தேர்தல் திருவிழா
நம்ம ஊர் மாரியம்மன் கோயில் திருவிழா கோடைகாலத்தில்தான் நடக்கும். அப்போது பள்ளிகளுக்கும் விடுமுறையாக இருப்பதால் திருவிழா விமரிசையாக நடைபெறும். குழந்தைகளுக்குக் கும்மாளம் தான். கோயில் இருக்குமிடம் அல்லோலப்படும். ஒரு பக்கம் அக்கம் பக்கத்து கிராம மக்கள் மாரியம்மனை தரிசிக்க தாரை தப்பட்டைகளோடு சீர் கொண்டு வருவது போல வரிசை வரிசையாக வந்து வழிபட்டுச் செல்வார்கள். தீமிதி உத்சவம் மிக விமரிசையாக நடைபெறும். கூட்டம் சொல்லி மாளாது. திருவிழா முடிந்து காப்பு அறுத்தபின் ஒருவாரம் ஊரே வெறிச்சோடியிருக்கும்.
நம்ம ஊர் தேர்தல் திருவிழாவும் அதைப் போலத்தான். காப்பு கட்டியாகிவிட்டது. இனிதான் களைகட்டத் தொடங்கும். ஒவ்வொரு கட்சியும் தேர்தலில் சீட் கொடுப்பது என்பது ஒரு சடங்கு. இதில் உனக்குக் கொடுத்தார்கள், எனக்குக் கொடுத்தார்கள் என்று மகிழ்ச்சி கொண்டாட்டம் ஒரு புறம், எனக்கு சீட் கொடுக்கவில்லை, உனக்கு இல்லை என்று புகார் பட்டியல். உடனே ஊடகங்களுக்குத் தீனி போட்டது போல, ஊரே பற்றி எரிவதைப் போல அவரைக் கேட்பதும், இவரைக் கேட்பதும், அபிப்பிராயங்களை அவரவர்கள் வாய்க்கு வந்தபடி எடுத்து வீசுவதும், அதிலும் ஆங்கில தொலைக்காட்சி ஊடகங்கள் எங்கு பிணம் விழும், அங்கு போய் ஒப்பாரி வைக்கலாம் என்று அலைந்து கொண்டிருப்பார்கள்.
ஒரு கட்சி என்று இருந்தால் எத்தனை தொகுதிகளோ அத்தனை பேருக்குத்தான் சீட் கொடுப்பார்கள். எல்லோரும் எனக்கு உனக்கு என்று பெருமாள் கோயில் சுண்டலுக்கு அடித்துக் கொள்வது போல அடித்துக் கொண்டால் யாருக்கென்று கொடுப்பார்கள். நாற்பது சீட் என்றால், அனுமதி கொடுக்கப்பட்ட நாற்பது பேருக்கும் மகிழ்ச்சிதான், ஆனால் நானூறு பேருக்கு அதிர்ச்சிதான் என்ன செய்ய முடியும். இதை எதிர்பார்த்து தொடக்க முதலே அடிப்படை வேலைகளை செய்து தங்களைத் தகுதிக்கு ஆளாக்கிக் கொண்டிருக்க வேண்டும். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்ய ஓடினால், என்ன ஆகும்? வீண் விளம்பரம், பேட்டி, பத்திரிகையில் படம், செய்தி, கட்சிக்காரர்களின் விரோதம், எதிர்கட்சிக்காரர்களின் தூண்டில், கட்சி மாறுதல்கள் இப்படி பல நாடகங்கள் அரங்கேறும்.
கட்சிக்காரர்கள் எதிர் கட்சியில் யாருக்கெல்லாம் சீட் கிடைக்காமல் அதிருப்தியில் இருக்கிறார்களோ அங்கு போய் தூண்டில் போட்டுவிட்டு காத்திருப்பார்கள். அவர்கள் வீட்டு எருமை கன்னுக்குட்டி உடல்நிலை சரியில்லை என்றால் போதும் எதிர்கட்சிக்காரர்கள் த்சூ த்சூ கொட்டிக் கொண்டு அவரிடம் போய் குசலம் விசாரிப்பு. எல்லாம் அவரை கட்சிமாற வைக்கத்தான்.
ஒருவர் நான்கு முறை வென்றவராம். நாடாளுமன்றத்தில் இருபது ஆண்டுகளுக்கு மேல் உறுப்பினராக இருந்தவராம். அவர் பேசவே திணறுகிறார். வயதோ எண்பது இருக்கும்போல் இருக்கிறது. அவருக்கும் ஆசை விடவில்லை. தனக்கு தான் கேட்ட இடம் கிடைக்கவில்லை என்று ஒரே கோபம். சிலருக்கு சீட்டே கொடுக்கவில்லை என்று கோபம். இவருக்கோ, தான் கேட்ட இடம் கொடுக்கவில்லை என்று மகா கோபம். சென்றமுறை இவர் கட்சியை விட்டு நீக்கப்பட்டிருந்தார். அப்புறம் போனால் போகிறது என்று மறுபடி கட்சியில் சேர்த்துக் கொண்டார்கள். போன முறை தேர்தல் வந்தது. இவரது மாநிலத்திலிருந்து கிழக்குக் கோடியில் வடகோடியில் கூர்க்காக்கள் நிறைந்த பகுதியில் சீட் ஒதுக்கினார்கள். வாயை மூடிக்கொண்டு அங்கு போய் நின்றார். கூர்க்காக்கள் அமைப்பு உதவியில் இவர் வென்று நாடாளுமன்ற உறுப்பினராகவும் ஆகிவிட்டிருந்தார். அப்படி போன முறை கண்காணாத இடத்தில் நிற்க சம்மதித்தவருக்கு இப்போது சொந்த மாநிலத்திலேயே அவருடைய ஊர் இல்லாத மற்றொரு இடத்தில் சீட் கொடுத்ததில் அவருக்கு வந்ததே கோபம். போங்கடா, நீங்களும் உங்க கட்சியும். ஒருத்தனுக்கும் கொள்கையும் இல்லை, கோட்பாடும் இல்லை. (தயவு செய்து கோட்பாடு என்றால் என்ன என்பதை சற்று யாராவது விளக்கவும்) நான் தனி ஆளா சுயேச்சையா நிக்கறேன் பாருங்கடா என்று சொல்லி, "யாரை நம்பி நான் பொறந்தேன், போங்கடா போங்க, என் காலம் வெல்லும், வென்ற பின்னே வாங்கடா வாங்க" என்று பாடிக் கொண்டு அவருக்கு ஆதரவு அளிப்பவர்களோடு சென்று நாமினேஷன் பதிவு செய்து கொண்டார். நல்ல மனிதர்.
பதினெட்டு வயது நிரம்பியவர்கள்தான் அரசாங்க வேலைக்குப் போக முடியும். சில இடங்களில் 58, சில இடங்களில் 60 வயது ஆனால் அவர்களுக்கு பணி நிறைவு. வீட்டுக்குப் போக வேண்டும். சிலருக்கு ஓய்வூதியம் உண்டு சிலருக்கு அதுவும் கிடையாது. இவர்கள் முணுமுணுக்க முடியுமா, எனக்கு இன்னும் உடலில் வலு இருக்கிறது புத்தியில் திறமை இருக்கிறது நான் இன்னும் ஐந்தாறு வருஷம் வேலை செய்வேன்னு சொன்னா யாராவது கேட்பாங்களா. ஆனால் அது என்ன அரசியல் வாதிங்களுக்கு மட்டும் எந்த வயது வரம்பும் இல்லாம தொண்ணூறு நூறு வயசானாலும், பொக்கை வாயை 'ஆ'வென்று திறந்து கடைசி மூச்சி போகும் வரை பதவி, சம்பாத்தியம் என்று அலைய வேண்டும். இவர்களுக்கெல்லாம் வயது கட்டுப்பாடு கிடையாதா.
முன்பொரு முறை நெருக்கடி நிலை காலத்தில் ஒரு யோசனை செய்யப்பட்டது. ஐம்பது வயதான அரசு ஊழியர்களை ஒவ்வொரு வருஷமும், இவர் இன்னமும் சுறுசுறுப்பாக வேலை செய்கிறாரா, திறமையோடு இருக்கிறாரா, தூங்கி வழிகிறாரா என்று அறிய ஒரு கமிட்டி நியமிக்கப்பட்டு அவர்கள் சிபாரிசு செய்தால் வேலையில் தொடரலாம், இல்லையேல் வாலை சுருட்டிக் கொண்டு வீட்டுக்குத்தான் போகவேணும் என்று ஒரு யோசனை இருந்தது. யாரைப் பிடித்த நல்ல காலமோ நெருக்கடி நிலையும் நீங்கியது, அநியாயமாக ஐம்பது வயதில் ஓய்வு பெற்று வீட்டுக்குப் போய் உட்கார்ந்து கொண்டு மனைவியிடம் மொத்து வாங்குவது இல்லாமல் போனது. இல்லாவிட்டால், பாவம் பலரது கதி அதோகதிதான்.
நம்ம ஊர் மந்திரி ஒருத்தர் சொல்றார், நான் ஒண்ணும் தோல்விக்கு பயந்து போய் போட்டியிடாமல் இல்லை. என் மகனுக்கு ஒரு சான்ஸ் தரத்தான் அப்படி. இளைய தலைமுறைக்கு வாய்ப்பு தரவேண்டாமா அப்படியென்கிறார். நல்ல கருத்தாயிருக்குதேன்னு பார்த்தா, இவரைவிட கிழமெல்லாம் சீட்டுக்கு ஆலாப் பறக்குதே, இவர் மட்டும் என்ன சந்நியாசியா, இந்த வயசிலேயே ஓய்வெடுத்துக் கொண்டு இளைய தலைமுறைக்கு வாய்ப்பு கொடுக்க. இவர் இன்னொண்ணும் சொன்னார். இனிமே பதவியில இல்லாத மக்களுக்குச் சேவை செய்யப் போறேன்னு, இது நல்லா இருக்கே, இல்லையா? பல பேரு, அதிலும் ஊழல் பண்ணினாங்க, கோடி கோடியா பணத்தைச் சுருட்டினாங்க அப்படின்னு எல்லாம் சொல்றாங்க இல்ல அவுங்கல்லாம் இவரைப் போல பதவி வேணானுட்டு மக்களுக்கு சேவைசெய்ய போனா என்ன?
முன்னல்லாம் கட்சிக்காரங்க கோயில் கோயிலா போயி சாமிகிட்ட வேண்டிக்குவாங்க. அப்புறம் சில வருசத்துக்கு அப்பால, பெரிய பெரிய கிழமாகிப் போன தலைவர்கள் வீட்டுக்குப் போய் ஆசி வாங்கிட்டு வருவாங்க. அவுங்களும் வஞ்சனை இல்லாம எல்லாருக்கும் ஆசி தருவாங்க. இப்போ திடீர்னு புது டிரெண்டு உருவாயிடுச்சி. அது என்னான்னா மதுரைக்கு போயி எல்லாரும் கண்டுகிட்டு வராங்க. போயி பாத்துட்டு வந்தா ஏதோ பொகையலைக்கு ஆச்சுன்னு கிடைச்ச வரை ஆதாயம்னு எல்லாரும் இப்போ ஆதரவு கேட்க ஆரம்பிச்சுட்டாங்க. அதுவும் நல்லாத்தான் இருக்கு.
நேத்து பாருங்க எனக்கு ஒரு டெலிபோன் காலு. அங்க யாரு நீங்கதானான்னாங்க. ஆமாம் நாந்தான்னேன். அவுங்க இன்ன கட்சி ஆபீசுலேர்ந்து பேசறோம், இங்க இன்னார் தேர்தல்ல நிக்கறாருல்ல, அவரு செஞ்ச சாதனைகளை சொல்றேன், கேட்டுட்டு அவருக்கே ஓட்டு போடுங்கன்னு ஒரு பெண் குரல். ஆகா அவரைப் பத்தி தெரியுங்க, ஓட்டு போட்டுடறேன்னு சொன்னேன். இதுவும் ஒரு புதுவழியாத்தான் தெரியுது.
எனக்கு ஒரு குறை இருக்குதுங்க. யாருகிட்ட சொன்னா அதுக்கு பலன் கிடைக்கும்னு தெரியல. இப்போல்லாம் தஞ்சாவூர்ல விரிவாக்கப் பகுதிகள்ள காலைல தண்ணியே வரமாட்டேங்குது, வந்தாலும், கொழந்த மூத்திரம் போல கொஞ்ச நேரம் சொட்டிட்டு நின்னு போவுது. போர் போட்ட பெரியமனுசங்களுக்கு கவலை இல்லை. நம்மைப் போல ரெண்டும் கெட்டான்கள், நகராட்சி தண்ணீரை எதிர்பார்த்து நிக்கறவங்க என்ன பண்ணுவாங்கன்னு தெரியல. யாராவது ஒருத்தர் இதுல கொஞ்சம் கவனம் செலுத்தி கொஞ்ச நேரம் தேவைக்கு தண்ணீர் விட்டா என்னங்க. அதுக்கும் இந்த தேர்தல்ல ஓட்டு போடறதுக்கும் சம்பந்தம் இல்ல, இதெல்லாம் நகராட்சி விவகாரம்னு எனக்கும் புரியத்தாங்க செய்யுது, இருந்தாலும் மனசு கேக்கல, சொல்லி வச்சேன். சரிங்க அப்புறம் மறுபடி பல செய்திகளோடு உங்களை சந்திக்கறேன். வணக்கம்.