பாரதி பயிலகம் வலைப்பூ

Sunday, November 3, 2013

சர்தார் படேல், பண்டித நேரு



cOURTESY:         VEDIC SCIENCE RESEARCH CENTRE
Top of Form
Bottom of Form
சர்தார் படேல், பண்டித நேரு, ஆர்.எஸ்.எஸ்: கட்டுரை
இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல் நாட்டின் பிரதமராக ஆகியிருந்தால், இந்த பாரதம் உன்னதமான நிலைக்கு வந்து இருக்கும் என்று திரு. நரேந்திர மோதி தெரிவித்த கருத்தால் பல சர்ச்சைகள் எழுந்துள்ளன, இது RSS தடை உள்ளிட்ட விஷயங்களைத் தொடர்புபடுத்தி ஆதாரம் இல்லாமல் பல புனைவுகள் ஊடகங்களில் இடம் பெற்று வருகிறது. இவை அனைத்தையும் சீர் நோக்கி பார்த்து உண்மையை அரங்கத்திற்கு கொண்டு வந்துள்ள Ayush Nadimpalli அவர்களின் ஆங்கில கட்டுரையின் தமிழாக்கம்.



அண்மையில் திரு. நரேந்திர மோதிக்கும் Dr. மன்மோஹன் சிங்கிற்கும் இடையே, சர்தார் படேலின் மரபு குறித்து நடைபெற்ற சர்ச்சை மீதான Ayush Nadimpalli  அவர்களின் ஒரு ஆய்வு.
                    

                                            

மோதி மன்மோஹன்

சர்தார் நாட்டின் பிரதமராக ஆகியிருந்தால், நாட்டின் எதிர்காலம் வேறு விதமாக ஆகியிருக்கும் என்று திரு. நரேந்திர மோதி கூறினார். அதன் பின்னர் மகத்தான சர்தாரின் தொலையறிவு குறித்து விளக்கினார்.

Dr. மன்மோஹன் சிங் எழுதப்பட்ட ஒரு உரையை வாசித்தார் (அவர் மோதியின் உரைக்கு எதிர்வினையாக உரையாற்றினார் என்ற கூற்றை தவறாக்குகிறது) அதில் சர்தார் படேல் ஒரு காங்கிரஸ்காரர் என்றும் அவர் தன் வாழ்நாள் முழுவதும் மதச் சார்பின்மையைக் காக்க பாடுபட்டார் என்றும் தெரிவித்தார்.

இந்த சேர்ந்திசையின் ஒரு பகுதியாக மனீஷ் திவாரியும் பிறரும், தேசிய ஊடகம் மற்றும் சமூக வலைதள களத்தில் குதித்து, சர்தார் படேலின் மரபினை யாரும் கையகப்படுத்த முடியாது என்றும், அவர் காங்கிரஸ்காரர் என்றும், மற்ற எந்த கட்சிகளுக்கும் வரலாற்றுப் பின்புலம் இல்லை என்றெல்லாம் தெரிவித்தார்.

இப்போது நாம் உண்மைகளை எதிர்கொள்வோம்
o    நேருவை விட படேல் சிறந்த பிரதமராக இருந்திருப்பார் என்று சொல்லப்படுவது இது முதல் முறை அல்ல. இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த சி. ராஜகோபாலாச்சாரி, நேரு அயலுறவுத் துறை அமைச்சராகவும், படேல் பிரதமராகவும் இருந்திருந்தால், இது சந்தேகமேயில்லாமல் சிறப்பாக இருந்திருக்கும் என்றார்.

o    மகத்தான தேசத் தலைவர்களின் மரபு தனியொரு அரசியல் கட்சியின் சொத்து அல்ல. தேச சுதந்திரம் வேண்டி, பல்வேறு அரசியல் சார்பு உடையவர்களும் சுதந்திரத்துக்கு முன்பாக இணைந்த ஒரு வாகனம் தான் இந்திய தேசிய காங்கிரஸ். அந்த தலைவர்களின் மரபு மொத்த நாட்டுக்கும் உரியதே தவிர, தனியொரு அரசியல் கட்சியின் ஏகபோக சொத்து அல்ல. இந்தக் காரணத்துக்காகத் தான் காந்தியடிகள் சுதந்திரத்துக்குப் பிறகு காங்கிரஸைக் கலைத்து விடத் தீர்மானித்தார்.
காந்தியடிகள், ‘’இரண்டாகப் பிளவுண்டாலும், இந்தியா, இந்திய தேசிய காங்கிரஸ் வாயிலாக அரசியல் சுதந்திரம் அடைந்தது, தற்போதைய உருவிலும் வடிவத்திலும் அதாவது ஒரு பிரச்சார வாகனமாகவும், நாடாளுமன்ற இயந்திரமாகவும் தனது ஆயுட்காலத்தைத் தாண்டி இருந்து விட்டது. இந்தியாவுக்கு இன்னும் சமுதாய, தார்மீக, பொருளாதார சுதந்திரம் கிடைக்க வேண்டும்; அதன் நகரங்களுக்கும் 7 லட்சம் கிராமங்களுக்கும் இடையே இருக்கும் ஏற்றத் தாழ்வு மறைய வேண்டும். இந்தியா தனது ஜனநாயக இலக்கை நோக்கிப் பயணிக்கையில், சிவில் அதிகாரம் ராணுவ அதிகாரத்துக்கு எதிராக போராடி உயர வேண்டியிருக்கும். இது அரசியல் கட்சிகள் மற்றும் சமய ரீதியான அமைப்புகளுக்கு எதிரான ஆரோக்கியமில்லாத போட்டியிலிருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும். இதற்காகவும் இதுபோன்ற இன்னும் பிற காரணங்களுக்காகவும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி, தற்போது இருக்கும் காங்கிரஸ் அமைப்பைக் கலைத்து lok sevak sangh என்ற அமைப்பாக மலர்ந்து, தேவைக்கேற்ப மாற்றிக் கொள்ளக் கூடிய பின்வரும் களைக் கொண்டதாக இருக்கும்’’ என்று எழுதினார். காந்தியடிகளின் இந்த முழுமையான மாற்றமடைந்த காங்கிரஸ் பற்றிய கருத்து, His Last Will and Testament என்ற தலைப்பில் ஹரிஜன் பத்திரிகையில் வெளி வந்தது. அதுவே ‘’The Collected Works of Mahatma Gandhi - Volume 90’’யில், 1984ம் ஆண்டு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் வெளியீட்டுப் பிரிவால் வெளியிடப்பட்டது.

காங்கிரஸ் தலைவர்கள் எண்ணப்படி, சுதந்திரத்தின் ஒரே சிற்பியாக கருதப்படும் காந்தியடிகளின் இந்த முக்கியமான கருத்தை ஏன் மொத்தமாக புறக்கணித்தார்கள் என்று விளக்க முடியுமா?  நேரு மற்றும் அவரது கூட்டத்தினரின் அதிகார வெறியைத் தானே இது காட்டுகிறது?

o    சரி, நாம் இப்போது மன்மோஹன் சிங் சர்தார் படேலுக்கு அவர் மத சார்பற்றவர் என்று அளித்த சான்றுப் பத்திரத்துக்கு வருவோம். இந்தியாவில் மதச்சார்பின்மைச் சான்றுப் பத்திரம் அளிக்கும் உரிமை காங்கிரஸுக்கு மட்டுமே இருக்கிறது, ஏனென்றால் அவர்களுக்கே இந்த சொல் குறிக்கும் பொருள் சொந்தம்,. பாரதத்தில் அல்லது இந்தியாவில் ‘’மதச்சார்பின்மை’’ என்றால் , உலகத்தார் பொதுவாக ஏற்றுக் கொண்டுள்ள கருத்துக்கு நேரெதிரானது.

தனது புத்தகமான with no iII feeling to anybodyயில் சர்தாருக்கும் சரி, வி.பி. மேனோனுக்கும் சரி, நெருக்கமாக இருந்த திரு MKK Nair என்ற 1947 பேட்சைச் சேர்ந்த IAS அதிகாரி எழுதுகிறார்.

அப்போது உதவி பிரதமராகவும், இந்தியாவின் உள்துறை அமைச்சராகவும் இருந்த சர்தார் வல்லபாய் படேல், அந்நாளைய பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவால் ஒரு கேபினட் கூட்டத்தின் போது அவமானப் படுத்தப்பட்டார், தூற்றப்பட்டார், பழிக்கப்பட்டார். ‘’நீங்கள் முழுக்க முழுக்க சமயவாதி, நான் உங்கள் ஆலோசனைகள், திட்டங்களுக்கு துணை போக மாட்டேன்” என்று அப்போதைய நிஜாமின் தனிப்பட்ட படையினரான ரஜாக்கர்களின் கொடுங்கோன்மையிலிருந்து ஹைதராபாதின் விடுதலை பற்றி விவாதிக்க கூட்டப்பட்ட முக்கியமான கேபினட் கூட்டத்தில் படேலை நோக்கி நேரு கத்தினார்”.

அதிர்ச்சியடைந்த சர்தார் படேல் டேபிளிலிருந்து தனது தஸ்தாவேஜுகளைச் சேகரித்து, மெதுவாக கேபினட் அறையிலிருந்து வெளியேறினார். அது தான் கேபினட் கூட்டத்தில் படேல் இறுதி முறையாகப் பங்கேற்றது. அதன் பிறகு அவர் நேருவிடத்தில் பேசுவதை அறவே நிறுத்தி விட்டார்.

ஆகையால் RSS இயக்கத்தை மட்டுமே நேரு சமயவாதிகள் என்று குற்றம் சாட்டவில்லை. அந்த நேசமான வார்த்தைகளை அப்போதைய துணை பிரதம மந்திரி சர்தார் படேலுக்கும் சொந்தமாக்கியிருக்கிறார்.

o    தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சரும் காங்கிரச் நாடாளுமன்ற உறுப்பினருமான மனீஷ் திவாரி அவர்கள் செய்தி ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கத்தின் குரு கோல்வால்கர் அவர்களுக்கு செப்டம்பர் மாதம் 11ம் தேதி 1948ம் ஆண்டு தேதியிட்ட, சர்தார் படேல் அவர்கள் எழுதிய கடிதத்தை மேற்கோள் காட்டுகிறார். ‘’9.11.1948 அன்று சர்தார் படேல் கோல்வால்கர் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அதில் அவர் ஆர்.எஸ்.எஸ் ஏற்படுத்திய மதவாத விஷம் தான் காந்தியடிகளின் உயிரைப் பலி கொண்டது என்று கூறியிருந்தார்.”

அரசியல் வரலாற்றின் மாணாக்கனாக இருந்த தனக்கு ஆர்.எஸ்.எஸ்ஸும், பா.ஜ.கவும் சர்தார் படேலின் மரபை ஏன் ஸ்வீகாரம் செய்து கொள்ளும் தோல்வியளிக்கும் முயற்சிகளை மேற்கொள்கிறார்கள் என்பது புதிராக இருக்கிறது. நான் பா.ஜ.கவையோ, அதன் புதியதாக நியமிக்கப்பட்டிருக்கும் போலிக்கோ நான் ஒரு கேள்வியை கேட்க விரும்புகிறேன் - அவர்கள் ஆர்.எஸ்.எஸ் குறித்த படேல் அவர்களின் கருத்துக்களை ஆமோதிக்கிறார்களா, ஒப்புக் கொள்கிறார்களா என்று கேட்க விரும்புகிறேன். அப்படி இல்லை என்றால், குஜராத்தின் முதலமைச்சர் என்ற முறையிலோ, ஒரு ஸ்வயம்சேவக் என்ற முறையிலோ, யாரிடத்தில் தங்களுக்கு என ஒரு வரலாறு இல்லையோ அவர்கள் தான் பிறரது சரித்திரத்தை ஸ்வீகாரம் செய்து கொள்ள நினைப்பார்கள் என்பதற்கு சரித்திரமே சாட்சி’’ என்று மேலும் கூறினார் அவர். இந்திய சுதந்திரப் போராட்டம், கருவுக்கும், உருவுக்கும் வடிவம் கொடுத்ததோடு, அதை முன்னின்று வழிநடத்தியது இந்திய தேசிய காங்கிரஸ். ‘’இந்திய ஒருங்கிணைப்பும் இந்திய தேசிய காங்கிரஸின் முயற்சிகளின் பலன் தான். ஆகையால், ஒரு மரபை ஸ்வீகரித்துக் கொள்ளும் முன்பாக அதைக் குறைந்த பட்சம் கவனமாகப் படிப்பது முக்கியமானது’’ என்று கூறினார்.

அதே கடிதத்தில் சர்தார் எழுதியதை திவாரி மேற்கோள் காட்டுகிறார்,
’’ஆர்.எஸ்.எஸ், ஹிந்து சமுதாயத்துக்கு சேவை செய்தது என்பதில் ஐயம் இருக்க முடியாது. உதவி மற்றும் ஒருங்கிணைந்த முயற்சிக்கான தேவை எங்கிருந்ததோ, அந்த பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ்ஸின் இளைஞர்கள், பெண்களையும், குழந்தைகளையும் காத்து, அவர்களுக்காக கடுமையாக பாடுபட்டார்கள். அது பற்றி புரிந்துணர்வு இருக்கும் யாருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது’’ என்று கூறும் அவர் மேலும், ‘’ஆர்.எஸ்.எஸ்க்காரர்கள் தங்கள் நாட்டுப் பற்றுப் பணிகளை காங்கிரஸில் இணைவதன் மூலமே ஆற்ற முடியுமே தவிர, தனியாக இருந்தோ, அதை எதிர்த்தோ அல்ல’’ என்று எழுதியிருந்தார். 
ஆதாரம்:Justice on Trial

அவர் உகந்ததாக கருதிய எண்ணங்களுக்காக சங்கம் காங்கிரஸோடு இணைய வேண்டும் என்பது தெளிவாகிறது. ஆகையால், தன்னை திவாரி அரசியல் வரலாற்றின் மாணவராகக் கருதிக் கொள்கிறார் என்பதால், ஆவணத்தை முழுமையாகப் படித்தால் நன்றாக இருக்கும்.

இந்த கடிதப் போக்குவரத்தில் சுவாரசியமான வேறு விஷயங்கள்:
ஆர்.எஸ்.எஸ் மீதான தடை 1949ம் ஆண்டு ஜூலை மாதம் 12ம் தேதி நீக்கப்பட்ட பிறகு, சர்தார் படேல் குருஜி அவர்களுக்கு எழுதிய கடிதம் தெள்ளத் தெளிவாக உரைக்கிறது:
 ‘’சங்கத்தின் மீதான தடை உயர்த்தப்பட்ட பின்னர், எனக்கு எத்தனை மகிழ்ச்சி ஏற்பட்டது என்பது எனக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டும் தான் தெரியும். உங்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்”.

நெஞ்சில் நேர்மை இருக்கும் யாரும், உண்மையை உரைக்கும் யாரும், சர்தார் படேலுக்கும், குருஜி கோல்வால்கருக்கும் இடையிலான முழு கடிதப் பரிவர்த்தனையையும் குறிப்பிட்டிருப்பார்களேயல்லாது, தனக்கு தோதானவற்றை மாத்திரம் மேற்கோள் காட்டியிருக்க மாட்டார்கள். மனீஷ் திவாரியும் அவரைப் போன்றோரும் அவிழ்த்து விடும் புளுகு மூட்டைகளையும் புனைவுகளையுமே இது தெளிவாக வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

o    ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு அவதூறு கற்பிக்க, தொடரும் காங்கிரஸ் செய்யும் முயற்சிகள் இத்தனை நேரடி ஆதாரங்கள் இருப்பினும், காங்கிரஸ் இதை முடிக்கவில்லை. 1966ல், நேருவின் மகள், இந்திரா காந்தி, ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி JL Kapur அவர்கள் தலைமையிலான ஒரு குழுவை நியமித்தார். இது 100க்கும் மேற்பட்ட சாட்சியங்களை விசாரித்து, 1969ம் ஆண்டு தனது அறிக்கையை சமர்ப்பித்தது. கபூர் குழுவின் அறிக்கைப்படி, “ஆர்.எஸ்.எஸ். காந்தியடிகளின் படுகொலைக்கு பொறுப்பானது அல்ல, அதாவது அந்த இயக்கத்தை, அமைதித் தூதர் மீதான, இந்த மிக பயங்கரமான குற்றத்துக்கு பொறுப்பானது ஆக்க முடியாது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆர்.எஸ்.எஸ்ஸின் உறுப்பினர்கள் என்று நிரூபிக்கப் படவில்லை”.

தடையுத்தரவு நீக்கப்பட்ட பின்னர் ஆற்றிய உரைகளில், குருஜி அவர்கள், தனது பெருந்தன்மையாலும், நிதான மனத்தாலும், சங்க அங்கத்தினர்களுக்கும் அப்பாற்ப்பட்டு, அது சாராத மக்கள் மனதிலும் இடம் பிடித்தார். ‘நாம் சங்கத்தின் மீதான இந்த அத்தியாயத்தை மூடி விடலாம்’ என்று அவர் ஸ்வயம்சேவகர்களுக்கும், ஆர்.எஸ்.எஸ் அனுதாபிகளுக்கும் கூறினார். ‘உங்களுக்கு நீதி இழைக்காதவர்கள் மீது, காழ்ப்புணர்வு மேலோங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். பற்கள் நாக்கை கடித்து விட நேர்ந்தால், பற்களைப் பிடுங்கியா விடுகிறோம்? நமக்கு அநீதி இழைத்தவ்ர்களும் கூட நம்மவர்களே. ஆகையால் நாம் மறக்க வேண்டும், மன்னிக்க வேண்டும்.’’

இந்தக் கூற்றை, தன்னை எதிர்த்தவர்கள் அனைவரையும் ஓரம் கட்டிய நேருவின் கீழ்த்தரமான, பொறாமை நிறைந்த மனப்பாங்கோடு ஒப்பிட்டுப் பாருங்கள்; எந்த அளவுக்கு என்றால், 15 காங்கிரஸ் கமிட்டிகளில் 12 கமிட்டிகள், நேருவுக்கு எதிராக தங்கள் பிரதமர் தேர்வில் சர்தாரை தேர்வு செய்த போது, நேரு காந்தியடிகளுக்கு நெருக்கடி கொடுத்துப் பணிய வைத்தார்.

நேருவும் சரி, அவரது மகள் இந்திரா காந்தியும் சரி, ஆர்.எஸ்.எஸ்ஸை காந்தி படுகொலையில் தவறாக குற்றம் சாட்ட நினைத்தார்கள். நேருவின் கொள்ளுப் பேரனான ராகுல் காந்தியும் ‘’காந்தியக் கொன்றவர்கள்’’ என்பதைக் கிளிப்பிள்ளை ஒப்பிப்பது போல ஒப்பிக்கிறார். தங்கள் முயற்சிகளில் தோல்வி அடைந்த காங்கிரஸ் தலைவர்களும், கம்யூனிஸ்டுகளும், வாக்குகளை சேகரிக்கும் கீழ்த்தரமான முயற்சியிலும், நாட்டில் ஸ்திரத்தன்மை ஏற்படாமல் இருக்கவும், அவ்வப்போது ஹிந்து மதவாதம் என்ற பூதத்தை தட்டி எழுப்புவார்கள். 
 இப்போது ஒரே வித்தியாசம் என்னவென்றால், நாடு அவர்கள் புரட்டை இனம் கண்டு கொள்கிறது என்பது தான்.

இணைப்பு:
இணைப்பு A - ஆர்.எஸ்.எஸ். மீதான தடை பற்றி மேலும் தகவல்கள்
காந்தியடிகளின் படுகொலை சம்பந்தமாக ஆர்.எஸ்.எஸ். மீதான தடை மீது மேலும் கவனம் செலுத்தப்பட வேண்டும். காந்தியடிகளின் படுகொலையில் ஆர்.எஸ்.எஸ் சம்பந்தப்படவில்லை என்பதில் சர்தார் படேல் உறுதியாக நம்பினார். இந்த உண்மை படேலுக்கும் நேருவுக்கும் இடையிலான கடிதப் பரிமாற்றத்தில் தெளிவாகத் தெரிகிறது. இந்த வழக்கில் ஆர்.எஸ்.எஸ்ஸின் தொடர்பை தெரிந்து கொள்ள பிரதமர் எழுதிய கடிதத்துக்கு, காந்தியடிகள் படுகொலை நடந்த ஒரு மாதத்துக்குள்ளாக, படேல் 27 ஃபிப்ரவரி 1948ம் ஆண்டு தெளிவான பதிலை அனுப்பினார்: நான் பாபுவின் படுகொலை வழக்கு தொடர்பான ஆய்வுகளின் முன்னேற்றம் குறித்து கிட்டத்தட்ட தினசரி அளவில் கண்காணித்து வருகிறேன். தங்கள் செயல்பாடுகள் குறித்து, பிரதானமாக குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் நீண்ட மற்றும் விவரமான விளக்கங்கள் அளித்திருக்கிறார்கல். அவர்களின் கூற்றுக்களிலிருந்து, இதில் ஆர்.எஸ்.எஸ்ஸின் தொடர்பு இல்லவே இல்லை என்பது தெளிவாகிறது’.

ஆகையால், நேருவின் வற்புறுத்தல் பேரிலும், பின்னர் வெளிவந்த சில மாகாணத் தலைவர்கள் அளித்த கற்பனையான தகவல்கள் தாம், ஆர்.எஸ்.எஸ் மீதான தடையை படேலைப் பிறப்பிக்கத் தூண்டியது.

குருஜி அவர்கள் மீண்டும் நவம்பர் மாதம் 13ம் தேதி 1948ம் ஆண்டு, அவப்பெயர் பெற்ற பெங்கால் மாகாணக் கைதிகள் சட்டத்தின் படி கைது செய்யப்பட்டார். இதே சட்டத்தைத் தான் சுதந்திரத்துக்கு முன்பாக நேரு ‘’கருப்புச் சட்டம்’’ என்று சாடியிருந்தார். அவரது கைதுக்கு பிறகு உடனடியாக குருஜி அவர்கள் அனைத்து ஸ்வயம் சேவகர்களுக்கும் எழுதிய கடிதத்தில், ‘’தற்போது இருக்கும் நிலை மிகவும் அவமானகரமாக இருக்கிறது. இந்த கொடுமையான அடக்குமுறைக்கு எந்த எதிர்ப்பும் இல்லாமல் அடிபணிவது என்பது சுதந்திர பாரதத்தின் குடிமக்களுக்கு இழைக்கப்பட்ட அவமானம், நமது நாகரீகமான சுதந்திர நாட்டின் கௌரவத்துக்கு இழுக்கு. ஆகையால் நமது மகத்தான நோக்கத்துக்காக உங்கள் அனைவரையும் எதிர்ப்பைத் தெரிவிக்க விண்ணப்பிக்கிறேன்’’.

அவர் டிஸம்பர் மாதம் 9ம் தேதி 1948ம் ஆண்டு நாடுதழுவிய சத்தியாகிரஹத்துக்கான அழைப்பை விடுத்தார். சத்தியாகிரஹத்தில் ஈடுபட்டவர்களின் முக்கியமான கோஷம், நேரு அரசுக்கு நேரடி சவாலாக அமைந்தது: ‘’ஆர்.எஸ்.எஸ் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபியுங்கள் அல்லது தடையை நீக்குங்கள்’’. நாடு முழுவதிலும் சத்தியாகிரஹம் பெரு வெற்றியைப் பெற்றது. குருஜி அவர்களின் சட்ட விரோதமான கைதுக்கு எதிராக பொது மக்கள் கருத்து அதிகரித்து வருவது அரசு உணர்ந்தது. ஆகையால் இந்த இக்கட்டிலிருந்து மீள, படேல் குருஜி அவர்களுக்கு எழுதிய கடிதத்தில், ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு ஒரு எழுத்து பூர்வமான சட்ட அமைப்பை ஏற்படுத்தி, அதை அரசின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கக் கோரினார். அது நாள் வரையில் ஆர்.எஸ்.எஸ் எந்த ஒரு சட்ட அமைப்பும் இல்லாமல் செயல்பட்டு வந்தது. குருஜி அவர்கள் இந்த ஆலோசனைக்கு உடனடியாக சம்மதம் தெரிவித்து, ஜூன் மாதம் 1949ம் ஆண்டு அதை அரசின் பார்வைக்கு அனுப்பி வைத்தார். இது ஜூலை மாதம் 12ம் தேதி 1949ம் ஆண்டு, ஆர்.எஸ்.எஸ் மீதான தடையுத்தரவை நீக்க வழி செய்தது, அடுத்த நாளே குருஜியும் விடுதலை செய்யப்பட்டார்.

இது தொடர்பான மேலும் ஒரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால், தடையுத்தரவு நீக்கப்பட்ட பிறகு ஆகஸ்ட் மாதம் 1949ம் ஆண்டு குருஜி நாடு தழுவிய சுற்றுப் பயணத்தை, 6 மாத காலம் வரை மேற்க்கொண்டார். அவர் எங்கே சென்றாலும், அவருக்கு ஆரவாரமான வரவேற்பு நல்கப்பட்டது. ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி 1949ம் ஆண்டு அவருக்கு தில்லியில் கிடைத்த பிரம்மாண்டமான வரவேற்பு சர்வதேச கவனத்தைக் கவர்ந்தது. BBC ரேடியோ, ‘’கோல்வல்கர் என்ற பிரகாசமான நட்சத்திரம் இந்திய வானில் உதித்திருக்கிறது. அவருக்கு இணையாக மிகப் பெரிய கூட்டங்களை ஈர்க்கக் கூடியவர் பிரதமர் நேரு’’ என்று அறிவித்தது.

ஏன் நேரு ஆர்.எஸ்.எஸ் மீது தடை விதிக்க குறியாக இருந்தார் என்பதை விளக்குகிறது. தனக்கு ஆர்.எஸ்.எஸ்ஸிடமிருந்து அரசியல் ரீதியான ஆபத்தை அவர் எதிர்பார்த்தார்.

ஆர்.எஸ்.எஸ் மீதான தடை விலக்கல், எந்த நிபந்தனைகளும் இல்லாதது என்பதற்கான அரசியலமைப்பு ரீதியான சான்று.

ஆர்.எஸ்.எஸ் நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்ற பிரச்சாரத்துக்கு, இதோ ஒரு கடைசி சான்று. 1949ம் ஆண்டு அக்டோபர் மாதம் 14ம் தேதி, தடையுத்தரவு நீக்கப்பட்ட பின்னர் பாம்பே சட்டப்பேரவை நிகழ்ச்சிகள்:

லல்லுபாய் மக்கன்ஜி படேல் அவர்கள் - உள்துறை மற்றும் வருவாய்த் துறையின் மாண்புமிகு அமைச்சர் கீழ்க்கண்ட கேள்விகளுக்கு பதில்கள் அளிக்க கோருகிறேன்:-
1.    ஆர்.எஸ்.எஸ் மீதான தடை நீக்கப்பட்டது உண்மையா.
2.    நீக்கப்பட்டது என்றால், தடையுத்தரவு நீக்கப்பட்டதன் காரணங்கள்
3.    தடை நீக்கம் நிபந்தனைகளுக்கு உட்பட்டதா, நிபந்தனையற்றதா.
4.    நிபந்தனைக்கு உட்பட்டது என்றால், நிபந்தனைகள் என்ன
5.    ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைவர் ஏதாவது உறுதி மொழி அளித்திருக்கிறாரா. .

மொரார்ஜி ஆர். தேசாய்க்காக, தினகர்ராவ் தேசாய் அளித்த பதில்கள்
1.    ஆம்
2.    அதைத் தொடரத் தேவையில்லாமல் போனது
3.    நிபந்தனைகள் அற்றது
4.    அதற்கான கேள்வியே எழவில்லை
5.    இல்லை

ஆகையால் ஆர்.எஸ்.எஸ் மீதான தடையை 1948ம் ஆண்டு நீக்கப்பட்டது எந்தநிபந்தனைகளும் அற்றது என்பதும், அந்த இயக்கமும் அதன் ஸ்வயம் சேவகர்களும் தவறாக குற்றம் சாட்டப்பட்டார்கள் என்பதும் தெளிவாகிறது.


No comments: