எழுதியவர்: தமிழ்த்தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர்
அமராவதி ஸ்ரீ சேஷையா சாஸ்திரிகளைத் தெரியாதார் தமிழ்நாட்டில் இரார். தென்னாட்டில் தோன்றிய ஆச்சாரிய புருஷர்களுள் அவர் ஒருவர். அவர் புதுக்கோட்டை ஸமஸ்தானத்தில் திவானாக இருந்தபோது செய்த திருத்தங்கள் பல. அவருடைய வாழ்க்கை நிகழ்ச்சிகள் மிக்க சுவையுள்ளன.
இராமச்சந்திரத் தொண்டைமானென்னும் அரசரே சேஷையா சாஸ்திரிகளைத் திவானாகப் பெற்ற பேறுடையவாராக இருந்தனர்.
புதுக்கோட்டையில் தொன்று தொட்டு வருஷந் தோறும் நவராத்திரி விழா மிகவும் சிறப்பாக நடை பெறும். வடமொழி, சங்கீதம் முதலியவற்றில் வல்ல வித்துவான்களும், வேதம், சாஸ்திரங்கள் முதலியவற்றில் தேர்ந்த அறிஞர்களும் அங்கே சென்று தக்க சம்மானங்களைப் பெற்றுச் செல்வார்கள், அன்னதானம் விசேஷமாக நடைபெறும். நூற்றுக் கணக்கான வித்துவான்கள் வந்து கூடுவார்கள். வாக்கியார்த்தம் நடைபெறும்; உபந்யாஸங்கள் செய்யப்படும். அவரவர்களுக்குத் தக்கபடி உபசாரம் செய்து அவரவர்கள் தங்கி இருக்க வசதியான இருக்கைகள் அமைக்கப்படும். தங்கியிருக்கும் நாட் களுக்கு அவர்களுக்கு அரண்மனையிலிருந்து உலுப்பைகள் வரும். சபைகள் நடைபெறுவது மிகவும் விமரிசையாக இருக்கும். விஜயதசமியன்றோ மறு நாளோ அந்த வித்துவான் களுக்கெல்லாம் ஏற்றபடி சம்மானங்கள் செய்யப்பெறும்.
சேஷையா சஸ்திரிகள் திவானாக வந்த பிறகு பல வகையாக உள்ள வித்துவான்களுடைய தகுதியை அறியும் பொருட்டு அவர்களுக்கு வினாப் பத்திரங்கள் கொடுத்துப் பரீக்ஷித்து அவர்கள் பெறும் அம்சத்தின் தரத்தை அறிந்து அதற்கேற்ற சம்மானம் செய்யும் வழக்கம் ஏற்பட்டது. இங்ஙனம் நடைபெறும் பரீக்ஷையில் தேறுபவர்களுக்கு அவர்களுடைய தகுதிக்கேற்ப பத்து ரூபாய் முதல் நூறு ரூபாய் வரையிற் பரிசு அளிக்கப் படும். நூறு ரூபாயே உயர்ந்த சம்மானம்; அதனை உத்தம சம்பாவனை என்று சொல்வார்கள். பரீக்ஷை நடைபெறும்போது சாஸ்திரிகள் உடனிருந்து கவனித்துவருவார். பிரசித்தர்களான வித்துவான்களுக்குப் பரீக்ஷை யில்லாமலே சம்மானங்கள் அளிக்கப்படும்.
இப்படி நடந்து வந்தமையால் வித்துவான்கள் தங்கள் தகுதிக்கேற்ற சம்மானங்களைப் பெற்றார்கள். தராதரமறிந்து பரிசளிப்பதையே பெரிதாகக் கருதுபவர்களாகிய அவர்கள் இந்த முறையின் சிறப்பை அறிந்து மிகவும் மகிழ்ந்தார்கள். வருஷத்திற்கு வருஷம் அதிகமான வித்துவான்கள் வர ஆரம்பித்தனர். அவர்களுக்கெல்லாம் வழக்கப்படியே மரியாதைகள் செய்யப்பெற்று வந்தன.
ஒரு வருஷம் நவராத்திரியில் ஸரஸ்வதி பூஜைக்கு முதல்நாள் சாஸ்திரிகள் வித்தியா மண்ட பத்தில் வித்துவான்களுடைய கூட்டத்தின் நடுவில் அமர்ந்திருந்தார். மறுநாள் இன்னார் இன்னாருக்கு இன்ன இன்ன சம்மானம் செய்வதென்று நிச்சயம் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது ஒருவர் அவரருகில் வந்து ஒரு கடிதத்தை நீட்டினார். அதில் "இதைக் கொண்டு வருபவரை உத்தம சம்பாவனை வரிசையில் சேர்த்துக்கொள்ள வேண்டும்" என்று எழுதப்பட்டிருந்தது. அதன் கீழ் அரசருடைய முத்திரை இருந்தது. சாஸ்திரிகள் அதைப் படித்துப் பார்த்து வியப்புற்றார். படித்தபின்பு கடிதம் கொணர்ந்தவரை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்தார். அந்த மனிதருடைய முகத்தில் சிறிதளவாவது அறிவின் ஒளியையே அவர் காணவில்லை. சாஸ்திரிகளுக்கு அவரைக் கண்டபோது புன்னகை உண்டாயிற்று; வந்தவரைப் பார்த்து "சந்தோஷம்! நீர் என்ன வேலை பார்த்து வருகீறீர்?" என்று கேட்டார்.
வந்தவர்: நான் மகாராஜாவுக்கு நீர்மோர் செய்து கொடுப்பேன்.
சாஸ்திரிகள்: அப்படியா! நீர் மோரில் என்ன சேர்ப்பீர்?
வந்தவர்: பெருங்காயம், சுக்கு, உப்பு, எலுமிச்சம்பழ ரஸம் முதலியவற்றைப் பக்குவமாகச் சேர்த்துத் தாளிதம் செய்வேன்; மகாராஜாவினுடைய விருப்பமறிந்து வேண்டியதைச் செய்து கொடுப்பேன்.
சஸ்திரிகள், "நல்ல காரியம். மகாராஜாவின் மனம் கோணாமல் செவ்வையாக நடந்துவாரும்; நல்லபேர் எடும்; போய் வாரும்" என்று சொல்லி அனுப்பிவிட்டார்.
வந்தவர் மிக்க சந்தோஷத்தோடு சென்றார். அவர் போன ஐந்து நிமிஷங்களுக்குப்பின் மற்றொருவர் வந்தார். அவரும் ஒரு கடிதத்தைச் சாஸ்திரிகளிடம் கொடுத்தார். அதிலும் முன்பு எழுதின படியே எழுதப்பட்டிருந்தது. சாஸ்திரிகளுக்குப் பின்னும் வியப்பு அதிகமாயிற்று. அவரும் முன்னவரைப் போன்றவரென்றே சாஸ்திரிகள் உணர்ந்து கொண்டார்; அவரைப் பார்த்து "நீர் மகாராஜவுக்கு என்ன பணி செய்து வருகிறீர்" என்று கேட்டார்.
வந்தவர்: நான் நல்ல ரஸம் செய்து கொடுப்பேன். சீரக ரஸம், மைசூர் ரஸம் முதலிய பலவகைகளில் மகாராஜாவுக்கு எது பிரீதியோ அதைச் செய்துதருவேன்.
சாஸ்திரிகள்: அப்படியா! சந்தோஷம், மகாராஜாவின் திருவுள்ளத்துக்கு உகந்தபடி தவறாமற் செய்துவாரும்.
வந்தவர் தம்முடைய நோக்கம் நிறைவேறு மென்று எண்ணி மிக்க ஊக்கத்துடன் போய் விட்டார்.
பிறகு ஒருவர் வந்தார்; மகாராஜாவின் முத்திரை யிட்ட கடிதமொன்றை நீட்டினார்; தாம் மகாராஜாவுக்கு வேப்பிலைக்கட்டி பண்ணித் தருவதாச் சொன்னார். சாஸ்திரிகள் அவரிடமும் பிரியமாகப் பேசி அனுப்பி விட்டார். இப்படியே பொடி செய்து தருபவரும், உடையணிவிப்பவரும், வேறு பணிவிடை செய்பவர்களுமாகப் பத்துப்பேர் வரையில் வந்து சாஸ்திரிகளிடம் கடிதங்களைக் கொடுத்துச் சென்றார்கள். சாஸ்திரிகள் அதில் ஏதோ சூது இருக்க வேண்டுமென்று எண்ணி அவர்கள் கொடுத்த கடிதங்களை யெல்லாம் வாங்கி வைத்துக் கொண்டார்.
மறுநாட்காலையில் சாஸ்திரிகள் எட்டுமணிக்கு அரசரைப் பார்க்கச் சென்றார். சாஸ்திரிகளைக் கண்டவுடன் அரசர் அவரை ஓர் ஆசனத்தில் இருக்கச்செய்தார். பிறகு, "நவராத்திரி உத்ஸவத்தில் தங்களுக்கு அதிக சிரமம்; எல்லாம் நன்றாக நடை பெறுகின்றனவா? கோயில்களில் தர்மங்கள் ஒழுங்காகச் செய்யப்பட்டு வருகின்றனவா? வித்வத்சபை இந்த வருஷம் எப்படி இருக்கிறது?" என்று கேட் டார்.
"எல்லாம் நன்றாக நடக்கின்றன. வித்துவான்கள் சென்ற வருஷத்தைக் காட்டிலும் இவ்வருஷம் அதிகமாக வந்திருக்கிறார்கள். சுமங்கலி பூஜை, கோயிற் காரியங்கள் முதலிய யாவும் குறைவல்லாமல் நடைபெறுகின்றன. எல்லோரும் திருப்தியாக இருக்கின்றார்கள்" என்றார் சாஸ்திரிகள்.
அரசர்: தாங்கள் கவனித்துவரும்போது குறைவு நேர்வதற்கு நியாயம் இல்லை. தாங்கள் செய்து வரும் உபகாரங்களை இந்த ஸமஸ்தானம் என்றைக்கும் மறவாது.
சிறிது நேரம் அரசரிடம் இவ்வாறு பேசியிருந்து விட்டு விடைபெற்றுக்கொண்டு சேஷையா சாஸ்திரிகள் பத்து அடி நடந்தார், பிறகு எதையோ நினைத்துக் கொண்டவர் போலத் திரும்பிவந்தார்.
அரசர் மிக விரைவாக, "என்ன? என்ன? சாஸ்திரி கள் ஏதாவது சொல்ல வேண்டுமோ?" என்று கேட்டார்.
சாஸ்திரிகள்: ஆமாம். இப்போது ஒன்று ஞாபகம் வந்தது. அதைச் சொல்லலாமென்று வந்தேன்.
அரசர்: சொல்லலாமே.
சாஸ்திரிகள்: இந்த வருஷம் வந்திருக்கிற வித்துவான்கள் கூட்டத்தைப் பார்க்கும்போது எனக்கே உள்ளம் பூரிக்கிறது. நம்முடைய ஸமஸ்தானத்துக்கு இந்தப் பெருமை ஒன்றே போதும். விஜயதசமியன்று எல்லா வித்துவானகளையும் ஒரு வரிசையாக வைத்து மகாராஜா அவர்களே பிரதக்ஷிணம் செய்து மரியாதை செய்யும் இந்த வழக்கம் வேறு எந்த இடத்திலும் இல்லை. இதனால் வேறு இடங்களுக்குச் செல்லாத மகா வித்துவான்கள்கூட இங்கே சம்மானம் பெறுவதைப் பெரிதாக எண்ணி வந்து போகிறார்கள். வேறு சில ஸமஸ்தானங்களில் கிடைக்கும் சம்மானங்களைக் காட்டிலும் இங்கே கிடைப்பது குறைவு. ஆனாலும் இந்தக் கௌரவத்தையே உயர்வாகக் கருதி வருகிறார்கள். எவ்வளவோ பிரசித்திபெற்ற வித்துவான்கள் வந்திருக்கிறார்கள். எல்லாம் நன்றாகவே இருக்கின்றன. ஆனால் இரண்டு தினங்களாக ஏதோ சில வார்த்தைகள் என் காதில் விழுகின்றன.
அரசர்: என்ன? என்ன? சொல்லவேண்டும்.
சாஸ்திரிகள்: அடுத்த வருஷம் இப்படி நடப்பது சந்தேகமென்று தோற்றுகிறது.
அரசர்: ஏன்? என்ன காரணம்?
சாஸ்திரிகள்: நான் அங்கங்கே இரகசியமாக ஆள் வைத்து அவரவர்கள் பேசுவதைக் கவனித்து வந்து சொல்லும்படி செய்வது வழக்கம். அதனால் எனக்கு இந்த விஷயம் தெரிந்தது. முன்பே சொல்ல மறந்துவிட்டேன். அவர்கள், 'நாமெல்லாம் இங்கே தாரதம்யம் அறிந்து கௌரவிக்கிறார்களென்று வருகிறோம். சம்மானத்தை உத்தேசித்து வரவில்லை. இந்த வரம்பு இந்த வருஷம் கெட்டுப் போகுமென்று தெரிகிறது. ஆராரோ சாமான்ய மனிதர்களெல்லாம் நம்முடன் வந்து உட்காரப் போகிறார்களாம். இந்த வருஷம் ஏதோ வந்து விட்டோம்; நடுவில் திரும்பிப்போவது நன்றாக இராது. அடுத்த வருஷம்முதல் வருவதில்லை; வந்தால் மதிப்புக் கெட்டுவிடும்' என்று அங்கங்கே கூடிப் பேசி வருகிறார்கள்.
அரசர்: அப்படி அவர்கள் எண்ணுவதற்கு என்ன காரணம்?
சாஸ்திரிகள்: உத்தம சம்பாவனை செய்யவேண்டு மென்று மகாராஜாவின் உத்தரவைக் கொண்டு வந்து சிலர் என்னிடம் கொடுத்தார்கள். அவர்களோடு சிறிது நேரம் பேசியிருந்து அனுப்பினேன். அவர்கள் தமக்கு உத்தம சம்பாவனை கிடைக்கப் போவதாகப் பலரிடம் உத்ஸாகத்தோடு சொல்லிக் கொண்டே போய்விட்டார்களென்று தோற்றுகின்றது. அதைக் கேட்ட வித்துவான்களெல்லாம் அதிருப்தியோடு பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
அரசர்: அடடா! நான் அப்படி ஒருவரையும் அனுப்பவில்லையே!
சாஸ்திரிகள் தாம் வாங்கி வைத்திருந்த கடிதங்களை உடனே எடுத்துக் காட்டினார். அரசர் அதைப் பார்த்துத் திகைத்தார்; "நான் அனுப்பவில்லையே" யாரோ பண்ணிய விஷம மென்றே எண்ணுகிறேன்" என்றார் அரசர்.
சாஸ்திரிகள்: இவைகளைக் கொண்டுவந்து கொடுக் கும்போது நான் வேறு என்ன நினைக்கமுடியும்? மகாராஜாவிடம் தொண்டுசெய்பவர்கள் கவலை யின்றி இருக்க வேண்டியது அவசியந்தானே? மகாராஜாவினுடைய வேலைக்காரனாகிய நான் மகாராஜா வின் திருவுள்ளத்தின்படி நடக்கவேண்டியவனல்லவா?
அரசர்: அப்படி அவசியமொன்றும் நேரவில்லையே.
சாஸ்திரிகள்: ஒருவேளை யாருக்கேனும் உதவி செய்யவேண்டுமென்று மகாராஜாவின் திருவுள்ளத்திற் படுமானால் எனக்குத் தனியே சீட்டு அனுப்பலாம்; நான் உசிதம்போல அவர்களுக்கு அநுகூலம் செய்வேன். வித்துவான்களுடைய வரிசையில் அவர்களைச் சேர்ப்பது நன்றாக இராது. மகாராஜா உத்தரவின்படி நான் செய்யக் காத்திருக்கிறேன். அவர்களுக்குக் கொடுக்கும் பணத்தைக் குதிரைக்கான கொள்ளுச் செலவென்று எழுதிக் கொள்ளலாம்; பசுவின் புல்லுக்குரிய செலவில் சேர்த்துக் கொள்ளலாம்; பருத்திக் கொட்டைச் செலவில் எழுதலாம்; வாணமருந்துச் செலவில் கூட்டிக்கொள்ளச் செய் கிறேன். அதனாற் குற்றமில்லை.
அரசர் தம்மிடமுள்ள வேலைக்காரர்களைக் கூப் பிட்டு யார் கடிதம் கொடுத்தாரென்று விசாரித்தார். ஒவ்வொருவரும் "நான் அல்ல","நான் அல்ல" என்றே சொல்லிவிட்டனர். பிறகு ஒருவர் மட்டும் தாம் செய்ததாக ஒப்புக் கொண்டார். அரசர் அவரைக் கண்டித்து அனுப்பினார்.
சாஸ்திரிகள் அரசரிடம் விடை பெற்றுச் சென்றார். வித்துவான்களுடைய சம்பாவனையும் வழக்கம்போலவே சிறப்பாக நடந்தது.
இந்த வரலாற்றைப் பிற்காலத்தில் என்னிடம் சாஸ்திரிகளே கூறியதுண்டு; அப்பொழுது அவர் "மகாராஜாவை வேலைக்காரர்கள் பலமுறை வற்புறுத்தி யிருக்கலாம். அவர் அவர்களுடைய நச்சுப் பொறுக்க முடியாமல் ஏதாவது அநுகூலமாக விடை கூறியிருப்பார். அதை அறிந்து மகாராஜாவோடு நெருங்கிப் பழகுபவர் யாரோ மகாராஜவினுடைய முத்தி ரையை வைத்துக் கடிதங்களைக் கொடுத்தனுப்பி விட் டார். நான் ஏமாந்து போகலாமா? இதை ராஜாவுக்குத் தெரிவிக்கவேண்டுமென்றே போய்ச் சொன்னேன். அந்தக் கடிதம் கொண்டு வந்தவர்களை, குதிரை, மாடு முதலியவைகளோடு சேர்க்க வேண்டுமேயன்றி வித்துவான்களோடு சேர்க்கக் கூடா தென்பதைக் குறிப்பாக மகாராஜாவிடம் சொல்லி விட்டேன். மகாராஜாவும் தெரிந்துகொண்டார்.
நான் சொன்ன விஷயங்களில் அநேகம் “என் கற் பனை" என்று சொல்லிச் சிரித்தார்.
"பொய்மையும்
வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கு மெனின்."
நன்மை பயக்கு மெனின்."
என்ற குறள் அப்போது என் ஞாபகத்துக்கு வந்தது.
2 comments:
எப்படியெல்லாம் நல்ல மனிதர்கள் இருந்திருக்கின்றனர்!...
உத்தம சம்பாவனை -வியக்கவைத்தது ..!
Post a Comment