மகாகவி பாரதியாரின் "சந்திரிகையின் கதை"
எட்டாம்
அத்தியாயம்
சோமநாதய்யர் ஞானம் பெற்ற வரலாறு விடுதலை
1907-ம் வருஷம்- அதாவது விசாலாட்சியின் விவாகம் நடந்த
இரண்டு வருஷங்களுக்கப்பால்-மே மாதத்தில் ஒரு நாள் மாலை நல்ல நிலவடித்துக் கொண்டிருக்கையில்
மயிலாப்பூர் லஸ் சர்ச் வீதியில் ஹைகோர்ட் வக்கீல் சோமநாதய்யர் தம் வீட்டு மேடையில்
நிலா முற்றத்திலே இரண்டு நாற்காலிகள் போட்டுத் தாமும் தம்முடைய மனைவி முத்தம்மாளும்
உட்கார்ந்து கொண்டு, அவளுடன் சம்பாஷணை செய்து கொண்டிருந்தார்.
''காபி போட்டுக் கொண்டு வரலாமா?'' என்று முத்தம்மா
கேட்டாள்.
''எனக்கு வேண்டியதில்லை. பகலிலே உண்ட ஆகாரம் இன்னும்
என் வயிற்றில் ஜீரணமாகாமல் அப்படியே கிடக்கிறது. இன்றிரவு சாப்பிடலாமா, உபவாசம் போட்டு
விடலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். இப்படியிருக்கையில் காபி குடிப்பது உடம்புக்கு
மிகவும் கெடுதியென்று நினைக்கிறேன். உனக்கு வேண்டுமானால் காபி போட்டுக் கொண்டு வந்து
குடித்துக் கொள்'' என்றார் சோமநாதய்யர்.
''எப்போது பார்த்தாலும் ஏதாவது நோய் சொல்லிக் கொண்டேயிருக்கிறீர்கள்.
அதுவும் என்னைக் கண்டால் போதும், உடனே நீங்கள் நோயழுகை அழுவதற்கு ராஜா. 'இன்றைக்கு
என் உடம்பு ஸௌக்யமாக இருக்கிறது. ஒரு வியாதியுமில்லை' என்று உங்கள் வாயினாலே சொல்ல
ஒரு தரங்கூடக் கேட்டதில்லை. என் உயிர் உள்ளவரை அந்த நல்ல வார்த்தையை நான் ஒரு தரமேனும்
காது குளிரக் கேட்கப் போகிறேனோ, அல்லது கேட்காமலே பிராணனை விடப் போகிறேனோ, தெரியாது.
கை உளைச்சல், கால் உளைச்சல், அங்கு வீக்கம், இங்கு குடைச்சல், வயிற்றுவலி, தலைவலி,
அஜீர்ணம், அஜீர்ணம், அஜீர்ணம்-எப்போதும் இதே அழுகை கேட்டுக் கேட்டு எனக்குக் காது புளித்துப்
போய்விட்டது. இனிமேல் ஒரு வார்த்தை சொல்லுகிறேன். அதை ஜாக்கிரதையாக ஒரு பக்கத்தில்
வைத்துக் கொண்டிருங்கள். அதாவது, உங்கள் உடம்பு சுகமாகவும் ஆராக்கியமாகவும் இருந்தால்
என்னிடம் சொல்லுங்கள். வியாதியிருந்தால் எனக்குச் சொல்ல வேண்டா. இந்த ஒரு தயவு எனக்கு
நீங்கள் அவசியமாகச் செய்யவேண்டும்'' என்றாள்.
சோமநாதய்யருக்குக் கோபம் பளிச்சென்று வந்துவிட்டது.
அவருக்கு முற்கோபம் அதிகம். மனைவியை வாய்க்கு வந்தபடியெல்லாம் திட்டத் தொடங்கிவிட்டார்.
''நன்றி கெட்ட நாய், முண்டாய், உன் பொருட்டாக நான் படும் பாடு 'பஞ்சு தான் படுமோ? சொல்லத்தான்
படுமோ, எண்ணத்தான் படுமோ?' நாய் போலே உழைக்கிறேன். கும்பகோணத்தில் நல்ல வரும்படி வந்து
கொண்டிருந்தது. இங்கு வந்தது முதல், வரவு நாளுக்கு நாள் குறைவு பட்டுக்கொண்டேயிருக்கிறது.
எனவே, உனக்கும் உன் குழந்தைக்கும் சோறு, துணி, மருந்துகள் சம்பாதித்துக் கொடுப்பதில்
எனக்கு நேரும் கஷ்டங்களும் மன வருத்தங்களும் கணக்கில் அடங்க மாட்டா. நான் முன்பு சேர்த்து
வைத்த சொத்தையெல்லாம் விழுங்கி அதற்கு மேல் பதினாயிரம் ரூபாய் வரை கடன் ஏறிப் போயிருக்கிறது.
எத்தனையோ பொய்கள் சொல்ல வேண்டியிருக்கிறது. ஏமாற்ற வேண்டியிருக்கிறது. நீதி ஸ்தலத்திலே
போய் மனமறிந்த பொய்களைச் சொல்வதே நமக்குப் பிழைப்பாய்விட்டது. இந்த வக்கீல் தொழிலும்
சரி, வேசைத் தொழிலும் சரி. தர்மத்தைக் கெடுத்து இகத்தையும் பரத்தையும் நாசம் பண்ணிக்கொண்டு
உன் பொருட்டாகப் பாடுபடுகிறேன். மேலும் ஒரு வழக்கு ஜயித்தால் பத்து வழக்குகள் தோற்றுப்
போகின்றன. அதில் என் மனதுக்கேற்படும் துக்கத்துக்கும் அவமானத்துக்கும் கணக்கில்லை.
தவிரவும் இத்தொழிலோ கோர்ட்டிலேனும் கட்சிக்காரரிடமேலும் ஓயாமல் தொண்டைத் தண்ணீரை வற்றடிக்குந்
தொழில். அதனால் உடம்பில் அடிக்கடி சூடு மிகுதிப்பட்டு மலச்சிக்கல் உண்டாக்குகிறது.
மலச்சிக்கலே சர்வ ரோகங்களுக்கும் ஆதாரமென்று நவீன வைத்திய சாஸ்திர பண்டிதர்கள் சொல்லுகிறார்கள்.
ஆதலால் உடம்பில் எப்போதும் ஓய்வின்றி ஏதேனும் வியாதி இருந்து கொண்டேயிருக்கிறது. இதனாலும்
குழந்தைகளுக்கு உடம்புக்கேதேனும் வந்தால் அப்போது என் மனத்திலுண்டாகும் பெருந் துயரத்தாலும்
அவர்களுடம்பு நேரே இருக்க வேண்டும், கடவுளே, என்றெண்ணி நான் எப்போதும் ஏக்கப்படுவதனாலும்,
தலை மயிர் நரைத்துப் போய்விட்டது. மண்டையில் வழுக்கை விழுந்துவிட்டது. உனக்காகப் பாடுபட்டே
நான் கிழவனாய் விட்டேன். உன் தொல்லையாலேயே என் பிராணன் போகப் போகிறது. அடா, தீராத நோயிருந்தால்,
எப்படி சகிப்து? ஒரு நாளா, இரண்டு நாளா, ஒரு வாரமா, இரண்டு வாரமா, ஒரு மாதமா, இரண்டு
மாதமா, ஒரு வருஷமா, இரண்டு வருஷமா, உன்னுடன் கூடி வாழத் தொடங்கிய கால முதலாக இன்றுவரை
எப்போதும், ஒரு கணந் தவறாமல் என் உடம்பு ஏதேனம் ஒரு நோயினால் கஷ்டப்பட்டுக் கொண்டு
தானிருக்கிறது. இத்தனை நோயையும் இத்தனை கஷ்டத்தையும் பொறுத்துக்கொண்டு என் உயிர் இதுவரை
சாகாமலிருக்கிறதே, அதுதான் பெரிய ஆச்சரியம். இவ்வளவுக்கும் நான் உன்னிடமிருந்து பெறும்
கைம்மாறு யாது? பேதைச் சொற்கள், மடச்சொற்கள், பயனற்ற சொற்கள், மனதைச் சுடும் பழிச்
சொற்கள், காது நரம்புகளை அறுக்கும் குரூரச் சொற்கள், இவையே நான் பெறும் கைம்மாறு. ஓயாமல்
'புடவை வேண்டும்', 'ரவிக்கை வேண்டும்', 'குழந்தைகளுக்கு நகைகள் வேண்டும்' ,- வீண் செலவு!
வீண் செலவு! வீண் செலவு! என்ன துன்பம், என்ன துன்பம்! என்ன துன்பமடா, ஈசா! எனக்கிந்த
உலகத்தில் சமைத்து விட்டாய்! இந்தக் கஷ்டத்தையெல்லாம் இன்னும் எத்தனை காலம் பொறுத்துக்
கொண்டிருக்க வேண்டுமோ? என் பிராணன் என்றுதான் நீங்கப் போகிறதோ?'' என்று சொல்லி சோமநாதய்யர்
அழத் தொடங்கிவிட்டார்.
அப்போது முத்தம்மா:- ''அழுகையெல்லாம் என்னிடம் கொண்டு
வருகிறீர்கள். புன்னகை, சந்தோஷம், சிருங்கார ரஸம் இதற்கெல்லாம் வேறு பெண் ஏற்பாடு செய்துகொள்ளுங்கள்.
இல்லாவிட்டால் என்னைத் தள்ளிவிட்டு வேறு ஸ்திரீயை பகிரங்கமாக விவாகம் செய்துகொள்ளுங்கள்.
அதுதான் உங்களுக்கு நல்லது.
இன்னொரு புதுப்பெண்-சிறு பெண்ணை மணம் புரிந்துகொண்டு
அவளுடன் இன்புற்று வாழத் தொடங்குவீர்களாயின் உங்களுக்குள்ள மனக்கவலையெல்லாம் நீங்கிப்
போய்விடும். பிறகு புத்தியில் தெளிவும் சுறுசுறுப்பும் ஏற்படும். அப்பால் கோர்ட்டில்
சாமர்த்தியமாகப் பேசும் திறமை மிகுதிப்பட்டு, உங்களுக்கு வக்கீல் வேலையில் நல்ல லாபம்
வரத் தொடங்கும். உடம்பிலுள்ள வியாதிகளெல்லாம் நீங்கிப் போய்விடும். நீங்கள் சந்தோஷத்துடனும்
ஆரோக்கியத்துடனும் வாழ்வீர்கள். மலச்சிக்கலால் எல்லா வியாதிகளும் தோன்றுவதாகவன்றோ நீங்கள்
சொல்லுகிறீர்கள். எங்கள் அத்தங்கார் விசாலாட்சி அப்படிச் சொல்லமாட்டாள். அவளும் உங்கள்
போலே பெரிய வேதாந்தியும் ஞானியுமாதலால் அவளுடைய கருத்தை உங்களுக்குச் சொல்லுகிறேன்.
பணக்கவலைகளாலேயும் மனக்குறைவுகளாலேயுந்தான் வியாதிகள் தோன்றுகின்றன என்பது விசாலாட்சியின்
கொள்கை. நீங்கள் வேறு விவாகம் செய்து கொள்ளுங்கள். நானோ மூன்றுப் பிள்ளைகளைப் பெற்றுக்
கிழவியாய் விட்டேன். புதிதாக ஒரு சிறு பெண்ணை மணம் புரிந்து கொண்டால் உங்களுக்கு மனக்குறைவுகளெல்லாம்
நீங்கிப் போய்விடும். அப்பால் யாதொரு வியாதியும் வராது'' என்றாள்.
இது கேட்டு சோமநாதய்யர்:- ''உன்னையும் உன் குழந்தைகளையும்
வைத்துக் காப்பாற்றுவதிலேயே எனக்குச் சுமை தலை வெடித்துப் போகும் போலிருக்கிறது. இன்னும்
ஒருத்தியைப் புதிதாக மணஞ் செய்து கொண்டு அவளையும் அவளுக்குப் பிறக்கக்கூடிய குழந்தைகளையும்
இந்த ஜாப்தாவுடன் சேர்த்து சம்ர‡ணை பண்ணுவதென்றால் என் தலை நிச்சயமாக வெடித்தே போய்விடும்.
உன்னைத் தள்ளி வைக்கும்படி அடிக்கடி சிபார்சு செய்கிறாய். உன்மீது என்ன குற்றஞ் சுமத்தித்
தள்ளி வைப்பேன்? பிள்ளையில்லாத மலடியென்று சொல்லி நீக்குவேனா? பொய்யாகவும், எனக்கு
மகத்தான அவமானம் நேரும்படியாகவும் உன்மீது விபசார தோஷத்தை ஆரோபித்து விலக்கி வைப்பேனா?
அப்படியே ஏதேனுமொரு முகாந்தரம் சொல்லி விலக்கி வைத்தாலும் உன்னையும் குழந்தைகளையும்
காப்பாற்றும் கடமை என்னை விட்டு நீங்காது. மேலும் கிழவனாய்விட்ட நான் இப்போது ஒரு சிறு
பெண்ணை மணம் புரிந்து கொண்டால் அவளைப் போலீஸ் பண்ணிக் காவல் காக்குந் தொழில் எனக்குப்
பெருங் கஷ்டமாகிவிடும். ஆதலால் உன்னைத் தள்ளிவைத்துவிட்டு வேறு விவகாம் செய்து கொள்ளும்படி
நீ தயவுடன் சிபார்சு செய்யும் வழக்கத்தை இன்றுடன் நிறுத்திக் கொள்ளும்படி, அதாவது,
என் காது நரம்புகளையும் இருதய நரம்புகளையும் அறுப்பதற்கு நீ நிஷ்கிருபையாகவும் இடையின்றியும்
மறவாமலும் மீட்டும் மீட்டும் உபயோகித்து வரும் அஸ்திரங்களில் இந்த ஒற்றை அஸ்திரத்தின்
பிரயோகத்தையேனும் இனி நிறுத்தி விடும்படி, நான் உன்னை மிகவும் தாழ்மையுடன் பிரார்த்தனை
செய்கிறேன்'' என்றார்.
''சரி, எனக்குத் தலைநோகிறது. நான் கீழே போய்க் காபி
போட்டு சாப்பிடப் போகிறேன்'' என்று சொல்லி முத்தம்மா எழுந்தாள்.
''காப்பி குடித்துவிட்டு இங்கு திரும்பி வருவாயா?''
என்று சோமநாதய்யர் கேட்டார்.
''எதற்கு? இன்னும் ஏதேனும் அழுகைகளேனும் வசைகளேனும்
மிச்சமிருக்கின்றனவோ? நான் குரூர வார்த்தைகள் சொல்வதாக வருத்தப்படுகிறீர்களே? நீங்கள்
என்னைப் பற்றி என்னிடம் சொல்லும் வார்த்தைகளெல்லாம் அமிர்தமயமாக இருக்கின்றன என்று
தான் நினைத்திருக்கிறீர்களோ? சற்று நேரத்துக்கு முன் என்னுடன் கூடி வாழ்வதில் நீங்கள்
அடையும் இன்பத்தை விஸ்தாரமாக வர்ணித்தீர்களே? அச்சொற்கள் என் செவிக்கு தேவாமிர்தமாகத்தான்
இருந்தன. கேட்கக் கேட்கத் தெவிட்டவில்லை. சரி. அது வீண் பேச்சு. பனங்காட்டு நரி சலசலப்புக்கு
அஞ்சிப் பயனில்லை. எத்தனை காலம் உங்களுடன் வாழும்படி பகவான் தலையில் எழுதியிருக்கிறானோ,
அது வரை இப்படிப்பட்ட ஆசீர்வாதங்கள் தங்களுடைய திருவாயினின்று பிறந்து கொண்டேதானிருக்கும்.
அவற்றை நான் சகித்துத்தான் தீரவேண்டும். எனக்கு நிவர்த்தியேது? நீங்களாவது என்னை விலக்கி
வைத்து விட்டு மற்றொருத்தியை விவாகம் செய்து கொண்டு சௌக்கியமாக வாழ்வீர்கள். நான் அப்படிச்
செய்ய முடியுமா? எனக்கு வேறு புகலேது?'' என்று முத்தம்மா சொன்னாள்.
'அடியே நாயே, நான் மறுவிவாகம் செய்துகொள்ளலாமென்ற வார்த்தையை
என் காது கேட்க உச்சரிக்கக் கூடாதென்று நான் சொன்னேனோ, இல்லையோ? இப்போதுதான் சொல்லி
வாய் மூடினேன். மறுபடி அந்தப் புராணத்தை எடுத்து விட்டாயே உனக்கு மானமில்லையா? வெட்கமில்லையா?
சூடு சுரணையில்லையா? இதென்னடா கஷ்டமாக வந்து சேர்ந்திருக்கிறது? இவள் வாயை அடக்குவதற்கு
ஒரு வழி தெரியவில்லையே, பகவானே! நான் என்ன செய்வேன்? ஏதேனும் ஒரு வியாதி வந்து இவள்
வாயடைத்து ஊமையாய் விடும்படி கிருபை செய்யமாட்டாயா, ஈசா?'' என்று கூறி சோமநாதய்யர்
பிரலாபித்தார்.
''சரி, போதும், போதும், காது குளிர்ந்து போய் விட்டது.
என்னைக் காபி குடித்துவிட்ட மறுபடி இங்கு வரும்படி சொன்னீர்களே, எதற்காக?'' என்று முத்தம்மா
மீண்டுமொருமுறை வினவினாள்.
''காபி குடித்துவிட்டுவா. பிறகு விஷயத்தைச் சொல்லுகிறேன்.
முதலிலேயே இன்ன காரணங்களுக்காகத்தான் அழைக்கிறேன் என்று உனக்கு முச்சலிக்கா எழுதி கையெழுத்துப்
போட்டுக் கொடுத்தால்தான் வருவாயோ?'' என்று சோமநாதய்யர் கர்ஜித்தார்.
''சரி; வருகிறேன். இதற்காகத் தொண்டையைக் கிழித்துக்
கொள்ள வேண்டிய அவசியமில்லை. இது ஹைகோர்ட்டில்லை; வீடு'' என்று சொல்லி முத்தம்மா அந்த
ஏழைப் பிராமணன் மீது ஒரு கடைசி அஸ்திரத்தை பிரயோகம் செய்துவிட்டு கீழே இறங்கிச் சென்றாள்.
அவள் போனவுடன் சோமநாதய்யர்:- ''ஹைகோர்ட்டில் எனக்கு
யாதொரு லாபமும் கிடைக்கவில்லையாம். அதற்காகக் கேலி பண்ணிவிட்டுப் போகிறாள். இந்த நாயின்
வாயை அடக்க ஒரு வழி தெரியவில்லையே!'' என்று நினைத்து வருந்தினார்.
''வில்லம்பு சொல்லம்பு மேதினியிலே யிரண்டாம்;
வில்லம்பிற் சொல்லம்பே மேலதிகம்.''
என்று பழைய பாட்டொன்று சொல்லுகிறது. இந்தச் சொல்லம்பைப்
பிரயோகிப்பதில் ஆண் மக்களைக் காட்டிலும் பெண்கள் அதிகத் திறமையுடையவர்களென்று தோன்றுகிறது.
இதற்கு முக்கியமான காரணம் ஆண் மக்கள் பெண்மக்களுக்குச் செய்யும் சரீரத் துன்பங்களும்,
அநீதிகளும், பலாத்காரங்களுமே போலும். வலிமையுடையோர் தம் வலிமையால் எளியாரைத் துன்பப்படுத்தும்-போது
எளியோர் வாயால் திரும்பத் தாக்கும் திறமை பெறுகிறார்கள். கை வலிமை குறைந்தவர்களுக்கு
அநியாயம் செய்யப்படுமிடத்தே அவர்களுக்கு வாய்வலிமை மிகுதிப்படுகின்றது. மேலும், மாதர்கள்
தாய்மாராகவும் சகோதரிகளாகவும் மனைவியராகவும் மற்ற சுற்றத்தாராகவும் இருந்து ஆண் மக்களுக்கு
சக்தியும் வலிமையும் மிகுதிப்பட வேண்டுமென்ற நோக்கத்துடன் வேலை செய்கிறார்கள். அவ்வலிமையும்
சக்தியும் தமக்கு விரோதமாகவே செலுத்தப்படுமென்று நன்கு தெரிந்த இடத்திலும், மாதர்கள்
தம்மைச் சேர்ந்த ஆண் மக்களிடம் தமக்குள்ள அன்பு மிகுதியாலும், தாம் ஆடவர்களின் வலிமையை
சார்ந்து வாழும்படி நேர்ந்திருக்கும் அவசியத்தைக் கருதியும், அவர்களிடத்தே மேற்கூறிய
குணங்களேற்படுத்தி வளர்க்க வேண்டுமென்ற நோக்கத்துடன் இடையின்றி முயற்சி பண்ணுகிறார்கள்.
இவ்வுலக வாழ்க்கையில் ஒருவன் வெற்றியடைய வேண்டுமானால், அவன் சம்பாதித்துக் கொள்ளவேண்டிய
குணங்களெல்லாவற்றிலும் மிக மிகமிக உயர்ந்த குணமாவது பொறுமை. மனிதனுடைய மனம் சிங்கம்
போல் தாக்குந் திறனும், பாயுந் திறனும் கொண்டிருப்பது மட்டுமேயன்றி ஒட்டகத்தைப் போலே
பொறுக்குந் திறனும் எய்தவே டும். அவ்விதமான பொறுமை பலமில்லாதவர்களுக்கு வராது. மனத்திட்டமில்லாதோரின்
நாடிகள் மிகவும் எளிதாகச் சிறகடிக்கக் கூடியன. ஒரு இலேசான எதிர்ச்சொல் கேட்கும்போதும்,
இலோசன சங்கடம் நேரும்போதும் அவர்களுடைய நாடிகள் பெருங் காற்றிடைப்பட்ட கொடியைப் போல்
துடித்து நடுங்கத் தொடங்குகின்றன. மனத்திட்பமில்லாதோருக்கு நாடித் திட்பமிராது. அவர்களுக்கு
உலகத்தில் புதிய எது நேர்ந்தபோதிலும், அதை அவர்களுடைய இந்திரியங்கள் சகிக்குந் திறமையற்றவனவாகின்றன.
மனவுறுதியில்லாத ஒருவன் ஏதேனும் கணக்கெழுதிக் கொண்டிருக்கும் போது, கக்கத்திலே ஏதேனும்
குழந்தைக் குரல் கேட்டால் போதும், உடனே இவனுடைய கணக்கு வேலை நின்றுபோய்விடும். அல்லது
தவறுதல்களுடன் இயல்பெறும். அடுத்த வீட்டில் யாரேனும் புதிதாக ஹார்மோனியம் அல்லது மிருதங்கம்
பழகுகிற சத்தம் கேட்டால் போதும். இவனுடைய கணக்கு மாத்திரமேயன்றி சுவாசமோ ஏறக்குறைய
நின்று போகக் கூடிய நிலைமை எய்திவிடுவான். புதிதாக யாரைக் கண்டாலும் இவன் கூச்சப்படுவான்;
அல்லது பயப்படுவான்; அல்லது வெறுப்பெய்துவான். மழை பெய்தால் கஷ்டப்படுவான். காற்றடித்தால்
கஷ்டப்படுவான். தனக்கு சமானமாகியவர்களும் தனக்குக் கீழ்ப்பட்டவர்களும் தான் சொல்லும்
கொள்கையை எதிர்த்து ஏதேனும் வார்த்தை சொன்னால், இவன் செவிக்குள்ளே நாராச பாணம் புகுந்தது
போலே பேரிடர்ப்படுவான்.
பொறுமையில்லாதவனுக்கு இவ்வுலகத்தில் எப்போதும் துன்பமேயன்றி,
அவன் ஒரு நாளும் இன்பத்தைக் காண மாட்டான். ஒருவனுக்கு எத்தனைக்கெத்தனை பொறுமை மிகுதிப்படுகிறதோ,
அத்தனைக்கத்தனை அவனுக்கு உலக விவகாரங்களில் வெற்றியுண்டாகிறது. இது பற்றியேயன்றோ நம்
முன்னோர் ''பொறுத்தார் பூமியாள்வார், பொங்கினார் காடாள்வார்'' என்று அருமையான பழமொழியேற்படுத்தினார்.
இத்தகைய பொறுமையை ஒருவனுக்குச் சமைத்துக் கொடுக்கும்
பொருட்டாகவே, அவனுடைய சுற்றத்து மாதர்களும், விசேஷமாக அவன் மனைவியும், அவனுக்கு எதிர்
மொழிகள் சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள். கோபம் பிறக்கத் தக்க வார்த்தைகள் சொல்லுகிறார்கள்.
வீட்டுப் பழக்கந்தான் ஒருவனுக்கு நாட்டிலும் ஏற்படும். வீட்டிலே பொறுமை பழகினாலன்றி,
ஒருவனுக்கு நாட்டு விவகாரங்களில் பொறுமையேற்படாது. பொறுமை எவ்வளவுக்கெவ்வளவு குறைகிறதோ,
ஒருவனுக்கு அத்தனைக்கத்தனை வியாபாரம், தொழில் முதலியவற்றில் வெற்றியுங் குறையும். அவனுடைய
லாபங்களெல்லாம் குறைந்து கொண்டேபோம். பொறுமையை ஒருவனிடம் ஏற்படுத்திப் பழக்க வேண்டுமானால்
அதற்கு உபாயம் யாது? சரீரத்தில் சகிப்புத் திறமையேற்படுத்தும் பொருட்டாக ஜப்பான் தேசத்தில்
ஒரு குழந்தையாக இருக்கும்போதே ஒருவனுடைய தாய் தந்தையார் அவனை நெடு நேரம் மிக மிகக்
குளிர்ந்த பனிக்கட்டிக்குள் தன் விரலை அல்லது கையைப் புதைத்து வைத்துக் கொண்டிருக்கும்படி
செய்து பழக்குகிறார்கள். மிக மிகச் சூடான வெந்நீரில் நெடும்பொழுது கையை வைத்துக் கொண்டிருக்கும்படி
ஏவுகிறார்கள். இவை போன்றன உடம்பினால் சூடு குளிரைத் தாங்கும்படி பயிற்றுவதற்குரிய உபாயங்களாம்.
இது போலவே சுக துக்கங்களை சகித்துக் கொள்வதாகிய மனப்பொறுமை ஏற்படுத்துவதற்கும், சூடான
சொற்களும் சகிக்க முடியாத பேதைமைச் சொற்களும் சொல்லிச் சொல்லித்தான், ஒருவனைப் பழக்க
வேண்டும். அவற்றைக் கேட்டுக் கேட்டு மனிதனுக்குக் காதும் மனமும் நன்கு திட்பமெய்தும்,
இங்ஙனம் பொறுமை உண்டாக்கிக் கொடுக்கும் பொருட்டாகவும், மனிதனுடைய மனத்தில் அவனாலேயே
அடிக்கடி படைத்துக் கொள்ளப்படும் வீண் கவலைகளினின்றும் வீண் பயங்களினின்றும் அவன் மனத்தை
வலிய மற்றொரு வழியில் திருப்பிவிடும் பொருட்டாகவும், ஒருவனுடைய மாதா அல்லது மனைவி அவனிடம்
எதிர்பார்க்கப்படாத, பேதைமை மிஞ்சிய, கோபம் விளைக்கக்கூடிய சொற்கள் உரைக்கிறார்கள்.
அவனுடைய அன்பு எத்தனை ஆழமானதென்று சோதிக்கும் பொருட்டாகவும் அங்ஙனம் பேசுகிறார்கள்.
அன்பு பொறுக்கும். அன்பிருந்தால் கோபம் வராது. அன்றி ஒருவேளை தன்னை மீறிக் கோபம் வந்தபோதிலும்
மிகவும் எளிதாக அடங்கிப் போய்விடும். இத்தகைய அன்பைக் கணவன் தன் மீதுடையவனா என்பதைத்
தெரிந்து கொள்ளும் பொருட்டு மாதர் பல சமயங்களில் கோபம் விளைக்கத் தக்க வார்த்தைகளை
மனமறியப் பேசுகிறார்கள். நம்முடன் பிறந்து வளர்ந்து நம்மைத் தாயாகவும் மனைவியாகவும்
சகோதரியாகவும் எப்போதும் காப்பாற்றிக் கொண்டும், கவனித்துக் கொண்டும், நம்மிடம் தீராத
அன்பு செலுத்திக்கொண்டும் வருகிற மாதர்கள் சில சமயங்களில்-அனேக சமயங்களில்-நமக்குப்
பயனற்றனவாகவும், கழி பெரும் பேதைமையுடையனவாகவும் தோன்றக் கூடிய மொழிகளைப் பேசுவதினின்றும்
ஆடவர்களாகிய நம்முடை பலர் அம்மாதர்களை மகா மடைமை பொருந்தியவர்களென்று நினைப்பது தவறு.
அங்ஙனம் நினைத்தல் நமது மடைமையையே விளக்குவதாம். ஆண்மக்கள் பிரத்யேகமாகக் கற்கும் வித்தைகளிலும்,
விசேஷமாகப் பயிலும் தொழில்களிலும், பொதுவாக சரீர பலத்திலும் மாதரைக் காட்டிலும் ஆண்மக்கள்
உயர்ந்திருக்கக் கூடுமேயெனிலும், சாதாரண ஞானத்திலும், யுக்தி தந்திரங்களிலும், உலகப்
பொது அனுபவத்தால் விளையும் புத்திக் கூர்மையிலும் ஆண்களைக் காட்டிலும் பெண்கள் குறைவாக
இருப்பார்களென்று எதிர்பார்ப்பதே மடமை.
ஆதலால், குடும்பத்திலிருந்து பொறுமை என்பதொரு தெய்விக
குணத்தையும், ஆதனால் விளையும் எண்ணற்ற சக்திகளையும் எய்த விரும்புவோர், தாய் மனைவி
முதலிய ஸ்திரீகள் தமக்கு வெறுப்புண்டாகத் தகுந்த வார்த்தை பேசும்போது, வாயை மூடிக்கொண்டு
பொறுமையுடன் கேட்டுக் கேட்டுப் பழக வேண்டும். அங்ஙனமின்றி ஒரு ஸ்திரீ வாயைத் திறந்த
மாத்திரத்திலேயே , அவள் தாயாயனினும், உடம்பிலும் உயிரிலும், பாதியென்று அக்கினியின்
முன் ஆணையிட்டுக் கொடுத்த மன¨வியாயினும், அவள் மீது புலிப் பாய்ச்சல் பாய்ந்து பெருஞ்
சமர் தொடங்கும் ஆண்மக்கள் நாளுக்கு நாள் உலக விவகாரங்களில் தோல்வி எய்துவோராய்ப் பொங்கிப்
பொங்கித் துயர்ப்பட்டுத் துயர்ப்பட்டு மடிவார்.
இந்த சங்கதிகளெல்லாம் சோமநாதய்யருக்கு மிகவும் இலேசாகத்
தென்படலாயின. சில மாதங்களுக்கு முன்பு அவருடைய கிழத் தாயாகிய ராமுப் பாட்டி இறந்து
போய்விட்டாள். அவள் சாகுமுன்பு இவரைத் தனியாக அழைப்பித்து இவருடன் சிறிது நேரம் சம்பாஷணை
செய்து கொண்டிருந்தாள். அவள் சொன்னாள்: ''அட, அய்யா, சோமூ! உன் பொண்டாட்டி முத்தம்மாளை
நீ சாமான்யமாக நினைத்து விடாதே. அவள் மகா பதிவிரதை. உன்னை சாட்சாத் பகவானுக்கு சமமாகக்
கருதிப் போற்றி வருகிறாள். உன்னுடைய ஹிதத்தைக் கருதியும் உனக்குப் பொறுமை விளைவிக்கும்
பொருட்டாகவும் அவள் சில சமயங்களில் ஏறுமாறாக வார்த்தை சொன்னால், அதைக் கொண்டு நீ அவளிடம்
அதிக அருவருப்பும் கோபமும் எய்தலாகாது. நானோ சாகப் போகிறேன். இன்னும் இரண்டு தினங்களுக்கு
மேல் என் உயிர் தறுகி நிற்குமென்று தோன்றுவில்லை. நான் போனபின் உனக்கு அவளைத் தவிர
வேறு கதியேது? தாய்க்குப் பின் தாரம். தாய் இருக்கும் போதே ஒருவன் அவளிடம் செலுத்தும்
உண்மைக்கும் பக்திக்கும் நிகரான உண்மையையும் பக்தியையும் தன் மனைவியிடத்திலும் செலுத்த
வேண்டும். இதுவரை நீ முத்தம்மாளை எத்தனையோ விதங்களில் கஷ்டப்படுத்தி வதைத்து வதைத்து
வேடிக்கை பார்த்தாய்விட்டது. கொண்ட பெண்டாட்டியின் மனம் கொதிக்கும் படியாக நடப்பவன்
வீட்டில் லட்சுமிதேவி கால் வைக்க மாட்டாள். அந்த வீட்டில் மூதேவி தான் பரிவாரங்களுடன்
வந்து குடியேறுவாள். இந்த வார்த்தையை எப்போதும் மறக்காதே. இதை ஆணி மந்திரமாக முடிச்சுப்போட்டு
வைத்துக் கொள். குழந்தாய், சோமு. அந்தப் பராசக்தி லலிதாம்பிகை தான் உனக்கும் உன் பெண்டு
பிள்ளைகளுக்கும் நீண்ட ஆயுளும் மாறாத ஆரோக்கியமும் கொடுத்து, உங்களை என்றும் சந்தோஷ
பதவியிலிருத்திக் காப்பாற்றிக் கொண்டு வரவேண்டும்'' என்றாள்.
அந்த வார்த்தை அவருக்கு அடிக்கடி நினைப்புக்கு வரலாயிற்று.
''அத்தையருமை செத்தால் தெரியும்'' என்பது பழமொழி. ராமுப்பாட்டியின் முதுமைக் காலத்தில்,
சோமநாதய்யர் அவளை யாதொரு பயனுமில்லாமல் தன்னுடைய இம்சையின் பொருட்டாகவும் நஷ்டத்தின்
பொருட்டாகவும் நிகழ்ச்சி பெற்று வரும் ஒரு கிழ இருமல் யந்திரமாகப் பாவித்து நடத்தி
வந்தார். அவள் ஒரேயடியாகச் செத்துத் தீர்ந்த பிறகுதான், அவருடைய மனதில் அவள் மிகவும்
மகிமை பொருந்திய தெய்வமாகிய மாதா என்ற விஷயம் ஞாபகத்துக்கு வந்தது. ''அன்னையும் பிதாவும்
முன்னறி தெய்வம்'' என்ற வசனம் அவருக்கு உண்மைப் பொருளுடன் விளங்கலாயிற்று. தாயிற் சிறந்த
கோயிலில்லை. உலகத்தையெல்லாம் படைத்துக் காப்பவளாகிய சாட்சாத் ஜகன்மாதாவே தனக்குத் தாய்
வடிவமாக மண்மீது தோன்றிக் காப்பாற்றுகிறாள். '' புருஷ ஏவேதம்ஸர்வம்'' என்று வேதம் சொல்லுகிறது.
இவ்வுலகத்திலுள்ள பொருளெல்லாம் கடவுளேயென்பது அந்த வாக்கியத்தின் அர்த்தம். ''ஸர்வம்
விஷ்ணுமயம் ஜகத்''-உலக முழுதும் கடவுள் மயம். நம் வீட்டை நாயாக நின்று காப்பதும் கடவுள்
தான் செய்கிறார். தோழனாகவும பகைவனாகவும், ஆசானாகவும் சீடனாவும், தாய் தந்தையாராகவும்,
பெண்டு பிள்ளைகளாவும் நம்மைக் கடவுளே சூழ்ந்து நிற்கிறார். எனிலும் பிற வடிவங்களால்
அவர் நமக்குச் செய்யும் உபகாரங்களைக் காட்டிலும் தாய் தந்தையராக நின்று அவர் செலுத்தும்
கருணைகள் சால மிகப் பெரியன. தாய் தந்தையரிருவருமே கடவுளின் உயர்ந்த விக்ரகங்களாக வணங்குதற்குரியர்.
அவ்விருவருள் தாயே நம்மிடத்து அதிக தெய்வீகமான அன்பு செலுத்துவது கொண்டும், நாம் கைம்மாறிழைக்க
முடியாத பேரருட் செயல்கள் தந்தையிடமிருந்து நமக்குக் கிடைப்பதைக் காட்டிலும் தாயினிடமிருந்து
அதிகமாகக் கிடைப்பது கருதியும், அவள் ஒருவனாலே தந்தையைக் காட்டிலுங்கூட உயர்வாகப் போற்றப்படத்
தக்கவள். இதனைக் கருதியே ''அன்னையும் பிதாவும் முன்னறிதெய்வம்'' என்ற வசனத்தில் தந்தையின்
பெயருக்கு முன்னே தாயின் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.
சோமநாதய்யர் காமம் குரோதம் முதலிய சேஷ்டைகள் உடனே அடக்கிக்
கொள்ளக்கூடிய சக்தி பெறாவிடினும், கல்வி கேள்விகளால் அவருக்கு ஏற்பட்டிருந்த புத்தித்
தெளிவு இடைக்கிடையே அந்தக் காம முதலிய தீயகுணங்களைக் கண்டித்து நன்கு சுடர் வீசும்
சமயங்களும் இருந்தன. அந்த நேரங்களில் அவருடைய புத்திக்குப் பெரிய பெரிய உண்மைகள் புலப்படுவதுண்டு.
மேலும் தாம் சுமார் இரண்டு வருஷங்களின் முன்னே விசாலட்சியிடம் அவமானப்பட்ட கால முதலாக,
அவர் பர ஸ்த்ரீகளின் விஷயத்தில் புத்தியைச் செலுத்தும் வழக்கத்தை நாளுக்கு நாள் குறைத்துக்
கொண்டே வந்தார். ''பாவத்தின் கூலியே மரணம்'' என்று கிறிஸ்தவ வேதம் சொல்லுகிறது. துக்கத்தையும்
பயத்தையும் இவற்றால் விளையும் மரணத்தையும் ஒருவன் வெல்ல விரும்புவானாயின், இங்கு பயங்களுக்கும்
துக்கங்களுக்கும் முக்கிய ஹேதுவாக இருக்கும் பாவங்களை விட்டு விட வேண்டும். யாதேனுமொரு
பாவத்தை வெல்லும் முயற்சியில் ஒரு மனிதன் மிகவும் கஷ்டப்பட்டுக் கைதேறி விடுவானாயின்,
பிறகு மற்றப் பாவங்களை வெல்வதில் அவனுக்கு அத்தனை கஷ்டமிராது. அவனுக்கு அசுர யுத்தத்தில்
தேர்ச்சியுண்டாய்விடும். அசுரர்களென்பன பாவங்கள். தேவர்கள் ஹிதம் பண்ணும் சக்திகள்.
எப்போதுமே சோமநாதய்யர் பாவச் செய்கைகளுக்கு அதிகமாக
ஈடுபட்டவரல்லர். முக்கியமாக வியபிசார தோஷத்துக்கு அவர் அதிக வசப்பட்டவரல்லர். பெரும்பாலும்,
இப்பாவத்தை அவர் மானசீகமாகச் செய்து வந்தவரேயல்லாமல் கார்யாம்சத்தில் அதிகமாக அனுசரித்தது
கிடையாது. ஆனால் யேசு கிறிஸ்து நாதர் சொல்லுகிறார்:- அன்ய ஸ்திரீகளுடன் சம்பந்தப்படுவோர்
மாத்திரமே வியபிசாரமாகிய பாதகத்துக்கு ஆட்பட்டோர் என்று கருதுதல் வேண்டா. வெறுமே மனத்தால்
ஒருவன் தன் மனைவியழிய மற்றொரு ஸ்த்ரீயை விரும்புவானாயின், அவனும் வியபிசார பாவத்துக்குட்பட்டவனேயாவான்''
என்கிறார். இந்த விஷயத்தை உலகத்தார் சாதாரணமாக கவனிப்பது கிடையாது. பிறனுடைய சொத்தைத்
திருடி, ஊர்க்காவலாளிகளின் விசாரணைகளில் அகப்பட்டு, தண்டனையடைந்து சிறை புகுந்து வாழ்வோன்
மாத்திரமே கள்வனென்று பாமரர்கள் நினைக்கிறார்கள். பிறனுடைய சொத்தை அபகரிக்க வேண்டுமென்று
மனதில் எண்ணினால் போதும். அங்ஙனம் எண்ணிய மாத்திரத்தாலேயே ஒருவன் கள்வனாகி விடுகிறான்.
கள்வனுக்குரிய தண்டனை அவனுக்கு மனிதர்களால் விதிக்கப்படாவிடினும், கடவுளால் அவசியம்
விதிக்கப்படுகிறது.
ஆனால், இள மூங்கிலை வளைத்து விடுதல் சுலபம், முற்றிப்
போன மூங்கிலை வளைக்க முடியாது. அதை வளைக்கப் போகுமிடத்தே அது முறிந்து போய்விடும்.
மனித இருதயத்தை இளமைப் பிராயத்தில் சீர்திருத்துதல் சுலபம். பின்னிட்டு முதிர்ந்த வயதில்
மனித இருதயத்தை வளைத்தல் மூங்கிலை வளைப்பது போல் ஒரேயடியாக அசாத்தியமன்று. ஆனால் மிகவும்
சிரமமான வேலை. இது பற்றியே முன்னோரும் ''இளமையிற் கல்'' என்று உபதேசம் புரிந்தனர்.
எனிலும், வருந்தினால் வாராததொன்றுமில்லை. மனித இருதயம்
எப்போதுமே முற்றிப்போன மூங்கிலாகும் வழக்கமில்லை. இளமை யிலிருப்பதைக் காட்டிலும் வயதேறிய
பிறகு தவம் முதலியவற்றைப் பயிலுதல் மிகவும் சிரமமென்பது கருதி எவனும் நெஞ்சந் தளர்தல்
வேண்டா. கல்வியும் தவமும் எந்தப் பிராயத்திலும் தொடங்கலாம். இதைப் பற்றியே சோமநாதய்யர்
அடிக்கடி யோசித்துக் கடைசியாகத் தவம் பயிலுதல் அவசியமென்று நிச்சயித்துக் கொண்டார்.
தவமென்றால் காட்டிலே போய், மரவுரியுடுத்து கந்த மூலங்களை புசித்துக்கொண்டு செய்யும்
தவத்தை இங்க பேசவில்லை. ஆளுதலாகிய உண்மைத் தவத்தையே இங்கு குறிப்பிடுகிறோம். ஆத்ம ஞானத்தை-அதாவது,
எல்லாம் ஒன்று; எல்லாம் கடவுள்;எல்லாம் இன்பம் என்ற ஞானத்தை-ஒருவன் தனது நித்திய அனுபவத்தில்
பயன்படுத்தி நன்மையெய்த வேண்டுமாயின் அதற்காக அவன் கைக் கொண்டொழுக வேண்டிய சாதனங்களில்
மிக உயர்ந்தது தவம்.
அதாவது, இந்திரியங்களை அதர்ம நெறிகளில் இன்புற வேண்டுமென்ற
விருப்பத்தினின்றும் தடுத்தல். இந்தி‘ரியங்களைத் தடுத்தலாவது மனதைத் தடுத்தல். மனமே
ஐந்து இந்திரிய வாயில்களாலும் தொழில் புரியும் கருவி. சஞ்சலம் பயம் முதலிய படுகுழிகளில்
வீழ்ந்து தவிக்காதபடி மனத்தைக் காத்தலும் வலியது. மற்றெல்லாப் பாவங்களுக்கும் காரணமாவது,
பயம், எனவே, பயத்தை வென்றால் மற்றப் பாவங்களை வெல்லுதல் எளிதாய் விடும். மற்றப் பாவங்களை
வென்றால், தாய்ப் பாவமாகிய பயத்தை வெல்லுதல் பின் எளிதாம். இவ்விரண்டு நெறியாலும் தவத்தை
ஏக காலத்தில் முயன்று பழகுதல் வேண்டும்.
இவ்வக¨த் தவத்தையே சோமநாதய்யர் விரும்புவராயினர். மேலும்
தவங்களில் உயர்ந்தது பூஜை. மனத்தைத் தீய நெறியில் செல்ல விடாமல் தடுப்பதற்கு மிகவும்
சுருக்கமான உபாயம் அதனை நன்னெறியிலே செலுத்துதல். மனதைச் செலுத்துதற்குரிய நன்னெறிகள்
அனைத்திலும் உயர்ந்தது பூஜை. அன்பால் செய்யப்படும் உபசாரங்களே பூஜைகள் எனப்படும். எல்லாமாகிய
கடவுளிடத்திலும், கடவுளாகிய எல்லாப் பொருள்கள், விசேஷமாக எல்லா உயிர்களிடத்திலும்,
இடையாறத நல்லன்பு செலுத்துவதும், அந்த அன்பின் கரியைகளாகிய வழிபாடுகள் புரிவதுமே மிகச்
சிறந்த தவம்; அதுவே அறங்களனைத்திலும் பேரறம். அ·தே மோட்ச வீட்டின் கதவு. அன்பே மோட்சம்.
அன்பே சிவம். இதனையே பகவான் புத்தரும் நிர்வாணமாகிய மகா முக்திக்குக் கருவியாகக் கூறினார்.
'கடவுளிடத்தும் மற்றெல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்துவதே மோட்சத்துக்கு வழி'
யென்று யேசு கிறிஸ்துவும் சொல்லியிருக்கிறார். மேலும், மற்ற மனிதர்களைத் தொழுதலும்
வழிபடுதலும்-அவர்களிடத்துத் தீராத அன்பு செலுத்தி அவர்களுக்குத் தொண்டு புரிதலும்-இல்லாதோன்
கடவுளுக்குச் செய்யும் ஜபம் முதலிய கிரியைகளால் கடவுளிடத்தே அன்புடையவன் என்று தன்னைக்
கூறிக் கொள்ளுதல், வெறும் வேஷமாத்திரமேயன்றி உண்மையான தெய்வ பக்தியைக் காட்டுவதாகாது
என்று கிறிஸ்து நாதர் உபதேசித்தருளினார். கண்ணுக்குத் தெரியும் கடவுளராகிய மனிதரிடத்தே
அன்பு செய்யாதவன் கண்ணுக்குத் தெரியாத ஜகத்தின் மூல ஒளியாகிய ஆதிக் கடவுளிடத்தே அன்பு
செய்ய வல்லன் ஆகமாட்டான் என்று கிறிஸ்துநாதர் சொல்லுகிறார்.
இதனையெல்லாம் சோமநாதய்யர் நன்றாக அறிந்தவராதலால், மற்ற
ஜீவர்களிடத்தில் அன்பு செலுத்திப் பழகுவதை முக்கிய விரதமாக எடுத்துக் கொண்டார். மற்ற
உயிர்களிடத்திலும், விசேஷமாக மற்ற மனிதரிடத்திலும் உண்மையான அன்பு செலுத்திப் பழகுதல்
சாமான்யமான காரியமன்று. சமஸ்காரங்களாலும் கணக்கில்லாத அனந்த கோடி சிருஷ்டிகளில் அனந்த
கோடிகளாகத் தோன்றி மறையும் ஜீவ குலத்துக்குப் பொதுவாக ஏற்பட்டிருக்கும் பூர்வ ஸம்ஸ்காரங்களாலும்
மனிதருக்கு இயல்பாகவே மற்ற உயிர்களிடமும், மற்ற மனிதரிடமும் பெரும்பாலும் பயம், வெறுப்பு,
பகைமை முதலிய முதலிய த்வேஷ குணங்கள் ஜனிக்கின்றன. பல உயிர்களிடம் அன்பும் நட்பும் ஜனிப்பதுமுண்டு.
ஆனால், பொதுவாக ஜீவர்கள் இயற்கையிலேயே ஒருவருக்கொருவர் சகிப்பில்லாமை, அசுயை முதலிய
குணங்களுடையோராகின்றனர்.
இந்த அநாதியான ஜீவ விரோதம் என்ற குணத்தை நீக்கி சர்வ
ஜீவ காருண்யமும் சர்வ ஜவீ பக்தியும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமென்ற இச்சை சோமநாதய்யருக்கு
உண்டாயிற்று. எனவே, அவர் ஆடு மாடுகளைக் கண்டால் முன்போல் இகழ்ச்சிக் கொள்கை கொள்வதில்லை.
ஏழைகளைக் கண்டால், கொடிய நோயாளிகளைக் கண்டால், குரூபிகளையும் மிகுந்த முதுமையால் உருச்
சிதைந்து விகார ரூபமடைந்திருப்போரையுங் கண்டால், அருவருப்பு எய்தி முகஞ் சுளிப்பதை
நிறுத்தி, அவர்களை மானசீகமாக வந்தனை செய்யவும், ஆசீர்வாதம் பண்ணவும், இயன்றவரை புறக்
கிரியைகளாலும் அவர்களுக்கு இனியன செய்யவும் முயன்றார்.
இதுவரை தமக்குக் கோபமும் அருவருப்பும விளைவித்துத்
தம்மால் இகழ்ச்சியுடனும் எரிச்சலுடனும் புறக்கணிப்படும் மனிதர்களைக் காணும் போது முகமலர்ச்சி
கொள்ளவும், அவர்களிடம் தாழ்மையுரையும் இன்சொற்களும் பேசவும் பழக்கப் படுத்திக்கொள்ளத்
தொடங்கினார்.
இ·தெல்லாம் ஆரம்பத்தில் அவருக்கு மிகவும் சிரமமாக இருந்தது.
இ·தனைத்திலும் சிரமம் யாதென்றால், அவருக்கு முத்தம்மாளிடம் சுமுகமாக இருந்து அவளிடம்
அன்பு காட்டுதல். அவளைக் கண்டவுடனே முகத்தைச் சுளிக்காமலிருக்க அவருக்கு சாத்தியப்படவில்லை.
பரஸ்திரீகளிடம் காமமுறாமலிருப்பது அவருக்கு நாளடைவில் ஒருவாறு எளிதாயிற்று. ஆனால்,
முத்தம்மாளிடம் பிரேமை செலுத்துவதெப்படி? விவாகம் செய்து, ருதுசாந்தி முடிந்து சில
மாதங்கள் வரை அவருக்கு முத்தம்மாளுடைய உறவும் ஊடாடுதலும் இன்பம் பயந்து கொண்டிருந்தன.
அப்பால் அவை அவருக்கு ஸ¤கஹேதுக்களாகாமல் மாறிப் போய்விட்டன. பதினைந்தாம் வயதில் அந்த
பாக்கியவதி அவருடைய சயன வீட்டுக்கு ஒரு ஆண் குழந்தையையும் கொண்டு வரத் தொடங்கினாள்.
அவர் அவளை முத்தமிடப் போகும் சமயத்தில் அந்தக் குழந்தை வீறிட்டழத் தொடங்கிற்று. அல்லது
மல மூத்ர விஸர்ஜனம் செய்து அவளுடைய மடியையும் இவருடைய வேஷ்டியையும் அசுத்தப்படுத்தலாயிற்று.
அன்றைக்குத் தொடங்கிற்று பெருங் கஷ்டம். பிறகு புதிய குழந்தைகள் இரண்டு பிறந்தன. தமக்கும்
தம்முடைய மனைவிக்கும் இளமைப்பிராயம் தவறிவிட்டன என்ற எண்ணம் அக்குழந்தைகளைப் பார்க்குநதோறும்
அவருள்ளத்தில் எழலாயின. இதினின்றும் அவர் குழந்தைகளிடம் அருவருப்படைதல் என்ற பரம மூடத்தனத்துக்குத்
தம்மை ஆளாக்கிக் கொள்ளாமல் தப்பினார். ஆனால் அதைக் காட்டிலும் ஆயிரம் பங்கு அதிக மூடத்தனமாகத்
தமது பத்தினியை நோக்கும் பொழுதெல்லாம் அவளிடத்தில் வெறுப்பெய்துவதும் முகத்தைச் சுளிப்பதுமாகிய
தீயவழக்கத்தில் தம்மையறியாது விழுந்து, நாளுக்குநாள் அந்தப் படுகுழியில் தமது சித்தத்தை
அதிக ஆழமாக அமிழ்ந்துபோக இடங் கொடுத்தார். இத்தனை காலத்துக்கு அப்பால் இவருக்குண்டாகிய
புதிய தெளிவின் பயனாக, இப்போது அந்த மனைவியிடம் அன்பு செலுத்த முயற்சி பண்ணினார். அந்த
முயற்சி இவருக்கு ஆரம்பத்தில் வேப்பெண்ணெய் குடிப்பதுபோல் மிகவும் கசப்பாக இருந்தது.
அவளோ, இவரிடத்திலே தோன்றிய மாறுதலைக் கண்டு உள்ளத்தில் மகிழ்ச்சி கொண்டாளாயினும், இவருடைய
புதிய அன்பை உறுதிப்படுத்த வேண்டுமென்ற எண்ணத்துடன் இவரைப் பல கடினமான சோதனைகளுக்கு
உட்படுத்தத் தொடங்கினாள். எனவே இவர் நம்பிக்கையையும் ஞானத்தையுந் துணைக் கொண்டு வேப்பெண்ணெய்
குடிக்கப்போன இடத்தில் இவருடைய முதுகில் சவுக்கடிகள் வேறு விழலாயின. மகா பதிவிரதையாகிய
முத்தம்மா தன்னுடைய கணவன் இங்ஙனம் வேப்பெண்ணெய் குடிக்க வந்த சமயங்களில், அவருக்குச்
சர்க்கரை முதலியன கொடுத்து அவருடைய கஷ்டத்துக்குப் பரிகாரங்கள் செய்யாதபடி இங்ஙனம்
சவுக்கடிகள் கொடுத்து அவருடைய முதுகைக் காயப்படுத்தியது அவளுடைய விரத மகிமைக்குப் பொருந்துமோ
என்று சிலர் ஐயுறலாம். ஆனால், அவள் உயர்ந்த பதிவிரதையாகிய காரணம் பற்றியே, எத்தனைக்கு
எத்தனை விரைவாக நடத்துதல் சாத்தியமோ அத்தனைக்கத்தனை விரைவாக அவரை அஞ்ஞான விஷயத்திலிருந்து
பரிபூர்ணமாக விடுவித்து அவருக்கு ஞானாமிர்தத்தைப் புகட்டவேண்டுமென்ற கருத்துடையவளாயினாள்.
ஜீவாமிர்தமாகிய தர்ம பத்தினியின் காதலை ஒரு பரம மூடன்
வேப்பெண்ணெய்க்கு ஒப்பாகக் கருதி வருமிடத்தே, கூடிய அளவு விரைவில் அவனுக்கு என்ன கஷ்டம்
விளைவித்தேனும் அவனை அந்த மகா நரகமாகிய அஞ்ஞானத்தினின்றும் வெளியேற்ற முயலுவதே தனது
முக்கியக் கடமையென்று அவள் நியாயமாக நிச்சயித்தாள். அவனுக்கு சாசுவதமான ஞானமும் நித்ய
இன்பமும் ஏற்படுத்திக் கொடுத்து அவனைக் காப்பாற்ற வேண்டுமென்று கருதி, அதனால் அவனுக்குச்
சிறிது காலம் வரை அதிக சிரமங்கள் ஏற்பட்ட போதிலும் தீங்கில்லையென்று தீர்மானம் செய்தாள்.
ஒருவன் காலில் ஆழமாக விஷமுள் பதிந்திருக்கையில் அதை ஊசி கொண்டெடுக்கும்போது அவன் அந்த
ஊசி குத்தும் வேதனையைப் பொறுக்கமாட்‘மல் முள்ளையெடுக்க முயலாதபடி மிட்டாய் தின்று தன்
மனதை அந்த நோயினின்றும் புறத்தே செலுத்த வேண்டுமென்று விரும்புவானாயின், அவனுக்கு இதத்தை
நாடுவோர் அப்போது செய்யத்தக்கது யாது? அவனுக்கு ஊசி குத்துவதனால் வேதனையைப் பொருட்டாகக்
கூடாதென்று அவனிடம் நிஷ்கருணையாகத் தெரிவித்து விட்டு ஊசியை ஆழமாகப் பதித்து விஷமுள்ளை
எடுத்துக் களைதல் நன்றா? அல்லது, ஊசியைப் புறத்தே போட்டு விட்டு அவனுக்கு ஜிலேபி காபியால்
விஷமுள்ளின் செயலை நிறுத்திவிடலாம் என்று அவன் நினைப்பது மடமையன்றோ? அதற்கு நாம் இடங்கொடுக்கலாமோ?
அவன் அழ அழ, ஊசியை அழுத்தி விஷமுள்ள எடுத்தெறுந்தாலன்றி அவனுக்கு விஷமுள்ளின் செய்கையால்
மரணமேற்படுமென்பதை அவனுக்கு வற்புறுத்திக் கூறி எங்ஙனமேனும் ஊசியை உபயோகித்தலன்றோ உண்மையான
அன்புக்கும் கருணைக்கும் அடையாளமானது?
இங்ஙனம் ஆலோசனை புரிந்தே, முத்தம்மா நமது சோமநாதய்யருக்கு
அடிக்கடி விளாற்றுப் பூஜைகள் நடத்தி வந்தாள். இங்ஙனம் நல்லெண்ணங் கொண்டே அவள் தம்மிடம்
கடுஞ் சொற்களும், கடுநடைகளும் வழங்குகிறாளென்ற விஷயம் நாட்பட, சோமநாதய்யருக்கும் சிறிது
சிறிது அமர்த்தமாகத் தொடங்கிவிட்டது. இருந்தபோதிலும் அவரால் சகிக்கமுடியவில்லை.
காதற்கோயில் மிகத் தூய்மைகொண்ட கோயில் . ஒரு முறை அங்கு
போய்ப் பாவஞ் செய்து வெளியே துரத்துண்டவன் மீளவும் அதனுள்ளே புகுமுன்னர் அவன் படவேண்டிய
துன்பங்கள் எண்ணிறந்தன.
கண்ணைக் குத்திப் பார்வையை அழித்துக் கொள்ளுதல் சுலபம்.
ஆனால் இழந்த பார்வையை மீட்டும் ஏற்படுத்திக் கொள்ளுதல் எளிதில் இயல்வதொரு காரியமா?
சோமநாதய்யருக்குக் குருட்டுக் கண்ணை மாற்றி மறுபடி நல்ல கண் கொடுக்கவேண்டுமென்ற விருப்பத்துடன்
முத்தம்மா வேலை செய்தாள். அதில் அவள் செய்த சிகிச்சைகள் அவருக்கு சகிக்க முடியாதனவாகவேயிருந்தன.
ஆனால் எப்படியேனும் தாம் இழந்த பார்வையை மீட்டும் பெறவேண்டுமென்ற
பேராவல் அவருக்கும் இருந்தபடியால், சிகிச்சையிலுண்டாகிய சிரமங்கள் பொறுக்க முடியாதனவாகத்
தோன்றினும், பல்லைக் கடித்துக் கொண்டு, தம்முடைய முழு சக்தியையும் செலுத்தி ஒருவாறு
சகித்துக் பழகினார்.
எனவே முத்தம்மாளை ஓயாமல் தம்முடன் இருக்கும்படிக்கும்
பேசும்படிக்கும் வற்புறுத்தத் தொடங்கினார். இவர் எத்தனைக்கெத்தனை அவளுறவையும் ஊடாட்டத்தையும்
விரும்பத் தொடங்கினாரோ, அத்தனைக்கு அத்தனை அவள் இவரிடமிருந்து ஒதுங்கவும் மறையவும்
தொடங்கினாள். ''இவளை நாம் காதலுக்கு யோக்யதையில்லாத மனையடிமைப் புழுக்கச்சியாகவும்
குழந்தை வளர்க்கும் செவிலியாகவும் நடத்தி வந்தோம். அப்போதெல்லாம் இவள் நமக்கு மிகவும்
பணிவுடன் அடிமையிலும் அடிமையாய் நடந்து வந்தாள். இப்போது நாம் பரமார்த்தமாக இவளுடைய
அன்பைக் கருதி அதனை வேண்டிச் சருவப் புகுந்தபோது, இவள் பண்ணுகிற மோடியும் இவள் செய்யும்
புறக்கணிப்புகளும் பொறுக்க முடியவில்லையே! இதென்னடா கேலி! சொந்தப் பெண்டாட்டியைக் காதலிராணியாகக்
கொண்டாடப் போனவிடத்தே அவள் நம்மை உதாசீனம் பண்ணினாள். என்ன செய்வது? பதிவிரதையாவது,
வெங்காயமாவது? நாம் இளமை தவறிவிட்டோமென்பது கருதி இவள் நமது காதலை உண்மையாகவே அருவருக்கிறாளோ,
என்னவோ? எவன் கண்டான்? ஸ்திரீகளுடைய இருதயத்துக்கு ஆழங் கண்டோன் யார்? கடலாழங் காணுதல்
எளிது; மாதர் மனத்தை ஆழங் காணுதல் அரிது. ஆண்மக்களைக் காட்டிலும் பெண்களுக்கு எட்டு
மடங்கு அதிகம் காமமென்று நீதி சாஸ்திரம் சொல்லுகிறது. எனவே, தலை வழுக்கையாய், நரை தொடங்கிக்
கிழப்பருவத்திலே புகத்தொடங்கிய என்னிடம் இவள் உண்மையாகவே அவமதிப்புக் கொண்டாளெனின்
அ·தோர் வியப்பாகமாட்டாது. என்னே உலக விசித்திரம்! என் குடும்பத்தில் மாத்திரமா, உலக
முழுமையிலும் மனிதரெல்லாரும் வீட்டுப்பெண்டாட்டியென்றால் அவள் தன் விருப்பத்துக்கு
கடமைப்பட்ட அடிமைச்சியாகவே கருதுகிறார்கள். புதியதொரு சித்திரத் தெய்வத்தின்மீது காதல்
கொள்வதுபோல் நான் சொந்தப் பெண்டாட்டியிடம் காதல் செய்யப் புகுமிடத்தே, அவள் என்னை இப்படிக்
கேலி பண்ணுகிறாள். எனிலும் இவள் பதிவிரதையல்லளென்று கருதவும் நியாயமில்லை. எனது பெற்ற
தாய் இறக்கப் போகுந் தருணத்தில் இவள் மகா சுத்தமான பதிவிரதையென்று சொல்லிவிட்டு மடிந்தாளே.
அவள் தீர ஆராய்ச்சி செய்து நிச்சயப்படுத்தாத வார்த்தையை மரண காலத்தில் சொந்த மகனிடம்
சொல்லக் கூடுமென்று நினைக்க இடமில்லையே. தாய் நம்மிடம் பொய் சொல்லிவிட்டா போவாள்? மேலும்,
அவள் இந்த வார்த்தை என்னிடம் சொல்லிய காலத்தில், அவளுடைய முகத்தை நான் நன்றாக உற்று
கவனித்தேனன்றோ? அவள் அச்சொல்லைப் பரிசுத்தமான இருதயத்துடனம் உண்மையான நம்பிக்கையுடனும்
கூறினாளென்து அவள் முகத்தில் மிகத் தெளிவாக விளங்கிற்றன்றோ? மேலும், அவள் தீர ஆழ்ந்து
பாராமல் வஞ்சிக்கப்பட்டவளாய் அங்ஙனம் தவறாது நம்பிக்கை கொண்டிருக்கக் கூடுமென்று நினைக்கப்
புகுவோமாயின், அது பெரு மடைமைக்கு லட்சணமாகும். பாம்பின் கால் பாம்புக்குத் தெரியும்.
எத்துணை மறைந்த போதிலும் பெண் மர்மம் பெண்ணுக்குத் தெரிந்து விடுமன்றோ? ஒரு வருஷமா,
இரண்டு வருஷமா? இவளுடைய நடையை என் மாதா பத்து வருஷகாலமாக, இரவு பகல் கூடவேயிருந்தது
மிகவும் ஜாக்கிரதையுடன் கவனித்து வந்தவளன்றோ? மேலும் என் மாதா புத்திக்கூர்மையில்லாத
மந்தமா? இருபது கம்பிளியை போட்டு ஒரு ரகசியத்தை மூடி வைத்தாலும், அது அவளுடைய கண்களுக்குத்
தெரிந்து விடுமன்றோ? தாய் சொல்லியதை மறுப்பதில் பயனில்லை. அதில் ஐயப்படுவது மூடத்தனம்.
'ஐயமுற்றான் அழிவுறுவான்' என்று பகவத் கீதையில் கண்ணபிரான் அருளிச் செய்திருக்கிறானன்றோ?
நிச்சயமாக நம்முடைய புத்திக்குப் புலப்படும் உண்மையன்றைப் பற்றி வீண் சம்சயப் படும்
அதிகாரம் மனத்துக்குக் கொடுப்போமாயின், அது நம்மை நரகத்தில் கொண்டு சேர்க்கும். நம்முடைய
முத்தம்மா பதிவிரதைதான். நம்முடைய உண்மையைச் சோதி த்-தறியும் பொருட்டாகவே, நம்மை இந்த
வலிய சோதனைகளுக்கு உட்படுத்துகிறாள். இதனால் நாம் அவளிடம் கொண்டிருக்கும் பிரேமைத்
தழல் அவிந்து போக இடங் கொடுக்கக்கூடாது. இதனால் நாம் அவளிடம் விரசப்படலாகாது. அவள்
தான் நமக்குத் தாரகம். வேறு புகல் நமக்கில்லை. எக்கலாத்திலும் நம்முடைய வழிகளை இருள்
மூடாத வண்ணம் நம் மாதா கருணையுடன் நிறுத்தி விட்டுப்போன நித்ய விளக்கன்றோ இந்தக் கண்மணி
முத்தம்மா? மேலும், மூட நெஞ்சமே! பாவியாகிய புழு நெஞ்சமே! முத்தம்மா நம்மை என்ன சோதனைகள்
செய்கிறாள்? ஊடல் தானே பண்ணுகிறாள்? ஊடலன்றோ காதலின் மிக இனிய பகுதியாவது?
உணவினும் உண்டதறலினிது காமம்
புணர்தலின் ஊட லினிது
என்றன்றோ சாட்சாத் பிரமதேவனுடைய அம்சபூதரும் மகாகவியுமாகிய
திருவள்ளுவ தேவர் அருளியிருக்கின்றார். நாய் மனமே! உனக்கு என் காதற் கிளியிடமிருந்த
இகழ்ச்சியெண்ணம் இன்னும் உன்னை முற்றிலும் விட்டு விலகவில்லை. 'இவளாவது? நம்மிடத்தில்
ஊடல் காட்டுவதாவது?' என்ற கர்வ சிந்தனையால், இந்த விஷயத்தில் மனதுக்குக் கஷ்டமேற்படுகிறதேயன்றி
வேறில்லை. இவள் என்ன காரணத்தால் உனக்கு இத்தனை துச்சமாய் விட்டாள்? துச்ச மனமே? இவளைக்
காதலிராணியென்று கொண்ட இடத்தில், உணர்வு, உயிர், உடம்பு என்ற மூன்றும் அவளுக்கே சமர்ப்பணமாகி
விட்டனவன்றோ? அவள் ஊடினால் அதுவும் ஓரின்பம். அவள் கூடினால் அதுவும் ஓரின்பம். மேலும்,
காதலி சொல்லும் வசை மொழிகளெல்லாம் நம்முடைய செவிகளில் அமிர்தம் போல் விழுவதன்றோ? ஆண்மைக்கு
லட்சணமாம்? காதலிப் பெண் உண்மையாகவே சினங் கொண்டோ அல்லது பொழுது போக்கின் பொருட்டாகவோ,
நம்மைத் திட்டினால், நாம் அந்தத் திட்டுக்களையெல்லாம் மிட்டாயென்று நினைப்பதன்றோ புருஷலட்சணம்?
அங்ஙனமின்றி அவளிடம் எதிர்த்துச் சினங் கொள்ளுதல் பேடித்தன்மையன்றோ? அவள் எது செய்தாலும்
அவளே நமக்குத் தெய்வம், அவளே நமக்கு இன்பம். அவள் வலிய வந்து நம்மை முத்தமிட்டபோதிலும்,
அவளருளே கதி. அவள் நமது தசையை வாளைக் கொண்டு அறுத்தபோதிலும், அதுவே நமக்கு சுவர்க்க
போகம்.''
என்று இங்ஙனம் நிலாமுற்றத்தில் நாற்காலியின் மீதுட்கார்ந்து
நிலவை நோக்கி ஆலோசனை செய்து கொண்டிருந்த சோமநாதய்யர் அப்படியே நித்திரையில் ஆழ்ந்து
விட்டார். பிறகு அவர் கண்ணை விழித்துப் பார்க்கையிலே, சந்திரன் உதித்த இடத்தினின்றும்
நெடுந்தூரம் விலகிவந்திருப்பது கண்டார். மாலையில் சுமார் ஏழுமணிக்கு முத்தம்மா காபி
போட்டுக் குடித்துவிட்டு வருவதாகச் சொல்லி விட்டுக் கீழே போனாள். இப்போது மணி எத்தனையிருக்குமென்று
அவர் தம்முடைய சட்டைப் பையிலிருந்த கைக்கடிகாரத்தை எடுத்து நோக்கினார். நடுநிசி, பன்னிரண்டு
மணியாய் விட்டது. படுக்கையறைக்குள்ளே போய்ப் பார்த்தார். அங்கு திமிதிமியென்று மண்
எண்ணெய் மேஜை விளக்கு எரிந்து கொண்டிருந்தது. இன்னும் ஒரு கணம் இவர் தாமதப்பட்டு வந்திருப்பாரானால்
கண்ணாடிக் குழாய் வெடித்துப் போயிருக்கும். அதனிலும் பெரிய ஆபத்துக்கள் விளைந்தாலும்
விளைந்திருக்கும். இவர் விளக்கின் ஸ்திதியைப் பார்த்தவுடனே பளிச்சென்று பாயந்து திரியைக்
குறைத்தார். விளக்கு நேரே எரிந்தது. அவர்களுடைய படுக்கைய¨யில் மூன்று கட்டில்களுண்டென்று
முன்னமேயே சொல்லியிருக்கிறேன். அவற்றுள் ஒரு கட்டிலின் மீது அனந்த கிருஷ்ணனைத் தழுவிக்
கொண்டு முத்தம்மா படுத்திருந்தாள். மற்றொரு கட்டிலில் மூத்த குழந்தைகள் இரண்டும் படுத்திருந்தன.
சோமநாதய்யருடைய கட்டில் சும்மா கிடந்தது. முத்தம்மாளை எழுப்பிக் கீழே அழைத்துப் போய்
போஜனத்துக்கு ஏற்பாடு பண்ணலாமா என்று ஒரு கணம் சோமநாதய்யர் யோசனை பண்ணினார். அப்பால்,
''அறிவுடனே கண்ணை விழித்து நன்றாகப் பார்த்துக் கொண்டே படுகழியிற் போய் விழ்வதொப்பப்
பசியில்லாமல் உண்பதிலிருந்தே நோய்களும், சாவும் ஏற்படுதல் ப்ரத்ய‡மாகத் தெரிந்திருந்தும்
நாம் தினந்தோறும் பசியின்றி உண்டு மரணத்துக்கு வழிதேடுதல் பேதமையினும் பெரிய பெரும்
பேதைமையாகுமன்றோ?'' என்றொரு நினைப்பு அவருக்குண்டாயிற்று. ''இன்றைக்கு நல்ல நாள். பசியில்லாத
சமயங்களில் உபவாசம் போடுவதாகிய நல்ல வழக்கத்தை இன்றிரவே தொடங்கி விடுவோம். பிரிய ரத்தினமாகிய
முத்தம்மாளும் ஆழ்ந்து நித்திரை செய்கிறாள். இவளை இப்போ எழுப்பிச் சோறுபோடச் சொல்லித்
தொல்லைப்படுத்துதல் பாவமாகும். ஆதலால் 'உபவாசமே கிடப்போம்'' என்று தீர்மானம் பண்ணி,
சோமநாதய்யர் விளக்குத் திரியை மிகவும் சிறிதாக்கிக் குறைத்து மேஜையினின்றும் விளக்கையெடுத்துப்
படுக்கையறையின் மூலையன்றில் தரைமீது வைத்தார். மெல்ல வந்து முத்தம்மா துயிலெழாதபடி
மெதுவாக அவளைத் தழுவி அவளுடைய கன்னத்தில் ஒரு முத்தமிட்டார். பிறகு தம்முடைய கட்டிலின்
மீதேறிப் படுத்துக் கொண்டார். விரைவில் நித்திரை போய்விட்டார். அன்றிரவு முழுதும் சோமநாதய்யர்
மிகவும் ஆச்சரியமான இன்பக் கனவுகள் கண்டார்.