பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, May 18, 2017

"நன்னெறி" Part IV

"நன்னெறி" எனும் இலக்கியத்தின் முதல் மூன்று பகுதிகளை ஒவ்வொன்றிலும் ஐந்து பாடல்கள் வீதம் அவைகளுக்கான விளக்கங்களுடன் வெளியாகியது. இப்போது இந்த நான்காம் பகுதியில் பாடல் எண்.16 முதல் பாடல் எண் 20 வரையிலான பாடல்களும் அவைகளுக்கான விளக்கங்களையும் காணலாம். இதர பாடல்கள் தொடர்ந்து வெளிவரும்.

16. மேலோர் இழிந்தோர்க்கும் உதவுவார்

தம்மையும் தங்கள் தலைமையையும் பார்த்துயர்ந்தோர் 
தம்மை மதியார் தமையடைந்தோர் - தம்மின்
இழியினும் செல்வர்; இடர்தீர்ப்பர்; அல்கு
கழியினும் செல்லாதோ கடல்?

கடல் மிகப் பெரிது எனினும், அது தன்னிலும் எல்லாவிதத்திலும் குறைந்த விதத்தில் தேங்கிக் கிடக்கும் உப்பங்கழியானாலும் அது தன்னைவிட தாழ்ந்தது என்று கருதாமல் அதனுள்ளும் புகுந்து சென்று பாயும் அல்லவா? அதைப் போல கல்வியில் சிறந்த பண்பாளர்கள் தங்களுடைய தகுதிகளை எண்ணித் தம்மை மிக உயர்ந்தவர்கள் என்பதால் ஒதுங்கி இருக்க மாட்டார்கள். மாறாக தன்னிலும் தகுதி முதலானவற்றில் குறைந்தவர்கள் என்றாலும் அவற்றை யொரு பொருட்டாகக் கருதமாட்டார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்கு உதவிகள் ஏதேனும் தேவைப்படுமானால் உயர்ந்தோர் தகுதி பார்க்காமல் ஓடிப்போய் அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து கொடுப்பர். அவர்கள் துன்பங்களை நீக்க பாடுபடுவர். இங்கு உயர்வு தாழ்வு பார்த்து பெரியோர்கள் செயல்பட மாட்டார்கள் என்கிறது இந்தப் பாடல்.

17. வள்ளல்கள் வறுமையிலும் உதவிபுரிவார்கள்

எந்தைநல் கூர்ந்தான் இரப்பார்க்கீந் தென்றவன் 
மைந்தர்தம் ஈகைமறுப்பரோ?பைந்தொடிஇ!
நின்று பயனுதவி நில்லா அரம்பையின் கீழ்க்
கன்றும் உதவும் கனி.

நல் வளையல்கள் அணிந்த பெண்ணே! வாழைத் தோட்டத்தில் ஏராளமான வாழை மரங்கள்; தழைத்துச் செழித்து வளர்ந்து பூவிட்டு, அது காயாகி, பின்னர் கனிந்தபின் மக்களுக்கு அந்தந்த காலத்தில் பூவாகவும், காயாகவும், பின்னர் கனியாகவும், அந்த மரம் பயன் தந்து முடிந்ததும் மரத்தின் தண்டாகவும் பிறருக்குக் கொடுத்து உதவுகிறது. அதன் பின் அந்த மரம் பயனற்றுப் போனதும், அருகில் அதன் வேர்க் கிழங்கிலிருந்து கிளம்பும் வாழைக் கன்று வளர்ந்து மரமாகி முன்னதைப் போலவே பூ, காய், கனி அனைத்தும் கொடுக்கும் காலத்தில், நமக்கு முந்தி இங்கு இருந்த மரம் இப்படிக் கொடுத்துக் கொடுத்து அல்லவோ வீழ்ந்து போயிற்று, நாமும் அதுபோல ஆகிவிடாமல் இருக்க அவற்றைக் கொடுக்காமல் இருந்தால் என்ன என்று நினைப்பதில்லை.

அதைப் போல தன்னிடம் வந்து இரப்போர்க்கு ஒரு தந்தைக் கொடுத்துக் கொடுத்து வறுமையில் வீழ்ந்துவிட்டான், நாம் நம் தந்தையைப் போல ஆகிவிடக் கூடாது என்று எண்ணி, அவருடைய மக்கள் பிறருக்குக் கொடுக்கும் ஈகைக் குணத்தைக் கைவிட்டு விடுவார்களா? மாட்டார்கள். தந்தை வழியில் தனயனும் வள்ளல் தன்மையோடுதான் இருப்பான் என்கிறது இந்தப் பாடல்.

18. இன்சொல்லையே உலகம் விரும்பும்

இன்சொலா லன்றி இருநீர் வியனுலகம்
வன்சொலால் என்றும் மகிழாதே; - பொன்செய் 
அதிர்வளையாய் பொங்காது அழல்கதிரால் தண்ணென்
கதிர்வரவால் பொங்குங் கடல்.

தகதகவென்று மின்னுகின்ற பொன் வளையல்களை அணிந்த பெண்ணே! காலையில் உதிக்கும் சூரியன் வெப்பமுடையவன். நேரமாக ஆக அவனது வெப்பம் அதிகரித்துக் கொண்டே போகும். அப்படிப்பட்ட வெப்பம் தனக்கு நல்லது என்றெண்ணி கடல்நீர் பொங்கி எழுவதில்லை. மாறாக இரவில் வானில் உதயமாகும் இதமான சந்திரனின் மங்கிய குளிர்ந்து வீசும் ஒளியைக் கண்டு அல்லவா கடல் பொங்குகிறது.
அதுபோல இவ்வுலக மக்கள் கொடுஞ் சொற்களைக் கேட்டு மகிழ்வதில்லை; மாறாக இன்சொல் கேட்டால் மகிழ்ந்து போகிறார்கள் என்கிறது இந்தப் பாடல்.

19. நல்லார் வரவு இன்பம் பயக்கும்

நல்லோர் வரவால் நகைமுகங்கொண் டின்புறீஇ 
அல்லோர் வரவால் அழுங்குவார் - வல்லோர்
திருந்தும் தளிர்காட்டித் தென்றல்வரத் தேமா
வருந்துங் கழற்கால் வர.

மரம் செடி கொடிகளுக்கும் இயற்கை மாற்றங்களுக்கும் தொடர்பு உண்டு. இனிமையான தென்றல் காற்று வீசுகின்ற பருவத்தில் மாமரம் தளிர்த்துத் துளிர்விட்டு வளரத் தொடங்கும்; ஆனால் அதே மரம் சுழல்காற்று வீசுமாயின் அதனால் மரம், கிளை, இலைகள் அனைத்தும் பாழ்படும் என்பதால் நிலைகுலைந்து காணப்படும்.

அதைப் போல பெரியோர்களை நாடி நல்லவர்கள் வருவார்களாயின் பெரியோர் மகிழ்ச்சியடைவர். இன்முகம் காட்டி வரவேற்பர். ஆனால் தீயோர் வருவாராயின், ஐயோ இப்படிப்பட்ட தீயவர்கள் வருகிறார்களோ என்ன தீமை விளையுமோ என்று அச்சப்படுவார்கள் என்கிறது இந்தப் பாடல்.

20. பெரியோர் பிறர் துன்பம் கண்டிரங்குவார்

பெரியவர்தம் நோய்போல் பிறர்நோய்கண் டுள்ளம் 
எரியின் இழுதாவார் என்க; - தெரியிழாய்!
மண்டு பிணியால் வருந்து பிறவுறுப்பைக்
கண்டு கழலுமே கண்.

ஒருவனுக்கு உடலில் நோய் வந்து விடுகிறது, அதனால் உடல் உறுப்புகளில் சில பாதிப்படைகின்றன. அதனைக் கண்டு கண்கள் எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை என்ற போதிலும் பாதிக்கப்பட்ட உறுப்புகளைக் கண்டு வருந்திக் கண்கள் கண்ணீரைச் சொரிகின்றன.


அதுபோல குண நலன்கள் நிறைந்த பெரியோர்கள் பிறருக்கு உண்டாகும் துன்பங்களைக் கண்டு தனக்கு வரவில்லை என்றபோதும், பிறரது துயரைக் கண்டு தீயில் வார்த்த நெய்யினைப் போல உருகுவர். 

Tuesday, May 16, 2017

"நன்னெறி" Part.III

       "நன்னெறி" எனும் நூலின் 11ஆம் பாடல் முதல் 15ஆம் பாடல் வரையிலுமான பாடல்களையும், அதன் பொருளையும் இந்தப் பகுதியில் காணலாம். மற்ற பாடல்களுக்கு விளக்கும் தொடர்ந்து வெளியாகும்.                         


11. அறிஞர் ஐம்புலன்கட்கு அடிமையாகார்

பொய்ப்புலன்கள்  ஐந்துநோய் புல்லியர் பாலன்றியே 
மெய்ப்புலவர் தம்பால் விளையாவாம்; - துப்பிற்
சுழன்றுகொல் கல்தூணைச் சூறா வளிபோய்ச்
சுழற்றும் சிறுபுன் துரும்பு.

இந்தப் பாடலில் மனிதனுக்கு அவனது ஐம்புலன்களான மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவற்றால் உண்டாகும் தாக்கங்கள் குறித்துச் சொல்கிறார். மெய் என்பது உடல், அப்படி உடலால் தீண்டும்போது ஏற்படும் துன்பம், வாயிலுள்ள நாக்கு, பல ருசிகளை உணர்ந்து மனதுக்கு மகிழ்ச்சியைத் தருவது, அந்த நாவினால் வரும் துன்பம், கண் காண்பது காட்சி, அந்தக் காட்சியால் வருகின்ற தொல்லை, மூக்கினால் முகரும்போது வரும் துன்பம், பிறர் கூறும் இன்னா சொற்களைக் கேட்பதால் வரும் துன்பம் என்று ஐம்பொறிகளால் உண்டாகும் தீங்கு அனைத்தையும் கடந்த மேலோருக்குக் கிடையாது ஆனால் அற்பர்கள் இவை அனைத்தாலும் துன்புறுவர்.

இதற்கு ஒரு உதாரணத்தையும் தருகிறார் கவிஞர். பெரிய சூறாவளிக் காற்று வீசுகிறது. அது பெரிய கற்தூண்களையா அசைக்க்க முடிகிறது, இல்லை. ஆனால் மெல்லிய சிறு துரும்பினைச் சுற்றிச் சுற்றி வீசுகிறதே அதைப்போல.

12. உடம்பில் உயிர் அமைந்த வியப்பு.

வருந்தும் உயிர்ஒன்பான் வாயில் உடம்பில் 
பொருந்துதல் தானே புதுமை!திருந்திழாய்!
சீதநீர் பொள்ளல் சிறுகுடத்து நில்லாது
வீதலோ நிற்றல் வியப்பு.

ஒரு குடத்தில் நீரினை மொண்டு வைக்கிறோம். அது நல்ல குடமாக இருந்தால் நீர் அதிலேயே இருக்கும். அந்த குடம் ஒருக்கால் ஓட்டை விழுந்த குடம் என்றால், அதில் ஊற்றிவைத்த குளிர்ந்த நீர் அதிலே அப்படியேவா இருக்கும், அத்தனையும் அந்த ஓட்டை வழியாக ஒழுகிப் போவதென்பது என்ன ஆச்சரியமான செய்தியா? இல்லையே.
ஆனால் நம் உடம்பில் ஒன்பது ஒட்டைகள், அத்தனை ஓட்டைகளை இந்த உடம்பில் வைத்துக் கொண்டு நம் உயிர் அவற்றின் வழியாகப் போய்விடாமல் நம் உடலில் தங்கி இருப்பதென்பது ஆச்சரியம்தான் இல்லையா பெண்ணே!

13. அன்பொடு உதவுக

பெருக்க மொடுசுருக்கம் பெற்றபொருட்கு ஏற்ப
விருப்பமொடு கொடுப்பர் மேலோர்; - சுரக்கும் 
மலையளவு நின்றமுலை மாதே மதியின்
கலையளவு நின்ற கதிர்.

பெருத்தெழுந்து சுரக்கும் மார்பழகுப் பெண்ணே! நிலா இருக்கிறதே அது முழுநிலவாக இருக்கும்போது வீசுகின்ற ஒளி, அது நாளுக்கு நாள் அளவில் சிறுக்கச் சிறுக்க அதன் ஒளி படிப்படியாகக் குறைந்து கொண்டு வருவதைப் போல, நல்லோர்கள், தரும சிந்தனை கொண்ட பெரியோர்கள் தங்களிடம் நிறைந்த செல்வம் இருக்கும்போது அள்ளி அள்ளிக் கொடுத்தவர்கள், அது சிறுகச் சிறுக இல்லை என்று சொல்லாமல் கொடையும் சிறுத்துப் போகுமே யன்றி கொடுக்காமல் இருக்க மாட்டார்கள்.

14. செல்வச் செருக்குக் கூடாது

தொலையாப் பெருஞ்செல்வத் தோற்றத்தோ மென்று
கலையா யவர் செருக்குச் சார்தல் - இலையால் 
இரைக்கும்வண்டு ஊதுமலர் ஈர்ங்கோதாய் மேரு
வரைக்கும்வந் தன்று வளைவு.

செல்வத்தில் சிறந்த சான்றோர் பெருமக்கள் தாங்கள் குறைவில்லாத பெருஞ்செல்வத்தைப் படைத்திருக்கிறோம் என்று கர்வம் கொள்ள மாட்டார்கள். வண்டுகள் வாயினால் ஊதுவதால் இதழ்கள் மலர்ந்த பூக்களை அணிந்த மெல்லியலே! மேரு மலை இருக்கிறதே அது சிவபெருமான் அதை எடுத்து வில்லாக வளைத்து திரிபுராதி அரக்கர்களோடு போர் புரிந்த போது அதில் மகாவிஷ்ணுவை அம்பாக வைத்து எய்தபோது அந்த மேரு மலையே வளைந்ததல்லவா, அதனைப் போல தான் எனும் கர்வம் தலைக்கேறி மேரு மலை போல இருந்தாலும் தலை குனிவு ஏற்படும் என்பது இதன் பொருள்.

15. அன்பற்ற செல்வம் பயனற்றது

இல்லானுக்கு அன்பிங்கு இடம்பொருள் ஏவல்மற்று
எல்லாம் யிருந்துமவர்க் கென்செய்யும்? - நல்லாய் 
மொழியிலார்க் கேது முதுநூல்? தெரியும்
விழிலார்க்கு ஏது விளக்கு?

நற்குணம் மிக்க நங்கையே! கேள்! மொழிகள் குறித்த ஞானம் இல்லாத ஒருவனிடம் மூத்த அறிஞர்கள் பலர் எழுதிய நூல்கள் இருந்தும் என்ன பயன்? படிக்கவே தெரியாத அவன் அந்த புகழ்மிக்க நூல்களை வைத்துக் கொண்டு என்ன செய்வான்? அது போல கண்கள் இரண்டிலும் பார்வையில்லாத மனிதர்க்கு விளக்கு இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன, அவன் பார்வையே இருள் படிந்தல்லவா இருக்கும்?

அதுபோல அன்பு எனும் உணர்வு இல்லாத ஒரு மனிதனுக்கு நல்ல வீடு, வாசல், நிலம் நீச்சு என்று அனைத்தும் இருக்கிறது, நிறந்த செல்வம் இருக்கிறது, ஏவியதைச் செய்ய ஏராளமான பணியாளர்கள் இருக்கிறார்கள் இப்படி எல்லாம் இருந்தும் அன்பு எனும் உணர்வு இல்லாதவனுக்கு இவற்றால் என்ன பயன் விளையும்? சொல். 

Monday, May 15, 2017

"நன்னெறி" Part II.


"நன்னெறி" 

இதன் முதல் ஐந்து பாடல்களையும் அதற்கானவிளக்கங்களையும்முன் பகுதியில் பார்த்தீர்கள். இந்த இரண்டாம் பகுதியில் ஆறு முதல் பத்து வரையிலான பாடல்களையும் அதற்கான விளக்கங்களையும் படிக்கலாம். இனி தொடர்ந்து ஒவ்வொரு பகுதியாக வெளியாகும்.

6 . தம்பதிகள் ஒற்றுமை

காதல் மனையாளும் காதலனும் மாறின்றித்
தீதில் ஓருகருமம் செய்பவே - ஓதுகலை 
எண்ணிரண்டும் ஒன்றுமதி என்முகத்தாய் நோக்கல்தான்
கண்ணிரண்டும் ஒன்றையே காண்.

பதினாறு கலைகளும் பொருந்திய நிலவுபோன்ற முகமுடைய பெண்ணே! நமக்குக் கண்கள் இரண்டு இருந்தாலும் ஒரு பொருளை பார்க்கும்போது இரு கண்களும் அந்தப் பொருளை ஒன்றுபோல காண்கிறதல்லவா அத்துணை ஒற்றுமை அவ்விரு கண்களுக்கும்.
அதுபோல காதல் மனையாளும், காதலனும் ஒருவருக்கொருவர் மாறுபட்ட மனத்தினராய் இல்லாமல் ஒரே நோக்கில் காரியங்களைச் செய்து வருவாரானால் நல்ல பலன் பெறுவர்.


7 . கல்விச் செருக்குக் கூடாது

கடலே அனையம்யாம் கல்வியால் என்னும்
அடலேறு அனைய செருக்கு ஆழ்த்தி - விடலே 
முனிக்கரசு கையான் முகந்து முழங்கும்
பனிக்கடலும் உண்ணப் படும்.

ஆழம் காணமுடியாத அகன்று விரிந்து பரந்து கிடக்கும் பெரிய சமுத்திரத்தைக் குறுமுனியாம் அகத்திய முனிவர் உள்ளங்கையில் எடுத்து ஆசமனம் செய்து அதனை உட்கொண்டு விட்டாரல்லவா. ஆகையால் ஒருவர் தன் கல்விச் செறுக்கால், தான் கல்வியில் சிறந்தவர், அனைத்தையும் அறிந்தவர் என்றெல்லாம் கர்வம் கொள்ளல் வேண்டாம். கர்வம் தலைக்கேறிவிட்டால் நிலைமை தலைகீழாக மாறிவிடவும் கூடும், எனவே தலைக்கனம் கூடாது என்கிறது இந்தப் பாடல். அது என்ன குறுமுனி அகத்தியர் கடலை ஆசமனம் செய்து குடித்துவிட்டார் என்கிற வரலாறு? பார்ப்போம்.

ஒருமுறை இந்திரனுக்கும் விருத்தாசுரன் எனும் அரக்கனுக்கும் யுத்தம் மூண்டது. இருவருக்கும் கடும் யுத்தம் நடந்தும் முடிவு கிட்டாததால் இந்திரன் தன் வஜ்ராயுதத்தைக் கையில் எடுத்தான். அதைக்கண்டு அஞ்சி அசுரன் ஓடிப்போய் கடலினுள் புகுந்து ஒளிந்து கொண்டான். கடலில் அசுரனைக் கண்டுபிடிக்க முடியாமல் இந்திரன் பிரமனிடம் கேட்க அவர் இந்திரனை அகத்திய முனிவரிடம் உதவி கேட்க அனுப்புகிறார். அப்போது அகத்தியர் கடல் சீரை கையளவு குறுக்கி, அதைத் தன் கையில் எடுத்து ஆசமனம் செய்து விழுங்கி விடுகிறார். ஒளிந்திருந்த அசுரன் மாட்டிக் கொண்டான் என்பது புராணம்.


8 . ஆறுவது சினம்

உள்ளம் கவர்ந்தெழுந்து ஓங்குசினம் காத்துக்
கொள்ளும் குணமே குணமென்க;  - வெள்ளம் 
தடுத்தல் அரிதோ?  தடங்கரைதான் பேர்த்து
விடுத்தல் அரிதோ விளம்பு.

சில நேரங்களில் மனிதன் அடக்க முடியாத கோபத்தை அடைகிறான். அப்போது பொங்கி எழுகின்ற சினத்தை இழுத்துப் பிடித்து, அந்தக் கோபம் வெடித்துச் சிதறி பிறரை வேதனைக்கு உள்ளாக்காமல் மனத்தை அடக்கி, கோபத்தைக் கட்டுக்குள் கொண்டு வருவதுதான் சிறந்த குணம். அது எப்படியென்றால் ஆற்றில் வெள்ளம் கட்டுக்கடங்காமல் பெருகி வருகிறது. அத்தகைய வெள்ளம் வரும் என்பதை எதிர்பார்த்து அதனைத் தடுத்து நீரைத் தேக்கவேண்டுமென்று வலிமையான அணையை எழுப்பி வெள்ளத்தைத் தடுப்பது சிரமமான காரியமா என்ன? அப்படி இல்லாமல் வரும் வெள்ளம் கரையை உடைத்துக் கொண்டு ஊருக்குள் போய் ஏராளமான சேதத்தை உண்டாக்கி விடுவது சரியா? தேர்ந்து இவற்றில் எது சரி என்பதை உணர் என்கிறது இந்தப் பாடல்.


                                      9 . துணையுடையார் வலிமையுடையார்

மெலியோர் வலிய விரவலரை அஞ்சார்
வலியோர் தமைத்தான் மருவின்; - பலியேல் 
கடவுள் அவிர்சடைமேல் கட்செவி யஞ்சாதே
படர்சிறையப் புள்ளரசைப் பார்த்து.

நாம் பலரோடும் நன்கு பழகுகிறோம். உயிருக்குயிராக நட்பு கொண்டாடுகிறோம். நமக்கு ஒரு தீமையென்றால் ஓடோடி வந்து உதவுகின்ற நட்பும் உண்டு அல்லவா. அப்படி நாம் நமக்கும் மேல் வலிமையுடையவராக இருப்பாராகில் பகைவர் எத்தகையவராக இருந்தாலும் அஞ்ச வேண்டியதில்லை. காரணம் நம்முடன் நட்புப் பாராட்டுபவர் நம் உதவிக்கு இருப்பார். வலிமை பொருந்திய எதிரியிடமும் நாம் அஞ்ச வேண்டியதில்லை.
இது எதைப் போலவென்றால், தன் பெருத்த சிறகை விரித்து வானில் பறந்து வரும் கருடனைப் பார்த்து நாகப்பாம்பு அஞ்சி குலை நடுங்கிப் போய் பதுங்கிவிடும். ஆனால் கயிலைமலை வாசனாம் சிவபெருமானின் தோளில் தவழ்ந்து விளையாடிக்கொண்டு அவர் சடாமுடிமேல் படமெடுத்து ஆடும் பாம்பு இந்த கருடனைக் கண்டா அஞ்சும்?. அஞ்சாது அல்லவா, அது போல.


10. தன்னலம் கருதலாகாது

தங்குறைதீர் வுள்ளார் தளர்ந்து பிறர்க்குறூஉம்
வெங்குறைதீர்க் கிற்பார் விழுமியோர்; - திங்கள் 
கறையிருளை நீக்கக் கருதாது உலகின்
நிறையிருளை நீக்குமேல் நின்று.


வானத்திலிருக்கும் சந்திரன் இரவில் நமக்கெல்லாம் ஒளி தந்து கொண்டிருக்கிறது. அந்த முழு நிலவை உற்று நோக்கினால், அதனுள் இருள் படிந்த கறை போன்று காணப்படுகிறதல்லவா? அந்த சொந்தக் கறையைத் தீர்க்க முயலாமல் சந்திரன் உலகிற்கு ஒளி வீசி இவ்வுலகத்தின் கறையை நீக்குவதைப் போல, பெரியோர்கள் தங்களுக்கு உள்ள குறைபாடுகள், துன்பங்கள் போன்றவற்றைத் தீர்த்துக் கொள்ள முயலுவதைக் காட்டிலும் துன்பப்படும் ஏனைய மக்களின் துயர்தனைத் தீர்க்கப் பாடுபடுவர் என்கிறது இந்தப் பாடல்.

Saturday, May 13, 2017

“நன்னெறி” Part I

                                                
"நன்னெறி"யில் 40 பாடல்கள். இந்தப் பதிவில் முதல் 5 பாடல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து அடுத்தடுத்தப் பாடல்கள் விளக்கத்துடன் வெளியாகும். படித்தபின் கருத்துக்களைப் பதிவு செய்ய வேண்டுகிறேன். நன்றி.

                     நீதி நூல்கள் வரிசையில்
                      “நன்னெறி”

நீதிநூல்கள் வரிசையில் “நன்னெறி” எனும் நூல் நமக்கு நன்மைகளைத் தரக்கூடிய வழிகளைச் சொல்வதால் அந்த பெயரைப் பெற்றிருக்கிறது. இதனை இயற்றியவர் துறைமங்கலம் சிவப்பிரகாச முனிவர். இவர் 1700 – 1742 காலகட்டத்தில் வாழ்ந்தவர். இது நாற்பது பாக்களைக் கொண்டது. விநாயகர் துதியோடு தொடங்குகிறது இந்த நன்னெறி எனும் பாடல் தொகுதி.

                          விநாயகர் வணக்கம்.

மின்னெறி சடாமுடி விநாயகன் அடிதொழ                                         நன்னெறி வெண்பா நாற்பதும் வருமே.

மின்னலின் ஒளிபோன்ற ஜோதியான சடாமுடி விநாயகனின் பாதங்களைத் தொழுதால் நல்ல நெறிமுறைகளைச் சொல்லும் நாற்பது வெண்பாக்களும் வருமே!

                                    நூல் 
                    1 . உபசாரம் கருதாமல் உதவுக

என்றும் முகமன் இயம்பா தவர்கண்ணும்
சென்று பொருள்கொடுப்போர் தீதற்றோர் - துன்றுசுவை 
பூவிற் பொலிகுழலாய் பூங்கை புகழவோ
நாவிற் குதவும் நயந்து?

தலைவாரிப் பூச்சூட்டி எழில் கொஞ்சும் குழலினாய்! சுவையான உணவினைக் கையால் எடுத்து நாவுக்கு அளிப்பது, அது தன்னைப் புகழவேண்டும் என்பதற்காகவா? இல்லையல்லவா. அதுபோலத்தான் தன்னை எப்போதும் முகஸ்துதி செய்யாமல் இருந்தாலும் அத்தகையவர்களின் துன்பங்களையும் நீக்குவதற்கு ஓடோடிப் போய் உதவி செய்வர் எவ்வித பலனையும் எதிர்பார்க்காத பெரியோர்கள்.


2 . வன்சொல்லும் இனிமையாகும்

மாசற்ற நெஞ்சுடையார் வன்சொலினிது ஏனையவர்
பேசுற்ற இன்சொல் பிறிதென்க - ஈசற்கு 
நல்லோன் எறிசிலையோ நன்னுதால்!  ஓண்கருப்பு
வில்லோன் மலரோ விருப்பு?

வேண்டியவர், வேண்டாதவர் என்ற விருப்பு வெறுப்பு நீங்கிய பெரியோர்கள் தவறினைக் கண்டால் யாராக இருந்தாலும் கடுஞ்சொல் சொல்லித் தவறைச் சுட்டிக் காட்டினால் அவர்கள் மீது வன்மம் கொள்ளலாகுமா? நம் தவறைச் சுட்டிக்காட்டித் திருத்திக் கொள்ளவேண்டுமென்கிற நல்லெண்ணத்தினால் அல்லவா அவர்கள் கடுஞ்சொற்களைச் சொல்கிறார்கள். அது இனிமை பயக்கக் கூடியவை அல்லவா? அப்படிப்பட்ட உயர்ந்தோர் அல்லாமல் ஏனையோர் சொல்லும் இனிய சொற்கள் கூட அப்படிப்பட்ட நன்மை கருதியவை அல்ல என்பதால் அவை துன்பம் பயக்கக் கூடிய சொற்களாக இருக்கும்.
இவ்வுண்மையை எடுத்துக் காட்ட இரு இலக்கியச் சான்றுகளைக் காணலாம். அது பெரிய புராணத்தில் வரும் சாக்கிய நாயனார் வரலாறு. சமண சமயம் சார்ந்த பல்லவ மன்னன் சிவலிங்கத்தை வழிபடுவதை விரும்பாததால், அந்த நாட்டில் இருந்த சாக்கிய நாயனார் தினமும் சிவலிங்கத்தின் மீது பூவாக ஏற்றுக்கொள்ள வேண்டுமென்ற வேண்டுகோளோடு கல்லை எடுத்துப் போட்டு வந்தார். சிவபெருமானும் அந்த கற்களைப் பூவாக ஏற்றுக் கொண்டு அவருக்கு வீடுபேறளித்தார். மற்றொரு நிகழ்ச்சி சிவபெருமானின் தவத்தைக் கலைக்க மன்மதன் கரும்பு வில்லில் பூவினால் ஆன அம்பை வைத்து செலுத்த சிவன் கோபம் கொண்டு அவனை எரித்ததாகப் புராணம் சொல்கிறது. இவ்விரண்டு வரலாறுகளும் மேற்சொன்ன நீதிகளை வலியுறுத்துவதா இருக்கிறதல்லவா.


                  3 . பெறுகின்ற வழியறிந்து ஒருபொருளை அடைக.

தங்கட்கு உதவிலர்கைத் தாமொன்று கொள்ளினவர் 
தங்கட்கு உரியவரால் தாங்கொள்க; - தங்கநெடுங்
குன்றினால் செய்தனைய கொங்காய் ஆவின்பால்
கன்றினால் கொள்ப கறந்து.

தங்கக் குன்றுபோல் தனங்களையுடைய பெண்ணே! பசுவிடம் பால் கறக்க வேண்டுமென்றால் அதன் கன்றினை அவிழ்த்துவிட்டு அது போய் தாய்ப்பசுவின் மடியில் வாய் வைத்து ஊட்டுகின்றபோது அதன் மடி சுரந்து ஏராளமான பாலைத் தருகிறது. நாம் அதனைக் கறந்து கொள்கிறோம் அல்லவா?

அதுபோல நமக்கு உதவுகின்ற மனப்பாங்கு இல்லாத ஒருவரிடம் ஏதேனும் தேவைப்படுகிறதென்றால் அவருடைய அன்புக்குப் பாத்திரமான ஒருவரின் உதவியோடு அவரிடம் நாம் விரும்பும் உதவியைப் பெற்றுக் கொள்ளலாம்.


4 . செல்வம் பயன்படுத்துவார்க்கே உரியதாம்

பிறர்க்குதவி செய்யார் பெருஞ்செல்வம் வேறு 
பிறர்க்குதவி ஆக்குபவர் பேறாம்; - பிறர்க்குதவி
செய்யாக் கருங்கடல்நீர் சென்று புயல்முகந்து
பெய்யாக் கொடுக்கும் பிறர்க்கு.

கடலில் இருக்கும் ஏராளமான நீர் உப்புத்தன்மை கொண்டது. அது மனிதனின் தேவைக்குப் பயன்படாது. ஆனால் காற்றும் வெயிலும் அந்த உப்பு நீரை மேகமாக்கி கரைக்குக் கொணர்ந்து மழையாகப் பெய்ய வைக்கும்போது அது மக்களுக்கெல்லாம் பயன்படுகிறதல்லவா?

அதைப் போல ஈயாக் கஞ்சனின் செல்வம் யாருக்கும் பயன்படாது. ஆனால் பயன் அறிந்த நல்லார் தங்கள் திறமையால் அந்த பூதம் காத்த செல்வத்தை மக்களுக்குப் பயன்படும் வகையில் செலவு செய்ய வைக்கலாம். கஞ்சனையும் தானதர்மம் செய்ய வைக்கும் திறனுள்ளவர்கள் மேலோர்.


5 . நட்பிற் பிரியலாகாது

நீக்கம் அறுமிருவர் நீங்கிப் புணர்ந்தாலும்
நோக்கின் அவர்பெருமை நொய்தாகும் - பூக்குழலாய் 
நெல்லின் உமிசிறிது நீங்கிப் பழமைபோல்
புல்லினும் திண்மைநிலை போம்.

கூந்தலில் மலர்சூடிய பெண்ணே! நெல்லைக் குத்தி உமியை நீக்கிய பின்னர், மீண்டும் அந்த உமியை முன்போல சேர்த்து வைத்தாலும், அந்த நெல்லை விதைத்து முளைக்க வைக்க முடியுமா? இயலாது அல்லவா?


நெருக்கமாய் இருந்து பழகிய நண்பர்கள் இருவர் நட்பு நீங்கிப் பிரிந்து போய், பின்னர் மீண்டும் நட்பாக இணைந்தாலும் அந்த நட்பின் பெருமை முன்போல சிறப்புடையதாய் இருக்குமா? இருக்காது என்பதை உணர்.

Wednesday, May 10, 2017

“நல்வழி”

                                நீதி நூல்கள் வரிசையில் ஒளவையார் இயற்றிய                                
                                                “நல்வழி”

      பிற்காலத் தமிழிலக்கியங்களில் நீதிநூல் வரிசையில் ஒளவையார் இயற்றியதாகக் கூறப்படும் “நல்வழி” எனும் இந்த இலக்கியம், பள்ளி மாணவ மாணவியர் அவசியம் படிக்கவேண்டிய நூல். மனிதர்கள் எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும், எவற்றையெல்லாம் கடைபிடிக்க வேண்டுமென்கிற வழிகளைக் கூறும் நூல் இது. மாணவர்கள் மட்டுமல்ல, பெரியவர்களும் படித்து அறிந்து அதனை நடைமுறையில் பாவிக்க வேண்டிய நூல் இது. இந்நூல் மிக எளிய தமிழ் நடையில் இயற்றப்பட்டிருக்கிறது, இதற்கு ஒன்றும் உரை தேவையில்லை எனினும் சிறிதளவு விளக்கம் கொடுத்து அந்தப் பாடல்களைச் சொன்னால் விரும்பிப் படிக்கத் தோன்றும் என்பதால் இவைகளுக்கும் ஒரு சிறிது விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

      இளைய தலைமுறை இதுபோன்ற அரிய நூல்களைப் படிப்பதால் அவர்களுடைய வாழ்வு சிறக்கும், பண்பான நடைமுறைகளைப் பின்பற்றுவர். பெரியவர்கள் படிப்பதால் தங்கள் பிள்ளைகளுக்கு இதில் அடங்கியுள்ள செய்திகளைச் சொல்லி நல்வழிப் படுத்த முடியும். உரையாற்றுவோர் இதில் காணப்படும் நீதிகளைத் தங்கள் உரையில் சொல்லித் தங்கள் உரையை சுவையுடையதாக்கிக் கொள்ளலாம். இந்த நூலில் கடவுள் வாழ்த்து நீங்கலாக நாற்பது பாடல்கள் உள்ளன.

                 பாடல்களுக்கான விளக்கங்கள் என்னுடையவை.

                             விநாயகர் துதி

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை                                           நாலும் கலந்துனக்கு நான்தருவேன் – கோலம்செய்                                   துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச் 
சங்கத் தமிழ்மூன்றும் தா. 
          
விநாயகப் பெருமானைத் துதித்தே எல்லா காரியங்களையும் செய்வது நமது மரபு. அந்த வழக்கத்தையொட்டி நல்வழி எனும் இந்த இலக்கியத்தைப் படைக்கத் தொடங்குமுன் ஒளவையார் விநாயகப் பெருமானை வணங்கிப் போற்றுகிறார். இறைவனுக்கு நெய்வேத்தியமாகப் படைக்க நல்ல பால், தெளிந்த தேன், பாகோடு பருப்பு இவைகளை வைத்து விநாயகரை ஏற்றுக்கொள் என்கிறார். இவற்றை அவருக்குப் படைக்கும் அதே நேரத்தில் அவரிடமிருந்தும் சிலவற்றை கவிஞர் எதிர்பார்க்கிறார். அவை சங்கத்தமிழ் மூன்றையும் தனக்குத் தரவேண்டும் என்கிறார் அந்த யானைமுக தும்பிக்கையானிடம். சுயநலமாக நல்ல ஆரோக்கியம், நீண்ட ஆயுள், நிறைந்த செல்வம் இவற்றைக் கேட்காமல் ஒளவை சங்கத் தமிழைக் கேட்பதன் மூலம் அவர் தன்னுடைய தமிழின் மீதான பற்றை வெளிப்படுத்துவதாக இந்தப் பாடல் அமைந்திருக்கிறது.

                              நூல்

புண்ணியம்ஆம் பாவம்போம் போனநாள் செய்தவை                                  மண்ணில் பிறந்தார்க்கு வைத்தபொருள் –  எண்ணுங்கால்                            ஈதொழிய வேறில்லை; எச்சமயத் தோர் சொல்லும்                                  தீதொழிய நன்மை செயல்.                        1.

      மனிதன் தான் செய்யும் பாவ புண்ணியங்களுக்கேற்ப அடுத்தடுத்த பிறவிகளில் தான் செய்த நன்மை தீமைகளையொட்டி நல்லவைகளையோ அல்லது தீமைகளையோ அனுபவிக்கிறான் என்பது இந்த பாரதநாட்டு மக்களின் நம்பிக்கை. இந்தப் பிறவியில் நாம் நல்லவைகளையே செய்து வந்தும் நமக்கு ஏன் துன்பங்கள் அடுக்கடுக்காக வந்து கொண்டிருக்கின்றன என்கின்றனர் சிலர். வேறு சிலரோ இந்தப் பிறவியில் எல்லாவித தீமைகளையும் செய்து கொண்டே நல்லவைகளைத் தொடர்ந்து அனுபவித்து வருகிறார்களே அது எப்படி என்கிற ஐயம் சிலருக்கு ஏற்படுகிறது. இதெல்லாம் அன்றன்று செய்யும் பாவ புண்ணியங்களின் அடிப்படையில் நேர்வது அல்ல. முற்பிறவியில் நாம் செய்த நல்லவை தீயவை ஆகியவற்றின் பிரதிபலன்களே இப்பிறவியில் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள். ஆகவே ஒவ்வொருவரும் நாம் நல்லனவற்றையே செய்ய வெண்டுமென்கிற உறுதியை எடுத்துக் கொள்வார்களானால் எந்தப் பிறவியிலும் நன்மைகளே விளையும். இல்லையேல் செய்த பாவ புண்ணியங்களுக்கேற்ற பலன்களை அனுபவித்தே தீரவேண்டும் என்கிறது இந்தப் பாடல். இதைத்தான் நம் பக்தி இலக்கியங்கள் அனைத்துமே போதிக்கின்றன.

சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால் 
நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில் 
இட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தார் 
பட்டாங்கில் உள்ள படி.                                                                             2

                இன்றைய சமுதாயத்தில் மக்கள் அடிப்படையில் தங்களை முன்னிறுத்திக் கொள்வது சாதியின் அடிப்படையில்தான். சாதிகள்தான் எத்தனை யெத்தனை சாதிகள். அடேயப்பா, அவற்றை எண்ணி முடியாது அத்தனை பிரிவுகள், அத்தனை மாறுபட்ட பழக்க வழக்கங்கள். கேட்டால் இது எங்கள் சாதி வழக்கம் என்பர். அப்படிப் பிரிந்து போய் கிடக்கும் சாதிக்காரர்களுக்கிடையே ஒருசில பழக்க வழக்கங்களில் மாற்றம் இருக்கிறதே தவிர அடிப்படையான செயல்பாடுகள் என்று பார்த்தால் அனைவருமே ஒரே மாதிரியான செயல்பாடுகளை வேறு வேறு விதத்தில் அவைகளைச் செய்து கொண்டிருப்பார்கள். பாரதி “சாதிகள் இல்லையடி பாப்பா” என்று எழுதியிருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் பாரதி ஆய்வாளர்கள் சொல்லும் செய்தி பாரதி எழுதியது “சாதிப் பெருமைகள் இல்லையடி பாப்பா, அதில் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்” என்றுதான் என்கிறார்கள். சாதியே இல்லை எனும்போது அதில் ஏற்றத் தாழ்வு எப்படி இருக்க முடியும். ஆகவே பாரதி “சாதிப் பெருமைகள் இல்லையடி பாப்பா” என்றுதான் சொல்லியிருக்க முடியும். மேலும் பாரதி சாதிகள் செய்யும் தொழிலால் ஏற்பட்டது, பிறப்பினால் அல்ல என்பதை உறுதியாக நம்புகிறவன். ஆகவே சாதிகளில் ஏற்றத் தாழ்வு இருந்தால் அல்லவா, அதில் தாழ்ச்சியோ, உயர்ச்சியோ இருப்பதாகச் சொல்ல முடியும். சரி! இங்கே கவிஞர் சாதிகள் இரண்டுதான் என்கிறார். அது என்ன இரண்டு சாதி என்றால், நீதி நெறிப் படி முறைதவறா வாழ்க்கை வாழ்ந்து கொண்டு, பிற உயிர்களின்பால் அன்பு பூண்டு, தேவை உள்ளவர்களுக்குத் தம்மால் இயன்ற உதவிகளைச் செய்து கொண்டு வாழ்கின்றவர் மேலோர் என்றும், அப்படி இரக்க குணமின்றி யாருக்கும் எந்த உதவியும் செய்ய மனமின்றி வாழ்கின்றவர்கள் இழி குலத்தவர் என்றும் உரைக்கிறார் இந்தப் பாட்டில்.

இடும்பைக்(கு) இடும்பை இயலுடம்(பு) இதன்றே 
இடும்பொய்யை மெய்யென்(று) இராதே - இடுங்கடுக 
உண்டாயின் உண்டாகும் ஊழில் பெருவலிநோய் 
விண்டாரைக் கொண்டாடும் வீடு.                                                     3

                இடும்பை என்பது துன்பத்தைக் குறிக்கும் சொல். துன்பங்களைப் போட்டு வைக்கும் பையாக இருப்பது இந்த உடம்பு. (இடும்+பை=இடும்பை). வாழ்க்கையில் இன்பமும் உண்டு, துன்பமும் உண்டு. இன்பம் வேண்டுமென்பதற்காக மனிதன் ஓடியாடி அலையும்போது அவனுக்குப் பெரும்பாலும் கிட்டுவது துன்பம்தான். அந்தத் துன்பத்தை வேண்டாம் என்று ஒதுக்கிவிட முடியுமா? வந்ததை ஏற்றுக்கொண்டு வேறு வழியில்லாமல் நம் உள்ளத்தில் போட்டுவைத்துக் கொள்வதால் இவ்வுடம்பை பை என்று சொல்கிறார். இந்த உண்மையைப் புரிந்து கொள்வது அவசியம். வாழ்க்கையில் இன்பமோ, துன்பமோ அனுபவிக்க வேண்டியது நாம்தான். இன்பம் வந்தால் மகிழ்வதும் துன்பமென்றால் நெகிழ்வதும் நம் செயலென்பதால் இவ்வுடம்பைத் துன்பங்களைத் தாங்கும் பை என்கின்றார்.

இந்த உடம்பை உணவையிட்டு வளர்க்கிறோம். உணவு உயிருக்காக அல்ல, இந்த உடம்பை வளர்ப்பதற்காக, ஜீவிதத்தோடு வாழ்வதற்காக. இதனை நிரந்தரம் என்று நினைத்துவிடக் கூடாது. அழியக்கூடியது. “மணிமேகலை” எனும் இலக்கியம் உடம்பின் நிலையாமை குறித்து அழகாகச் சொல்கிறது. அது: “வினையின் வந்தது; வினைக்கு விளைவாயது; புனைவன நீங்கின் புலால் புறத்திடுவது; பற்றின் பற்றிடம், குற்றக் கொள்கலம், மனித யாக்கை இது” என்கிறது மணிமேகலை. அப்படிப்பட்ட இந்த உடல் நிரந்தரமானது அல்ல என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். இந்த உண்மை புரிந்துவிட்டால், யாக்கை நிலையாமையை அறிந்து கொண்டால் வாழும் காலத்திற்குள் “இடுக” தான தர்மங்களை முழுமனத்தோடு செய்க என்கிறது பாடல். தானங்கள் எதற்காகச் செய்ய வேண்டும்? தானம் செய்தால் வாழ்விற்குப் பின் கிடைக்கு “வீடு” எனும் மோட்சத்தை அடைய இப்பிறப்பில் நம்மை ஈர்த்துக் கொண்டிருக்கும் பந்தம், பாசம், பிறப்பு, இறப்பு ஆகியவற்றிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்ள முடியும். ஆகவே வாழுங்காலத்தில் அறங்களைச் செய், அவை உன் பிறவி நோய் தீர்ந்து மோட்ச கதியடைய வழிகாட்டும் என்கிறது இந்தப் பாடல்.

எண்ணி ஒருகருமம் யார்க்கும்செய் ஒண்ணாது 
புண்ணியம் வந்தெய்து போதல்லால் - கண்ணில்லான் 
மாங்காய் விழவெறிந்த மாத்திரைக்கோல் ஒக்குமே 
ஆங்காலம் ஆகும் அவர்க்கு.                                                                4

நாம் ஒரு காரியத்தைச் செய்து முடிக்க விரும்புகிறோம். அதைத் தொடங்கவும் செய்கிறோம் ஆனால் அப்படிப்பட்ட காரியம் நம்மால் செய்து முடிக்கப்படவேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்தால் தவிர அதற்கான புண்ணியத்தை நாம் செய்திருந்தால் தவிர, அந்த காரியம் முடிவது என்பது இயலாது. எதையும் அது முடியவேண்டுமென்று விதித்திருந்தாலொழிய எத்தனை முயற்சிகள் செய்தாலும் முடிவது கிடையாது. எது எப்போது நடக்க வேண்டுமோ அப்போதுதான் நடக்கும், அது நம் கரங்களில் இல்லை என்பது கருத்து.

இது எப்படியிருக்கிறது என்றால், இரு கண்களிலும் பார்வை இல்லாத ஒருவர் தான் ஒரு மாந்தோப்புக்குச் சென்று கையில் வைத்திருக்கும் கைத்தடியை எறிந்து மரத்திலுள்ள மாங்காயை அடித்துவிட வேண்டுமென்று அந்தத் தடியை வீசுகிறார். இவருக்குத்தான் பார்வை இல்லையல்லவா? மரத்தில் காய்கள் எந்த இடத்தில் இருக்கின்றன, தான் வீசும் தடி அதன் மீது படுமா என்றெல்லாம் தெரியாமல் குருட்டாம்போக்கில் வீசினால் என்னவாகும்? மாங்காயும் விழாது, தடியும் எங்கு போய் விழுமென்று தெரியாமல் அதையும் அவர் இழப்பார் என்கிறது இந்தப் பாடல்.

வருந்தி அழைத்தாலும் வாராத வாரா 
பொருந்துவன போமி(ன்) என்றால் போகா - இருந்தேங்கி 
நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம்நினைந்து 
துஞ்சுவதே மாந்தர் தொழில்.                                                               5

வாழ்க்கையில் நமக்கு எத்தனையோ எதிர்பார்ப்புகள். இவைகளெல்லாம் நமக்குக் கிடைக்க வேண்டுமென்று எண்ணுகிறோம், ஆசைப்படுகிறோம். அதற்கான முயற்சிகளும் செய்து பார்க்கிறோம். ஆனால் அவைகள் நமக்குக் கிடைக்க வேண்டுமென்று இருந்தால் மட்டுமே கிடைக்கும், இல்லையேல் என்னதான் தலைகீழாக நின்று பார்த்தாலும் அவை கிட்டுவதில்லை. அதுபோலவே சிலவற்றை விரட்டி விடவேண்டுமென்று அதீத முயற்சிகள் மேற்கொண்ட போதும், அவை நம்மை விட்டு நீங்குவதில்லை. அட்டை போல நம்மை ஒட்டிக்கொண்டு என்ன செய்தாலும் அவற்றை உதறிவிட முடிவதில்லை. இப்படிப்பட்ட நிலைமையால் நமக்கு நேர்வது என்ன?

நாம் எண்ணியபடி வேண்டிய பொருட்கள் கிடைக்கவில்லை, நினைத்த காரியங்கள் நடக்கவில்லை என்று மனம் துன்பப்பட்டு, எவற்றையெல்லாம் உதறிவிட வேண்டுமென்று பிரயத்தனங்கள் மேற்கொண்ட போதும் அவற்றை நீக்கிவிட முடியவில்லையே என்கிற கவலை மனதில் குடிகொண்டு நாம் வாழ்க்கையில் ஏங்கித் தவிக்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டு விடுகிறோம்.

உள்ளது ஒழிய ஒருவர்க்(கு) ஒருவர் சுகம் 
கொள்ளக் கிடையா குவலயத்தில் - வெள்ளக் 
கடலோடி மீண்டும் கரையேறினால் என் 
உடலோடு வாழும் உயிர்க்கு.                                                               6

இந்தப் பிறவியில் நமக்கென்று விதிக்கப்பட்டவைகள் அதாவது சுகங்கள், துக்கங்கள், நல்லவைகள், தீயவைகள் இவையெல்லாம் எவைகள் கிடைக்க வேண்டுமோ அவைகள் மட்டுமே நம்மை வந்தடையும். அதற்கு மாறாக சுகம் வேண்டினாலோ, நல்லவைகள் கிட்டவேண்டுமென்று ஆசைப்பட்டாலோ அவை கிடைக்க மாட்டா. நம் கையிலுள்ள பாத்திரத்தின் அளவுக்குத்தான் நீரை மொள்ள முடியும் அல்லவா, அதைப் போலத்தான்..
ஒருவன் இந்த நாட்டில் தனக்கென்று கிடைத்த சொத்து, செல்வம் இவைகள் போதாவில்லை, மேலும் மிக அதிகமான செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க வேண்டுமென்றெண்ணி கப்பலேறி அயல் நாடு செல்கிறான். அங்கு பீராய்ந்து நிறைய செல்வங்களைச் சேர்த்துக் கொண்டு ஊர் திரும்புகிறான். அப்படி அவன் கொண்டு வந்து சேர்த்த செல்வங்கள் எல்லாம் அவனுக்கு மட்டுமே பயன்படப் போகிறதா? அவனுக்கென்று என்ன விதிக்கப்பட்டிருக்கிறதோ அதை மட்டும் தான் அவன் அனுபவிக்க முடியும். ஏனையோர் அவன் கொண்டு வந்ததை எந்த அளவுக்குப் பயன்படுத்திக் கொள்வார்கள், அனுபவிப்பார்கள் என்பது தெரியாது என்கிறது இந்தப் பாடல்.

எல்லாப்படியாலும் எண்ணினால் இவ்வுடம்பு 
பொல்லாப் புழுமலிநோய் புன்குரம்பை - நல்லார் 
அறிந்திருப்பார் ஆதலினால் ஆங்கமல நீர்போல் 
பிறிந்திருப்பார்; பேசார் பிறர்க்கு.                                                       7

கற்றோர்கள், விவரம் புரிந்தவர்கள் இந்த வாழ்க்கையைப் பற்றி நன்கு சிந்தித்து ஆழ்ந்து ஆலோசிப்பார்களானால் என்ன புரிந்து கொள்வார்கள்? அதிலும் பிறப்பு இருப்பு இறப்பு என்று வாழ்க்கைத் தத்துவத்தை அலசி ஆராய்பவர்களுக்குத் தெரியும் இந்த உடல் நிரந்தரமானது அல்ல. ஒருநாள் அழியக்கூடியது. புழுவும் பூச்சியும் உருவாகி வளர்ந்து இவ்வுடமை அழிக்கக்கூடியது. இதை என்னதான் பேணி வளர்த்தாலும், வாசனைகள் இட்டுப் பூசி வெளிக்காட்டினாலும், பட்டுடை அணிந்து வெளியில் வேஷமிட்டுக் காட்டினாலும் அழிந்து, புழு, பூச்சிகளுக்கு இறையாகக் கூடிய மாமிசப் பிண்டம் என்பது ஆராய்ந்தறிந்த பெரியோர்களுக்குத் தெரியும். பலவித நோய்கள் உருவாகக் கூடியது இவ்வுடல் என்பதை அவர்கள் அறிந்திருப்பார்கள்.

ஆகையால் வாழ்க்கையின் இரகசியத்தை உணர்ந்த அறிவாளிகள் என்ன செய்ய வேண்டும். தாமரை நீரில் வளர்ந்திருக்கிறது. அவ்வப்போது காற்றில் நீர் அசையும்போது நீரில் சில துளிகள் அந்தத் தாமரை இலையில் படிந்துவிடும். அவை ஒரு ஸ்படிகம் போல் அந்த இலைமீது ஒட்டாமல் தனித்து உருண்டு கொண்டிருக்கும். இன்னொரு காற்று வீசும்போது அது மீண்டும் நீரில் விழுந்து அதனோடு கலந்து விடும். வாழ்க்கையும் அப்படித்தான் என்று எல்லாவற்றிலிருந்தும் பட்டும் படாமலும், ஒட்டியும் பிரிந்தும் வாழ்க்கையைக் கடத்தி விடுவர் என்கிறது இந்தப் பாடல்.

ஈட்டும் பொருள்முயற்சி எண்ணிறந்த ஆயினும்ஊழ் 
கூட்டும் படியன்றிக் கூடாவாம் - தேட்டம் 
மரியாதை காணும் மகிதலத்தீர்! கேண்மின்; 
தரியாது காணும் தனம்.                                                                           8

மனிதன் இளமைக் காலத்தில் கல்வி கற்றுப் பின்னர் குறிப்பிட்ட காலம் வரை செல்வத்தைத் தேடவேண்டும். அப்படிச் செல்வத்தைச் சேர்க்க பல வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். சிலர் அந்த முயற்சியில் வெல்லலாம், சிலர் எத்துணை முயன்றாலும் செல்வம் சேருவதில்லை. அதற்கு காலம் தான் காரணம். நம்மிடம் செல்வம் சேரவேண்டுமென்று விதி இருந்தால் நிச்சயம் சேரும்; இல்லையென்றால் என்னதான் முயன்றாலும் உழைத்தாலும் செல்வம் சேராது. இதெல்லாம் ஊழ்வினைப் பயனே என்பதைப் புரிந்து கொள்ளல் வேண்டும்.

ஆக செல்வம் மனித வாழ்க்கையில் ஓர் நிலையற்றது. அது வந்தாலும் வரும், போனாலும் போய்விடும். ஆனால் வாழ்க்கையில் நாம் சேர்த்துக் கொள்ள வேண்டியது மரியாதை ஒன்றைத்தான். செல்வம் இல்லாமல் போனாலும் மரியாதையைத் தேடிக் கொண்டால் அனைவரும் நம்மை மரியாதையுடன் பார்ப்பார்கள். இல்லையேல் செல்வமும் இல்லை, மரியாதையும் இல்லையென்றால் நாம் ஏளனத்துக்கு ஆளாவோம் என்கிறது இந்தப் பாடல்.

ஆற்றுப் பெருக்கற் றடிசுடுமந் நாளுமவ்வா(று) 
ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் - ஏற்றவர்க்கு 
நல்ல குடிபிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும் 
இல்லை என மாட்டார் இசைந்து .                                                     9

ஆற்றில் கோடைக் காலத்தில் நீரின்றி வற்றிப்போய் சூரிய வெப்பத்தால் ஆற்றுமணல் சுடுகின்ற காலத்தில் கூட, மக்கள் அந்த ஆற்று மணலைத் தோண்டி அதில் ஊறும் ஊற்று நீரையெடுத்துப் பயன்பாட்டுக்குக் கொண்டு செல்வர். அப்படி வற்றிப்போன ஆறுகூட தன்னைத் தோண்டினால் நீரைக் கொடுக்கின்றது, அந்த நீரைக் கொண்டு மக்கள் தாகம் தவிர்க்கலாம்.

அதுபோலவே நல்ல குடியில் பிறந்தவர்கள் மிகப் பெரிய செல்வந்தராக இருந்தபோது எப்படி நற்குணங்களும் தயாள சிந்தையும் உடையவராக இருந்தார்களோ அப்படியே அவர்களுக்கு வறுமை வந்துற்ற போதும் அந்த வறிய நிலையிலும் முன்பிருந்த அதே தயாள சிந்தனைகளும், பிறருக்கு உதவுகின்ற மனப்பான்மையும் உடையவர்களாகவே இருப்பார்கள், வறுமைக்கு ஆட்பட்டுவிட்டோம் என்பதற்காகத் தங்களை மாற்றிக் கொள்ள மாட்டார்கள், யாருக்கும் இல்லையென்று சொல்லும் மனம் அவர்களுக்கு இருக்காது என்கிறது இந்தப் பாடல்.

ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் 
மாண்டார் வருவரோ மாநிலத்தீர் - வேண்டா! 
நமக்கும் அதுவழியே! நாம்போம் அளவும் 
எமக்கென்? என்(று) இட்டு, உண்டு, இரும்.              10

இவ்வுலகில் உயிர்கள் பிறப்பதும், வாழ்வதும் பின்னர் நேரம் வந்தபோது இறப்பதும் இயற்கையாக நடைபெறுகின்ற நிகழ்வுகள்தான். ஒருவர் இறந்து விட்டார் என்றதும் உறவினர்கள் வருத்தமுறுவதும், துக்கத்தினால் அழுவதும் இயற்கைதான். அதற்காகத் தொடர்ந்து இறந்தவரை எண்ணி எண்ணி அழுதுகொண்டிருக்க முடியுமா? அப்படி அழுவதனால் இறந்து போனவர் மீண்டெழுந்து வந்து விடப்போகிறாரா? இல்லையே. ஆகையால் இறந்தவரை எண்ணி அழுவதை விட்டுவிட்டு, வருங்காலத்தில் நேரம் வரும்போது நாமும் அதேபோல போக வேண்டியவர்தான் என்பதை நினைவில் வைத்துக் கொள்வதுதான் சரியானது.

அப்படி நமக்குக் காலம் வந்து காலன் அழைக்கும் வரை நல்லவைகளையே சிந்தித்துப் பிறருக்கு நம்மால் ஆன உதவிகளைச் செய்து கொண்டு, நாமும் நன்கு உண்டு மகிழ்ச்சியோடு வாழவேண்டும் என்கிறது இந்தப் பாடல்.

ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய் 
இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய் - ஒருநாளும் 
என்நோ(வு) அறியாய் இடும்பைகூர் என்வயிறே 
உன்னோடு வாழ்தல் அறிது.                                                 11

நாம் உயிர்வாழ உணவு உண்ணுதல் என்பது அவசியம். அப்படி தினந்தோறும் உண்டு உறங்கி, பிறர்க்கு இடர்செய்து நல்லன அல்லாதவற்றை மனத்தில் தாங்கிக் கொண்டு வாழுகின்றவர்களாக இருக்கிறோம். அப்படிப்பட்ட ஒருவர் தன் வயிற்றை நோக்கிச் சொல்லும் கருத்து இது. ஏ வயிறே, தினந்தினம் உணவை ஏற்றுக் கொள்ளும் நீ, ஒரேயொரு நாள் உணவு இல்லாமல் இரு என்றால் கேட்கிறாயா? ஒருநாள் கூட வயிற்றை நிரப்பிக்கொள்ளாமல் இருக்க முடியவில்லையே. போகட்டும் போகிற போக்கில் நமக்கு அடுத்த நாள் உணவு கிடைக்குமோ கிடைக்காதோ, இன்றே இரு நாட்களுக்குமான உணவை எடுத்து நிரப்பிக்கொள் என்றாலும் கேட்கமாட்டேன் என்கிறாயே! ஒருநாளாவது நான் படும் துன்பத்தை உணர்வதாகத் தெரியவில்லையே ஏ துன்பம் தரும் என் வயிறே! உன்னோடு எப்படி வாழ்வது? என்று தன் வயிற்றைப் பார்த்துச் சொல்வதாக அமைந்த பாடல் இது.

இதன் கருத்துப்படி மனிதன் ஒரு வேளை உண்ணாமலும் இருக்க முடியவில்லை, இருவேளை உணவை ஒரே சமயத்தில் உண்ணவும் முடியவில்லை, இந்த வயிறு படுத்தும் பாடு என்று வருந்திச் சொல்லும் பாடல் இது.

ஆற்றங் கரையின் மரமும் அரசறிய 
வீற்றிருந்த வாழ்வும் விழும் அன்றே - ஏற்றம் 
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர் 
பழுதுண்டு வேறோர் பணிக்கு,                                                            12

ஆற்றங்கரையோரம் ஏராளமான மரங்கள் பெருத்து வளர்ந்து வளமோடு நிற்பதைப் பார்க்கிறோம். அத்தகைய மரம் கூட ஒருநாள் ஆற்று வெள்ளத்தாலோ, அல்லது மிகுந்தடிக்கும் காற்றினாலோ அல்லது நீண்ட நாட்கள் இருந்ததாலோ ஒருநாள் விழுந்து விடலாம். அதுபோலவே அவ்வூர் அரசனும் அறிந்திருக்கக் கூடிய அளவு செல்வாக்கோடு வாழ்ந்திருக்கும் ஒருவன், ஒரு நாள் வறுமையால் வீழ்ச்சி கண்டு வரியவனாகிவிடலாம்.
ஆனால், தனக்குச் சொந்தமான நிலத்தை ஏர்கொண்டு உழுது, நீர்பாய்ச்சி, பயிர் செய்து வாழுகின்ற வாழ்க்கை இருக்கிறதே அதற்கு நிகரானது எதுவும் இல்லை. வேறு எந்தத் தொழில் செய்தாலும் அதற்கு ஏதேனும் பழுது நேரிடலாம், ஆனால் இந்த உழவுத் தொழிலுக்கு மட்டும் எந்த குறையும் இன்றி எதனோடும் ஒப்பிடமுடியாதபடியான உயர்வோடு இருக்கும் என்கிறது இந்தப் பாடல்.

ஆவாரை யாரே அழிப்பர் அதுவன்றிச் 
சாவாரை யாரே தவிர்ப்பவர்- ஓவாமல் 
ஐயம் புகுவாரை யாரே விலக்குவார் 
மெய்யம் புவியதன் மேல்.                                                                     13

கல்வியில் சிறந்தவராய் ஆவாரை, செல்வத்தில் உயர்ந்தவராக ஆவாரை, ஒழுக்கத்தில் மேன்மையுடையவராக ஆவாரை, தானதருமத்தில் ஓங்கியிருப்பவராய் ஆவாரை, யார் தடுத்து நிறுத்த முடியும். அவர்கள் அவ்வாறு வாழவேண்டுமென்பது இறைவன் விதித்த வழி. அதுபோலவே இறந்து போகப்போகிறவரை எமன் வாயிலிருந்து தடுத்து நிறுத்தத்தான் நம்மால் முடியுமா? அது முன்பே விதித்துவிட்ட விதி அல்லவா?

அதுபோலவே எப்போதும் எதிலும் சந்தேகம் கொண்டு ஐயுறும் மனிதரை என்ன சொல்லி மாற்றிட முடியும். எதிலும் சந்தேகம், யார் மீதும் சந்தேகம், நடந்தால் சந்தேகம், விழுந்தால் சந்தேகம் என்று சந்தேகப் பிராணியை என்ன சொல்லி திருத்த முடியும். அது அவரவருக்கு விதித்தபடி நடக்கின்றது. உலகில் பல செயல்கள் அதன் பாட்டுக்கு விதித்த விதிப்படிதான் நடக்கும் என்கிறது இந்தப் பாடல்.

பிச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை பேசுங்கால் 
இச்சைபல சொல்லி இடித்துண்கை - சிச்சீ !
வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது 
உயிர்விடுகை சால உறும்.                                                                    14

பிச்சையெடுத்து உண்பது என்பது மிகக் கேவலமான, கீழ்மையான செயல்தான்; அதைவிட கேவலமான கீழ்த்தரமான வாழ்க்கை எது தெரியுமா? பிறரை முகஸ்துதி செய்து அவரை இந்திரன் சந்திரன் என்றெல்லாம் வாய் நிறைய பொய்யுரைத்து புகழ்ந்து பேசி அவர் தரும் எச்சில் சோற்றைத் தின்று வாழ்தல் பிச்சையெடுப்பதிலும் கீழான செயல். இவ்வுலகில் வயிறு வளர்க்க இச்சகம் பேசி பலரும் கையாளும் இதுபோன்ற இழி செயலினும் கீழானது வேறு ஒன்றும் இல்லை.

அப்படியொரு கீழான வாழ்க்கையை வாழ்வதினும் உயிரை விட்டுவிடுவதே மேலான செயல் என்று பெரியோர்கள் சொல்லுகிறார்கள் என்கிறது இந்தப் பாடல்.

சிவாய நம என்று சிந்தித் திருப்போர்க்கு 
அபாயம் ஒருநாளும் இல்லை; - உபாயம் 
இதுவே  மதியாகும்;  அல்லாத எல்லாம் 
விதியே மதியாய் விடும்.                                                                        15

எப்போதும் “சிவாயநம:” என்று ஈசன் நாமத்தைச் சொல்லி அவனை வணங்குவதுதான் சரியான வழி. அப்படி சிவனை வணங்குவோர்க்கு எந்தவித அபாயமும் வராது. ஒருவருக்கு வரக்கூடிய துன்பங்களை நீக்குவதற்கான உபாயமும் இதுவே. அதுவே அறிவின் தெளிவுமாகும். 

அதுவல்லாத எதுவும் விதிப்படித்தான் நடக்கும். விதியை மதியால் வெல்லலாம் என்பது அது சிவனை எப்போதும் வழிபடுபவர்க்கே இயலும். ஏனையோருக்கு விதிகாட்டிய வழியில்தான் மதியும் செல்லும், ஆகவே ஏற்படும் துன்பங்களிலிருந்து மீளும் உபாயம் இல்லை.

தண்ணீர் நிலநலத்தால் தக்கோர் குணம்கொடையால் 
கண்ணீர்மை மாறாக் கருணையால் - பெண்ணீர்மை 
கற்பழியா ஆற்றால்;  கடல்சூழ்ந்த வையகத்துள் 
அற்புதமாம் என்றே அறி.                                                                        16

பூமியில் நிலத்தின் தன்மை அந்தந்த இடத்துக்குத் தக்கபடி மாறுபடும். மழை பெய்யும்போது மழைநீர் எந்தந்த நிலத்தில் விழுகின்றதோ, அந்த நிலத்தின் மண்ணின் தன்மைக்கேற்ப அமையும். நல்ல மண்ணில் விழும் நீர் நன்னீராகவும், உப்பு உவர் நிலத்தில் விழும் மழை நீர் கரிக்கவும் செய்யும். அது போலவே ஒருவர் செய்யும் தான தர்மங்களுக்கு ஏற்ப அவருடைய கொடையுள்ளம் வெளியாகும். ஒருவருடைய பார்வையிலிருந்தே அவருடைய கருணை உள்ளம் வெளிப்படும். ஒரு பெண் வாழும் கற்பு நிலை கெடாத வாழ்க்கை நெறியால் அவளுடைய குண இயல்பு வெளிப்படும். இப்படிப்பட்ட அனைத்துமே இப்பூவுலகின் அற்புதங்கள் எனலாம்.

செய்தீ வினையிருக்கத் தெய்வத்தை நொந்தக்கால் 
எய்த வருமோ இருநிதியம்? -  வையத்து 
"
அறும்-பாவம்!" என்ன அறிந்து அன்றிடார்க்கு இன்று 
வெறும்பானை பொங்குமோ மேல்?                                                17

முற்பிறவியல் நல்வினை எதையும் செய்யாமல் பாவங்களே செய்து நரகப் படுகுழியில் விழுந்து மீண்டும் பிறவியெடுத்து வந்து பிறந்தவன் முற்பிறவியின் எச்சங்கள் அப்படியே மிச்சமிருக்க, இப்பிறவியில் நல்லன நடக்கவில்லையே, தீவினைகளே எதிர்கொள்கின்றேனே என்று நொந்து இறைவனை நொந்து கொள்வதால் என்ன பயன்? அவன் செய்த முற்பிறவி வினையால் அல்லவோ அவனுக்கு இத்தகைய தீமைகள் வந்தடைந்தன என்பதையல்லவா அவன் புரிந்து கொள்ள வேண்டும். முற்பிறவின் சிந்திதகர்மம் தொடர்கின்றபோது தீவினைகள் அன்றி இப்பிறவியில் இருநிதியமா கொட்டிக் கிடக்கும். இல்லை தீவினைகளைத்தான் அறுவடை செய்ய வேண்டியிருக்கும்.
அதுபோலவே முற்பிறவியில் தான தர்மங்கள் செய்து பிறர் பசியைத் தீர்த்து புண்ணியங்களைச் சேர்த்துக் கொண்டிருந்தால் அல்லவோ இப்பிறவியில் அவன் வீட்டுப் பானை பொங்கும். பொங்கிய உணவு அவன் பசியினை ஆற்றும். அது இல்லாமல் பலனை எதிர்பார்த்தால் என்ன பலன் கிடைக்கும்?

பெற்றார் பிறந்தார் பெருநாட்டார் பேருலகில் 
உற்றார் உகந்தார் எனவேண்டார் - மற்றோர் 
இரணம் கொடுத்தால் இடுவர்(;) இடாரே 
சரணம் கொடுத்தாலும் தாம்.                                                               18

உலோபிகள் என்றும் கஞ்சன் என்றும் யாருக்கும் எதையும் கொடுக்க மனமில்லாதவன் என்றும் சொல்லப்படுபவர்கள் இன்னாருக்குக் கொடுக்கலாம் இன்னாருக்குக் கொடுக்கக் கூடாது என்கிற பேதமின்றி அனைவருக்குமே எதையும் கொடுக்க மனமில்லாதவர்கள். அவர்களைப் பெற்றவர்களாக இருந்தபோதும், அல்லது அவருக்கு வாரிசுகளாக வந்து பிறந்தவர்களாக இருந்த போதும், தான் பிறந்து வாழும் நாட்டைச் சார்ந்தவர்களாக இருந்த போதும், நண்பர்கள், உறவினர்கள் என்று யாராயிருந்தாலும் எதையும் கொடுக்க மாட்டார்கள். அவர்களிடம் மன்றாடி, கெஞ்சிக் கேட்டுக் கொண்டாலும் எதையும் கொடுக்க மனமில்லாதவர்கள் அப்படிப்பட்ட கஞ்சர்கள். இதெல்லாம் அவர்களை அண்டி இரப்போருக்கு மட்டுமே அந்த நிலை.

ஆனால் அவர்கள் முன்னால் சென்று கத்தியைக் காட்டி, அல்லது அடித்துத் துன்புறுத்தி ரத்தக்காயத்தை உண்டாக்கினால் மட்டுமே வேறு வழியின்றி, உயிருக்குப் பயந்து கேட்டதைக் கொடுப்பார்கள்.

சேவித்தும் சென்றிரந்தும் தெண்ணீர்க் கடல்கடந்தும் 
பாவித்தும் பாராண்டும் பாட்டிசைத்தும் - போவிப்பம் 
பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால் 
நாழி அரிசிக்கே நாம்.                                                                 19

இவ்வுலகில் நாம் பணிந்தும், யாசித்தும், கடல்கடந்து சென்று பணியாற்றியும், வாய்ப்பு கிடைத்தால் இவ்வுலகை ஆளும் பதவியில் அமர்ந்து கொண்டும், பிறரைப் போற்றிப் புகழ்ந்து முகஸ்துதி செய்தும் வாழ்கிறோமே இவைகள் எல்லாம் எதற்காக? இவைகள் எல்லாம் நம் வயிற்றை நிரப்பிக் கொள்ளத்தான் செய்கிறோம் அல்லவா? வயிற்றுப் பசியில் கொடுமை அத்தகையது. அந்தப் பசியைப் போக்க வல்ல ஒருநாழி அரிசிக்காக இந்தப் போலிப் பிழைப்பை நாம் பிழைக்க வேண்டியிருக்கிறது.

அம்மி துணையாக ஆறிழிந்த வாறொக்கும் 
கொம்மை முலைபகர்வார் கொண்டாட்டம் -இம்மை 
மறுமைக்கும் நன்றன்று;  மாநிதியம் போக்கி 
வெறுமைக்கு வித்தாய் விடும்.                                                          20

வாழ்க்கை வாழ்வதற்கு ஒரு நியதி இருக்கிறது. குடும்பம் எனும்போது, கணவன், மனைவி, பிள்ளைகள், தந்தை, தாய், உடன் பிறந்தார் என்றெல்லாம் உறவுகளைப் பாராட்டி அனைவரிடமும் அன்பும் பாசமும் காட்டி வாழ்க்கை நடக்குமானால் அது இன்பமயமாக இருக்கும். அதை விட்டுவிட்டு வீட்டில் லக்ஷ்மியைப் போல மிக்க அழகுடைய, நல்ல குணமுடைய மனைவி இருந்தும் காமக் கணைகளை வீசித் தன் உடலழகைக் காட்டி மயக்கி நம்மை வீழ்த்திவிடும் வேசிகளின் வலையில் வீழ்ந்து அவர்களுடன் வாழ்வது என்பது எப்படிப்பட்டது தெரியுமா, கடலில் விழுவது போன்றும் அதிலும் இடுப்பில் ஒரு கருங்கல் அம்மியைக் கட்டிக்கொண்டு வீழ்வது போன்ற தற்கொலைக்குச் சமமாகும். அப்படிப்பட்ட கேடுகெட்ட வாழ்க்கை வாழ்ந்தால் என்னவாகும் தெரியுமா? நம் செல்வம் அனைத்தையும் இழக்க நேரிடும், வெற்று ஆளாய் நடுத்தெருவில் நிற்கும் நிலைமையும் ஏற்படும். ஆகவே நெறிமுறை தவறாத வாழ்க்கையே வாழவேண்டுமே தவிர தவறான ஆசைக்குப் பலியானால் நாம் வீழ்ச்சியடைவோம் என்கிறது இந்தப் பாடல்.

நீரும் நிழலும் நிலம்பொதியும் நெற்கட்டும் 
பேரும் புகழும் பெருவாழ்வும் - ஊரும் 
வருந்திருவும் வாழ்நாளும் வஞ்சமில்லார்க் கென்றும் 
தரும்சிவந்த தாமரையாள் தான்.                                                      21

மேலே சொன்ன பாடலில் நாம் தவறான உறவுகளை வைத்துக் கொண்டு ஆலயம் போன்ற நம் குடும்பத்தை சீரழித்தால் என்ன நேரும் என்பதைச் சொல்லியது அல்லவா? இந்தப் பாடலில் வாழ்வை வஞ்சகமில்லாமல் நேர்மையாக அனைவருக்கும் நல்லோனாக வாழ்ந்தால் செந்தாமரையில் வீற்றிருக்கும் மகாலக்ஷ்மி என்னென்ன வெல்லாம் தந்து நம்மைக் காப்பாள் என்கிறது இந்தப் பாடல். நீரின்றி அமையாது உலகம் என்கிறதல்லவா நம் தமிழ் இலக்கியம். ஆம் உயிர்வாழ மிக்க அவசியமான நல்ல நீர் நமக்கு எப்போதும் கிடைக்கும், வசிக்க நல்ல இல்லம், வழிநடையில் வெயிலில் இருந்து காக்க மரநிழல், உழுது பயிர் செய்ய நல்ல விளைநிலம், வீடுகட்டி வாழ மனை நிலம், நிலத்தில் நிறைய விளந்த நெல் மூட்டைகள், ஊரெங்கும் நம்மைப் போற்றும் வண்ணம் நல்ல பெயர், புகழ் இவைகள் அனைத்தும் அடங்கிய பெருவாழ்வு, ஊர் மக்கள் போற்றிடும் வண்ணம் நல்ல வாழ்க்கை இவை அத்தனையும் அமைந்திடும்.

பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக் 
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் - கூடுவிட்டுங்(கு) 
ஆவிதான் போயினபின்பு;  யாரே அனுபவிப்பார் 
பாவிகாள் அந்தப் பணம்.                                                                        22

மக்களில் கஞ்சத்தனம் உள்ளவர்கள் உண்டு. கஞ்சன்களில் ஈயுறிஞ்சான் கஞ்சன் என்பது ஒரு வகை. திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள் சொல்வார், இந்த ஈயுறிஞ்சான் கஞ்சன் என்பவன் அவன் அருந்தும் பானத்தில் ஒரு ஈ விழுந்துவிட்டால் ஈயை எடுத்து அதில் ஒட்டிக் கொண்டிருக்கும் பானத்தை உறிஞ்சிவிட்டு அதைத் தூர எறிந்தபின் பானத்தை அருந்திவிடுவானாம். அப்படிப்பட்ட கஞ்சனாக வாழ்ந்து, வாழ்நாளில் உழைத்துத் தேடிய செல்வத்தைத் தானும் அனுபவித்துப் பிறருக்கும் கொடுத்து, தான தர்மங்கள் செய்து புண்ணியத்தையும், நல்ல பெயரையும் வாங்க முயற்சி செய்யாமல் அவற்றை பூமிக்கடியில் யாருக்கும் தெரியாமல் புதைத்து வைத்துவிட்டு, புதையலை பூதம் காப்பது போல் காத்திருந்துவிட்டு கடையில் அந்த செல்வம் யாருக்கும் பயன்படாமல் பூமிக்கடியில் புதைந்து கிடக்க இவன் இறந்து போனால், அது யார் கைக்குப் போய்ச்சேரும்? அந்த செல்வத்தை யாரே எடுத்து அனுபவிப்பார், இதனை உணர்ந்து கொள்ள வேண்டாமா?

வேதாளம் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே 
பாதாள மூலி படருமே - மூதேவி 
சென்றிருந்து வாழ்வளே;  சேடன் குடிபுகுமே; 
மன்றோரம் சொன்னார் மனை.                                                           23

இதில் நீதி தவறி நடப்பவர்களைப் பற்றிய குறிப்பு இருக்கிறது. ஊர் மன்றத்தில் (இப்போது நீதிமன்றம் என்று வைத்துக் கொள்வோம்) ஓரம் சொல்வது என்றால் பொய்யான தகவல்களைச் சொல்வது, அதாவது பொய் சாட்சி சொல்லுபவர்கள், அல்லது பாரபட்சம் பார்த்துத் தெரிந்தே ஒருதலை பட்சமான தவறான தீர்ப்பினை அளித்தவர்கள் ஆகியோர் வாழ்ந்த வீட்டில் என்னவெல்லாம் நடக்குமாம் தெரியுமா? ஆமாம் பொய் சாட்சி சொன்னவர்கள் வீட்டிலும், ஒருதலை பட்சமாக நடந்து கொண்டு தவறான தீர்ப்பை அளிப்பவர்கள் ஆகியோர் வீட்டிலும் வேதாளம் அதாவது பிசாசு குடியேறும், வெள்ளை எருக்கஞ்செடி வளர்ந்து பூக்கும், பாழிடங்களில் வளரும் பாதாள மூலி எனும் கொடி படரும், ஸ்ரீதேவியின் அக்காள் மூதேவி வந்து குடியேறி விடுவாள். அப்படிப்பட்ட பலன்கள் உண்டு என்பது தெரிந்தும் பொய் சாட்சி சொல்லலாமா? அல்லது தவறான தீர்ப்புகளைச் சொல்லலாமா? சிந்திக்க வேண்டிய செய்தி.

நீறில்லா நெற்றிபாழ்;  நெய்யில்லா உண்டிபாழ்; 
ஆறில்லா ஊருக்கு அழகுபாழ்;  -  மாறில் 
உடன்பிறப் பில்லா உடம்புபாழ் ;   பாழே 
மடக்கொடி இல்லா மனை.                                                                    24

பாழ் என்றால் பயன் இல்லாதது. ஒவ்வொன்றுக்கும் ஒரு பலன் உண்டு. அந்த வகையில் திருநீறு பூசாமல் இருக்கும் நெற்றி பாழ்; தினமும் ஈசனுடைய அருள் வேண்டி நெற்றியில் திருநீறு பூசவேண்டும். அப்படி பூசாத நெற்றி பாழ்நெற்றி. சுவையான உணவு எனில் உணவில் நெய் சேர்த்து உண்ணல் வேண்டும், அப்படி நெய் இல்லாத உணவு பாழ்; எந்த வொரு ஊரும் ஒரு ஆற்றங்கரையில் அமைந்திருக்குமானால் அந்த ஊருக்கே அது அழகு, அப்படி ஆறு ஓடாத ஊருக்கு அழகு பாழ்; உடன் பிறந்தவர்கள் இருக்க வேண்டும், தம்பியுடையான் படைக்கஞ்சான் என்கிற பழமொழியும் நம்மிடையே உண்டு. ஆகவே அண்ணன் தம்பிகளாகக் குடும்பம் இருந்தால் நல்லது, அப்படியின்றி தனித்திருந்தால் அவன் உடலும் பாழ்; அனைத்துக்கும் மேலாக ஒரு வீடு என்றிருந்தால் அந்த குடும்பத்தில் ஒரு இல்லாள் இருப்பது அவசியம். அப்படி ஒரு மகாலட்சுமி போன்ற குடும்பத் தலைவி இல்லாத இல்லமும் பாழ் என்கிறது இந்தப் பாடல்.

ஆன முதலில் அதிகம் செலவானால் 
மானம் அழிந்து மதிகெட்டுப் - போனதிசை 
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய் 
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு.                                                     25

இன்றைய நாகரிக உலகத்தில் அனைவரும் கடைபிடிக்க வேண்டிய கட்டாயமான விதி இந்தப் பாடலில் குறிப்பிடப்படுகிறது. ஒருவன் எவ்வளவு பொருள் ஈட்டுகிறானோ, அந்த அளவிற்குள் தன்னுடைய குடும்பச் செலவுகளைக் கட்டுப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். தன்னுடைய வருமானத்துக்கு மேலாக, பார்க்கும் பொருட்களுக் கெல்லாம் ஆசை பட்டு அவற்றை கடனுக்கு வாங்கி, கடனை அடைக்க முடியாமல் அதற்கு வட்டியைக் கொடுத்துக் கொண்டு மேலும் மேலும் கடன்காரனாக ஆனால் என்னவாகும்? மானம் போகும். கடன் கொடுத்தவன் வாசலில் வந்து நின்றுகொண்டு நாக்கைப் பிடுங்கிக் கொள்ளுமளவுக்குப் பேசுவான்; இவர்கள் ஏச்சும் பேச்சும் தாங்க முடியாமல் பல திசைகளுக்கும் ஓடித் தப்பினாலும் இவனை எல்லோரும் கள்ளன் என்றுதானே சொல்வார்கள். அதோடு முடிந்ததா, அடுத்தடுத்து இவன் பிறக்கப் போகும் ஏழு பிறப்பிலும் இவன் தீயவனாகத்தானே பிறப்பான். அனைத்திற்கும் மேலாக இவன் வாழ்கின்ற சமூகத்தில் இவனை எல்லோருமே தூற்றுவார்கள், பொல்லாதவனாகச் சித்தரிப்பார்கள். அந்த நிலை வராமல் தடுக்க வேண்டுமானால் வருமானத்திற்குள் செலவு செய்யக் கற்றுக் கொள்ள வேண்டுமென்பது இந்தப் பாடலின் கருத்து.

மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை 
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை - தேனின் 
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும் 
பசிவந்திடப் பறந்து போம்.                                                                     26

பேச்சு வழக்கில் நம்மில் சிலர் “பசி வந்தால் பத்தும் பறந்து போகும்” எனக் குறிப்பிடுவார்கள். சரிதான், பசி வந்தால் பசியாற உணவு வேண்டும். ஆனால் பத்தும் பறக்கும் என்கிறார்களே அந்த பத்தும் எவை? நாம் இருக்கும் இடத்தில் இருந்தால் பசி வந்தவுடன் உணவு கேட்டு சாப்பிட்டு விடுகிறோம். புதிய இடத்துக்குச் சென்றால் இப்போதெல்லாம் உணவகங்கள் இருக்கின்றன, கையில் காசு இருந்தால் கொடுத்துவிட்டு அங்கு சாப்பிட்டு விடலாம். அந்தக் காலத்தில் அப்படியெல்லாம் வசதிகள் இல்லாத நிலையில் தன் வீட்டைவிட்டு எங்கோ வெளியில் சென்ற சமயம் ஒருவனுக்குப் பசி வந்து விட்டால் என்ன செய்வான். யாரிடமாவது போய் கையேந்தி உணவு கேட்டுச் சாப்பிட வேண்டும். அது பிச்சை அல்லவா? அப்போது பசி அவனை வாட்டும்போது பிச்சையென்றெல்லாம் பார்க்க முடியுமா? அப்போது அவன் எவற்றையெல்லாம் இழந்து தன் வயிற்றுப் பசியைப் போக்கிக் கொள்ள முயற்சி செய்வானாம் தெரியுமா? அதை இந்தப் பாடல் சொல்கிறது. அந்த பத்தை இப்போது வரிசையில் பார்ப்போம். (1) பலரும் மதித்திட வாழ்ந்த மரியாதை போகும் (2) இவனுடைய குடும்பப் பெருமை போகும் (3) பல்பொருள் போக்கிப் பயின்ற கல்வியின் பலன்கள் போகும் (4) பிறருக்கு அள்ளிக் கொடுத்த கொடை குணம் போகும் (5) கற்ற கல்வியினால் பெற்ற நுண்ணறிவு போகும் (6) தான் வகிக்கும் பதவியின் பெருமை போகும் (7) இத்தனை நாட்கள் இறைவனிடம் மன்றாடிச் செய்த தவப் பலன்கள் போகும் (8) அவனுடைய சுய கெளரவம், தன்மானம் போகும் (9) முயற்சி முடங்கிப் போகும் (10) குடும்பத்தின் மேல் வைத்த அன்பு போகும்.

ஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட் டொன்றாகும்; 
அன்றி அதுவரினும் வந்தெய்தும் - ஒன்றை 
நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்; 
எனையாளும் ஈசன் செயல்.                                                 27

வாழ்க்கையில் நாம் எவ்வளவோ முயற்சிகளில் ஈடுபடுகிறோம். அப்படி ஒரு காரியத்தில் ஈடுபடும் சமயத்தில் அதனை எப்படியாவது முடித்துவிடவேண்டும் என்கிற மனவுறுதியுடன்தான் ஈடுபடுகிறோம். அப்படி முயன்று செய்யும்போது சில நேரங்களில் அந்த காரியம் நாம் நினைத்தபடியும் முடியலாம்; சில நேரங்களில் அப்படி நாம் நினைத்தபடி முடியாமல் மாறாகவும் முடிந்து விடலாம். நாம் எதிர்பார்த்த பலன்கள் கிடைத்தாலும் கிடைக்கலாம், கிடைக்காமல் போய் ஏமாற்றமே கூட விஞ்சலாம். நாம் எதிர்பார்க்காத ஒன்று திடீரென்று நம் முன்வந்து நம்மை அதிர வைக்கலாம். இவைகள் எல்லாம் நம் கைகளில் இல்லை. இவை யாவும் அந்த ஈசன் செயல் என்கிறது இந்தப் பாடல்.

உண்பது நாழி;  உடுப்பது நான்கு முழம் 
எண்பது கோடி நினைந்து எண்ணுவன;  -  கண்புதைந்த 
மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச் 
சாந்துணையும் சஞ்சலமே தான்.                                                      28

ஒரு மனிதனுக்குத் தன் வாழ்நாளில் மிக அவசியமானவை எவை? உண்பதற்கு ஒரு நாழி அளவு தானியம். மானத்தைக் காக்கவோர் நாலு முழத் துணி. பாரதியாரின் கண்ணன் பாட்டில் கண்ணன் என் ஆண்டை என்கிற பாடலில் பண்ணை ஆள் முதலாளியிடம் கேட்கிறான் “ஐயனே! மானத்தைக் காக்கவோர் நாலு முழ வேட்டி வாங்கித் தரவேணும்” அதுதான் அவனுடைய தேவை. இங்கு அவன் இன்னொன்றும் கேட்கிறான் “தானத்துக்கென்று மேலும் ஒரு வேட்டி தரவும் கடனாண்டே, ஆண்டே! தரவும் கடனாண்டே” எப்படி இருக்கிறது. தனக்கு ஒரு வேட்டி போதும், தான் தானம் செய்ய வேண்டும் அதற்கென்று ஒரு வேட்டி வேண்டுமென்கிறான். ஆனால் ஒரு மனிதனுக்குத் தேவை ஒரு வேட்டி. ஆனால் மனதில் புகுந்திருக்கும் ஆசை இருக்கிறதே அது எண்பது கோடி ஆசைகளை மனதில் வைத்துக் கொண்டு ஏங்குகிறது.
ஆனால் கல்விக் கண் இல்லாத குருடாகிப்போன மக்களுடைய வாழ்க்கையானது எண்ணியது ஒன்றும், வாய்த்தது ஒன்றுமாக மாறி கீழே தவறி விழுந்த மண்பாண்டம் தூள் தூளாகச் சிதறிவிடுவதைப் போல எண்ணங்கள் சிதறி வருந்துகிறார்கள்.

மரம்பழுத்தால் வௌவாலை வாவென்று கூவி 
இரந்தழைப்பார் யாவருமங் கில்லை - சுரந்தமுதம் 
கற்றா தரல்போல் கரவாது அளிப்பரேல் 
உற்றார் உலகத் தவர்.                                                                               29

தோட்டத்தில் ஒரு நல்ல மரம் காய்த்து கனிந்திருந்தால் வெளவால்களை வா!வா! என்று யாராவது அழைப்பார்களா என்ன. அவைகளே பழுத்த மரத்தைச் சுற்றிச் சுற்றி வரத் தொடங்கி விடாதா? பசு கொட்டிலில் கன்று ஒன்றை ஈன்றிருக்கிறது. பசுவின் மடியில் பால் சுர்ந்து கன்றுக்குக் கொடுக்கத் துடிக்கிறது. கன்று ஓடிவருவதைக் கண்டதும் அதன் மடியில் பால் சுரந்து கன்றின் ஊட்டலுக்குத் தயாராகி விடுகிறதல்லவா, அதைப்போல்தான் நாமும் பசுவின் நிலையில் இருந்து தேவைக்கென ஓடிவரும் நல்லோருக்கெல்லாம் நம்மால் முடிந்த உதவிகளைச் செய்து வந்தால் நாம் உலகத்தார் அனைவருக்கும் உற்றவராவோம்.

தாம்தாம்முன் செய்தவினை தாமே அனுபவிப்பார் 
பூந்தா மரை யோன் பொறிவழியே - வேந்தே 
ஒறுத்தாரை என்செயலாம் ஊரெல்லாம் ஒன்றா 
வெறுத்தாலும் போமோ விதி .                                                            30

விதி வலியது என்பதை வலியுறுத்தும் பாடல் இது. நம் வாழ்க்கையில் நடக்கும் அனைத்துமே அந்த பிரம்மன் நம்மைப் படைக்கும்போது என்ன விதித்தானோ அதன்படிதான் அனைத்துமே நடக்கும் என்பது நம்பிக்கை. அப்பவி பிரம்மன் விதிப்பது நம் முற்பிறவியில் செய்த வினைப் பயன்களின் அடிப்படையில்தான் இருக்கும் என்பதை நாம் அறிவோம். ஆக இந்தப் பிறவியில் நாம் அனுபவிப்பதெல்லாம் பிரம்மன் நம் முன்வினைப் பயனின் அடிப்படையில் விதித்ததைத்தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இப்பிறவியில் நமக்கு வந்த துன்பங்களுக்கெல்லாம் காரணமானவர்கள் என்று கருதி யாரைத் தண்டிக்க முடியும். ஊர் மக்கள் எல்லாம் கூடி நம்மை வெறுத்தாலும், நம் விதிப்படி நடப்பதை நாம் மாற்றமுடியுமா? முடியாது என்கிறது இந்தப் பாடல்.

இழுக்குடைய பாட்டிற்கு இசைநன்று;  சால 
ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று - வழுக்குடைய 
வீரத்தின் நன்று விடாநோய்;  பழிக்கஞ்சாத் 
தாரத்தின் நன்று தனி.                                                                                31

இலக்கணப் பிழைகள் கொண்ட பாடலைப் பாடுவதைக் காட்டிலும், அந்த பாடல் வரிகள் இல்லாமல் வெறும் இசையின் ஒலியை மட்டும் பாடுவது நன்று. காரணம் பாடல் வரிகளில் பிழை இருப்பது பாடலின் இனிமையைக் குறைத்து விடும். உயர் குலத்தில் பிறந்தால்தான் பெருமை என்றிருக்க வேண்டாம், நல்ல ஒழுக்கத்துடன் வாழ்வது உயர்குலப் பிறப்பினும் சால நன்று. ஒருவன் போர்க்களத்தில் வீரத்தைக் காட்டாமல், போரில் உயிர் துறக்காமல் கோழையாக இருப்பதைக் காட்டிலும், வீட்டில் படுத்திருந்து நோய்வாய்ப்பட்டுக் கிடப்பதே மேல். மனைவி என்பவள் இல்லத்தின் குலவிளக்கு. அப்படிப்பட்ட மனைவி பழிகளுக்கு அஞ்சாத முறையில் வாழ்வாளானால், அவளைவிட்டு விலகி தனித்து வாழ்வதே நன்று என்கிறது இந்தப் பாடல்.

ஆறிடும் மேடும் மடுவும்போ லாம்செல்வம் 
மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர்  -  சோறிடும் 
தண்ணீரும் வாரும்;  தருமமே சார்பாக 
உண்ணீர்மை வீறும் உயர்ந்து.                                                             32

ஆறுகளில் நீர் ஓடுகின்றபோது அதன் மணற்பரப்பில் மேடுகள் கரைந்து பள்ளமாக ஆகலாம், அது போலவே பள்ளங்கள் மணலால் நிறைந்து மேடாகவும் ஆகலாம் அது இயற்கை. ஒவ்வொரு முறையும் ஆற்றில் நீர் வரும்போது இருந்த மேடு பள்ளங்கள் அந்த ஆண்டில் நீர் வந்து பின்னர் வற்றும்போது மேடு பள்ளங்கள் இடம் மாறி போய் இருப்பதைக் காண்கிறோம் அல்லவா அதைப் போல மனிதர்க்கு வறுமையும், செல்வமும் மாறி மாறித்தான் வரும். செல்வம் எப்போதும் ஒரிடத்திலும், வறுமை பிடித்த இடம் மாறாமல் நிலையாகத் தங்கிவிடுவதும் கிடையாது. எனவே இந்த உண்மையைப் புரிந்து கொண்டு பசி என்று வருவோர்க்கு உணவிடுங்கள், தாகம் என்று கேட்போர்க்கு குடிக்க தண்ணீர் கொடுங்கள். மனம் எப்போதும் அறம் சார்ந்ததாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். வாழ்க்கையின் நோக்கமே அதுதான் என்கிறது இந்தப் பாடல்.

வெட்டெனவை மெத்தனவை வெல்லாவாம்; வேழத்தில் 
பட்டுருவும் கோல்பஞ்சில் பாயாது;  -  நெட்டிருப்புப் 
பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின் 
வேருக்கு நெக்கு விடும்.                                                                          33

வலிமையுடைய ஒரு யானையின் மீது எய்யப்படும் அம்பு அதன் தோலைக் கிழித்து உட்புகுந்து அதற்கு வேதனை உண்டாக்கும்; ஆனால் அதே அம்பை மென்மையான ஒரு பஞ்சுப் பொதியின் மீது எய்தால் அது பஞ்சினுள் உட்புகாது. கடினமான பாறையொன்றை கடப்பாரையால் உடைத்தாலும் அதனை பிளக்க முடியாது, ஆனால் அதில் வளரும் ஒரு மரக்கன்று பெரிதாகி அதன் வேர் உட்புகுமானால் அந்தப் பாறை உடைத்து பிளந்து போகும்.
ஆகையால் கடுஞ்சொற்களைப் பேசுவதனால் மட்டும் யாரிடமும் எந்தக் காரியத்தையும் சாதிக்க முடியாது. இன்சொற்களால் பிறர் மனதில் அன்பைத் தோற்றுவித்து அதனால் நம் காரியங்களைச் சாதித்துக் கொள்ள முடியும் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

கல்லானே ஆனாலும் கைப்பொருள்ஒன் றுண்டாயின் 
எல்லாரும் சென்றங் கெதிர்கொள்வர் - இல்லானை 
இல்லாளும் வேண்டாள்;  மற் றீன்றெடுத்த தாய்வேண்டாள் 
செல்லாது அவன்வாயிற் சொல்.                                                       34

ஒருவன் கல்வியறிவு இல்லாதவனாக இருக்கலாம், ஆனால் அவனிடம் செல்வம் அதிகம் வந்து குவிந்திருக்கிறது என்றால் எல்லோரும் அவனுக்கு மரியாதை கொடுத்து பெரிய மனிதனைப் போல் அவனை முகஸ்துதி செய்து, வரவேற்று உபசரிப்பார்கள். இதெல்லாம் அவனிடம் குவிந்து கிடக்கும் செல்வத்துக்காக மட்டுமே என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். கல்வி அறிவு என்பது செல்வத்தோடு ஒப்பிடுகையில் சூரியனுக்கு முன்னால் ஒளிவீச முடியாத சந்திரன் போல இவர்களுக்குக் காணப்படும். போகட்டும் ஊரார்தான் அவனை அவன் வைத்திருக்கும் செல்வத்திற்காகக் கொண்டாடுகிறார்கள் என்றால், அவன் மனைவியும் என்னதான் அவன் கல்வி கற்றிருந்தாலும் செல்வம் இல்லையேல் அவளும்கூட மதிக்க மாட்டாள். அவனைப் பெற்ற தாய் மட்டுமென்ன விதிவிலக்கா இல்லை, அவளும் கூட அவனிடம் செல்வம் இல்லையேல் அலட்சியம் தான். அவன் பேச்சு அவர்களிடம் விலை போகாது என்பது இப்பாடலின் கருத்து.

பூவாதே காய்க்கும் மரமுள;  மக்களுளும் 
ஏவாதே நின்றுணர்வார் தாமுளரே - தூவா 
விரைத்தாலும் நன்றாகா வித்தெனவே பேதைக்கு 
உரைத்தாலும் தோன்றாது உணர்வு.                                               35

மனிதனுக்கும் இயற்கைக்கும் தான் எத்தனை ஒற்றுமை பாருங்கள். சில மரங்களில் பூக்கள் பூப்பதில்லை ஆனால் அங்கு காய்கள் காய்க்கும். அப்படி சில மரங்கள் இங்கு உண்டு. ஒரு செயலை செய்யும்படி ஏவாமலே தானாகவே முன்வந்து செய்யும் குறிப்பறிந்து காரியமாற்றும் புத்திசாலிகளும் இருக்கிறார்கள்.

வயலில் நன்கு தூவி விதைகளை நன்கு விதைத்தாலும் வயலில் நன்கு விளையாமல் போகும் வித்துக்களும் உண்டு. அது போலவே என்னதான் முயன்று ஒரு மூடனுக்கு புத்திமதிகளைச் சொன்னாலும் அடுத்த கணமே அதை மறந்துவிடும் உணர்வற்ற மனிதர்களும் இருக்கிறார்கள்.

நண்டுசிப்பி வேய்கதலி நாசமுறுங் காலத்தில் 
கொண்ட கருவளிக்கும் கொள்கைபோல்ஒண்தொடீஇ 
போதம் தனம்கல்வி  பொன்றவரும் காலம்அயல் 
மாதர்மேல் வைப்பார் மனம்.                                                               36

சில உயிரினங்களுக்கு விநோதமான சிறப்புகள் உண்டு. அதாவது நண்டு இருக்கிறதே அது கருவுற்றாலே அது அழியப்போகிறது என்பது உறுதி. சிப்பி, வாழைமரம் ஆகியவைகளும் அதுபோலத்தான். சிப்பிக்கு சூல் வைத்தாலும், வாழை தார் போட்டாலும், அதோடு அதன் வாழ்வு முடிந்தது என்பது பொருள். இது ஏதோ ஓரறிவு ஈரறிவு உயிர்களுக்கு உரித்தானது என எண்ணல் வேண்டாம்.

சில மனிதர்களுக்கு நல்ல கல்வியறிவு, குவிந்து கிடக்கும் செல்வம், ஞானம் இவைகள் அவனைவிட்டு நீங்கும் காலம் வந்துவிட்டதென்பதற்கு அடையாளம் அவன் பிற மாதர் மீது ஆசைப்பட்டு அடைய முயற்சி செய்யும் காலமாகும்.

வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம் 
அனைத்தாய நூலகத்தும் இல்லை; - நினைப்பதெனக் 
கண்ணுறுவ தல்லால் கவலைப் படேல் நெஞ்சே! மெய் 
விண்ணுறுவார்க் கில்லை விதி.                                                        37

மனிதர்கள் வாழ்க்கையில் தெரிந்தோ, தெரியாமலோ செய்யும் வினைகள் நல்வினைகளாகவும், சில தீவினைகளாகவும் அமைந்து விடுகின்றன. அப்படிப்பட்ட வினைகளினால் ஏற்படும் நன்மை தீமைகள் நம்மை அண்டிவிடாதபடிச் செய்ய வேதம் முதலான உயர்ந்த நுல்களிலும் வழிகள் கூறப்படவில்லை. அதற்காக மனமே! நீ கவலைப்பட வேண்டாம்.

முக்தி ஒன்றையே முழுமுதல் நோக்கமாகக் கொண்டு முயற்சிகளை மேற்கொள்வாருக்கு விதி என்பது ஒன்று இல்லை. விதி அவர்களை ஒன்றும் செய்துவிடாது. விதி விளையாடுவது போல வேண்டுமானால் தோற்றமளிக்கலாம், விதியினால் பாதிப்பு இல்லை.

நன்றென்றும் தீதென்றும் நானென்றும் தானென்றும் 
அன்றென்றும் ஆமென்றும் ஆகாதே - நின்றநிலை 
தானதாம் தத்துவமாம் சம்பறுத்தார் யாக்கைக்குப் 
போனவா தேடும் பொருள்.                                                                    38

நம் வாழ்க்கையில் நாம் நிரந்தரமானவர்கள் எனும் எண்ணத்தோடு, எந்நாளும் நாம் எதிர்கொள்ளும் செயல்களை இவைகள் நல்லவை என்றும், மற்றவை தீயவை என்றும் இனம் கண்டு அறிகிறோம். அதுபோலவே தனக்கு என்றால் நான் என்ற அகந்தையும் பிறர் என்றால் வேறொருவர் என்ற பேதப்படுத்தியும், சில செயல்களை ஆம் என்று ஏற்றுக் கொண்டும், பலவற்றை இல்லை என்று நிராகரித்தும் பேதப்படுத்தியல்லவா பார்க்கிறோம். இப்படிப்பட்ட பேதங்களையெல்லாம் கடந்து நன்மை, தீமை, நான், அவன், ஆம், இல்லை இவை அனைத்துமே சமமானவைகள்தான், உலகிலுள்ள எல்லா உயிர்களிலும், ஜடப்பொருட்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருள்தான் ஊனுடம்பு எடுத்திருக்கும் என்னுள்ளும் இருக்கிறது என்கிற பேதமற்ற நிலையே உண்மையான தத்துவமாகும். எல்லா உயிர்களிலும் இருப்பது அந்தப் பரம்பொருள் என்னுள்ளும் இருப்பதும் அதே பரம்பொருளின் கூறுதான் என்பதை உணர்வதுதான் சத்தியத்தை உணர்வதாகும். அப்படியில்லாமல் கடவுள் என்பவர் எங்கோ மேல் உலகத்தில் இருக்கிறார், அங்கு இருக்கிறார், அதில் இருக்கிறார் என்று தேடுவது அறியாமையால் அல்லவா?

நீண்ட உறுதியான ஒருவகை புல், அதை சம்பம் புல் என்பர். அதைத் திரித்து கட்டுவதற்குக் கயிறாகப் பயன்படுத்தலாம். அத்தகைய சம்பம்புல்லை காட்டில் ஒருவன் வெட்டிக் குவித்து, அதனைக் கட்டாகக் கட்ட அந்த புல்லே கயிறாகப் பயன்படும் என்பதை உணராமல், கயிறு தேடி வேறெங்கோ போவதைப் போல நாம் கடவுளை வெளியே தேடுகிறோம்.

முப்பதாம் ஆண்டளவில் மூன்றற்று ஒருபொருளைத் 
தப்பாமல் தன்னுள் பெறானாயின் - செப்பும் 
கலையளவே ஆகுமாம்;  காரிகையார் தங்கள் 
முலையளவே ஆகுமாம் மூப்பு.                                                         39

மனிதனாகப் பிறந்தவன் ஒவ்வொருவனும் தனது முப்பதாம் வயதிற்குள் கற்க வேண்டியவற்றையெல்லாம் நன்கு பழுதறக் கற்றுத் தேர்ச்சி பெற்றுவிட வேண்டும். அப்படி அவன் அதற்குள் அனைத்தையும் கற்றுத் தேறவில்லையாயின், அவன் கற்ற கலைகள் அவன் கற்றவன் என்ற பெயர்தான் இருக்குமே தவிர, கற்ற கலைகளை உள்வாங்கிக் கொண்டு உயர்ந்தான் என்று இருக்காது.

இது எப்படி இருக்கிறது என்றால் பருவமெய்தியவுடன் பெண்களுக்கு மார்பகம் வளர்கிறது. வயது முற்ற முற்ற அது தளர்ந்து பருவ உணர்வுகள் இல்லாத நிலைமையும் அடைந்து விடும். அந்தந்த பருவத்துக்கேற்ற வளர்ச்சி அவர்களிடம் இருக்கும், மூப்படைந்தால் அனைத்தும் தளர்ந்துவிடும் என்பது கருத்து.

தேவர் குறளும் திருநான் மறைமுடிவும் 
மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை 
திருவா சகமும் திருமூலர் சொல்லும் 
ஒருவா சகமென் றுணர்.                                                                          40

தமிழில் பக்தி இலக்கியங்கள் ஏராளம். நூல்கள் பலவாயினும் அவை சொல்லும் கருத்துக்கள் அனைத்தும் ஒன்றே. திருவள்ளுவர் இயற்றிய தெய்வ நூலாம் திருக்குறள் கூறும் அறம், பொருள், இன்பம் ஆகிய அனைத்தும், நான்கு வேதங்களான ரிக், யஜூர், சாமம், அதர்வணம் ஆகியவற்றின் உட்கருத்தும் முடிவும், தமிழ் மூவர் எனப் பெருமையுடன் அழைக்கப்படும், அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர் ஆகியோருடைய தேவாரங்களும், மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருக்கோவையார் இலக்கியமும், மனதை உருக்கும் திருவாசகத்தின் செய்தியும், திருமூலர் அருளிச் செய்திருக்கிற திருமந்திரம் சொல்லுகின்ற வேதாந்தக் கருத்துக்களும் அனைத்தும் ஒன்றே, நம்மை நல்வழிப்படுத்த பெரியோர்கள் அருளிச் செய்த அருள் நூல்கள் என்று உணரவேண்டும் இந்த நிறைவுப் பாடலுடன் “நல்வழி” நிறைவடைகிறது.