Wednesday, October 22, 2014

சக்தியின் சக்தி.

                                               .                                                    

                    சக்தியின் சக்தி

"மகாசக்தி" பற்றிய குறிப்புகள் "சாக்த அத்வைதம்" எனும் நூலில் கொடுக்கப் பட்டிருக்கின்றன. உலகத்தில் சக்தி மாதாதான் உலகத்தை இயக்கும் உந்து சக்தியாக இருக்கிறாள். கர்ப்பத்தில் கருவாகத் தோன்றி, வளர்ந்து குழந்தை யாக வெளிவரும் சக்தியின் செயல்பாடுதான். அதனால்தான் ஒவ்வொரு பெண்ணும் 'சக்தி'யின் வடிவமாகப் போற்றப்படுகிறாள்.

தேவலோக அரசன் இந்திரனின் மனைவியின் பெயர் 'சசி'. அப்படியென்றால் சக்தி என்று பொருள். இந்த இந்திராணி (சசி) சப்த கன்னியரில் ஒருவள்.
சப்த கன்னியர்கள்: ப்ராஹ்மணி, வைஷ்ணவி, மஹேஸ்வரி, இந்திராணி, குமாரி, வராஹி, சாமுண்டி.

இந்த எழுவரும் பிரஹ்மா, விஷ்ணு, சிவன், இந்திரன், ஸ்கந்தன், வராஹன் அல்லது எமன் இவர்களின் சக்தி வடிவம். இவர்கள் தவிர நரசிம்ஹருக்கு நரசிம்ஹி எனும் சக்தி.

சக்தியை நாம் 'அம்மா' என்கிறோம். கர்நாடகா, கேரளா, ஆந்திரம், தமிழ்நாடு அனைத்திலும் சக்தி அம்மா தான். இந்தப் பகுதிகள் அனைத்திலுமே "சக்தி"தான் கிராமங்களை, கிராம மக்களைக் காக்கும் தெய்வம். அதனால்தான் கிராமப் பகுதிகளில் ஆண்டுதோறும் "சக்தி வழிபாடுகள்" வெகு விமரிசையாகக்
கொண்டாடப் படுகின்றன. சக்தியைக் கொண்டாடுவதால், மழை பொழிகிறது, நிலம் செழிக்கிறது, பயிர்கள் விளைகின்றன. தொத்து வியாதிகள் தடுக்கப் படுகின்றன, செய்வினை, தீங்கு, கண் திருஷ்டி இவைகள் நீங்குகின்றன.

நாட்டில் புகழ்பெற்ற சக்தி மூர்த்தங்கள் எவை?

1. வடநாட்டைச் செழிப்பாக்கும் கங்கா மாதா. கங்கோத்ரியில் உருவாகி கடலில் கலக்கும் நதி. ஹரித்வார், ரிஷிகேஷ், காசி, கயா ஆகிய புண்ணியத் தலங்களில் இவள் புகழ் நிலைக்கும்.
2. காஞ்சியில் காமாட்சி அம்மன்.
3. கனகதுர்கா அம்மா
4. மஹாலக்ஷ்மி அம்மா
5. மதுரை மீனாட்சி அம்மா
6. மானஸா அம்மா
7. தமிழகத்தின் மாரியம்மா
8. எல்லம்மா தாயார்
9. போலரம்மா

ஆதி சங்கரர் 18 பதினெண் சக்தி பீடங்களைக் குறிப்பிடுகிறார். அவருடைய ஸ்லோகங்கள் அவற்றை நமக்குக் குறிப்பிடுகின்றன.

1. ஸ்ரீ லங்காவில் ஷங்கரி தேவி                                  10. பீதிகாவில் புர்ஹூதிகா தேவி
2. காஞ்சியில் காமாட்சி அன்னை                             11. ஒதியானாவில் கிரிஜா தேவி
3. ப்ரத்யும்னாவில் ஷ்ரிங்கலா தேவி                    12. த்ரக்ஷாரமத்தில் மாணிக்யா தேவி
4. மைசூரில் சாமுண்டீஸ்வரி தேவி                      13. விஷ்ணு ஆலயத்தில் காமரூபி
5. ஆலம்பூரில் ஜோகுலாம்பா தேவி                      14. அலஹாபாத்தில் மாதவேஷ்வரி
6. ஸ்ரீசைலத்தில் ப்ரம்மராம்பிகா தேவி              15. ஹிமாசல் பிரதேசம் ஜ்வாலாமுகி
7. கோலாப்பூரில் மஹாலக்ஷ்மி அன்னை         16. கயாவில் மங்களா கெளரி
8. மாகூரில் ஏகவீரிகா தேவி                                        17. காசியில் விசாலாக்ஷி அன்னை
9. உஜ்ஜைனியில் மகாகாளி                                       18. காஷ்மீரில் சரஸ்வதி.


இவை அனைத்தும் சக்தி பீடங்களாக இன்றளவும் போற்றி கொண்டாடப் படுகின்றன.

உலகம் முழுவதிலுமாக 51 இடங்களில் ஆதிசக்தி உபாசனை நடந்து வந்திருக்கிறது. அவை இந்தியா, ஸ்ரீலங்கா, நேபாளம், வங்காளதேசம், திபெத், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் உள்ளன.

51 சக்தி ஆலயங்கள்:

1.   இமாசலத்தில் அல்மோராவுக்கு 8 கி.மீ.தூரத்திலுள்ள கெளஷிக்.
2.   மவுண்ட் அபு வில் அற்புதாதேவி.
3.   உஜ்ஜையினியில் ஹரிசித்த மாதா (மகாகாளி)
4.   நர்மதா நதிக் கரையில் ஓம்காரேஷ்வரில் சப்த கன்னியருக்கான சப்தமாத்ரிகா
5.   கொல்கொத்தாவில் பாகீரதி நதிக்கரையில் ஹெளரா அருகில் காளிமாதா
6.   நேபாள் காத்மாண்டு நகரிலுள்ள பசுபதிநாதர் கோயிலில் பாக்மதி நதிக்கரையில்                                                      குஹ்யேஷ்வரி
7.   டில்லி சிம்லா பாதையில் பாகவதி காளிகா
8.   காசி (வாரணாசி) மஹாகாளி, மஹாலக்ஷ்மி, மஹா சரஸ்வதி (முச்சக்தி பீடங்கள்)
9.   ஹிமாசலில் காங்ரா எனுமிடத்தில் வித்தயேஷ்வரி பீடம்
10. கோலாப்பூர் (மகாராஷ்ட்டிரா) மஹாலக்ஷ்மி பீடம்
11. காஷ்மீர் ஸ்ரீநகருக்கருகில் பவானி யோகமாதா
12. கத்தியவார் அருகில் கிர்னார் ஜுனாகட்டில் அம்பா தேவி
13. அஸாமில் கெளஹாத்தி அருகில் சித்தி பீடம் எனும் காமாக்யா சக்தி பீடம்
14. சிட்டகாங் அருகில் பவானி பீடம்
15. சித்தூர்கட்டில் காளிகா பீடம்
16. ஹோஷியார்பூர் அருகே 30 கி.மீ.தூரத்தில் கானகத்தில் சின்னிபூரணி
17. விந்திய பர்வத அடிவாரம் சுனார் ரயில் ஸ்டேஷன் அருகில் துர்கா தேவி
18. ஜனக்பூர் ரயில் ஸ்டேஷன் அருகில் ஜனக் நந்தினி
19. ஜபல்பூர் (ம.பி.) 12 கி.மீ. பேராகாட் எனும் நீர்வீழ்ச்சியருகில் கெளரிஷங்கர்ஜி
20. நேபாள் காங்ரா மலைச்சிகரத்தின் அடிவாரத்தில் ஜ்வாலாமுகி அன்னை.
21. கேரளத்தின் திருவனந்தபுரத்தில் சிந்தானூர் எனுமிடத்தில் பத்மாவதித் தாயார்.
22. குஜராத்தின் துவாரகாவில் ருக்மணி சத்யபாமா ஆலயம் ருக்மணி தேவி
23. மகாராஷ்டிரா தேவிபட்ணம் படேஸ்வரி பீடம்
24. டில்லி நகரம் குதுப்மினார் அருகில் யோகமாயா பீடம்
25. நாக்பூரில் சஹஸ்ர சண்டி பீடம் ருக்மிணி ஆலயத்தில்
26. ஹிமாசல் பிரதேசம் குமாயன் பகுதியில் நயனா தேவி
27. வடக்கு எல்லை பிரதேசம் பதான்கோட்டில் பதான்கோட் தேவி
28. மகாராஷ்டிரா பந்தர்பூரில் விட்டோபா ஆலயம் ருக்மிணி, சத்யபாமா, மஹாலக்ஷ்மி, ராதிகா
29. அலஹாபாத் பிரயாக் எனும் முக்கூடல் சங்கமத்தில் சாந்திகா தேவி
30. மகாராஷ்டிரா பூனே அருகில் பார்வதி தேவி
31. நேபாள எல்லையில் தனகாபூரில் சாரதா நதிக்கரையில் பூர்ணகிரி காளிகா தேவி
32. ஃபரூக்காபாத் எனும் ஊரில் மகாதிரிபுரசுந்தரி, ஸ்ரீயந்திரத்துடன் பிரதிஷ்டை
33. மஹேஸ்வரி பண்டா ஜில்லாவில் மஹேஸ்வரி தேவி
34. ஒடிஷா புவனேஷ்வரில் பந்த்ரா ஏரிக்கரையில் 108 யோகினிகளில் யோகினி பீடம்
35. உத்தர பிரதேசம் மதுரா அருகில் பரசானே எனும் ஊரில் ராதிகா ராணி
36. மதுரை வைகை நதிக்கரையில் மீனாட்சி அம்மன்
37. சென்னை சவுக்கார்பேட்டையில் மாதா குரிக்கா தெவி
38. மும்பையில் மும்பா தேவி ஆலயம்
39. மைசூரில் சாமுண்டீஸ்வரி
40. கர்நாடகாவின் சிருங்கேரி பீடத்திலுள்ள சாரதா தேவியார் ஆலயம்
41. மீர்சாபூர் அருகில் விந்திய மலை அடிவாரத்தின் விந்தியவாசினி தேவி
42. சிம்லாவில் கோடிகா தேவி
43. ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் ஆலயம் பிரம்மராம்பா தெவி பீடம்
44. ராஜஸ்தான் சாம்பார் ஏரி அருகில் மாதாஜி தேவி பீடம்
45. ஹரித்வார் அருகில் நீல மலையில் சண்டி தேவி பீடம்

ஆதி பராசக்தி (Ultimate Shakthi) என்பது உலகில் படைக்கப்பட்ட எல்லா ஜீவன் களிலும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. சக்தி இல்லாதது ஜீவன் இல்லை. இந்து சமயத்தில் "சாக்தம்" என்பது அறுவகைப் பிரிவுகளில் ஒன்றாக இருந்து வந்திருக்கிறது. ஆதி சங்கரரின் ஷண்மத ஸ்தாபனம்:-- சைவம், வைணவம், காணாபத்யம், கெளமாரம், சாக்தம், செளரம். இவை சிவன், விஷ்ணு, கணபதி, முருகன், சக்தி, சூரியன் வழிபாடுகள்.

தமிழகத்தில் சக்தி வழிபாடு.
கண்ணகி கோயில்.
மாரியம்மன்
காளியம்மன்
துர்க்கையம்மன்
திரெளபதி அம்மன்

சக்தி வழிபாடு பெரும்பாலும் தமிழகத்தில் கிராமப் புறங்களில் நடைபெறும்.
தேவதைகள்: அம்பிகை, துர்க்கை, காளி, கெளமாரி, மாரியம்மா, திரெளபதி

உயிர்ப்பலி என்பது நம் வழிபாட்டில் கிடையாது. மூட நம்பிக்கைகள் காரணம்.
பலிபீடம் என்பது நம் ஆணவத்தை விட்டுவிடுவது.

புகழ்பெற்ற மாரியம்மன் ஆலயங்கள்:
சமயபுரத்தம்மா
புன்னைநல்லூர் மாரியம்மா
திருவேற்காடு கருமாரியம்மா
பன்னாரி காமாட்சியம்மன்
கரூர் மாரியம்மன்
வலங்கைமான் காமாட்சியம்மன்
காஞ்சிபுரம் காமாட்சியம்மன்
திருச்சி வெக்காளியம்மன்
பகவதி அம்மன்
தஞ்சை உக்ரமாகாளி அம்மன்

கிராமதேவதைகளுக்கான திருவிழாக்கள்
தீ மிதித்தல்
கரகம், காவடியெடுத்தல்
வேண்டுதல்கள் முடித்தல்

மாரியம்மன் வழிபாடு தென்னாட்டில் தோன்றியது. கண்ணகிக்கு கோயில் எடுத்ததன் பின்னால் மாரியம்மன் திருவிழாக்கள் பெரும்பாலும் கோடைக் காலத்தில் மழைவேண்டி நடைபெறும். ஆடி மாதத்தில் பெண் தெய்வங் களுக்குத் திருவிழாக்கள் நடைபெறும். தொத்து வியாதிகளான காலரா, அம்மை நோய், பெரியம்மை போன்றவற்றுக்கு மாரியம்மனை வேண்டுவார்கள். பிடாரி அம்மன், காளி அம்மன், துர்க்கை அம்மன் இவைகள் கிராமதேவதைகளாகக் கொள்வர். சாக்தம் எனும் சக்தி வழிபாட்டில் இவை குறித்து பல செய்திகள் உண்டு. வேத முறைப்படியான வழிபாடுகள் இங்கு கிடையாது. இந்த விழாக்களில் கூழ், கஞ்சி, பொங்கல் இவை மண்பானை களில் திறந்த வெளியில் செய்து படைக்கப்படும்.

மாரியம்மன் உருவம் உட்கார்ந்த நிலையிலோ, நின்ற நிலையிலோ, கையில் திரிசூலம், கபாலம், ஒரு  கையில் வாள், அபய ஹஸ்தம் காட்டிய நிலையில் இருக்கும். தலைக்கு மேலே அக்கினி பிழம்பு தீ போல சிவந்த தலைமுடி, விரிந்து சிவந்த அகன்ற கண்கள் இவை மாரியம்மன் தோற்றம்.

சில சிலா உருவங்கள் அமைதியாகவும், சில உக்கிரமாகவும் இருக்கும். உக்கிரகாளியம்மன் என்றே ஒரு ஆலயம் தஞ்சாவூரில் உண்டு. வடக்கே இவளை சீதளா தேவி என்று வழிபடுகின்றனர்.

மாரியம்மனுக்கு பூசாரிகள் பூஜைகளைச் செய்கிறார்கள். பொதுவாக மாரியம்மன் ஆலயங்களில் பாம்பு புற்று இருக்கும். மாரியம்மன் என்றதும் நமதி சினிமாக்காரர்கள் பாம்பை அவள் உருவமாக வைத்து படம் எடுப்பார்கள். அதனால்தான் மாரியம்மனுக்கு முட்டை, பால் இவை நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது.

தஞ்சையில் இருக்கும் புன்னைநல்லூர் மாரியம்மன் மராத்திய மன்னன் வெங்கோஜி எனும் ஏகோஜி ராஜா 1676 முதல் 1688 வரை கனவில் வந்து கோயில் அமைக்கச் சொன்னதாக வரலாறு.

1729 முதல் 1735. தஞ்சை துளஜேந்திர ராஜாவின் மகளுக்குக் கண்பார்வை போய், பின் மாரியம்மன் அருளால் பார்வை கிடைத்ததாக வரலாறு உண்டு.

இந்தியாவுக்கு வெளியிலும் மொரீஷஸ், ஸ்ரீலங்கா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, பிஜி, கயானா, வியட்நாம், தென்னாப்பிரிக்கா முதலிய நாடுகளி லும் மாரியம்மன் வழிபாடு உண்டு.

இந்து புராணங்களின்படி மாரியம்மன் என்பவள் மகாவிஷ்ணுவின் சகோதரியாகச் சொல்லப்படுகிறாள். அவளுக்கு மஹாமாயா என்று பெயர். கிருஷ்ணாவதாரம் எட்டாவது, ஏழாவதாக வந்தள் ஒரு பெண், அவளே மஹாமாயா.

ஸ்ரீரங்கத்து வைஷ்ணவர்கள் வைகாசி மாதத்தில் சமயபுரத்தாளை மஹாமாயா என்று விழா எடுத்து இப்போதும் வழிபடுகிறார்கள்.

கர்நாடகம், ஆந்திரம் ஆகிய இடங்களில் இவளை செளடேஷ்வரி என கொண்டாடுகிறார்கள்.

மாரியம்மன் பற்றி பொதுவான கருத்துக்களை பார்த்தோம், இனி சில முக்கிய தலங்கள்:

1. சமயபுரம்: 
இது திருச்சியை அடுத்து உள்ளது. இங்குள்ள அம்மன் சிலை களிமண், மணல் இவற்றல் உருவாக்கப்பட்டது. புற்றாகவும், மண்ணாகவும் உள்ள மாரிக்கு இங்கும் அபிஷேகம் இல்லை. உத்சவ விக்கிரகங்களுக்குத்தான் அபிஷேகம். சமயபுரத்தில் பக்தர்கள் மாவிளக்கு இட்டு, காவடி எடுத்து வழிபடுகிறார்கள். வேப்பிலை இங்கு பயன்படுத்தப்படுகிறது. அம்மை போட்டினாலும் வேப்பிலை உபயோகம் செய்வது வழக்கம். சமயபுரம் கோயில் 18ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. அம்மன் பழமையானது என்றாலும் எப்போது உருவானது தெரியவில்லை. கோயில் மட்டும் 18ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக் கிறது. சமயபுரத்தில் சித்திரைத் தேர் பிரபலமான திருவிழா.

2. தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன்.
1680இல் ஏகோஜி கட்டியது இந்தக் கோயில். இவன் சமயபுரம் போனபோது ஒரு மரத்தடியில் உறக்கம். மாரியம்மன் கனவில் தோன்றி தான் புன்னை மரக் காட்டில் இருப்பதாக சொன்னது. அரசன் தேடிச்சென்றது. ஒரு சிறுபெண் தோன்றி ஒரு புற்றைக் காட்டி மறைந்தது. சதாசிவ பிரம்மேந்திரர் புற்றை அம்மனாக வடிவமைத்தது. அதுதான் புன்னைநல்லூர் மாரியம்மன். துளஜா மகாராஜாவின் பெண்ணுக்குக் கண் தெரியாமல் போய் அது குணமானது. ஒரு வெள்ளைக்காரகலெக்டர் அம்மனைப் பற்றி அவதூறு பேச அவன் கண் பார்வை போய் பின்னர் வந்தது.

3. திருவேற்காடு கருமாரியம்மன்.
சென்னைக்கு அருகில் உள்ளது திருவேற்காடு சில வருஷங்களுக்கு முன்புதான் அது பிரசித்தம் ஆயிற்று. இது மிகச் சிறிய கோயில்தான். இது பிரபலமாகத் தொடங்கிய பின்னர் இது வியாபாரத்துக்கு ஏற்ற தலமாக ஆகிவிட்டது. சென்னை நகரத்து மக்கள் கருமாரியைத் தொழ அதிக அளவில் வருகின்றனர். மாலைகள் விற்போர், தேங்காய் பழம் விற்போர், குறி சொல்லுவோர் என்று இது இருக்கும். கருமாரியின் கரங்களில் சூலம், கபாலம், வாள், உடுக்கை இவைகாணப்படும். இங்கு எலுமிச்சை பிரசாதமாகத் தரப் படுகிறது. மாரியம்மன் கோயில்களில் எலுமிச்சைக்கும் வேப்பிலைக்கும் வேலை அதிகம்.

4. பன்னாரி மாரியம்மன்.
ஈரோடு, சத்தியமங்கலம் அருகில் உள்ளது பன்னாரி மாரியம்மன் கோயில். இங்கு சொல்லப்படும் கதை இங்குள்ள ஆற்றங்கரையில் புலியும் பசுக்களும் ஒரே துறையில் தண்ணீர் அருந்தினவாம். வயல்களில் மாடுகளை மேய்ப்பதற்காக புலிகளை விரட்டிவிட்டு மாடுகளை மேய்ப்பார்களாம்.
300 வருஷங்களுக்கு முன்பு தன நாயக்கன் என்பார் பெயரில் பன்னாரி இருந்தது. அங்கு மேய்ந்து கொண்டிருந்த பசு ஒன்று வேங்கை மரத்தடியில் தன் மடியிலிருந்து தினமும் பாலைச் சொரிந்ததாம். இதைக் கண்டுபிடித்து அந்த இடத்தைத் தோண்டினால் அங்கு ஒரு சிவலிங்கம். அதைத் தோண்டி எடுத்ததும் ஒருவருக்கு சாமி வந்து ஆட குறி சொல்லத் தொடங்கினாராம். கேரள வியாபாரிகளைக் காடு கடந்து வரும்போது பன்னாரி அம்மன் காப்பாற்றுவதாக நம்பிக்கை.


5. திருச்சி உறையூர் வெக்காளி அம்மன்.
திருச்சி உறையூரில் இருக்கிறது வெக்காளி அம்மன் கோயில். காளி அவதாரம். திரிசூலம், உடுக்கை, பாசம், அட்சய பாத்திரம் என்று கைகளில் வைத்திருக்கும் கோலம். இந்த கோயிலுக்கு விமானம் கிடையாது. மேற் கூரையும் இல்லாமல் வெட்ட வெளியில் தரிசனம் தருகிறாள். உறையூரை ஆண்ட பராந்தக சோழன் அவையில் சாரமா முனிவர் என்பர் இருந்தார். இவர் சிவனடியார். மலைக்கோட்டை தாயுமானவருக்கு பூஜை செய்து வந்தார். மன்னன் தன் ராணிக்காக அவருடைய நந்தவனத்தில் பூபறித்துச் சென்றான். தினமும் ஆட்கள் வந்து பறித்தனர். முனிவர் மன்னரிடம் சென்று முறையிட் டார் அவர் கவலைப்படவில்லை. என் ராணிக்கு மிஞ்சினதுதான் உன் கடவுளுக்கு என்றானாம். முனிவன் இறைவனிடம் முறையிட்டார். சிவன் நெற்றிக்கண்ணைத் திறந்தார். உறையூரில் நெருப்பு மழை பொழிந்தது. மக்கள் ஊரைவிட்டு ஓடிவிட்டனர். கோட்டை சிதைந்தது. ஊர் புதையுண்டது. வருந்திய மக்கள் வெக்காளி அம்மனிடம் சென்று முறையிட பிரார்த்தனை செய்தனர்.

அம்மன் சிவனது கோபத்தைத் தனிக்க முழு நிலவாக மாறி அவர் முன் தோன்றினாள். அன்னையின் குளிரந்த பார்வை பட்டு இறைவன் அமைதி அடைந்தான். தீ மழையும் நின்றது. தீயில் அரசி புவனமாதேவி சிக்கிக் கொண்டாள். அவள் நிறைமாத கர்ப்பிணி. தீயின் உஷ்ணம் தாங்காமல் அவள் காவிரியில் சென்று வீழ்ந்தாள். வெள்ளம் அவளை உத்தமச்சேரி எனும் இடத்தில் ஸ்நானம் செய்து கொண்டிருந்த ஒரு அந்தணர் காப்பாற்றினார்.
அந்த அந்தணர் வீட்டில் ராணிக்கு ஆண் குழந்தை கரிகால் பெருவளத்தான் பிறந்தான். ராணி வெக்காளி அம்மனின் பக்தை. அன்னையின் பக்தியால் ராணி பிழைத்தாள், குழந்தையும் பிறந்தது. சோழர் தலைநகர் உறையூரில் மக்கள் இந்த அம்மனை பக்தியுடன் வழிபடுகின்றனர்.


சிலப்பதிகாரக் கதை நமக்குத் தெரியும். கோவலன் கண்ணகி கதை. கண்ணகி மதுரையை எரித்த கதை. கேரளத்தில் கொடுங்களூர் பகவதி அம்மன் கோயிலைத்தான் கண்ணகியின் கோயில் என்கிறார்கள். இது கேரளத்தில் திரிசூர் மாவட்டத்தில் இருக்கிறது. சேரன் செங்குட்டுவன் எடுப்பித்த கோயில் இது. இங்கு கொடுங்களூர் அம்மா என்கிறார்கள். சேர நாட்டு மகோதயபுரம் தான் இப்போதைய கொடுங்களூர்.
பாரதி லீலை

சக்திதாசன் சுப்பிரமணியன் எழுதியுள்ள இந்த நூலிலிருந்து சில பகுதிகளை பாரதி அன்பர்கள் படிப்பதற்கென்று கீழே கொடுக்கிறேன். 1938இல் வெளிவந்த இந்த நூலின் சிறப்பை இதனைப் படிக்கும்போதே தெரியவரும். 

“                               பாரதி லீலை
வாழ்க்கைக் குறிப்பு எழுதியவர்:  சக்திதாசன் சுப்ரமணியன், துணை ஆசிரியர் "நவசக்தி"
வெளியீடு: 1-7-1938. நாட்டுடமையாக்கப்பட்ட நூல்.

                                                                        அன்னை

                           அன்னை வடிவமடா - இவள்
                           ஆதிபராசக்தி தேவியடா - இவள்
                           இன்னருள் வேண்டுமடா - பின்னர்
                           யாவுமுலகில் வசப்பட்டுப் போமடா.

ஈசுவரன் தருமராஜா கோயில் தெரு என்று புதுச்சேரியிலே ஒரு தெரு இருக்கிறது. அந்தத் தெருவிலே ஒரு வீடு. வீட்டின் மாடியிலே திறந்த வெளியிலே ஒருவர் மண்டியிட்டு உட்கார்ந்திருக்கிறார்; ஆகாயத்தை அண்ணாந்து நோக்கியபடியே இருக்கிறார்; ஆகாயத்தை அப்படியே விழுங்கி விடுகிறவர் போலே பார்க்கிறாரே! அவர் யார்? அவர்தான் ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியார்.

இரவு மணி பத்து. எங்கே பார்த்தாலும் ஒரே இருள். இயற்கைத் தேவி "இருளாயி"யுடன் கூத்தாடுகிறாள்; இருட்டு; இருட்டு; மையிருட்டு; அந்த மையிருட்டு நேரத்திலே மாடியிலே திறந்த வெளியிலே உட்கார்ந்திருக்கிறார் பாரதியார். அவருடன்கூட வேறு ஒருவரும் இருக்கிறார். திடீரென்று துள்ளிக் குதிக்கிறார் பாரதியார்.

"அடே! சங்கரா! இந்த இருளைப் பாரடா! இதுதான் பராசக்தி. இந்த இருளிலே மகாகாளி ஒரு பெண் மாதிரிக் காட்சி தருகிறாள் பார். இந்த மையிருட்டுத்தான் மகாகாளி. அவளைப் பார்த்துப் பிரார்த்தனை செய்" என்று ஆவேசம் வந்தவர் போலக் கூறுகிறார்.

தரையிலே மண்டியிட்டு உட்கார்ந்து ஆகாயத்தை அண்ணாந்து நோக்கிவிட்டார். அவ்வளவுதான்! அவர் மெய்மறந்து அந்த இருளிலே ஈடுபட்டார். அப்பொழுது ஓர் அழகான பாட்டுப் பிறந்தது.

"பின்னோ ரிராவினிலே - கரும்
பெண்மை உஅழகொன்று வந்தது கண்முன்பு
கன்னி வடிவ மென்றே - களி
கொண்டு சற்றேயரு கிற்சென்று பார்க்கையில்
அன்னை வடிவமடா! - இவள்
ஆதி பராசக்தி தேவியடா! - இவள்
இன்னருள் வேண்டுமடா! - பின்னர்
யாவுமுலகில் வசப்பட்டுப் போமடா!

செல்வங்கள் பொங்கிவரும் - நல்ல
தெள்ளறி வெய்தி நலம்பல சார்ந்திடும்
அல்லும் பகலுமிங்கே - இவை
அத்தனை கோடி பொருளினுள்ளே நின்று
வில்லை யசைப்பவளை - இந்த
வேலை யனைத்தையும் செய்யும் வினைச்சியைத்
தொல்லை தவிர்ப்பவளை - நித்தம்
தோத்திரம் பாடித் தொழுதிடுவோமடா!"

இதுதான் அந்தப் பாட்டு. "மூன்று காதல்" என்ற தலைப்பின் கீழே ஒரு பாட்டுப் பாடியிருக்கிறார் பாரதியார். முதலாவது 'சரஸ்வதி காதல்'; இரண்டாவது 'லக்ஷ்மி காதல்'; மூன்றாவது 'காளி காதல்'.

இந்த மூன்று விதமான காதல் பாட்டுகளும் பாரதியாரின் வாழ்வு எப்படிப் பண்பட்டு எதிலே போய் முடிந்தது என்பதைக் காட்டுகின்றன.

இந்த அழகான பாட்டில் அந்தக் காளி காதல்தான் மிகவும் சிறந்தது. 'கன்னி வடிவமென்றே களி கொண்டு சற்றே அருகிற் சென்று பார்க்கையில்' என்னும் அடிவரை தாழ்ந்த குரலில் பாடவேண்டும். பாடிய பிறகு 'அன்னை வடிவமடா! இவள் ஆதிபராசக்தி தேவியடா! இவள் இன்னருள் வேண்டுமடா! பின்னர் யாவுமுலகில் வசப்பட்டுப் போமடா' என்ற வரிகளையெல்லாம் உயர்ந்த ஸ்தாயியில் குரலை உயர்த்திப் பிடித்துப் பாடினால் அற்புத ரஸம் அப்படியே 'கல கல' வென்று உதிரும்.

பராசக்தி நினைவு பாரதியாரின் நெஞ்சில் எவ்வளவு தூரம் வேரூன்றியிருந்தது என்பதற்கு இந்தச் சம்பவம் போதாதா?

                                             பிழைத்த தென்னந்தோப்பு
            "வறியவ னுடைமை - அதனை வாயு பொடிக்க வில்லை."

ஊருக்கு வெளியே ஒரு சிறு தென்னந்தோப்பு. அத்தோப்பின் நடுவிலே ஒரு மடு. பாரதியார் தம் மனைவி மக்களுடன் அடிக்கடி அந்தத் தோப்புக்குச் செல்வார். காலையிலே எழுந்திருந்து பாரதியார் தோப்புக்குப் போய்விடுவார். சாதம் பிசைந்து எடுத்துக் கொண்டு அவர் மனைவியாரும் குழந்தைகளுடன் அந்தத் தோப்புக்குப் போவார். காலையிலே சென்ற பாரதியார் பதினொரு மணிவரை அந்த மடுக்கரையில் உட்கார்ந்து ஏதாவது எழுதிக் கொண்டிருப்பார். பதினொரு மணியானதும், எழுதுவதை நிறுத்திவிட்டு அந்த மடுவிலே இறங்கி நீராடுவார்; சூரியனைப் பார்த்துக் கொண்டே அரைமணி நேரம் இடுப்பளவு ஜலத்தில் நின்றுகொண்டு வேத மந்திரங்களை ஜெபிப்பார். ஸ்நானம் முடிந்தபின் சாப்பிட்டுவிட்டு மரநிழலில் இளைப்பாறுவார்; மறுபடியும் ஏதாவது எழுதுவார். சாயங்காலம் எல்லாருமாகத் திரும்பி வீடு சேர்வர். அந்தத் தோப்பு முத்தியாலுப்பேட்டை வெல்லச்சு செட்டியார் என்ற கிருஷ்ணசாமி செட்டியாருடையது.

பாரதியார் உல்லாசமாகக் காலங் கழிக்கவேண்டு மென்பதற்காகச் செட்டியார் அந்தத் தோப்பைப் பாரதியார் உபயோகித்துக் கொள்ள அனுமதித்திருந்தார். பாரதியார் குயில்பாட்டுப் பாடியதும் இந்தத் தோப்பில்தான். நிற்க

புயல் அடித்த மறுநாள் காலை பாரதியார் தமது தோப்பினைப் பார்க்கச் சென்றார். போய்ப் பார்த்தால் பக்கத்துத் தோப்புகளில் எல்லாம் ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் முறிந்து கிடந்தன. ஏராளமான சேதம். ஆனால் பாரதியாரின் தோப்பிலோ ஒரு மரங்கூட முறிந்து விழவில்லை. அதைக் கண்டவுடனே பாரதியாருக்கு ஆனந்தம் பொங்கியது. ஏழையாகிய பாரதியாருக்கு எவ்வித நஷ்டமும் அளிக்கக் கூடாதென்றே கடவுள் அந்தத் தோப்பில் சேதம் விளைக்கவில்லை யென்று நினைத்தார்.

உடனே கடவுளின் கருணையை வியந்து "பிழைத்த தென்னந்தோப்பு" என்ற தலைப்புள்ள பாட்டைப் பாடினார்.

பிழைத்த தென்னந்தோப்பு
வயலிடை யினிலே - செழுநீர்
மடுக் கரையினிலே
அயலெவரு மில்லை - தனியே
ஆறுதல் கொள்ள வந்தேன்.

காற்றடித்ததிலே - மரங்கள்
கணக்கிடத் தகுமோ?
நாற்றினைப் போலே - சிதறி
நாடெங்கும் வீழ்ந்தனவே!

சிறிய திட்டையிலே - உளதோர்
தென்னஞ் சிறுதோப்பு
வறியவ நுடைமை - அதனை
வாயு பொடிக்கவில்லை.

வீழ்ந்தன சிலவாம் - மரங்கள்
மீந்தன பலவாம்
வாழ்ந்திருக்க வென்றே - அதனை
வாயு பொறுத்து விட்டான்.

தனிமை கண்டதுண்டு - அதிலே
ஸார மிருக்குதம்மா!
பனிதொலைக்கும் வெயில் - அதுதேம்
பாகு மதுரமன்றோ?

இரவி நின்றது காண் - விண்ணிலே
இன்ப வொளித் திரளாய்
பரவி யங்கணுமே - கதிர்கள்
பாடிக் களித்தனவே.

நின்ற மரத்திடையே - சிறிதோர்
நிழலினி லிருந்தேன்
என்றுங் கவிதையிலே - நிலையாம்
இன்ப மறிந்து கொண்டேன்.

வாழ்க பராசக்தீ - நினையே
வாழ்த்திடுவார் வாழ்வார்
வாழ்க பராசக்தீ - இதையென்
வாக்கு மறவாதே.

                                         பாரத ஸமுதாயம் வாழ்கவே!

"தனி யொருவனுக்கு உணவிலை யெனின் ஜகத்தினை அழித்திடுவோம்"

ஸ்வர்க்கவாசி ஸ்ரீயுத வ.வெ.சு.ஐயர் தலைமையில் சென்னை கடற்கரையில் ஒத்துழையாமைக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்திலே பாடுமாறு ஸ்ரீயுத ஐயர் பாரதியாரைக் கேட்டுக் கொண்டார். அப்பொழுது பாரதியார் "பாரத ஸமுதாயம் வாழ்கவே" என்ற பாட்டைப் பாடினார்; அதன்பின் "அல்லா! அல்லா!" என்ற பாட்டுப் பாடினார். பாட்டைக் கேட்ட மக்கள் பரவசமானார்கள். அந்த நாளையிலே மின்சார விளக்குகள் கிடையாது. கியாஸ் லைட் உண்டு. கியாஸ் லைட் கண்டிராக்டரான முஸ்லிம் ஒருவருக்குப் பாரஹியாரின் அல்லாப் பாட்டைக் கேட்டதும் அளவற்ற ஆனந்தம் பொங்கிவிட்டது. உடனே அவர் ஓடிப்போய் சோடா வாங்கி வந்து பாரதியாருக்குக் கொடுத்துச் சாப்பிடச் செய்து விசிறிக்கொண்டு பாரதியாரின் ஆசுவாஸத்தைத் தணித்தார். அதுவே கடைசி முறையாகப் பாரதியார் பொதுக் கூட்டத்திலே தலைகாட்டியதாகும். அதன்பின் அவரது காலம் அருகி விட்டது.

ஸம்ஸார ஸாகரம்.

"ஸம்ஸாரம் என்கிற இந்த மரம் விஷ வித்திலிருந்து முளைக்கிறது. பல வகையான கர்மங்களும் இம்மரத்தின் பல்வேறு கிளைகள்; எண்ணங்கள் இலைகள்; காமமே மலர். இந்த மாதிரியான துயர்க்கடலில் பாபியாகிய யான் தவிக்கிறேன்." - சங்கர பகவத்பாதர்.

தாம் ஓர் இராணுவ வீரர் என்ற எண்ணம் பாரதியாருக்கு எப்பொழுதுமே உண்டு. சட்டையின் புஜம் இரண்டிலும் இரண்டு பெரிய 'சேப்டி பின்' குத்திக் கொண்டிருப்பார். மார்புப் பக்கத்திலே சட்டையில் ஒரு பெரிய பின் குத்திக் கொள்வார். இந்த மாதிரி அலங்காரம் செய்து கொள்வதிலே அவருக்கு ஆனந்தம்.

ஒரு நாள் ஆபீஸ் இல்லை. காலை நேரம். பாரதியார் வீட்டிலேயிருந்தார். அப்பொழுது அவர் துளசிங்கப் பெருமாள் கோயில் தெருவில் ஒரு வீட்டில் வசித்தார். அன்று அவரைப் பார்க்க ஒரு நண்பர் வந்தார். நண்பரும் பாரதியாரும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அவரது மனைவியார் வந்தார்; "இந்த மாதிரி வீணாகச் சட்டையிலே 'பின்'னைக் குத்தித் துணியை வீணாக்கலாமா? எத்தனை தரம் சொன்னாலும் கேட்கமாட்டேன் என்கிறீர்களே" என்று சொல்லிக் கொண்டு வந்து பின்னை எறிந்து விட்டுப் போனார்.

உடனே பாரதியாரின் முகம் சுண்டிப்போயிற்று. 'ஏதடா! மூன்றாவது மனுஷர் எதிரிலே நமது மனைவி நம்மை இகழ்கிறாளே' என்ற எண்ணமோ தெரியவில்லை. தம் குழந்தையான பாப்பாவைக் கூப்பிட்டார். "பாப்பா! (சகுந்தலா) பாப்பா! அம்மாகிட்ட போயி சட்டையைத் துவைக்க வேண்டாமென்று சொல்லு' என்று உத்தரவு போட்டார்; அப்படியும் அவர் மனம் நிம்மதி யடையவில்லை; "தம்பீ! சிறிது நேரம் இங்கேயே
உட்கார்ந்திரு. இதோ வந்து விடுகிறேன்' என்று சொல்லிவிட்டுப் பக்கத்து அறைக்குள் போனார்; போய், சிறு குழந்தை மாதிரி 'விம்மி விம்மி' அழுதார்; அரைமணி நேரம் அந்த மாதிரி அழுத பின்பு கண்ணைத் துடைத்துக் கொண்டு நண்பர் இருக்குமிடத்துக்கு வந்தார். "தம்பீ! ஸம்ஸாரம் பண்ணுவதென்றால் ஸாமானியமா? எவ்வளவோ கஷ்டம்" என்று கூறினார். கவிஞர் மனம் எவ்வளவு இளகியது என்பதை இதிலிருந்து அறியலாம்.

இயற்கையில் ஆனந்தம்!

பாரதியார் "சுதேசமித்திரன்" உதவியாசிரியராயிருந்த பொழுது அப்பத்திரிகாலயம் சென்னை ஜார்ஜ் டவுன், எர்ரபாலு செட்டித் தெருவில் இருந்தது. திருவல்லிக்கேனியிலிருந்து பட்டணம் போய் வருவதற்கும் இடைவேளைச் சிற்றுண்டிக்குமாக அவரது மனைவியார் நம் பாரதியாரிடம் காசு கொடுப்பார். கவிஞர் பணத்தை வாங்கிக் கொண்டு தெருகோடிக்கு வருவார்; வந்ததும் அந்தக் காசைக் கண்டபடி வீணாகச் செலவழிப்பார்; கைக்காசு செலவழிந்து போம். உடனே தலையில் முண்டாசு கட்டிக்கொண்டு நடையைக் கட்டிவிடுவார். திருவல்லிக்கேணியிலிருந்து நடந்தே ஆபீஸ் போவார்; சிற்றுண்டு யருந்தும் பொழுது யாராவது அவரைக் கூப்பிட்டு மனமுவந்து கொடுத்தால் வாங்கிச் சந்தோஷமாகத் தின்பார்; இல்லாவிடில் பட்டினிதான்!

மாலை நேரத்திலே சூரியன் மலைவாயில் வீழுங்காட்சியைக் காண்பதென்றால் அவருக்கு மிக்க ஆனந்தம். ஆபீஸின் வெளிப்புறத்திலே ஒரு தாழ்வாரம். அதிலே நின்றுகொண்டு சூரியாஸ்தமனமாகும் காட்சியை அவர் கவனித்துக் கொண்டேயிருப்பார்; அதிலேயே மெய்ம்மறந்து ஈடுபட்டுவிடுவார். யார் கூப்பிட்டாலும் காதில் விழாது. எவ்வளவு சப்தம் போட்டாலும் அவரது கவனத்தைத் திருப்பவே முடியாது. அவ்வளவு தூரம் மெய்ம்மறந்து அந்த மாலைக் காட்சியிலே அவர் ஈடுபட்டு விடுவார்.

பாரதியாருக்குப் பூமாலையில் அபாரமான பிரியம். அரளிப்பூ முதலிய சிவப்புப் பூக்களையெல்லாம் தொடுத்து ஒரு மாலையாகக் கழுத்திலே போட்டுக் கொள்வதில் அவருக்கு அளவுக்கு மிஞ்சிய ஆசை.

                                                        மனை மாண்பு.
                                         "காக்கை குருவி எங்கள் ஜாதி"

பாம்பின் கால் பாம்புக்குத் தெரியும். சிற்றுண்டிக்காக கொடுக்கும் காசைக் கண்டபடி செலவழித்துவிட்டுப் பட்டினி கிடப்பார் பாரதியார் என்பது அவரது மனைவிக்குத் தெரியும். ஆகவே அந்த அம்மணி என்ன செய்வாரென்று கேட்டால் கணவர் வரும் வேளையில் ஏதாவது சிற்றுண்டி செய்து வைத்துக் கொண்டு காத்திருப்பார். பாரதியார் வீடு வந்ததும் செல்லம்மாள் அதை அன்புடன் கொண்டு வந்து கொடுப்பார். 'ஏதடா! நாள் முழுதும் பட்டினி கிடந்தோமே! இதை அப்படியே தின்றுவிடுவோம்' என்ற எண்ணம் பாரதிக்குத் தோன்றுவதேயில்லை. அந்தச் சிற்றுண்டியை எடுத்துக் குருவிக்குக் கொஞ்சம் போடுவார்; பூனைக்குக் கொஞ்சம்; காக்காய்க்குக் கொஞ்சம் போக மீதியைத் தின்பார். என்ன மனுஷர்!

தேம்பி அழுதார்.

"இன்றைக்கு எங்கள் வீட்டில் ஸொஜ்ஜி பண்ணியிருக்கிறாள். நீயும் வா! நான் காலையிலே தின்றேன்; ரொம்ப ருசியாயிருந்தது" என்று சொல்லி பாரதியார் ஒரு நண்பரைத் தமது வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்தார்; வந்து அவரை ஓரிடத்தில் அமர்த்தி உள்ளே போய்ப் பார்த்தார்; ஸொஜ்ஜி வழக்கமாக வைக்கப்படும் இடத்திலே தேடினார். அங்கே 'ஸொஜ்ஜி' இல்லை. உடனே பாரதியார் நண்பர் அருகில் வந்து உட்கார்ந்து கொண்டார். "தம்பீ! நீ தங்கக் கம்பியென்றால் தங்கக் கம்பி. பத்தரை மாத்துத் தங்கம். நீ 'ஸொஜ்ஜி' சாப்பிட வேந்துமென்று உன்னை அழைத்து வந்தேன்; ஸொஜ்ஜி இல்லை; ஆய்விட்டது போலிருக்கிறது" என்று சொல்லித் தேம்பித் தேம்பி அழுதார் பாரதியார். "அதனால் என்ன? பாதகமில்லை. ஆய்விட்டது போலிருக்கிறது. இன்னொரு நாள் தின்றால் போகிறது. நீங்கள் ஏன் வருத்தப் படுகிறீர்கள்" என்று நண்பர் தேறுதல் கூறினார்.

இருந்தாலும் பாரதியார் மேலும் மேலும் அழ ஆரம்பித்தார். பின்னர் மறுபடியும் சென்று தேடிய பொழுது 'ஸொஜ்ஜி' கிண்ணம் கிடைத்தது. உடனே சிறு குழந்தையைப் போலே துள்ளிக் குதித்தார் பாரதியார். அவர் முகத்திலே சந்தோஷம் தாண்டவமாடிற்று.

பாரதியார் கள்ளங்கபடமற்ற உள்ளமுடையவர். குழந்தை போன்ற மனம் உடையவர்.

தோழமை

"தோழனுடன் சம்பாஷிப்பதைக் காட்டிலும் பெரிய இன்பம் வேறில்லை" - சுகிர்லாபம்.

பாரதியாருக்கு நண்பர்களிடத்திலே அபாரமான பிரியம். ஒரு சமயத்திலே தேனாம்பேட்டையிலே ஒரு நண்பர் பிரசங்கமொன்றுக்கு ஏற்பாடு பண்ணியிருந்தார். அது சரியான வெயில் காலம். பிரசங்கம் ஐந்து மணிக்கு ஆரம்பம்.

பாரதியார் என்ன செய்தார்! நடு வெயிலில் ஒரு ரிக்ஷா வைத்துக் கொண்டு பகல் சுமார் ஒரு மணிக்குத் தம் நண்பர் வீட்டுக்குப் போய்ச்சேர்ந்தார்.

"என்ன! இந்த வெயிலில் புறப்பட்டு வந்தீர்கள்?" என்று விசாரித்தார் நண்பர்.

"தம்பீ! நீ பஞ்சதந்திரக் கதை வாசித்திருக்கிறாயா? 'மித்திரனைவிடச் சிறந்தவன் வேறில்லை; மித்திரனுடன் அளவளாவுவதே இன்பம்' என்று அதிலே சொல்லப்பட்டிருக்கிறதே! தெரியுமா? நீ நல்ல பிள்ளை, அதனால்தான் வந்தேன்" என்றார் பாரதியார்.

பிறகு இருவரும் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

பாரதி பட்டம் பெற்றது.

எட்டயபுரம் ஜோதிஷ வித்துவான் ஸ்ரீமான் குருகுஹதாஸப் பிள்ளை அவர்கள் வீட்டில்தான் பாரதியார் அடிக்கடி சல்லாபம் செய்து கொண்டிருப்பார். 1896-ம் வருஷத்திலே அவர் திருநெல்வேலி ஸென்ட்ரல் ஹிந்து காலேஜில் மெட்ரிகுலேஷன் வகுப்பில் வாசித்துக் கொண்டிருந்தார். அவர் ஸெலக்ஷன் பரீக்ஷையில் தேறவில்லை. அவ்வருஷம் இறுதியிலே, அதாவது 1896ம் வருஷம் நவம்பர் மாதக் கடைசியிலே ஒரு நாள் பாரதியார் எட்டயபுரம் குருகுஹதாஸப் பிள்ளையவர்கள் வீட்டிலிருந்தார். அப்பொழுது விருதை சிவஞான யோகியார் என்பவரும் அங்கே யிருந்தார். அவர், நம் பாரதியார் ஸெலக்ஷன் பரீக்ஷையில் தோல்வியுற்றது பற்றி ஏளனம் செய்தார்.

"என்ன! வாய்ப் பேச்சுதான்! பரீக்ஷை தேற முடியவில்லையே" என்றார் அவர்.

"பரீக்ஷை தேறிப்பட்டம் பெறுவதற்காக நான் படிக்கவில்லையே!" என்று பாரதியார் பதில் கூறினார். அந்த வகையிலே நடந்த விவாதத்தில் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசுமாறு விருதை சிவஞான யோகியார் பாரதியாருக்குச் சவால் விடுத்தார். உடனே அன்றைய மாலையே பொதுக் கூட்டத்தில் "கல்வியின் திறன்" என்பது பற்றிப் பேசப் போவதாக பாரதியார் கூறிச் சென்றார். குறித்த நேரத்தில் கூட்டமும் நடைபெற்றது. அக்கூட்டத்திலே பதினாலு வயது சென்ற நம் பாரதியார் கேட்போர் வியக்கத்தக்க விதமாகப் பேசினார். அன்றைய தினம் தான் குருகுஹதாஸப் பிள்ளை வீட்டில் விருதை சிவஞான யோகியாரால் "பாரதி" என்ற பட்டம் சுப்பிரமணிய பாரதியாருக்குச் சூட்டப்பட்டது.

உலாமடல்

சுமார் 250 வருஷங்களுக்கு முன்பு எட்டயபுரம் சமஸ்தான வித்துவானாக, கடிகை முத்துப் புலவர் என்று ஒருவர் இருந்தார். பெத்தண்ண தளவாய், உமறு புலவர், ஆகியவர்கள் அவரது சிஷ்யர்கள். பெத்தண்ண தளவாய் எட்டயபுரத்தவர் மீது ஓர் "உலாமடல்" பாடியிருக்கிறார். அந்த உலா மடல் மிக்க சொல் நயம் பொருள் நயம் சிறந்து விளங்குவது; அந்த மாதிரி யாராலும் பாடமுடியாது என்று புகழப்படுவது. இவ்வாறு பலரும் அந்த உலாமடலைப் புகழக் கேட்ட பாரதியார் சுமார் 200 வரிகள் அதே மாதிரி ஓர் அழகான "உலாமடல்" பாடினார். பாடி, அதைச் சபையோர்முன் படித்துக் காண்பித்தார். அது மிகவும் நன்றாயிருந்தது. ஆனால் சில புலவர்கள் பொறாமை மிகுதியினாலே ராஜ சபையில் புகுத்த மனமில்லாதிருந்தது கண்டு பாரதியாருக்குக் கோபம் வந்தது. அவர்கள் முன்னிலையிலேயே அதைக் கிழித்தெறிந்து போட்டு வந்தார்.

'அன்று அங்கே; இன்று இங்கே'

படிப்பெல்லாம் முடிந்த பிறகு பாரதியார் எட்டயபுரம் சமஸ்தானத்திலேயே உத்தியோகம் வகித்து வந்தார். அப்படியிருக்கும் நாளில் அவருக்கும் சமஸ்தான மன்னருக்கும் ஏதோ மனஸ்தாபம் நிகழ்ந்தது. அதனாலே மன்னர் சமஸ்தான உத்தியோகத்திலிருந்து அவரை விலக்கி விட்டார். அன்றிரவு ஒரு தெருவிலே தீப்பற்றிக் கொண்டது. அவ்விடத்திலே பாரதி அன்பர் பலரும் கூடியிருந்தனர். பாரதியும் ஒரு சால்வையைப் போர்த்திக் கொண்டு அங்கே போயிருந்தார்.

"இது என்ன இப்படி நெருப்புப் பற்றிக் கொண்டதே!" என்று ஒருவர் கேட்டார்.

உடனே பாரதியார் சொன்னார்: "அன்று இராவணன் ஒரு கவியை (குரங்கை) இம்சித்தான். அதன் பயனாக அங்கே (இலங்கையில்) தீ மூண்டது. இன்று எட்டயபுரம் சமஸ்தானாதிபதி ஒரு கவியை (தன்னை) இம்சித்தார். இதோ இங்கே நெருப்புப் பிடித்துக் கொண்டது."

சுண்டைக்காய் பூமி

மன்னருடன் கொண்ட மனஸ்தாபத்தால் பாரதியார் உத்தியோகத்திலிருந்து விலகினார் என்ற செய்தி பாரதி நண்பர்களுக்குத் தெரிந்தது. அவர்கள் சும்மா யிருப்பார்களா? எப்படியாவது பாரதியை மறுபடியும் சமஸ்தான ஊழியத்தில் நுழைக்க வேண்டிய முயற்சிகள் நடைபெற்றன. ஆனால் "மதியாதார் தலைவாயில் மிதிக்க வேண்டாம்" என்ற இறுமாப்புக் கொண்டவரன்றோ நம் பாரதியார்?

"எட்டயபுரம் ராஜா சுண்டைக்கா யளவு பூமியை வைத்துக் கொண்டிருக்கிறார். உலகம் மிகப் பெரியது. அதிலே எனக்கு இடமிருக்கிறதென்று சொல்" என்று கூறி பாரதியா சமஸ்தானத்திலே வேலை செய்ய மறுத்தார்.

கருங்குரங்கு கட்டவிழப் பெற்றது

இப்பொழுது ரிடயர்டு ஜில்லா ரிஜிஸ்தரராயிருக்கும் ஸ்ரீ லக்ஷ்மிநாராயண பிள்ளை அவர்கள் தென்காசியிலே ஸப் ரிஜிஸ்தரராயிருக்கும் காலத்தில் ஒரு சமயம் பாரதியார் அவர் வீட்டில் தங்கியிருந்தார். அது 1921ம் வருஷம். ஸ்ரீ பிள்ளையவர்கள் வீட்டில் ஒரு கருங்குரங்கு கட்டப்பட்டிருந்தது. அதைக் கண்டவுடன் பாரதியாருக்கு அதனிடத்திலே இரக்கம் தோன்றிவிட்டது. குரங்கு பந்தத்திலிருப்பதை அவரால் சகிக்க முடியவில்லை. உடனே அதற்குய் ஏதோ தாம் உபதேசம் செய்யப் போவதாகச் சொல்லிவிட்டு அதன் காதில் என்னவோ ஓதினார்; பிறகு அவர்களைப் பார்த்துச் சொன்னார்:

"ஐயா! இப்பொழுது நம்மிடையே பேசப்படுகிற ஆதி திராவிடர்களுக்கும் பாவியான இந்த அனாதி திராவிடனைக் கட்டவிழ்த்துவிட்டுப் பார்த்தீர்களானால் அவனது குறும்பு யாவும் அடங்கிச் சாதுவாயிருப்பான்" என்றார். உடனே கட்டவிழ்த்து விடப்பட்டது. பாரதியார் சொன்னபடியே சாதுவாய்த் திகழ்ந்தது விடுதலை அடைந்த அந்தக் கருங்குரங்கு.

                                                   பெரியோர் மொழி

        'இரவி யெழுந்தது முதல் எற்படுவரை இவ்வுலகு நின் புகழ் கேட்பதாக" -- மெக்காலே.

லக்ஷமண சிங் தேவோ என்பவர் ஒரு பெயவர்; ஆரிய சமாஜி; நேபிள்ஸ், ரோம் ஆகிய பல இடங்கள் சுற்றியவர். ஆப்பிரிக்காவில் வசித்திருந்தார். போயர் யுத்தத்தின் போது அங்கிருந்து புறப்பட்டுக் கொழும்பு மார்க்கமாக எட்டயபுரம் வந்தவர். அவரது இயற்பெயர் இன்னதென்பது யாருக்கும் தெரியாது. 1899 முதல் 1902 வரை அவர் எட்டயபுரத்தில் வசித்து வந்தார். அவர் தாடி வளர்த்திருப்பார். பாரதியார் அவரை 'மிஸ்டர் பார்பா' என்று கூப்பிடுவார். 'பார்பா' என்றால் தாடி என்று பொருள். அங்கே அளவளாவிக் கொண்டிருந்த பாரதியாரைப் பார்த்ததும் "இவர் இன்னும் சில காலத்திற்கெல்லாம் சர்க்கார் தொல்லைக்கு ஆற்றாது அஞ்ஞாதவாசம் செய்வார். அதன் பின்பு இவரது புகழ் மிக்கோங்கும்" என்றார் லக்ஷ்மண் சிங். அவ்வாறு சொல்லக் காரணம் என்னவென்று விசாரிக்கப் பட்டது.

"என்னவோ எனக்குத் தோன்றியதைக் கூறினேன்" என்றார் லக்ஷ்மண் சிங். ஆனால் பிற்காலத்திலேதான் அது உண்மையாகி விட்டதே!

"ஷெல்லியின் கில்டு"

ஆங்கிலக் கவிஞர்களாகிய ஷெல்லி, பைரன் ஆகிய இருவரது நூல்கள் மீதும் பாரதிக்கு எல்லையற்ற பற்று. சதாகாலமும் 'ஷெல்லி'யைக் கையிலேயே வைத்துக் கொண்டிருப்பார்.

1902ம் வருஷம் எட்டயபுரத்திலே பெருமாள் கோவில் சந்நிதித் தெருவிலே பாரதி ஒரு சங்கம் ஸ்தாபித்தார். அதற்கு "ஷெல்லியின் கில்டு" (Shellian Guild) என்று பெயர். பின்காலத்திலே பாரதியாரின் "இந்தியா" பத்திரிகையில் உதவி ஆசிரியராகவிருந்த எட்டயபுரம் ஸ்ரீமான் பி.பி.சுப்பையா என்பவர் அந்தச் சங்கத்திலே ஓர் அங்கத்தவர். இப்பொழுது பழனி தாலுக்கா ஆபீஸ் தலைமை குமாஸ்தாவாயிருக்கும் எட்டயபுரம் அ.கைலாசம் பிள்ளை என்பவரும் அதிலே ஓர் உறுப்பினர்.

அந்தச் சங்கத்திலே பாரதியார் ஷெல்லியின் கவிதா ரஸங்களையும், பைரனின் தேசிய கீதங்களையும் படித்துக் காண்பிப்பார்.

மூடசிகாமணிகள் நக்ஷத்திரமாலை

எட்டயபுரம் சமஸ்தானாதிபதியுடன் மனஸ்தாபம் ஏற்பட்டதனாலே பாரதியார் அவ்வூரை விட்டுக் கிளம்பினார். கிளம்பி மதுரை சேதுபதி ஹைஸ்கூலில் தமிழ்ப் பணித ஊழியம் புரிந்தார். அது 1904ம் வருஷத்திய நிகழ்ச்சி.

அப்பொழுது பாரதியார் ஒரு நூல் இயற்றினார். அதற்கு "மூடசிகாமணிகள் நக்ஷத்திர மாலை" என்று பெயர். நக்ஷத்திரங்கள் மொத்தம் இருபத்தேழு அல்லவா? அதே மாதிரி இருபத்தேழு விருத்தப் பாக்களாலே அந்நூலை யாத்தார்; அதிலே சிற்சிலரது பெயரைக் குறிப்பிட்டே திட்டிப் பாடியிருந்தார்.

மதுரை கந்தசாமிக் கவிராயர் முதலிய வேறு பல புலவர்களிடம் அவர் அந்த நக்ஷத்திர மாலையை வாசித்துக் காண்பித்தார். மதுரை சங்கப்பா என்பவர் ஒரு கிழப் பிராமணர்; வேதாந்தி. அத நக்ஷத்திர மாலையை வாசித்துக் காண்பிக்க வேண்டுமென்று அவர் பாரதியாரைக் கேட்டுக் கொண்டார். பாரதியாரும் அதற்கு இணங்கினார். மதுரை 'பேரையூர் பங்களா'வில் அது படிக்கப்பட்டது. பெரியவர் அதை நன்றாகக் கேட்டார். "நூலிலே கூறப்பட்டிருந்த விஷயங்கள் யாவும் உண்மையே. ஆனாலும் உன்னைப் போன்றவருடைய வாழ்வுக்கு இதனாலே இடையூறுண்டாகும். ஆனதினாலே இதைக் கிழித்தெறி" என்று பாரதியாரிடம் கூறினார் அப்பெரியார். பெரியவரது சொல்லை மதித்துப் பாரதியாரும் அந்த நூலைக் கிழித்துப் போட்டார்.

                                                  பாதிரியார் பாராட்டு

                                             "விளையும் பயிர் முளையிலே தெரியும்"

திருநெல்வேலி ஜில்லாவில் 'நாஸரெத்' என்று ஓர் ஊர் இருக்கிறது. அந்த ஊரிலே ஒரு பாதிரியார் வசித்து வந்தார். அவர் பெயர் ரெவரண்டு ஏ.கானன் மெகாஷியஸ் என்பது. அவர் அக்காலத்தில் இருந்த 'பிரைமரி போர்டு' தலைவராயிருந்தார். அந்தப் பிரைமரி பரீக்ஷை எழுதி சர்டிபிகேட் வாங்குவது ஒரு பெரிய கெளரவம் என்று அக்காலத்திய இளைஞர்கள் எண்ணினார்கள். ஆதலினாலே ஏராளமான பேர்கள் அப்பரீக்ஷைக்குப் போவதுண்டு. பாரதிக்கும் அந்தப் பரீக்ஷை பாஸ் செய்ய வேண்டுமென்ற எண்ணம் உண்டாயிற்று.

அப்பொழுது எட்டயபுரத்தில் ஏ.வி.ஸ்கூல் என்று ஒரு பள்ளிக்கூட மிருந்தது. சங்கர ஐயர் என்பவர் அந்தப் பள்ளிக்கூடத்தின் எட்மாஸ்டர். அவரிடம் பாரதியார் தமது விருப்பத்தைத் தெரிவித்தார். அவரும் பாரதியாரின் விருப்பத்துக் கிணங்கிச் சில மாணவர்களுடன் பாரதியாரையும் பரீக்ஷைக்கு அனுப்பினார்.

அந்த வருஷத்திலே சுமார் இருநூறு பேர் அந்தப் பரீக்ஷைக்குச் சென்றனர். எல்லாரும் சாத்தூரில் மேற்பட் பாதிரியார் முன் ஆஜரானார். ஒவ்வொருவரையும் தமக்குத் தெரிந்த ஓர் இங்கிலீஷ் பாட்டைப் பாடுமாறு பாதிரியார் கேட்டார். பாரதியார் 'டுவிங்கில் டுவிங்கில் லிட்டில் ஸ்டார்' என்ற இங்கிலீஷ் கவியை மிகுந்த உற்சாகத்துடனும், ரஸாபாவத்துடனும் அபிநய பூர்வமாகப் பாடிக் காட்டினார். அது கண்டு பாதிரியார் அடங்கா மகிழ்ச்சி கொண்டார். சங்கரய்யர் என்பவரிடம் "இந்தச் சிறுவன் பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவனாயிருந்தால் உடனே லண்டனிலுள்ள ஏதாவதொரு சர்வகலாசாலைக்கு இவனை அனுப்புமாறு இவன் தந்தையிடம் சொல்லுங்கள்" என்று கூறினார்.

இளமையிலேயே பாரதியார் பாட்டிலும் கவிதையிலும் எவ்வளவு தூரம் ஈடுபட்டிருந்தார் என்பதற்கு இது ஓர் எடுத்துக் காட்டு.

                                       

பக்தி செய்வது எதற்காக?

                                                  பக்தி செய்வது எதற்காக?

இன்று மக்கள் மத்தியில் கடவுள் பக்தி தழைத்து வளர்ந்திருப்பதைக் காண முடிகிறது. ஈ காக்கை வராத ஆலயங்களில் கூட மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. சிவாலயங்களில் பிரதோஷ வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கில் மக்கள் கூடுகிறார்கள். பிரார்த்தனைத் தலங்கள் என்ற பெயர்பெற்ற ஆலயங்களில் ஆண்டு முழுவதும் மக்கட் கூட்டம். என்ன ஆயிற்று மக்களுக்கு திடீரென்று, புரியவில்லை. நாத்திகப் பிரச்சாரம் உச்ச கட்டத்தில் இருந்த காலமும் ஒன்று உண்டு. இராமன் விக்கிரகத்தை அவமதிப்பு செய்ததையும், விநாயகர் உருவ பொம்மைகள் உடைக்கப்பட்டதையும் கண்ணால் பார்த்தவர்கள் நாம். ஸ்ரீரங்கம் ரெங்கநாதரையும் சிதம்பரம் நடராஜரையும் பீரங்கியால் பிளக்கும் நாள் எந்நாளோ என்று கோஷமிட்ட காலமும் உண்டு. இத்தனை பேர் ஒன்றுகூடி செய்த நாத்திகப் பிரச்சாரம் என்னவாயிற்று?

ஒரு தலைமுறை இந்த விஷமப் பிரச்சாரத்தால் மனம் மாறி நடக்கத் தொடங்கினாலும், அவர்களுக்கென்று தலைவலி கால்வலி வந்த நேரத்தில் கோயிலையும் கடவுளையும் இவர்கள் நினைக்கத் தொடங்கியது ஒரு புறம்; வாழ்க்கையில் அவர்களுக்கு ஏற்பட்ட இன்னல்கள், சோதனைகள் இவற்றால் பனம் பதைபதைத்து ஜோசியர்களிடம் சென்று ஜாதகத்தைக் காட்டி பரிகாரம் கேட்கத் தொடங்கிய போது இந்த மாற்றம் ஏற்படத் தொடங்கியது. எப்படி? ஜோசியர்கள் சொன்னார்கள் உங்கள் ஜாதகப்படி இன்ன தோஷம் உங்களை வாட்டுகிறது, அதற்குப் பரிகாரம் வேண்டுமானால் இந்த ஊரில் உள்ள இந்த கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்யுங்கள் என்றெல்லாம் சொல்ல ஆரம்பித்தவுடன் ஆள் வராத கோயில்களுக்கு எல்லாம் தொடங்கியது அதிர்ஷ்டம்.

எங்கோ ஒரு கோடியில் கேட்பாரற்று தூங்கிக் கிடந்த ஆலயம் விழித்தெழுந்தது. பூஜை செய்ய ஆளில்லாமல் இருந்த இடத்தில் பசையோடு வாழ வழிவகுத்துக் கொடுத்தது பரிகாரம் தேடி வந்த மக்கட்கூட்டம். பக்தி என்பது தனக்கு என்றில்லாமல் 'இவ்வுலக மாந்தரெல்லாம் இடரின்றி வாழட்டும்; மாதம் மும்மாரி பொழியட்டும்; பயிர்கள் விளைந்து நாடு வளமாக ஆகட்டும்; இன்னல்கள் தீர்ந்து மக்கள் அமைதியாக வாழட்டும்' என்று வேண்டுவது பக்தி என்று ஆன்றோர்கள் சொல்லி வைத்தார்கள். ஆனால் .......

மாறாக என் மனைவியின் மாமா பிள்ளைக்கு வந்த வயிற்றுவலி தீரட்டும், என் வருமானம் அதிகமாக ஆகட்டும், வியாபாரத்தில் எனக்குப் போட்டியாக வளர்ந்து வரும் எதிரி வீழ்ச்சி அடையட்டும் என்றெல்லாம் மனதில் நினைத்து கோயில் கோயிலாகப் போனால் அதன் பேர் பக்தியா?

ஒரு கோயிலுக்குப் போயிருந்தேன். ஆண்டு முழுவதும் பிரார்த்தனை செய்துகொண்டு அங்கு வந்து முடி இறக்கி மொட்டை போட்டுக் கொள்வோரும், ஓராண்டு ஆன குழந்தைக்கு காது குத்தி மொட்டை போடுவோரும், மாவிளக்கு போட்டு வழிபாடு செய்வோருமாக அந்தக் கோயில் திமிலோகப் பட்டுக் கொண்டிருக்கும். விசேஷ தினங்கள் என்றால் கேட்கவே வேண்டாம். கோயிலுக்குள் நுழைவதே சிரமம். அப்படிப்பட்ட கோயிலுக்கு ஒரு விசேஷ நாளில் சென்று விட்டேன். அங்குள்ள புஷ்கரணியின் நான்கு புறமும் மக்கட்கூட்டம். அத்தனை பேரும் இறங்கி முழுகி கால் நனைக்கக்கூட இடமின்றி அடைத்துக் கொண்டு நின்றனர். பரவாயில்லை தமிழகம் பண்டைய காலம்போல பக்தி பரவசத்தால் பரவிக் கிடக்கிறது என்று மனம் குதூகலித்தது.

சந்நிதி நோக்கிப் போனேன். உள்ளே மூச்சு முட்டக் கூட்ட நெரிசல். நெருக்கி யடித்துக் கொண்டு கூட்டத்தினூடே உள்ளே புகுந்து கிடைத்த இடைவெளியில் சுவாமி தரிசனம் செய்துகொண்டேன். தீபாராதனைத் தட்டில் எரிந்து கொண்டிருக்கும் கற்பூரத்தோடு குருக்கள் வெளியே வந்து பக்தர்களுக்குக் காட்டி கையில் திருநீற்றையும் கொடுத்துக் கொண்டு வந்தார். வெறுங்கையோடு கும்பிடுவோருக்கு ஒரு சிட்டிகை விபூதி கையில் விழுந்தது. சில்லரை போட்டு கும்பிடுவோருக்கு சற்று அதிகமான திருநீறு. கரன்சி நோட்டு விழுந்தால் பொட்டலமாக கட்டி வைத்த திருநீற்றோடு ஒரு சிறு தொடுத்த புஷ்பமும் கையில் விழுந்தது. நல்ல பக்தி வியாபாரம் என்று நினைத்தேன்.

என் அருகில் கற்பூரத் தட்டு வருவதற்காகக் காத்திருந்தேன். அப்போது திடுதிப்பென்று சிலர் முண்டி அடித்து என்னை ஒரு எக்கு எக்கித் தள்ளிவிட்டுத் தங்கள் கைகளை நீட்டி திருநீறு வாங்கிக் கொள்ள முண்டியடித்து வந்தனர். நான் பின்னுக்குத் தள்ளப் பட்டேன். பின்னே என்ன இன்றைய வழக்கப்படி பக்தி செய்யத் தெரியாத எனக்கு பகவான் வேறு என்ன தருவார் என்று திரும்ப வந்துவிட்டேன். சரி, அடுத்த தீபாராதனையாவது பார்த்துவிட்டுப் போகலாம் என்று சற்று கூட்டத்திலிருந்து ஒதுங்கி ஓரமாக நின்று கொண்டேன். தீபாராதனை சமயம் சுவாமியும் தெரியவில்லை, சந்நிதியும் தெரியவில்லை, மக்கள் முண்டியடித்துக் கொண்டு சாமியை வேறு யாரேனும் கொண்டு சென்றுவிடுவார்களோ, அவர் தங்களுக்கு மட்டுமே என்ற எண்ணத்தில் பம்மிக் கொண்டு அடைத்துக் கொண்டு நின்றனர். போகட்டும் மக்கள் பய பக்தியோடு சுகமாக வாழட்டும், ஆண்டவனின் கருணா கடாட்சம் அவர்களுக்கே கிடைக்கட்டும், 'சர்வே ஜனஹா சுஹினோ பவந்து: என்று ஆசீர்வதித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு பேருந்தைப் பிடித்து ஊருக்கு வந்து சேர்ந்தேன்.

வீடு வந்து சேர்ந்ததும் அடுத்த வீட்டுக் காரர் கேட்டார், என்ன சார், புண்ணிய ஸ்தல யாத்திரை போனீங்களே சுவாமி தரிசனம் எல்லாம் நன்றாக ஆச்சா? என்றார். ஆமாம் ஆச்சு ஆச்சு. அதெல்லாம் விடுங்க, எனக்கு ரொம்ப சந்தோஷம் கொடுத்த விஷயம் என்ன தெரியுமா? மக்கள் கிட்டே பக்தி அதிகமாயிடுச்சிங்க, அடே அப்பா, அந்த பக்தி பரவசத்தைப் பார்க்கக் கொடுத்து வைத்திருக்கணும். ஒரு முறை நீங்களும் போயி பார்த்து அந்த கோலாகலத்தை அனுபவிச்சிட்டு வாங்க அப்பதான் தெரியும், என்னால் வார்த்தைகளால சொல்ல முடியலை என்றேன். அவரும் திருப்தியாகத் தலை அசைத்துவிட்டு, சரி சரி, போயிட்டு வரேன் என்று சொல்லி புறப்பட்டு விட்டார்.

Tuesday, October 21, 2014

பாரதியின் 93ஆவது நினைவு நாள்.

திருவையாறு பாரதி இயக்கம் சரஸ்வதி அம்பாள் பள்ளி வளாகத்தில் நடத்திய பாரதி விழா நிகழ்ச்சியில் தஞ்சை வெ.கோபாலன் பேசியதன் சுருக்கம்.

அருமை பாரதி இயக்க அன்பர்களே!

வணக்கம்.  இன்று மகாகவியின் 93ஆவது நினைவு நாள்.  

அமரனாகி விட்டதால் கண்ணுக்குத் தோன்றாவிட்டாலும் நம்முடைய கருத்தில் நின்று காட்சியளிக்கும் தேசிய மகாகவி சுப்ரமணிய பாரதிக்கு நாமனைவரும் முதலில் அஞ்சலி செய்வோம். பாரதியை நாம் மறந்து விடாமல், அவர் பாடித் தந்த அறவொழுக்கங்களை வாழ்க்கையில் மேற்கொள்ள நமக்கு நினைவூட்டிக் கொண்டிருக்கவே இந்த பாரதி இயக்கத்தை இங்கு ஏற்படுத்தித் தமிழ் மொழிக்கும் மக்களுக்கும் அரும்பெரும் சேவைகள் இங்கு சேவை செய்து வருவதை நீங்கள் அறிவீர்கள்; அப்படி உங்களுக்குத் தெரிய வில்லையென்றால் இனியாவது தெரிந்து கொள்ளுங்கள். இந்த பாரதி இயக்கத்திடம் வேறு எந்த பலனையும் எதிர்பார்க்காமல், மொழிக்கும், நாட்டுக்கும் நாம் என்ன செய்ய வேண்டுமென் பதைத் தெரிந்து கொள்ளுங்கள். பாரதியை முழுமையாகப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். அவன் பொழுதுபோக்குக்காகப் பாடியவனல்ல; இந்த நாட்டின், நாட்டு மக்களின் எழுச்சியை, புத்துணர்வை, முன்னேற்றத்தை விரும்பி பாடிய வைகள். அவன் இலக்கியங்களைப் படிக்காமல் பாரதி இயக்கத்தில் உறுப்பினர் என்று சொல்லிக் கொள்வதோ, அல்லது பாரதி பற்றிய கூட்டங்களில் கலந்து கொள்வதோ போதாது. படியுங்கள், பாரதியைத் திரும்பத் திரும்பப் படியுங்கள். நீங்கள் வாழ்க்கையில் வளர்வதும் முன்னேறுவதும் உறுதி. அந்த மன உறுதி இருந்தால் இந்த இயக்கத்தில் முழுமையாக ஈடுபட்டு உங்களையும் மேம்படுத்தி, நாட்டுக்கும் பயனுள்ளவனாக இருக்க முயற்சி செய்யுங்கள். இனி பாரதி குறித்த சில செய்திகளை உங்களுக்குச் சொல்கிறேன்; கேளுங்கள்.

பாரதி தமிழகத்தின் தனிப் பெருமை. பாரதி தமிழினத்தின் தவப்பயன். உண்மைக் கலை யையும் மக்கள் வாழ்வையும் பிரிக்க முடியாதபடி இணைத்துள்ள சிறந்த ஜீவனுள்ள உறவோடும், அச்சமற்ற சிருஷ்டித் திறன்மிக்க சிந்தனை, தெள்ளிய நேர்மை, வற்றாத வளமிக்க உயிராற்றல் ஆகியவற்றோடும் பாரதியின் திருநாமம் என்றும் இணைந்து நிற்கும்.பாரதியின் பாடல்கள், நூற்கள், எழுத்துக்கள், சாகாவரம் பெற்ற மனிதன் மேதா விலாசத்தின் நினைவுக் களஞ்சியங்களாக ஊழி ஊழி காலத்திற்கும் நிலைத்து நிற்கும்.

கம்பனுக்குப் பின் தமிழ் மக்களுக்கு, மகாகவி பாரதி, உணர்ச்சியாற்றல், கற்பனை யாற்றல், அழகுக் கலையாற்றல், ரசனையாற்றல் முதலிய சிறந்த கவித்துவ அம்சங்கள் நிரம்பப் பெற்ற மகாகவி. அவரிடம் கொழுந்துவிட்டெரிந்த அரசியல் உணர்ச்சித் தீ, மேற்கூறிய நல்லிசைப் புலமையோடு இரண்டறக் கலந்து கவித்துவத்தின் அழகுக்கு அழகு செய்தது.

பொதுமக்கள் வாழ்வோடு, தண்ணீரில் மீன் மாதிரிப் பழகிப் பாரதி, தனது படைப்பாற்றல், படைப்புப் பணி முழுவதையும் மக்கள் விடுதலைக்கும் நல்வாழ்வுக்குமே தத்தம் செய்த பாரதி, இருபதாம் நூற்றாண்டைய மக்களின் -சிந்தனை ஓட்டங்களையும் உணர்ச்சிப் பெருக்குகளையும் அழகுச் சொட்டச் சித்திரிப்பதில் நேர் நிகரற்றக் கலைஞனாகப் பொலிந்தான்.

"நமக்குத் தொழில் கவிதை, நாட்டுக்குழைத்தல்
இமைப் பொழுதும் சோராதிருத்தல்"

என்று தனக்குத் தொழில் "நாட்டுப்பணி" (மக்கள் பணி) என்று ஆணித்தரமாக கூறி கவியரசின் தொழிலைப் பற்றி இவ்வாறு உலகறியப் பறை அறைகிறான் பாரதி. கவிஞன் என்பவன் 'மக்கள் தலைவன், மக்கள் தொண்டன்' என்ற நவயுக மகாகவியின் அறிவுரைக்கு இலக்கணமாக வாழ்ந்தவன் பாரதி.

'மக்கள் வாழ்க்கையை விட்டு ஓடி ஒளியக்கூடாது, தங்கள் பலத்தையும் திறத்தையும் உணர வேண்டும்' என்றே பாரதி காலமெல்லாம் போதித்தான். இன்று ஜன யுகத்தில் நாம் வாழ்கிறோம். நமக்கு மிக மிகத் தேவையான இலக்கியமும் கலையும், மக்கள் இலக்கிய மாகவும், மக்கள் கலையாகவும்தான் இருக்க முடியும். அவை மக்களின் நலன்களை எதிரொலிப்பவைகளாகவே இருக்க வேண்டும். இந்த எண்ணங்களோடு பாரதி பாடல்களின் அறிமுகத்தையும், பாடல்களையும் பார்க்கலாம்.

பாரதி தனது நெஞ்சில் ஊறி உறைந்து நிற்கும் தமிழை நினைக்கிறான். உயிரும் உணர்வும் ஆழ அமிழ்ந்து கிடக்கும் தமிழை நினைக்கிறான். அதேபொழுதில், தான் செவ்வனே அனுபவித்தறிந்த ஆங்கிலம், சமஸ்கிருதம், இந்தி, வங்கம், பிரெஞ்சு முதலான மொழிகளையும் அவற்றின் மூலம் உலகமொழிகளையும் நினைக்கிறான். உடனே

"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவதெங்கும் காணோம்"

என்று ஒப்புநோக்கும் உணர்வுடன் தமிழமுதின் நிகரற்ற இனிமையைப் பெருமிதத்தோடு பாடுகிறான். அதே பொழுதில இத்தகைய தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட கோடானு கோடித் தமிழர்களின் நிலையை நினைக்கிறான். "உலகமெலாம் இகழ்ச்சி சொல்லப் பான்மை கெட்டு" நிற்கும் அவர்களுடைய அவல நிலைமை பாரதியின் நெஞ்சைத் தாக்கி, கண் கலங்க வைக்கிறது. "நாமமது தமிழரெனக் கொண்டிங்கு வாழ்ந்திடுதல் நன்றோ! சொல்வீர்!" என்று தமிழகம் கிடுகிடுக்க அறைகூவி, சாதாரணத் தமிழ் மக்களைத் தட்டி எழுப்புகிறான்.

"ஆங்கிலம் ஒன்றையே கற்றார் - அதற்கு
ஆக்கையோடு ஆவியும் விற்றார்
தாங்களும் அன்னியர் ஆனார் - செல்வத்
தமிழின் தொடர்பு அற்றுப் போனார்"

என்று வயிற்றெரிச்சலுடன் ஆற்றாமையால் ஒரு புலவர் பாடினாரே, அத்தகைய 'ஆங்கிலத்-தமிழர்களை' அடுத்த படியாகப் பாரதி நினைக்கிறான். இவர்கள் தமிழில் "ஷேக்ஸ்பியர்" உண்டா, "மில்டன்" உண்டா, "டென்னிஸன்" உண்டா, "ஷெல்லி" உண்டா என்று புரியாத்தனமாக, ஆனால் புரிந்ததான எண்ணத்தோடு அடிக்கடி இளக்காரமாகக் கேட்கிறார்களே, அதையும் நினைக்கிறான். இவர்களுக்குப் பதில் - இதரர்களுக்கு உண்மை அறிவிப்பு செய்ய நினைக்கிறான். எனவே, உலக மகாகவி களையெல்லாம் கவிதா மனோபாவத்தோடு நன்றாகக் கற்றறிந்து நிர்ணயித்திருந்த பாரதி

"யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்
வள்ளுவர்போல், இளங்கோவைப்போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை
உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை"

என்று அறுதியிட்டு உறுதி கூறுகிறான்.

பின்வந்த ஆராய்ச்சி வல்ல பன்மொழிப் புலவர்களான தமிழ்ப் பேரறிஞர்கள் பாரதி கூறிய இந்த உண்மையை அட்டியில்லாமல் ஒப்புக் கொள்கிறார்கள். ஆங்கில மோகம் பிடித்து அலைந்த தமிழர்களுக்கு, "சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!" என்று பாரதி அறிவுறுத்துகிறான்.

இன்று ஆங்கில மோகம் எங்கு போய் முடிந்திருக்கிறது. தமிழில் பேசும் தமிழனை எங்காவது காணமுடிகிறதா? ஆங்கிலத்தின் இடையிடையே சிறிது தமிழ் கலந்து பேசும் அவலம் இன்று தலைவிரித்தாடுகிறதே. இந்த கொடுமை ஒழிய இன்னொரு பாரதிதான் பிறந்து வர வேண்டுமா?

அடுத்தபடியாக "அகழியில் விழுந்த முதலைக்கு அதுவே வைகுண்டம்" என்பதுபோல், "தாங்கள் கற்ற தமிழே எல்லாம்" என்று பத்தாம் பசலி மனப்பான்மையோடு புதுமை கண்டு கசந்து முகம் சுளிக்கும் வைதிகத் தமிழ்ப் பண்டிதர்களைப் பாரதி நினைக்கிறான். "எல்லாப் பொருளும் இதன்பால் உள" என்ற வெண்பாப் பாட்டை இவர்கள் சங்கராபரணத்தில் ஆலாபனஞ் செய்து எக்களிப்படைவதற்கு அடிப்படையான கிணற்றுத் தவளை மரபை நினைக்கிறான்.

"மறைவாக நமக்குள்ளே பழங்கதை
சொல்வதிலோர் மகிமை இல்லை"

என்று எடுத்துக்கூறி மாறுதல் வேண்டாத நம் பணிடிதர்களின் மனத்தடிப்பைச் சுக்கு நூறாக உடைத்தெறிகிறான் பாரதி. அதே மூச்சில்

"பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்"

என்று தமிழ் வளர்ச்சித் திருப்பணியில் இறங்கும்படி ஆணையிடுகிறான். புதிய தமிழ்க் காதலர்களுக்கு, 'நாமே டமாரமடித்துக் கொள்வதனால் நமது புலமைக்குப் பெருமை ஏற்படாது. வெளிநாட்டார் வணக்கம் செலுத்தும் பொழுதுதான் நமது புலமையின் திறமைக்கும் பெருமை ஏற்படும்" என்பதைத் தமிழன்பர்கள் மறந்துவிடக் கூடாதென்றும் புத்தி புகட்டுகிறான்.

"வானம் அளந்ததனைத்தும் அளந்திடும் வண்மொழி வாழியவே
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து வளர்மொழி வாழியவே
எங்கள் தமிழ் மொழி எங்கள் தமிழ் மொழி என்றென்றும் வாழியவே"

என்று தமிழை வாழ்த்தி நம்பிக்கை ஊட்டுகிறான் பாரதி.

"சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே" என்று பிரிதோரிடத்தில் பாடுவதும் இங்குக் குறிப்பிடத்தக்கது. தமிழில் அதன் வலுவில் வளர்ச்சியில் பாரதிக்கு இருந்த அசையாத உறுதி கங்கு கரையற்றது. பாரதியால் தமிழ் மேன்மையுற்றது, தமிழால் பாரதி மேன்மையுற்றான் என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் கூற்று மெய்.

"புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்
மெத்த வளருது மேற்கே - அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை
சொல்லவும் கூடுவதில்லை - அவை
சொல்லும் திறமை தமிழ் மொழிக்கில்லை"

என்ற கருத்து தமிழர்களான பல ஆங்கிலம் கற்ற அறிவாளிகளையும் கல்விமான்களையும் பிடித்தாட்டுகிறது. இதை உடைத்தெறிய வேண்டிய தனது கடமையை உணர்கிறான். தமிழ்த்தாயின் வாய் மூலமாகத் தமிழின் வரலாற்றைக் கூறுகிறான்.

"ஆதிசிவன் பெற்றுவிட்டான்"

அதாவது என்று பிறந்தேன் என்று உரைக்க முடியாத தொன்மையினள் நான். அகத்தியன் இலக்கணத்தாலும், மூவேந்தர் அன்பு வளர்ப்பாலும், ஆரியத்திற்கு நிகராக வாழ்ந்தேன். கள், தீ, காற்று, வெளி இவை கலந்து தெள்ளு தமிழ்ப் புலவர்கள் நல்ல தீஞ்சுவைக் காவியம் செய்து கொடுத்தார்கள். பற்பல சாத்திரங்கள் படைத்தளித்தார்கள். உலகு புகழ வாழ்ந்தேன். அன்று என் காதில் விழுந்த திசை மொழிகள் பல. அவை இன்று இறந்தொழிந்தன.

"இந்த கணமட்டும் காலன் – என்னை ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சியிருந்தான்"

"இன்றொரு சொல்லினைக் கேட்டேன்"

அது என்ன? 'புத்தம் புதிய கலைகள் தமிழினில் இல்லை. அவை சொல்லும் திறமை தமிழுக்கு இல்லை. மெல்லத் தமிழ் இனி சாகும்' - இதுதான் அந்த அவலச் சொல்.

"சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!"
"இந்தப் பெரும்பழி தீரும் - புகழ்
ஏறிப் புவிமிசை யென்று மிருப்பேன்".

இதற்கு முன் பல காவியங்களையும், பல சாத்திரங்களையும் கால மாறுதலுக்கு ஏற்பப் புதுமை செய்து தமிழ் அழியாது நின்று வந்திருக்கிறது. இன்றும் அறிஞர்களின் இடையறாத முயற்சியால் எட்டுத் திசையும் சென்று கலைச் செல்வங்கள் யாவையும் கொணர்ந்து தமிழ் புகழ் ஏறிப் புவிமீது வாழ முடியும். இவ்வாறு சரித்திர உண்மைகளை எடுத்துக்காட்டி தமிழின் உயிராற்றலில் நம்பிக்கையை ஊட்டுகிறான் பாரதி உணர்ச்சிப் பெருக்கோடு. பாரதிக்குப் பின் இன்று வரை பல அறிஞர்களும், இளைஞர்களும் அந்த நன்னம்பிக்கையை நாள்தோறும் மெய்ப்பித்து வருகிறார்கள்.

பாரதி தனது தாயகத்தை - தமிழகத்தைப் பற்றிப் பாடுவதை அனுபவியுங்கள்! நாட்டன்பு நம்மிடம் மூண்டெழும்படி எவ்வாறு கிளறுகிறான் என்ற விந்தையைப் பாருங்கள்!

'செந்தமிழ்நாடு' என்றதும் அது சொற்றொடராகக் காதில் வந்து விழவில்லையாம். "இன்பத் தேனாக"க் காதில் வந்து பாய்கிறதாம். அந்த "இன்பத் தேனும்" வாயில் பாய்ந்து இனிமையூட்டவில்லை. காதில் பாய்ந்து பரவசமூட்டுகிறது. தொடர்ந்து, இது - இந்தச் செந்தமிழ்நாடு - "எங்கள் தந்தையர் நாடு" என்று பேச ஆரம்பித்தால் போதுமாம். "மூச்சில் ஒரு சக்தி பிறக்கிற"தாம். ஏன்? "தந்தையர் நாடு" என்பது தமிழ் இலக்கியத்தில் ஒரு புதிய சொல்லாக்கம். அதோடு பல்லாயிரம் ஆண்ட தமிழர் வாழ்வின் மாட்சியும், அதில் செறிந்து கிடக்கிறது. பின் மூச்சில் சக்தி பிறக்காது என் செய்யும்? இனி ஒவ்வொரு தமிழனின் காதிலும் தேனையும் உணர்ச்சித் தீயையும் பாய்ச்சும்.


"செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே - எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே – ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே".

இது மாதிரி ஒரு அடி உலக இலக்கியத்தில் வேறெங்கேனும் காண முடியுமா? தேசபக்தியைக் கடல் மடை திறந்ததுபோல ஓடவிட்டு எத்தனையோ நல்லிசைப் புலவர்கள் பாடியிருக்கிறார்கள் - பற்பல நாடுகளில், பலப்பல காலங்களில், ஆனால் மேற்கூறிய அடிகளில் பாரதி காட்டும் தேசபக்தியின் வேகமும் வன்மையும் போல் இனிப்பையும் நெருப்பையும் குழைத்து வேறெந்த கவிஞனேனும் பாடியதுண்டா?

இவ்வாறு சராசரித் தமிழனுக்கு உணர்ச்சியில் தேனைப் பாய்ச்சி, உயிரில் சக்தியைப் பாய்ச்சி, புதுத் தமிழனாக்கி நிறுத்தி, செந்தமிழ் நாட்டின் சிறப்பியல்புகளை, சாதனைகளை ஓவியம்போல் காட்டுகிறான் பாரதி. தமிழகத்தின் ஆண் - பெண்ணின் மேம்பாட்டை ஆறுகளின் வளமையால் நாடு "மேனி செழிக்கும்" அற்புதத்தை, மலை வளம், கடல் வளத்தை அமர சித்திரமாக வரைந்து காட்டுகிறான்.

'செல்வம் எத்தனையுண்டு புவிமீதே - அவை யாவும் படைத்த தமிழ்நாடு' என்று பாடி, தனது தீர்க்க தரிசனக் காட்சியைப் படம் பிடித்துக் காட்டி, நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறான். தமிழகத்தின் நேர்நிகரற்ற புலவர் பெருமான்களை, தமிழ்ப் பேரரசுகளை, தமிழ் மன்னர்களின் இணையற்ற விறல் வீரத்தை, தமிழர் நாகரிகப் பெருமையை, பண்பாட்டுத் திறத்தை, உலக இலக்கியம் உள்ளளவும் நிலைத்து நிற்கும் விதத்தில் பாடி, நாட்டைப் பற்றியும் நம்மைப் பற்றியும் நமக்குப் புத்துயிரும் புத்துணர்வும் ஏற்படும் வண்ணம் நமது இதய வீணையின் ஒவ்வொரு நரம்பையும் மீட்டுகிறான் பாரதி.

பாரத நாடு:

"தேசபக்தி" என்ற நவீன மார்க்கச் சுடரிடம் அன்பு பூண்டு புனைந்த பாடல்கள்தான் "பாரத நாடு" என்ற இந்தத் தலைப்பின் கீழ்க் காணப்படும் பாடல்கள்.

"பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே".

என்ற கொள்கையைத் தாரக மந்திரமாகக் கொண்டவன் பாரதி. எனவே அவன், வேறு எந்தக் கடவுளையும் வணங்கவில்லை.

"வந்தே மாதரம் என்போம் – எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்".

என்று பாடி மாநிலத் தாயைத்தான் முதல் கடவுளாக வணங்குகிறான். பாரதி இலக்கியம் முழுவதையும் துருவி ஆராய்ந்தால் ஓர் உண்மையைத் தெள்ளத் தெளிவாகக் காணமுடியும். அதாவது பாரதி, சிவலோகத்தையோ, வைகுண்டத்தையோ அல்லது செத்த பிறகு கிடைக்கக்கூடும் என்று சொல்லப்படுகிற எந்த நாட்டையும் பதவியையும் நம்பவில்லை. இந்த வாழ்வை, இந்த மண்ணை இங்குள்ள மக்களைப் பாரதி நம்பினான்.

ஆகவே முழு மூச்சோடு - தாமரை இலைத் தண்ணீர்க் கொள்கைக்கு நேர்மாறாக - தனது நாட்டிடம் பாரதி அன்பு பூண்டான். பாரத நாட்டைத் திரிகரண சுத்தியோடு மனம் நிறைய நேசித்தான். "ஜாதி மதங்களைப் பாரோம்", "வேதியரும் ஈனச் சாதியரும் ஓர் தாயின் வயிற்றில் பிறந்தோர்" என்று முழங்கினான். "வாழ்வும் வீழ்வும்", "முப்பது கோடி முழுமைக்கும்" பொது என்று கர்ஜித்தான். "புல்லடிமையும்", "தொல்லை இகழ்ச்சியும்" தீர

"ஒன்றுபட்டாலுண்டு வாழ்வே – நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே
நன்றிது தேர்ந்திடல் வேண்டும் – இந்த ஞானம் வந்தால் பின்நமக் கெது வேண்டும்"

என்று இந்நாட்டாரும், எந்நாட்டாரும் உலகில் இன்றும், என்றும் கடைப்பிடிக்கத் தகுந்த - கடைப்பிடிக்க வேண்டிய மனித மந்திரத்தை எடுத்தோதினான்.

நாட்டு வணக்கம் என்ற பாட்டில் பாரதி, பெற்றார் உற்றாரோடு, குழந்தை குட்டிகளோடு இழைந்து குழைந்து வாழ்வதற்கு இந்நாடே ஆதார பீடம் என்பதை பாடுகிறான். இந்த பாட்டு மனித உணர்ச்சியுள்ள வரையில், சாகா வரம் பெற்று நிற்கும். யுகம் யுகாந்திர மட்டும், இந்தப் பாடலைப் பாடும் ஆண் - பெண் யாராயினும் உணர்ச்சி வசப்பட்டு நாட்டின்பால் "காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்காதிரார்" என்பது திண்ணம். "பாரத நாடு" என்ற பாட்டு, "பாருக்குள்ளே நல்ல நாடு - எங்கள் பாரத நாடு" என்ற பல்லவியில் ஆரம்பித்து பாரத நாட்டின் சகல சம்பத்துக்களையும் அதி அற்புதமாக வர்ணித்துக் காட்டுகிறது. "எங்கள் நாடு" என்ற பாட்டும் அவ்வாறே.

"மன்னும் இமயமலையும் இன்னறு நீர்க்கங்கையும் பன்னரும் உபநிட நூல்களும்
மாரத வீரர்களும் நாரத கானமும் பூரண ஞானமும் புத்தர் பிரானருளும்
பெற்றநாடு எங்கள் நாடு".

ஆகவே,
"பாரத நாடு, பழம்பெரு நாடே பாடுவம் இஃதை எமக்கிலையீடே!"

என்று மனமுருக நாட்டைப் பற்றிப் பாடுவதோடு மட்டும் நிற்கவில்லை பாரதி. நாட்டுக்குரிய நமது கடமையையும் வலியுறுத்துகிறான். அந்தக் கடமை என்ன?

"இன்னல் வந்துற்றிடும் போததற் கஞ்சோம் ஏழையராகி இனி மண்ணில் துஞ்சோம்
தன்னலம் பேணி இழிதொழில் புரியோம்; தாய்த்திரு நாடெனில் இனிக்கையை விரியோம்".

கொத்தடிமைப் பட்டு சத்தற்ற வாழ்வில் நெளியும் மோழைகளுக்கும் கோழைகளுக்கும் மேற்கூறியவாறு பக்குவமாக நாட்டுக் கடமையை உணர்த்துகிறான் பாரதி.

"பாரதமாதா" - என்ற பாட்டில் சரித்திர, இதிகாச, புராண, காவிய நாயகர்களின் கொள்கை செய்கைகளை பாரதமாதாவின் குணச் சித்திரங்களாக, எழில் நடப்புகளாக ஓவியம் தீட்டுகிறான் பாரதி. திருவாசகப் பள்ளியெழுச்சி, திவ்யப் பிரபந்தப் பள்ளியெழுச்சி கேட்ட நாட்டில், பாரதமாதா பள்ளியெழுச்சியும் கேட்க அருளினான் கவி வள்ளல் பாரதி.

பாரத சமுதாயம்:

தமிழகச் சான்றோர்கள், பாரத நாட்டு முனிவர்கள், மேலை நாட்டு நவீன அரசியல், சமுதாயப் புலவர்கள் இவர்களின் சமுதாயக் கண்ணொட்டம் என்ன என்பதை பாரதி நன்கறிந்தவன். நம் நாட்டுப் பண்புக்குப் பங்கம் வராமல் புத்தம் புதிய கருத்துக்களின் தேவையையும், ஊதியத்தையும் புறக்கணிக்காமல், இன்றைய நமது சமுதாயத்தின் பிரத்யட்ச சூழ்நிலையைத் தெளிவாகக் கணக்கிலெடுத்து உலகில், பாரத நாட்டில் நமது சமுதாயம் எப்படி இருக்க வேண்டும் என்று வரையறுத்துக் காட்டிய தமிழகத்தின் தலைசிறந்த தீர்க்கதரிசி பாரதி.

பாரத ஜனங்களின் தற்கால நிலைமை" என்ற தலைப்பில் வெளியான பாடல் நொண்டிச் சிந்து மெட்டில் அமைக்கப்பட்டு பிரபலமான பாட்டு. அதன் முழு வடிவத்தையும் படித்துப் பாருங்கள். அதன் முதல் சில வரிகளை மட்டும் உங்கள் ஞாபகத்துக்காக.

"நெஞ்சு பொறுக்கு திலையே – இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்
அஞ்சி யஞ்சிச் சாவார் – இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே;
வஞ்சனைப் பேய்கள் என்பார் – இந்த மரத்தில் என்பார்; அந்தக் குளத்தில் என்பார்;
துஞ்சுவது முகட்டில் என்பார் – மிகத் துயர்ப்படு வார் எண்ணிப் பயப்படுவார்."

"பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே"

இந்த இலக்கண சூத்திரத்தை உறுதியாகக் கடைப்பிடித்தவன் பாரதி. "போகின்ற பாரதத்தில்" இன்னின்ன பண்புகள் வேரோடும், வேரடி மண்ணோடும் ஒழிய வேண்டும் என்கிறான். "நிகழ்கின்ற பாரதத்தில்" இன்னின்ன பண்புகள் நம்மிடம் மலர்ந்து மணம் வீச வேண்டும் என்கிறான். இதைப் புதிய சமுதாயத் தெளிவோடும் உறுதியாகக் கூறுகிறான்.

பாரத சமுதாயப் பாட்டு - பாரதி பாடிய இறுதிப்பாட்டு. இங்கு பாரத சமுதாயத்தை உலகுக்கொரு புதிய சமுதாயமாக - தனது லட்சிய சமுதாயமாகக் காண்கிறான். இந்தச் சமுதாயத்தில்தான் எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓர் இனம், எல்லோரும் ஓர் நிறை, எல்லோரும் ஓர் விலை - ஆன சமுதாயத்தை மக்களே - உண்மையில் = மன்னரான சமுதாயத்தைக் காண்கிறான். மனிதன் மனிதனான சமுதாயத்தை, மனிதன் அமரநிலை எய்திய சமுதாயத்தைக் காண்கிறான்.

சுதந்திரமும் விடுதலையும்:

விடுதலை மகாகவியான பாரதியின் காட்சியில் பட்ட சுதந்திரம் மிகப் பெரியது. அது "ஆரமுது"; புளித்த கள்ளல்ல. அது "விண்ணில் இரவி"; மின்மினி அல்ல; "கண்ணிலும் இனியது அந்தச் சுதந்திரம்". பாரதி கருத்தில் இந்தச் சுதந்திரம் "கண்ணீரும் செந்நீரும்" வார்த்து வளர்க்கப்பட்டது. படுவதேயன்றி, "தண்ணீர் விட்டு" வளர்க்கப் படுவதல்ல. ஆகவே இதை வீர சுதந்திரம் என்று வீறுகொண்டு பாடுகிறான்.

"மானிடராதல் அரிது", "பிறந்தவர் யாவரும் இறப்பர்" இந்த உறுதி கொண்டவர்களுக்குக் "கண்ணினும் இனியது சுதந்திரம்". இந்த உண்மைகளை ஆணி அடிப்பது போன்று நிலை நிறுத்திக் கொண்டு

"மண்ணி லின்பங்களை விரும்பி சுதந்திரத்தின் மாண்பினை இழப்பாரோ?
கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால் கைகொட்டிச் சிரியாரோ?"

என்று நம்மை உறுத்து நோக்கி, கணீர்க் குரலில் கேட்கிறான். சுதந்திரத்தைக் கத்தரிக்காய், வாழைக்காய் மாதிரி விற்பது அடிமடத்தனம் என்று இடித்துச் சொல்கிறான் நமக்கு.பாரதி "சுதந்திர தேவிக்கு வணக்கம்" செலுத்தும் பாணி, ஈடும் எடுப்புமற்ற தனிப்பாணி. கோடானு கோடி விறல் வீரர்களைப் பாதகாணிக்கை செலுத்தி

"சுதந்திர தேவி! நின்னைத் தொழுதிடல் மறக்கிலேனே"

என்று மெய் மறந்து வணங்குகிறான். சுதந்திரம் இல்லாதவன் "அணிகள்வேய் பிணம்" (அலங்காரம் செய்யப்பட்ட பிரேதம்) என்ற பாரதி கூற்றைவிட அடிமைத்தனத்தை இகழவும் முடியாது. சுதந்திரத்தைப் புகழவும் முடியாது. சுதந்திரம் இல்லாத நாட்டில்

"ஆவியங்குண்டோ? செம்மை அறிவுண்டோ? ஆக்கமுண்டோ?"

என்று உலகு அதிர வினவுகிறான். அடிமை நாட்டில் காவிய நூல்களும் ஞானக் கலைகளும் விளையாது என்கிறான். விடுதலை விழையாத, சுதந்திரத்தைப் பரிபாலிக்காத மக்களைப் "பாவிகள்" என்று சபிக்கிறான். "வீர சுதந்திரம்" "சுதந்திர தேவியின் வணக்கம்" ஆகிய பாடல்கள் உலக சுதந்திர இலக்கியத்தில் மட்டுமல்ல, உயர்தரத் தமிழ் இலக்கியத்திலும் தெவிட்டாத ஆரமுதத் துண்டுகள். "சுதந்திரப் பள்ளு" என்ற பாட்டு, "பாரதி - மக்கள் கவி" என்ற மதிப்பீட்டுக்கு மணி மகுடம் சூட்டுகிறது. சுதந்திரம் "பால் பிடிக்கும்" காலத்திலேயே, "ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோ"மென்று அறுவடை விழாக் கொண்டாடுகிறானே. எதிர்காலத்தில் ஊடுருவிச் செல்லும் அவனுடைய "நுண்மாண் நுழைபுலம்" என்னே!.

*"நாமிருக்கும் நாடு நமதென்பதறிந்தோம் - இது
நமக்கே உரிமையாம் என்பதறிந்தோம்"

என்ற மக்கள் ஜனநாயகம் தழைப்பதையும் பாரதி பார்க்கிறான். சுதந்திரத்தின் சரியான திசையைச் செம்மையாகப் பார்க்கிறான்.

தீர்க்க தரிசனத்தாலும் உணர்ச்சி வேகத்தாலும் எதிர்காலத்தை இறந்த காலமாக்கி, கோடானு கோடி உழவர்களாக நின்று ஆனந்த சுதந்திரப் பள்ளுப் பாடுகிறான். "விடுதலை"ப் பாட்டில் "பறையருக்கும் இங்கு தீயர் புலையருக்கும் விடுதலை", ஏழைக்கும் அடிமைக்கும் மாதர்க்கும் விடுதலை. "இழிவுகொண்ட மனிதர் என்பர் இந்தியாவில் இல்லை" "ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக வாழ்வம் இந்த நாட்டிலே". இந்த ஜனநாயக சகாப்தத்தில் இந்த நூற்றாண்டில் ஒரு பேராற்றல் பெரும் புலவன், எளிமையாக இனிமையாகத் தமிழில் பாடினானே. அது தமிழும், தமிழ் மக்களும் செய்த தவப்பயந்தான். உலகில் எந்த மொழிக்கும் இந்தப் பேறு கிடைக்கவில்லை.


அமரர் ஜீவா அவர்கள் "தாமரை" அக்டோபர் 1979 இதழில் பாரதியைப் பற்றி எழுதியுள்ள குறிப்பு நாம் படித்து இன்புற வேண்டிய செய்தி. அது இதோ:--

"கம்பனைப் போன்றுதான் பாரதியும் இயற்கை -- செயற்கைப் பெரும் புலவன். பாரதி பன்மொழிப் புலவன்;. தமிழ், ஆங்கில, ஆரிய மொழிகளின் சிறந்த நூல்களின் சிறந்த கூறுகளையெல்லாம் தெளிவுறக் கற்றவன் அவன். செய்யுட் பாக்களை அனாயாசமாக பல்வேறு யாப்புகளில் பாடவல்லவன் என்பதைக் காட்டியதோடு, சர்வ சாதாரணமான சிந்து வகைகளை எடுத்து, தனது எண்ணங்களுக்கு ஏற்ப, அவற்றில் பல்வேறு புதிய வண்ணங்களைத் தீட்டி, ஒரு புதிய பரம்பரையையே தமிழ்மொழியில் நிறுவிவிட்டான்".

பாரதியின் பாடல்களால் நாம் அடைய வேண்டிய பயன்கள் காந்தியத்தில் அடங்கியுள்ள தெய்வ நம்பிக்கையும், உயிர்களிடத்தில் அன்பும், சாந்தமும், சத்தியமும், அவற்றை வாழ்க்கையில் மேற்கொள்ள -- வயிரமுடைய நெஞ்சும் ஆகிய இவைகள் தாம். சுருங்கச் சொன்னால் காந்தியம்தான் மக்களுக்குச் சன்மார்க்கம் என்பதே பாரதி கடைசியாகப் பாடிச் சொன்ன படிப்பினையாகும். அதைப் பின்பற்றி வாழ்வோம்.

'வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர்; வாழிய பாரத மணித்திரு நாடு!'
                                            பாரதி புகழ் வாழ்க!

ஸ்ரீவீரமாசக்தி பத்ரகாளியம்மன் துதி

                                                                   
                                                                              உ
                          பாபநாசம் தாலுகா, அரையபுரம் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும்
                       அருள்மிகு ஸ்ரீவீரமாசக்தி பத்ரகாளியம்மன் துதி
                                                          ==========
          ஆக்கம்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம்,  பாரதி இயக்கம், திருவையாறு.

                                          காப்பு
புன்னைநல்லூர் மாரியம்மா, சமயபுரத் தாயே!
சென்னையின் வேற்காட்டில் வாழுகின்ற மாரி!
கன்யாகுமரி வாழ் கன்னித்தாய் குமரி
பன்னாரி அம்மா, பகவதியம்மன் தாயே,
ஊர்மக்கள் போற்றுகின்ற உக்ரகாளி அம்மா
உறையூரை ஆளுகின்ற வெக்காளி அம்மா
கருவூரில் குடிகொண்ட மாரியம்மா தாயே
அரையபுரம் வாழ்கின்ற அருள்சக்தி காளி!
நின்னைச் சரணடைந்த அடியார்கள் எல்லாம்
பணிந்து நிற்கின்றார், அருள் செய்வாயம்மா!

                                           பாயிரம்
அண்டமெலாம் படைத்தவளை அன்பருள்ளம் வாழ்பவளை
எண்ணமெலாம் உணர்ந்தவளை இரங்கியருள் புரிபவளை
கண்ணாரக் கண்டு உளமார வணங்கி மனதாரப் புகழ்ந்து
தொண்டடிமை செய்து வணங்குவோம் பணிந்து.

                                               நூல்

நீயே சரணமென கூவி அழைத்திடுவோம்
தாயே எமக்குறுதி தந்து காத்திடுவாய்
வாயால் தாய்புகழை அனவரதம் பேசிடுவோம்
ஓயாமல் உனதருளை அள்ளித் தந்திடுவாய்.                                  1.

காளீ! வீரமாசக்தி எங்கள் பத்ரகாளியம்மா
நாளும் நின்மலர்த்தாள் நாடிப் பணிகின்றோம்
தாளில் வணங்கி அபயம் வேண்டுகின்றோம்
ஒளிகண்டு மலர்கின்ற மலர்போல அருள்புரிவாய்.                    2.

எண்ணுகின்ற காரியங்கள் இனிதே முடித்திடுவாய்
பண்ணுகின்ற பணிகளிலே வெற்றியைத் தந்திடுவாய்
துணையாக அம்மையே எப்போதும் இருந்திடுவாய்
நண்ணுகின்ற செயலனைத்தும் நின்னுடை செயலன்றோ?     3.

எண்ணிலா நன்மைகளைக் கணக்கின்றி தந்துவிடு
விண்ணவர் போலநாங்கள் வாழ்ந்திட வரம்தந்து
மண்ணிலே ஈடெவரும் இல்லையெனும் நிலையடைந்து
வண்மையும் வளமையும் வழங்கி அருள்செய்வாய்.                  4.

தானமும் தவமும் கல்வியும் தான்தருவாய்
வானத்துத் தாரகைபோல் வாழ்க்கையைத் தந்திடுவாய்
மானத்தொடு வீரமும் மாண்பும் மிகத்தந்து
ஞானக் குழந்தைகளாய் வாழும்வகை செய்திடுவாய்.               5.

பூதங்கள் ஐந்தும் ஒன்றாய் சேர்ந்ததுபோல்
போதமாகி நின்றாய், பொறிகளைநீ கடந்தாய்
தீதனைத்தும் நீக்கி தெய்வஅருள் தருவாய்
வேதங்கள் உன்னுருவில் என்றும் நிலைத்திருக்கும்.              6.

காலத்தைக் கடந்தவள் நீ, கடிதினில் வந்திடுவாய்
மாலவனின் தங்கையே எம் மனதினுள் புகுந்திடுவாய்
எல்லாத் திசைகளிலும் அண்டங்கள் அனைத்தினிலும்
செல்லும் திக்கனைத்தும் நின்புகழே நிலைத்திருக்கும்.           7.

நீயே சரணமென நித்தநித்தம் கூவிடுவோம்
தாயே எங்களுக்கு நெஞ்சினில் உரம் தருவாய்
ஓயோம் ஒருபொழுதும் நின்புகழைப் பேசாமல்
பேய்மனம் கொண்டோர்க்கும் நற்கதியைத் தந்திடுவாய்.       8.

சித்தத்தில் துணிவுகொண்டு சிந்தையில் அன்புகொண்டு
எத்திசையும் புகழ்மணக்க சீர்கொண்டு செல்வம்சேர
இத்தரையில் வாழ்ந்திருக்கும் இனிதான நாட்களெல்லாம்
புத்தியில் நினைவைத்து புகழோடு வாழ்ந்திருப்போம்             . 9.

மையுற்ற கண்களும் பொன்னணி கலன்களும்
செய்கின்ற தீமைகளை உலகுக்குக் காட்டி
பொய்யுறு வாழ்க்கையை அண்டாமல் ஓட்டி
ஐயுறவின்றியே வாழ்வளிப்பாய் தாயே!                                       10.

கோதுடையார் உறவில் மயங்கியே களித்து
காதலும் இன்பமும் கணந்தோறும் வளர்த்து
எதுவும் இவ்வுலகில் இயல்பென நினைத்து
பூதலத்து வாழ்வின் இன்பத்தில் திளைத்து                                  11.

இன்பமும் துன்பமும் உணர்விடை வைத்து
முன்னும் பின்னும் துயர்களைக் கொடுத்து
துன்பம் நீங்கிட நினதடி பணிந்து
அன்பில் ஒன்றி நின்னையே சார்ந்தோம்.                                    12.

தீது நேரிடினும் அச்சம் எமக்கில்லை
எதுவும் நடப்பதிங்கு நின்றன் செயலாலன்றோ
ஆதரித்து இங்கு அருள்புரிய வேண்டுகின்றோம்
போத நல்லருளை எப்போதும் தருவாயே!                                 13.

வேத மந்திரங்கள் எண்திசையும் ஒலிக்க
மாதவன் கண்ணனின் குழலிசையில் மிதக்க
சாதகப் பறவைகள் விண்ணில் பறக்க
ஓதுவோம் நின்புகழ் நாவென்றும் இனிக்க.                                14.

காவி அணிந்திட்ட துறவுநிலை வேண்டா
பாவித்துத் தலைமேல் கற்றை முடிவேண்டா
ஆவிக்கு உற்றதோர் கருணையொன்றே போதும்
பாவிகள் எம்மைக் கரையில் சேர்த்திடு.                                      15.

தவமென்று பிரிதொரு சாதனையும் வேண்டா
சிவத்தை மனத்திலேற்றி சிந்தையை நேராக்கி
தவத்துக்கு அன்னையே நின்னையே துணைகொண்டு
பவமே துலங்கிட பேரருள் தருவாய்.                                            16.

சக்தியென்ற நின்பெயரை நித்தநித்தம் ஓதுவதால்
சக்திதந்து எம்மனத்தில் உறுதிபட நின்றிருப்பாய்
சக்தியின் சந்நிதியில் மனமுருக வேண்டிநின்றால்
சக்திநீ பராசக்தி என்றும் துணையிருப்பாய்.                              17.

நலம்புரியும் சக்தீ, அரையபுரம் காளீ
வலம்வந்தோம் நின்னை சரணடைந்தோம் நின்னை
விலக்கிடுவாய் மக்கள் துன்பங்கள் எல்லாம்
புலப்படுவாய் கண்ணில் பாமரராம் எமக்கு.                              18.

உயிரோடு உணர்வையும் ஓங்கி வளர்த்திடுவாய்
பயிர்களை வளர்ப்பதுபோல் பத்ரகாளீ நீயும்
வயிரம்போல் உடலையும், வண்ணமுறு மனத்தையும்
பாவித்து நலம்புரிவாய் அன்னையே தினமும்.                        19.

உலகினைக் காத்திட ஆதவனாய்த் திரிவாய்
மலையிலும் மண்ணிலும் மாரியாய் உதிர்வாய்
நலங்கள் அனைத்தையும் நல்கிடும் காளீ
குலத்தொடு மாண்பையும் கொடுத்திடு தாயே.                        20.

அன்புறு சோதியாய் அருள்தரும் காளியாய்
இன்பமே என்றும் இருந்திடச் செய்வாய்
பன்பலிநீக்கி பயனுறு செயல்கள் ஊக்கி
மின்படு சக்தியாய்நீ மாநிலம்தனைக் காப்பாய்.                      21.

நயம்படு செயல்களை செய்துனை வணங்கி
தயங்கிடா மனமும் திடங்கொண்ட பணிவும்
தயவுடன் நின்னை பணிந்தெழும் எம்மை
வியப்புறு வண்ணம் காத்திடல் நின்கடன்.                                22.

நினைக்கும் பொழுதினில் நின்னுரு தோன்றவும்
ஊனினை உருக்கிநின் மாமலரடி பணியவும்
தானெனும் அகந்தையை அகழ்ந்தே எடுக்கவும்
தேனென ஒழுகும்நின் திருவருள் அருந்துவோம்.                 23.

விட்டில்பூச்சிகள் விளக்கிடை வீழ்தல் போல்
மட்டில் கேடுகள் விளைக்கும் செயல்களை
கூட்டியெம் வாழ்க்கையை துயர் கடலாக்கி
வாட்டும் நிலைமையை மாற்றிட விழைகிறோம்.                24.

வல்லவர் வெல்லவும் வண்மைகள் பெருகவும்
நல்லவராக நாநிலத்து மக்கள் வாழவும்
வல்லமை மிக்க வீரமாசக்தி பத்ரகாளீ
நல்லருள் புரிவாய், நலங்களை அருள்வாய்.                          25.

                                                   நூற்பயன்

நலம் தருவாள், குணம் தருவாள், நீண்ட வாழ்வருள்வாள்!
பலம் தருவாள், கல்வியும் செல்வமும் கணக்கின்றி தான்தருவாள்!
நல்லோர் துணை தருவாள், கருணை மழை பொழிவாள்!
வல்லமைமிக்க அரையபுரம் காளி வீரமாசக்தியை வணங்குவோர்க்கே!                                                       உ
பாபநாசம் தாலுகா அரையபுரம் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும்
அருள்மிகு ஸ்ரீ வீரமாசக்தி பத்ரகாளி அம்மன் அஷ்டோத்ரம்

                                                        ---
1. ஓம் ஸ்ரீ வீரமாசக்தி பத்ரகாளி அம்மனே போற்றி
2. "        மாசற்ற கருணையுடன் காத்திடும் தேவி போற்றி
3. "        நலங்களை அள்ளித்தரும் தாயினும் இனியாய் போற்றி
4. "       தூயவர் துதிக்கின்ற சக்தி அன்னையே போற்றி
5. "       தத்துவம் விளக்கிடும் காவல் தெய்வமே போற்றி
6. "       உலகம் வணங்கிடும் பரப்பிரம்ம சொரூபமே போற்றி
7. "       பாவங்களை நீக்கிடும் பரமேச்வரியே போற்றி
8. "       புண்ணியம் நல்கிடும் உலக நாயகியே போற்றி
9. "       காத்திடும் கடவுளாய் விளங்குவாய் போற்றி
10. "     அருவமே உருவமாய்க் கொண்டவா போற்றி
11. "     துக்க மோக நிவர்த்திப்பாள் சீரடி போற்றி
12. "     வீடுபேறு நல்கிடும் வீர சொரூபியே போற்றி
13. "     பிரம்மத்தை உணர்த்திடும் பரம ரூபிணீ போற்றி
14. "     பிரம்ம வித்தை பயிற்றிடும் வித்தகி போற்றி
15. "     ஏகாந்த நிலை தந்து ஆனந்தம் அருள்வாய் போற்றி
16. "     பிறவிப் பிணிக்கு நல்ல மருந்தானாய் போற்றி
17. "     அச்சத்தை அழிக்கும் வீரமாகாளியே போற்றி
18. "     வேதத்தின் தாயாய் விளங்கிடும் தேவே போற்றி
19. "      எல்லையொன்றில்லா விசுவரூபியே போற்றி
20. "     தத்துவ ஞானப் பெருங்கடலே போற்றி
21. "     கோகுலக் கண்ணனின் சோதரி போற்றி
22. "     தூய்மையின் வடிவாய்த் துலங்குவாய் போற்றி
23. "     சம்சாரப் பெருங்கடலைத் தாண்டவைப்பாய் போற்றி
24. "     சாத்திரங்கள் அனைத்தையும் படைத்தாய் போற்றி
25. "     தாயாய் தோன்றி அருள் புரிவாய் போற்றி
26. "     புண்ணிய தீர்த்தங்கள்  ஆனாய் போற்றி
27. "     நீயே அதுவானாய்" எனும் மந்திரமானாய் போற்றி
28. "     சாந்தியை அருளும் சந்திரோதயமே போற்றி
29. "     ஆனந்த நிலையை அருளிச் செய்வாய் போற்றி
30. "     ஞானங்கள் அனைத்தையும் பொழிந்திடுவாய் போற்றி
31. "     உள்ளத்து அழுக்கையெல்லாம் நீக்கிடுவாய் போற்றி
32. "     உலகுக்குத் தர்மத்தை எடுத்துரைத்தாய் போற்றி
33. "     உலகத்தை உய்விக்கும் உண்மையே  போற்றி
34. "     உயிர்கள அடியில் பணிந்திடும் தேவே போற்றி
35. "     உலகத்தார் பூசிக்கும் பரதேவதையே போற்றி
36. "     எழிலும் ஏற்றமும் உடையவளே போற்றி
37. "     மாந்தர் பணிந்திடும் மகாசக்தி போற்றி
38. "     மங்களம் நல்கிடும் மத்தகஜமே போற்றி
39. "     சித்தாந்தக் கூட்டம் பணியும் ஜோதியே போற்றி
40. "     சஞ்சலங்கள் நீக்கிடும் ஜகஜ்ஜனனீ போற்றி
41. "     விசுவரூபியாய் விளங்கிடும் தாயே போற்றி
42. "     அகிலம் வணங்கிடும் அன்னையே போற்றி
43. "     முக்குணம் கடந்த முக்கண்ணியே போற்றி
44. "      சஞ்சலம் தீர்த்திடும் தயாபரி போற்றி
45. "     குணங்கள் உயர்ந்திட வரமருள்வாய் போற்றி
46. "      நல்வழி காட்டிடும் குருவானாய் போற்றி
47. "      பந்த பாசங்கள் நீக்கிடும் பவமே போற்றி
48. "      மகிழ்ச்சியைப் பொழிந்திடும் லோகமாதா போற்றி
49. "      சகல சாஸ்திர ஞான மூலமே போற்றி
50. "      அட்சர ஆற்றல் மிக்காய் போற்றி
51. "      சொல்லில் அடங்கா பெருமையே போற்றி
52. "      சூட்சுமப் பொருளின் உருவமே போற்றி
53. "      குறைவே இல்லாத சாச்வத பொருளே போற்றி
54. "      நித்திய நலங்களைத் தருவாய் போற்றி
55. "      சொல்லினில் அடங்கா சொரூபியே போற்றி
56. "      ஞானியர் மதியில் ஒளிர்வாய் போற்றி
57. "      சொல்லின் பொருளாய் அமைந்தாய் போற்றி
58. "      அமைதியும் அடக்கமும் அளிப்பாய் போற்றி
59. "      புதிய சொற்களில்  பொருளானாய்  போற்றி
60. "      புவனத்தின் தாயாய் விளங்கினாய் போற்றி
61. "      புவனம் போற்றிடும் புனிதமே போற்றி
62. "      அழிவற்ற பொருளாய் விளங்குவாய் போற்றி
63. "      விருப்பு வெறுப்பற்ற‌ நித்திலமே போற்றி
64. "      அறத்தை  நிலைபெறச் செய்தாய் போற்றி
65. "      தெய்வ குணங்களில் உயர்ந்தாய் போற்றி
66. "       புலன்களை அடக்கிய சக்தியே போற்றி
67. "      யோகங்கள் அனைத்தையும் அருள்வாய் போற்றி
68. "      பாதை மாறாமல் காத்திடுவாய் போற்றி
69. "      நலிந்தவரைப் பேணும் நம்பிக்கையே போற்றி
70. "      சமத்துவம் நிலைத்திட அருள்வாய் போற்றி
71. "      பேதங்கள் நீக்கி எமைக் காத்தாய் போற்றி
72. "      வீழ்ந்தோர் மேம்பட மனம் வைத்தாய் போற்றி
73. "      மாயையை மாயையால் மறைத்தாய்  போற்றி
74. "      சத்தியத்தின் உருவமாய் நின்றாய் போற்றி
75. "      ஆத்ம பேதத்தை அறிய வைத்தாய் போற்றி
76. "      ஞானமே உயர்வென்று உணரவைத்தாய் போற்றி
77. "      தியாகமே உருவான சக்தியே  போற்றி
78. "      சேதமில்லா சக்தியாய் விளங்குவாய் போற்றி
79. "      வீடுபேறு அளிக்கும் சக்தியே போற்றி
80. "      பயன் நோக்காப் பணியைக் கற்பித்தாய் போற்றி
81. "      சம்சாரக் கடலினுள் படகானாய் போற்றி
82. "      பந்தங்களை நீக்கிய பத்ரகாளி போற்றி
83. "      அண்டங்கள் கடந்த அருளுருவே போற்றி
84. "      பிறவிப் பெருங்கடல் நீந்தவைத்தாய் போற்றி
85. "      ஆன்மீக வெளியில் ஒளியானாய் போற்றி
86. "      சேதமில்லா அண்ட ரூபிணியே போற்றி
87. "      களங்க மொன்றுமிலா முழுநிலவே போற்றி
88. "      சாந்தமும் தெளிவும் அருள்வாய் போற்றி
89. "      தேஜசும் தீரமும் தந்திடுவாய் போற்றி
90. "      சுபமெனும் சொல்லின்  போருளே போற்றி
91. "      தமோ குணம் நீக்கி ஒளி தருவாய் போற்றி
92. "      உபநிடத்தின் சூட்சுமத்தை உணர்த்துவாய் போற்றி
93. "      ஆன்ம யோகத்தில் சுடர்விடுவாள் போற்றி
94. "      ஞானாமிர்தத்தை மழையாய் பொழிவாள் போற்றி
95. "      காளிதாசனுக்குக் கவித்துவமாய் அமைந்தாய் போற்றி
96. "      காளமேகப் புலவனுக்குக் கவிதந்தாய் போற்றி
97. "      பக்தியெனும் பசுவிடம் அறப்பால் கறந்தாய் போற்றி
98. "      உடலெங்கும் லட்சுமியாய் விளங்கிடும் பசுவே போற்றி
99. "      விருப்பத்தை நிறைவேற்றும் காமதேனுவே போற்றி
100. "     சுகந்த மலரணிந்த மாதேவி போற்றி போற்றி
101. "     அறியாமை இருளை  அகற்றினாய் போற்றி
102. "     முத்தொழிலை முழுத்தொழிலாய் செய்வாய் போற்றி
103. "     வழிதவறியோர்க்கு வழிகாட்டும் நெறியானாய் போற்றி
104. "     தொல்லையைத் துரத்திடும் துர்கையே போற்றி
105. "     பூரண பிரம்மத்தை உணர்த்தினாய் போற்றி
106. "     களைத்தவர் நம்பும் காளியே போற்றி
107. "     முக்காலம் உணர்ந்த  கடவுளே போற்றி
108. "     ஜகன்மாதா அரையபுரம் காளி, உலகமாதா போற்றி போற்றி

                 அரையபுரம் வீரமாசக்தி பத்ரகாளி அஷ்டோத்ரம் நிறைவு.


ஆக்கம்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம்
                   28/13, எல்.ஐ.சி.காலனி 5ஆம் தெரு, மருத்துவக் கல்லூரி சாலை,
                                    தஞ்சாவூர்.7
# 9486741885. e.mail: privarsh@gmail.com
               

தீபாவளி வாழ்த்துக்கள்

அனைவருக்கும் எனது உளப்பூர்வமான தீபாவளி வாழ்த்துக்கள். தீமைகள் அழிந்து நல்லவை மலரும் நாள் இது. அனைவரும் எல்லா நலன்களும் பெற்று மகிழ்வோடு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

சென்னை நகரில் நானா சாஹேப்.

நானா சாஹேப்

நானா சாஹேப் நேபாளத்துக்குப் போய்விட்டார் என்றுதான் வரலாற்றாசிரியர்கள் சொன்னார் களே தவிர அதற்குப் பின் அவர் எங்கே போனார், என்ன ஆனார் என்பதையெல்லாம் சொல்லாமல், அங்கேயே இருந்து அவர் இறந்து போயிருக்கவேண்டு மென்று முடித்துவிட்டனர். ஆனால் நமக்குத் தெரியவரும் ஒரு செய்தியை இங்கு அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.

மகாகவி பாரதி சென்னையில் "சுதேசமித்திரன்" பத்திரிகையில் பணியாற்றிக் கொண்டிருந்த காலம். அவருக்கு பண்டிட் எஸ்.நாராயண ஐயங்கார் என்பவர் நண்பர். பாரதி காசியில் இருக்கும்போதே இந்த நாராயண ஐயங்காருடன் அங்கு தொடர்பு ஏற்பட்டிருந்தது. நாராயண ஐயங்கார் தமிழ், சமஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளிலும் நல்ல புலமை வாய்ந்தவர். ஆயுர்வேத சாஸ்திரம் நன்கு கற்றுணர்ந்தவர். தமிழ்நாட்டிலுள்ள பல ஆயுர்வேத வைத்திய சாஸ்திர நிபுணர்களும் இவருடைய சீடர்களாக இருந்தவர்கள். இந்த நாராயண ஐயங்கார் மகாகவி பாரதியாருக்கும் தனக்குமிருந்த பழக்கம் பற்றி விளக்கமாக ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அந்த கட்டுரை "தினமணி சுடர்" 8-9-1956, 16-9-1956 ஆகிய இதழ்களில் பாரதி ஆய்வாளர் திரு ரா.அ.பத்மநாபன் அவர்களால் வெளியிடப்பட்டது. அந்தக் கட்டுரையில் நாராயண ஐயங்கார் சொல்லும் இந்த செய்தி நானா சாஹேப் சம்பந்தப்பட்டது என்பதால் இங்கு அந்த பகுதியைத் தருகிறேன்.

பண்டிட் திரு நாராயண ஐயங்காரின் கட்டுரையின் பகுதி:

"அந்தக் காலத்தில் ஒரு நாள் சென்னை 'தி ஹிந்து' பத்திரிகையில் ஒரு விளம்பரத்தைப் படித்தேன். மைலாப்பூரில் ஒரு குறிப்பிட்ட வீட்டில் ஒரு கனவான் தங்கியிருப்பதாகவும், அவர் சோப்பு, மெழுகுவத்தி போன்றவற்றை செய்யும் முறைகளை கற்றுக்கொடுக்கும் கைத்தொழில் நிபுணர் என்றும், விருப்பமுள்ளவர்கள் செலவின்றி அவரிடம் அத்தொழில்களைக் கற்றுத் தெரிந்து கொள்ளலாம் என்றும் அந்த விளம்பரத்தில் காணப்பட்டது. 

என் தகப்பனார் இந்த விளம்பரத்தைப் பார்த்துவிட்டு எனக்குத் தகவல் தராமலே சென்னைக்கு வந்து, விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்த விலாசத்துக்குச் சென்று குறிப்பிட்ட அந்த நபரை சந்தித்து ஏதாவது கைத்தொழிலொன்றை கற்றுக்கொள்வது பற்றி விசாரிக்கச் சொன்னார்.

அப்போது நான் முத்தியாலுப்பேட்டை ஹைஸ்கூலுக்குச் சமீபத்தில் வசித்து வந்தேன். மைலாப்பூர் சென்று அந்த விலாசத்தைக் கண்டுபிடித்து குறிப்பிட்ட அந்த நபரிடம் சென்று விசாரித்துவிட்டு வரலாம் என்று அந்த இடத்தைத் தேடிப்போனேன். அந்த வீட்டின் எண் இப்போது எனக்கு நினைவில் இல்லை. "ஹிந்து" பத்திரிகையில் வந்த விளம்பரத்தைப் பார்த்தால் தெரியலாம். அந்த வீட்டில் சென்று விசாரித்ததில், அங்கு தமிழ் தெரியாத ஒருவர் வந்து நான் என்ன காரியமாக வந்திருக்கிறேன் என்று கேட்டார். நான் பத்திரிகையில் கண்டபடி ஏதேனும் கைத்தொழில் கற்றுக்கொள்ளலாமென்று வந்தேன் என்று சொன்னேன். அதற்கு அவர் அந்த விளம்பரம் கொடுத்த கனவான் மாலை ஏழு மணிக்குத்தான் வருவார் என்று கூறினார். அவ்விதமே நான் அன்று மாலை என் தகப்பனாரையும் அழைத்துக் கொண்டு ஏழு மணிக்கெல்லாம் அவர் வீட்டிற்குச் சென்றேன்.

அந்த கனவான் வசித்து வந்த வீட்டின் வீதி திண்ணை மிக குறுகலானது. கடப்பா கல்லல் கட்டப்பட்டது. நான் காலையில் சந்தித்த மனிதர் வந்து கதவைத் திறந்து பார்த்துவிட்டு, அந்தத் திண்ணையில் உட்காரச் சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டார். சிறிது நேரம் கழிந்தபின் அவர் உள்ளேயிருந்து ஒரு வயோதிகரை அழைத்து வந்தார். வீட்டினுள்ளிருந்து வெளியே வரும்போது அந்த முதியவர் நிதானமாகத்தான் வந்தார். தலையில் மராத்திய பாணியில் பெரிய முண்டாசு கட்டியிருந்தார். சாதாரணமான நிஜாரும், வெள்ளை சட்டையும் அணிந்திருந்தார். கால்களில் சடா போட்டிருந்தார். ('சடா' என்பது என்னவென்று தெரியவில்லை காலணியா அல்லது காப்பு போன்ற ஏதாவது அணிகலனா). எங்கள் பக்கத்திலேயே ஒரு திண்ணையில் அவரும் உட்கார்ந்தார். தெரு வெளிச்சம் தவிர வேறு வெளிச்சம் அங்கு இல்லை. சரீரம் மெலிந்து சுமாரான உயரத்துடன் காணப்பட்டார். அந்த இருட்டு நேரத்தில் வேறொன்றும் தெளிவாகத் தெரியவில்லை. அவர் ஆங்கிலத்தில்தான் பேசினார். உரத்த குரலில் பேசியிருக்கலாம். ஆனால் அவர் மெல்லிய ரகசியமான குரலிலேயே பேசினார். வெகு நிதானமாகப் பேசினார். சோப்பு செய்வது, மெழுகுவத்தி செய்வது போன்ற எதையோதான் அவர் பேசினார். ஆனால் அவர் பேச்சில் திட்டவட்டமாக எதுவும் இல்லை. அவர் பேசிய விதத்திலிருந்து அந்த கைத்தொழில் பற்றி எதுவும் தெரிந்தவரா அல்லது கற்றுக் கொடுக்கத்தான் தெரியுமா என்பது தெரியவில்லை. ஒருக்கால் விளம்பரம் செய்து மக்களை ஏமாற்றப் பார்க்கும் யாரோ ஒரு வடதேசத்தவர் என்று கருதி, இது ஒன்றும் வேண்டாம் என்று வீட்டுக்குத் திரும்பிவிட்டோம்.

அதற்குப் பிறகு பாரதியாரை நான் சந்தித்த போது இந்த விளம்பர ஆசாமியைப் பற்றிச் சொன்னேன். அதைக் கேட்டுச் சிரித்துவிட்டு பாரதியார் சொன்னார், "என்னிடம் சொல்லாமல் ஏன் மைலாப்பூர் போனீர்? அந்த கனவான் யார் என்பது உமக்குத் தெரியுமா? அவர் சோப்பும், மெழுகுவத்தியும் கற்றுக் கொடுக்கவா இங்கு வந்திருக்கிறார்? அவருக்கு அவைகளைப் பற்றி என்ன தெரியும்? வெடிகுண்டைப் பற்றிக் கேட்டிருந்தால் அவர் விவரமாகச் சொல்லியிருப்பார்" என்றார்.

எனக்கு வியப்பாக இருந்தது. ரகசியமாக அந்தக் கனவானைப் பற்றி பாரதியாரிடம் கேட்டேன். அதற்கு பாரதியார் சொன்னார், அவர்தான் நானா சாஹேப், வடநாட்டில் நடந்த சிப்பாய் கலகத்தில் முன்னணியில் இந்தவர். சர்க்காரிடம் பிடிபடாமல் இருக்க தலைமறைவாக இருந்து வருகிறார் என்று சொன்னார். இதைக் கேட்ட பிறகு மறுபடி ஒரு முறையாவது பகலில் அவரை சந்தித்துவிட வேண்டுமென்ற விருப்பம் உண்டாகியது. பாரதியாரிடம் கேட்டேன், அவரும் என்னை அவர் இருக்குமிடத்துக்கு அழைத்துப் போவதாக வாக்களித்தார்.

இரண்டு நாட்கள் கழித்து அது பற்றி பாரதியாரிடம் ஞாபகப் படுத்தினேன். அப்போது அவர், "நானா சாஹேப் ஊரை விட்டு திடீரென்று புறப்பட்டுப் போய்விட்டதாகவும், போலீசார் தம்மை பின் தொடர்வதாக அவருக்கு மனதில் சந்தேகம் ஏற்பட்டுவிட்டதுதான் அப்படி அவர் காணாமல் போகக் காரணம் என்றும் கூறினார். பின்னர் வேறொரு சமயம் அவரை சந்திக்க ஏற்பாடு செய்கிறேன் என்றும் சொன்னார். எனக்கு மிகுந்த ஏமாற்றம் ஏற்பட்டது"

இப்படி எழுதுகிறார் பண்டிட் நாராயண ஐயங்கார். இது நடந்தது சென்னையில், பாரதி சென்னையில் வசித்த போது. நானா சாஹ்ப் தனது முதிய வயதிலும் புரட்சி இயக்கத்தில் ஈடுபட்டு இந்தியா முழுவதும் தலைமறைவாகச் சுற்றித் திரிந்திருக்கிறார் என்பது இதன்மூலம் புலனாகிறது.

1857ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8ஆம் தேதி வங்காளத்தைச் சேர்ந்த பாரக்பூரில் இந்திய சிப்பாய் மங்கள் பாண்டேயால் தொடங்கி வைக்கப்பட்ட புரட்சித் தீ, அங்கிருந்து அம்பாலாவுக்கும், அங்கிருந்து டெல்லிக்கும் பரவி, மீரட்டில் சிப்பாய்கள் ஒரு மாபெரும் புரட்சியைத் தொடங்க, அந்த மாவீரர்கள் அங்கிருந்து டெல்லிக்குச் சென்று அங்கு வெள்ளைக்காரர்களால் ஒதுக்கப்பட்டு செங்கோட்டையின் ஒரு ஓரமாக வசித்து வந்த கடைசி முகலாய மன்னரான பகதூர்ஷாவை இந்தியாவின் மன்னராகப் பிரகடனப்படுத்தினார்கள். இந்த வீரப் போராட்டத்தின் நாயகர்களாக இருந்தவர்கள், தாந்தியா தோபே, மெளல்வி அகமதுஷா, குமாரசிம்மன், ஜான்சி ராணி லக்ஷ்மிபாய், நானா சாஹேப் போன்ற மகான்களுக்கு நாம் அஞ்சலி செலுத்துவோம். இன்றைய சுதந்திரக் காற்றை நாம் சுவாசிக்கத் தங்கள் இன்னுயிரை ஈந்த அந்த பெருமக்களை என்றும் நினைவில் கொள்வோம்.