பாரதி பயிலகம் வலைப்பூ

Saturday, May 5, 2018

திரிபுரத்து அவதாரங்கள்.


“சக்தி மைந்தன்” கதைகள்.
                           திரிபுரத்து அவதாரங்கள்.                                                                  “சக்திமைந்தன்”

      காவிரிக்கு வடபால் அமைந்த அழகிய கிராமம் திரிபுரம். காவேரி எப்போதும் பாய்ந்து ஊரை வளப்படித்தினாள். ஊர்மக்கள் அவர்களுக்கே உரிய நடைமுறையில் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தனர். படித்தவர்கள், படிக்காதவர்கள் என்று பலர் இருந்தாலும், ஊர் அறிவு மிக்கவர்களின் ஊர்தான். செயல்திறன், கலை நுட்பம், தெய்வபக்தி, சமய ஞானம் என்றவற்றோடு தேச பக்தியும் கொண்ட பெருமக்கள் வாழ்ந்த வாழ்கின்ற ஊர்.

      அவர்களுக்குள்ளே தோன்றிய சிந்தனை, அவர்கள் செயல்பட்ட விதம் எனப் பலவிதமான குணாதிசயங்கள் கொண்டவர்கள் இருந்தனர்.  அப்புறம் என்ன, பல்வேறு கதை தோன்றுவதற்குக் காரணம் கிடைத்து விட்டதல்லவா?

      திரிபுரத்தில் தலைக் கட்டுக்களில் ஒருவர் தேவராஜ ஐயங்கார், பெருநிலக் கிழார். மஞ்சள் காணியாகவும் சொத்துக்கள் நிறைய இருந்தன. ஆனாலும் விவசாயத்தை விடவும் சமய இலக்கியங்களில் அதிகமாக புத்தி செலுத்தினார். அவருக்கு மூன்று மகன்கள், மூன்று மகள்கள். அவர் செல்வந்தராக இருந்த போதிலும், நடுத்தரமாகத்தான் குடும்பம் செலுத்தப்பட்டது. அவர் எளிய வாழ்க்கை வாழ்பவர் என்றும் சொல்லலாம். அவரின் திரண்ட நிலபுலன்களில் அதிக கவனம் செலுத்தாதனால் அதன் மூலம் சுமாரான வருவாய் வந்ததால், அதற்குள் நடந்த சிக்கன வாழ்க்கை என்றும் கூறலாம்.

      தெருவில் மற்ற முக்கியமானவர்களோடு அளவளாவுவதும், சீட்டாடுவதும் சதா சமய இலக்கியங்களில் கருத்துச் செலுத்துவதுமாக வாழ்க்கைச் சக்கரம் உருண்டு கொண்டிருந்தது.

      மூன்று மகன்களில் இருவர் சல்ல சமய, சம்ஸ்கிருத ஞானத்தோடு கல்வித் தேர்ச்சி மூலம் நல்ல உத்தியோகத்தையும் கைப்பற்றினர். மகள்களில் இருவர் இசைத் துறையில் ஆர்வம் கொண்டு இசையைக் கற்று, அதுவே அவர்களது துறையாக ஆனது.

      மொத்தம் புத்திர சந்தானங்களில் ஒரு ஆண் மகவு மட்டும் சோடை. சுந்தரராஜன், அதுதான் அவர் பெயர். கல்வியில் ஆர்வமில்லை. மிகுந்த தரக்குறைவான எண்ணம். இதனால் சட்டென்று கோபம் வந்து விடும். இவருடைய இந்தக் குணத்தால் அவர் குடும்பத்தார் மிகவும் அவமானப் பட்டார்கள். ஆனால் நல்ல இசை ஞானம், நல்ல ரசனை, எல்லாமிருந்தும் பரிமளிக்கவில்லை.

      தன்னைத் தானே குறைவாகப் பேசிக்கொண்டு ரசிப்பார். உதாரணமாக “எனக்குப் பிடித்த பிஸ்கெட் “க்ராக் ஜாக்”; எனக்குப் பிடித்த ஊர் ‘மேட்’ராஸ், என்னைக் கவர்ந்த நடிகர் லூஸ் மோகன்; எனக்குப் பிடித்த ஆடை லூஸ் சட்டை, இப்படி.

      எந்த ஒரு ராகத்தைப் பற்றிச் சொன்னாலும், அதிலுள்ள பல பாடல்களை, திரையிசைப் பாடல்கள் அனைத்தையும் உடனே பாடிக் காண்பிக்கிற ஞானமும், நல்ல குரல் வளமும் கொண்டிருந்தார். எதுவும் கறிக்காகவில்லை.

      தட்டிக் கொட்டி எஸ்.எஸ்.எல்.சி. பாஸ். பள்ளி ஆசிரியர்கள், பாடம் என்றால் வேம்பாய்க் கசந்தது அவருக்கு. ஆசிரியர் சிகாமணியிடம் நடுக்கம். உள்ளூரில் சதாசிவ ஐயர் என்றொரு ஆசிரியர். அவர் சரித்திர பூகோள ஆசிரியர் இவர்களுடைய விடைத்தாள்களையெல்லாம் திருத்துவதற்காக வீட்டுக்குக் கொண்டு வருவார். சுந்தரராஜனையும் அவர் சகாவான இன்னொரு மாணவனையும் கூப்பிடுவார். விடைத்தாள்களை அவர்களிடம் தந்து, ஏற்கனவே எழுதியிருக்கும் வரிகளுக்கிடையில் மீண்டும் எழுதச் சொல்வார். புதிதாக விடைகள் எழுத வேண்டுமென்றாலும் பள்ளியின் முத்திரை உள்ள வெள்ளைத் தாள்களையும் தருவார்.  இவர்கள் புத்தகத்தைப் பார்த்தும் விடை எழுதலாம். நாற்பது மதிப்பெண் வாங்கக் கூடிய விடைத் தாள்களுக்கு எண்பது, தொண்ணூறு என்று மதிப்பெண் எகிறும். விடைத் தாள்களைத் திருத்திவிட்டு ஆசிரியர் வாய் நிறைய வெற்றிலைப் பாக்கு, புகையிலைச் சாற்றின் கூட்டை விழுங்கி விடாமல் அண்ணாந்து பார்த்துக் கொண்டு, “இன்னும் நன்னா எழுதியிருக்கலாம்” என்று சொல்லும் விமர்சனம் தான் உச்சகட்ட வினோதம்.

      சுந்தரராஜனுக்குத் தெருவில் ஒரு கெட்ட நண்பன் உண்டு. சமூக அந்தஸ்தோ, ஞானச் செல்வமோ சிறிதும் இல்லாத ராஜப்பாதான் அவன். அவனைச் சதா தன் சைக்கிளில் வைத்துச் சுமந்துகொண்டு பல்வேறு இடங்களுக்குச் சென்று சுற்றிவரவும், அடிக்கடி சினிமா பார்ப்பதுமாகப் பொழுது போகும்.

      எம்.ஜி.ஆர். படமென்றால் கேட்க வேண்டாம். “இதயக்கனி” படத்தைப் பக்கத்து ஊர் டூரிங் கொட்டகையில் எத்தனை நாட்கள் ஓடியதோ, அத்தனை நாளும் போய்ப் பார்த்தாயிற்று. ஒரு முறை படம் பார்ப்பதற்குக் காசு குறைவாக இருந்தது. கொட்டகை கவுண்டரில் இருந்தவர் இவன் தினசரி கிராக்கி என்பதால் “பரவாயில்லை நாளைக்குக் கொடுங்க” என்று சலுகை காட்டினார். நிரந்தர கிராக்கி என்பதால் இந்த சலுகை கூட கொடுக்கக் கூடாதா என்ன?

      தெருவிலே ஒரு தமிழாசிரியர். அவரைப் போல நடித்துக் காட்டுவார் சுந்தர ராஜன். அவரை மட்டுமல்ல, பல்லோரை அவர்கள் போலவே இமிடேட் செய்து கொண்டாடுவது வழக்கம். ஒரு முறை சுந்தரராஜன் அந்த ஆசிரியரிடம் “என்னை எல்லாரும் பைத்தியங்கறாங்களே!” என்று அங்கலாய்த்திருக்கிறார். அந்த தமிழாசிரியர் ஒரு அதிமேதாவி. அவர் சொன்னார், “சுந்தரராஜா! உனக்கு எதைக் கண்டாலும் சந்தேகம் தான்” என்று புரியும்படி சொன்னார்.

      அவர் தகப்பனார் ‘தலைகீழா நின்று தண்ணீர் குடித்துப் பார்த்தார்’. ஒன்றும் புண்ணியமில்லை. பக்கத்து ஊரில் ஞானமாணிக்கம் என்றொரு கிறிஸ்தவர்; கொஞ்சம் உடல் உழைப்பை விட்டு, குறுக்கு வழியில் சம்பாதிக்க வேண்டுமென்று அவருக்கு ஆசை. ஏமாற்று வேலைக்காக ஏதேதோ மாலைகள் அணிந்துகொண்டு முகக் குறிப்பை வைத்துக் குறி சொல்கிறேன், பரிகாரம் செய்கிறேன் என்று அலைவது வழக்கம். அவருடைய போக்கு ஞானமாணிக்கத்துக்குப் பலன் தந்ததோ இல்லையோ, “எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்” என்கிற நிலையில் இருந்த சுந்தரராஜனின் அப்பா, தக்க நபர் மூலம் ஞானமாணிக்கத்தைத் தன் பிள்ளைக்கு பரிகாரம் செய்வதற்காகத் தருவித்தார்.

      “சாமி! நாலு தேங்கா, அஞ்சு எலுமிச்சம்பழம், வெத்தலை சீவல், கம்பிளிக் கயிறு ஒண்ணு” என்று பரிகாரத்துக்கு பட்டியல் சொன்னார் ஞானமாணிக்கம். அப்பா மகன் சுந்தரராஜனிடம், இப்படி ஞானமாணிக்கம் வருவதாகவோ, பரிகாரம் செய்யப் போவதாகவோ சொல்லவில்லை.

      குறிப்பிட்ட நாள் வந்தது. திண்ணையில் பரிகாரத்துக்கான சாமான்கள் பரப்பி வைக்கப்பட்டிருந்தன. சுந்தரராஜனுக்கு ஒன்றும் புரியவில்லை. ஞானமாணிக்கம் வந்து சேர்ந்தார். பாரித்த உடல் வாகு, திறந்த மார்பு, கழுத்தில் ஏதேதோ மாலைகள், தாம்பூலம் தரித்த வாய் இத்யாதிகளுடன் பரிகார சாமான்கள் பரத்தி வைக்கப்பட்டிருந்த தாம்பாளத்தின் முன்னர் அமர்ந்தார்.

      “ஐயாவை வரச்சொல்லுங்க” என்றவாறு தாம்பாளத்திலிருந்த எலுமிச்சைகளை நறுக்குவதும், தேங்காய்க் குடுமியைப் பிய்த்து குறைப்பதுமாகத் தன் பணியைத் துவக்கினார்.

      “சுந்தரராஜா! கொஞ்சம் இங்கே வா!” என்று தந்தையார் உள்ளே இருந்த மகனைத் திண்ணைக்கு அழைத்தார். கலவரம் கூடிய கண்களுடன் “என்ன?” என்றவாறே திண்ணைக்கு வந்து சேர்ந்தான் சுந்தரராஜன்.

      “வாங்க சாமி! குளிச்சிட்டீங்களா? எனக்கு எதுத்தாப்பல ஒக்காருங்க” என்று சுந்தரராஜனுக்குக் கோரிக்கை விடுத்தார். சுந்தரராஜன் கண்களில் மருட்சி கூடியது.

      “என்ன? என்ன இதெல்லாம்?” என்றவாறு ஞானமாணிக்கம், அவர் முன்னால் இருக்கும் தாம்பாளம், அப்பா என்று மாறி மாறிப் பார்த்தான். அவனுக்குப் புரிந்தும் புரியாதது போலிருந்தது.

      “ஒண்ணுமில்லைங்க சாமி! வந்து ஒக்காருங்க, சித்த நேரம், போயிடலாம்” என்றார் ஞானமாணிக்கம் குழைவாக. சுந்தரராஜனுடைய அப்பாவும் “ஒண்ணுமில்லை சுந்தரராஜா! கொஞ்சம் ஞானமாணிக்கம் முன்னால உக்கார்” என்று குரலில் கனிவுடன் சொன்னார்.

      “என்ன விஷயம்? அதைச் சொல்லு” என்று மூக்கணாங்கயிற்றுக்கு முரண்டு பிடிக்கும் காளைக் கன்று போல திமிறினான்.

      “ஒண்ணுமில்லீங்கையா! ஒரு சின்ன பரிகாரம்” என்று இழுத்தார் ஞானமாணிக்கம். சுந்தரராஜனுக்குப் புரிந்துவிட்டது. வந்ததே அசாத்தியக் கோபம்.

      “என்ன கூத்து இது? எனக்கு என்ன ஆயிடுச்சுன்னு இதெல்லாம் பண்றேள்? கொஞ்சம் கூட அறிவில்லையா? ஏய்! ஞானமாணிக்கம், நீ ரொம்பத் தெரிஞ்சவனாடா? எனக்கு என்ன ஆச்சுன்னு சரிபண்ண வந்துருக்கே?” என்பதோடு எழுதத் தரமற்ற சொற்கலையும் சேர்த்து ஞானமானிக்கத்தைத் திட்டவும், அவர் ஆளைவிட்டால் போதும் என்று ஓட்டமெடுத்தார்.

      அதற்குப் பிறகு தேவராஜ ஐயங்கார், தன் மகன் பொருட்டு எந்த முயற்சியும் எடுப்பதில்லை. ஞானமாணிக்கத்தையும் இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு கண்டவர் யாருமில்லை.
     
     

No comments: