பாரதி பயிலகம் வலைப்பூ

Sunday, November 24, 2013

டி.பி.ராஜலட்சுமி நூற்றாண்டு விழா

                          திரையுலகில் சாதனை படைத்த 
டி.பி.ராஜலட்சுமி அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு நூலை வெளியிடுகிறார் தமிழ்ப்பல்கலைக்கழக நூலக முன்னாள் இயக்குனர் திரு தி.பத்மநாபன், நூலைப் பெற்றுக் கொள்பவர் தஞ்சை மாவட்ட நாணயவியல் குழுமம் தலைவர் நல்லாசிரியர் திரு துரைராசு அவர்கள். உடன் இருப்போர்: பாரதி இலக்கியப் பயிலக இயக்குனர் தஞ்சை வெ.கோபாலன், டி.பி.ராஜலட்சுமியின் மகள் டி.எஸ்.கமலா, தமிழ்ப் பல்கலைக்கழக நாடகத்துறை முன்னாள் தலைவர் திரு இராமானுஜம், கலை பண்பாட்டுத் துறை துணை இயக்குனர் திரு இரா.முத்து, பாரதி இயக்கம் திரு முத்துக்குமார் ஆகியோர்.

                       டி.பி.ராஜலட்சுமி நூற்றாண்டு விழா

திரையுலகின் முதல் மெளனப் படக் கதாநாயகி, முதல் பெண் இயக்குனர், தேசபக்தர், சமூக ஆர்வலர் எனப் பன்முகப் பரிமாணம் கொண்ட டி.பி.ராஜலட்சுமியின் நூற்றாண்டு விழா திருவையாறு பாரதி இயக்கம் தில்லைத்தானம் மரபு பவுண்டேஷன் ஆகியவை சார்பில் திருவையாற்றில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு கலை பண்பாட்டுத் துறை துணை இயக்குனர் இரா.முத்து தலைமை தாங்கினார். தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழக நூலகத்துறை மேனாள் இயக்குனர் தி.பத்மநாபன் டி.பி.ராஜலட்சுமி பற்றி வெ.கோபாலன் தொகுத்த நூலை வெளியிட்டுப் பேசினார். நூலின் முதல் பிரதியை தஞ்சை நாணயவியல் குழுமத்தின் தலைவர் நல்லாசிரியர் துரைராஜ் பெற்றுக் கொண்டார். தி.பத்மநாபன் தன்னுடைய பேச்சில் இதுவரை தமிழ் நாட்டில் வெளியான திரைப்படங்களின் பட்டியலும், அத்தனைப் படங்களின் பாட்டுப் புத்தகங்களைத் தான் பாதுகாத்து வருவதாகவும் தெரிவித்தார். இரண்டாம் உலக யுத்தம் தொடங்கிய காலத்தில் தேசபக்தியை ஊட்டும் திரைப்படமொன்றை டி.பி.ராஜலட்சுமி எடுத்ததாகவும், அரசாங்கம் தடைசெய்யும் எனும் நிலை இருந்த போதும் துணிச்சலாக அந்தத் திரைப்படத்தை அவர் வெளியிட்டார் எனவும் அவர் தெரிவித்தார்.

தமிழ்ப் பல்கலைக் கழக நாடகத்துறையின் மேனாள் தலைவர் பேராசிரியர் சே.இராமானுஜம் டி.பி.ராஜலட்சுமியின் நாடகத்துறை, திரைத்துறையின் பங்களிப்பை விரிவாக எடுத்துரைத்தார். டி.பி.ராஜலட்சுமி ஒரு திரைப்பட நடிகையாக, கதை, திரைக்கதை, பாடல்கள், இயக்கம் என எல்லா துறைகளிலும் பரிணமித்தது போலவே சமூகப் பிரச்சினைகளிலும் அக்கறை காட்டினார் என்றார் அவர். அவர் காலத்தில் பரவலாக நிலவி வந்த பால்ய விவாகத்தை இவர் கடுமையாக எதிர்த்து வந்திருக்கிறார். பெண் சிசுக் கொலையை இவர் கண்டித்ததோடு மட்டுமல்ல, அப்படியொரு பெண் குழந்தையைத் தானே எடுத்து வளர்த்து, படிக்க வைத்துத் திருமணமும் செய்து வைத்ததாகக் கூறினார். நூறு ஆண்டுகளுக்கு முன்பு பெண் ஒருவர் தனியாக இந்த சமூகத்தில் சாதனைகளைப் புரிந்து தலை நிமிர்ந்து நின்றிருக்கிறார் என்பதே பெண்களுக்குப் பெருமை சேர்க்கும் செயலாகும் என்று இராமானுஜம் குறிப்பிட்டார்.
                            
                 டி.பி.ராஜலட்சுமி அவர்களின் மகள் கமலா அவர்களைப் பாராட்டி நினைவுப் பரிசை வழங்குகிறார் தமிழக அரசின் முன்னாள் வணிகவரித்துறை அமைச்சர் திரு சீ.நா.மீ.உபயதுல்லா அவர்கள். டி.எஸ்.கமலாவைச் சுற்றி நிற்பவர்கள் அவரது மகன் திரு ராகவன், மருமகள், பேரப்பிள்ளைகள் ஆகியோர். படத்தில் மற்றவர்கள் பாரதி இலக்கியப் பயிலக இயக்குனர் தஞ்சை வெ.கோபாலன், தமிழ்ப்பல்கலைக்கழக நாடகத்துறை முன்னாள் தலைவர் திரு இராமானுகம், தமிழ்ப்பல்கலைக்கழக நூலகத்துறை முன்னாள் இயக்குனர் திரு டி.பத்மநாபன், கலை பண்பாட்டுத்துறை துணை இயக்குனர் திரு இரா.முத்து, பாரதி இயக்கத் தலைவர் திரு நீ.சீனிவாசன் ஆகியோர்.


சாதனைப் பெண்மணி டி.பி.ராஜலட்சுமியின் மகள் கமலா மணியைப் பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசினை வழங்கி முன்னாள் அமைச்சர் சீ.நா.மீ.உபயதுல்லா சொற்பொழிவாற்றினார். டி.பி.ராஜலட்சுமி பிறந்த 11.11.1911 என்ற நாளே ஒரு புதுமையைக் காட்டுகிறது என்றார் அவர். அவர் காலத்திய பல நடிகைகள் இன்று நினைவில் இல்லாதபோதும் டி.பி.ராஜலட்சுமி முதல் பெண் நடிகை, பாடலாசிரியர், இயக்குனர் என்பது பெருமைதரக் கூடிய சாதனை என்றார் அவர். புராணப் படமொன்றில் மார்பு கச்சை அணிந்து நடிக்கவேண்டுமென்ற நிலை வந்தபோது தான் அப்படி நடிக்க இயலாது, ரவிக்கை அணிந்துதான் நடிப்பேன், இல்லையேல் இந்த வாய்ப்பே எனக்கு வேண்டாம் என்று மறுத்து தமிழ் இனத்தின் மானத்தைக் காத்த வீரப்பெண்மணி டி.பி.ராஜலட்சுமி என்றார் அவர்.

பாராட்டுகளுக்கு நன்றி தெரிவித்துப் பேசிய டி.பி.ராஜலட்சுமியின் ஒரே மகளான கமலா மணி, திருவையாற்றில் பிறந்த என் தாய் திரையுலகில் பெரும் புகழோடு வாழ்ந்த காலத்தை அவருடைய நூற்றாண்டு விழா நேரத்தில் திருவையாற்று அன்பர்கள் பாராட்டி நினைவு கூர்ந்தமைக்கும், நீங்கள் எனக்களித்துள்ள இந்த பாராட்டுக்கும் நான் எங்கள் குடும்பத்தினரின் இதயம் நெகிழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். தன்னுடைய தாயின் திரையுலகப் பணியைப் பாராட்டி அவருடைய 75ஆம் ஆண்டு நிறைவு விழா சமயத்தில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் ஒரு பாராட்டு விழா நடந்ததையும், நூற்றாண்டு விழாவை தமிழக மக்களின் சார்பில் தமிழக அரசு ஒரு பிரம்மாண்ட விழா நடத்தி பாராட்டியதையும் கமலா மணி நினைவு கூர்ந்தார். தன் தாய் 1964இல் காலமாகிவிட்டதால் அவர் சம்பந்தப்பட்ட பல ஆவணங்கள் தங்களிடம் இல்லை, அவர் நடித்த படங்கள், அந்த படங்கள் சம்பந்தப்பட்ட பாட்டுப் புத்தகங்கள், புகைப்படங்கள் ஆகியவை இருந்தால் அவற்றை எங்களுக்கு அளித்தால் அவற்றை ஆவணப்படுத்த ஏதுவாக இருக்குமென்றார் அவர். திருவையாறு பாரதி இயக்கம், தில்லைத்தானம் மரபு பவுண்டேஷன், இங்கு வந்து பாராட்டிய பெரியோர்கள், விழாவில் கலந்துகொண்ட அன்பர்கள் அனைவருக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவர் சார்பிலும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார் கமலா.

முன்னதாக விழாவுக்கு வந்திருந்தவர்களை வரவேற்று உரையாற்றினார் பாரதி இலக்கியப் பயிலக இயக்குனர் வெ.கோபாலன். டி.பி.ராஜலட்சுமி பற்றிய வரலாற்றுச் செய்திகளையும், அவர் நடித்த சில திரைப்படக் காட்சிகளையும் பாரதி இயக்கம் ஆவணப்படுத்தி திரையிட்டது. விழாவில் தேனிசைச் செல்வன் ராஜாஸ்ரீவர்ஷன் குழுவினரின் பழைய திரையிசைப் பாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

பாரதி இயக்கத்தின் தலைவர் நீ.சீனிவாசன் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை வழக்கறிஞர் நா.பிரேமசாயி, நீ.சீனிவாசன், பாரதி இலக்கியப் பயிலகத்தின் இயக்குனர் வெ.கோபாலன், பாரதி இயக்க அறங்காவலர் ப.இராஜராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.


1 comment:

துரை செல்வராஜூ said...

நூறு ஆண்டுகளுக்கு முன்பு பெண் ஒருவர் தனியாக இந்த சமூகத்தில் சாதனைகளைப் புரிந்து தலை நிமிர்ந்து நின்றிருக்கிறார் என்பதே பெண்களுக்குப் பெருமை!..

டி.பி.ராஜலட்சுமி அவர்களுக்கு மேலும் சிறப்புகள் செய்யப்படவேண்டும்.