பாரதி பயிலகம் வலைப்பூ

Wednesday, November 13, 2019

மகாராஷ்டிர மாநிலத்தில் அரசியல் சதுரங்கம்.


                              
மகாராஷ்டிர மாநிலம் அதன் தொழில், வர்த்தகம் போன்றவற்றால் முக்கியத்துவம் வாய்ந்த நகரமாக இருந்ததால், அங்கு பிழைப்புக்காக பல மாநிலங்களிலிருந்தும், பற்பல மொழிகள் பேசுவோர் பிழைப்புக்காகச் சென்றடைந்தனர். குறிப்பாக தென் மாநிலங் களிலிருந்து அங்கு சென்றவர்கள் அதிகம். அதிலும், மும்பை வியாபாரிகள், முதலாளிகளாக இருந்த குஜராத்தி, சிந்தி, மார்வாரி பொன்றவர்கள் தங்கள் கணக்கு வழக்குகளைப் பார்த்துக் கொள்ள மிகுந்த நாணயமாகவும், பணியில் அதிக அக்கறையுள்ளவர்களாகவும் இருந்த இங்கிருந்து பிழைக்கப் போன தமிழ் நாட்டு மக்களுக்கு வேலை கொடுத்தனர். உடல் உழைப்புக்காக சென்று அங்கு போய் தாராவி எனும் ஒரு குப்பத்தையே உருவாக்கிய பெருமையும் நம்மவர்க்கு உண்டு. இப்படி பம்பாய் நகரம் ஒரு காஸ்மாபாலிடன் நகரமாக ஆகியிருந்த நிலையில் சுதந்திரத்துக்குப் பிறகு மராட்டியர்களில் சிலருக்கு இவர்களெல்லாம் வெளிமாநிலத்தவர், இவர்கள் தங்கள் வேலை வாய்ப்புகளுக்கு இடையூறாக இருக்கிறார்கள், ஆகையால் இவர்களை இங்கிருந்து வெளியேற்றிவிட வேண்டுமென்கிற எண்ணம் உருவானது. அப்படிப்பட்ட ஒரு இயக்கத்தை அங்கு தொடங்கியவர் ஒரு கார்ட்டூனிஸ்ட், பெயர் பால் தாக்கரே.

            யார் இந்த பால் தாக்கரே? இந்திய சுதந்திரத்தின் போது மாகாணங்கள் என்று வழங்கப்பட்டவைகளுள் பம்பாய் மாகாணமும் ஒன்று. அது 50களில் மொழி வழி மாநிலங்களாக பிரிக்கப்பட்ட பொது மகாராஷ்டிரம், குஜராத் என்று இரண்டாகப் பிரிந்தது. 1950 காலகட்டத்தில் பம்பாய் நகரம் மராட்டியர்களுக்கா, குஜராத்தியர்களுக்கா என்றவொரு போராட்டம், சென்னை ஆந்திரருக்கா தமிழருக்கா என்ற போராட்டம் போல ஒன்று அங்கு உருவானது. அப்போது பம்பாய் மராத்தியர்களுக்கே என்ற கோஷத்தோடு சம்யுக்த மகாராஷ்டிர இயக்கமொன்று போராட்டம் நடத்தியது. அதில் முக்கியமான தலைவராக இருந்தவர் எழுத்தாளராக இருந்த கேசவ் சீதாராம் தாக்கரே என்பவர், இவருடைய மகன் தான் சிவசேனா தொடங்கிய பால் தக்கரே. ஆக, இந்த குறுகிய இனம் சார்ந்த குணம் இவர் குடும்பச் சொத்தாக இருந்திருக்கிறது.

            பால் தாக்கரே பத்திரிகைகளில் கார்ட்டூன் வரைபவராக பணியாற்றி வந்தார். அவர் அந்த வேலையை உதறிவிட்டு “மார்மிக்” (Marmik) எனும் வார இதழைத் தொடங்கினார். அந்த பத்திரிகையின் கார்ட்டூன்கள் பிரபலமடையத் தொடங்கின.

            அந்த சமயத்தில் 1961இல் பத்தாண்டுகளுக்கொரு முறை நடத்தப்படும் மக்கட்தொகை கணக்கெடுப்பு நடைபெற்றது. அந்த கணக்கெடுப்பின்படி பம்பாய் நகரத்தில் மராத்தியர்கள் பெரும்பான்மையினராக இல்லை என்பது தெரிய வந்தது. இந்த நிலைமை பெரும்பாலும் இந்திய பெருநகரங்களில் ஏற்படத்தான் செய்தன. சென்னை நகரில் ஆந்திரர்கள் அதிகமா, தமிழர் அதிகமா என்ற உரசல் ஏற்பட்டபோது ஆந்திரர்கள் சென்னை நகரைத் தங்கள் தலை நகரமாக ஆக்கிக் கொள்ள போராட்டம் நடத்திய போது, தனியொரு மனிதராக சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞான கிராமணியார் தமிழகத்தின் தலைநகர் சென்னைதான், அதை தலைகொடுத்தேனும் காப்பேன் என்று போராடினார். அவர் பொராட்டத்துக்கு ராஜாஜி, மேயர் செங்கல்வராயன் உள்ளிட்ட பெரும் தலைவர்கள் ஆதரவு இருந்தது. அதுபோல பம்பாய் நகரம் மராத்தியருக்கே என்ற உணர்வை பால் தக்கரேயும் தட்டியெழுப்பினார்.  பொதுவாக பம்பாயில் வேலைதேடி குடியேறியிருந்தவர்களில் தென்னிந்தியர்கள், குறிப்பாகத் தமிழர்கள் அதிகமிருந்தனர். பிஹார் வாசிகளும் குடியேறியிருந்தனர்.  எனவே பம்பாயில் குடியேறியிருந்த பிற மாகாண மக்களுக்கு எதிராக குறிப்பாக அதிகம் குடியேறியிருந்த தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக போராட்டங்கள் துவங்கின.

            அப்படி நடந்த போராட்டங்களுக்கு பால் தாக்கரே பத்திரிகை ஆதரவு இருந்தது. அந்த போராட்டத்தில் எழுப்பப்பட்ட கோஷங்கள் “பஜாவ் புங்கி, ஹடாவ் லுங்கி” (Bajao Pungi, Hatao Lungi”) தமிழில் “மகுடி ஊது, லுங்கியை விரட்டு” இந்த கோஷம் எங்கும் எழுந்து தமிழர் அணியும் வேட்டியை அவர்கள் லுங்கி என்பதால் அவர்கள் எதிர்த்தது வேட்டி கட்டிய தமிழ் மக்களைத்தான்.  இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால் இவர்கள் எழுப்பிய கோஷமொன்று தமிழர்களை நேரடியாகக் குற்றம் சாட்டியது. அது!  “Kalcha Madras, Thodyach Divsat tupashi” இதன் பொருள் “நேற்று வந்த மதராசி, உடனே இங்கே பணக்காரன் ஆகிறான்” என்பது. எங்கு திரும்பினும் தமிழருக்கு எதிரான கோஷம் வானைப் பிளந்தது, தமிழர் அச்சத்துடன் வாழும் நிலைமை பம்பாயில் உருவானது.

            பம்பாயில் வாழும் தமிழர்கள் பெயர்களையெல்லாம் பட்டியலிட்டு பால் தாக்கரே வார இதழ் வெளியிட்டு அதில் மராத்தி மொழியில் “இதைப் படித்துவிட்டு அமைதியாக இரு” என்பது போல எழுதப்பட்டிருந்தாலும் அது மராத்திய மக்களை உசுப்பி விட்டு “விழித்தெழு பிழைக்க வந்த இந்த வேட்டி கட்டிய தமிழர்களை விரட்டிவிடு” என்ற பொருளில் “அண்டுகுண்டு ஹடாவ்” என்றனர். “அண்டுகுண்டு” என்பது நம் தென்னிந்திய மொழிகளைக் குறிக்கும் கேலிக்குரிய சொல்வழக்கு.

            இப்படித் தென்னிந்தியர்களுக்கு எதிரான உணர்வைத் தூண்டி வெறுப்பை உருவாக்கிய பால் தாக்கரே 1966 ஜூன் 19ஆம் தேதி சிவசேனா என்றொரு இயக்கத்தைத் தொடங்கினார். அதே ஆண்டு அக்டோபர் 30இல் அவர் பம்பாயில் ஒரு மாபெரும் பேரணி பொதுக்கூட்டம் நடக்குமென்று அறிவித்தார்.  அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. அப்போது நடந்த பேரணியில் கடலென மக்கள் திரண்டு வந்திருந்தனர். பொதுவாக சிவசேனை கட்சிக் கூட்டங்கள் நடத்துவதில்லை. ஆனால் தசரா பண்டிகையையொட்டி தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் குறிப்பாக தாதரில் பொதுக்கூட்டமும் பேரணியும் நடத்துவதை வழக்கப்படுத்திக் கொண்டனர். அப்படிப்பட்ட பேரணிகள் இப்போதும் தாதரில் நடைபெறுகின்றன.

            மண்ணின் மைந்தர்கள் எனும் உரிமைக்குரலை பால் தக்கரே எழுப்பியதும் மக்கள் ஆதரவு பெருக்கெடுத்து ஓடியது. இளைஞர்கள், வேலைதேடி அலையும் மராத்தியர்கள் ஆகியோர் தங்கள் வாய்ப்புகளைப் பறித்துக் கொண்டவர்கள் என்று பிற மாநில மக்கள் மீது வெறுப்பேற்றிக் கொண்டனர். அதன் விளைவு, உடுப்பி ஓட்டல் நொறுக்கப்பட்டது. தொடர்ந்து பல முறை தென்னிந்தியர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்தன. 1967இல் நடந்த காலாசவுக்கி எனும் மத்திய பம்பாயில் தென்னிந்திய ஓட்டல் அடித்து நொறுக்கப்பட்டது. அதில் 32 பேர் கடுமையாக காயமடைந்தனர். ஆனால் சிவசேனை தலைமை வன்முறையில் ஈடுபட்டவர்களை மாவீரர்களாகப் பாராட்டியது மட்டுமல்ல, அதுபொன்ற போராட்டங்களைத் தொடரவும் செய்தன. தென்னிந்தியர்களே தங்கள் முதல் எதிரி என்பதுபோல மக்களிடையே வேற்றுமையை விதைத்தனர்.

            இப்படித் தங்களுக்கு எதிரான உனர்வு ஊட்டப்படுவதை அறிந்து தென்னிந்தியர்கள் தாங்கள் தனித்தனியாகப் பிரிந்து வாழ்வதினும், ஓரிடத்தில் கூட்டமாக வாழ்வதை விரும்பினர். பம்பாயில் தாதாக்கள் அதிகம், அதிலும் நம்மவர்கள் சிலர் இருந்தார்கள், குறிப்பாக வரதாபாய் (கமலஹாசன் வேலு நாயக்கர் படமே எடுத்தார்) ஹாஜி மஸ்தான் ஆகியோர் தமிழர்கள், இவர்கள் தமிழர்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கும் பணியையும் மேற்கொண்டார்கள்.

            தமிழர்களில் உழைக்கும் வர்க்கம் அதிகமாக தாராவி எனும் குடிசைப் பகுதியில் வாழ்ந்தார்கள். இங்குள்ள தமிழர்கள் தங்களுக்கெதிரான வன்முறைகளை எதிர்த்துக் களம் இறங்கினார்கள். தாராவியும், பால் தாக்கரே வாழ்ந்த பந்திரா பகுதியும் அருகருகில் இருந்ததால் இங்கு அடிக்கடி மோதல்கள் நிகழ்ந்தன.

            பம்பாயில் மிடில் கிளாஸ் எனும் தமிழ் நடுத்தர மக்கள் வாழும் பகுதி மட்டுங்கா. இங்கு விநாயகர் சதுர்த்தி சிறப்பாகக் கொண்டாடப்படும். இதைக் கொண்டாடுபவர் வரதராஜ முதலியார் (சினிமாவில் வேலு நாயக்கர்). சதுர்த்தி விழாவுக்காக ஆண்டுதோறும் மாபெரும் பந்தல் அமைக்கப்படும், செய்பவர் வரதராஜ முதலியார். ஒரு முறை அந்தப் பந்தல் தீக்கு இரையாக்கப்பட்டு விட்டது. உடனே முதலியார் பால் தாக்கரேயைப் போய் அவர் வீட்டில் சந்தித்தார், என்ன நடந்ததோ அந்த பந்தல் மீண்டும் அவர்களால் பொட்டுக் கொடுக்கப்பட்டது. இந்த வாழ்வா சாவா போராட்டம் பல ஆன்டுகள் பம்பாயில் நடந்தேறின.

            அந்த காலகட்டத்தில் பம்பாயில் தென்னிந்தியர்கள் தவிர குஜராத்தியர்களும் அதிகம் இருந்தனர். மதராசி எனப்படுவோர் (தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் பேசுவோர் அனைவருமே அவர்கள் மொழியில் “மதராசி”) வெறும் 8.4% வீதம் தான். குஜராத்தி மக்கள் தொகை பம்பாயில்  14%. குஜராத்தியர்களை எதிர்க்காமல் ஏன் தென்னிந்தியர்களை எதிர்க்க வேண்டுமென்று கெட்டதற்கு தாக்கரே சொன்ன பதில் குஜராத்தியர்கள் வேலைகளை உருவாக்கித் தருகிறார்கள், நீங்கள் அனுபவிக்கிறீர்கள், எங்களுக்கு வாழ்வளிக்கும் அவர்களை நாங்கள் வரவேற்கிறோம்” என்பது அவர் பதில்.

            1964-65 காலகட்டத்தில் தமிழ்நாட்டில் தி.மு.க. இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்தியது. அப்போது தமிழ் நாட்டில் இந்தி படங்கள் வெளியிடுவதற்கு எதிர்ப்பு கிளம்பியது. அதைக் காரணம் காட்டி மும்பையில் தமிழ் சினிமா முதலாளிகள் எடுக்கும் இந்திப் படம் திரையிடவும் கூட எதிர்ப்பு கிளம்பியது. சிவசேனா கம்யூனிஸ்ட்டுகள், தொழிற்சங்கங்கள் இவற்றுக்கு எதிரான போக்கைக் கடைபிடித்தது. மெல்ல மெல்ல தென்னிந்திய எதிர்ப்பைப் போலவே பிகார் போன்ற வட இந்தியர் குடியேற்றத்தையும் எதிர்த்தனர்.

            சிவசேனா தொடங்கிய பொது மிகக் குறைந்த கிளைகளோடு இருந்த கட்சி, 1988இன் இறுதியில் நாற்பதாயிரம் கிளைகளுடன் மாபெரும் வளர்ச்சி பெற்றிருந்தது. சிவசேனை கட்சியின் துணை இயக்கங்களாக “பாரதிய காம்கர் சேனா”, “சர்மிக் சேனா”, “காட்டன் கர்மச்சாரி சேனா”, போன்ற பல புதிய சேனாக்களை உருவாக்கி வைத்திருந்தது.  இவர்களின் இந்த வளர்ச்சியினால் இடதுசாரி தொழிற்சங்கங்கள் குறைந்து போயின.

            ஒரு கட்டத்தில் “லுங்கி ஹடாவ்” கோஷமும் “யண்டுகுண்டு ஹடாவ்” கோஷமும் மட்டும் காரியத்துக்கு ஆகாது என்று புரிந்து கொண்டு இந்து தேசியம் பேசினால் தான் வளர முடியும் என்பதைப் புரிந்து கொண்டு இந்துத்துவ அடையாளத்தை உருவாக்கிக் கொண்டனர்.

            அவர்களிடம் நல்ல விஷயங்களே இல்லையா என்ற ஐயம் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக இன்னொரு நல்ல விஷயம். எல்லா மராட்டிய ஏழைகளுக்கும் அவர்கள் குழந்தைகள் படிக்க, பள்ளிக்கட்டணம், புத்தகம், நோட்டு பொன்ற கல்விச் செலவினங்களை தருகிறார்கள். இது குறித்து வரலாற்றை எழுதியவர் சொல்கிறார் இந்த உதவிகளைக் கேட்போர் சிவசேனா கட்சியினராக இருக்கத் தேவையில்லை, எல்லா மாராட்டியர்களுக்கும் உண்டு என்கிறார்.

            காலமாற்றத்தினால் தாராவியில் சிவசேனாவில் தமிழர்களும் அங்கம் வகிக்கிறார்களாம். சிவசேனாவில் தமிழர் பிரிவு உருவாகிவிட்டதாம். 

            1970க்குப் பிறகு சிவசேனா இந்துத்வா அரசியலில் ஈடுபட்டது. 1989லிருந்து அது பாஜகவுடன் தேர்தல் உடன்பாடு வைத்துக் கொண்டிருந்தது. 1995-99 காலகட்டத்தில் மகாராஷ்டிராவில் இவர்கள் கூட்டணி அரசு செயல்பட்டது. 1999-2014 காலகட்டத்தில் இந்தக் கூட்டணி மஹாராஷ்டிராவில் காங்கிரசுக்கு எதிரணியாக இருந்து வந்தது. 2014 மஹாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் இரண்டுக்கும் முட்டு மோதல் ஏற்பட்டுப் பிரிந்தது. 2018இல் சிவசேனா பாஜகவுடனான உடன்படிக்கையை நீக்கிக் கொன்டது. ஆனால் மறுபடி 2019 பொதுத்தேர்தல் சமயம் இரன்டும் உடன்பாடு செய்துகொண்டது அதன்படி இப்போதைய மகாராஷ்டிரா அசெம்பிளியில் கூட்டணியாகப் பொட்டியிட்டு பாஜக 105 இடங்களிலும் சிவசேனா 54 இடங்களிலும் வெற்றி பெற்றது. 288 உறுப்பினர் சபையில் யாருக்கும் பெரும்பான்மை இல்லை என்பதால் இழுபறி நடந்து கொண்டிருக்கிறது.

            பால் தாக்கரே தன் வாழ்நாளில் தன் தம்பி மகனான ராஜ் தாக்கரேயைத்தான் தனது வாரிசாக முன்னிறுத்தி வந்தார். அவர் திறமையாகவும், அரசியல் சாணக்கியத்தனம் உடைய வராகவும் இருந்ததால் அவர்தான் பால் தாக்கரேக்கு வாரிசு என்று மக்கள் நினைத்தனர். ஆனால் பால் தாக்கரேயின் மகன் உத்தவ் தாக்கரே தன்னை முன்னிறுத்திக் கொண்டு, தன் சித்தப்பா மகனான ராஜ் தாக்கரேவை ஓரங்கட்டிவிட்டார். அதன் பயன் அவர் தனியாக ஒரு மராத்திய சேனா தொடங்கி ஒதுங்கிவிட்டார். இப்போது பாஜகவின் 105 இடம், தன்னுடைய 54 இடமும் இருந்தால் 288 உறுப்பினர் அவையில் அமைச்சரவை கூட்டணி அரசு அமைத்திருக்கலாம். ஆனால் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தன் மகன் முதலமைச்சராக இருக்கவேண்டுமென்கிற ஆசையால் தங்கள் கட்சிதான் முதலமைச்சராக ஆகவேண்டுமென்று பிடிவாதம் பிடித்ததோடு, தங்கள் பரம வைரியாகக் கருதிக் கொன்டிருந்த காங்கிரஸ் கட்சியின் துணையை நாடினார். மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் இவை மூன்றும் தனித்தனியாக போட்டியிட்ட நிலையில் தங்கள் கூட்டணியைத் தன்னிச்சையாக முறித்துக் கொண்ட உத்தவ் தாக்கரே தங்களுக்கு முதலமைச்சர் பதவி வேண்டும் என்பதற்காக பாஜகவுக்கு துணை போகாமல், காங்கிரசையும், தேசியவாத காங்கிரசையும் நம்பி இருக்கிறது. இத்தனை காலம் கடும் எதிரியாக இருந்த சிவசேனாவை அவ்விரு கட்சிகளும் நம்ப மறுக்கின்றன. மிக ஜாக்கிரதையாக சிவசேனையின்  கோரிக்கையைப் பரிசீலித்துக் கொண்டிருக்கின்றனர். கூட்டணியில் இருந்து இத்தனை இடங்களை வெற்றி பெற்றுவிட்டு, அவர்களை உதறிவிட்டு எதிரிகளாகப் போட்டியிட்ட நம்மிடம் வந்திருக்கும் இவர்கள் நம்மை என்ன செய்வார்கள் என்கிற ஐயம் காங்கிரசுக்கு ஏற்பட்டிருப்பது மிகவும் நியாயமானது. ஆனால் அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை நிரந்தர எதிரியும் இல்லை என்று ஒரு கோஷத்தையும் இவர்கள் முன் வைத்து மறுபடியும் அவரவர் நிலைப்பாட்டினையும் மாற்றிக் கொள்வார்கள். என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கலாம்.

            அப்படியில்லையென்றால் அங்கு மறுதேர்தல் வருமானால் பாஜக உத்தவ் தாக்கரேவை கைகழுவி விட்டு முன்பு பால் தாக்கரேயின் அரசியல் வாரிசாக விளங்கிய ராஜ் தாக்கரேயை மீண்டும் முன்னிறுத்தி அரசியல் செய்யவும் வாய்ப்பிருக்கிறது. இதில் எதுவும் நடக்கலாம், அவற்றை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

            அரசியல் என்பது சூதாட்டம் போலத்தான் என்ன நடக்கிறதோ, ஆனால் முடிவில் பாதிக்கப்படப்போவது மக்கள் தான்.

கட்டுரை ஆக்கம்:
தஞ்சை வெ.கோபாலன், 28/13, எல்.ஐ.சி.காலனி 5ஆம் தெரு, மருத்துவக் கல்லூரி சாலை, தஞ்சாவூர் 613007.  # 9486741885
           

Tuesday, October 22, 2019

திருமலைராயன்பட்டினம்

             
                        திருமலைராயன்பட்டினம் மண்மேடிட்ட வரலாறு.

           பழைய தஞ்சை மாவட்டத்தின் கடற்கரையோரம் நாகப்பட்டினத்துக்குச் சில கல் தொலைவில் திருமலைராயன் பட்டினம் என்றோர் ஊர். அங்கு ஓர் சிற்றரசன் ஆட்சி புரிந்து வந்தான். அவன் பெயர் திருமலைராயன். 1455 – 1468 காலகட்டத்தில் விஜயநகர சாம்ராஜ்யத்துப் பிரதிநிதிகள் இந்தப் பகுதிகளை ஆண்டு வந்தபோது இந்த திருமலைராயன் ஆட்சி நடந்தது. இந்த திருமலைராயன் அரசவையில் தமிழ்ப் புலவர்கள் அறுபத்து நான்கு பேர் இருந்தனராம். இவர்களைத் தண்டிகைப் புலவர்கள் என்று அழைத்தார்கள். இவர்கள் அனைவருக்கும் பல்லக்கில் பயணிக்க வசதி செய்து கொடுத்திருந்தான் மன்னன். இப்படி ஆடம்பரம் அதிகமிருந்ததால், அவர்களிடம் புலமையைக் காட்டிலும் செருக்கே அதிகமிருந்தது. அரசனிடம் பரிசில் பெற வரும் இதர புலவர்களை இவர்கள் மட்டம் தட்டி, வஞ்சகமாக வெளியேற்றி விட்டு தாங்கள் மட்டுமே மன்னனிடம் செல்வாக்கோடு இருந்து வந்தனர். இவர்களால் அவமானப்படுத்தப்பட்டு வெளியேறும் புலவர்கள் மனம் வருந்தி சாபமிட்டுச் செல்வர்.
இவைகளையெல்லாம் பற்றி கேள்விப் பட்டு கவி காளமேகம் திருமலைராயன்பட்டினம் சென்று இந்த அகந்தைப் புலவர்களின் கொட்டத்தை அடக்குவது என்று எண்ணங் கொண்டார்.  தண்டிகைப் புலவர்களின் தலைவராக இருந்தவர் “அதிமதுரக் கவி” என்பார். இவர் மிக இனிய கவிதைகளைப் பாடுபவர் என்பதால் இவருக்கு இந்தப் பெயரை மன்னனே அளித்திருந்தார். இவருடைய சொந்த ஊர் திருக்கோவிலூர். இவர் நல்ல புலமையுடையவர் என்றாலும் தலைக்கனம் பிடித்தவர். அரசனின் அன்பைப் பெற்றிருந்ததால் இவர் அகந்தை அதிகமாக இருந்து வந்தது. இவரை மட்டம் தட்டவும், இதர கவிஞர்களை பரிசில் பெற விடாமல் தடுப்பதை நிறுத்த வேண்டியும் இவர்களுக்குப் பாடம் புகட்ட எண்ணி கவி காளமேகம் இந்த ஊருக்குச் சென்றார். மேலும் இவருடைய ஆசைநாயகி மோகனாங்கி இவ்வூரில் முத்துக்கள் அதிகம் கிடைப்பதால் தனக்கொரு முத்துமாலை வாங்கி வரும்படி இவரிடம் சொல்லியிருந்தாள்.

            இவற்றையெல்லாம் கருதி கவி காளமேகம் நெடுந்தூரம் பயணம் செய்து காரைக்கால் அருகில் இருந்த இந்த திருமலைராயன் பட்டினத்தை அடைந்தார்.  காளமேகம் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த போது எதிரில் ஒரு ஆடம்பரமான பல்லக்கில் ஒரு புலவர் உட்காந்து துதிபாடும் கூட்டம் பின்வர மிக ஆணவமாக வந்து கொண்டிருந்தார். அவர்தான் அதிமதுரக் கவிராயர். இவர் திமிரை அடக்க எண்ணியிருந்த நேரத்தில், கவிராயரின் கட்டியக்காரன் ஒருவன் எல்லோரும் அதிமதுரத்தைப் புகழ்ந்து வாழ்த்துப் பாட யாரோவொரு வெளியூர்க் காரன் சும்மா நிற்பதறிந்து கவியிடம் வந்து தன் கைத்தடியினால் தட்டி காளமேகத்தைப் பார்த்து “நீயும் கவிராயரைப் புகழும் முழக்கத்தைச் சொல்” என்றான். காளமேகம் வெகுண்டெழுந்தார். அப்போது அவர் ஒரு வெண்பா பாடினார், அது:

  “அதிமதுரம் என்றே அகிலம் அறியத் துதிமதுரமாய் எடுத்துச் சொல்லும் புதுமையென்ன?         காட்டுச் சரக்குலகில் காரமில்லாச் சரக்குக் கூட்டுச் சரக்கதனைக் கூறு”

இதன் பொருள், “அதிமதுரம் என்பது காட்டில் விளையும் ஒரு மருந்துச் சரக்கு; அதை எதற்காக இப்படிப் போற்றிப் புகழ்ந்து முழங்கிக் கொண்டு தெருவோடு போகவேண்டும்?”

            அந்தக் கட்டியக் காரன் வந்திருப்பவர் ஒரு புலவர் என்று தெரிந்து கொண்டு, இந்த விவரங்களைப் போய் அதிமதுரக் கவிராயரிடம் தெரிவித்தான். இந்த அதிகப் பிரசங்கிப் புலவனை அரசவையில் தலைகுனிய வைத்து ஓடவிடவேண்டுமென்று முடிவு கட்டினார் அதிமதுரம்.  அந்தக் கட்டியங்காரனிடம் கவி காளமேகம் தான் பாடிய பாடலை எழுதிக் கொடுத்து அரசவையில் கொண்டு போய்க் கொடு என்று அனுப்ப அவனும் அதைக் கொண்டு போய் அரசவையில் கொடுத்ததும் அரசன் உட்பட அதிமதுரக் கவியும் அவர் உடனிருந்த புலவர்களும் சினம் கொண்டனர்.

            அந்தப் புலவனை உடனே அரசவைக்கு அழைத்துவர அரசன் கட்டளையிட்டான்.  கவி காளமேகம் கம்பீரமாக அரசவையினுள் நுழைந்தார்.  மன்னனிடம் சென்று ஒரு எலுமிச்சம் பழத்தைக் கொடுத்து நின்றார். இவரை மன்னன் உட்காரச் சொல்லவில்லை. அதிமதுரக் கவியின் சூழ்ச்சிக்குப் பலியாகி மன்னனும் ஆணவத்தோடு இருப்பது உணர்ந்த காளமேகம் தான் வழிபடும் அன்னை அகிலாண்டேஸ்வரியை மனதால் வணங்கிவிட்டு தனக்கொரு இருக்கை அவையில் வேண்டுமென்று கலைமகளை வேண்டிட அரசனின் இருக்கையே நீண்டு காளமேகத்துக்கு இடம் கொடுத்தது. உடனே சென்று அந்த ஆசனத்தில் அமர்ந்து கொண்டு கலைமகளுக்கு நன்றி செலுத்தினார். இந்த புதியவரின் தெய்வீக சக்தி கண்டு அவையே அதிசயித்துப் பார்த்தது. கவி காளமேகம் அங்கிருந்த புலவர் கூட்டத்தைப் பார்த்து “நீவிர் யாவரோ?” என்று வினவ, பதிலுக்கு அவர்கள் “நாங்கள் ‘கவி’ராயர்கள்” என்றனர். அவர்கள் காளமேகத்தை நீர் யார் என்று வினவ காளமேகம் ஒரு பாடல் பாடி தன்னை யார் என்பதை விளக்கினார். அது:

            ‘தூது அஞ்சு நாழிகையில்,                                                                                                            ஆறு நாழிகையில் சொற்சந்தமாலை,                                                                                         சொல்லத் துகளிலா அந்தாதி ஏழு நாழிகைதனில்,                                                                       தொகைபட விரித்துரைக்கப் பாதஞ்செய் மடல் கோவை பத்து நாழிகைதனில்,                            பரணி ஒரு நாள் முழுதும்,                                                                                                            பார காவியமெலாம் ஓரிரு தினத்தில்                                                                      பகரக் கொடி கட்டினேன்,                                                                                                  சீதஞ்செயும் திங்கண் மரபினான் நீடுபுகழ் செய்ய                                                                      திருமலைராயன் முன் சீறுமாறு என்று                                                                                          மிகு தாறுமாறுகள் செய் திருட்டுக் கவிப் புலவரைக்                                                                   காது அங்கு அறுத்துச் சவுக்கிட்டு அடித்துக் கதுப்பில் புடைத்து                                                 வெற்றிக் கல்லணையினொடு கொடிய கடிவாளமிட்டு ஏறு                                                        கவி காளமேகம் நானே” என்று தன் பெருமைகளை வெளியிட்டார்.
            அதிமதுரக் கவி காளமேகத்திடம் “நீர் எம்போல் விரைவாகக் கவிபாட வல்லவரோ?” 

என்று கேட்டதும் பாடினார்:

            “இம்மென்னும் முன்னே எழுநூறும் எண்ணூறும்,                                                                       அம்மென்றால் ஆயிரம் பாட்டாகாதோ – சும்மா                                                                         இருந்தால் இருந்தேன், எழுந்தேனேயாமாயின்                                                                           பெரும் காளமேகம் பிளாய்!”

            அவைப் புலவர்கள் தங்களைக் கவிராயர்கள் என்று சொன்னார்கள் அல்லவா, இங்கு ‘கவி’ என்ற சொல்லுக்குக் குரங்கு என்று பொருள் கொடுத்து காளமேகம் பாடுகிறார். சம்ஸ்கிருதத்தில் கபி என்றால் குரங்கு. ஓகோ நீங்கள் கவிராயர்களா (குரங்குகளா?) அப்படியானால்.....

             “வால் எங்கே? நீண்ட வயிறெங்கே? முன்னிரண்டு                                                                     கால் எங்கே? உட்குழிந்த கண் எங்கே? சாலப்                                                                           புவிராயர் போற்றும் புலவீர்காள் இவர்                                                                                       கவிராயர் என்றிருந்தக் கால்.”

நீங்கள் கவிராயர்கள் என்றால் உங்கள் வால், நீண்ட வயிறு, முன்னங் கால்கள், உட்குழிந்த கண்கள் இவைகள் எங்கே? என்று கேட்கிறார்.

            ஆத்திரமடைந்த்ச அவைப் புலவர்கள் இவரை அரிகண்டம் பாடச் சொல்கிறார்கள். அரிகண்டம் என்பது என்ன என்பதைச் சொன்னால் பாடுவேன் என்கிறார்.

            அவர்கள் சொன்னார்கள்: “கழுத்தில் கத்தியைக் கட்டிக் கொண்டு, நாங்கள் கேட்கும் தலைப்பில் உடனுக்குடன் செய்யுள் இயற்ற வேண்டும். சொற்பிழை, பொருட்பிழை, இலக்கணப் பிழை இருக்கக் கூடாது. பிழையாக இருந்தால் உம் கழுத்து வெட்டப்படும், வென்றால் பாராட்டு கிடைக்கும்” என்றனர்.

            காளமேகம் சமாளித்துக் கொண்டு அரிகண்டம் என்ன, யாம் எமகண்டமே பாடி உங்களை வெல்வேன் என்றார். எமகண்டமா அப்படியென்றால் என்ன என்றனர் புலவர்கள்.

            ஒரு பெரிய குழிவெட்டி அதில் தீமூட்டி மேலே ஒரு  கூடையில் உட்கார்ந்துகொண்டு புலவர்கள் கேட்கும் விதத்தில் பாடவேண்டும், தவறினால் தீயினுள் தள்ளிவிடுவர், புலவர் மாண்டுபோவார். இதைக் கேட்டு அச்சமடைந்த புலவர்கள் அதை நீர் செய்ய வல்லீரோ என்றதும், காளமேகம் ஒப்புக்கொண்டு அவ்வகையில் பாடி வென்றார். பிறகும் கூட புலவர்களோ மன்னனோ இவரை மதிக்கத் தவறிவிட்டார்கள்.

            ஆத்திரமடைந்த காளமேகம் அந்த ஊரே அழிந்து போகும்படி அறம்பாடினார்.

            “கோளர் இருக்கும் ஊர், கோள்கரவு கற்ற ஊர்,                                                                             காளைகளாய் நின்று கதறும் ஊர்; நாளையே                                                                            விண்மாரி அற்று வெளுத்து மிகக் கறுத்து                                                                                  மண்மாரி பெய் கவிந்த வான்”

            கவி காளமேகம் அறம் பாடியதால் அவ்வூர் மண்மாரி பெய்து அழிந்தது. காளமேகம் ஊர் திரும்பினார்.  அந்த திருமலைராயன்பட்டினம் கவி காளமேகத்தின் கோபத்தால் மண்மேடிட்டு அழிந்து போயிற்று. இந்த திருமலைராயன்பட்டினம் என்பது காரைக்கால் நாகப்பட்டினம் மார்க்கத்தில் இருக்கும் ஒரு கடற்கரை கிராமமாக இப்போது இருக்கிறது.
           


Thursday, October 17, 2019

காந்தியும் கடவுளும்


                                                                  
            “காந்தியும் கடவுளும்” நல்லதொரு தலைப்பு. காந்தியை அவர் காலத்தில் நேரில் பார்த்தவர்கள் மிகக் குறைவாகத்தான் இருப்பார்கள். அவரைப் பற்றி படித்தவர்கள் அதிகமானவர்கள் இருக்கலாம். என்னைப் பொறுத்த வரை 1946இல் நான் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது, அவர் தமிழகத்துக்கு விஜயம் செய்தார்.  அவர் ரயில் வண்டியில் இருந்த வண்ணம் மாயவரம் ரயில் நிலையத்தில் அனைவரையும் வணங்கிய காட்சியை அவருக்கு எதிரில் நின்று பார்த்த பேறு எனக்குக் கிட்டியது.

            மகாத்மா காந்தியடிகளின் வாழ்க்கையே ஒரு பாடப் புத்தகம் போன்றதுதான் . அதில் அவர் எதிர்கொள்ளாத விஷயங்கள் எவையுமே இல்லை என்று சொல்லிவிடலாம். அவருடைய கட்டுரையொன்றில் அவர் கேட்கிறார், “வாழ்க்கையின் நோக்கம் என்ன?” என்று.  இதற்கு நாம் என்ன விடை சொல்வோம். பலரும் பல நோக்கங்களைச் சொல்லலாம். ஆனால் அவர் இந்தக் கேள்விக்கு  சொல்லுகின்ற விடை என்ன வென்பதை  நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். அவர் சொல்கிறார் “நாம் நம்மையே நன்கு புரிந்து கொள்வதற்கான காலமே நம் வாழ்க்கை” என்று.  இது என்ன பதில், ஒன்றும் புரியவில்லையே என்று நாம் நினைக்கலாம். ஆனால் நம் பிறப்பு நம் முயற்சியால் இல்லை, நாளை அல்லது அடுத்த விநாடி என்ன நடக்கும் என்பது நம் முயற்சியில் இல்லை. அப்படியானால் நம் வாழ்க்கை என்பது எந்த சக்தியாலோ இயக்கப்படுகிறது. அப்படி நாம் பிறந்தது முதல் இறக்கும் வரையிலான நிகழ்ச்சிகளை எந்த சக்தி அமைத்ததோ, குழந்தையாக இருந்த நம்மை இளமையாக, நடுத்தர வயதினராக, முதுமையாக இறுதியில் உயிர் நீங்கி இறப்பது வரை நம்மை இயக்கும் சக்தி எதுவோ, அதனைப் புரிந்து கொள்வதுதான் வாழ்க்கை.

 நாம் நம்மைப் பற்றி உணர்வதற்கு முன்பே நம்மைச் சுற்றிலும் வாழ்கின்ற அனைத்து உயிர்களைப் பற்றியும் சிந்திக்கலாமே.  அவைகள் படைக்கப்பட்ட விதம், யாரால் படைக்கப்பட்டது, ஏன் படைக்கப்பட்டது , எப்படி, எனும் வினாக்களை எழுப்பி அவற்றுக்குப் பதில் கண்டுபிடித்தால் நம் வாழ்க்கையின் நோக்கமும் நன்றாகப் புரிந்து விடும். இவை அனைத்துக்குமே விடை தெரிந்து விட்டால் நம்மை இயக்குகின்ற , நம்மால் உணர முடிகின்ற ஆனால் கண்களால் காணமுடியாத அந்த சக்தியைத் தான்  கடவுள் என்கிறார்கள் என்பது காந்தியின் கருத்து. ஆகையால் கடவுளைப் பற்றி நாம் உணர்ந்து கொள்ள நம் வாழ்க்கையே ஆயுதம். இதை அவர் வாக்கால் சொல்வதானால்:

The purpose of life is undoubtedly to know oneself. We cannot do it unless we learn to identify ourselves with all that lives. The sum total of that life is God.

காந்திஜியின் படைப்புகளின் தொகுப்பு Collected Works of Gandhi என்ற பெயரில் வெளிவந்திருக்கிறது. பவர்ன்ஸ் ஜர்னல் ஒவ்வொரு தலைப்பிலுமாக 16 புத்தகங்கள் ஒரு தொகுதியாக வெளியிட்டிருக்கிறார்கள். ஆமதாபாத் நவஜீவன் பதிப்பகம் 5 தொகுதிகளைத் தமிழில் வெளியிட்டிருக்கிறது. மொழிபெயர்ப்பு ல.சு.ரங்கராஜன். அந்த நூல்களில் அவருடைய பல்வேறு உரைகளில் கடவுள் பற்றி சொல்லும் கருத்துக்களைக் கொடுத்திருக்கிறார்கள். அவற்றில் அவர் சொல்கின்ற கருத்து ஒன்று.  அது “கடவுள் இருக்கிறார் – ஆயினும் இல்லை.”  இது என்ன விசித்திரமான பதில் என்று எண்ணத் தோன்றுகிறதல்லவா?  அவர் சொல்கிறார் இங்கே நான் சொல்கின்ற “இல்லை” எனும் சொல் “இருக்கிறார் என்பதன் நேரடியான எதிர்ப் பதமாக சொல்லவில்லை. கடவுள் இருப்பதை கண்களில் காட்ட முடியாது எனும் பொருளில் சொல்கிறேன். ஆனால் செயல்களால் உணர முடியும் என்பது என் கருத்து என்கிறார்.  பூமியில் உயிரோடு வாழும் மனிதனின் உள்ளே இருப்பது “ஆன்மா” என்கிறோம். இறந்தவர்களுக்கு அனுதாபம் சொல்லும் போது அவர் ஆன்மா சாந்தி அடையட்டும் என்கிறோம். ஆங்கிலத்தில் R.I.P., that is Rest in Peace என்பதாகும். அப்படியென்றால் என்ன. நாம் உயிரோடு வாழும் வரை நம்மை இயக்குவது எது என்பதை அறியவில்லை. அந்த இயக்கம் நின்றவுடன் உயிர் பிரிந்து விட்டது என்கின்றனர். உயிர் என்பது மூச்சா? அல்லது வேறு ஏதேனும் பொருள் உண்டா. நம் முன்னோர்கள் அதனை ஆன்மா என்று சொல்கிறார்கள். அது நம் உடலை விட்டுப் பிரிந்த பிறகு அதுவே கடவுள் எனப்படுகிறது. இதில் “பக்தி” என்பது அந்த உடலுக்கும் ஆன்மாவுக்குமுள்ள உறவைத் தேடுதலே பக்தி. ஒருவன் தன் ஆன்மாவைப் புரிந்து கொண்டான் என்றால் அந்த தேடல் பக்தி நிலையிலிருந்து ஞானம் என்ற நிலைக்குச் சென்று விடுகிறது.

               collected works of Gandhi என்கிற நூல்களில் அவர் சொல்வதாவது “கடவுள் இருப்பதை மறுப்பவர்கள் ஆன்மா என்று ஒன்று உண்டு என்பதை ஒப்புக் கொள்ளாமையால் வாழ்வின் நோக்கத்தை விட்டு வழிமாறிப் போய்விட வாய்ப்பு இருக்கிறது. மனிதன் பிறரிடம் நம்பிக்கை இழந்து நிலைமை மோசமடைந்து விட்டால் ஒழுக்கமின்மை பரவிவிடலாம். அதனால் தான் ஒழுக்கத்தைக் கற்பிக்கும் எதிலும் நம்பிக்கைக் கொள்வதால் தானும் ஒழுக்கத்தைக் கடைபிடிக்க வேண்டியவனாக ஆகிறான். வள்ளுவர் வாக்கும் அதுதான் “ஒழுக்கம் விழுப்பம் தரலான், ஒழுக்கம் உயிரினும் ஒம்பப்படும்”.

           அவதாரம் என்கிறார்களே, அவர்கள் யார். கடவுள் அந்த அவதார உருவில் வந்து பூமியில் பிறக்கிறாரா என்று கேட்கலாம். அப்படி அல்ல. “வாழ்வில் அனைத்திலும் தார்மிக பலம் கொண்ட ஒரு மனிதன் தீமைகளுக்கோ, தீயவர்களுக்கோ அஞ்சாமல் வாழ்ந்து காட்டுவானானால் அவன் அவதாரமாகக் கருதப்படுகிறார்” என்கிறார் காந்தி. ஆனால் அப்படிப் பட்டவர்கள்  தங்களை ஒரு அவதாரம் என்று அறியமாட்டார்கள். சத்தியம் ஒன்றே கடவுள் வேறெதுவும் கடவுளில்லை, என்று சொல்லும் அவர் அந்த சத்தியத்தைக் கடைப்பிடிப்பவன் கடவுளை உணர்ந்தவனாகிறான் என்கிறார். ஒருவனுடைய நற்பண்புகள் உயிரற்றவை அல்ல. அவைகள் அனைத்துமே ஏற்றுக் கொள்ளக் கூடியவை, காரணம் அவனது நற்பண்புகளால் பிற உயிர்கள் நலம் பெறுகின்றன.

           காந்தியடிகள் மனிதனுக்கு உள்ள குணங்களை மூன்று விதமாகச் சொல்கிறார்  அவை தாமசம், ராஜசம், சத்வம் ஆகியவை. இவற்றில் தாமச குணம் ஒரு மனிதனை அறிவற்றவனாகவும் சோம்பலுள்ளவனாகவும் ஆக்குகிறது. ராஜச குணம் அவனைத் துணிவுள்ளவனாகவும் உலகியல் நோக்கங்களில் வெற்றி காண்பவனாகவும் ஆக்கிவிடுகிறது.  சத்வ குணம் என்பது அமைதி, சுய கட்டுப்பாடு இவைகளோடு எதையும் புரிந்து கொள்பவர்களாகவும் வைக்கிறது. இவர்கள் புற விஷயங்களில் கவனம் செலுத்தாமல் கடவுள் தத்துவத்தில் மனத்தைச் செலுத்துகிறார்கள். இந்த சத்வ குணம் தான் மனதை அமைதியில் செலுத்தும் வல்லமை கொண்டது.

அவர் சொல்கிறார்: “மனிதனின் அறிவுக்கு விளங்கும் வகையில் கடவுள் இருப்பதை நிரூபணம் செய்ய முடியாது” என்று. அவர் ஒரு எடுத்துக்காட்டினைச் சொல்கிறார். “தானியங்களை உண்பதனால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை அவன் உணர்ந்திருக்கிறான், ஆனால், தானியங்களை உண்ணும்போது பலன்கள் விளைவதை அவனால் கண்ணால் பார்க்கவோ, அல்லது அறியவோ முடிவதில்லை. ஆன்மாவும், கடவுளும் அறிவினால் அறியப்படுபவை அல்ல, இவை இரண்டும் தம்மைத் தாமே அறிந்து கொள்வன என்கிறார் காந்தி.

கடவுளை அறிவதில் இரண்டு நிலைகள் உண்டு. அவை (1) நம்பிக்கை மற்றும் (2) அந்த நம்பிக்கையிலிருந்து எழுகின்ற அனுபவம். மனித குலத்தின் மாபெரும் ஆசான்கள் கடவுள் இருக்கிறார் என்பதைத் தங்கள் அனுபவத்தின் மூலமே சான்று உரைத்திருக்கிறார்களே தவிர எதையும் காட்டி இதுதான் கடவுள் என்று சான்றளிக்கவில்லை. ஆனால் நம்மால் காண முடியாத நம் சக்திக்கு மீறிய செயல்கள் அனைத்தையும் கடவுளின் செயல் என்று சொல்வது வழக்கமாக ஆகிவிட்டது.

காந்தி சொல்கிறார்: “முதலில் நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவனாக இருந்தேன். ஆனால் ஆழ்ந்த சிந்தனையின் மூலமும், மதங்களைப் பற்றி படித்தறிந்ததன் மூலமும் நம்பிக்கை எழுந்தது. அது நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது. கடவுள் என் இதயத்தில் உணர்வு நிலையில் உறைகிறார் என்பதை உணர்ந்து வருகிறேன். ஆனால், இந்த விஷயத்தில் ஒருவருடைய அனுபவம் மற்றவர்களுக்குப் புரிய வைக்கவோ, நம்பச் செய்யவோ முடியாது. நம்பிக்கை, முயற்சி , சுய அனுபவம் இவைகள் மூலம் தான் அதனை புரிந்து கொள்ள முடியும்.”:

“சத்தியமே வாழ்வில் தலையாய தர்மம். சத்தியம் என்பதை உண்மையைப் பேசுவது என்று மட்டும் தான் நினைக்கிறோம்.  ஆனால் நம் உள்ளத்தாலும், செயலாலும் உண்மையாக இருப்பதே சத்தியம். என்னைப் பொறுத்த வரை கடவுள் என்றால் சத்தியம் மாத்திரமே எனக் கருதி நான் வழிபட்டுக் கொண்டிருக்கிறேன். அந்த சத்தியம் தான் கடவுள் என்றால், அந்த கடவுளை நான் இன்னமும் தரிசிக்கவில்லை, ஆயினும் நான் தேடிக் கொண்டே இருக்கிறேன்.” என்கிறார் காந்தி.

சரி! கடவுளுக்குப் பணி புரிகிறேன் என்கிறார்களே, அப்படியென்றால் என்ன? யாருக்கு என்ன சேவை செய்கிறார்கள்? கடவுள் என்று சொல்லப்படுவது அல்லது சொல்லப்படுபவர் யார், எங்கு எப்படி இருப்பார் என்பது தெரிந்தாலல்லவா அவருக்குச் சேவை செய்ய முடியும். அவருக்குப் பணிவிடை செய்ய வேண்டுமென்று நான் நினைத்தால், நான் செய்ய வேண்டியது ஒன்று உண்டு. நமக்குக் கடவுள் யார் என்பதோ, எப்படி இருப்பார் என்பதோ தெரியாது. ஆனால், நாம் நம்மைச் சுற்றியிருக்கிற பலவற்றைப் பார்க்கிறோம்.  இங்கு வாழும் உயிரினங்களும், உயிரற்ற ஜடப் பொருட்களும் யாரால் எப்படி உருவானது என்பது நமக்குத் தெரியுமா? அந்த உயிர்கள் அனைத்தும் நாம் அறியாத ஒரு சக்தியால் படைக்கப்பட்டது என்றால், அவைகளுக்கு நாம் செய்யும் சேவையே கடவுளுக்குச் செய்யும் சேவை எனக் கொள்ள வேண்டும். இல்லையா?

திருமூலர் திருமந்திரத்தில் சொல்லும் ஒரு பாடலை இங்கே சொல்ல விரும்புகிறேன். அது:
                    “யாவர்க்குமாம் இறைவற்கொரு  பச்சிலை                                                                                   யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை                                                                                       யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி                                                           யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே”   (திருமந்திரம் 252)

          கடவுள் உருவாக்கிய எல்லா ஜீவன்களுக்கும், உயிரினங்களுக்கும், புல், பூண்டு, பூச்சிகள், பிராணிகள், பறவைகள், மிருகங்கள் முதலான எல்லா ஜீவன்களுக்கும் நாம் எவ்வகையில் சேவை செய்ய முடியும் என்ற கேள்விக்குக் காந்தி பதில் சொல்கிறார். உலகில் இறைவன் படைத்த அனைத்துக்கும் உன்னால் சேவை செய்ய முடியாது; அதனால் உன்  கண்களுக்குத் தெரியும்படியான, உன் அருகிலுள்ள உயிர்கள் அனைத்துக்கும் உன்னால் ஆன, அவைகளுக்குத் தேவைப்படுகின்ற உதவிகளைச் செய்வதே கடவுள் சேவை. எடுத்துக்காட்டாக திருமூலர் சொல்வதைப் போல பசுவுக்கு ஒரு கைப்பிடி புல், நாம் உணவு தயாரிக்கும் முன் ஒரு கைப்பிடி அரிசியை பிறருக்குக் கொடுக்கவென்று எடுத்து வைப்பது, பிறரிடம் சண்டையிட்டு மனத்தை வருத்திக் கொள்ளாமல் இனிமையாகப் பேசுவது இவைகளோடு, முடிந்தால் அந்த இறைவனை நினைத்து ஒரு இலை கொண்டு அர்ச்சிப்பது.

மனித வாழ்வின் இறுதியான, நிலைப்பாடு கடவுளை அடைவது என்று சொல்கிறார்கள். மனிதனுக்கு வயது ஏற ஏற வாழ்க்கை எப்படிப்பட்டது என்கிற அறிவு தோன்றுகிறது. இந்த வாழ்வு முடிவுக்கு வந்த பின் என்னவாகும் என்கிற கவலை ஏற்படுகிறது. இறந்த பிறகு யாருக்கும் ஒரு உதவியோ அல்லது துன்பமோ தர முடியாது. காலப்போக்கில் நம் பிள்ளை குட்டிகள் கூட நம்மை மறந்து விடுவார்கள். அப்படிப்பட்ட நிலையில் நாம் யாரை நினைக்க முடியும்? இந்த உலகைப் படைத்து, அதில் பல்வகை உயிர்களை உருவாக்கி, அவைகளை வாழவைத்து அழிக்கும் தொழிலையும் செய்யும் அந்த மகா சக்தியே கடவுள் என்று நினைக்கத் தோன்றுகிறது. அப்படிப்பட்ட சக்தியிடம்,  தான் ஒரு மனசாட்சியுள்ள மனிதனாக வாழ்ந்தால்தான் வாழ்க்கையை முறையாகப் பயன்படுத்தியதாக ஆகுமென்கிற எண்ணமும் உண்டாகிறது.

நான் என்னை கவனித்துக் கொள்வதைப் போல, அடுத்தவனையும் கவனித்துக் கொள்ள வேண்டும், நாம் படும் துன்பம் நமக்கு எப்படியோ அப்படியே அடுத்தவன் துன்பமும் நமக்கு வருத்தத்தைத் தரவேண்டும். நமக்குப் பசிக்கு உணவு தேவைப்படுவதைப் போல, ஏழை வசதியற்றவனுக்கும் பசி எடுக்கும் அவனுக்கும் உதவி தேவைப்படும் என்கிற எண்ணமே இறைவனை உணர்ந்ததாகக் கருதப்படும்.

“மக்களுக்குச் செய்யும் சேவையே மகேசனுக்குச் செய்யும் சேவை” என்பதைப் பலரும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். நமக்கு தேவைகள் இருக்கின்றன, நன்மைகளை எதிர்பார்க்கிறோம். அதைப் போலவே பிறரது தேவைகள், நன்மைகள் இவற்றை உணர்ந்து நம்மைப் போலவே அவர்களையும் கவனித்துக் கொள்வதே கடவுளை அறியும் மார்க்கமாகும். இது புரிந்து கொள்ள சற்று சிரமமான காரியம் தான்.  இந்தத் தத்துவத்தை எல்லோரும் புரிந்து கொள்ளும் சக்தி இருந்தால் பிரச்சினை இல்லை.  உலகில் நம்மால் உருவாக்க முடியாத ஒன்றை, நம் சக்திக்கு மீறி,  அதுவாகவே உருவாகியிருக்கிற எதையும் இறைவனாக எண்ணி வழிபடுவது சுலபமாக இருக்கும்.  அது அவரவர் மேம்பட்ட சிந்தனையைப் பொருத்தது.

இது சம்பந்தமாக நிகழ்ச்சி யொன்றில் காந்தியிடம் கேட்கப்பட்ட சில கேள்விகளையும், அதற்கு அவரளித்த பதில்களையும்  பார்க்கலாம்.  ஒருவர் கேட்கிறார் மதத்தின் பெயரால் அல்லாமல் பிற உயிர்களுக்குப் பணி செய்ய முடியாதா? என்று. அதற்கு அவர்  “ஏன்? சேவை என்பதில் மதமோ, இனமோ பிரிவுகளோ எப்படி வரும்? பிறருக்கு நீ செய்யும் சேவையே உலகில் மிகச் சிறந்த மதம், மனதால், செயலால் உண்மை எனும் பண்பு உன்னை வழி நடத்தினால் அதனிலும் மேம்பட்ட வழி எதுவுமில்லை” என்கிறார்.

 காந்திக்கு ஒரு நண்பர் இருந்தார், அவர் பெயர் கோபராஜு ராமச்சந்திர ராவ். அவர் ஒரு நாத்திகர், காந்தியிடம் அன்பு கொண்டவர். காந்தியின் தீண்டாமை ஒழிப்பில் அவருக்கு ஆர்வமிருந்ததால் இந்த நட்பு ஏற்பட்டது. அவர் காந்திஜியுடன் கடவுள் பற்றிய விவாதங்களில் ஈடுபடுவார். அவர் காந்திக்கு ஒரு கடிதம் எழுதுகிறார், அதில் அவர் “கடவுள் என்று நீங்கள் சொல்வது எதைக் குறிக்கிறது?” என்கிறார். அதற்குக் காந்தி “கடவுள் மனிதர்களின் புரிதல்களுக்கு அப்பாற்பட்டவர்” என்று பதில் சொன்னார்.

அவர் 1944ஆம் ஆண்டில் காந்திஜியைச் சந்திக்கிறார். அதன் பின் காந்தி இறக்கும் வரை அவருடன் கூடவே இருந்திருக்கிறார். அவர் “காந்தியுடன் ஒரு நாத்திகர்” என்ற நூலை எழுதினார். (“An Atheist with Gandhi”) என்ற அந்த நூலில் காந்தியின் கடவுள் என்ற பெயரில் அவர் எழுதியிருப்பவை காந்தியின் கடவுள் கொள்கையை விளக்கும் விதமாக அமைந்திருக்கிறது.

ஒரு கொள்கையை அதன் அறிவார்ந்த மேன்மையைக் கொண்டோ அல்லது அது சொல்லும் தத்துவங்களைக் கொண்டோ காந்தி எதையும் மதிப்பீடு செய்வதில்லை. அவர் தான் கொண்டிருந்த கடவுள் பக்தியை எப்படி மதித்தாரோ, அதே அளவுக்குத் தான் கொண்டிருந்த நாத்திகத்தையும் மதித்தார் என்கிறார் அந்த நூலாசிரியர். சிலர் சந்தர்ப்ப வாதிகளாக இருப்பார்கள்; வேறு சிலர் தேர்ந்த நடைமுறை வாதிகளாக இருப்பார்கள். காந்தி ஒரு நடைமுறை வாதியாக எல்லா சூழ்நிலைகளிலும் அதனதன் இயல்பான முரண்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் படைத்திருந்தார்.

காந்திஜி தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு 1914இல் திரும்பிவிட்ட போதும், அவருடைய குருநாதர் கோபாலகிருஷ்ண கோகலேயின் அறிவுரைப்படி இந்தியா முழுவதும் ரயிலில் மூன்றாம் வகுப்பில் பயணித்து இந்திய மக்களின் வாழ்க்கை நிலைமை, அவர்கள் வாழ்வில் மேம்பட தான் செய்யவேண்டிய காரியங்கள் பற்றியெல்லாம் கவனித்து வந்தார்.

அப்போது பிரிட்டிஷ் ஆதிக்கம் இந்த மண்ணில் வேரூன்றியிருந்ததால், பண்டைய பெருமைகளை இந்திய மக்கள் இழந்து, தாங்கள் அந்நியருக்கு அடிமைப்பட்டவர்கள் எனும் உணர்வை சில தலைமுறையினர் மத்தியில் வளர்த்துக் கொண்டனர்.  சிலர் இந்த நாடே ஆங்கிலேயருடையது, அவன் தயவில் நாம் இங்கு வாழ்கிறோம் என்ற எண்ணம் கூட இருந்திருக்கலாம். அதனால்தானோ என்னவோ பாரதி “நாம் இருக்கும் நாடு நமது என்பது அறிந்தோம், இது நமக்கே உரிமையாம் என்பது அறிந்தோம்” என்று பாட நேர்ந்தது. இந்த எண்ணத்தை மாற்றுவதென்பது எளிதானதன்று. இந்திய மக்களின் பெருமைகளை, பாரம்பரியத்தைப் புரிய வைக்கவே அவர் மிகவும் சிரமப் பட வேண்டியிருந்தது. காரணம் முன்னை இருந்த மேன்மையும், பின்னை நாளில் நேர்ந்த இழிவையும் உணராத மக்கள் தங்களை ஆளவந்த தேவகுமாரர்கள் என்று ஆங்கிலேயர்களை எண்ணிக் கொண்டிருந்தார்கள். அதை மாற்றவே காந்தி பாடுபட வேண்டியிருந்தது.  அதில் ஒன்றுதான் அவர் பாடத் தொடங்கிய “ரகுபதி ராகவ ராஜாராம்” என்பது. இன்று இந்த கூட்டத்தில் நாம் நினைவுகூரும் திரு வீ.சு.ராமலிங்கம் அவர்கள் சொல்வார், காந்திஜி  ஹரே ராம்! என்று சாகும் போதும் சொன்னார் என்கிறார்கள், ராமனைப் புகழ்வதாக ரகுபதி ராகவ ராஜாராம் என்ற பஜனைப் பாடலையும் பாடுகிறார்கள். ஆனால் இவை அயோத்தி  ராமனைக் குறிப்பதாக அல்லாமல் பொதுவாக இறைவனைக் குறிக்கும் விதத்தில் “ராம்” என்றழைக்கும் பழக்கம் அவரிடம் இருந்தது என்பார்.

உலகில் மனிதர்களையும், நம்மைத் தவிர இங்கு நம்மைச் சுற்றியிருக்கும் உயிரினங்கள் அனைத்தையும் பார்க்கும் போது இத்தனை வகையான உயிரினங்கள் இங்குத் தோன்றக் காரணமாக இருந்தது என்ன என்ற கேள்வி எழும். இவை பற்றிய ஆழ்ந்த அறிவும் ஞானமும் இருந்தால் இது குறித்து அலசி ஆராய்ந்து எது எதெல்லாம் நம் சக்திக்கு அப்பாற்பட்டதோ, எவைகள் நம்மால் முழுதும் அறிந்து கொள்ள முடியவில்லையோ அல்லது எவையெல்லாம் நம்மால் காணமுடியவில்லையோ அதையெல்லாம் சர்வசக்தி படைத்த கடவுள் என்றும் நம்பத் தொடங்கினார்கள். காந்தி எல்லா உயிர்களையுமே கடவுளாகக் கருதித்தான் அவர்களுக்குச் சேவை செய்வதை பக்தி பூர்வமாக செய்து வந்தார்.

தென்னாப்பிரிக்காவில் ஆதிக்கம் செலுத்திய வெள்ளையர்களை எதிர்க்க காந்தியிடம் ஆயுத பலமோ, படை பலமோ, வீரியமிக்க மனிதர்களோ இல்லை யென்பதால் அவர் ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்க்க ஓர் புதிய ஆயுதத்தைக் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. அவர் நடத்தும் அகிம்சை வழி போராட்டத்துக்கு ஒரு நல்ல பெயர் வேண்டுமென்று கேட்டபோது அவருக்குக் கிடைத்ததுதான் “சத்தியாக்கிரகம்” எனும் சொல். அதற்கு முன்பு வரை இவர் போராட்டத்தை ஆங்கிலத்தில் PASSIVE RESISTANCE என்று சொல்லிக் கொண்டிருந்த போது காந்தி சொன்னார் நான் செய்வது சத்தியாக்கிரகம், இந்த இரண்டு சொற்களுக்கும் வித்தியாசம் உண்டு. அமைதியாக எதிர்ப்பது அல்லது தடுப்பது என்பது Passive Resistance. ஆனால் தன்னுடைய சொல்லான “சத்தியாக்கிரகம்” என்பது கோரிக்கையை எத்தனை எதிர்ப்பு இருந்தாலும், வன்முறை மூலமாக அடக்க முயன்றாலும் அவற்றுக்கு அடிபணியாமல், அகிம்சை முறையில் வலியுறுத்திக் கொண்டே இருப்பது.  இறக்க நேர்ந்தாலும் தொடர்ந்து என் எதிர்ப்பைக் காட்டுவேன் என்ற பொருள் படும் என்று விளக்கினார்.

இதை உறுதிப்படுத்தும் விதமாக முன்பொருமுறை தென்னாப்பிரிக்காவில் இருந்த போது நடந்த நிகழ்ச்சியைக் குறிப்பிடலாம்.

ஒரு நாள் காந்தி தன் அலுவலகத்தில் வீற்றிருந்தார். அப்போது தமிழ் நாட்டிலிருந்து பிழைப்புக்காக நேட்டால் வந்து அங்கு ஒரு ஆங்கிலேயர் வீட்டில் பணியாற்றிக் கொண்டிருந்த தமிழர் ஒருவர், வந்து நின்றார். அவர் வாயில் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. தலையில் இருந்த முண்டாசை அவிழ்த்துத் தன் கையிடுக்கில் வைத்துக் கொண்டு உடம்பை வளைத்து காந்தியை வணங்கினார். வாயில் ரத்தத்தோடு வந்து நிற்கும் அவரைப் பார்த்து காந்தி திகைத்துப் போய் “நீ யார், உனக்கு என்ன நேர்ந்தது? ஏன் எப்படி அடிபட்டுக் கொண்டு வந்து நிற்கிறாய்?” என்று ஆங்கிலத்தில் கேட்டார்.

வந்தவர் கொஞ்சம் ஆங்கிலம், கொஞ்சம் இந்தி கலந்த தமிழில் பதில் சொன்னார். தான் கங்காணிகள் மூலம் தென்னாப்பிரிக்காவில் ஒரு வெள்ளை முதலாளியிடம் வேலைக்காக ஒப்பந்தக் கூலியாக வந்ததாகவும், அவரிடம் பணியாற்றிக் கொண்டிருந்த போது கோபப்பட்டு அந்த முதலாளி தாக்கியதில் தன் முன் பற்கள் இரண்டு உடைந்து போனதாகவும், அவர் தன்னைக் கொடுமைப் படுத்துவதாகவும் தெரிவித்தார். ஒப்பந்தக் கூலிகள் ஒப்பந்த காலம் முடியும் முன்பு வெளியே போக முடியாது. வேண்டுமானால் இன்னொருவர் சம்மதித்தால் இரு முதலாளிகளின் சம்மதத்தோடு இவர் இன்னொருவரிடம் வேலைக்குப் போகலாம். இல்லையேல் இவருக்குச் சிறை அல்லது 25 பவுன் அபராதம் உண்டு.

காந்தி சொன்னார், முதலில் உன் மேல் துணியைத் தலையில் கட்டிக்கொள். வெள்ளையர்களிடம் நிற்பது போல தலைப் பாகையைக் கழற்றிக் கையில் வைத்துக் கொண்டு குனிந்து நிற்காதே நிமிர்ந்து நில் என்று சொல்லி, அவர் அவன் வழக்கை எடுத்து நடத்தினார். அப்போது அந்த மனிதனுக்கு காந்தி தெய்வம். காந்திக்கு அந்த பரிதாப நிலையில் இருந்த மனிதன் கடவுள். இதுதான் அவர் சொல்லுகின்ற கடவுள் தத்துவம்.

தென்னாப்பிரிக்காவில் நகரம் அமைத்துக் குடியேறிய வெள்ளையர்களுக்குத் தாங்கள் ஆக்கிரமித்த வளமான நிலங்களில் வேலை செய்ய ஆட்கள் வேண்டியிருந்தது. அங்கு கரும்பு, காப்பி, தேயிலை முதலியவற்றைப் பயிர் செய்தார்கள். அந்த வேலைகளுக்காக இந்தியாவிலிருந்து ஒப்பந்தக் கூலிகளைப் பிடித்துக் கப்பலில் ஏற்றி கொண்டு வரும் பணிகளை கங்காணிகளிடம் ஒப்படைத்திருந்தார்கள். அந்த கங்காணிகள் கல்கத்தா, தமிழ்நாட்டில் கிழக்குக் கடற்கரைப் பகுதிகள் குறிப்பாக நாகப்பட்டினம் துறைமுகத்தை அடுத்த பல ஊர்களுக்கும் சென்று அவர்களுக்கு ஆசை வார்த்தை காட்டி, ஆப்பிரிக்கா சென்று ஐந்து ஆண்டுகள் பணியாற்றலாம், அதில் கிடைக்கும் பணத்தில் சொந்தமாக நிலம் வீடு வாங்கி அங்கேயே நிரந்தரமாகக் குடியேறிவிடலாம் என்று சொல்லி மக்களை ஏமாற்றி நாகப்பட்டினம் அழைத்துச் சென்று கப்பலில் ஏற்றி ஒருமாத காலம் பயணம் செய்து ஆப்பிரிக்க துறைமுகங்களில் கொண்டு போய் இறக்கி அங்கு தேவைப்படும் வெள்ளையர்களுக்கு இவர்களை அடிமைகளாகப் பணியாற்றக் கொண்டு விட்டு விடுவார்கள். அப்படிப்பட்ட ஒருவர்தான் காந்தியிடம் வந்தவர். அதுமுதல் அவரைப் போன்ற பல ஒப்பந்த தொழிலாளர்களுக்காக பாடுபட்ட காந்தி அவர்களுக்குக் கடவுளாகத் தோன்றினார். காந்தியும் அவர்களுக்குச் செய்யும் சேவையே கடவுளுக்குச் செய்யும் சேவையாகச் செய்தார்.

இந்தச் செய்தி ஆப்பிரிக்கா முழுவதும் பரவியது. அங்கு நடக்கும் அநியாயங்களைத் தட்டிக் கேட்க ஒரு இயக்கத்தைத் தொடங்கினார். அவர்கள் மனித பலம், ஆயுத பலம், அதிகார பலம் என இப்படி எல்லா வகையிலும் பலமிகுந்தவர்களாக இருந்தமையால், காந்தி அவர்களை எந்த சக்தி கொண்டு எதிர்ப்பது என்கிறபோது அவர் நம்பியது “தெய்வ சக்தியை”. தெய்வம் அல்லது கடவுள் என்பவர் நம் முன்பு காட்சி யளிப்பார் என்று நம்பினால் நாம் சொல்வதற்கு ஒன்றுமில்லை. வட மொழியில் ஒரு பழமொழி உண்டு, “தெய்வம் மனுஷ்ய ரூபேண” என்று. எப்போதெல்லாம் நம் சக்திக்கு மீறிய செயல்கள் நடக்கின்றதோ, அப்போது எங்கிருந்தோ வந்து உதவி செய்பவர் உருவத்தில் கடவுள் நமக்கு உதவி செய்கிறார் என்கிற நம்பிக்கை பிறக்கிறது.

ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன ஒரு குட்டிக் கதையை இங்கே நினைவு படுத்த விரும்புகிறேன்.  கடவுள் யார் என்பதை அந்தக் கதை விளக்கும், அந்தக் கொள்கையைத் தான் காந்தியடிகளும் பின்பற்றினார். ஒரு கிராமத்தினுள் வெள்ளம் புகுந்து ஊரே மூழ்கும் நிலைமை வந்துவிட்டது. ஊர் மக்கள் தங்கள் உடைமைகளை யெல்லாம் சுமந்து கொண்டு ஊரைவிட்டுப் போகத் தொடங்கினர். அப்போது கடவுள் நம்பிக்கை அதிகம் கொண்டிருந்த ஒருவன் தன் குடிசையின் வாசல் திண்ணையில் உட்கார்ந்து கொண்டிருந்தான். அவனையும் அவர்கள் “வா எங்களுடன் ஊரே மூழ்கப் போகிறது” என்று அழைத்த போது அவன் சொன்னான், “என்னை நான் வணங்கும் கடவுள் காப்பாற்றுவார், நீங்கள் போங்கள்” என்று. சிறிது நேரம் கழித்து மீதமிருந்த பலரும் ஒரு படகில் ஏறி வெள்ளத்தோடு கரைக்குப் போய்க் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவன் இவனைப் பார்த்து “நீயும் வந்து விடு, இனி ஊரே மூழ்கப் போகிறது, நீ இறந்து போவாய்” என்று அழைத்த போதும் அவன் கடவுள் என்னைக் காப்பாற்றுவார் என்று இருந்து விட்டான். வெள்ளம் அதிகமானதும் தனியொரு மனிதன் ஒரு படகில் வந்து கொண்டிருந்தவன், இவனைப் பார்த்து, “இனியும் தாமதிக்காதே உடனே வந்து இந்தப் படகில் ஏறிக்கொள் பிழைக்கலாம்” என்றான். அவன் மறுத்துவிட்டு கூரையின் உச்சியில் போய் உட்கார்ந்து விட்டான். இறுதியில் வெள்ளம் ஊரை மூழ்கடித்து விட்டது. இந்த பக்தனும் வெள்ளத்தில் மூழ்கி இறந்து போனான்.

அவனைக் கடவுள் முன் கொண்டு போய் நிறுத்தினார்கள். அப்போது அவன்கோபத்துடன் கடவுளிடம் கேட்டது “உம்மையே நம்பிய என்னை ஏன் கை விட்டீர்?” என்று.

அதற்கு கடவுள் சொன்னார், “அடே! முட்டாளே!  நான் ஊர் மக்களோடு வெளியேறும் போது நீயும் வந்து விடு என்று அழைத்தேன், நீ மறுத்தாய். மறுமுறை படகில் பலருடன் நானும் இருந்து உன்னை வந்துவிடும்படி அழைத்தேன். அப்போதும் வரவில்லை. இறுதியாக நான் மட்டும் ஒரு தனிப் படகில் வந்து உன்னை அழைத்தேன் அப்போதும் வரவில்லை. நீ ஒரு நிர்மூடன், இப்போது வந்து என்னை கேள்வி கேட்கிறாய்” என்றபோதுதான் அவனுக்குப் புரிந்தது, கடவுள் மனிதனாக அல்லது ஏதோவொரு ஜீவனாக வந்து நம்மைக் காப்பாற்றுவாரே தவிர நான் நினைக்கும் விதமாக நேரில் வந்து அல்ல என்பதை அவன் உணர்ந்தான்.

“அத்வைதம்” எனும் சொல்லுக்கு “இரண்டு அல்லாதது” என்று பொருள். அந்த அத்வைதத்துக்குப் பொருள் சொல்ல வந்த பாரதியின் பாடல் வரிகளோடு என் உரையை நிறைவு செய்கிறேன்.   
                  
கேளப்பா,சீடனே! கழுதை யொன்றைக்
கீழான பன்றியினைத் தேளைக் கண்டு
தாளைப்பார்த் திருகரமுஞ் சிரமேற் கூப்பிச்
சங்கர சங்கரவென்று பணிதல் வேண்டும்;
கூளத்தை மலத்தினையும் வணங்கல் வேண்டும்;
கூடி நின்ற பொருளனைத்தின் கூட்டம் தெய்வம்.
மீளத்தான் இதைத் தெளிவா விரித்துச் சொல்வேன்;
விண்மட்டும் கடவுளன்று மண்ணும் அஃதே.
சுத்த அறிவே சிவமென் றுரைத்தார் மேலோர்;
சுத்த மண்ணும் சிவமென்றே உரைக்கும் வேதம்;
வித்தகனாம் குரு சிவமென் றுரைத்தார் மேலோர்,
வித்தை யிலாப் புலையனு மஃதென்னும் வேதம்;
பித்தரே அனைத்துயிருங் கடவுளென்று
பேசுவது மெய்யானால் பெண்டிரென்றும்
நித்த நுமதருகினிலே குழந்தை யென்றும்
நிற்பனவுந் தெய்வமன்றொ நிகழ்த்து வீரே?
உயிர்களெல்லாம் தெய்வமன்றிப் பிறவொன் றில்லை;
ஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;
பயிலுமுயிர் வகைமட்டு மன்றி யிங்குப்
பார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;
வெயிலளிக்கும் இரவி, மதி, விண்மீன், மேகம்
மேலுமிங்குப் பலபலவாம் தோற்றங் கொண்டே
இயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;                                                            எழுதுகோல் தெய்வமிந்த எழுத்தும் தெய்வம்!
  
                                                                                   
தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர்,                                                                                                     பாரதி இலக்கியப் பயிலகம்            .                      

Tuesday, October 15, 2019

சத்ரபதி சிவாஜி


                                                    சத்ரபதி சிவாஜி 

                பதினாறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தென்னிந்திய வரலாற்றில், டெல்லி முகலாய மன்னர்களின் ஆட்சிக்கு உட்பட்ட பல சிற்றரசர்கள் நாடெங்கும் பரவியிருந்தனர். டெல்லி சுல்தான்களுக்குக் கட்டுப் பட்டு தெற்கே நிஜாமும், வேறு பல தட்சிண சுல்தான்களும் ஆட்சி புரிந்து வந்தனர். மராத்திய வம்சத்தின் வீர பரம்பரையில் வந்த பல மாவீரர்களும் இவர்களில் எவராவது ஒருவரிடம் தளபதிகளாக, போர்ப்படையில் முக்கிய பதவிகள் வகித்துக் கொண்டு வாழ்ந்தார்கள். இவர்கள் நிலையாக ஓரிடத்தில் ஒருவரிடம் பணிபுரியாமல் அவ்வப்போது மாறுகின்ற சூழ்நிலைகளுக்கேற்ப தலைமையை மாற்றிக் கொண்டும், இன்றைய அரசன் நாளைய விரோதியாகப் போரிடுவது போன்ற பல நிகழ்ச்சிகள் தட்சிண சுல்தான்களிடையே நடைபெற்றுக் கொண்டிருந்தன.

                நாம் எடுத்துக் கொண்டிருக்கும் இந்த வரலாற்றுப் பதிவுகள் நடந்த காலத்தில் தேவகிரி எனுமிடத்தில் நிஜாம் பாதுஷாவும், விஜயதுர்க்கம் எனுமிடத்தில் இப்ராஹிம் பாதுஷாவின் புதல்வன் அலியடில்ஷா என்பாரும் ஆட்சி புரிந்து கொண்டிருந்தார்கள். இவ்விரு சுல்தான்களுக்கிடையே போர் மூண்டது. அந்தப் போரில் நிஜாமின் பக்கம் மாலோஜி, விட்டோஜி எனும் இரண்டு மராத்திய வீரர்கள் நிஜாமுக்கு வெற்றிகளைத் தேடித் தந்து கொண்டிருந்தார்கள். அவர்களுடைய சேவையைப் பாராட்டி நிஜாம் தான் வென்ற பகுதிகளில் நாலில் ஒரு பாகத்தை இவர்களுக்கென்று பகிர்ந்தளித்தார்.

                இவ்விருவரில் மாலோஜி என்பவருக்கு இரண்டு மகன்கள் பிறந்தார்கள். முதல்வர் ஷாஜி, அடுத்தவர் சரபோஜி என்றும் பெயரிடப்பட்டனர். ஷாஜிக்கு ஐந்து வயதாக இருக்கும்போது அவர் தந்தை மாலோஜி ஒரு போரில் இறந்து போனார். குழந்தைகள் சிறுவர்களாக இருந்ததால் அவ்விருவரையும் விட்டோஜியின் பாதுகாப்பில் வளர்ந்தனர்.

                ஷாஜி இளைஞனாக வளர்ந்த போது துக்காவுபாயி எனும் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர் 1620இல் சதாராவின் மன்னராக ஆனார். அவர் சதாராவின் மன்னராக இருந்த போது இரண்டாவது மனைவியாக ஜீஜாபாயி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.

                தேவகிரியின் பாதுஷா நிஜாம் விஜயதுர்கம் பாதுஷா அலியடில்ஷாவை மதிக்கவில்லை. காரணம் தன்னுடைய படையில் மாபெரும் மராத்திய வீரர்கள் ஷாஜி முதலானோர் இருக்கும் தைரியம் அவருக்கு. இந்த சூழலில் விஜயதுர்க்கம் பாதுஷா அலியடில்ஷா தேவகிரி பாதுஷா நிஜாமுடன் டெல்லி சுல்தான் ஜஹாங்கீரின் உதவியுடன் போருக்குப் புறப்பட்டார். இந்தப் போரில் நிஜாமின் படைத் தளபதி ஷாஜியிடம் டெல்லி சுல்தான் படைகள் தோற்றுப் போயின. அதே போரில் ஷாஜியின் தம்பி சரபோஜி அலியடில்ஷாவின் படைத் தளபதியான ஜோகர்கான் என்பவரால் கொல்லப்பட்டார். அந்தப் போரில் வெற்றி ஈட்டித் தந்த ஷாஜியை நிஜாம் கெளரவித்துப் பாராட்டினார். பிறகு ஷாஜி சதாராவுக்குத் திரும்பிவிட்டார்.

                இந்த சூழ்நிலையில் நிஜாம் படைக்கு வெற்றி ஈட்டித் தந்த ஷாஜி தன் பக்கம் இழுக்க வேண்டுமென்று விஜயதுர்க்கம் பாதுஷா அலியடில்ஷா விரும்பினார். எதிரியின் படைத் தளபதி தன் பக்கம் வருவாரா என்றும் சந்தேகித்தார். ஆனால் நிஜாமுக்கும் ஷாஜிக்கும் இடையே ஏதோ மனவருத்தம் இருந்த காரணத்தால் அவர் தயக்கமின்றி எதிரியாக இருந்த அலியடில்ஷா பக்கம் சேர்ந்து விட்டார். ஷாஜி தன் பக்கம் வந்துவிட்ட தைரியத்தில் அலியடில்ஷா மீண்டும் நிஜாம் மீது போரிட ஷாஜி தலைமையில் பெரும் படையை அனுப்பினார். அப்போது நடந்த போரில் அலியடில்ஷாவின் படை ஷாஜி தலைமையில் பெரும் வெற்றியைப் பெற்றது. நிஜாம் தோற்றுப் போனார். இந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக அலியடில்ஷா தன்னுடைய ஆட்சியின் கீழிருந்த பகுதிகளில் பாதியை ஷாஜிக்கு பகிர்ந்து அளித்து அவரை கெளரவப்படுத்தினார். தொடர்ந்து அலியடில்ஷா வின் தளபதியாக ஷஜி தென்னிந்தியாவின் பல பகுதிகள் மீது போர் தொடுத்து இப்போதைய கேரளப் பகுதிகளையும் வென்று பெரும் புகழ் பெற்றார். அவர் வென்றெடுத்த பகுதிகளிலுள்ள சிற்றரசர்கள் எல்லாம் அலியடில்ஷாவுக்குக் கப்பம் கட்டவும் ஏற்பாடு செய்து விட்டார்.

                வெற்றி வீரராக ஷாஜி விளங்கி வருகையில் 1627 பிப்ரவரி 19இல் மனைவி ஜீஜாபாயிக்கு முதல் மகன் பிறந்தான், அந்த மகன் பெயர் சாம்பாஜி. இந்த சாம்பாஜி வளர்ந்து பெரியவனாக ஆன போது  சிவனேரி கோட்டையின் தலைவர் விசுவாசராவ் என்பவரின் பெண்ணான ஜெயந்திபாயி என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். பிறகு 1629இல் ஜீஜாபாயிக்கு இரண்டாவது மகன் பிறந்தார். அந்தக் குழந்தை பிறந்த ஊரான சிவனேரியின் நினைவாக அந்த மகனுக்கு “சிவாஜி” என்று பெயரிட்டனர். ஷாஜி பிறந்த குழந்தையுடன் சதாராவுக்குச் சென்றுவிட்டார். அங்கு 1630இல் ஷாஜியின் முதல் மனைவியான துக்காபாய் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

                ஷாஜி தேவகிரி பகுதியைச் சேர்ந்த எண்பது கோட்டைகளைத் தனதாக்கிக் கொண்டார். அப்போதிருந்த பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மராத்தியர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து சூரிய வம்சம் என்றும் சந்திர வம்சம் என்று பிரித்து வாழ்ந்தனர். ஷாஜியின் வளர்ச்சியைக் கண்ட டெல்லி பாதுஷா அலியடில்ஷாவுடன் இணைந்து ஷாஜிக்கு எதிராக பீமா நதிக் கரையில் மூன்றாண்டு காலம் போரில் ஈடுபட்டார். ஷாஜி ஒரு சமாதான உடன்படிக்கையின்படி தான் வென்ற நிலப் பகுதிகளை டெல்லி பாதுஷாவுக்கும் அலியடில்ஷாவுக்கும் பிரித்துக் கொடுத்துவிட்டுத் தான் சதாராவுக்குச் சென்று விட்டார்.

                அலியடில்ஷாவுக்கும் ஷாஜிக்கும் சமாதானம் ஏற்பட்டு விட்ட பிறகு அலியடில்ஷா அவரைத் தென் புறத்திலுள்ள பிரதேசங்களில் உள்ள சிற்றரசர்களிடம் சென்று கப்பம் தொகை பெற்று வரப் பணித்தார்.  அவரும் அவருடன் ரணதுல்லாகான் என்பவரும் இக்கேரி ராஜா வீரபத்ரர், கொங்க நாயக்கர், காவேரிப்பட்டணத்து ஜெகதேவர், ஸ்ரீரங்கப்பட்டனம் கண்டீரவர், தஞ்சாவூர் விஜயராகவ நாயக்கர், செஞ்சி வெங்கட்ட நாயக்கர், மதுரை திருமலை நாயக்கர் முதலான அரசர்களையெல்லாம் வென்று அந்த நாடுகளை கப்பம் கட்டச் செய்தார். இதனால் மகிழ்ந்த அலியடில்ஷா ஷாஜிக்கு பெங்களூர் ஜாகீரைக் கொடுத்து அனுப்பினார்.

                பெங்களூரு ஷாஜிக்குப் பிடித்தமான இடமாக இருந்தமயால் ஷாஜி தன் மனைவியர்களுடன் சதாராவிலிருந்து கிளம்பி பெங்களூருக்குச் சென்று தங்கினார். மகன்கள் சிவாஜிக்கும் ஏகோஜிக்கும் கல்வி அங்குதான் கற்பிக்கப்பட்டது. மகன் சிவாஜிக்கு வயது பன்னிரெண்டாயிற்று. ஷாஜியின் முதல் மனைவியின் மகன் ஏகோஜிக்கு 1640இல் இவர் வயதில் சிறியவர் என்ற போதிலும் அவருக்கு இளவரசுப் பட்டம் சூட்டினார். பெங்களூருக்கும் அவரையே அதிபதியாக்கினார். மூத்த மகன் சிவாஜிக்கு சதாரா, புனே பகுதிகளுக்கு இளவரசுப் பட்டம் சூட்டி அங்கு அனுப்பி வைத்தார். சதாராவுக்குச் சென்ற சிவாஜி வீரத்தினால் பல சிறு சிறு கோட்டைகளையெல்லாம் பிடித்துத் தனதாக்கிக் கொண்டார்.

                இவ்வளவும் ஆன பிறகு அலியடில்ஷா பெங்களுரில் இருந்த ஷாஜியை தன்னிடம் அழைத்துவருமாறு தூது அனுப்பியும் ஷாஜி போகவில்லை. அதனால் ஆத்திரமடைந்த அலியடில்ஷா முஸ்தபாகான் என்பவரின் தலைமையில் பல தளபதிகளையும் சேர்த்து ஒரு படையுடன் அனுப்பி ஷாஜியைக் கட்டாயமாகப் பிடித்து வரும்படி அனுப்பினார். ஆனால் அலியடில்ஷாவின் வஞ்சனை எண்னத்தை அறிந்த ஷாஜி தன் மூத்த மகன் சாம்பாஜியைப் பெங்களூரில் ஏகோஜிக்குத் துணையாக இருக்கும்படி சொல்லிவிட்டு தான் தன்னுடைய படைத் தலைவர்களுடன் முஸ்தபாகானைப் பார்க்கப் போனார். தன்னைத் தேடி வந்த ஷாஜியை முஸ்தபாகான் அருகில் ஒரு கூடாரத்தில் தங்க வைத்து, ஒருநாள் இரவு தன் படைவீரர்களைக் கொண்டு அந்த கூடாரத்தைச் சூழ்ந்து கொண்டான். அப்போது நடந்த போரில் ஷாஜி காயம் பட்டுக் கீழே மூர்ச்சையாகி விழுந்தார். மூர்ச்சைத் தெளிந்த ஷாஜியை முஸ்தாபாகான் அவரை அலியடில்ஷாவைக் காண விஜயபுரத்துக்குச் செல்லுமாறு பணித்தான்.

                இதனைக் கேள்விப்பட்ட சாம்பாஜி ஒரு பெரு படையுடன் புறப்பட்டு வந்து முஸ்தாபாகானுடன் போரிட்டார். நடந்த விஷயங்களையெல்லாம் கேள்விப்பட்ட சிவாஜி அலியடில்ஷாவோடு போருக்குத் தயாரானார். இவற்றையெல்லாம் அறிந்து அலியடில்ஷா மூன்று தளபதிகளின் தலைமையில் படைகளை அனுப்பி புரந்தர் கோட்டையில் இருக்கும் சிவாஜியைச் சிறைப்பிடித்து வருமாறு அனுப்பி வைத்தார். அந்த மூன்று தளபதிகளின் தலைமையில் சென்ற படை முதலில் சிரோபலம் எனும் கோட்டையைப் பிடித்து அங்கு தங்களில் ஒருவனான பல்லாளன் என்பவனை இருக்கச் சொல்லிவிட்டு, மற்ற இருவரான பத்தேகான், முசேகான் ஆகியோர் சிவாஜி இருந்த புரந்தர் கோட்டையை முற்றுகை யிட்டார்கள். சிரோபலக் கோட்டையை எதிரிகளிடமிருந்து மீட்க சிவாஜி பீமன் என்பவரின் தலைமையில் ஒரு படையை அங்கு அனுப்பினார். பீமன் அங்கு சென்று அங்கு முகாமிட்டிருந்த பல்லாளனைக் கொன்று, அந்தக் கோட்டையை மீட்டுக் கொண்டு சிவாஜியிடம் திரும்பினார். புரந்தர் கோட்டையை முற்றுகையிட்ட படைகளுடன் சிவாஜி தீரத்துடன் போரிட்டார். கொட்டையின் மீதேறி உள்ளே நுழைய முயன்ற வீரர்களைத் துரத்தினார். ஓடிய அவர்கள் மீண்டும் கோட்டையை நோக்கி வந்த போது சிவாஜி அந்த படைத்தலைவர்களில் ஒருவனான முசே கானைக் கொன்றார்.

                மராத்திய மாநிலத்தில் சித்திரக்கல் என்றொரு கோட்டை இருந்தது. அங்கு இருந்தவர்  மாபெரும் குதிரைப் படைகளுடன் வந்து பீஜப்பூர் கோட்டைக்குள் சென்று கொள்ளையடித்துக் கொண்டு போனார். இப்படி தனக்கு எதிராக எல்லாம் நடப்பதை அறிந்த அலியடில்ஷா தான் தணிந்து போக நிச்சயித்து தன்னிடம் வந்திருக்கும் ஷாஜிக்கு எந்தத் தீங்கும் இழைக்காமல் அவரை திரும்ப அனுப்புவதே சிறந்தது என்றெண்ணி அவரை விடுவித்தார். அப்படி அவரை அனுப்பும் போது அலியடில்ஷா ஷாஜியிடம் பெங்களுரில் இருந்து சாம்பாஜியையும், ஷாஜி குடும்பத்தார் அனைவரையும் சதாராவுக்குத் திஎரும்பிவிட வேண்டுமென்றும், சிவாஜி  சிம்ஹகட் கோட்டையை விட்டுவிட வேண்டுமென்றும் அறிவுறுத்தினார். சித்திரக்கல் கொட்டையில் இருப்பவர் பீஜப்பூர் கோட்டையை கொள்ளை யடித்துச் சென்றதால் அங்கு ஷாஜி படையுடன் சென்று அவனைக் கொன்றுவிட்டு வருமாறு பணித்தார். ஷாஜியும் அவ்வண்ணமே சித்திரக்கல் சென்று போரிட்டு கொள்ளையடித்த பரமா என்பவனைக் கொன்று அவன் சேர்த்து வைத்திருந்த செல்வங்களையெல்லாம் கொண்டு வந்து அலியடில்ஷாவிடம் கொடுத்துவிட்டு, தான் சதாராவுக்குத் திரும்பினார்.

                சிவாஜி புரந்தர் கோட்டைக்குச் சென்றிருந்தார். அங்கு தன் அமைச்சரான சுவர்ணர் என்கிற சோஜாஜி பண்டிதரை அழைத்து அதுவரை நடந்தவற்றையெல்லம் சொல்லி, டெல்லி பாதுஷா ஒளரங்கசீபையும், அலியடில்ஷாவையும் அடக்க வேண்டுமென்று ஆலோசனை கேட்டார். அவரும் அப்படிச் செய்வது சரியே என்று ஆலோசனை சொன்னார். டெல்லி பாதுஷாவோடும், அலியடில்ஷாவோடும் போரிடுவதற்கு சரியான இடம் எது என்பதை அமைச்சருடன் சிவாஜி ஆலோசனை செய்தார். மேலைக் கடற்கரைப் பக்கம் பிரதாபகெடி எனுமிடத்துக்கு அருகிலுள்ள ஜாவளி எனும் நகரத்தை முதலில் நம்மதாக ஆக்கிக் கொள்ள வேண்டுமென்றும், அங்கு செல்லுகின்ற வழியில் இருக்கும் சிற்றரசர்களெல்லாம் அலியடில்ஷாவுக்குக் கப்பம் கட்டுபவர்கள் என்பதால் முதலில் அவர்களை வென்று வழி ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமென்று முடிவு செய்தார். அதற்கு முதலில் சிம்மகெடி எனும் கோட்டையைக் கைப்பற்ற வேண்டும் என்று பெரும் படையைத் தயார் செய்தார். விஜயதசமி நாளில் படைகளுடன் சிவாஜி புறப்பட்டார். வழியில் எதிர்த்து வந்த அனைவரையும் வென்றார். பாசிராஜா, கிருஷ்ண ராஜா, ஜனகராஜா, சந்திரராஜா ஆகியோரின் கோட்டைகளைப் பிடித்து அவற்றுக்கு ராய்கட் என்று பெயர் சூட்டிவிட்டு ஜெயவலி நகரத்துக்கு வந்தார். அங்கு இருந்த சந்திரராஜாவை விரட்டிவிட்டு அங்கும் தங்கள் தளபதிகளை நிறுத்தினார். தொடர்ந்து சென்று மேலைக் கடற்கரையை அடைந்து அங்கே கடலையொட்டி ஒரு கோட்டையை எழுப்பி அதற்கு சிவலங்கை என்று பெயர் சூட்டினார்.  அந்தக் கோட்டையில் அரியணையேறிய சிவாஜி முதலாவதாக தன் பெயரில் ஒரு சகாப்தம் தொடங்க எண்ணி அதற்கு சிவசகம் என்று புதிய ஆண்டு வரிசை முறையை உருவாக்கினார். இந்த தகவல்களையெல்லாம் துரத்தியடிக்கப்பட்ட சந்திரராஜா அலியடில்ஷாவிடம் சொன்னார்.

                சிவாஜியை ஒழித்தால் தான் தனக்கு நிம்மதி என்று கருதி அலியடில்ஷா தன்னிடமிருந்த பல தளபதிகளில் அப்சல்கான் என்கிற அப்துல்லாகானை அழைத்து, சிவாஜி தனக்கு எதிராக செய்துவரும் செயல்களையெல்லாம் சொல்லி, உடனே அவருடன் பன்னிரெண்டு தளபதிகளையும் படைகளுடன் அழைத்துச் சென்று, சிவாஜியைச் சிறைப்படுத்தி கொன்டுவருமாறு ஆணையிட்டார். அந்த நேரத்தில் சிவாஜி புனே நகருக்கு வந்திருந்தார். அவர் புனேவில் இருக்கும் நேரத்தில் சந்திரராஜா படையுடன் சென்று ஜாவளிக்குச் சென்று  அதையும் பிரதாபகெடியையும் பிடித்துக் கொள்ள அனுப்பி வைத்தார். அப்சல்கானும் தனக்களிக்கப்பட்ட பணியை, சிவாஜியைப் பிடித்துக் கொண்டு வருவதற்காகப் படையுடன் புறப்பட்டான். பல சந்தர்ப்பங்கள் அப்சல்கானுக்கு எதிராக அமைந்திருந்த போதிலும் அவன் சிவாஜியைப் பிடிப்பதே நோக்கம் என்று புறப்பட்டான்.

                சிவாஜி பவானி தேவி. குலதெய்வமான ஜெகதாம்பா துளஜா பவானியை மனத்தால் துதித்துக் கொண்டு எந்த காரியத்திலும் ஈடுபடுவார். அப்படி அவர் வழிபடும் அந்த பவானி சில நேரங்களில் அவர் மனதில் சொல்வதை அவர் உடனடியாகச் செய்து முடிப்பது வழக்கம். அது போல அப்போது பவானி அம்மன் சிவாஜியை உடனடியாக ஜாவளிக்குத் திரும்பச் சொல்வது போல உணர்ந்து, புனே உட்பட பல கொட்டைகளை வலுப்படுத்தி வைக்க ஆணையிட்டுவிட்டு, அந்த வழியாக அப்சல்கான் வரும்போது அவனைத் தடுக்காமல் மேலே போக அனுமதித்து விடுமாறும் பணித்தார். வழியில் அவரவர் படைகளை அப்சல்கான் கண்களில் படாமல் ஒளித்து மறைந்திருக்கச் செய்யுமாறும் கேட்டுக் கொண்டார். அப்சல்கானை தன்னுடைய இருப்பிடம் வரை வரவிட்டுவிட்டு அவனை அழித்தவுடன் நகரா அடித்து செய்தி பரப்பப்படும், அது ஒவ்வொரு கோட்டையாக பரவிவிடும். அப்போது அவரவர் படைகளை வெளிக் கொணர்ந்து அப்சல்கானுடன் வருகின்ற படையை அழிக்க வேண்டுமென்று உத்தரவிட்டுச் சென்றார்.

                அப்சல்கான் வழியில் உள்ள பிரபலமான ஆலயங்களைக் குறிப்பாக பண்டரிபுரத்துக்குச் சென்று விட்டோபா மூர்த்திக்கு ஊறு செய்துவிட்டுச் செல்ல விரும்பினார். ஆனால் அங்கு ஆலயத்தில் இருந்த விட்டோபா மூர்த்தியின் விக்ரகம் அங்கு இல்லாமல் போய் விட்டது. ஏமாற்றமடைந்த அப்சல்கான் துளஜாபுரம் சென்று அங்கு கோயில் கொண்டிருந்த துளஜா பவானி விக்ரகத்துக்கு கேடு விளைவிக்க எண்ணி அங்கு போனால், அங்கும் துளஜா பவானி விக்ரகம் காணாமல் போயிருந்தது. தொடர்ந்து விடாமல் அவன் செம்பு மகாதேவரின் ஆலயத்தை உடைக்க விரும்பி அங்கே சென்று தன் அழிவு வேலையைக் காட்டினான். அவன் படையில் இருந்த இதர மராத்திய சர்தார்கள் அப்சல்கானின் இந்த அடாத செயலைத் தடுத்தார்கள். பின்னர் அங்கிருந்து பல்லிவனம் எனும் இடத்துக்குச் செல்ல, அங்கு கோயில் கொண்டிருந்த விக்ரகமும் மறைந்து போய்விட்டது.

                தான் நினைத்தபடி சிவாஜி ராஜாவுக்கு தீங்கு விளைக்க எண்ணி அழிவு வேலைகளை நிறைவேற்ற முயன்றாலும் அவனுக்கு ஏமாற்றம் மட்டுமே விஞ்சியது. அப்சல்கான் தன் பக்கமிருந்த கிருஷ்ணாஜி பண்டிதரை அழைத்து சிவாஜியிடம் தூது அனுப்பினான். அவர் போய் சிவாஜியைச் சந்தித்து, அவர் தன் வசமுள்ள சிமாகெடி, பீமநதி, புரந்தரகெடி ஆகியவற்றை அப்சல்கான் வசம் ஒப்படைத்துவிட வேண்டுமென்றும், அவர் சிவாஜியை நேரில் சந்தித்துப் பேசும் போது வேறு எவைகளைச் செய்ய வேண்டுமென்று சொல்வார் என்று சொன்னார். சிவாஜி ராஜா இவர்களுடைய சதிகளை நன்கு உணர்ந்தவர் என்பதாலும் அப்சல்கான் என்ன எண்ணத்துடன் தன்னை நாடி வருகிறான் என்பதை உணர்ந்திருந்தாலும், அந்த அப்சல்கானைத் தான் ஜாவளியில் சந்திப்பதாக கிருஷ்ணாஜி பண்டிதரிடம் சொல்லி அனுப்பினார்.

                இதற்கிடையே அப்சல்கான் தன் பெரும் படையோடு வழிநெடுக எந்தவித எதிர்ப்புமின்றி படையை வழிநடத்திக் கொண்டு வந்து கொண்டிருந்தான். சிவாஜி ஒன்று நினைத்திருக்க அதற்கான திட்டங்களும் தயாராக இருக்க, இந்த விவரங்களையோ அல்லது அப்சல்கான் ஏதேனும் விளைவித்து விடுவானோ என்று சம்பாஜி ஒரு படையோடு வந்து அப்சல்கானை எதிர்த்தார். ஆனால் கொடு வெறி பிடித்த அப்சல்கான் அந்தப் போரில் சம்பாஜியை வீழ்த்தி அவரைக் கொன்று விட்டான். இந்த செய்தியைக் கேட்ட தந்தை ஷாஜி மனம் உடைந்து படுத்த படுக்கையானார். இரண்டு மாதங்கள் படுத்திருந்த அவர் மகன் இறந்த சோகத்தால் பீடிக்கப்பட்டு இறந்தார். அது கி.பி.1658ஆம் ஆண்டு. ஷாஜியின் இறுதிச் சடங்குகளை ஏகோஜி நடத்தினார். ஜீஜாபாய் தன் மகனான சிவாஜியைக் காண வந்திருந்தார். அவரைப் பிரதாபகெடியில் தங்க வைத்துவிட்டு சிவாஜி தன் அண்ணன் வீழ்த்தப்பட்ட ஆத்திரத்தில் அப்சல்கான் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தார்.

                ஜாவளிக்கு வந்த அப்சல்கானை ஊருக்கு வெளியில் ஒரு கூடாரம் அமைத்து அங்கே வந்து தங்கியிருந்து தன்னை அங்கேயே சந்தித்துப் பேசலாம் என்று சிவாஜி ராஜா சொல்லியனுப்பி யிருந்தார். அதன்படி அப்சல்கான் ஊருக்கு வெளியில் இருந்த அந்த முகாமில் தங்கினான். அவனை வரவேற்க பெருமளவில் ஏற்பாடுகளைச் செய்து அங்கே விருந்துக்கும், ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை நடத்தி, அப்சல்கானுக்கு  பானங்களையும் கொடுத்து சிவாஜி சரியான நேரத்துக்குக் காத்திருந்தார்.

                வரவேற்புகள் எல்லாம் முடிந்த பின்னர் சிவாஜி அப்சல்கானை வரவேற்றார். சிவாஜியின் அழைப்பை ஏற்று அவரை அப்படியே தழுவிக் கொள்வது போல கரங்களை அகல விரித்து அவரைக் கட்டிப் பிடித்தான், உடனே மடியில் இருந்த கட்டாரியை எடுத்து சிவாஜி ராஜாவின் வயிற்றில் குத்தினான். இதுபோல வெல்லாம் நடக்குமென்று தெரிந்து வைத்திருந்த சிவாஜி ராஜா தான் புறப்படு போதே தன் உடையின் உட்பகுதியில் மெல்லிய இரும்பினால் ஆன கவச ஆடையை அணிந்திருந்தார். அதில் கத்தி இறங்காததால் அப்சல்கானின் கத்திக் குத்து சிவாஜி ராஜாவின் வயிற்றில் இறங்கவில்லை. எதற்கும் தயாராக இருந்த சிவாஜி ராஜா உடனே தன் பிச்சுவா கத்தியால் அப்சல்கானை அடித்து இடது கையில் அணிந்திருந்த புலி நகத்தால் அவன் வயிற்றைக் குத்தி இழுத்த வேகத்தில் அவன் வயிறு கிழிந்து உள்ளிருந்து குடல் வெளியே விழுந்தது. காட்டெருமை போல இருந்த அப்சல்கான் அதைப் பொருட்படுத்தாமல் வெளிவந்த தன் குடலை மேலே அணிந்திருந்த போர்வையால் மீண்டும் வயிற்றுக்குள் தள்ளி அது வெளிவரா வண்ணம் இறுகக் கட்டிக் கொண்டு தன் பட்டா கத்தியைக் கொண்டு சிவாஜியைத் தாக்க எத்தனித்தார். போரில் புலியான சிவாஜி அவனைத் தன் பட்டாக் கத்தியால் அடித்துத் தாக்கி வீழ்த்தினார். 1659இல் சிவாஜியின் வாளுக்கு இரையானான் அப்சல்கான்.

                இதெல்லாம் க்ஷத்திரியர்களுக்கிடையே யான விவகாரம் என்று அமைச்சர் கிருஷ்ணாஜி பண்டிதர் வேடிக்கைப் பார்க்க பார்ப்பதை விட்டு இவர் ஒரு கத்தியை எடுத்துக் கொண்டு சிவாஜி யோடு போரிட வந்தார். அவரை ஒரு பொருட்டாகவே கருதாத சிவாஜி, அந்தணர்களுக்குத் தீங்கு விளைப்பதை விரும்பாத அந்த மாபெரும் வீரன் , அவரை விலக்கிவிட்டு அலட்சியப்படுத்தி விட்டு  போய்க் கொண்டிருந்தார். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சிவாஜி ராஜாவின் மெய்க்காவலன் ஒருவன் அந்த கிருஷ்ணாஜி பண்டிதரைத் தன் வாளால் ஒரே வெட்டில் வெட்டி சாய்த்து விட்டான். தர்மத்தை இழந்த அந்த பண்டிதன் பிணமாகி விழுந்தான்.

                முன்பே சிவாஜி தன்னுடைய தளபதிகளுக்கு அறிவுறுத்தியிருந்தபடிக்கு அவர்கள் அனைவரும் வரும் வழி நெடுக அப்சல்கான் படையை போகவிட்டு விட்டு மறைந்து கொண்டிருந்தார்கள். சிவாஜி அப்சல்கானைப் பழி தீர்த்தவுடன் நாகரா மூலம் தகவல் அனுப்பப்படும் என்று சொல்லியிருந்தபடி நாகரா ஒலிக்கப்பட்டது. ஓசை கேட்கும் தூரத்தில் இருந்த இன்னொரு இடத்தில் இந்த சத்தத்தைக் கேட்டு அங்கிருந்த நாகரா ஒலிக்கப்பட்டு, இப்படியே வழி நெடுக இருந்த கோட்டைகளுக்கெல்லாம் தகவல் அறிவிக்கப்பட்டு விட்டது. அப்சல்கான் விழுந்த உடனே அவனுடைய படைகளை சிவாஜியின் படை சூழ்ந்து கொண்டு அதை சின்னாபின்னப் படுத்திவிட்டது. சிறை பிடிக்கப்பட்ட அப்சல்கானின் சர்தார்களை சிவாஜி ராஜா மரியாதைகளோடு திரும்பச் செல்ல அனுமதித்தார். இந்த செய்திகள் எல்லாம் பிஜப்பூர் சுல்தான் அலியடில்ஷாவுக்குத் தெரிவிக்கப்பட்டது. தன்னுடைய சூழ்ச்சி பலிக்காததோடு தான் பெரிதும் நம்பியிருந்த அப்சல்கான் கொலையுண்டது அவருக்கு பெரும் வருத்தத்தை அளித்தது. அவன் ஒன்றைப் புரிந்து கொள்ளவில்லை. சிவாஜி ராஜாவின் அண்ணன் சம்பாஜியைப் போரில் கொன்ற போது சிவாஜி ராஜாவும் அப்படித்தானே வருந்தியிருப்பார்கள். இதை உணராதவராக அலியடில்ஷா இப்போது தன் நம்பிக்கைக்குரிய தளபதி இறந்ததற்காக வருத்தப்படுவது எப்படி சரியாகும்.

                சிவாஜி புனேயில் இருக்கும் போதே அலியடில்ஷா தன்னை அழிக்க அப்சல்கானை அனுப்புகிறார் என்கிற செய்தியைக் கேள்விப்பட்டு தன் உடனடியாக புறப்பட்டு வழிநெடுக தக்க ஏற்பாடுகளைச் செய்து விட்டு அப்சல்கானைத் தன்னுடைய இடத்தில் வைத்து ஒழித்து விட திட்டமிட்டார். அதன்படி எல்லாம் முடிந்தது. அவர் புனேயை விட்டு புறப்படும் முன்பாக அங்கு நேதாஜி என்பவரை அங்கு பார்த்துக் கொள்ளும்படி ஏற்பாடு செய்துவிட்டு வந்திருந்தார்.  அலியடில்ஷா தன் தளபதி அப்சல்கான் இறந்த கோபத்தில் பெரும் படையொன்றைத் திரட்டி வருகிறான் என்கிற செய்தி நேதாஜிக்குக் கிடைத்தது. உடனே அந்தத் தகவனை சிவாஜி ராஜாவுக்கு தெரியப்படித்தினார்.

                இவற்றையெல்லாம் எதிர்பார்த்திருந்த சிவாஜி தன்னுடைய பெரும் படையுடன் புறப்பட்டு வழியில் அலியடில்ஷாவுக்குச் சொந்தமான பல கோட்டைகளைப் பிடித்துக் கொண்டார். அவர்களில் ஒருவனான ஹிலால்கான் என்பவன் சிவாஜியிடம் சரணடைந்து அவர் பக்கம் போய்விட்டான். கட்சித் தாவல் அப்போதே இருந்திருக்கிறது. சிவாஜி ராஜா தான் வென்ற இடங்களில் எல்லாம் கோட்டைகளைத் தன் தளபதிகள் வசம் பாதுகாப்பாக இருக்க வைத்துவிட்டு பனால்கட் எனுமிடத்தில் இருந்த கோட்டையைக் கைப்பற்றி அங்கே தங்கினார். சிவாஜி இந்தக் கோட்டையைத் தாக்கக் கூடும் என்பதை அறிந்திருந்த அலியடில்ஷா ருஸ்தும்கான் என்பவரை அனுப்பி விவரம் தெரிந்து வர அனுப்பினார். அவர் சென்று சிவாஜி பனால்கட்கெடியைப் பிடித்துக் கொண்டு அங்கே தங்கியிருக்கும் விவரத்தை அலியடில்ஷாவுக்குத் தெரியப்படுத்தினார்.

                தோல்வியைத் தாங்கிக் கொள்ள முடியாத அலியடில்ஷா இந்த விவரங்களையெல்லாம் டெல்லி பாதுஷா ஒளரங்கசீபுக்குச் சொல்லி அனுப்பினார். இதனைக் கேட்ட ஒளரங்கசீப் கோபமடைந்து ஜுல்ப்கர் கான் என்பவரின் தலைமையில் ஒரு பெரும் படையை அனுப்பினார். இந்த டெல்லி படையுடன் ருஸ்தும்கான் படையும் சேர்ந்து கொண்டு சிவாஜி இருக்கும் பனால்கட் கோட்டையை நோக்கி வந்தன.  இப்படி டெல்லி பாதுஷா படையும், ருஸ்தும்கான் படையும் தன்னைத் தாக்க வரும் செய்தியறிந்து சிவாஜி தன் கோட்டையை விட்டு புறப்பட்டு எதிரியின் படைகள் வரும் வழியில் குறுக்கிட்டு அவர்கள் எதிர்பாராத படிதாக்கி அவர்களைத் தோற்கடித்து விரட்டியடித்தார். ஓடியவர்கள் திரும்பத் திரும்ப வந்து சிவாஜியைத் தாக்க முயன்றும் ஒன்றும் செய்யமுடியாமல் தோற்றுப் போயினர்.

                தன் படை, அலியடில்ஷாவின் சுல்ப்கர்கான் படையும் சிவாஜியிடம் தோற்ற செய்தியைக் கேட்டு ஒளரங்கசீப் கோபமடைந்து சிவாஜி இருக்குமிடத்தை விசாரித்தார். சிவாஜி எதிரிகளின் கோட்டைகளையெல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக வென்று விட்டதையும், சிவாஜியின் படை நேதாஜி தலைமையில் மேலும் பல கோட்டைகளை வென்றெடுக்க முயல்வதையும் கேள்விப் பட்டார். உடனே ஒளரங்கசீப் தன் மாமனாரான சயிஷ்டாகான் என்பவரை அழைத்து பல தளபதிகளின் தலைமையில் பெரும்படையொன்றை அனுப்பி எப்படியாவது சிவாஜியைப் பிடித்து வருமாறு பணித்தார். அதன்படி சயிஷ்டாகான் பெரும் படையோடு சிவாஜி இருக்குமிடம் நோக்கிப் போய்க் கொண்டிருந்தார். இதற்கிடையே அலியடில்ஷா சிவாஜியின் திறமைகள் சூழ்ச்சிகள் அனைத்தும் அறிந்தவனாக இருந்தமையால், சயிஷ்டாகான் வருவதை அறிந்தால் சிவாஜி அவரை வழிமறிக்க வாய்ப்பிருப்பதால், அவரை பனால்கட் கோட்டையிலிருந்து வெளிவராத படி கொட்டையை முற்றுகை யிடுமாறு ஜோகர்கான் என்பவர் தலைமையில் ஒரு படையை அனுப்பி வைத்தார். அதன்படியே ஜோகர்கான் தன் படையுடன் சென்று பனால்கட் கோட்டையை கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் முற்றுகையிட்டார்.

                ஒளரங்கசீபின் மாமனாரான சயிஷ்டாகான் சக்ராபதி கோட்டையை முற்றுகை யிட்டார். இப்படி தான் இருக்கும் கோட்டையையும், சக்ராபதி கோட்டையும் எதிரியின் படைகள் முற்றுகை இட்டிருப்பதைப் பற்றி சிவாஜி பொருட்படுத்தவில்லை. ஜீஜாபாய் தன் மகன் சிவாஜி பனாலகெடி கோட்டையில் மாட்டிக் கொண்டிருக்கிறார் என்கிற செய்தியைக் கேள்விப் பட்டார். சயிஷ்டாகான் சக்ராபதி கோட்டையை முற்றுகையிட்டிருக்கும் செய்தியையும் கேள்விப் பட்டார். தன் மகனை எப்படியும் இந்த இக்கட்டான சந்தர்ப்பத்தில் காப்பாற்றி வெளிக்கொணர வேண்டுமென்று ஜீஜாபாய் திட்டமிட்டார். சிவாஜியின் புனா தளபது நேதாஜியும் இன்னொரு தளபதியான ஷிலால் கான் என்பவரும் அப்போது ஜீஜாபாயைச் சந்திக்க வந்திருந்தனர்.  அவர் கேட்டுக் கொண்டபடி சிவாஜியை மீட்பதற்காக அவ்விருவரும் பனால்கெடி கோட்டைக்குப் படையுடன் புறப்பட்டார்கள். அவர்களை சயிஷ்டாகான் வழிமறித்தான். அப்போது நடந்த போரில் சிவாஜிக்கு ஆதரவாகச் சென்ற தளபதி ஷிலால்கானின் மகன் இறந்து போனான். இதையெல்லாம் சிவாஜி ராஜா கேள்விப்பட்டு வருத்தமடைந்தார். துளசி பவானி அம்மனை வேண்டிக் கொண்டு படுத்தார். நள்ளிரவில் எழுந்து பனாலாகெடிக்கு திரயம்பக பாஸ்கர் என்பவரைக் காவலுக்கு வைத்துவிட்டு ஒருவரும் அறியா வண்ணம் இவர் கோட்டையை விட்டு வெளிப்போந்து ஐந்து காத தூரத்தில் இருந்த விசால்கட் கோட்டையைச் சென்றடைந்தார். இதை அறிந்த டெல்லி படைத் தளபதி சிவாஜியைப் பிடித்து வர படையை அனுப்பினான். இதற்கிடையே பல்லிவனத்தரசர் எசவந்த ராஜாவும், ஸ்ரீஉங்கார்பூர் சூரியராஜாவும் விசால்கட் கோட்டையைப் பிடித்துக் கொள்ள முற்றுகை யிட்டனர். சிவாஜி அங்கிருந்தும் புறப்பட்டு ராஜகெடிக்குச் சென்று அங்கே இருந்த தாய் ஜீஜாபாயைச் சந்தித்து வணங்கினார். சிவாஜியைப் பிடிப்பதற்காக அனுப்பப்பட்ட டெல்லி தளபதி தன் இயலாமை குறித்து அவமானப் பட்டுத் திரும்பிப் போய்விட்டார்.

                சிவாஜியின் ஆணைப்படி திரயபக பாஸ்கர் பனாலகெடி கோட்டையை ஜோகர்கானிடம் ஒப்படைத்துவிட்டு சிவாஜியிடம் திரும்பி வந்தார். அலியடில்ஷாவுக்கு ஜோகர்கான் மீது சந்தேகம். இவன் சிவாஜிக்கு உடந்தையாக இருந்துய் அவரை விட்டுவிட்டான் என்று கருதினார். அதனால் அவனை அழைத்து சிவாஜியை விடுவித்ததற்காக உனக்கு என்ன கிடைத்ததோ அதை என்னிடம் கொடுத்திவிடு என்றார். தன் மீது சந்தேகம் கொண்டு இப்படிக் கேட்கிறார் அலியடில்ஷா என்பதறிந்து ஜோகர்கான் அங்கிருந்து புறப்பட்டு கர்னூலுக்குப் போய்விட்டான். இவன் இப்படித் தப்பிப் போய்விட்டான் என்று கருதிய அலியடில்ஷா ஒரு படையை அனுப்பி ஜோகர்கானுக்குத் தக்க பாடம் புகட்டும்படி சொல்லி அனுப்பினார். அவர்கள் சென்று ஜோகர்கானுக்கு விஷம் கொடுத்துக் கொன்று விட்டனர்.

                சிவாஜிக்கு ஒரு ரகசிய செய்தி வந்தது. சயிஷ்டாகான், கரதலப் கான் என்பவனுடன் ஒரு படையை அழைத்துக் கொண்டு ராஜகெடி கோட்டைக்கு வந்திருப்பதாக சிவாஜிக்குத் தகவல் கிடைத்தது. அவர் ரகசியமாக ஒரு சிறிய படையை ஜெயவலி எனும் பகுதியில் காட்டில் மறைவாகப் பதுங்கியிருக்குமாறு அனுப்பி வைத்தார். இந்த கரதலப் கான் வழிநெடுக பல கோட்டைகளைப் பிடித்துக் கொண்டு சிவாஜியின் படை மறைந்திருக்கும் காட்டுப் பகுதிக்குள் நுழைந்தான். அப்போத் கரதலப் கான் படைக்கும், சிவாஜி படைக்கும் கடும் போர் நிகழ்ந்தது. போரின் முடிவு தனக்கு சாதகமாக இருக்காது, தான் இறப்பதும் நிச்சயம் என்று தெரிந்த வுடன் அந்த கரதலப் கான் தான் கொள்ளையடித்த பொருட்கள் அனைத்தையும் சிவாஜி படையிடம் ஒப்படைத்துவிட்டுத் தன்னைத் தூண்டி அனுப்பி வைத்த சயிஷ்டாகானிடம் போய்ச் சேர்ந்தான்.

                சிவாஜி தன்னுடைய நண்பன் நேதாஜியுடன் படைகளுடன் புறப்பட்டு வல்லிவனத்துக்குச் சென்றார். அங்கு ஜெயவந்தி ராஜா என்பவர் அரசாண்டு கொண்டிருந்தார். இவர்கள் வல்லிவனத்துக்குப் போயிருந்த சமயம் அதன் அரசர் சிருங்கார்ப்பூர் எனும் பிரதேசத்தின் அரசரான சூர்யராஜா என்பவரிடம் போயிருந்தார். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் சிவாஜி ராஜா சித்ரபுளினம் எனுமிடத்துக்குச் சென்றார். அங்கிருந்து மேலைக் கடற்கரைப் பகுதிகளுக்கெல்லாம் சென்று அங்கிருந்த சிற்றரசர்களை யெல்லாம் தன் அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்து அங்கு வாணிபம் செய்ய வந்து இறங்கியிருந்த ஐரோப்பிய வெள்ளையின மக்களையும் தனக்குக் கப்பம் செலுத்தும்படி செய்துவிட்டு ஊர் திரும்பினார்.

                பிறகு சிவாஜி சித்ரதுர்க்கம் கோட்டையைப் பிடித்துக் கொண்டு அதற்கு மண்டன கட் என்று பெயர் சூட்டினார். பெங்களூர், செஞ்சி ஆகிய பகுதிகளையும் கைப்பறிக் கொண்டு அப்போது வியாபாரம் செய்ய வந்திறங்கியிருந்த பிரெஞ்சுக் காரர்களை 1680இல் சந்தித்து அவர்களுடன் ஒரு உடன்படிக்கை செய்து கொண்டு புனேவுக்குத் திரும்பினார்.

                இப்படி சிவாஜி ராஜா எவருக்கும் அடிபணியாத, எந்தப் போரிலும் வெற்றி பெற்று, தேவையான இடங்களில் சூழ்ச்சி செய்து யாரிடமும் தோல்வியடையாமல் தொடர்ந்து தன் வீரப்பயணத்தைச் செய்வது கண்டு அலியடில்ஷாவும், ஒளரங்கசீபும் சிவாஜியின் போர்த்திறமை குறித்து வியந்து போனார்கள். திரும்பத் திரும்ப சிவாஜியோடு மோதி சண்டையிட்டு தோல்வியடைவதினும் சும்மா இருப்பதே சுகம் என்று தீர்மானித்தனர். இருந்தாலும் ஒளரங்கசீபுக்கு இந்த சிவாஜியை உயிரோடு பிடித்துக் கொண்டு வந்து நேரில் பார்க்க வேண்டுமென்கிற ஆசை ஏற்பட்டது. அந்த ஆசை இதுவரை நிறைவேறவில்லை. சிவாஜியின் ஒரு உருவப் படத்தையாவது பார்க்கவேண்டுமென்று ஒளரங்கசீப் சொல்ல, ஒரு சித்திரம் வரைவோன் போய் சிவாஜியைப் பல இடங்களிலும் தேடியும் அவர் இருக்குமிடம் மட்டும் தெரியவே இல்லை. அப்படி அந்தச் சித்திரக்காரன் அவர் படத்தை வரைய திண்டாடிக் கொண்டிருக்கும் நேரத்தில் ஒரு நாள் சிவாஜி ஒரு குதிரையின் மீதேறி படு வேகமாக ஓட்டிச் சென்று கொண்டே அருகில் விளைந்திருந்த சோளக் கதிர்களைப் பறித்துத் தின்றுவிட்டு அதன் சக்கையை குதிரைக்கு ஊட்டிவிட்டதை அவன் பார்த்தான். உடனே அதை மனதில் வாங்கிக் கொண்டு அவன் சிவாஜியை ஒரு படம் வரைந்து ஒளரங்கசீபுக்கு அனுப்பி வைத்தான். அந்தப் படத்தில் சிவாஜி பயணித்த வேகம், அவர் சோளக் கதிரை பறித்த லாவகம், அதைத் தின்றுவிட்டு சக்கையை குதிரைக்குக் கொடுத்தது கண்டு ஒளரங்கசீப் வியந்து போய், இந்த மாவீரனை வெல்வது என்பது இயலாது என்ற முடிவுக்கு வந்தார்.  

                இதன் பிறகு சிவாஜி தன் அண்ணன் சம்பாஜியின் மனைவி மக்களையெல்லாம் கூட்டிக் கொண்டு ராஜாபுரத்தில் கொண்டு போய்த் தங்க வைத்தார். சம்பாஜியின் மகன் உமாஜி, அவர் மனைவி சக்குபாயி, அவர்களுக்கு ஒரு மகன் ஆகியோர் இருந்தனர். அந்த குழந்தைக்கு பரசோஜி என்று பெயர்.

                ஷாஜியின் முதல் மனைவியின் மகன் ஏகோஜி என்பதால் ஷாஜியின் விருதுகள் அனைத்தும் அவருக்குக் கிடைத்தன. ஏகோஜி தன் மனைவியரான தீபா பாயி, சயி பாயி ஆகியோருடன் தன் படையுடன் பெங்களூருக்குப் புறப்பட்டுச் சென்றார். இந்த சமயத்தில் அலியடில்ஷா ஏகோஜியுடன் நல்லுறவை ஏற்படுத்திக் கொள்ள விரும்பி அவருடன் பேசி அவரைத் தன் பக்கம் இழுத்துக் கொண்டதோடு அவரை பெங்களூரில் இருக்கும்படியும் கேட்டுக் கொண்டார்.

                இந்த காலகட்டத்தில் தஞ்சையை ஆண்டு கொண்டிருந்த விஜயராகவ நாயக்கருக்கும், மதுரை சொக்கநாத நாயக்கர் அவர் தம்பி அழகிரி நாயக்கர் ஆகியோருடன் பெண் கொடுத்தல் விஷயமாக விரோதம் உன்டாகி மதுரைக் காரர்கள் தஞ்சாவூர் மீது படையெடுத்து வந்து விஜயராகவ நாயக்கரையும் அவர் மகனையும் போரில் கொன்று விட்டனர். விஜயராகவ நாயக்கர் தான் போருக்குப் போகும் முன்பாக தன் நம்பிக்கைக்கு உரிய ஆள் ஒருவரிடம் சொல்லி தான் போரில் மாண்டு போனால் தன் அந்தப்புரப் பெண்கள் யாரும் மதுரை நாயக்கர் வசம் மாட்டிக் கொள்ளக் கூடாது என்றும் அப்படி நேருமானால் அரண்மனையின் அந்தப் புரத்தை வெடிவைத்துத் தகர்த்துவிட வேண்டுமென்று சொல்லிவிட்டுப் போனார். அதன்படி அவர் மாண்ட பின் அரண்மனை அந்தப்புரம் வெடி வைத்துத் தகர்க்கப்பட்டது. எல்லா பெண்களும் உயிரிழந்தனர். அதில் விஜயராகவ நாயக்கரின் பேரக் குழந்தை ஒன்று மட்டும் தப்பிப் பிழைத்தது. அந்த செங்கமலதாஸ் எனும் குழந்தையை ஒரு ஆயா நாகைப்பட்டணம் கொண்டு போய் வளர்த்தாள். இந்த செய்தி அறிந்த ராயசம் வெங்கண்ணா எனும் அமைச்சர் அந்தப் பையனை வளர்ந்து இளைஞனாக இருந்த நேரத்தில் பல வீரர்களுடன் சென்று அலியடில்ஷாவிடம் முறையிட்டு இந்தச் சிறுவன் தான் தஞ்சைக்கு வாரிசு என்றும், மதுரை நாயக்கர்கள் தஞ்சையை ஆக்கிரமித்துக் கொன்டிருக்கிறார்கள் என்பதைச் சொல்லி இந்த பையன் செங்கமலதாசுக்கு ஆட்சியை மீட்டுத் தரும்படி கேட்டுக் கொண்டார். அதன்படி அலியடில்ஷா பெங்களுரில் இருந்த ஏகோஜியை அழைத்து தன் தளபதிகள் ஏதில்ஷா, காதர் கலாஸ்கான் எனும் இருவரையும் அனுப்பி தஞ்சையை மீட்டுக் கொடுக்கச் சொன்னார். அவர்கள் ஏகோஜி தலைமையில் வந்து தஞ்சையை மீட்டு செங்கமலதாசுக்குக் கொடுத்தனர். வரும் வழியில் அவர்கள் ஆரணியை வென்று அங்கு வேதாஜி பாஸ்கர் என்பவர் வசம் கொடுத்துவிட்டு தஞ்சையை மீட்டுக் கொடுத்தனர். அப்படிச் செய்துவிட்டு ஏகோஜி ஊர் திரும்பி வந்து கொண்டிருந்தபோது திருமழபாடி எனும் இடத்தில்  1596இல் அவருடைய மனைவி தீபாபாயிக்கு ஒரு மகன் பிறந்தான். அவருக்கு சரபோஜி என்று பெயரிட்டார். மீட்டுக் கொடுத்த தஞ்சாவூரில் மீன்டும் தகராறு ஏற்பட்டு ஏகோஜியிடம் பஞ்சாயத்துக்குப் போன பொது அவரையே தஞ்சையை எடுத்துக் கொள்ள வேண்டுமென்று கேட்டதால், அவர் அலியடில்ஷாவுக்குச் சொல்லி அவர் அனுமதியுடன் தஞ்சைக்குத் திரும்பி அரசராக ஆனார். அலியடில்ஷா அனுப்பி வைத்த சர்தார்களான இருவரையும் நிறைய பரிசுப் பொருட்களுடன் திரும்ப அனுப்பி வைத்தார்.

                சிவாஜிக்கு எட்டு மனைவியர், அவர்கள் சயிபாயி, காசிபாயி, சக்வராபாயி, புதுனாபாயி, சகுணாபாயி, சோயரிபாயி, மாளவோ, விசாரே குலத்திலிருந்து இரு பெண்கல் ஆகியோர் ஆக எண்மர். இதில் மூத்த மனைவி சயிபாயிக்கு மூன்று பெண் குழந்தைகள். 1596இல் ஆண் குழந்தை சம்பாஜி பிறந்தார். சிவாஜியின் மூத்த பெண் சக்குவார்பாயியை நிம்பல்கர் குடும்பத்திலும், இரண்டாவது பெண் ராணு பாயியை ஜாதவ் குடும்பத்திலும், மூன்றாவது பெண் அம்பிகா பாயியை மாடிக் குடும்பத்திலும் திருமணம் செய்து கொடுத்தார். மாடிக் குடும்பத்தாருக்கு ஷாஜி செஞ்சிப் பகுதியில் சில பகுதிகளைக் கொடுத்தார்.

                சிவாஜியின் இன்னொரு மனைவியான சக்வராபாயிக்குக் கமலா பாயி என்றொரு பெண், இவளை சிவாஜி, நேதோஜி என்பவருக்குத் திருமணம் செய்து கொடுத்தார்.  சுகுணா பாயிக்கு ராஜகுமாரா பாயி என்றொரு பெண் இருந்தாள். இவளை கேனோஜி சிற்கே என்பவருக்கு மணம் முடித்துக் கொடுத்தார். சிவாஜியின் இன்னொரு மனைவி சோயரி பாயிக்கு ராஜராஜா என்ற ஒரு மகனும் தாது பாயி எனும் ஒரு மகளும் இருந்தனர். மற்ற மனைவியருக்கு மக்கட்பேறு இல்லை.

                சிவாஜி தன் மூத்த மகன் சம்பாஜிக்கு 1602இல் பட்டம் கட்டி புனே பகுதியையும், இன்னொரு மகன் ராஜா ராம் என்பவருக்கு செஞ்சி அரசையும் அளித்தார். அதன் பின் புனே சுல்தான்கள் வசம் போய்விட்டது.  ராஜாராம் செஞ்சியை விட்டு நீங்கி மீண்டும் தந்தையிடம் சென்ற பிறகு அவருக்கு பனாலகெட் கோட்டை கொடுக்கப்பட்டது.

                ஒரு முறை சிவாஜி ராஜா ராமேஸ்வரம் யாத்திரை சென்று தனியொரு ஆளாகத் திரும்பி வந்து கொண்டிருந்த போது ஏகோஜியின் ஆட்சியின் கீழ் இருந்த தஞ்சாவூருக்கு வந்திருந்தார். இவர் வந்தது ஏகோஜிக்குக் கூட தெரியாது. சிவாஜி ராஜா ஊருக்குள் வந்து தஞ்சாவூர் கோட்டையை நன்கு சுற்றிப் பார்த்தார். தன் வழிப்பயணத்துக்கு பணம் தேவைப் பட்டதால், தன்னுடைய  தலைப்பாகை, மோதிரம் இவற்றை ஒரு கடையில் அடமானம் வைத்து பணம் வாங்கிக் கொண்டு ஊர் திரும்புகையில் திருமானூர் அருகில் கொள்ளிட வெள்ளத்தில் மாட்டிக் கொண்டு அங்கிருந்த கிராம மக்களால் யார் என்றே இவ்ரைத் தெரியாமல் காப்பாற்றி கரை சேர்த்தனர். இதில் சிவாஜி ராஜாவின் குதிரையும் ஆற்று வெள்ளத்தில் போனதை கிராம மக்கள் காப்பாற்றினர். சிவாஜி ராஜாவுக்கு காய்ச்சல் வந்து சில நாட்கள் அந்த கிராம மக்கள் பாதுகாப்பளித்து சுகப்படுத்தினர். உடல் நலம் பெற்றதும் இவர் விடை பெற்றுக் கொண்ட பொதும் அவர் தன்னை யார் என்று அறிமுகம் செய்து கொள்ளாமலே ஊர் திரும்பிய சமயம் அவ்வூர் மக்களுக்கு இரு குறுவாளையும் ஒரு கேடயத்தையும் அன்பளிப்பாகக் கொடுத்துவிட்டுச் சென்றார். (ஒய்.பி.சவான் மகாராஷ்ட்ரா மாநில முதல்வராக இருந்த போது மும்பையிலிருந்து வந்த ஒரு ஆய்வுக் குழு, திருமானூர் அருகில் கொள்ளிடக் கரையருகில் இருந்த ஒரு பவானி அம்மன் ஆலயத்தில் சத்ரபதி சிவாஜி அந்த கிராம மக்களுக்குக் கொடுத்த இரு குறு வாட்களும் கேடயமும் அம்மன் விக்ரகத்துக்குப் பின்புறம் சுவற்றில் மாட்டப்பட்டிருந்ததை, சிவாஜியினுடையது என்பதைக் கண்டு பிடித்து எடுத்துச் சென்ற வரலாறு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு சிவாஜியின் 1974இல் அவர் முடிசூடிய 300ஆம் ஆண்டு விழா மலரில் வெளிவந்தது). சிவாஜி ராஜா ஊர் திரும்பிய பிறகு தஞ்சை ஏகோஜிக்கு ஒரு கடிதம் எழுதி தான் தஞ்சையில் ஓரிடத்தில் தன் தலைப்பாகை, மோதிரம் இவற்றை அடகு வைத்திருப்பதைச் சொல்லி அதனை மீட்டு தனக்கு அனுப்புமாறு கடிதம் எழுதினார் என்கிற செய்தி, இரண்டாம் சரபோஜி எழுதி தஞ்சை ஆலயத்தில் கல்வெட்டில் பதிக்கப்பட்டிருக்கிற “போன்ஸ்லே வம்சத்து வரலாறு” எனும் பகுதியில் விவரங்கள் காணப்படுகின்றன. இது இப்போது நூலாகவும் வெளிவந்திருக்கிறது.

                சத்ரபதி சிவாஜி தன்னுடைய வீரத்தினாலும், தட்சிண சுல்தான்களையும், டெல்லி பாதுஷாவையும் எதிர்த்துப் போரிட்டு மேற்குப் பகுதியில் பற்பல கோட்டைகளைத் தனதாக்கிக் கொண்டு எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர், தனது 53ஆம் வயதில் 3-4-1680இல் காலமானார். சத்ரபதி சிவாஜியின் புகழும் வீரமும் காலம் காலத்துக்கும் நிலைத்து நிற்கும் வீர காவியம் ஆகும். வாழ்க சத்ரபதி சிவாஜி மகராஜ் புகழ்!!