பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, October 6, 2016

கங்கைகொண்ட சோழபுரம்கங்கைகொண்ட சோழபுரம் அரியலூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமம் ஆகும். இவ்வூர் சோழர்களின் பேரரசை நிறுவிய முதலாம் இராஜராஜ சோழன் மகனான இராசேந்திர சோழனால் உருவாக்கப்பட்டு பிற்காலச் சோழர்களின் தலைநகரமாக விளங்கியது.  இங்கு இராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட சிவாலயம் இன்றும் உள்ளது.  அதனை ஐக்கிய நாடுகள் அமைப்பு உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது. 

கங்கை கொண்ட சோழபுரத்திற்கு எண்ணற்ற பெயர்கள் உள்ளன. பண்டையப் புலவர்கள் கங்காபுரி, கங்கைமாநகர் கங்காபுரம் போன்ற பெயர்களில் இவ்வூரை குறிக்கின்றனர்.  கங்கை கொண்ட சோழபுரம் என்ற பெயர்மாற்றத்திற்கு முன்பு வன்னியபுரம், வன்னியபுரி என்ற பெயர்களால் இவ்வூர் அழைக்கப்பட்டுவந்துள்ளது.

கங்கைகொண்டசோழபுரம் உருவாகும் முன் அந்த இடம் வன்னியபுரி (அ) வன்னியபுரம் என்ற சிற்றூராக இருந்தது.வன்னியபுரி-வன்னிமரங்களுக்கு சிறப்புபெற்ற வன்னி மரக் காடாக விளங்கியது . இந்த ஊரில் அக்காலத்திலிருந்தே நிறைய வன்னி மரங்கள் இருந்தற்கு சான்றாக இன்றும் தல விருட்சமாக, கங்கைகொண்டசோழபுரம் கோயிவிலில் வன்னி மரம் உள்ளது.

மேலை, கீழைச் சாளுக்கிய தேசங்களிலும் ஈழம் பாண்டிய சேரதேசங்களை வெற்றிக் கொண்ட இராஜேந்திர சோழன். கி.பி 1019இல் கங்கை வரை படையெடுத்து சென்று வெற்றியும் கண்டார். அதனால் கங்கை கொண்ட சோழன் என்ற பட்டமும் பெற்றார். அதன் நினைவாக கி.பி.1023ல் கங்கை கொண்ட சோழபுரம் எனும் புதிய தலைநகரை உருவாக்கினார். இங்கு சிவபெருமானுக்கு கங்கைகொண்ட சோழீசுவரர் கோயில் எனும் மாபெரும் கோவிலை அமைத்தார்
கங்கை வரை பெற்ற வெற்றியின் நினைவாக கங்கை கொண்ட சோழப் பேரேரி அமைக்கப்பட்டது. இதற்கு சோழகங்கம் என்றும் பெயர் உண்டு.
 கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோயில்  கீழணையிலிருந்து சென்னை செல்லும் பாதையில் மீன்சுருட்டி எனும் ஊருக்கு சற்று மேற்கே உள்ளது. ஜெயங்கொண்டம் சிதம்பரம் சாலையில் அமைந்த ஊர் இது. இங்கு உள்ளது தஞ்சைக் கோயிலைப் போன்ற வடிவமைப்புள்ள ஒரு சிவன் கோவில் ஆகும். இது கங்கை கொண்ட சோழபுரம் என்ற ஊரில் முதலாம் இராசேந்திர சோழனால் கட்டப் பட்டது. கங்கை ஆறு வரை படையெடுத்துச் சென்று வெற்றி பெற்றதன் நினைவாக கங்கை கொண்ட சோழபுரம் என்ற நகரத்தைமுதலாம் இராசேந்திரன் அமைத்தான். பின் இக்கோவிலையும் கட்டினான். இக்கோவில், ஐராவதேஸ்வரர் கோயில்,பெருவுடையார் கோயில் ஆகிய மூன்றும் சேர்த்து அழியாத சோழர் பெருங்கோயில்கள் எனப்படுகின்றன.

இவ்வூரை ராஜேந்திரன் தன்னுடைய தலைநகராக ஆக்கிக் கொண்ட போது இவ்வாலயத்துக்குப் பின்புறம் ஒரு பெரிய ஏரியை அமைத்தான். கொள்ளிடம் ஆற்றிலிருந்து தண்ணீர் கொணர்ந்து இதனை நிரப்பும் முன்பாக தான் வடக்கே படையெடுத்துச் சென்றபோது கங்கையாற்றிலிருந்து கொண்டு வந்த தண்ணீரைக் குடம் குடமாக ஊற்றிய பின் கொள்ளிடம் தண்ணீரை விட்டு நிரப்பினான் என்பர். ஒரு முறை கொள்ளிடத்தில் வெள்ளம் வந்து இப்பகுதிகளை அழித்துவிட்டதாகவும் தெரிகிறது. அப்போது தலைநகரம் சிதம்பரத்துக்கு மாற்றப்பட்டு அதுமுதல் தலைநகரம் வெறும் நகரமாகவே இருந்து வருகிறது. ஜெயங்கொண்டம் சிதம்பரம் சாலை இந்த ஏரியின் நடுவாக சாலை அமைக்கப்பட்டு இருபுறமும் நீர் நிரம்பியிருக்க ஒரு அற்புதமான சுழ்நிலையில் சாலைப் பயணம் அமைந்திருக்கும் இங்கே.

1987-ல், பெருவுடையார் கோயில் யுனெஸ்கோ அமைப்பால் உலகப்பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. பின்னர், 2004-ல் கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோயிலும் மற்றும் ஐராவதேஸ்வரர் கோயிலும் உலகப்பாரம்பரியச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டன.
திருவிசைப்பா பாடல் பெற்ற தலம்.

கோயில் - கங்கை கொண்ட சோழேச்சரம். ஊர் - கங்கை கொண்ட சோழபுரம். திருச்சி மாவட்டம் உடையார்பாளையம் வட்டத்தில் ஐயங்கொண்ட சோழபுரத்திலிருந்து சுமார் 10 கல் தொலைவில் உள்ளது.

சென்னையிலிருந்து வருவோர் சேத்தியாதோப்பு வழியாக மீன்சுருட்டி வந்து, அங்கிருந்து திருச்சி சாலையில் இரண்டு கல் சென்றால் கங்கை கொண்ட சோழபுரத்தை அடையலாம். சாலையோரத்திலேயே கோயில் உள்ளது. 160 அடி உயரமுள்ள ஓங்கிய எண்தள விமானம் (கோபுரம்) பல கிலோமீட்டர் தொலைவிலிருந்து பார்த்தாலும் காட்சியளிக்கிறது.
தற்பொழுது சிற்றுராக உள்ளது இத்தலம். இங்குப் பயணிகள் தங்குதற்கான வசதிகள் ஏதுமில்லை. பிற்காலச் சோழர்களுக்குத் தலைநகராக விளங்கிய இத்தலைநகரின் பகுதிகளே, இன்றுள்ள 1) உட்கோட்டை 2) மாளிகைமேடு 3) ஆயிரக்கலம் 4) வாணதரையன் குப்பம் 5) கொல்லாபுரம் 6) வீரசோழ நல்லூர் மெய்க்காவல்புத்தூர் 8) சுண்ணாம்புக்குழி 9) குருகைபாலப்பன் கோயில் முதலிய சிற்றூர்கள் ஆகும். சோழமன்னர்கள் வாழ்ந்த இடமே 'மாளிகைமேடு' ஆகும்.

இவ்வூர் பண்டை நாளில் புலவர்களால் கங்காபுரி, கங்கைமாநகர் கங்காபுரம் என்றெல்லாம் புகழப்பட்டது.

முதலாம் இராஜேந்திரன் முதல் மூன்றாம் இராஜேந்திர சோழன் காலம் வரை இவ்வூர் சோழர் தலைநகராகத் திகழ்ந்தது. தன் தந்தையைப்போல அதற்கீடாக மிகச்சிறப்புடன் ஆண்டு வந்தவன் முதலாம் இராஜேந்திரசோழன் (1012 -1044) கங்கைகொண்டான், பண்டித சோழன் முதலிய பட்டப்பெயர்களையுடையவன். இவனடைய மகள் அம்மங்காதேவி என்பார், கீழைச் சாளுக்கியத்துக்குத் திருமணமாகிச் சென்றார். ராஜேந்திர சோழன் லட்சத்தீவையும் வென்ற சிறப்புடையவன். சோழர் தலைநகரான தஞ்சை, பாண்டிய நாட்டு எல்லைக்கு அருகில் இருந்தமையால் அடிக்கடி போர் ஏற்படும் வாய்ப்பு இருந்தது. தவிர, காலந்தவறாது பெய்த மழையால் கொள்ளிடத்தில் வெள்ளப் பெருக்கேற்பட்டு, அதனால் தில்லைக்குச் சென்று நடராஜப் பெருமானைக் காணவிரும்பிய போதெல்லாம் தடையும் உண்டாவதைக் கண்ட முதலாம் இராஜேந்திர சோழன், சோழநாட்டின் மையப் பகுதியில் புதிய தலைநகரம் ஒன்றை அமைப்பதற்கு எண்ணினான். இடத்தைத் தேர்வு செய்து புதிய நகரத்தை நிர்மாணித்து அதை கங்கை நீரால் புனிதப்படுத்த எண்ணித் தன்படையை கங்கை நீர் கொண்டு வர வடநாட்டிற்கு அனுப்பிவைத்தான். அப்படையும் சென்று, வடநாட்டு மன்னர்களை வென்று கங்கை நீர் கொண்டு திரும்பியது. இதனால் முதலாம் இராஜேந்திர சோழனுக்குக் கங்கை கொண்டான் - கங்கை கொண்ட சோழன் என்ற பெயர் உண்டாயிற்று. அந்நீரால் புனிதப்படுத்தி அவ்வூரில் தன்தந்தை, தஞ்சையிற் கட்டியது போலவே ஒரு பெரிய கோயிலைக் கட்டினான். அதுவே கங்கை கொண்ட சோழேச்சரம் ஆகும். அவ்விடமே கங்கை கொண்ட சோழபுரம்.
இவ்வூரை நிறுவ சுண்ணாம்பினைத் தயாரித்த இடம் சுண்ணாம்புக்குழி என்றும், கோட்டை இருந்த பகுதி (உள்கோட்டை) உக்கோட்டை என்றும், ஆயுதச்சாலைகள் இருந்த இடம் ஆயிரக்கலம் என்றும் இன்றும் வழங்குகின்றன. இவ்வூருக்காகக் கட்டுவித்த ஏரி சோழகங்கம் எனப்பட்டது.

இக்கங்கை கொண்ட சோழபுரம் அக்காலத்து பற்பலச்சிறப்புக்களுடன் விளங்கியது. ஜெயங்கொண்டார் ஒட்டக்கூத்தர் முதலிய பெருமக்கள் இங்கு வாழ்ந்திருந்தார்கள். கலிங்கத்துப்பரணி இங்கிருந்து பாடப்பட்டது. விக்ரமசோழன் உலா, இரண்டாம் குலோத்துங்கன் உலா முதலியனவும் பாடப்பட்டன. சேக்கிழார் பெரிய புராணம் பாடுவதற்குத் தூண்டுகோலாக இருந்தபதி இது.

கோயிலமைப்பு

தஞ்சைப் பெருவுடையார் கோயிலமைப்பை ஒத்துள்ளது இக்கோயில். சிற்பக்கலையழகு சிந்தனைக்கும் எட்டாதது. மூலத்தானத்தைச் சுற்றிப் பல கோயில்கள் இருந்தன. அவை காலப்போக்கில் அழிந்தன.

முதலாம் இராஜராஜன் காலத்திலிருந்து சோழர்களுக்குக் கட்டுப்பட்டிருந்த பாண்டியர் 12 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எதிர்த்தெழலாயினர். அப்போது சோழமன்னர் பலமுறை பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து மதுரையை அழித்தனர். இதனால் மனங்குமுறிய பாண்டியர், சோழர்களைப் பழிவாங்கக் காத்திருந்தனர். மூன்றாம் குலோத்துங்கன் இறந்த பின்பு, பாண்டியர் சோழ நாட்டின் மீது படையெடுத்து தங்கள் வஞ்சத்தைத் தீர்த்துக் கொள்ளலாயினர். முதலாம் சடையவர்மன் சுந்தர பாண்டியன் சோழநாட்டை வென்றுதன் பேரரசடன் இணைத்துக் கொண்டான். அக்காலத்தில்தான் கங்கை கொண்ட சோழபுரம் பெருத்த அழிவிற்கு ஆளாயிருத்த வேண்டும். மாளிகை கள் தரைமட்டமாக்கப்பட்டன. சோழர்குலம் 1279ல் முடிவுறவே அரண்மனைகள் உட்பட நகரில் இடிந்த கட்டிடங்களின் செங்கற்களை ஊர்மக்கள் எடுத்துப் பயன் படுத்தத் தொடங்கிவிட்டனர். இதற்கு மேலும் சென்ற நூற்றாண்டில் மற்றொரு நிகழ்ச்சி ஏற்பட்டது.


அதாவது, லோயர் அணைக்கட்டில் கொள்ளிடத்திற்குப் பாலம் கட்டியபொழுது அரசாங்க அதிகாரிகள் கருங்கல்லால் பாலம் கட்டினால் வலுவாக அமையுமெனக் கருதி, அருகே கருங்கல் கிடைக்காத நிலையில், கங்கைகொண்ட சோழபுரக் கோவிலில் இடிந்து கிடந்த கற்களை எடுத்துச் சென்றதுடன் குறையாக நின்ற மதிலையும் இடித்துக் கற்களை எடுத்துள்ளனர். ஊர் மக்கள் அதனை எதிர்த்ததும், வேறு செங்கல் மதிலைக் கட்டித் தருவதாக அதிகாரிகள் வாக்களித்தனர். ஆனால் பிறகு எதுவும் நிகழவில்லை. கோவிலில் இருந்து அகற்றப்பட்ட கருங்கற்களில் பல கல்வெட்டுக்கள் இருந்தன. அவையாவும் இவ்வாறு அழிந்துவிட்டன. கோவிலில் எஞ்சி உள்ள கல்வெட்டுக்கள் சிலவே. அவற்றிலும் சில மிகவும் சிதைந்துள்ளன. கங்கை கொண்ட சோழனின் கல்வெட்டு ஒன்றுகூட அங்குத் தற்பொழுது காண்பதற்கில்லை என்பது வருந்தத்தக்கது.

இக்கோயிலில் தற்போது கிடைத்துள்ள கல்வெட்டுக்களில் சிறப்பானது வீரராஜேந்திர சோழனது கல்வெட்டாகும். இதிலிருந்து, இக்கோயிலுக்கு விடப்பட்டிருந்த ஊர்களிலிருந்து ஆண்டுதோறும் ஒரு லட்சத்து பத்தாயிரம் கலம் நெல் இக்கோயிலுக்கு அளக்கப்பட்து என்ற செய்தி தெரிகிறது.

இங்குள்ள சிங்கமுகக்கேணியின் மீதுள்ள கல்வெட்டு அதை உடையார்பாளையம் ஜமீன்தார் கட்டியதாகக் கூறுகிறது. ஆனால் அக்கேணி முதலாம் இராஜேந்திரன் காலத்திலேயே கட்டப்பட்டு சென்ற நூற்றாண்டில் ஜமீன்தாரால் திருப்பணி செய்யப்பட்டிருக்க வேண்டும்.
சோழப் பேரரசை வென்ற சடையவர்மன் முதலாம் சுந்தர பாண்டியனும், சோழர் தலைநகரான கங்கை கொண்ட சோழபுரத்தை அழித்தான் எனினும் கோயிலுக்கு எவ்வித ஊறும் விளைக்கவில்லையென்றும், மாறாகத் தன் பெயரால் பெருமானுக்குப் பூசை நடத்த நிவந்தம் அளித்தான் என்பதும் தெரிகின்றது.

இக்கோயிலில் உள்ள சிற்பங்களுள் சரஸ்வதி, லட்சுமி, சண்டேசுவரர்ர, அனுக்ரஹ மூர்த்தி, அர்த்தநாரி, தட்சிணாமூர்த்தி, நடராஜர், கங்காதரர், காளாந்தகர், துர்க்கை, பைரவர், பிட்சாடனர், அதிகாரநந்தி முதலியவை குறிப்பிடத்தக்கனவாம்.

முதலாம் இராஜேந்திரன் இங்குள்ள பெருமானுக்குத் தஞ்சைப் பெருவுடையாரின் பெயரையே வைத்து வணங்கினான். இறைவன் - கங்கை கொண்ட சோழேச்சரர், பிரகதீஸ்வரர், பெருவுடையார். இறைவி - பெரியநாயகி, பிருகந்நாயகி. இத்தலத்துப் பெருமான் மீது கருவூர்த்தேவர் (திருவிசைப்பா) பதிகம் பாடியுள்ளார்.

மூலவர் சிவலிங்கமூர்த்தி பேருருவம் 13 அடி உயரம். ஆவுடையார் சுற்றளவு 60 அடி - ஒரே கல்லால் ஆனவை. விமானம் 160 அடி உயரம் - 100 அடி சதுரமானது.
கோயிலின் சிறப்புக்களை நூலிற் படித்து விட்டு நேரில் காணச் செல்வோர்க்கு மிஞ்சுவது, இடிபாடுகளைக் காண்பதால் வரும் வேதனையே.  கோயிலுக்கு முன்னால் மொட்டைக்கோபுரம் - வாயில் தாண்டியதும் அழகான நடைபாதை - சுற்றிலும் புல் தரைகள். வலப்பால் மகிஷாசுரமர்த்தினி கோயில் உள்ளது. அம்பாள் இருபது கரங்களுடன் காட்சி தருகின்றாள். அபயஹஸ்தம் நீங்கலாக 18 கரங்களில் 18 ஆயுதங்கள் உள்ளன. பங்குனி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை நாளில் இத்தேவிக்கு, காவடி எடுத்து விழாக் கொண்டாடப்படுகிறது.

சற்றுத்தள்ளிச் சென்றால் சுதையாலான பெரிய யாளி காட்சி தருகிறது. அதனுள் இறங்கிச் சென்று "சிம்மக்கிணற்றை" க் காணலாம். படிகள் உள்ளன. இக்கிணற்றில் கங்கை நீர் கலந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மதிற்சுவர்கள் இடிந்து போயுள்ளன.
பெரிய வாயிலுக்கு (கிழக்கு வாயில்) நேராகப் பெரிய நந்தியுள்ளது. படிகள் வழியே மேலேறி உட்சென்றால் பிரம்மாண்டபமான மூலமூர்த்தியைத் தரிசிக்கலாம். சுவாமி கிழக்கு நோக்கியுள்ளார்.

இருபுறமும் வாயிலில் கருங்கல்லாலான துவாபாலகர்கள் காட்சியளிக்கின்றனர்.
உள்ளே நுழைந்து செல்லும்போது வலப்புறம் நவக்கிரக பீடமுள்ளது. இங்குள்ள நவக்கிரக அமைப்பு விந்தையானது. ஒன்பது கிரகங்களும் ஒரே கல்லில் வானசாஸ்திர முறைப்படி செதுக்கப்பட்டுள்ளன.

பீடம் தாமரை வடிவம். நடுவில் சூரியன். சுற்றிலும் ஏழு கிரகங்கள் இதழ்கள் போன்ற அமைப்பில் உள்ளன. கீழே ஏழு குதிரைகள் பூட்டிய தேரை அருணன் சாரதியாக இருந்து செலுத்துவது, ஒருபுறம் 12 பேர் நாதஸ்வர வாத்யங்களை வாசிப்பது, கடையாணி பூட்டிய தேரில் உலகை வலம் வரும் கோலம் - மிகவும் அற்புதமாகச் செதுக்கப்பட்டுள்ளன.
உள் மண்டபத்தில் செல்லும்போது கருங்கல் தூண்களின் ஒழுங்கும், அழகும் கண்டு மகிழலாம். ஒருபுறம் பழைய திருமேனிகள் பார்வையிற் படுகின்றன. நடராஜர் சிவகாமி தரிசனம். உள் வாயிலைத் தாண்டினால் மூலவர் தரிசனம். மின் விளக்கு இல்லையெனினும், வெளியிலுள்ள பெரிய நந்தியின் மீது படும் ஒளி பிரதிபலித்து, சுவாமி மீது படுவதால் நன்கு தரிசிக்க முடிகிறது.

மூலவர் முன்பு நிற்குங்கால் - வெளியில் கொதிக்கும் வெயிலாக இருந்த போதிலும் - உள்புறம் சில்லென்று குளிர்ச்சியாக இருக்கிறது.

இதற்குச் சொல்லப்படும் காரணம் -
மூலவரின் அடியில் சந்திரகாந்தக்கல் பதிக்கப்பட்டுள்ளது. இதனால் வெப்பக்காலத்தில் வெளியில் கொதிக்கும் வெயிலாக இருக்கும்போது உள்ளே சில்லென்றிருக்கின்றது. இவ்வாறே மார்கழி போன்ற குளிர்காலத்தில் உள்ளே கதகதப்பாக இருக்கின்றது என்று கோயில் சிவாசாரியார் கூறுகின்றார்.

மூலவரை வணங்கிய பின்பு வெளியே வந்து படிகளில் இறங்கி வலமாக வந்தால் பிட்சாடனர், அர்த்த நாரீசுவரர், தட்சிணாமூர்த்தி, நடராஜர், சண்டேச அநுக்ரஹர், கஜசம்ஹாரர், ஞானசரஸ்வதி முதலிய அருமையான சிற்பமூர்த்தங்களைக் கண்களுக்கு விருந்தாகக் கண்டு மகிழலாம். சண்டேசுவரர் கோயில் தனியே உள்ளது. பக்கத்தில் புன்னை மரம் நிழல் தந்து வருபவர்களைக் காக்கிறது.

கண்டு மகிழத்தக்க கங்கை கொண்ட சோழபுரத்துச் சிற்பங்களை விட்டுப் பிரியவே மனம் வரவில்லை. அரிய சிற்பக் களஞ்சியம் அழகிழந்து நின்று மனங்களை வருத்துகிறது.
இக்கோயிலில் கிடைத்துள்ள கல்வெட்டுக்கள் மூலம், ஊர்ப் பெயர் வடகரை விருதராச பயங்கர வளநாட்டு மேற்காநாட்டு மண்ணை கொண்ட சோழவள நாட்டு கங்கை கொண்ட சோழபுரம் என்றும், இறைவன் பெயர் திருப்புலீஸ்வரமுடையார் என்றும் குறிக்கப்பட்டுள்ளது தெரியவருகிறது. மேலும் சிவபெருமானுக்கு அளிக்கப் பட்ட நிலத்துக்குத் திருநாமத்துக்காணி என்றும், திருமாலுக்கு அளிக்கப்பட்டது திருவிடையாட்டம் என்றும் பெயர் வழங்கப் பெற்றன என்ற செய்தியும், மன்னனார் என்பது - திருமாலுக்குப் பெயர். அவர் எழுந்தருளிய காரணத்தால் அப்பதி மன்னனார்குடி என்று பெயர் பெற்றது. அதுவே பிற்காலத்து மன்னார்குடி என்றாயிற்று. அதன் பழம்பெயர் வீரநாராயண நல்லூர் என்பதே என்பன போன்ற பல செய்திகள் இக்கல்வெட்டுக்களிலிருந்து தெரியவருகின்றன.
இத்திருக்கோயிற் பெருமானுக்கு இராஜேந்திரன் கங்கை நீராட்டியதை நினைவு கூறும் வகையில் 108 குடங்கள் கங்கை நீரால் அபிஷேகம் 1985,1986 ஆம் ஆண்டுகளில் செய்வித்து, அது முதல் ஆண்டுதோறும் சுவாமிக்கு ஐப்பசி பௌர்ணமியில் அன்னாபிஷேகம் செய்வதற்கும், ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் (ஸ்ரீ பரமாசார்யாள்) அவர்கள் ஏற்பாடு செய்து அதற்கெனக் கமிட்டி ஒன்றையும் ஏற்படுத்தியுள்ளார்கள். அவர்கள் அன்னாபிஷேகத்தை பல மூட்டைகள் அரிசி சேகரம் செய்து) சிறப்பாக ஆண்டுதோறும் நடத்தி வருகின்றனர்.

"அற்புதத் தெய்வம் இதனின் மற்றுண்டே அன்பொடு தன்னை அஞ்செழுத்தின்                              
சொற்பதத்துள் வைத்து உள்ளம் அள்ளூறும்தொண்டருக்கு எண்டிசைக் கனகம்                                         
 பற்பதக் குவையும் பைம்பொன் மாளிகையும்பவளவாயவர் பணைமுலையும்                                           
கற்பகப் பொழிலும் முழுதுமாம் கங்கைகொண்ட சோளேச் சரத்தானே".

"மங்கை யோடிருந்து யோக செய்வானை வளர் இளந் 

 திங்களை முடிமேல்கங்கையோடு அணியும் கடவுளைக் 

 கங்கைகொண்ட சோளேச்சரத்தானை 

 அங்கையோ டேந்திப் பலிதிரி கருவூர்அறைந்த சொல் லையால் ஆழிச்   

 செங்கையோடு உலகில் அரசு வீற்றிருந்துதிளைப்பதும் சிவனருட் கடலே." (கருவூர்த்தேவர்)

தமிழகத்திலேயே மிகப்பெரிய லிங்கம் இங்குதான் உள்ளது. தஞ்சை பெருவுடையார் 12.5 அடி உயரம் 55 அடி சுற்றளவும் கொண்டது. இங்கு லிங்கம் 13.5 அடியும் சுற்றளவு 60 அடியும் கொண்டது. ஆவுடையாரைச் சுற்றி பலகைத் தளம் அமைத்து அதன்மீது நின்றுதான் அபிஷேகம் நடைபெறும். ஒரே கல்லால் ஆன லிங்கம். தஞ்சை பிரஹதீஸ்வரர் ஆண் அம்சமாகவும், இங்குள்ளவர் பெண் அம்சமாகவும் சிற்பிகள் வடிவமைத்துள்ளனர். தஞ்சையில் உரல் வடிவமாகவும், இங்கு உடுக்கை வடிவமாகவும் அமைந்துள்ளது சிறப்பு.

இங்குள்ள நந்தி சுண்ணாம்புக் கல்லினால் செய்யப்பட்டு தரையில் அமர்ந்த நிலையில் உள்ளது. இங்கு மூலஸ்தானத்திலிருந்து 200 மீட்டர் இடைவெளியில் இந்த நந்தி அமைந்துள்ளது. தினமும் பகலில் நந்தியின் மீது சூரிய வெளிச்சம் பட்டு அந்த ஒளி கருவறையிலுள்ள லிங்கத்தின் மீது பிரதிபலிப்பது சிறப்பு. மூலஸ்தான விளக்குகளை அணைத்துவிட்டு இருட்டில் லிங்கத்தைப் பார்த்தால் மிகவும் அற்புதமான இந்த ஒளிதெரியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நம் சிற்ப வல்லுனர்கள் திறமை வெளிப்படுகிறது.
. பெரியநாகி அம்மன் பெயருக்கேறாற்போல் 9.5 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக அருள் பாலிக்கிறார்..

இங்கு சரஸ்வதி, லட்சுமி இருவரும் தியானக் கோலத்தில் இருப்பதால் இவர்கள் ஞான சரஸ்வதி, ஞான லட்சுமி என அறியப்படுகின்றனர். பங்குனித் திருவிழாவின் கடசி நாளில் துர்க்கைக்கு 500 குடம் பாலாபிஷேகம் நடக்கிறது.

லிங்கத்துக்கு 25 மீட்டரில் வேட்டியும் 14 அடியில் மாலையும், அம்மனுக்கு 9 கஜத்தில் புடவையும் சாத்தப்படுகிறது.

இங்குள்ள நந்தி தஞ்சை நந்தியைவிட பெரியது. தஞ்சை நந்தி ஒரே கல்லால் ஆனது, உயரமான மண்டபத்தில் அமைந்தது.

இங்கு அன்னாபிஷேகம் நடைபெற்று வருகிறது. நூற்றுக்கணக்கான மூட்டை அரிசி சாதம் வடித்து அன்னாபிஷேகம் நடைபெறும். அத்துடன் காய்கறி, கனி வகைகளும் சார்த்தி வழிபாடு செய்யப்பெறும். பொதுவாக அன்னாபிஷேகம் செய்த அன்னத்தை ஓடும் நதியில் கரைத்துவிடுவார்கள். பாணத்தின் மீது இருக்கும் அன்னத்தில் கதிர்வீச்சு இருக்கும் அதை உண்டால் அதன் வீரியத்தை நம்மால் தாங்க இயலாது. எனவே ஆவுடையார் மீது உள்ள அன்னத்தை மட்டும் எடுத்து அதில் தயிர் கலந்து பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்பெறுகிறது. குழந்தைப் பேறு இல்லாதவர்கள் இந்தப் பிரசாதத்தை உண்டால் குழந்தை உண்டாகும் என்பது நம்பிக்கை.

இங்குள்ள நவக்கிரகத்தைச் சுற்றி வந்து வணங்க முடியாது. காரணம் நவக்கிரஹங்கள்தான் உலகைச் சுற்றுகிறது, அவற்றை நாம் யாரும் சுற்றக் கூடாது என்பதற்காக இந்த அமைப்பு.
குழந்தை வடிவில் துர்க்கை:  இங்குள்ள துர்க்கை குழந்தை வடிவானவள். கடைச் சோழர்களான விஜயாலயன் பரம்பரையினருக்கு “நிசும்பசூதனி” எனும் துர்க்கைதான் குல தெய்வம். இங்கு சிறுமி வடிவில் சிரித்த முகத்தோடு 20 திருக்கரங்களுடன் மகிஷாசுரனை வதம் செய்த கோலத்தில் துர்க்கை மூர்த்தம் அமைந்துள்ளது. இந்த துர்க்கையை “மங்கள சண்டி” என்கிறார்கள். திருமணம் வேண்டி, குழந்தை வேண்டி, மேலும் பல வேண்டுதல்கள் இங்கு நடைபெறுகின்றன. அவற்றை துர்க்கை நிறைவேற்றுவதாக நம்பிக்கை.
கணக்கு விநாயகர்: ஒரு முறை ராஜேந்திர சோழன் தன் அமைச்சரிடம், பெரிய கோயில் கட்டியதற்கு இதுவரை எத்தனை செலவாகியுள்ளது? என்று கேட்டானாம். அமைச்சர்க்குச் சரியாகத் தெரியவில்லை. அவர் பதறிப்போய் அங்கிருந்த விநாயகரிடம் வேண்டி நின்றார். அப்போது கணக்கு நினைவுக்கு வந்ததாம். ஆகவே இந்த விநாயகர் கனக (கணக்கு) விநாயகர் எனப்படுகிறார். இவர் கையில் ஒரு எழுத்தாணியும் இருக்கிறது.

கோபுரம்: இங்கும் சிவலிங்கம் பிரதிஷ்டை ஆனபின்னர் விமானம் கட்டப்பட்டது. தஞ்சையில் 216 அடியில் கோபுரம் கீழிருந்து மேலாக சீரான சரிவில் கட்டப்பட்டது. இங்கு 180 அடி உயரம், 100 அடி அகலம் உள்ளது கோபுரம். இதில் கீழிருந்து 100 அடி வரை நல்ல அகலமாகவும் அதன் பின் 80 அடி குறுகலாகச் சரிந்தும் காணப்படுகிறது. தஞ்சை ராஜராஜேச்சரத்துக்கு அடுத்தபடியாக பெரிய கோபுரம் இதுவே.

தஞ்சையை ஆண்ட ராஜராஜ சோழன், திரிபுவனமாதேவி ஆகியோருக்கு மகனாக ராஜேந்திரன் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் மதுராங்கன். இவரது ஆட்சிக் காலம் கி.பி.1012 முதல் 1044 வரை. கடல் கடந்து பல நாடுகளை வென்றதால், இப்போதைய சுமத்ரா, ஜாவா, போர்னியோ, தாய்லாந்து, கம்போடியா ஆகிய பிரதேசங்களை வென்றதால் இவருக்குக் “கடாரம் கொண்டான்” “கங்கை கொண்டான்” என்றெல்லாம் பெயர்.


No comments:

Post a Comment

You can give your comments here