பாரதி பயிலகம் வலைப்பூ

Wednesday, August 8, 2012

நூறு வயது மரம்



          நூறு வயது மரம்

நூறு வயது மரம் சாலையில்

வீழ்ந்து கிடந்தது!

நேற்று
பேய்பிடித்து பறந்துவந்த
புயல் அடித்து வீழ்ந்ததா?

பொது நிறுத்தம்
என்றுரைத்து
சாலை மறித்த
கரைவேட்டி சாய்த்ததா?

தான் விட்ட வேர்கள்
தனை விட்டு அறுந்ததால்
பலம் அற்று படுத்ததா?

வீழ்ந்து கிடந்த மரம்
விறகாய்
மாறிக்கொண்டு இருக்க....

நம் வீட்டில்
வயதான உயிரொன்று
ஓரத்தில் ஒதுக்கத்தில்.

புதுமை எனும்
மோகப் புயலில்
பழயதை படுக்க வைத்தாகிவிட்டதா?

தங்களுக்காக உழைத்து
தேய்ந்து போன தங்கத்தை
தரம் குறைத்து
குப்பையென கொட்டியாகிவிட்டதா?

பெற்றெடுத்த வேர்கள்
பற்றற்று போனதால்
பலம் அற்று ஒடிந்ததா?

வீழ்ந்த மரம்
விறகாக மாறும் போது
ஒதுக்கிய உயிர்
அனுபவ உரமாக மாறாதா?

விறகாக
மாற்றத்தெரிந்த நமக்கு
உரமாக
மாற்றத்தெரியாதா?

ஓய்வை தேடியதால்
ஓடிக் களைத்ததை
கொண்டாடலாமே!

-தனுசு-

No comments: