பாரதி பயிலகம் வலைப்பூ

Friday, November 1, 2013

சிகண்டி

"விஜயபாரதம்" இதழின் தீபாவளி மலரில் வெளியாகியிருக்கிற என்னுடைய கதை இந்த "சிகண்டி" அதை படிக்கமுடியாதவர்களுக்காக இதை இங்கு தருகிறேன்.
                                         நன்றி: "விஜயபாரதம்"
                                                
                                          
                             சிகண்டி
                                           தஞ்சை வெ.கோபாலன்

மகாபாரதப் போர் எட்டு நாட்கள் முடிந்து விட்டன. ஒன்பதாம் நாள் போர் துவங்கியது. முந்தைய எட்டு நாட்கள் நடந்ததை விட இன்று யுத்தம் மிகக் கடுமையாகவே தொடங்கியது. கெளரவர் படைகளுக்கு பீஷ்மர்தான் தலைமை வகித்து நடத்துகிறார். முதல் எட்டு நாள் போரைச் சற்று மனக் கண் முன்னால் கொண்டு வந்து பார்க்கிறார்.

அந்த குருக்ஷேத்திர போர்க்களம் நிரம்பி வழிந்தது. இரு புறத்திலும் ஏராளமான படைகள், ரத, கஜ, துரக பதாதிகள் என்று. எத்தனை வகைப்பட்ட வீரர்கள், எத்தனை யானைகள், எத்தனை குதிரைகள். இத்தனையும் இந்நாள் வரை எங்கு இருந்தன இன்று இந்த வீர பூமி சிவக்கும் தருவாயில் இவை அத்தனையும் இந்த மண்ணில் வெற்றி பெறவோ, வீர மரணம் அடையவோ வந்து குவிந்து கிடக்கின்றன.

குருக்ஷேத்திரப் போர் இந்தக் கால போர் முறைகளைப் போல அல்ல. அந்த யுத்தத்தை எப்படி நடத்துவது என்பதற்கு விதிமுறைகள் வகுக்கப்பட்டன. போர் பகலில்தான் நடக்கும். சூரியன் அஸ்தமனம் ஆனதும் அன்றைய போர் முடிவுக்கு வரும். இரவில் எதிரெதிர் படை வீரர்கள் ஒருவருக்கொருவர் சந்திக்கலாம், பேசலாம், உறவாடலாம். போரில் மோதுகின்ற வீரர்கள் சமபலம் கொண்டவர்களாக, சமநிலையில் ஆயுதங்களைத் தாங்கியவர்களாக இருத்தல் அவசியம். தர்ம நெறி பிறழாமல் போர் நடத்த வேண்டும். இப்படி எத்தனையெத்தனை கட்டுப்பாடுகள். குருக்ஷேத்திர யுத்தம் தர்மத்தை நிலைநாட்ட நடந்த யுத்தம் மட்டுமல்ல, தர்ம மார்க்கத்தோடு நடத்தப்பட்ட யுத்தமும்கூடத்தான்.

போர் நடப்பதறிந்து திருதராஷ்டிரன் ஆவலோடு காத்திருந்தான். அப்போது வியாச பகவான் அவன் முன்பு தோன்றி, கண் இல்லாத திருதராஷ்டிரன் நடக்கப் போகும் போரைக் காண விரும்பினால் பார்வை தர முன்வந்தார். ஆனால் அவனோ அந்தப் போர்க்காட்சிகளை காணவிரும்பவில்லை என்றும், போர் நடக்கும் விவரங்களை யாராவது தனக்குத் தெரிவித்திட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டதற்கிணங்க கண்ணன் சஞ்சயனுக்கு ஞானதிருஷ்டியைக் கொடுத்து, அதன் மூலம் அவன் காணும் காட்சிகளை மன்னனுக்கு விளக்கிடவேண்டுமென்று பணித்தான்.

தன் பாட்டனாரையும், குருநாதர்களையும், உறவினர்களையும் எதிர் வரிசையில் பார்த்துவிட்டுப் போரிட தயங்கி வில்லைக் கீழே நழுவ விட்டான் அர்ச்சுனன். அவனுக்கு கிருஷ்ண பரமாத்மா தர்மத்தை உபதேசம் செய்து போரின் தர்மத்தை எடுத்துரைத்தான். பகவத் கீதை பிறந்தது. முதல் நாள் யுத்தம் தொடங்கியது. போர் உடைகளைக் களைந்துவிட்டு பாட்டனார் பீஷ்மரை வணங்கி ஆசி பெறுகிறான். இது கண்டு துரியோதனன் கெக்கெலி கொட்டிச் சிரிக்கிறான், தருமனை கோழை என இகழ்கிறான்.

பாட்டனை விழுந்து வணங்கிய தருமன் சொல்கிறான், "என் மரியாதைக்குரிய பாட்டனே! உன்னை எதிர்த்துப் போரிடும் நோக்கம் எனக்கில்லை. தர்மமோ என் பக்கம் இருந்து அதர்மத்தை எதிர்த்துப் போர் புரியத் தூண்டுகிறது. அதர்மம் அழிய, தர்மம் தலைதூக்க நான் போரிட்டு வெற்றிபெற தங்கள் ஆசி தேவை" என்கிறான். 

பீஷ்மர் சொல்கிறார், "தருமா! அரச தர்மத்துக்கேற்ப நான் கெளரவர் சார்பில் போரிட கடமைப் பட்டிருக்கிறேன். ஆனால் தர்மம் உன் பக்கம் இருக்கிறது. தர்மமே வெற்றி பெறும். போரில் தர்மத்தின் பக்கம் இருக்கும் நீயே வெற்றி பெறுவாய். அதோடு கிருஷ்ணனும் உனக்குத் துணை இருக்கிறான், போய் வா, வெற்றி உனக்கே" என்றார் பீஷ்மர்.

அப்போது யுதிஷ்டிரன் சாமர்த்தியமாக ஒன்றை பீஷ்மரிடம் கேட்கிறான். "ஐயனே! யாராலும் வெல்ல முடியாத தங்களை வென்றால் அல்லவா, நாங்கள் வெற்றி பெற முடியும்? அப்படியிருக்க நாங்கள் வெற்றி பெறுவோம் என்று சொல்வது எப்படிப் பொருந்தும்?" என்கிறான் தருமன்.

"இதற்கு என்னால் இப்போது விடையளிக்க இயலாது தருமா. வருவது வரட்டும் என்று போரிடு" என்கிறார் பீஷ்மர். தருமனும் பாட்டனை வணங்கி விடைபெற்றுக் கொண்டு எதிரணியில் இருக்கும் தன் குருநாதரான துரோணரைப் போர்க்களத்தில் கண்டு வணங்கிவிட்டுச் சொல்கிறான், "குருதேவா! எனக்கு வித்தைகள் கற்றுக்கொடுத்த தங்களை எதிர்த்துப் போரிடுவதில் எனக்கு விருப்பம் இல்லை. ஆனாலும் என்னுடைய ராஜ தர்மம் இது. தர்மத்தைக் காக்க இந்தப் போர், ஆகவே தங்கள் ஆசியை வேண்டுகிறேன்" என்கிறான் தருமன்.

"யுதிஷ்டிரா! நற்குடிப்பிறந்த உன் நாவில் நல்ல சொற்களே வந்திருக்கின்றன. நம்முடைய சூழ்நிலை நம்மை எதிர் எதிரே நிறுத்தியிருக்கிறது. நாம் இருவருமே நம் சக்தியையும் திறமையையும் முழுதுமாகப் பயன்படுத்திப் போரிடவேண்டும். யார் பக்கம் தர்மம் இருக்கிறதோ அவர்களுக்கு வெற்றி நிச்சயம். போய் வா தர்மா!" என்கிறார் துரோணர்.

"குருநாதா! தங்களை வெல்வது யாருக்கும் எளிதல்லவே. அப்படியிருக்க தர்மம் என் பக்கம் இருந்தாலும் வெற்றி பெறுவது எங்ஙனம்?" என்றான் தருமன்.

அதற்கு துரோணர் சொல்கிறார், "என் கையில் ஆயுதமேந்தி போரிடுகிறேனென்றால் என்னை வெல்வது என்பது இயலாது. அந்த ஆயுதத்தை நான் தூர எறிந்துவிட்டால் என்னை வெல்லலாம். அப்படி நான் ஆயுதத்தைத் தூர எறியும்படியான துக்கம் எனக்கு ஏற்படுமானால் என்னை வெல்வது எளிது தர்மா" என்றார் குருநாதர். இப்படி பீஷ்மரிடமும், துரோணரிடம், வெல்ல முடியாத இவ்விரு வீரர்களிடமே அவர்கள் வீழ்ச்சியடைய வழிமுறைகளைக் கேட்டுத் தெரிந்து கொண்டனர் பாண்டவர்கள். அதன்படியே கிருஷ்ணனின் தூண்டுதலால் துரோணரின் புதல்வன் அஸ்வத்தாமன் போரில் இறந்து விட்டது போன்ற செய்தியை அவன் பெயரால் இருந்த ஒரு யானையைக் கொன்றுவிட்டு "அஸ்வத்தாமன் எனும் யானை இறந்தது" என தர்மனைவிட்டுச் சொல்லச் சொல்லி, இந்த வாக்கியத்தில் "எனும் யானை" என்பது துரோணர் காதில் விழாதபடிக்கு கிருஷ்ணன் தன் பாஞ்சஜன்யத்தை எடுத்து ஊதி அவருக்குத் தன் மகன் மாண்டுவிட்டதாக எண்ணும்படி சூழ்ச்சி செய்து அவரை வீழ்த்தியதைப் படித்திருக்கிறோம்.

தவிரக்கமுடியாத நிலையில் மாபாரத யுத்தம் துவங்கிவிட்டது. முதல் நாள் யுத்தம் நடந்தது. வாத்தியங்களின் ஒலியும் பறைகளின் ஓசையும், யானைகளின் பிளிறல்களும், குதிரைகளின் கனைப்புகளும் காற்றில் கலந்தன. வீரர்களின் வீர வாசகங்கள் விண்ணைப் பிளந்தன. வீராதி வீரர்கள் ஒருவரோடொருவர் மோதிக் கொண்டதில் வீரபூமி அதிர்ந்தது. 

இரண்டாம் நாள் யுத்தம் பாண்டவர் தளபதி திருஷ்டத்யும்னனின் தலைமையில் துவங்கியது. ஆச்சார்யார் துரோணருக்கும் திருஷ்டத்யும்னனுக்கும் கடுமையான யுத்தம். தொடர்ந்து போர் மூன்றாம் நாள், நான்காம் நாள் என்று நடந்து கொண்டிருந்தது. இப்படி ஒன்பதாம் நாள் யுத்தம் துவங்கியது. பீஷ்மருக்கு யுத்தம் யாருக்கும் வெற்றி தோல்வி இல்லாமல் இங்கும் அங்குமாக நடந்து கொண்டிருப்பது வருத்தத்தைத் தந்தது.

இதுவரை நடந்த யுத்தத்தைக் காட்டிலும் இந்த ஒன்பதாம் நாள் யுத்தம் கடுமையாக இருந்தது. பீஷ்மர் நாலா புறங்களிலும் படைகளை வியூகங்கள் அமைத்து போரிடச் செய்தார். பாண்டவர்களும் அவருடைய வியூகத்தை உடைத்து உட்புக முனைப்புக் காட்டி போர் புரிந்தனர். போர்க்களத்தில் துரோணரின் புதல்வன் அஸ்வத்தாமனுக்கும் சாத்யகிக்குமிடையே கடுமையான போர். துரோணருக்கும் அர்ஜுனனுக்குமிடையே நேரடி யுத்தம். பீஷ்மர் ஆட்டுக் கூட்டத்திடையே புகுந்த சிங்கம் போல கர்ஜனை செய்து கொண்டு உட்புகுந்தார். பாண்டவ சகோதரர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டு போர் புரிந்தனர். எத்தனை பேர் எதிர்த்துப் போரிட்டாலும் அவர்கள் அத்தனை பேரையும் சமாளித்தார் பீஷ்ம பிதாமகர்.

இந்த நேரத்தில் எதற்கும் அசையாமல் போர் புரிந்த பீஷ்மரை ஒழித்துவிட கிருஷ்ண பரமாத்மா தன் கையில் சக்ராயுதத்தை எடுத்தார். இதைக் கண்ட பீஷ்மர் இரு கரம் குவித்து கிருஷ்ணனைப் பார்த்து, "பரந்தாமா! நல்ல காரியம் செய். என்னை இந்தப் பிறவியிலிருந்து விடுதலை செய். உன் சக்ராயுதத்தை ஏவி என்னை இவ்வுடலிலிருந்து விடுவித்து விடு!" என்றார்.

அப்போது அர்ஜுன்னன் கிருஷ்ணனிடம் தான் இந்தப் போரில் ஆயுதம் எடுத்துப் போரிடுவதில்லை என்று பிரதிக்ஞை செய்திருப்பதை நினைவு படுத்தவே கிருஷ்ணன் தயங்க, அப்போது சூரியன் அஸ்தமிக்க அன்றைய போரும் ஓய்ந்தது. அவரவர் பாசறைகளில் கூடி ஆலோசனை நடத்தினார்கள். பீஷ்மரை களத்திலிருந்து அப்புறப்படுத்தினாலன்றி பாண்டவர் வெற்றி பெறுவது இயலாது என்று பாண்டவ சகோதரர்கள் அபிப்பிராயம் தெரிவித்தனர். பீஷ்மரைக் கொல்வது என்பது கிருஷ்ணனைத் தவிர வேறு யாராலும் ஆகாது. கிருஷ்ணனோ போரில் ஆயுதம் ஏந்துவதில்லை என்ற முடிவில் இருக்கிறான் என்ன செய்வது?

வேறு வழியில்லை. இதற்கு எது சரியான மார்க்கம் எது என்பதை அவரே சொன்னால்தான் உண்டு என்று அன்றிரவு பாண்டவர்கள் பீஷ்மரின் கூடாரத்துக்குச் சென்றனர். அவரிடம் தங்கள் ஐயத்தை வெளிப்படுத்தி அவரது ஆலோசனையைக் கேட்டனர். ஒருவரைத் தோற்கடிக்க அவரிடமே ஆலோசனை கேட்ட நிகழ்ச்சி உலக வரலாற்றில் வேறெங்காவது நடந்ததுண்டா?

பாண்டவர்களின் வேண்டுகோளை செவிமடுத்தபின் பீஷ்மர் சொல்வார், "அன்பிற்குரியவர்களே! என்னை போரில் வீழ்த்த இருவரால் முடியும். ஒருவன் ஸ்ரீ கிருஷ்ணன் மற்றொருவன் அர்ஜுனன். நான் ஆயுதம் தாங்கி நின்றாலும் என்னக் கொல்ல கிருஷ்ணனால் முடியும், ஆனால் அர்ஜுனனால் முடியாது. ஆனால் ஒரு ரகசியத்தை உங்களுக்குச் சொல்கிறேன், முடிந்தால் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நான் ஆயுதம் தாங்கி போரிடுகையில் ஒரு பெண்ணோ அல்லது பேடோ என்னை எதிர்த்தால் என் ஆயுதங்கள் பயனளிக்கமாட்டா" என்றார் பீஷ்மர்.

மறுநாள் பத்தாம் நாள் யுத்தம் தொடங்கியது. இருவேறு வியூகங்களை எதிரெதிர் அணியினர் வகுத்துக் கொண்டு போரிடத் துவங்கினர். அன்று பாண்டவர்களை முன்னின்று படைநடத்தியது சிகண்டி. யார் இந்த சிகண்டி? அதைத் தெரிந்து கொள்ள பூர்வ வரலாறு ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும். 

பீஷ்மரின் தந்தையான சந்தனு மகாராஜா கங்கையை மணந்து கொள்ள விரும்பிய போது அவள் சில நிபந்தனைகளை விதித்தாள். தான் எது செய்தாலும் அதை ஏன்? எதற்கு? என்று மன்னன் கேட்கக்கூடாது என்பது அது. அவளுக்கு வரிசையாகக் குழந்தைகள் பிறக்க அவற்றை அவள் கங்கையில் கொண்டு விட்டுவிடுவாள். கடைசியில் ஒரு குழந்தையை அப்படி ஆற்றில் விடும்போது சந்தனு ஏன் என்று தடுக்கிறார். நிபந்தனையை மீறிவிட்டதாகக் கூறி தன் செயலுக்கு விளக்கம் அளித்துவிட்டு அந்த குழந்தையையும் மன்னனிடம் கொடுத்துவிட்டு மறைந்து விடுகிறாள் கங்கை. அந்த மகனே தேவவிரதன் எனும் பீஷ்மன். 

பின்னாளில் சந்தனு சத்தியவதி என்பவரை மணம் செய்து கொள்ள விரும்பியபோது அவள் தந்தை விதித்த நிபந்தனையின்படி சத்தியவதியின் பிள்ளைகளே அரசுரிமை பெறுவார்கள் என்றும் தான் மன்னனாக ஆவதில்லை சத்தியவதிக்குப் பிறக்கும் பிள்ளைகளே அரசராவார்கள் என்றும், தன் மக்கள் விரும்பினால் என்ன செய்வது என்ற கேள்விக்கு பதிலளிக்கும் விதத்தில் தான் பிரம்மச்சாரியாகவே இருந்து விடுவதாகவும் பீஷ்மர் சத்தியம் செய்தபின் சந்தனு ராஜா சத்தியவதி திருமணம் நடக்கிறது. அவர்களுக்கு சித்திராங்கதன் விசித்திரவீரியன் எனும் இரு மகன்கள் பிறக்கிறார்கள். இந்த சித்திராங்கதன் ஒரு கந்தர்வனோடு போர் புரிந்து பிள்ளை இல்லாமல் மாண்டுபோகிறான், அதனால் அவன் தம்பி விசித்திரவீரியன் அரசனாகிறான். இவனுக்குத் திருமணம் செய்விப்பதற்காக காசி ராஜனின் மகள்களான அம்பை, அம்பிகை, அம்பாலிகை ஆகிய மூவருக்கும் சுயம்வரம் நடக்கிறது என்றறிந்து பீஷ்மர் தேரில் ஏறி சுயம்வர சபைக்குச் செல்கிறார். அங்கு பல தேசத்து மன்னர்கள் வந்து குவிந்திருக்க, இவர்களுக்கிடையே தன்னை பிரம்மச்சாரி என்று அறிவித்துக் கொண்ட பீஷ்மர் ஏன் வந்திருக்கிறார் என்ற குழப்பம்.

கூடியிருந்த இளவரசர்களின் வெறுப்பு ஒருபுறம் இருந்த போதும், அந்த மூன்று கன்னிகையரும்கூட அங்கு வந்து நின்ற வயதில் முதிர்ந்த பீஷ்மரைக் கண்டு ஒதுங்கிப் போய்விட்டனர். பீஷ்மர் அடிபட்ட வேங்கையாக ஆனார். அங்கு நின்றிருந்த அரசர்களைப் போருக்கழைத்து அனைவரையும் தோற்கடித்துவிட்டு அந்தப் பெண்களைத் தேரில் ஏற்றிக்கொண்டு அத்தினாபுரம் புறப்பட்டார். இதில் அம்பை என்பவளை செளபல தேசத்து மன்னன் சால்வன் என்பவன் காதலித்து மணம் புரிந்து கொள்ள விரும்பியிருந்தான். அவன் மட்டும் பீஷ்மரைத் தடுத்துப் போரிட்டான். அவனை பீஷ்மர் தோற்கடித்தார், அந்தப் பெண்களின் வேண்டுகோளுக்கிணங்க அவனை உயிரோடு போகவிட்டார்.

தான் கொண்டு வந்த அம்பை, அம்பிகை, அம்பாலிகை மூவரையும் தன் தம்பி விசித்திரவீரியனுக்குத் திருமணம் செய்துவைக்க பீஷ்மர் விரும்பினார். அப்போது கூடியிருந்த சபையின் முன்பாக அம்பை பீஷ்மரிடம் தான் சால்வனை விரும்பியதையும், அவனை அவர் போரில் தோற்கடித்து விரட்டிவிட்டுத் தன்னைக் கடத்திக் கொண்டு வந்திருப்பதையும் சொல்லி பீஷ்மர் செய்த செயல் அடாத செயல் என்று குற்றம் சாட்டினாள்.


இந்த விவரங்கள் தெரியாமல் தான் செய்த காரியத்துக்காக மனம் வருந்திய பீஷ்மர் அந்த அம்பையை சால்வனிடமே போக அனுமதித்தார். சால்வனுடைய செளபல நாட்டுக்குச் சென்று சால்வனிடம் சென்று தன்னை மணந்து கொள்ளும்படி அம்பை கேட்டாள். அதற்குச் சால்வன் வேறொரு ஆண் மகனால் வென்றெடுக்கப்பட்டு தூக்கிச் செல்லப்பட்ட உன்னை நான் மணம் செய்து கொள்ள முடியாது. ஆகையால் நீ பீஷ்மனிடமே செல் என்று துரத்தி விட்டான்.

அத்தினாபுரம் திரும்பி நடந்தவற்றைச் சொல்லிய அம்பையிடம் பீஷ்மன் அவளை விசித்திரவீரியனுக்குக் கல்யாணம் செய்து வைக்க இயலாது என்றும், வேறொரு ஆணிடம் மனத்தைக் கொடுத்த உன்னை என் தம்பிக்கு மனையாட்டியாக ஆக்க முடியாது என்று மறுத்து விட்டான்.

அப்படியானால் என்னைக் கடத்தி வந்த நீரே என்னை மணம் செய்து கொள்ளும் என்றாள் அம்பை பீஷ்மரிடம். அவரோ தன்னுடைய பிரம்மச்சரிய விரதத்தைச் சொல்லி முடியாது என்று மறுத்தார். மீண்டும் நீ சால்வனிடம் போய் கேள் என்று அனுப்பினார். ஆனால் சால்வனிடம் சென்று திருமண பிச்சை எடுக்கத் தயாரில்லாத அம்பை பல காலம் பீஷ்மர் இல்லத்திலேயே காலத்தைக் கழித்தாள். பீஷ்மன் செய்த தவறின் காரணமாகத் தான் அலைய நேர்ந்தது அம்பையின் மனத்தில் ஆறாத ரணத்தை உண்டு பண்ணியது.

பல மன்னர்களிடம் போய் பீஷ்மனோடு போர் புரியும்படி வேண்டி நின்றாள். அவருடைய வீரத்தை எண்ணி ஒருவரும் அதற்குத் தயாராக இல்லை. வேறு வழியின்றி இறைவனே தனக்குத் துணை என்றெண்ணி அவள் முருகக் கடவுளை மனதில் எண்ணி தவமிருந்தாள். அவள் தவத்துக்கு இரங்கி முருகப் பெருமான் அவளுக்கு ஒரு வாடாத தாமரை மாலையைக் கொடுத்து, "இந்த மாலையை எவன் தரித்துக் கொண்டு போரிடுகிறானோ, அவனே பீஷ்மரின் அழிவுக்கும் காரணமாவான்" என்று சொல்லி அருளினார்.

அந்த மாலையை அணிந்து கொண்டு பீஷ்மருக்கு எதிராகப் போரிடுமாறு எல்லா மன்னர்களையும் அம்பை கேட்டுப் பார்த்தாள். இதை அணிந்து கொண்டால் முருகன் அருளால் பீஷ்மரைக் கொன்றுவிடலாம் என்றும் சொல்லிப் பார்த்தாள். ஊகூம் ஒருவரும் அசையவில்லை. அடுத்து அவள் பல ரிஷிகளிடம் சென்று முறையிட்டாள். அவர்கள் அவளை பரசுராமரிடம் போகச் சொன்னார்கள். பரசுராமர் க்ஷத்திரியர்களுக்கு எதிரி அவள் உன்னிடம் இரக்கப்பட்டு பீஷ்மரை அழித்துவிடுவார் என்றார்கள். 

பரசுராமரிடம் சென்று அம்பை முறையிட்டதும் அவர் சொன்னார், "பெண்ணே! சால்வனிடம் வேண்டுமானால் சொல்லி உன்னை மணம் செய்து கொள்ளச் சொல்கிறேன்" என்றார். அம்பை மனம் வெறுத்துப் போய் அவரது வேண்டுகோளை மறுத்தாள். வேறு வழியின்றி பரசுராமர் பீஷ்மருடம் சண்டைக்குச் சென்றார். இருவரும் சமபலம் கொண்டவர்கள். பல நாட்கள் யுத்தம் செய்தபின் பரசுராமர் தான் போரில் தோல்வியடைந்து விட்டதாக ஒப்புக் கொண்டு அம்பையிடம் வந்து, "பெண்ணே! நான் என்னால் இயன்றதைச் செய்தேன். இனி ஆவதற்கு ஒன்றுமில்லை" என்று கைவிரித்து விட்டார்.

கோபம் ஒரு புறம், மனத்துன்பம் மறுபுறம். என்ன செய்வாள் அம்பை. பரமேஸ்வரனே இனி கதி என்று ஈசனைக் குறித்துக் கடும் தவமியற்றலானாள். இறுதியில் சிவபெருமான் அம்பையின் முன் தோன்றி, பெண்ணே உன் கடும் தவம் கண்டு மகிழ்ந்தோம். உனக்கு இன்னொரு பிறவி கிட்டும். அதில் உன்னால் பீஷ்மர் மரணம் அடைவார்" என்று அருளிச் செய்துவிட்டு மறைந்தார்.

தான் இனி வாழ்ந்து முடிந்து இறந்து மறு பிறவி எடுக்க எத்தனை காலம் ஆகுமோ என்று கணக்கிட்டு உடனடியாக எனக்கு மறுபிறவி கிட்டவேண்டும் என்ற உறுதியுடன் தீமூட்டி அதில் குதித்து தன் ஆவியை அந்தத் தீயில் ஆஹூதியாக்கிவிட்டாள். 

அப்படி தீயில் மாண்ட அம்பை துருபத ராஜனுக்கு மகளாகப் பிறந்தாள். அந்த துருபதன் அரண்மனையில் ஒரு ஒதுப்புறமான இடத்தில் சுவற்றில் தொங்கிக் கொண்டிருந்த மாலையொன்றைப் பார்த்தாள் அந்தப் பெண். அந்த மாலை குறித்த எந்த விவரமும் தெரியாமல் அவள் அதை எடுத்துத் தன் கழுத்தில் அணிந்து கொள்ள, அங்கிருந்தோர் அனைவரும் அதிர்ந்துபோய் அந்த மாலையின் வரலாற்றை அந்தப் பெண்ணுக்கு எடுத்துரைத்து, இந்த மாலையை அணிந்து கொள்பவர் பீஷ்மருக்கு எதிரியாகிவிடுவாரே, உனக்கு இப்படி நேர்ந்து விட்டதே என்று மனம் வருந்தி நின்றனர். இந்தப் பெண் தன் அரண்மனையில் இருந்தால் பீஷ்மரின் பொல்லாப்பு ஏற்படுமே என்று பயந்து அவளை காட்டுக்கு அனுப்பிவிட்டான் துருபத மன்னன்.

காட்டில் கொண்டு விடப்பட்ட அந்தப் பெண் மறுபடி சிவனை நோக்கித் தவம் செய்யத் துவங்கினாள். தவத்தின் பயனாக பெண்ணாயிருந்த அவள் ஆணாக மாறிவிட்டாள். சிகண்டி எனும் பெயரோடு அந்த ஆணாக மாறிய பெண் அர்ஜுனனிடம் தேரோட்டும் பணியில் சேர்ந்தாள்/ன். இந்த சிகண்டிதான் இப்போது பத்தாம் நாள் யுத்தத்தில் பாண்டவர் படையை முன்னின்று நடத்திச் சென்று போர்க்களத்தில் பீஷ்மரை எதிர்க்கப் போய்க்கொண்டிருக்கிறாள்.

பத்தாம் நாள் போரில் சிகண்டியைச் சுற்றிலும் மகாரதர்களும், மாவீரர்களும் பாதுகாப்பாக இருந்தனர். பீஷ்மருக்கும் மாபெரும் வீரர்களின் பாதுகாப்பு இருந்தது. போர்க்களத்தில் இவ்விரு படைகளும் ஒன்றையொன்று எதிர்த்து நின்றபோது எதிரில் நிற்பது யார் என்று பார்த்தார் பீஷ்மர். தன்னை எதிர்த்து இந்தப் பெண்ணா? இவளை எதிர்த்தா நான் போர் புரிவது? இந்த எண்ணம் தோன்றியதுதான் தாமதம், பீஷ்மர் தன் ஆயுதங்களைப் பயன் படுத்தாமல் நின்றார்.

இதுதான் சந்தர்ப்பம் என்று சிகண்டி அவர் மீது எண்ணற்ற ஆயுதங்களைப் பிரயோகித்தாள். அஸ்திரங்களை ஏவினாள். இடையே புகுந்த அர்ஜுனன் அவரது கையில் இருந்த வில்லை உடைத்தான். மற்ற பல ஆயுதங்களையும் ஒன்றுவிடாமல் உடைத்து எறிந்தான். நிராயுதபாணியாக சிகண்டிக்கு எதிராக ஆயுதம் எடுக்காமல் நின்ற பீஷ்மர் மீது அர்ஜூனன் விடாமல் அம்பு மழை பொழிந்து அவர் உடலில் எள் புகும் அளவுக்குக்கூட இடமில்லாமல் துளைத்தான்.

பீஷ்மர் ரதத்திலிருந்து சாய்ந்தார். யுத்த களத்தில் பேரொலி எழுந்தது. கெளரவ படையினர் அதிர்ச்சியில் உறைந்து போயினர். பாண்டவர் பக்கமோ வெற்றி முழக்கம். பீஷ்மர் உடனே உயிரை விட்டுவிடவில்லை. அப்போது தக்ஷணாயனம் நடந்து கொண்டிருந்தது. உத்தராயண புண்ணிய காலத்தில் உயிரை விடவேண்டுமென்பதற்காக அர்ஜுனன் அமைத்துக் கொடுத்த 

அம்புப் படுக்கையில் சில காலம் உயிரோடு இருந்து நல் உபதேசங்களை வழங்கிவிட்டு இவ்வுலக வாழ்க்கையை நீத்தார் பீஷ்மர்.

இந்த சாதனையை நிகழ்த்திய சக்தியாக விளங்கியவள் சிகண்டியாக மாறி வந்த அம்பை எனும் சக்தி. எப்பேற்பட்ட மகா புருஷனை சாய்த்த மகா சக்தி சிகண்டி. தான் எந்த தவறும் செய்யாத பெண், மற்றவர்களுடைய நடத்தையினால் பாதிக்கப்பட்டு மனம் கொதித்து எழுகின்றபோது எப்பேற்பட்ட சக்தியும் அந்த மகாசக்திக்கு முன்னால் நிற்க முடியாது என்பதற்கு எத்தனையோ சாட்சிகள் உண்டு. வெளி உலகத்தையே கண்டறியாத கண்ணகி தனக்கு இழைக்கப்பட்ட தீங்கிற்காக மதுரையை தீக்கிரையாக்க வில்லையா? நேர்மையும் தர்மமும் சிகண்டி போன்ற மன உறுதியும் சத்தியத்தில் நம்பிக்கையும் உள்ள புனிதமான பெண்டிர்க்கு எப்போதும் துணை நிற்கும்.


ஆக்கம்: 
தஞ்சை வெ.கோபாலன், 
ஸ்ரீ புவனேஸ்வரி இல்லம், 
28/13, எல்.ஐ.சி.காலனி 5ஆம் தெரு, 
மருத்துவக் கல்லூரி சாலை, தஞ்சாவூர் 613007. 
e.mail: privarsh@gmail.com. # 9486741885

3 comments:

 1. இனிக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

  தூய தமிழ்மணக்க! நேய மனங்கமழ!
  ஆய கலைகள் அணிந்தொளிர! - மாயவனே!
  இன்பத் திருநாளாய் என்றும் இனித்திருக்க!
  அன்பாம் அமுதை அளி!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
 2. இனிக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

  தூய தமிழ்மணக்க! நேய மனங்கமழ!
  ஆய கலைகள் அணிந்தொளிர! - மாயவனே!
  இன்பத் திருநாளாய் என்றும் இனித்திருக்க!
  அன்பாம் அமுதை அளி!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
 3. நேர்மையும் தர்மமும் தளராத மன உறுதியும் சத்தியத்தில் நம்பிக்கையும் - எப்போதும் வென்றே தீரும் என்பதே அழியாத வரலாறு!..

  ReplyDelete

You can give your comments here