பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, October 6, 2016

தரங்கம்பாடி

                          

தற்போதைய நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறைக்குக் கிழக்கே கடற்கரையோரம் அமைந்த ஊர் தரங்கம்பாடி. ஐரோப்பியர்கள் இதனை டிராங்குபார் என்றனர். இது ஒரு பஞ்சாயத்து ஊர். காரைக்காலுக்கு 15 கி.மீ. வக்கே உள்ளது. காவிரி கடலில் கலக்குமிடத்துக்குச் சற்று தெற்கேயுள்ளது. இபோது இது தரங்கம்பாடி என்று ஒரு தாலுகா தலைநகரமாக இருக்கிறது. தரங்கம் என்றால் அலை, இங்கு அலை எப்போதும் கரையில் மோதி ஓசை எழுப்புவது பாடுவது போன்றது எனும் பொருளில் தரங்கம்பாடி எனப் பெயர் பெற்றது. ஆங்கிலத்தில் இதனை “Place of the Singing Waves” என்பர். 1620ஆம் வருஷம் தொடங்கி 1845 ஆண்டு வரை 225 ஆண்டுகள் இது டென்மார்க் அதாவது டேனிஷ் நாட்டின் ஆக்கிரமிப்பில் இருந்து வந்தது. அப்போது இவ்வூரை இவர்கள் Trankebar என்றழைத்தனர்.

இவ்வூர் 14ஆம் நூற்றாண்டில் உருவானது. 1306ஆம் ஆண்டு, அதாவது சோழ நாட்டில் சோழர்களின் ஆட்சி வீழ்ச்சியடைந்து பாண்டியர்கள் ஆக்கிரமித்திருந்த காலம் அப்போதைய பாண்டிய அரசன் முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் என்பார் இப்பகுதிகளை ஆட்சி புரிந்து வந்தார். இவர்தான் இங்குள்ள மாசிலாமணி நாதர் கோயில் கட்டுவதற்கு நிலம் அளித்தவர். அதன் பின்னர் சோழ நாடு பல்வேறு அரசர்களைப் பார்த்துவிட்டது. பிறகு 1620இல் டென்மார்க்கிலிருந்து ஐரோப்பியர்கள் இங்கு வாணிபம் புரிய வந்திறங்கினர். அந்த சமயம் இந்தப் பகுதிகளை தஞ்சையிலிருந்து நாயக்க மன்னர்கள் ஆட்சி புரிந்து வந்தார்கள். டேனிஷ் வர்த்தகர்கள் இங்கு வந்து இறங்கியபோது இவ்விடம் தங்கள் வியாபாரத்துக்கு ஏற்ற இடம் என்று கருதினர். டேனிஷ் கப்பல்படை தளபதி ஒவே ஜெட்டே (Ove Gjedde) என்பார் தஞ்சைக்குச் சென்று அங்கு ஆட்சி புரிந்த ரகுநாத நாயக்கரைச் சந்தித்து அவர் சம்மதத்தைப் பெற்று இங்கு ஒரு கோட்டையைக் கட்டிக் கொண்டனர். கோட்டை கட்டப்பட்டு அதற்கு டேனிஷ்பர்க் எனப் பெயரிடப்பட்டது. இப்படி டென்மார்க் காரர்கள் இங்கு வந்து தங்குவதற்கு முன்பு ஐரோப்பிய ஜேஸ்யுட் கேதலிக் பாதரியார் ஒருவர் இங்கு வந்து போர்த்துகீசியர்கள் மதமாற்றம் செய்த கிறிஸ்தவர்களுக்கு மத போதனை செய்து வந்தார்.  டேனிஷ்காரர்கள் இங்கு வந்தபோது அவர்களுடைய ரோமன் காதலிக் ஆலயம் இடிக்கப்பட்டு கோட்டை கட்டப்பட்டது. இந்த டேன்ஸ்பர்க் கோட்டை டேனிஷ் காரர்களின் தலைமையகமாகவும், கவர்னரின் அலுவலகமாகவும் சுமார் 150 ஆண்டுகள் இருந்து வந்தது. இப்போதும் அந்த டேன்ஸ்பர்க் கோட்டையைத் தரங்கம்பாடியில் காணலாம், அது இப்போது ஒரு அருங்காட்சியகமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அங்கு ஐரோப்பியர் இங்கு குடியேறிய காலத்து நினைவுப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.

கிறிஸ்தவ மதப் பிரிவில் பிராடஸ்டெண்ட் என்போர் முதன் முதல் இந்தியாவில் காலடி எடுத்து வைத்தவர்கள் ஜெர்மானிய லூத்ரன் சர்ச்சைச் சேர்ந்தவர்கள். ஹென்ரிச் ப்ளூட்செவ், பார்த்தலோமாஸ் சீஜென்பர்க் ஆகியோர் 1705இல் குடியேறியவர்கள்.
கிறிஸ்தவ மதத்தவர்கள் ஐரோப்பியர்களால் மதமாற்றம் செய்யப்பட்டனர். அப்போது இங்கு குடியேறிய சீசென்பர்க் என்பார் பைபிளின் புதிய ஆகமம், பழைய ஆகமம் ஆகியவற்றைத் தமிழில் மொழியாக்கம் செய்து ஒரு அச்சு இயந்திரத்தை உருவாக்கி அதில் பழைய ஆகமத்தை அச்சிட்டு வெளியிட்டார். இதுதான் நம் நாட்டில் முதலில் அச்சிடப்பட்ட நூல். தொடர்ந்து 1714இல் புதிய ஆகமம் அச்சிடப்பட்டது.

முதலில் அங்கு குடியேறிய ஐரோப்பியர்களையும், மதம் மாறிய இந்தியர்களையும் லிங்குவா ஃப்ராங்கா எனப்படும் கொச்சை போர்த்துகீசிய மொழியைப் பயிலும்படி கட்டாயப் படுத்தினர், அதன் பிறகுதான் பைபிள் தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து அச்சிட்டு வெளியிடப்பட்டது.

ஐரோப்பியர்களிடமிருந்து மொழியைக் கற்றுக் கொண்டவர்கள் இங்கு ஒரு அச்சடிக்கும் இயந்திரத்தை உருவாக்கினார்கள். 1712இல் இவர்கள் கிட்டத்தட்ட 300 பைபிள் புத்தகத்தைத் தமிழில் அச்சடித்து முடித்தார்கள். முதலில் தங்கள் மதப் பிரச்சாரத்தை மிதமாகச் செய்யத் தொடங்கி பின்னர் நாளடைவில் முழுமூச்சுடன் மதப் பிரச்சாரமும் மத மாற்றமும் செய்யத் தொடங்கினார்கள். இங்கு தொடங்கிய கிறிஸ்தவ மிஷன் மெல்ல மெல்ல அருகிலுள்ள கடலூர், சென்னை, தஞ்சாவூர் ஆகிய இடங்களுக்கும் விஸ்தரிக்கப்பட்டது. தற்சமயம் தரங்கம்பாடியிலுள்ள கிறிஸ்தவ மத போதகர் பிஷப் என்பார் டி.ஈ.எல்.சி. எனப்படும் தமிழ் ஈவாஞ்சலிகல் லூத்ரன் சர்ச்சின் பிஷப் என்று தென் இந்தியாவில் அறியப்படுகிறார்.  இந்த மிஷன் நூறு ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1919இல் சர்ச் ஆஃப் ஸ்வீடன், ஜெர்மன் லூத்ரன் சர்ச் ஆகியோரால் உருவாக்கப்பட்டது. இந்த டி.ஈ.எல்.சி. பிஷப்பின் இல்லம் தற்போது “தரங்கம்பாடி இல்லம்” என வழங்கப்படுகிறது. இதுவும் ஒரு தேவாலயமும் திருச்சிராப்பள்ளியில் இன்றும் காணலாம்.

1701ஆம் வருஷம் சர்ச் ஆஃப் சியோன் உருவாக்கப்பட்டது. இந்தியாவில் மிகப் பழமையான பிராடஸ்டெண்ட் சர்ச் இதுதான் என்று கருதப்படுகிறது. 1718இல் தி சர்ச் ஆஃப் நியு ஜெரூசலேம் கட்டப்பட்டது. மொராவியன் பிரதரென் சீடர்கள் பொறையார் எனும் ஊரில் “கார்டன் ஆஃப் பிரதரென்” அமைப்பை நிறுவினர். இந்த பொறையார் தரங்கம்பாடிக்கு மிக அருகிலுள்ள ஊர். இது கிறிஸ்தவ மிஷனரிகளின் தலைமை அகமாக வெகு காலம் இருந்து வந்தது. ஃபாதர் கான்ஸ்டான்ஸோ பெஸ்சி என்கிற இத்தாலிய கேதலிக் பாதிரியார் இங்கு 1711 முதல் 1740 வரை இருந்தார். அவர் தரங்கம்பாடியில் இருந்த லூத்ரன் சர்ச்சுக்கு எதிரான பல சர்ச்சைக்குரிய நூல்களை எழுதி வெளியிட்டார்.

தென் இந்தியாவில் நிகழ்ந்த பல்வேறு அரசியல் மாற்றங்கள் போராட்டங்கள் காரணமாகவும், ஐரோப்பாவில் நடந்த போர்கள் அங்கு செய்துகொள்ளப்பட்ட பல ஒப்பந்தங்கள் காரணமாகவும் இங்கு ஐரோப்பியர்கள் வந்து தங்கிய இடங்கள் பலவும் கைமாறின. 1808இல் தரங்கம்பாடி பிரிட்டிஷார் வசம் வந்தது. அதற்குக் காரணம் ஐரோப்பாவில் நெப்போலியன் போனபார்ட்டுக்கும் இங்கிலாந்துக்கும் நடந்து வந்த யுத்தங்களே காரணம். இங்கிலாந்தின் நெல்சனுக்கும் பிரான்சின் நெப்போலியனுக்கும் கடலில் யுத்தம் நடந்ததும் அதில் டிரஃபால்கர் எனுமிடத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்று நெப்போலியன் தோற்றதும் நமக்கெல்லாம் தெரியும். இந்த யுத்தத்தின் காரணமாக பிரிட்டிஷிடமிருந்து 1814இல் தரங்கம்பாடி டென்மார்க்குக்குச் சென்றது. இதற்கான ஒப்பந்தம் கீல் ஒப்பந்தம் (Treaty of Kiel) செய்து கொள்ளப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின்படி டென்மார்க்குக்குச் சொந்தமான இந்திய பகுதிகளான நிக்கோபார், செராம்பூர் ஆகியவை 1845இல் பிரிட்டிஷார் வசம் ஆனது. அந்த சமயத்தில் தரங்கம்பாடி ஒரு நல்ல துறைமுகமாக விளங்கியது, அதன் பயன்பாட்டைக் கருதி நாகப்பட்டினம் ஒரு ரயில் நகரமாக உருவாயிற்று.

தரங்கம்பாடியிலுள்ள அருங்காட்சியகம் டேனிஷ் குடியேறிகளின் அரசவம்சத்துப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் ஓரிடமாக விளங்குகிறது. அப்போது புழக்கத்தில் இருந்த பீங்கான் சாமான்கள், கண்ணாடிப் பொருட்கள், டேனிஷ் கையெழுத்துப் பிரதிகள், சைனா டீ செட், சுட்ட மண் பாண்டங்கள், அலங்கார விளக்குகள், உருவ பொம்மைகள், விளக்குகள், சிலைகள், கற்கள், கத்தி போன்ற ஆயுதங்கள், வாள், ஈட்டி, மரச்சாமான்கள் ஆகியவை இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருக் கின்றன. இவை தவிர ஒரு பெரிய திமிங்கிலத்தின் எலும்புக்கூடும், பீரங்கிக் குண்டுகளும் கூட காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

டேன்ஸ்பர்க் எனும் டேனிஷ் கோட்டை 1620இல் கட்டத் தொடங்கப்பட்டது. இதன் சில பகுதிகள் பல்வேறு காலகட்டத்தில் மாற்றி கட்டப்பட்டிருக்கின்றன. இதன் கைப்பிடிச் சுவர், தடுப்புச் சுவர்கள் ஆகியவை அடங்கும். இதன் மதில் சுவர் நல்ல உயரமான நான்கு புறமும் அமைந்தது. ஒரு மாடியுள்ள இது, பல பிரிவுகளாக அமைந்தது. ஒன்றில் சாமான்கள் வைக்கும் அறை, ராணுவ தளவாடங்கள், சிறை ஆகியவைகளோடு உணவு தயாரிக்கும் சமையல் அறையும் அடங்கும்.

இந்த கோட்டையின் தென் பகுதி இப்போதும் நன்றாக இருக்கிறது. ஆனால் வட பகுதியும், மேற்குப் பகுதியும் மிக அதிகமாக சேதமடைந்து காணப்படுகின்றன. கோட்டையின் கிழக்குப் பகுதியில் ஒரு இரண்டடுக்கு கட்டுமானம் உண்டு. அந்தப் பகுதியில் நின்றுகொண்டு கடலின் அழகைக் கண்டு ரசிக்கலாம். இந்த கோட்டையைச் சுற்றி ஒரு அகழி உண்டு. அதன் மீது கோட்டிக்குள் செல்ல ஒரு பாலமும் உண்டு. இப்போது அகழியும் இல்லை, பாலமும் இல்லை.

2001 ஜனத்தொகை கணக்கெடுப்பின் போது தரங்கம்பாடி ஜனத்தொகை 20,841. இதில் பாதிப் பேர் பெண்கள். சரியாகச் சொன்னால் 52 சதவீதம் பெண்கள், 48 சதவீதம் ஆண்கள்.


No comments:

Post a Comment

You can give your comments here