பாரதி பயிலகம் வலைப்பூ

Friday, October 25, 2013

பெண் விடுதலை (3)

மாதர் - பெண் விடுதலை (3)

நிகழும் காளயுக்தி வருஷம் சித்திரை மாதம்31-ம் தேதி திங்கட்கிழமை யன்று மாலை புதுச்சேரியில்ஸ்ரீ சி. சுப்பிரமணிய பாரதி வீட்டில் திருவிளக்கு பூஜைசெய்யப்பட்டது. சுமார் ஏழெட்டு ஸ்திரீகள் கூடி விளக்குபூஜை முடித்துப் பாட்டுகள் பாடினர். அப்பால் ஸ்ரீ வ.வே. சுப்பிரமணிய அய்யரின் பத்தினியாகிய திருமதிபாக்கியலக்ஷ்மியம்மாள் பின்வரும் உபன்யாஸம்புரிந்தனர்:-
ஊக்கம்
சகோதரிகளே,
பெண் விடுதலை முயற்சிக்கு இந்த ஊர்"ஸ்திரீகள் தகுந்த படி உதவி செய்யவில்லையென்று நாம்மனவருத்தப்பட்டு நம்முடைய நோக்கத்தைத் தளரவிடக்கூடாது. நாம் செய்யும் கார்யம் இந்த ஒரூர் ஸ்திரீகளுக்குமாத்திரமேயன்று; பூமண்டலத்து ஸ்திரீகளுக்காக நாம்பாடுபடுகிறோம்.
உலகமெங்கும் விடுதலை யருவிநீர் காட்டாறுபோலே ஓடி அலறிக்கொண்டுவரும் ஸமயத்தில் நீங்கள்நாவு வறண்டு ஏன் தவிக்கிறீர்கள்?
ஸகோதரிகளே, தயங்காதீர்கள், மலைக்காதீர்கள்.திரும்பிப் பாராமல் நாம் செய்யவேண்டிய எந்தக்கார்யத்தையும் நிறைவேற்றும் வரை - நம்முடையலக்ஷ்யத்தை அடையும் வரை - முன் வைத்த காலைப்பின் வைக்காமல் நடந்து செல்லுங்கள். பேடிகளாயிருந்தால்திரும்புங்கள்.
நாம் கொண்ட காரியமோ பெரிது. இதற்குப்பெரிய இடையூறுகள் நிச்சயமாக நேரிடும். ஆனால்நீங்கள் பயப்படக் கூடாது.
'பயமே பாபமாகும்' என்று விவேகாநந்தர்"சொல்லியதை மறவாதீர்கள். நந்தனார் விடுதலைக்குப் பட்டசிரமங்களை நினைத்துப் பாருங்கள்.
உங்களில் ஒவ்வொருவருடைய கொள்கைகளைஇன்று வாய் விட்டு விஸ்தாரமாகச் சொல்லிவிடுங்கள்.மனதிலுள்ள பயம், வெட்கம் என்ற பேய்களை தைர்யவாளால் வெட்டி வீழ்த்திவிட்டு பாரத ஸஹோதரிகள்பாரதமாதாவுக்குத் தெரிவிக்க வேண்டுமென்பதே என்னுடையப்ரார்த்தனை. ஓம் வந்தே மாதரம்.
ஸ்ரீரங்கப் பாப்பா
பிறகு ஸ்ரீமான் மண்டயம் ஸ்ரீநிவாஸாசாரியார்குழந்தை ரங்கா பின் வரும் உபந்யாஸத்தை படித்தது:-
அநாகரீக ஜாதியார்
இந்தியாவில் முன்பு ஆரியர் குடியேறு முன்னேஇருந்த பூர்வீக ஜனங்கள் கருநிறமாகவும் சப்பை மூக்காகவும்இருந்தார்கள்; நாகரீகமற்ற பேதை ஜனங்கள். அவர்களுடையசந்ததியார் இப்போது சில குன்றுகளின் மீதும் சில"கனிகளிடையிலும் வஸிக்கின்றனர். இந்த வகுப்பைச் சேர்ந்தஜூலாஸ் குலக் என்ற ஜாதி ஒன்று இப்போது ஒரிஸ்ஸாதேசத்தில் இருக்கிறது. துரைத்தனத்தார் அந்த ஜாதிக்குஇனாமாகத் துணி கொடுத்துக் கட்டிக் கொள்ளும்படி செய்து,துணி கட்டிக் கொள்வோருக்கு வெகுமதி கொடுத்துத் துணிகட்டும் நாகரீகத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்படுத்திக்கொண்டு வருகிறார்கள். இதுவரை அந்த ஜாதியார் இவைகளைஉடைபோல் உடுப்பது வழக்கம். இந்த அநாகரீக ஜாதியிலுள்ளமனுஷ்யர் கூடப் பெண்களை மிருகங்கள் மாதிரியாகவேநடத்துகின்றனர்! ஆதலால், நம்முடைய ஆண் மக்கள் நம்மைக்கீழாக நடத்துவது தங்களுடைய உயர்ந்த அறிவுக்குலக்ஷணமென்று நினைத்தால் சரியில்லை. நம்மைக் காட்டிலும்ஆண் மக்கள் சரீர பலத்தில் அதிகம். அதனால் நம்மைஇஷ்டப்படி ஸஞ்சரிக்க வொட்டாமலும் பள்ளிக்கூடம் போய்படிக்கவொட்டாமலும் தடுக்க முடிந்தது. இதனால் அவர்கள்நம்மைவிட மேலென்று நினைத்துக்கொள்ளுதல் தவறு.

அப்பால் மேற்படி கூட்டத்தில் சகுந்தலா பின்வரும்பாட்டுப் பாடினாள்.
சீனபாஷையில் 'சீயூ சீன்' என்ற ஸ்திரீ பாடியபாட்டின் தமிழ் மொழி பெயர்ப்பு.
விடுதலைக்கு மகளி ரெல்லோரும்
வேட்கை கொண்டனம்; வெல்லுவமென்றே
திட மனத்தின் மதுக் கிண்ணமீது
சேர்ந்து நாம் பிரதிக்கினை செய்வோம்
" உடையவள் சக்தியாண் பெண்ணிரண்டும்
ஒரு நிகர் செய் துரிமை சமைத்தாள்,
இடையிலே பட்ட கீழ் நிலை கண்டீர்
இதற்கு நாமொருப்பட்டிருப்போமோ?           (1)
திறமையா லிங்கு மேனிலை சேர்வோம்.
தீய பண்டை யிகழ்ச்சிகள் தேய்ப்போம்
குறைவிலாது முழுநிகர் நம்மைக்
கொள்வ ராண் களெனி லவரோடும்
சிறுமை தீர நந்தாய்த் திரு நாட்டைத்
திரும்ப வெல்வதிற் சேர்ந்திங் குழைப்போம்
அற விழுந்தது பண்டை வழக்கம்
ஆணுக்குப் பெண் விலங்கெனு மஃதே         (2)
விடியு நல்லொளி காணுதி நின்றே
மேவு நாக ரீகம் புதிதொன்றே!"     
கொடியர் நம்மை யடிமைக ளென்றே,
கொண்டு தாமுதலென்றன ரன்றே!
அடியொடந்த வழக்கத்தைக் கொன்றே
அறிவு யாவும் பயிற்சியில் வென்றே
கடமை செய்வீர் நந்தேசத்து வீரக்
காரிகைக் கணத்தீர் துணிவுற்றே.               (3)
அப்பால் சில பெண்கள் பேசினர். மங்களப் பாட்டுடன்'மஞ்சள் குங்கும'க் கூட்டம் முடிவு பெற்றது.


Thursday, October 24, 2013

பெண் விடுதலை (2)

மாதர் - பெண் விடுதலை (2)

அடிமைகள் யாராயினும், அவர்களுக்கு விடுதலைகொடுத்தால், அதினின்றும் யுகப்பிரளயம் நிச்சயமாக நேரிட்டு,அண்டச் சுவர்கள் இடிந்து போய் ஜகத்தே அழிந்துவிடும்என்று சொல்லுதல் அவர்களை அடிமைப்படுத்திஆள்வோருடைய ஸம்பிரதாயம்.
இருபது முப்பது வருஷங்களுக்கு முன்பு, பெண்கல்வி ஏற்பட்டால் மாதர் ஒழுக்கத்தில் தவறி விடுவார்களென்று தமிழ் நாட்டில் பலர் கூறினர். இப்போதோ,பெண் கல்வி தமிழ்நாட்டில் சாதாரணமாகப் பரவியிருக்கிறது.அண்டச் சுவர்கள் இன்னும் இடிந்து போகவில்லை. இதுவரைகூடிய மட்டும் பத்திரமாகவே இருந்து வருகின்றன. ஆனால்,இப்பொழுது பெண்களுக்கு விடுதலை கொடுத்தால்,ஏழுலோகமும் கட்டாயம் இடிந்து பூமியின்மேல் விழும்என்றும், வால் நக்ஷத்திரம் வகையராக்களெல்லாம் நடுவிலேஅகப்பட்டுத் துவையலாய் விடும் என்றும் பலர்நடுங்குகிறார்கள். 'மதறாஸ் மெயில்' போன்ற ஆங்கிலேயப்பத்திராதிபதியிடம் போய் இந்தியாவிற்கு சுயராஜ்யம்கொடுத்தால் என்ன நடக்கும் என்று கேளுங்கள். ''ஓஹோ!ஹோ! ஹோ! இந்தியாவிற்கு சுயராஜ்யம் கொடுத்தால்பஞ்சாபிகள் ராஜபுத்திரரைக் கொல்வார்கள். பிறகு, ராஜபுத்திரர்மஹாராஷ்டிரரின் கூட்டத்தையெல்லாம் விழுங்கிப் போடுவார்கள்.அப்பால், மஹாராஷ்டிரர் தெலுங்கரையும் கன்னடரையும்மலையாளிகளையும் தின்றுவிடுவார்கள். பிறகு மலையாளிகள்தமிழ்ப் பார்ப்பாரையும், தமிழ்ப் பார்ப்பார் திராவிடரையும்,"சூர்ணமாக்கி விடுவார்கள். சூர்ணித்த திராவிடர் வங்காளிஎலும்புகளை மலையாகப் புனைவர்' என்று சொல்லிப் பெருமூச்சுவிடுவார். அதே கேள்வியை நீதிபதி மணி அய்யர்,கேசவப்பிள்ளை, சிதம்பரம் பிள்ளை முதலியவர்களைப் போய்க்கேளுங்கள். 'அப்படி பெரிய அபாயம் ஒன்றும் உண்டாகாது.ஸ்வராஜ்யம் கிடைத்தால் கஷ்டம் குறையும். பஞ்சம் வந்தால்அதைப் பொறுக்கத் திறன் உண்டாகும். அகால மரணம்நீங்கும் அவ்வளவுதான்' என்று சொல்லுவார்கள்.
அதுபோலவே, பெண்களுக்கு விடுதலைகொடுத்ததனால் ஜனசமூகம் குழம்பிப் போய்விடும் என்றுசொல்லுவோர், பிறர் தமது கண்முன் ஸ்வேச்சையுடன்வாழ்வதை தாம் பார்க்கக்கூடாதென்று அசூயையால்சொல்லுகிறார்களேயொழிய வேறொன்றுமில்லை. விடுதலைஎன்றால் என்ன அர்த்தம்? விடுதலை கொடுத்தால் பிறஸ்திரீகள் என்ன நிலையில் இருப்பார்கள்? பெண்களுக்குவிடுதலை கொடுக்க வேண்டும் என்றால் என்னசெய்யவேண்டும்?  வீடுகளை விட்டு வெளியேதுரத்திவிடலாமா? செய்யவேண்டிய விஷயமென்ன என்றுபலர் சங்கிக்கலாம். இங்ஙனம் சங்கையுண்டாகும்போதுவிடுதலையாவது யாது  என்ற மூலத்தை விசாரிக்கும்படிநேரிடுகிறது. இதற்கு மறுமொழி சொல்லுதல் வெகுசுலபம். பிறருக்குக் காயம் படாமலும், பிறரை அடிக்காமலும்,வையாமலும், கொல்லாமலும், அவர்களுடைய உழைப்பின்பயனைத் திருடாமலும், மற்றபடி ஏறக்குறைய ''நான் ஏதுபிரியமானாலும் செய்யலாம்'' என்ற நிலையில் இருந்தால்மாத்திரமே என்னை விடுதலையுள்ள மனிதனாகக் கணக்கிடத்தகும்''பிறருக்குத் தீங்கில்லாமல் அவனவன் தன் இஷ்டமானதெல்லாம்செய்யலாம் என்பதே விடுதலை'' என்று ஹெர்பர்ட் ஸ்பென்ஸர்சொல்லுகிறார்.
இந்த விதிப்படி உலகத்தில் பெரும்பான்மையானஆண் மக்களுக்கே விடுதலை உண்டாகவில்லை. ஆனால்இவ்விடுதலை பெரும் பொருட்டாக நாடுதோறும் ஆண்மக்கள் பாடுபட்டு வருகிறார்கள். ஆண்மக்கள்ஒருவருக்கொருவர் அடிமைப்பட்டிருக்கும் கொடுமை சகிக்கமுடியாது ஆனால், இதில் ஏற்படும் கஷ்ட நஷ்டங்களைக்காட்டிலும் பல்லாயிர மடங்கு அதிகக் கஷ்ட நஷ்டங்கள்பெண் கூட்டத்தை ஆண் கூட்டம் அடிமைப்படுத்திவைத்திருப்பதால் விளைகின்றன.
அடிமைத் தேசங்களிலே கூட ஆண் மக்களிற்பெரும் பாலோர் - அதாவது ரஹஸ்யப் போலீஸ்"உபத்திரவத்திற்கு இடம் வைத்துக்கொண்டவர். தவிரமற்றவர்கள் - தம் இஷ்டப்படி எந்த ஊருக்குப் போகவேண்டுமானாலும், போகலாம், எங்கும் சஞ்சரிக்கலாம்.தனியாக சஞ்சாரம் பண்ணக்கூடாதென்ற நியதி கிடையாது.ஆனால் பெண் தன்னிஷ்டப்படி தனியே சஞ்சரிக்க வழியில்லாததேசங்களும் உள. அவற்றில் நமது தேசத்தில் பெரும் பகுதிஉட்பட்டிருப்பதைப் பற்றி மிகவும் விசனப்படுகிறேன்.
'ஓஹோ! பெண்கள் தனியாக சஞ்சாரம் செய்யஇடங்கொடுத்தால் அண்டங்கள் கட்டாயம் இடிந்து போகும்.ஒருவிதமான நியதியும் இருக்காது. மனுஷ்யர் மிருகப்பிராயமாய்விடுவார்கள்' என்று சில தமிழ்நாட்டு வைதிகர் நினைக்கலாம்.அப்படி நினைப்பது சரியில்லை. ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும்பெண்கள் இஷ்டப்படி எங்கு வேண்டுமானாலும் போகலாமென்றுவைத்திருக்கிறார்கள். அதனால் பூகம்ப மொன்றும் நேர்ந்துவிடவில்லை. ஸ்ரீமதி அனிபெஸண்டை நம்மவர்களிலே பலர் மிகவும்மரியாதையுடன் புகழ்ந்து பேசுகிறார்கள். ''அவரைப்போலே நமதுஸ்திரீகள் இருக்கலாமே'' என்றால், நம்மவர் கூடாதென்று தான்சொல்லுவார்கள். காரணமென்ன?  ஐரோப்பிய ஸ்திரீகளைக்காட்டிலும் நமது ஸ்திரீகள் இயற்கையிலே நம்பத்தகாதவர்கள்என்று தாத்பர்யமா?
''மேலும் ஐரோப்பியரை திருஷ்டாந்தம் காட்டினால்"நமக்கு ஸரிப்படாது. நாம் ஆரியர்கள், திராவிடர்கள். அவர்களோ,கேவலம் ஐரோப்பியர்'' என்று சொல்லிச்சிலர் தலையசைக்கலாம்.
சரி, இந்தியாவிலே மஹாராஷ்டிரத்தில் ஸ்திரீகள்யதேச்சையாகச் சஞ்சாரம் பண்ணலாம். தமிழ் நாட்டில் கூடாது.ஏன்?
பெண்களுக்கு விடுதலை கொடுப்பதில் இன்னும்முக்கியமான - ஆரம்பப் படிகள் எவையென்றால்:-
(1) பெண்களை ருதுவாகு முன்பு விவாகம் செய்துகொடுக்கக் கூடாது.
(2) அவர்களுக்கு இஷ்டமில்லாத புருஷனைவிவாகம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தல் கூடாது.
(3) விவாகம் செய்துகொண்ட பிறகு அவள் புருஷனை"விட்டு நீங்க இடங்கொடுக்க வேண்டும். அதன் பொருட்டுஅவளை அவமானப்படுத்தக் கூடாது.
(4) பிதுரார்ஜிதத்தில் பெண்குழந்தைகளுக்கு ஸமபாகம்செய்து கொள்வதைத் தடுக்கக்கூடாது.
(5) விவாகமே இல்லாமல் தனியாக இருந்து வியாபாரம்,கைத்தொழில் முதலியவற்றால் கௌரவமாக ஜீவிக்க விரும்பும்ஸ்திரீகளை யதேச்சையான தொழில் செய்து ஜீவிக்கஇடங்கொடுக்கவேண்டும்.
(6) பெண்கள் கணவனைத் தவிர வேறு புருஷருடன்பேசக்கூடாதென்றும் பழகக்கூடாதென்றும் பயத்தாலும்பொறாமையாலும் ஏற்படுத்தப்பட்ட நிபந்தனையை ஒழித்து விடவேண்டும்.
(7) பெண்களுக்கும் ஆண்களைப் போலவே உயர்தரக்கல்வியின் எல்லாக் கிளைகளிலும் பழக்கம் ஏற்படுத்த வேண்டும்.
(8) தகுதியுடன் அவர்கள் அரசாட்சியில் எவ்விதஉத்யோகம் பெற விரும்பினாலும் அதைச் சட்டம் தடுக்கக்கூடாது.
(9) தமிழ் நாட்டில் ஆண்மக்களுக்கே ராஜரிக சுதந்திரம்இல்லாமல் இருக்கையிலே, அது பெண்களுக்கு வேண்டுமென்று இப்போது கூறுதல் பயனில்லை. எனினும் சீக்கிரத்தில்தமிழருக்கு சுயராஜ்யம் கிடைத்தால் அப்போது பெண்களுக்கும்"ராஜாங்க உரிமைகளிலே அவசியம் பங்கு கொடுக்க வேண்டும்சென்ற வருஷத்து காங்கிரஸ் சபையில் தலைமை வகித்தவர்மிஸஸ் அன்னிபெஸண்டு என்ற ஆங்கிலேய ஸ்திரீ என்பதைமறந்து போகக் கூடாது.
இங்ஙனம் நமது பெண்களுக்கு ஆரம்பப்படிகள்காட்டினோமானால், பிறகு அவர்கள் தமது முயற்சியிலே பரிபூரணவிடுதலை நிலைமையை எட்டி மனுஷ்ய ஜாதியைக்காப்பாற்றுவார்கள். அப்போதுதான் நமது தேசத்துப் பூர்வீகரிஷிபத்தினிகள் இருந்த ஸ்திதிக்கு நமது ஸ்திரீகள் வரஇடமுண்டாகும். ஸ்திரீகளை மிருகங்களாக வைத்து நாம் மாத்திரம்மஹரிஷிகளாக முயலுதல் மூடத்தனம். பெண் உயராவிட்டால்ஆண் உயராது.



பெண் விடுதலை

மகாகவி பாரதியார் "பெண் விடுதலை" எனும் தலைப்பில் எழுதியுள்ள கட்டுரைகளை இப்போது பார்க்கலாம். இவை எத்தனை முறை படித்தாலும் பயனுள்ளதாகவும், இன்றைய சூழ்நிலையில் ஒப்பிட்டுப் பார்க்கவும் பயன்படும் என்பதால் இதனை இங்கு கொடுக்கிறோம். முதலில் பகுதி 1.


மாதர் - பெண் விடுதலை (1)

இங்கிலாந்தில் பெண்களுக்கு வாக்குச் சீட்டுக்கொடுத்தாய்விட்டதென்று சில தினங்களின் முன்பு 'ராய்டர்' தந்திவந்தது. 'அதைப்பற்றிய பத்திராதிபர் குறிப்பொன்று ''ஸ்திரீகளின்ஐயம்'' என்ற மகுடத்துடன் சுதேசமித்திரன் பத்திரிகையில்எழுதப்பட்டிருந்தது. நேற்று மாலை நானும் என்னுடையசினேகிதர் சிரோமணி ராமராயரும் வேறு சிலருமாகஇருக்கையில் மேற்படி தேதி (அதாவது ''ஸ்திரீகளின் ஜயம்''எழுதியிருந்த) சுதேசமித்திரன் பத்திரிகையைக் கையில்"எடுத்துக்கொண்டு மோட்டு வீதி கோபாலய்யர் பத்தினிவேதவல்லி அம்மை வந்தார்.
வேதவல்லி அம்மைக்கு நாற்பது வயது. தமிழிலும்இங்கிலீஷிலும் உயர்ந்த படிப்பு. ஸமஸ்கிருதம் கொஞ்சம்தெரியும். இவளுடைய புருஷன் கோபாலய்யர் பெரிய சர்க்கார்உத்தியோகத்திலிருந்து விலகி பணச்செருக்கு மிகுந்தவராய் தமதுபத்தினியாகிய வேதவல்லியுடனும் நான்கு குழந்தைகளுடனும்சௌக்கியமாக வேதபுரத்தில் வாழ்ந்துவருகிறார். வேதவல்லிக்குஅவர் விடுதலை கொடுத்து விட்டார். எங்கும் போகலாம்,யாருடனும் பேசலாம். வீட்டுச் சமையல் முதலிய காரியமெல்லாம்ஒரு கிழவி பார்த்துக்கொள்கிறாள். வேதவல்லி அம்மை புஸ்தகம்,பத்திரிகை, சாஸ்திர ஆராய்ச்சி, பொதுக்கூட்டம் முதலியவற்றிலேகாலங்கழித்து வருகிறார்.
வேதவல்லி வரும்போது நான் ராமராயர்முதலியவர்களுடன் வேதவியாசர் செய்த பிரம்ம சூத்திரத்திற்குசங்கராச்சாரியர் எழுதின அத்வைத பாஷ்யத்தை வாசித்து அதன்சம்பந்தமாகத் தர்க்கித்துக் கொண்டிருந்தேன். அந்தச்சமயத்தில் வேதவல்லியார் வந்தனர். (ஒருமை பன்மை இரண்டும்பெண்களுக்கு உயர்வையே காட்டும்) வேதவல்லிக்கு நாற்காலிகொடுத்தோம். உட்கார்ந்தாள். தாகத்துக்கு ஜலம் கொண்டுவரச்சொன்னாள். பக்கத்திலிருந்த குழந்தையை மடைப்பள்ளியிலிருந்து"ஜலம் கொண்டு கொடுக்கும்படி ஏவினேன். அதனிடையே,வேதவல்லி அம்மை 'என்ன சாஸ்திரம் ஆராய்ச்சிசெய்கிறீர்கள்?' என்று கேட்டாள். சங்கரபாஷ்யம் என்றுசொன்னேன். வேதவல்லி சிரித்தாள். 'சங்கர பாஷ்யமா! வெகுஷோக். இந்துக்களுக்கு இராஜ்யாதிகாரம் வேண்டுமென்றுசொல்லித்தான் மன்றாடப்போய் ''அன்னிபெஸண்ட்'' வலைக்குள்மாட்டிக்கொண்டாள். அவள் இங்கிலீஷ்கார ஸ்திரீ. நம்முடையதேசத்து வீராதிவீரராகிய ஆண்பிள்ளைச் சிங்கங்கள் சங்கரபாஷ்யம் வாசித்துப்பொருள் விவரித்துக் கொண்டிருக்கிறார்கள்.க்ஷோக்! ஷேக்! இரட்டை ஷேக்!' என்றாள்.
ராமராயருக்குப் பளிச்சென்று கோபம் வந்துவிட்டது.'சரிதானம்மா, நிறுத்துங்கள். தங்களுக்குத் தெரிந்த ராஜயுக்த்திகள்பிறருக்குத் தெரியாதென்று நினைக்க வேண்டாம்' என்றார்.
இதைக் கேட்டவுடன் ராமராயர், ''நான் வீட்டுக்குப்போய்விட்டு வருகிறேன்'' என்று சொல்லி எழுந்து நின்றார்.நான் இரண்டு கட்சியையும் சமாதானம் பண்ணிக் கடைசியாகவேதவல்லியம்மை பொதுப்படையாக ஆண் பிள்ளைகளைஎவ்வளவு கண்டித்துப் பேசியபோதிலும் ராமராயரைச்சுட்டிக் காட்டி ஒரு வார்த்தையும் சொல்லக்கூடாது என்றுதீர்மானம் செய்துகொண்டோம். அப்பால் வேதவல்லிஅம்மையின் உபந்யாஸம் நடக்கிறது:-
''ஹிந்து ஸ்திரீகள் ராஜ்ய விவகாரங்களிற் சேர்ந்து"பாடுபடாதவரையில், இங்குள்ள புருஷர்களுக்கு விடுதலைஏற்பட நியாயமில்லை. இந்தத் தேசத்தில் ஆதிகாலத்துப்புருஷர் எப்படி யெல்லாமோ இருந்ததாகக் கதைகளில்வாசித்திருக்கிறோம். ஆனால் இப்போதுள்ள புருஷரைப் பற்றிப்பேசவே வழியில்லை. ஹிந்து ஸ்திரீகள் ராஜ்ய விவகாரங்களிலேதலையிட்டால் அன்னி  பெஸண்டுக்கு ஸமானமாக வேலைசெய்வார்கள். இங்குள்ள ஆண் பிள்ளைகள் வேதாந்தவிசாரணைக்கும் குமாஸ்தா வேலைக்கும் தான்உபயோகப்படுவார்கள். ராஜ்ய க்ஷேமத்தைக் கருதிதைர்யத்துடன் கார்யம் நிறைவேறும்வரை பாடுபடும் திறமைஇத்தேசத்துப் புருஷருக்கு மட்டு. ஸரோஜினி நாயுடு எவ்வளவுதைரியமாகப் பேசுகிறார்கள், பார்த்தீர்களா? உலகத்தில் எங்குமேபுருஷரைக் காட்டிலும் ஸ்திரீகள் அதிக புத்திசாலிகள் என்றும்,தைரியசாலிகள் என்றும் தோன்றுகிறது. மற்ற தேசங்களில்எப்படியானாலும், இங்கே பெண்ணுக்குள்ள தைர்யமும்புத்தியும் ஆணுக்குக் கிடையாது. இங்கிலாந்தில் பெண்கள்ஆண் பிள்ளைகளை வசப்படுத்தி எவ்வளவு சுலபமாகச்சீட்டு வாங்கி விட்டார்கள்.
ஹோ! ஹோ! அடுத்த தடவை இங்கிருந்துகாங்கிரஸ்காரர் இங்கிலாந்திற்கு ஸ்வராஜ்யம் கேட்கப்போகும்போது, அங்குள்ள புருஷரைக் கெஞ்சினால் போதாது.ஸ்திரீகளைக் கெஞ்சவேண்டும். அதற்கு இங்கிருந்து புருஷர்மாத்திரம் போனால் நடக்காது. இந்த தேசத்துப் புருஷர்களைக்கண்டால் அங்குள்ள ஸ்திரீகள் மதிக்கமாட்டார்கள். ஆதலால்,காங்கிரஸ் ஸபையார் நமது ஸ்திரீகளை அனுப்புவதே நியாயம்.எனக்கு இங்கிலீஷ் தெரியும். என்னை அனுப்பினால் நான்"போய் அங்குள்ள பெண் சீட்டாளிகளிடம் மன்றாடிஇந்தியாவுக்கும் சீட்டுரிமை வாங்கிக் கொடுப்பேன். பெண்பெருமை பெண்ணுக்குத் தெரியும். உங்களிடம் சொல்லிப்பிரயோஜனம் இல்லை' என்று சொன்னாள்.
ராமராயர்:- 'வேறு விஷயம் பேசுவோம்' என்றார்.தான் பாதி பேசும்போது, ராமராயர் தடுத்துப் பேசியதிலிருந்து,அந்த வேதவல்லி அம்மைக்குக் கோபம் உண்டாகி, 'நான்இவரைக் குறிப்பிட்டு ஒன்றும் சொல்லுவதில்லை யென்றும்,இவர் சும்மாயிருக்கவேண்டும் என்றும், ஆரம்பத்தில்செய்யப்பட்ட தீர்மானத்தை இவர் அதற்குள்ளே மறந்துவிட்டார்' என்று சொல்லி வெறுப்புடன் எழுந்து போய்விட்டார்.
நான் எத்தனையோ சமாதானம் சொல்லியும்கேட்கவில்லை. ''ராமராயர் இருக்கும் சபையிலே தான்இருக்கலாகாது'' என்று சொன்னாள். அந்த அம்மை சென்றபிறகு ராமராயர் ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தார்.'என்ன சொல்லுகிறீர்?' என்று கேட்டேன். 
ஸ்திரீகளுக்கு விடுதலை கொடுப்பது மிகவும்அவசியத்திலும் அவசியம் என்று ராமராயர் சொன்னார். பிறகுமறுபடி சங்கர பாஷ்யத்தில் இறங்கி விட்டோம்.


Tuesday, October 22, 2013

ஒரு நகைச்சுவை நடிகரின் தற்கொலை முயற்சி.

                               ஒரு நகைச்சுவை நடிகரின் தற்கொலை முயற்சி.
   தூத்துக்குடியில் ஒரு காங்கிரஸ்காரர். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர். பெருந்தலைவர் காமராஜ் அவர்களுக்கு நன்கு அறிமுகமான நண்பர். அவருடைய மகன். நடிப்புக் கலையில் திறமை உள்ளவர். அவர் பார்ப்பதற்கே நகைச்சுவை ததும்ப இருப்பார், அதிலும் அவருடைய நடிப்பு, பாட்டு இவைகளைப் பற்றி கேட்கவே வேண்டாம். அவர் திரைப்படங்களில் நடிக்க விரும்பி சென்னை வந்தார். பல ஸ்டுடியோக்களின் படிகளில் ஏறி இறங்கி தனக்கொரு வாய்ப்பு தருமாறு கேட்டார். பாவம், அவருக்கு எங்கு போனாலும் ஏமாற்றம். திறமை இருந்தும் அந்தத் திறமையைச் சோதித்து அவருக்கு யாராவது ஒரு வாய்ப்பைக் கொடுத்திருக்கலாம். நம் திரையுலகம் அப்படியொன்றும் அவருக்கு வாய்ப்புக் கொடுத்துவிடவில்லை. அவருக்கோ எப்படியும் படத்தில் நடித்துவிடவேண்டுமென்கிற ஆசை, இல்லை இல்லை வெறி. அவர் போகாத ஸ்டுடியோ கிடையாது, பார்க்காத இயக்குனர்கள் கிடையாது. எங்கு போனாலும் ஒரே பதில்; இல்லை.

ஒரு முடிவுக்கு வந்தார், கடைசியாக ஜெமினி ஸ்டுடியோவுக்குச் சென்று கேட்பது, அங்கு கிடைக்கலாம் என்ற நம்பிக்கை அவருக்கு. ஆனால் விதி யாரை விட்டது, அங்கும் 'இல்லை' என்று கைவிரித்து விட்டார்கள். ஏமாற்றத்தின் விளிம்பில் வாழ்ந்து கொண்டிருந்த அந்த இளைஞர் உணவு உட்கொள்ளாமையாலும், அலைந்து திரிந்து சோர்வுற்றிருந்ததாலும், ஏமாற்றத்தினாலும் ஜெமினி ஸ்டுடியோவுக்குள் மயங்கி விழுந்தார்.

சுற்றிலும் ஒரே பரபரப்பு. யாரோ ஒரு இளைஞர் மயங்கி விழுந்துவிட்டார். உடனே ஜெமினி நிர்வாகத்தார் ஒரு ஆம்புலன்சை அழைத்து அந்த இளைஞரை அதில் ஏற்றி ராயப்பேட்டை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கத் தொடங்கினர்.

அன்று நள்ளிரவைத் தாண்டிய நேரம். மணி 1-30 ஆகிவிட்டது. ராயப்பேட்டை மருத்துவமனையில் நினைவு திரும்பியிருந்த அந்த இளைஞரிடம் காவல்துறை அதிகாரிகள் வந்து விசாரித்தனர். அவர்களுடன் ஜெமினி ஸ்டுடியோவில் பணியாற்றிக் கொண்டிருந்த அழகிய இளைஞர் ஒருவர், பெயர் ஆர்.கணேஷ், பி.எஸ்.சி., அவருடன் கேமராமேன் தம்பு, ஜெமினி ஸ்டுடியோ முதன்மை நிர்வாகி சர்மா ஆகியோர் நின்று கொண்டிருக்கின்றனர். போலீஸ் அதிகாரி ரங்காச்சாரி நினைவு திரும்பிய இளைஞரிடம் கேள்விகள் கேட்கிறார்.

                                                                      ஆர்.கணேஷ்,
"தம்பி உன் பெயர் என்ன?"

"சந்திரபாபு"

"தற்கொலை செய்து கொள்வதற்காக விஷம் அருந்தினாயா?"

"ஆமாம்"

"ஏன்?"

"சினிமாவில் நடிக்க சான்ஸ் கேட்டு வந்தேன். யாரும் எனக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை...."

சிறிது அமைதி நிலவியது அங்கே. தொடர்ந்து அந்த இளைஞர் போலீஸ் அதிகாரியிடம் கேட்கிறார்:

"எனக்கு ஒரு சிகரெட் வேணும்". அதிகாரி ரங்காச்சாரி ஒன்றைக் கொடுத்தார். அது 'பிளேயர்ஸ்' பிராண்ட் சிகரெட். அதைப் பார்த்து சந்திரபாபு, "என் பிராண்ட் கோல்ட் ப்ளேக்" என்றார்.

போலீஸ் அதிகாரி ரங்காச்சாரி ஒரு கான்ஸ்டபிளை அனுப்பி அந்த பிராண்ட் சிகரெட் வாங்கிவரச் செய்து அவரிடம் கொடுத்தார்.

வழக்கு மாஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில் வந்தது. அரசாங்கத் தரப்பில் ஜெமினி ஸ்டுடியோவில் பணியாற்றிய ஆர்.கணேஷ், தம்பு, சர்மா ஆகியோர் சாட்சிகள்.

நீதிபதி கேட்டார், "ஏன் இப்படிச் செய்தாய்?"

"எனக்கு வாழ்க்கை வெறுத்துப் போச்சு. அதான் விஷம் குடித்தேன்."

"இனிமேல் இந்த மாதிரி செய்வியா?"

"சொல்ல முடியாது"

"ஏன் அப்படி சொல்றே?"

சந்திரபாபு உடனே தன் பாக்கெட்டிலிருந்து ஒரு தீப்பெட்டியை எடுத்தார், அதிலிருந்து ஒரு குச்சியை எடுத்து பெட்டியில் உரசி அந்த தீ ஜ்வாலையைத் தன் கையில் வைத்தார்.

"என்ன செய்கிறாய்?" நீதிபதி கேட்டார்.

"நான் செய்ததை உங்களால் பார்க்கத்தான் முடிந்தது. ஆனால் அந்த சூட்டை உங்களால் உணர முடியாது. அதைப் போலத்தான் என் உணர்ச்சிகளை உங்களால் உணர்ந்து கொள்ள முடியாது"

"முதல் தடவை நீ இப்படி செய்தது என்பதால் உன்னை மன்னித்து விடுதலை செய்கிறேன்"

அதன் பின்னர் அவருக்கு ஒரு சான்ஸ் கிடைத்தது. 1947ஆம் வருஷம் தீபாவளிக்கு அவருடைய முதல் படம் வெளிவந்தது. படத்தின் பெயர் "தன அமராவதி". மணிக்கொடி எழுத்தாளர் பி.எஸ்.ராமையா கதை வசனம் எழுதியது. எஸ்.எம்.குமரேசன், பி.எஸ்.சரோஜா, புளிமூட்டை ராமசாமி ஆகியோருடன் சந்திரபாபுவும் நடித்திருந்தார். இது அந்த சோகரஸ முடிவுக்கு ஆளான நகைச்சுவை நடிகரின் வாழ்வில் நடந்த நிகழ்ச்சி.

(அறந்தை நாராயணன் எழுதிய "தமிழ் சினிமாவின் கதை" என்ற நூலிலிருந்து.)

Monday, October 21, 2013

கிராமியப் பாடல்கள்

                    கும்மி
நன்னன்னா கொட்டவும் நாளாச்சு - அம்மா
        நாணயமான ஏரிக்குள் ளேதான்
    ஏரிக்குள் ளேஒரு படகு போகுது
        ஏலேலம் கொட்டடி கூலிக்காரி. 
                 1
கல்லு மலைமேலே கல்லுருட்டி - அந்தக்
        கல்லுக்கும் கல்லுக்கும் அணைபோட்டு
    மதுரைக் கோபுரம் தெரியக் கட்டி - நம்ம
        மன்னவன் வாறதைப் பாருங்கடி. 
               2
இரும்பு நாற்காலி போட்டுக்கிட்டு - அவர்
        எண்ணெயும் தேச்சுத் தலைமுழுகி
    எல்லா வேலையும் முடிச்சுக்கிட்டு - அவர்
        எப்போ வருவாரு கச்சேரிக்கு?                    
3
வாறாரு போறாரு என்றுசொல்லி - அவள்
        வாழை யிலையிலே பொங்கல் வச்சால்
    வந்தாப் போலேதான் வந்துகிட் டிருந்து
        வெண்கலக் கூடாரம் அடிச்சாராம்.              
4
புற்றுமண்ணை வெட்டிப் பொங்கல்வைத்து - அவள்
        புள்ளை தவத்துக்குப் போகையிலே
    புள்ளையும் கொடுப்பார் புண்ணிய சாலி
        புன்னை மரமேநீ தான்சாட்சி.                     
5
வண்ணான் தப்புற கல்லுமேலே - அடா
        வழி நடக்கிற சேவகரே
    சித்திரை மாசம் கலியாணம் - நாங்கள்
        சொல்லிவிட்டுப் போனோம் பட்டாளம்.   
    6
     
கொண்டவனை அடிக்கிற பெண்டுகளா - உங்கள்
        தொண்டைக்கு என்னாங்கடி கம்மலு
    தொண்டை வலிக்குச் சாராயம் - அந்தத்
        தொடை வலிக்கு வெந்நீரு.                          
7
முத்தே முத்தேநீ கும்மியடி - அடி
        மோகன முத்தேநீ கும்மியடி
    கறுப்புக் கொசுவத்தைத் திருப்பிவச் சுக்கட்டும்
        கண்ணாடி முத்தேநீ கும்மியடி.                    
8
ஓடாதே ஓடாதே தொள்ளைக் காதா - நீ
        ஓட்டம் பிடிக்காதே இல்லிக்கண்ணா
    மாட்டு எலும்பை எடுத்துக்கிட்டு - நான்உன்
        மார்பெலும்பை யெல்லாம் தட்டிடுவேன்.    
9
பத்துப் பெண்களும் கூடிக்கிட்டு - நம்ம
        பட்டணம் மைதானம் போகையிலே
    பார்த்துக்கிட் டிருந்த பறப்பயல் ஒருத்தன்
        பட்டுமுந் தாணிமேல் ஆசைவைத்தான்.     
  10     
ஊரான் ஊரான் தோட்டத்திலே - அங்கே
        ஒருத்தன் போட்டது வெள்ளரிக்காய்
    காசுக்கு ஒண்ணொண்ணு விற்கச்சொல்லி - அவன்
        காயிதம் போட்டானாம் வேட்டைக்காரன்.   
11   

வேட்டைக்கா ரன்பணம் வெள்ளிப்பணம் - அது
        வேடிக்கை பார்க்குது சின்னப்பணம்
    வெள்ளிப் பணத்துக்கு ஆசைவச்சு- அவள்
        வீராயி வந்தாடி ஆராயி.                              
12
தேனும் உருளத் தினைஉருள - அந்தத்
        தேங்காய்த் தண்ணீரும் அலைமோத
    மாங்காய் கனிந்து விழுகுதுபார் - அந்த
        மகராசன் கட்டின தோட்டத்திலே.               
13
இந்தநல்ல நிலா வெளிச்சத்திலே - அம்மா
        என்னைக்கல் லாலே அடிச்சதாரடி
    அவர்தாண்டி நம்ம எல்லாருக்கும் மாமன்
        அன்று மாம்பழங் கொடுத்தவரு.                 
14
ஆற்று மணலிலே ஊற்றெடுத்து - அம்மா
        அஞ்சாறு மாசமாச் சண்டைசெய்து
    வேற்று முகப்பட்டு வாறாரே - அம்மா
        வெள்ளிசங் கங்கட்டி வீசுங்கம்மா.              
15
நாகப் பட்டணக் கடற்கரையில் - நம்ம
        நல்லவே ளாங்கண்ணித் தாயாரு
    ஆவணிமாசம் பதினெட்டாந் தேதியில்
        அம்மா புதுமையைப் பாருங்கம்மா.          
   16 
குச்சியும் குச்சியும் பொன்னாலே - அந்த
        ஆவாரங் குச்சியும் பொன்னாலே
    திருப்பத் தூரு தேவமா தாவுக்குத்
        திருமுடி கூடப் பொன்னாலே.                     
17
புலியைக் குத்திப் புலிவாங்கி - அந்தப்
        புலிவாயைத் திறந்து மிளகா யரிஞ்சு
    சோடிப் புலிகுத்தும் நம்மண்ணன் மாருக்குச்
        சுருளு வருவதைப் பாருங்கம்மா. 
                18
அக்காதங் கச்சிகள் ஏழுபே ருநாங்கள்
        ஆருக்கும் அடங்காத வேங்கைப்புலி
    வெள்ளிப் பிரம்பைத்தான் கையிலே பிடித்தால்
        எங்கேயும் பறக்கும் வேங்கைப்புலி.          
19
பாக்கு பட்டையிலே சோறாக்கி - அந்தப்
        பாலத்துக் குமேலே நெய்யுருக்கித்
    தேக்கிலையிலே தீனிபோட் டுத்தின்னத்
        தொரைமாரு எப்போ வருவாங்களோ? 
      20
நடுக்காட்டுக் குள்ளே தீயெரிய - நம்ம
        நாலு துரைமாரும் தீனிதின்ன
    இவள்தாண்டி மதுரை மீனாட்சி - சீலை
        இழுத்துப்போர்த் திக்கிட்டு வாறாளடி.        
21


 நன்றி: கி.வா.ஜ. தொகுத்த கிராமியப் பாடல்கள் 

Friday, October 18, 2013

தஞ்சை ராமையாதாஸ்.

தஞ்சை ராமையாதாஸ்.

அந்தக் காலத் திரைப்பட பாடலாசிரியர், நாடக ஆசிரியர் தஞ்சை ராமையாதாஸ் பற்றிய கட்டுரையொன்றை என் வலைப்பூவில் வெளியிடவேண்டுமென்று விரும்பினேன். அதற்கு இப்போதுதான் காலம் கைகூடி வந்திருக்கிறது. தஞ்சையில் இருந்துகொண்டு தஞ்சைக் கவிஞரைப் பற்றி எழுதாமல் இருந்தால் எப்படி என்று எனக்கு நானே கேட்டுக் கொண்டேன். இதோ அந்தக் கவிஞர் பற்றிய கட்டுரை.

தஞ்சை ரயில் நிலையத்துக்கு எதிரில் மூப்பனார் சாலை என்று ஒன்று உண்டு. அது வழியாகச் சென்றால் தலைமை தபால் நிலையம், புதாறு தாண்டி "தினத் தந்தி" அலுவலகம் தொடங்கி தொடர்ந்த பகுதிகளுக்கு மகர்நோம்புச் சாவடி என்று பெயர். அங்கு பெரும்பாலும் தறி நெய்யும் செளராஷ்டிர மக்கள் வசிக்கிறார்கள். பிரபலமான ஜவுளி நிறுவனங்களும், பஜனை மடம், வேங்கடேஸ்வர பெருமாள் ஆலயம் போன்றவைகளும் அங்கே உண்டு. பெரும்பாலும் இந்த மக்கள் தேசிய வாதிகள். இப்படிப்பட்ட மகர்நோம்புச் சாவடியில் நாராயணசாமி நாயனார் என்பவருக்கும் பாப்பு அம்மாளுக்கும் மகவாகப் பிறந்தவர் ராமையாதாஸ். பிறந்த நாள் 1914 ஜூன் 5ஆம் தேதி.

தமிழின் மீதிருந்த பற்று காரணமாகத் தமிழ் பயிலும்பொருட்டு கரந்தை தமிழ்ச் சங்கத்தில் சேர்ந்து படித்து "வித்வான்" பட்டம் பெற்றார். தஞ்சையில் நடந்த கவி இயற்றும் போட்டியொன்றில் கலந்து கொண்டு அதில் தங்கப் பதக்கமும் வென்றார். இவர் காலத்தில் சுதந்திரக் கனல் வீசிக் கொண்டிருந்த காரணத்தாலும், இவருடைய நாட்டமும் தேசிய சிந்தனையில் ஈடுபட்டிருந்ததாலும் இவர் ஒரு தேசியவாதியாகத் திகழ்ந்தார். அப்போது நடந்து கொண்டிருந்த சுதந்திர இயக்கத்திலும் இவர் தன்னை இணைத்துக் கொண்டார். ஆசிரியர் பணியில் இருந்து கொண்டு நாடகத் துறையிலும் இவருக்கு நாட்டம் ஏற்பட்டதால் அதிலும் இவர் பங்கு கொள்ளலானார்.

நாடகத்தில் கதை, வசனம், நடிப்புச் சொல்லித் தருதல், நாடகத்துக்குப் பாடல்கள் எழுதுதல் போன்ற வேலைகளைச் செய்து வந்ததால் இவரை "வாத்தியார்" என்றுதான் அழைப்பார்கள். நாடகத் துறையில் "வாத்தியார்" என்பவர் அதி முக்கியமானவர். முதலில் வெளி நாடகக் கம்பெனியில் பணியாற்றிவிட்டுப் பின்னர் தானே சொந்தமாக ஒரு நாடகக் கம்பெனியை இவர் துவக்கினார், அந்த கம்பெனியிக்கு "ஜெயலக்ஷ்மி கானசபா" என்று பெயரிட்டார். இந்த நாடகக் கம்பெனி மூலமாக இவர் பல நாடகங்களை எழுதி அரங்கேற்றினார். அன்றைய காலகட்டத்தில் பெரும்பாலும் புராண நாடகங்கள்தான் நடைபெறும் இவரும் அதற்கு விதிவிலக்கல்ல. இடையிடையே ஏதாவது ஒரு சமூக நாடகமும் நடைபெறுவதுண்டு.

இவருடைய நாடக சபாவின் பெருமைக்கு ஒரு எடுத்துக் காட்டு சொல்லலாமா? பின்னாளில் பிரபலமான டைரக்டராக விளங்கியவரும், அரிய பல புராணக் கதை திரைப்படங்களைக் கொடுத்தவருமான ஏ.பி.நாகராஜன் இவரது நாடகக் கம்பெனியில் நடிகராக இருந்திருக்கிறார். இப்படி இவர் நாடகத் துறையில் சிறந்து விளங்கிய தருணம், கதை, வசனம், பாடல்கள் என்று இவரே எழுதி மேடையேற்றியதைக் கண்டு இவருக்குச் சில திரைப்படங்களில் பாடல்கள் எழுத வாய்ப்பு கிடைத்தது. இவர் சேலம் நகரில் நாடகம் போட்டுக் கொண்டிருந்த போது சேலத்தில் இயங்கி வந்த மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் இவரைத் தங்கள் படத்துக்குப் பாடல் எழுத அழைத்தனர். இவரும் எழுதிக் கொடுத்தார். சில பாடல்கள் மக்கள் மத்தியில் பிரபலமானதோடு அனைவருமே முணுமுணுக்கத் தொடங்கக்கூடிய பாடல்களும் இருந்தன.
'அந்தமான் கைதி' எனும் படத்தில் எம்.ஜி.ஆர். நடித்தார், அதில் ஒரு பாடல் "ஒரு ஜாண் வயிறே இல்லாட்டா, இந்த உலகத்திலே ஏது கலாட்டா" என்பது அது. எம்.என்.நம்பியார் கதாநாயகனாக நடித்த "திகம்பர சாமியார்" எனும் துப்பறியும் படத்தில் ஒரு பாட்டு, அது "ஊசிப் பட்டாசே, வேடிக்கையாக தீ வச்சாலே வெட் டமார், டமார்". ஏழுமலை எனும் நடிகரும் ஒரு சிறு பெண்ணும் சேர்ந்து பாடுவதாக அமைந்த பாடல் இது.

"ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி" என்றொரு படம், எம்.ஜி.ஆரின் மனைவி வி.என்.ஜானகி நடித்தது. அதில் ஒரு பாட்டு "வெச்சேன்னா வெச்சதுதான், புள்ளி வெச்சேன்னா வெச்சதுதான்" என்று. அதுவும் தஞ்சையார் பாடல்தான். அப்போது பிரபல கதாநாயகனாக இருந்த டி.ஆர்.மகாலிங்கம் இவர் நாடகமாகப் போட்டுக் கொண்டிருந்த "மச்சரேகை" எனும் கதையை சினிமாவாக எடுக்க முனைந்தார். தஞ்சையாரும் திரைப்படத் துறைக்காக சென்னைக்குக் குடியேறினார். சென்னைக்குச் சென்றவருக்கு விஜயா, வாஹினி கம்பெனியில் தொடர்ந்து பல வாய்ப்புகள் வந்தன. கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் 1951 முதல் 1960 வரையான காலகட்டத்தில் அந்தக் கம்பெனி தயாரித்த வெற்றிப் படங்களான, என்.டி.ராமாராவ், முக்காமலா நடித்த "பாதாள பைரவி", ஜெமினி கணேசன், சாவித்ரி ஜோடி சேர்ந்து நடித்த "மிஸ்ஸியம்மா", சாவித்ரி, எஸ்.வி.ரங்காராவ் நடித்த "மாயா பஜார்" ஆகிய படங்களில் வந்த பாடல்கள் அனைத்தும் தஞ்சையாருடையதுதான். "வாராயோ வெண்ணிலாவே", "கல்யாண சமையல் சாதம்" போன்ற பாடல்கள் இன்றும்கூட சக்கை போடு போடுகின்றன.

பிரபல இயக்குனர் ஸ்ரீதர் 'அமரதீபம்' படம் எடுத்தார். அதில் பாட்டு எழுத தஞ்சையாரை அழைத்தார். அதில்தான் பலருடைய விமர்சனங்களுக்கு ஆளான "ஜாலிலோ ஜிம்கானா" பாடல் வந்தது. அது முதல் இவரை டம்பாங்குத்து பாடல் எழுதுபவர் என்று முத்திரை குத்திவிட்டனர். நல்லதொரு கவிஞர், வித்வான் பட்டம் பெற்ற தமிழறிஞர், பாவம் ஒரு திரைப்படப்பாடலால் இப்படி ஆகிவிட்டது.

இவர் ஒரு தேசியவாதி என்பதைப் பார்த்தோம். பெருந்தலைவர் காமராஜர், பி.கக்கன் போன்றோருடன் இவர் நெருங்கி பழகினார். காங்கிரஸ்காரராக இருந்த போதும் திராவிட இயக்கத்தார் எடுத்த திரைப் படங்களுக்கும் இவர் பாடல்கள் எழுதியிருக்கிறார். "குறவஞ்சி" "தங்கரத்தினம்" போன்ற படங்களில் இவர் பாடல்கள் வந்தன. கவிஞர்களுக்குள் இவர் ஒரு தனி ரகம். இடம், காலம் பார்க்காமல் இருந்த இடத்தில் உட்கார்ந்து பாடல்களை எழுதிவிடுவார். வெற்றிலை பாக்கைக் குதப்பிக் கொண்டு உட்கார்ந்தாரானால் பாடல் கதைக்கு ஏற்ப வந்து விழும். பிற மொழிகளிலிருந்து மொழியாக்கம் செய்த பல படங்களுக்கு இவர் வசனம் பாடல்கள் எழுதியிருக்கிறார்.

பிரபல நடிகை டி.ஆர்.ராஜகுமாரி அவர்கள் நடித்த காலத்தில் கனவுக் கன்னியாகத் திகழ்ந்திருக்கிறார். அவருடைய மயக்கும் விழிகளும், ஹரிதாஸ் படத்தில் எம்.கே.தியாகராஜ பாகவதர் பாடிய "மன்மத லீலையை வென்றார் உண்டோ?" பாடலுக்கு அவரது அபினயம் இன்றும் கூட பேசப்படுகிறது. அவருடைய இளைய சகோதரர்தான் இயக்குனர் டி.ஆர்.ராமண்ணா. அவர் ராமையாதாஸிடம் தான் ஒரு படம் எடுக்கப்போவதாகத் தெரிவிக்க அதற்கு பாடல் எழுத வேண்டினார். அந்தப் படம்தான் "குலேபகாவலி". அதில் வந்த ஒரு குத்துப்பாட்டு "குல்லா போட்ட நவாபு, செல்லாது உந்தன் ஜவாபு". இந்தப் படத்துக்குக் கதை, வசனம், பாடல்கள் அனைத்துமே தஞ்சையார்தான். இந்தப் படமும், பாடல்களும் தஞ்சையாரை வெகுஜன திரைப்படப் பாடலாசிரியராக பறை சாற்றியது.

இவரது பாடல்கள் கொச்சையாகவும், பொருளற்றதாகவும் இருக்கிறது, ஏதேதோ வார்த்தை ஜாலங்களைச் செய்து பாடல்கள் எழுதிவிடுகிறார் என்றெல்லாம் பேச்சு அப்போது இருந்தது, அதை அப்படியே சில பத்திரிகைகளும் வெளியிட்டன. அவற்றைக் கண்டு கோபப்படாமல் தஞ்சையார் சில பத்திரிகையாளர்களை அழைத்துப் பேசினார். அவர்களுக்கு ஒரு விருந்து கொடுத்துவிட்டு அவர்களிடம், சினிமா பார்க்கிறவர்கள் பாமர மக்கள் அதிகம். அவர்களுக்குப் போய் இலக்கியத் தமிழில் பாட்டெழுதினால் அவர்களுக்கு எப்படிப் புரியும். அவர்கள் ரசிக்கக்கூடிய விதத்தில் பாடல் எழுதுவது எப்படித் தவறாகும் என்றெல்லாம் பேசியதும் அவர்கள் ஒப்புக் கொண்டு கலைந்து சென்றார்கள்.

சினிமாவில் ஓரளவு பெயரும் புகழும் கிடைத்துவிட்டால் சொந்தப் பட ஆசை வந்துவிடுகிறது அல்லவா. அந்த வகையில் தஞ்சையாருக்கும் ஆசை வந்தது. முதலில் ஒரு படத்தை டப்பிங் செய்து வெளியிட்டார், அது "ஆளைக் கண்டு மயங்காதே" எனும் படம். அதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர். பானுமதி நடித்த "லலிதாங்கி" என்றொரு படம் இவர் சொந்தமாகத் தயாரித்தார். அது முடிவடையாமல் நின்று போனது, உடனே அவர் சிவாஜியை வைத்து "ராணி லலிதாங்கி" எனும் பெயரில் படமெடுத்து வெளியிட்டார். அதில் அவருக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் சிலர் மீண்டும் தலையெடுத்து விடுவர், சிலர் அதோடு முடிந்தது என்று விட்டும் விடுவர். இவருக்கு ஏற்பட்டது இரண்டாவது நிலை.

இவரது ஆரோக்கியமும் கெட்டது. உடல்நிலை பாதிக்கப்பட்டார். அந்தச் சூழ்நிலையிலும் திருமதி அஞ்சலி தேவிக்காக 'பக்க இண்டி அம்மாயி" என்று தெலுங்கில் வந்த படத்துக்கு தமிழில் "அடுத்த வீட்டுப் பெண்" எனும் பெயரில் ஒரு படம், அதற்கு இவர் வசனம், பாடல்கள் எழுதிக் கொடுத்தார். 1948 தொடங்கி கிட்டத்தட்ட 1960கள் வரையிலும் இவர் பல படங்களிலும் பங்கு கொண்டிருந்தார். சுமார் 100 படங்கள் வரை வசனம் பாடல்கள் எழுதினார். 600 பாடல்கள் வரை இவர் எழுதியது திரையில் ஒலித்தன.

ஓரளவு திரைத்துறையிலிருந்து விடுபட்டுத் தன்னுடைய தமிழ்ப் புலமையை வெளிக்காட்டும் விதத்தில் திருக்குறள் வரிகளை வைத்து, "திருக்குறள் இசை அமுதம்" என்று பாடல்களை எழுதி வெளியிட்டார். அதை எம்.ஜி.ஆர். வெளியிட்டு வாழ்த்தினார். இவர் உடல் நலம் மிகவும் கெட்டு வேலூர் சி.எம்.சி. மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் 1965 ஜனவரி மாதம் பொங்கலுக்கு அடுத்த நாள் 15ஆம் தேதி காலமானார். அப்போது அவர் அரசு மரியாதைகளுடன் இறுதி யாத்திரை நடந்தது. உள்துறை அமைச்சராக இருந்த திரு பி.கக்கன் அவர்கள் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு மறைந்த கவிஞருக்கு மரியாதை செலுத்தினார். தஞ்சை தந்த கவிஞர், திரையுலகில் செய்த சாதனைகள், இயற்றிய பாடல்கள், எழுதிய வசனங்கள் அனைத்துமே மக்கள் அதிகம் ரசித்துப் பாராட்டினர். அந்த மாபெரும் கலைஞருக்கு செலுத்தும் அஞ்சலியாக இந்தக் கட்டுரையை வெளியிடுகிறோம். வாழ்க தஞ்சை ராமையாதாஸ் புகழ்!

Courtesy: Sri Ravindran, Cenima Editor, Chennai. (s/o Thanjai Ramaiah das)
Pdf document.


Wednesday, October 16, 2013

தஞ்சை ராமையாதாஸ் பாடல்கள்

"ஆ"னா விலாசம்.

தஞ்சை ராமையாதாஸ் பிரபலமான திரைப்படக் கவிஞர். அவருடைய பாடல்கள் பல மக்கள் மனங்களில் நிலையாக இடம் பெற்றவை. அவர் "மணமகள்" திரைப்படத்துக்காக எழுதி இசைச் சித்தர் சி.எஸ்.ஜெயராமன் அவர்கள் பாடிய இந்தப் பாடலைப் படித்துப் பாருங்கள்.

"ஆனா விலாசந்தானப்பா உலகில் பெரியது
அதற்கிணையானது வேறேதப்பா
மூனாப் பசங்களையும் நானா விதங்களிலும்
முன்னேறச் செய்கிறதும் முதலாளி ஆக்குறதும் - ஆனா விலாசம்
கச்சேரி பண்ணுகிற கலிகால பாகவதர்
சிட்சை கற்கும் பெண்மணிகள் சிநேகம் பிடிக்கிறதும் - ஆனா விலாசம்
அத்தர் செண்டு வியாபார் அபகரித்து வாழ்கிறதும் - ஆனா விலாசம்
சங்கீத குயில்களும் சதிராடும் மயில்களும்
சர்வண்டுப் பயல்களெல்லாம் சபையேறிப் பேசுவதும் - ஆனாவ்லாசம்
பானா டூனாத் தெரியாத ரவுடிப் பசங்களெல்லாம்
மேனாட்டுக்காரன் போல வெளிச்சம் போட்டுத் திரியறதும் - ஆனா விலாசம்
சொந்த முயற்சியில்லா தொழில் செய்ய பயிற்சி யில்லாதவன்
சந்தர்ப்ப வசதியினால் தனவந்தன் ஆகிறதும் - ஆனா விலாசம்.

2. "மாப்பிள்ளை" படம். பாடல் தஞ்சை ராமையாதாஸ்.

ஆண்: டோசு கொடுக்க வேணும் - சரியான
டோசு கொடுக்க வேணும்
மோசமான எந்த கேசுக்கும் - தகுந்த
டோசு கொடுக்க வேணும்.
பெண்: மூன்று மணிக்கொரு வேளை தவறாமே
டோசு கொடுக்க வேண்டும்.
இருவரும்: டோசு கொடுக்க வேணும் - சரியான
டோசு கொடுக்க வேணும்.
பெண்: இருந்தது போனது நிலைமை
தெரியாத புதுப்பணக்காரனுக்கும் - முன்னே
ஆண்: ஏழைப் பாட்டாளி வாழ்வைக் கெடுத்திடும்
இரக்கமே இல்லாத இரும்புப் பெட்டிக்கும்
இருவரும்: டோசு கொடுக்க வேணும் - சரியான
டோசு கொடுக்க வேணும்.
ஆண்: கலத்துக்குத் தகுந்த ஜால்ரா போட்டுவரும்
கபோதி பசங்களுக்கும் - இந்த

பெண்: காரியம் சாதிக்க - சொந்த காரியம் சாதிக்க
கோளு மூட்டிவரும் காக்கா பசங்களுக்கும்
டேக்கா கொடுத்து நல்ல - டோசு கொடுக்க வேணும்.
ஆண்: வஞ்சகமாகவே வட்டிக்கு வட்டி வாங்கும்
யோக்கியனுக்கும்
பஞ்ச காலத்திலும் பதவி மோகத்திலும்
மிஞ்சி விளையாடும் லஞ்ச பிடாரிக்கும்
டோசு கொடுக்க வேணும் - சரியான டோசு கொடுக்க வேணும்.
பெண்: கள்ள மார்க்கெட்டில் கொள்ளையடிக்கும்
கனதனவான்களுக்கும் - அசல்
ஆண்: கட்சி பேரைச் சொல்லி - பல
கட்சி பேரைச் சொல்லி காசை பறிச்சிடும்
பச்சோந்தி கும்பலுக்கும் பிராடு பசங்களுக்கும்
டோசு கொடுக்க வேணும் - சரியான டோசு கொடுக்க வேணும்.

3. "மாப்பிள்ளை" படம். பாடல்: தஞ்சை ராமையாதாஸ்.

கண்ணும் கருத்துமா குடும்பம் நடத்த தெரியணும்
பெண்கள் கடமையை பெரிசா நினைக்கணும் - கண்ணும்
கால நெலைமையை தெரிஞ்சு வாழணும் - இங்கே
புரிஞ்சு வாழணும்.
காசு பணம் வந்தாலும் வீணே
கண்டபடி துள்ளாம தானே கச்சிதமா
குடும்பம் நடத்தத் தெரியணும் - பெண்கள்.
கடைமையை பெரிசா நினைக்கணும்.

தொட்டு தாலிகட்டியவன் முட்டாளாயிருந்தாலும்
கட்டுப்பட்டு ஆகணுமே கண்ணியமா வாழணுமே
மட்டு மரியாதையுடன் தொண்டு செய்ய வேண்டும்
தொண்டு செய்ய வேணும்.
கஷ்டத்திலும் கணவனோடு கலந்து வாழ வேணும்
மனம் மகிழ்ந்து வாழ வேணும்.

ஆங்கிலம் கற்றாலும் அதனால் ஆயிரம் வந்தாலும் - பதவிகள்
ஆயிரம் வந்தாலும் - ஆடம்பரத்தாலே வீண் ஆடம்பரத்தாலே
ஏழைகளை அவமதிக்காதே
எண்ணற்ற கற்றாலும் பெண்களுக்குப் பின்புத்தி என்றாலும்
ஆடவர்கள் ஏளனம் செய்தாலும் - அந்த
ஏட்டுச் சுவடிக் கிடம் கொடுக்காமலே
நாட்டுக்கு நன்மையை செய்திட வேணும் (ஆங்கிலம் கற்றாலும்)
பக்தியாலே தெய்வ சக்தியாலே - செய்த
பாவமெல்லாம் போகுமே - பதி
திருப்பத மலரடி அனுதினம் வணங்கிட.













Sunday, October 13, 2013

உத்தம சம்பாவனை

                         உத்தம சம்பாவனை  
                         
                        எழுதியவர்: தமிழ்த்தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர்

அம
ராவதி ஸ்ரீ சேஷையா சாஸ்திரிகளைத் தெரியாதார் தமிழ்நாட்டில் இரார். தென்னாட்டில் தோன்றிய ஆச்சாரிய புருஷர்களுள் அவர் ஒருவர். அவர் புதுக்கோட்டை ஸமஸ்தானத்தில் திவானாக இருந்தபோது செய்த திருத்தங்கள் பல. அவருடைய வாழ்க்கை நிகழ்ச்சிகள் மிக்க சுவையுள்ளன.

இராமச்சந்திரத் தொண்டைமானென்னும் அரசரே சேஷையா சாஸ்திரிகளைத் திவானாகப் பெற்ற பேறுடையவாராக இருந்தனர்.

புதுக்கோட்டையில் தொன்று தொட்டு வருஷந் தோறும் நவராத்திரி விழா மிகவும் சிறப்பாக நடை பெறும். வடமொழி, சங்கீதம் முதலியவற்றில் வல்ல வித்துவான்களும், வேதம், சாஸ்திரங்கள் முதலியவற்றில் தேர்ந்த அறிஞர்களும் அங்கே சென்று தக்க சம்மானங்களைப் பெற்றுச் செல்வார்கள், அன்னதானம் விசேஷமாக நடைபெறும். நூற்றுக் கணக்கான வித்துவான்கள் வந்து கூடுவார்கள். வாக்கியார்த்தம் நடைபெறும்; உபந்யாஸங்கள் செய்யப்படும். அவரவர்களுக்குத் தக்கபடி உபசாரம் செய்து அவரவர்கள் தங்கி இருக்க வசதியான இருக்கைகள் அமைக்கப்படும். தங்கியிருக்கும் நாட் களுக்கு அவர்களுக்கு அரண்மனையிலிருந்து உலுப்பைகள் வரும். சபைகள் நடைபெறுவது மிகவும் விமரிசையாக இருக்கும். விஜயதசமியன்றோ மறு நாளோ அந்த வித்துவான் களுக்கெல்லாம் ஏற்றபடி சம்மானங்கள் செய்யப்பெறும்.

சேஷையா ச‌ஸ்திரிக‌ள் திவானாக‌ வ‌ந்த‌ பிற‌கு ப‌ல‌ வ‌கையாக‌ உள்ள‌ வித்துவான்களுடைய தகுதியை அறியும் பொருட்டு அவ‌ர்க‌ளுக்கு வினாப் ப‌த்திர‌ங்க‌ள் கொடுத்துப் பரீக்ஷித்து அவர்கள் பெறும் அம்சத்தின் தரத்தை அறிந்து அதற்கேற்ற சம்மானம் செய்யும் வழக்கம் ஏற்பட்டது. இங்ஙனம் நடைபெறும் பரீக்ஷையில் தேறுபவர்களுக்கு அவர்களுடைய தகுதிக்கேற்ப பத்து ரூபாய் முதல் நூறு ரூபாய் வரையிற் பரிசு அளிக்கப் படும். நூறு ரூபாயே உய‌ர்ந்த சம்மானம்; அதனை உத்தம சம்பாவனை என்று சொல்வார்கள். பரீக்ஷை நடைபெறும்போது சாஸ்திரிகள் உடனிருந்து கவனித்துவருவார். பிரசித்தர்களான வித்துவான்களுக்குப் பரீக்ஷை யில்லாமலே சம்மானங்கள் அளிக்கப்படும்.

இப்படி நடந்து வந்தமையால் வித்துவான்கள் தங்கள் தகுதிக்கேற்ற‌ சம்மானங்களைப் பெற்றார்கள். தராதரமறிந்து பரிசளிப்பதையே பெரிதாகக் கருதுபவர்களாகிய அவர்கள் இந்த முறையின் சிற‌ப்பை அறிந்து மிகவும் மகிழ்ந்தார்கள். வருஷத்திற்கு வருஷம் அதிகமான வித்துவான்கள் வர ஆரம்பித்தனர். அவர்களுக்கெல்லாம் வழக்கப்படியே மரியாதைகள் செய்யப்பெற்று வந்தன.

ஒரு வ‌ருஷ‌ம் ந‌வ‌ராத்திரியில் ஸ‌ர‌ஸ்வ‌தி பூஜைக்கு முத‌ல்நாள் சாஸ்திரிக‌ள் வித்தியா ம‌ண்ட‌ ப‌த்தில் வித்துவான்க‌ளுடைய‌ கூட்ட‌த்தின் ந‌டுவில் அம‌ர்ந்திருந்தார். ம‌றுநாள் இன்னார் இன்னாருக்கு இன்ன‌ இன்ன‌ ச‌ம்மான‌ம் செய்வ‌தென்று நிச்ச‌ய‌ம் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது ஒருவ‌ர் அவ‌ர‌ருகில் வ‌ந்து ஒரு க‌டித‌த்தை நீட்டினார்.  அதில் "இதைக் கொண்டு வ‌ருப‌வ‌ரை உத்த‌ம‌ ச‌ம்பாவ‌னை வ‌ரிசையில் சேர்த்துக்கொள்ள‌ வேண்டும்" என்று எழுத‌ப்ப‌ட்டிருந்த‌து. அத‌ன் கீழ் அர‌ச‌ருடைய‌ முத்திரை இருந்த‌து. சாஸ்திரிக‌ள் அதைப் ப‌டித்துப் பார்த்து விய‌ப்புற்றார்.  ப‌டித்த‌பின்பு க‌டித‌ம் கொண‌ர்ந்த‌வ‌ரை ஒருமுறை ஏற‌ இற‌ங்க‌ப் பார்த்தார். அந்த‌ ம‌னித‌ருடைய‌ முக‌த்தில் சிறித‌ள‌வாவ‌து அறிவின் ஒளியையே அவ‌ர் காண‌வில்லை. சாஸ்திரிக‌ளுக்கு அவ‌ரைக் க‌ண்ட‌போது புன்ன‌கை உண்டாயிற்று;  வ‌ந்த‌வ‌ரைப் பார்த்து "ச‌‌ந்தோஷ‌ம்! நீர் என்ன‌ வேலை பார்த்து வ‌ருகீறீர்?" என்று கேட்டார்.

வ‌ந்த‌வ‌ர்: நான் ம‌காராஜாவுக்கு நீர்மோர் செய்து கொடுப்பேன்.

சாஸ்திரிக‌ள்: அப்ப‌டியா! நீர் மோரில் என்ன‌ சேர்ப்பீர்?

வ‌ந்த‌வ‌ர்: பெருங்காய‌ம், சுக்கு, உப்பு, எலுமிச்ச‌ம்ப‌ழ‌ ர‌ஸ‌ம் முத‌லிய‌வ‌ற்றைப் ப‌க்குவ‌மாகச் சேர்த்துத் தாளிதம் செய்வேன்; மகாராஜாவினுடைய விருப்பமறிந்து வேண்டிய‌தைச் செய்து கொடுப்பேன்.

ச‌ஸ்திரிக‌ள், "ந‌ல்ல‌ காரிய‌ம். ம‌காராஜாவின் ம‌ன‌ம் கோணாம‌ல் செவ்வையாக‌ நட‌‌ந்துவாரும்; ந‌ல்லபேர் எடும்; போய் வாரும்" என்று சொல்லி அனுப்பிவிட்டார்.

வந்தவர் மிக்க சந்தோஷத்தோடு சென்றார். அவர் போன ஐந்து நிமிஷங்களுக்குப்பின் மற்றொருவர் வந்தார். அவரும் ஒரு கடிதத்தைச் சாஸ்திரிகளிடம் கொடுத்தார். அதிலும் முன்பு எழுதின‌ படியே எழுதப்பட்டிருந்தது. சாஸ்திரிகளுக்குப் பின்னும் வியப்பு அதிகமாயிற்று. அவரும் முன்னவரைப் போன்றவரென்றே சாஸ்திரிகள் உணர்ந்து கொண்டார்; அவரைப் பார்த்து "நீர் மகாராஜவுக்கு என்ன பணி செய்து வருகிறீர்" என்று கேட்டார்.

வந்தவர்:  நான் நல்ல ரஸம் செய்து கொடுப்பேன். சீரக‌ ரஸம், மைசூர் ரஸம் முதலிய பலவகைகளில் மகாராஜாவுக்கு எது பிரீதியோ அதைச் செய்துதருவேன்.

சாஸ்திரிகள்:  அப்படியா! சந்தோஷம், மகாராஜாவின் திருவுள்ளத்துக்கு உகந்தபடி தவறாமற் செய்துவாரும்.

வந்தவர் தம்முடைய நோக்கம் நிறைவேறு மென்று எண்ணி மிக்க ஊக்கத்துடன் போய் விட்டார்.

பிறகு ஒருவர் வந்தார்; மகாராஜாவின் முத்திரை யிட்ட கடிதமொன்றை நீட்டினார்; தாம் மகாராஜாவுக்கு வேப்பிலைக்கட்டி பண்ணித் தருவதாச் சொன்னார். சாஸ்திரிகள் அவரிடமும் பிரியமாகப் பேசி அனுப்பி விட்டார். இப்படியே பொடி செய்து தருபவரும், உடையணிவிப்பவரும், வேறு பணிவிடை செய்பவர்களுமாகப் பத்துப்பேர் வரையில் வந்து சாஸ்திரிகளிடம் கடிதங்களைக் கொடுத்துச் சென்றார்கள். சாஸ்திரிகள் அதில் ஏதோ சூது இருக்க வேண்டுமென்று எண்ணி அவர்கள் கொடுத்த கடிதங்களை யெல்லாம் வாங்கி வைத்துக் கொண்டார்.

மறுநாட்காலையில் சாஸ்திரிகள் எட்டுமணிக்கு அரசரைப் பார்க்கச் சென்றார். சாஸ்திரிகளைக் கண்டவுடன் அரசர் அவரை ஓர் ஆசனத்தில் இருக்கச்செய்தார். பிறகு, "நவராத்திரி உத்ஸவத்தில் தங்களுக்கு அதிக சிரமம்; எல்லாம் நன்றாக நடை பெறுகின்றனவா? கோயில்களில் தர்மங்கள் ஒழுங்காகச் செய்யப்பட்டு வருகின்றனவா? வித்வத்சபை இந்த வருஷம் எப்படி இருக்கிறது?" என்று கேட் டார்.

"எல்லாம் நன்றாக நடக்கின்றன. வித்துவான்கள் சென்ற வருஷத்தைக் காட்டிலும் இவ்வருஷம் அதிகமாக வந்திருக்கிறார்கள். சுமங்கலி பூஜை, கோயிற் காரியங்கள் முதலிய யாவும் குறைவல்லாமல் நடைபெறுகின்றன. எல்லோரும் திருப்தியாக இருக்கின்றார்கள்" என்றார் சாஸ்திரிகள்.

அரசர்:  தாங்கள் கவனித்துவரும்போது குறைவு நேர்வதற்கு நியாயம் இல்லை. தாங்கள் செய்து வரும் உபகாரங்களை இந்த ஸமஸ்தானம் என்றைக்கும் மறவாது.

சிறிது நேரம் அரசரிடம் இவ்வாறு பேசியிருந்து விட்டு விடைபெற்றுக்கொண்டு சேஷையா சாஸ்திரிகள் பத்து அடி நடந்தார், பிறகு எதையோ நினைத்துக் கொண்டவர் போலத் திரும்பிவந்தார்.

அரசர் மிக விரைவாக, "என்ன? என்ன? சாஸ்திரி கள் ஏதாவது சொல்ல வேண்டுமோ?" என்று கேட்டார்.

சாஸ்திரிகள்: ஆமாம். இப்போது ஒன்று ஞாபகம் வந்தது. அதைச் சொல்லலாமென்று வந்தேன்.

அரசர்: சொல்லலாமே.

சாஸ்திரிகள்: இந்த வருஷம் வந்திருக்கிற வித்துவான்கள் கூட்டத்தைப் பார்க்கும்போது எனக்கே உள்ளம் பூரிக்கிறது. நம்முடைய ஸமஸ்தானத்துக்கு இந்தப் பெருமை ஒன்றே போதும். விஜயதசமியன்று எல்லா வித்துவானகளையும் ஒரு வரிசையாக வைத்து மகாராஜா அவர்களே பிரதக்ஷிணம் செய்து மரியாதை செய்யும் இந்த வழக்கம் வேறு எந்த இடத்திலும் இல்லை. இதனால் வேறு இடங்களுக்குச் செல்லாத மகா வித்துவான்கள்கூட இங்கே சம்மானம் பெறுவதைப் பெரிதாக எண்ணி வந்து போகிறார்கள். வேறு சில ஸமஸ்தானங்களில் கிடைக்கும் சம்மானங்களைக் காட்டிலும் இங்கே கிடைப்பது குறைவு. ஆனாலும் இந்தக் கௌரவத்தையே உயர்வாகக் கருதி வருகிறார்கள். எவ்வளவோ பிரசித்திபெற்ற வித்துவான்கள் வந்திருக்கிறார்கள். எல்லாம் நன்றாகவே இருக்கின்றன. ஆனால் இரண்டு தினங்களாக ஏதோ சில வார்த்தைகள் என் காதில் விழுகின்றன.

அரசர்: என்ன? என்ன? சொல்லவேண்டும்.

சாஸ்திரிகள்: அடுத்த வருஷம் இப்படி நடப்பது சந்தேகமென்று தோற்றுகிறது.

அரசர்:  ஏன்? என்ன காரணம்?

சாஸ்திரிகள்: நான் அங்கங்கே இரகசியமாக ஆள் வைத்து அவரவர்கள் பேசுவதைக் கவனித்து வந்து சொல்லும்படி செய்வது வழக்கம்.  அதனால் எனக்கு இந்த விஷயம் தெரிந்தது. முன்பே சொல்ல மறந்துவிட்டேன். அவர்கள், 'நாமெல்லாம் இங்கே தாரதம்யம் அறிந்து கௌரவிக்கிறார்களென்று வருகிறோம். சம்மானத்தை உத்தேசித்து வரவில்லை. இந்த வரம்பு இந்த வருஷம் கெட்டுப் போகுமென்று தெரிகிறது. ஆராரோ சாமான்ய மனிதர்களெல்லாம் நம்முடன் வந்து உட்காரப் போகிறார்களாம். இந்த வருஷம் ஏதோ வந்து விட்டோம்; நடுவில் திரும்பிப்போவது நன்றாக இராது. அடுத்த வருஷம்முதல் வருவதில்லை;  வந்தால் மதிப்புக் கெட்டுவிடும்' என்று அங்கங்கே கூடிப் பேசி வருகிறார்கள்.

அரசர்:  அப்படி அவர்கள் எண்ணுவதற்கு என்ன காரணம்?

சாஸ்திரிகள்: உத்தம சம்பாவனை செய்யவேண்டு மென்று மகாராஜாவின் உத்தரவைக் கொண்டு வந்து சிலர் என்னிடம் கொடுத்தார்கள். அவர்களோடு சிறிது நேரம் பேசியிருந்து அனுப்பினேன். அவர்கள் தமக்கு உத்தம சம்பாவனை கிடைக்கப் போவதாகப் பலரிடம் உத்ஸாகத்தோடு சொல்லிக் கொண்டே போய்விட்டார்களென்று தோற்றுகின்றது. அதைக் கேட்ட வித்துவான்களெல்லாம் அதிருப்தியோடு பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

அரசர்: அடடா! நான் அப்படி ஒருவரையும் அனுப்பவில்லையே!

சாஸ்திரிகள் தாம் வாங்கி வைத்திருந்த கடிதங்களை உடனே எடுத்துக் காட்டினார். அரசர் அதைப் பார்த்துத் திகைத்தார்;   "நான் அனுப்பவில்லையே" யாரோ பண்ணிய விஷம மென்றே எண்ணுகிறேன்" என்றார் அரசர்.

சாஸ்திரிகள்:  இவைகளைக் கொண்டுவந்து கொடுக் கும்போது நான் வேறு என்ன நினைக்கமுடியும்? மகாராஜாவிடம் தொண்டுசெய்பவர்கள் கவலை யின்றி இருக்க வேண்டியது அவசியந்தானே? மகாராஜாவினுடைய வேலைக்காரனாகிய நான் மகாராஜா வின் திருவுள்ளத்தின்படி நடக்கவேண்டியவனல்லவா?

அரசர்:  அப்படி அவசியமொன்றும் நேரவில்லையே.

சாஸ்திரிகள்:  ஒருவேளை யாருக்கேனும் உதவி செய்யவேண்டுமென்று மகாராஜாவின் திருவுள்ளத்திற் படுமானால் எனக்குத் தனியே சீட்டு அனுப்பலாம்; நான் உசிதம்போல அவர்களுக்கு அநுகூலம் செய்வேன். வித்துவான்களுடைய வரிசையில் அவர்களைச் சேர்ப்பது நன்றாக இராது.  மகாராஜா உத்தரவின்படி நான் செய்யக் காத்திருக்கிறேன். அவர்களுக்குக் கொடுக்கும் பணத்தைக் குதிரைக்கான கொள்ளுச் செலவென்று எழுதிக் கொள்ளலாம்; பசுவின் புல்லுக்குரிய செலவில் சேர்த்துக் கொள்ளலாம்; பருத்திக் கொட்டைச் செலவில் எழுதலாம்; வாணமருந்துச் செலவில் கூட்டிக்கொள்ளச் செய் கிறேன். அதனாற் குற்றமில்லை.

அரசர் தம்மிடமுள்ள வேலைக்காரர்களைக் கூப் பிட்டு யார் கடிதம் கொடுத்தாரென்று விசாரித்தார். ஒவ்வொருவரும் "நான் அல்ல","நான் அல்ல" என்றே சொல்லிவிட்டனர். பிறகு ஒருவர் மட்டும் தாம் செய்ததாக ஒப்புக் கொண்டார். அரசர் அவரைக் கண்டித்து அனுப்பினார்.

சாஸ்திரிகள் அரசரிடம் விடை பெற்றுச் சென்றார். வித்துவான்களுடைய சம்பாவனையும் வழக்கம்போலவே சிறப்பாக நடந்தது.

இந்த வரலாற்றைப் பிற்காலத்தில் என்னிடம் சாஸ்திரிகளே கூறியதுண்டு; அப்பொழுது அவர் "மகாராஜாவை வேலைக்காரர்கள் பலமுறை வற்புறுத்தி யிருக்கலாம். அவர் அவர்களுடைய நச்சுப் பொறுக்க முடியாமல் ஏதாவது அநுகூலமாக விடை கூறியிருப்பார். அதை அறிந்து மகாராஜாவோடு நெருங்கிப் பழகுபவர் யாரோ மகாராஜவினுடைய முத்தி ரையை வைத்துக் கடிதங்களைக் கொடுத்தனுப்பி விட் டார். நான் ஏமாந்து போகலாமா? இதை ராஜாவுக்குத் தெரிவிக்கவேண்டுமென்றே போய்ச் சொன்னேன். அந்தக் கடிதம் கொண்டு வந்தவர்களை, குதிரை, மாடு முதலியவைகளோடு சேர்க்க வேண்டுமேயன்றி வித்துவான்களோடு சேர்க்கக் கூடா தென்பதைக் குறிப்பாக மகாராஜாவிடம் சொல்லி விட்டேன். மகாராஜாவும் தெரிந்துகொண்டார்.

நான் சொன்ன விஷயங்களில் அநேகம் “என் கற் பனை" என்று சொல்லிச் சிரித்தார்.
"பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கு மெனின்."

என்ற குறள் அப்போது என் ஞாபகத்துக்கு வந்தது.


கவி காளமேகம் பாடல்கள்

                         கவி காளமேகம் பாடல்கள்
                                   காப்பு
1
ஏர்ஆனைக் காவில்உறை என்ஆனைக்கு அன்று அளித்த
போர் ஆனைக் கன்றுதனைப் போற்றினால் - வாராத
புத்திவரும்; பத்திவரும்; புத்திரஉற்பத்திவரும்;
சக்திவரும்; சித்திவரும் தான்.
2
வெள்ளைக் கலைஉடுத்து வெள்ளைப் பணிபூண்டு
வெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பாள் - வெள்ளை
அரியா சனத்தில் அரசரேடு என்னைச்
சரியா சனம்வைத்த தாய். ..
3
பெருமாளும் நல்ல பெருமாள்! அவர்தம்
திருநாளும் நல்ல திருநாள்! - பெருமாள்
இருந்திடத்தில் சும்மா இராமையினால், ஐயோ!
பருந்துஎடுத்துப் போகிறதே பார்! ..
4
நச்சரவம் பூண்டதில்லை நாதரே; தேவரீர்
பிச்சையெடுத்து உண்ணப் புறப்பட்டும் - உச்சிதமாம்
காளம் ஏன்? குஞ்சரம் ஏன்? கார்க்கடல்போ லேமுழங்கும்
மேளம் ஏன்? ராசாங்கம் ஏன்? .
5
கத்துகடல் சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில்
அத்தமிக்கும் போதில் அரிசிவரும்; குத்தி
உலையில்இட ஊர்அடங்கும்; ஓர்அகப்பை அன்னம்
இலையில்இட வெள்ளி எழும். .
6
மூப்பான் மழுவும், முராரிதிருச் சக்கரமும்
பார்ப்பான் கதையும் பறிபோச்சோ? - மாப்பார்
வலிமிகுந்த மும்மதத்து வாரணத்தை, ஐயோ!
எலி இழுத்துப் போகின்றது, ஏன்? .
7
அப்பன் இரந்துஉண்ணி; ஆத்தாள் மலைநீலி;
ஒப்பரிய மாமன் உறிதிருடி; - சப்பைக்கால்
அண்ணன் பெருவயிறன்; ஆறுமுகத் தானுக்குஇங்கு
எண்ணும் பெருமை இவை.

8
ஆடாரோ பின்னைஅவர் அன்பர்எலாம் பார்த்திருக்க
நீடுஆரூர் வீதியிலே நின்றுதான்? - தோடுஆரூம்
மெய்க்கே பரிமளங்கள் வீசும் தியாகேசர்
கைக்கே பணம்இருந்தக் கால்..
9
மாயனார் போற்றும் மதுரா புரிச்சொக்க
நாயனார் பித்திஏறி னார்என்றே - நேயமாம்
கன்னல்மொழி அம்கயல்கண் காரிகையாள், ஐயையோ!
அன்னம்இறங் காமல்அலை வாள்..
10
காலனையும் காமனையும் காட்டுசிறுத் தொண்டர்தரு
பாலனையும் கொன்ற பழிபோமோ? - சீலமுடன்
நாட்டிலே வீற்றிருந்த நாதரே; நீர் திருச்செங்
காட்டிலே வீற்றிருந்தக் கால்.
11
நல்லதொரு புதுமை நாட்டில்கண் டேன்; அதனைச்
சொல்லவா? சொல்லவா? - சொல்லவா? தொல்லை
மதுரைவிக்கி னேச்சுரனை மாதுஉமையாள் பெற்றாள்
குதிரைவிற்க வந்தவனைக் கொண்டு.
12
கண்டீரோ? பெண்காள்; கடம்பவனத்து ஈசனார்
பெண்டீர் தமைச்சுமந்து பித்தனார் - எண்சிதைக்கும்
மிக்கான தங்கைக்கு மேலே நெருப்பை இட்டார்
அக்காளை எறினா ராம்!
13
மாட்டுக்கோன் தங்கை மதுரைவிட்டுத் தில்லைநகர்
ஆட்டுக்கோ னுக்குப்பெண்டு ஆயினாள்; கேட்டிலையோ?
குட்டி மறிக்கஒரு கோட்டானையும் பெற்றாள்
கட்டிமணிச் சிற்றிடைச்சி காண்!
14
நாட்டுக்குள் ஆட்டுக்கு நாலுகால், ஐயா! நின்
ஆட்டுக்கு இரண்டுகால் ஆனாலும், - நாட்டம் உள்ள
சீர்மேவு தில்லைச் சிவனே; இல் ஆட்டைவிட்டுப்
போமோ,சொல் வாய்! அப் புலி?             
15
கொங்குஉலகும் தென்தில்லைக் கோவிந்தக் கோன்இருக்கக்
கங்குல்பகல் அண்டர்பலர் காத்திருக்கச் செங்கையிலே
ஓடு எடுத்த அம்பலவா; ஓங்குதில்லை உன்புகுந்தே
ஆடுஎடுத்தது எந்தஉபா யம்?
16
ஆடும் தியாகரே! ஆட்டம்ஏன் தான்உமக்கு?
வீடும் சமுசாரம் மேலிட்டுக் -கூடிச்
செருக்கிலினை யாடச் சிறுவர்இரண்டு ஆச்சே!
இருக்கும்ஊர் ஒற்றிஆச் சே!
17
வாதக்கால் ஆம்தமக்கு; மைத்துனர்க்கு நீரிழிவுஆம்;
பேதப் பெருவயிறுஆம் பிள்ளைதனக்கு! - ஓதக் கேள்!
வந்தவினை தீர்க்க வகை அறிவார் வேறூரார்
எந்தவினை தீர்ப்பார் இவர்?
18
தீத்தான்உன் கண்ணிலே; தீத்தான்உன் கையிலே;
தீத்தானும் உன்தன் சிரிப்பிலே, தீத்தான்உன்
மெய்எலாம்! புள்இருக்கும் வேளூரா; உன்னை இந்தத்
தையலாள் எப்படிச் சேர்ந் தாள்?



சகலகலாவல்லிமாலை

2. சகலகலாவல்லிமாலை
(குமரகுருபர சுவாமிகள் அருளியது)

                                                                          கட்டளைக் கலித்துறை
வெண்டா மரைக்கன்றி நின்பதந் தாங்கவென் வெள்ளையுள்ளத்
தண்டா மரைக்குத் தகாதுகொ லோசக மேழுமளித்
துண்டா னுறங்க வொழித்தான்பித் தாகவுண் டாக்கும்வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே.
1

நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்
பாடும் பணியிற் பணித்தருள் வாய்பங்க யாசனத்திற்
கூடும் பசும்பொற் கொடியே கனதனற் குன்றுமைம்பாற்
காடுஞ் சுமக்குங் கரும்பே சகல கலாவல்லியே.
3

அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்ளமு தார்ந்துன் னருட்கடலிற்
குளிக்கும் படிக்கென்று கூடுங்கொ லோவுளங் கொண்டுதெள்ளித்
தௌிக்கும் பனுவற் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு
களிக்குங் கலாப மயிலே சகல கலாவல்லியே.
3

தூக்கும் பனுவற் துறைதோய்ந்த கல்வியுஞ் சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்தருள் வாய்வட நூற்கடலும்
தேக்குஞ் செழுந்தமிழ்ச் செல்வமுந் தொண்டர்செந் நாவினின்று
காக்குங் கருணைக் கடலே சகல கலாவல்லியே.
4

பஞ்சப் பிதந்தரு செய்யபொற் பாதபங் கேருகமென்
நெஞ்சத் தடத்தல ராததென் னேநெடுந் தாட்கமலத்
தஞ்சத் துவச முயர்த்தோன்செந் நாவு மகமும்வெள்ளைக்
கஞ்சத் தவிசொத் திருந்தாய் சகல கலாவல்லியே.
5

பண்ணும் பரதமுங் கல்வியுந் தீஞ்சொற் பனுவலும்யான்
எண்ணும் பொழுதௌி தெய்தநல் காயெழு தாமறையும்
விண்ணும் புவியும் புனலுங் கனலும்வெங் காலுமன்பர்
கண்ணுங் கருத்து நிறைந்தாய் சகல கலாவல்லியே.
6

பாட்டும் பொருளும் பொருளாற் பொருந்தும் பயனுமென்பாற்
கூட்டும் படிநின் கடைக்கணல் காயுளங் கொண்டுதொண்டர்
தீட்டுங் கலைத்தமிழ்த் தீம்பா லமுதந் தௌிக்கும்வண்ணம்
காட்டும்வெள் ளோதிமப் பேடே சகல கலாவல்லியே.
7

சொல்விற் பனமு மவதான முங்கவி சொல்லவல்ல
நல்வித்தை யுந்தந் தடிமைகொள் வாய்நளி னாசனஞ்சேர்
செல்விக் கரிதென் றொருகால முஞ்சிதை யாமைநல்கும்
கல்விப் பெருஞ்செல்வப் பேறே சகல கலாவல்லியே.
8

சொற்கும் பொருட்கு முயிராமெய்ஞ் ஞானத்தின் றோற்றமென்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்நிலந் தோய்புழைக்கை
நற்குஞ் சரத்தின் பிடியோ டரசன்ன நாணநடை
கற்கும் பதாம்புயத் தாயே சகல கலாவல்லியே.
9

மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னருமென்
பண்கண் டளவிற் பணியச்செய் வாய்படைப் போன்முதலாம்
விண்கண்ட தெய்வம்பல் கோடியுண் டேனும் விளம்பிலுன்போற்
கண்கண்ட தெய்வ முளதோ சகல கலாவல்லியே.
10