தமிழ்ப்பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் ‘புகார் நகரம்’ என்ற பெயருடன் குறிப்பிடப்படும் இந்த ‘பூம்புகார்’ அல்லது ‘காவிரிப்பூம்பட்டிணம்’ எனப்படும் நகரமானது தற்போதைய நாகப்பட்டிணம் மாவட்டத்தில் மயிலாடுதுறைக்கு கிழக்கே 22 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.
சோழ நாட்டின் முக்கிய நாகரிகக்கேந்திரமாக, காவிரி ஆறு கடலில் கலக்கும் இடத்தில் அந்நாளில் வீற்றிருந்த பூம்புகார் நகரம் ஒரு காலத்தில் சோழ சாம்ராஜ்ஜியத்தின் தலைநகரமாக கோலோச்சியிருக்கிறது. கி.பி 500 ம் ஆண்டில் ஏற்பட்ட ஒரு கடல் கொந்தளிப்பில் (ஆழிப்பேரலை) இந்த மகோன்னத வரலாற்று துறைமுகம் புதையுண்டு போனது. ‘உரு’வாக ஏதும் இன்று மிச்சமில்லை எனினும் ‘திரு’வாக விட்டுச்சென்றிருக்கின்றனர் தமிழ்ப்புலவர்கள் – இந்நகரத்தின் பெருமையை. எனவே ஒரு வரலாற்று ஸ்தலமாக இன்றும் பூம்புகார் எனும் முக்கியத்துவம் பெற்று அடக்கமாக வீற்றிருக்கிறது. மிகத்தொன்மையான மண் சிற்பங்கள் மற்றும் தாழிகள் பூம்புகார் பகுதியில் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டின் ஆதி நாகரிக நகரங்களில் ஒன்றாக இந்த பூம்புகார் ஸ்தலம் கருதப்படுவதும் குறிப்பிடத்தக்கது. தற்போது 86000 மக்கள் தொகையை கொண்ட ஒரு முக்கியமான சுற்றுலாத்தலமாக சுற்றுலாப்பயணிகளை பூம்புகார் நகரம் ஈர்க்கிறது.
தொன்மையும் வரலாற்றுப்பின்னணியும்
…விலங்கு பகை அல்லது கலங்கு பகை அறியாகொழும் பல்குடி செழும் பாக்க(ம்)…
செல்லா நல் இசை அமரர் காப்பின், நீரின் வந்த நிமிர் பரிப் புரவியும், காலின் வந்த கருங் கறி மூடையும், வடமலைப் பிறந்த மணியும் பொன்னும், குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும், தென் கடல் முத்தும், குண கடல் துகிரும், கங்கை வாரியும், காவிரிப் பயனும், ஈழத்து உணவும், காழகத்து ஆக்கமும், அரியவும், பெரியவும், நெரிய ஈண்டி, வளம் தலைமயங்கிய நனந் தலை மறுகின்…பல் ஆயமொடு பதி பழகிமொழி பல பெருகிய பழி தீர் தேஎத்துப் புலம் பெயர் மாக்கள் கலந்து, இனிது, உறையும்,
முட்டாச் சிறப்பின், பட்டினம் பெறினும்… என்று பட்டினப்பாலை எனும் நூல் உரைக்கிறது - காவிரிப்பூம்பட்டிணத்தின் பெருமையை. கரிகாற்சோழன் ஆண்ட சோழப் பெருநாட்டின் மகோன்னதம் இந்நூலில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தமிழர் நாகரிகம் இலக்கியங்களில் மட்டுமே பொதிந்து போயிருப்பது காலத்தின் விதி என்பதால் இம்மேற்கோள்கள் அன்றி வேறு சான்றுகள் ஏதும் இல்லை நம்மிடம் இன்று.
சாலைமார்க்கமாக பூம்புகார் நகரத்துக்கு மிக எளிதாக பயணிகள் விஜயம் செய்யலாம். தஞ்சாவூ அல்லது கும்பகோணத்துக்கு வருகை தரும்போதே இந்நகரத்திற்கும் விஜயம் செய்வது எளிது என்பது குறிப்பிடத்தக்கது. ரயில் மார்க்கமாக பயணிக்க விரும்பினால் நாகப்பட்டிணம் அல்லது மயிலாடுதுறை ரயில் நிலையங்கள் மூலம் பூம்புகார் நகருக்கு செல்லலாம்.
தமிழ்நாட்டின் எல்லா நகரங்களையும் போன்றே கடற்கரை ஓரத்தில் வீற்றிருக்கும் பூம்புகார் நகரமும் வெப்பம் மற்றும் ஈரப்பதம் அதிகமாக காணப்படும் சூழலை கொண்டுள்ளது. டிசம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரையிலான பருவத்தில் இந்த நகருக்கு சுற்றுலா மேற்கொள்வது உகந்ததாக இருக்கும்.
No comments:
Post a Comment