பவில்லை" என்றாராம். 1952 மே மாதம் 19ஆம் தேதி காலை 10-30 மணிக்கு ஸ்ரீ ராம, சீதா, ஆஞ்சநேய மந்திரங்களை உச்சரித்தபடி உயிர் நீத்து ராமபக்த சாம்ராஜ்யத்தை அடைந்தார்.

அவருடைய விருப்பப்படி அவரது உடல் ஸ்ரீ தியாகராஜர் சமாதிக்கு எதிர்ப்புறம் சில மீட்டர் தூரத்தில் சமாதி வைக்கப்பட்டது. அன்றைய தினம் திருவையாறு நகரம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டு, அந்த புனித பெண்மணிக்கு அஞ்சலி செலுத்தினார்கள். அவர் உடல் சமாதிக்குள் இறக்கப்பட்ட போது மேலே பறந்து வந்து சுற்றிய கருடனைப் பார்த்தும், அப்போது பெய்த சில மழைத்துளிகளைக் கண்டும் மக்கள் அந்தப் புனிதரின் நினைவைப் போற்றி மகிழ்ந்தனராம். அவர் விரும்பியபடியே நாகரத்தினம்மாள் எனப்படும் போற்றுதலுக்குரிய அந்தப் புனிதமான பெண்மணி தன் குருநாதரின் திருவடிகளைச் சென்றடைந்தார். வாழ்க நாகரத்தினம்மாள் புகழ்!

1 comment:

Unknown said...

ஸ்ரீ தியாகராஜா சுவாமிகள் ஆராதனை விழா பற்றிய அறிய தகவல்கள். புனிதவதி நாகரத்தினத்தின் இந்த அற்புத செயலும், அவர்தம் தெய்வப் பற்றும் அருமை. ஸ்ரீமத் நாராயணின் ஆசியோடு பூலோகம் வந்த ரம்பையோ என்று எண்ணும் அளவிற்கு இருக்கிறது. இந்தக் கலையரசியின் புனிதமான வராலறு. நன்றிகள் ஐயா!