பெருந்தலைவர் காமராஜ் ஒரு சகாப்தம். எளிய குடும்பத்தில் பிறந்து உழைப்பு, தியாகம், ஏழை எளியவர்களுக்காக பாடுபட்டது போன்ற அவருடைய சேவையை எப்படி மறக்க முடியும். மக்கள் நலனுக்காகத்தான் சட்ட திட்டங்கள் என்பதை செயல்வடிவம் கொடுத்துக் காட்டியவர். அவருடைய மறைவு தினம் அக்டோபர் மாதம் 2ஆம் தேதி. அவர் நினைவை போற்றுவோம். அவர் வழியைப் பின்பற்றுங்கள் என்று அவர் சார்ந்த இயக்கத்தாரிடம் வேண்டுகோள் வைப்போம்.
சுவையான கதைகள், கட்டுரைகள், கலை இலக்கியத் துறையில் முத்திரைப் பதித்தவர்களின் வரலாறுகள் அடங்கிய வலைப்பூ.
பாரதி பயிலகம் வலைப்பூ
Monday, September 30, 2013
பெருந்தலைவர் காமராஜ்
பெருந்தலைவர் காமராஜ் ஒரு சகாப்தம். எளிய குடும்பத்தில் பிறந்து உழைப்பு, தியாகம், ஏழை எளியவர்களுக்காக பாடுபட்டது போன்ற அவருடைய சேவையை எப்படி மறக்க முடியும். மக்கள் நலனுக்காகத்தான் சட்ட திட்டங்கள் என்பதை செயல்வடிவம் கொடுத்துக் காட்டியவர். அவருடைய மறைவு தினம் அக்டோபர் மாதம் 2ஆம் தேதி. அவர் நினைவை போற்றுவோம். அவர் வழியைப் பின்பற்றுங்கள் என்று அவர் சார்ந்த இயக்கத்தாரிடம் வேண்டுகோள் வைப்போம்.
Saturday, September 28, 2013
சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்களின் நினைவு நாள்
அக்டோபர் 3, 2013.
சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞான கிராமணியார்
சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞான கிராமணியார்
தொகுப்பு: தஞ்சை வெ. கோபாலன்
ம.பொ.சி. இந்த மூன்றெழுத்துக்கு அபூர்வமான காந்த சக்தி உண்டு. சுமார் ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ்நாடு அரசியலிலும் சரி, இலக்கிய உலகிலும் சரி இந்த மூன்றெழுத்து மனிதர் செய்த சாதனைகள் அபாரமானவை. இவரிடம் என்ன காந்த சக்தியா இருந்தது? அன்றைய தமிழ் உணர்வுள்ள இளைஞர்களை இவர் அப்படி கவர்ந்திழுத்து வைத்துக் கொண்டார். அவர் மேடைப் பேச்சை, அப்படியே பதிவு செய்து அச்சிட்டால், ஒரு சிறிதுகூட இலக்கணப் பிழையின்றி, சொற்றொடர் அழகாக அமைந்து, வாய்விட்டுப் படிக்க வேண்டுமென்ற ஆர்வத்தைத் தூண்டுவதாக அமைந்திருக்கும். தோற்றத்தில் மட்டுமென்ன? அந்த ஆழ்ந்து ஊடுறுவும் கரிய கண்கள். அபூர்வமான மீசை. படியவாரப்பட்ட தலை, வெள்ளை வெளேரென்ற தூய கதராடை, முழுக்கைச்சட்டை, தோளில் மடித்துப் போடப்பட்ட கதர் துண்டு. மேடையில் அவர் நிற்கும் தோரணையே ஒரு மாவீரனின் தோற்றம் போலத்தான் இருக்கும். ஆனால் ... அந்த மனிதர் சிறைவாசம் கொடுத்த கொடிய வயிற்றுப்புண்ணால் அவதிப்பட்டவர். சூடான அல்லது காரமான எதையும் சாப்பிட முடியாதவர். தயிர் மட்டும் விரும்பிச் சாப்பிடும் அப்பட்டமான தேசிய வாதி. ஆம்! அந்த தமிழினத் தலைவன்தான் ம.பொ.சி.
இது என்ன? யாருக்கும் இல்லாத தனி நபர் வர்ணனை என்று நினைக்கலாம். இவர் வேறு யாரைப் போலவும் இல்லாமல் பல கோணங்களிலும் புதுமை படைத்தவர். இவர் செல்வந்தரல்ல! மிக மிக ஏழை. வடதமிழ் நாட்டில் கள்ளிறக்கும் தொழில் புரியும் கிராமணி குலத்தில் பிறந்தவர். அடிப்படைப் பள்ளிக் கல்வி என்றால் இவர் படித்தது மூன்றாம் வகுப்பு மட்டுமே. ஆனால், இன்றைய நிலையில் பல முனைவர் பட்டங்களைப் பெறக்கூடிய தகுதி பெற்ற கல்வியாளர். தமிழ் இவரது மூச்சு. தமிழ்நாடு இவரது உயிர் உறையும் புனிதமான இடம். முதன்முதலில் "உயிர் தமிழுக்கு உடல் மண்ணுக்கு" என்றும், "மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி" என்றும், "தலைகொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்" என்றும் குரல் கொடுத்து சென்னையை தமிழ்நாட்டுக்குத் தக்கவைத்துக் கொள்ளவும் பாடுபட்டவர். வடவேங்கடமும் தென்குமரியும் இடையிட்ட தமிழகத்தைப் பிரித்துக் கொடுக்க மாட்டோம் என்று, மாநிலங்கள் பிரித்துக் கொடுக்கப்பட்டபோது வடவேங்கடத்தை மீட்போம் என்று போரிட்ட வீரத் தளபதி. திருப்பதி மட்டுமல்ல, திருத்தணியும் ஆந்திரத்துக்குப் போய்விட்டது. உடனே வட எல்லைப் போராட்டம் தொடங்கியதன் பலன் இன்று திருத்தணியாவது நமக்கு மிச்சமானது. தென் குமரி திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்குட்பட்டதாக இருந்தது. தெற்கெல்லை மீட்க நேசமணி போன்றோர்களுடன் இணைந்து போராடினார், இன்று குமரி தமிழ்நாட்டின் தெற்கெல்லையாக இருக்கிறது. தேவிகுளம் பீர்மேடு தமிழகத்துக்குச் சொந்தம் என்று போராடினார், "குளமாவது மேடாவது" என்று உடன்பிறந்தோரே கேலி செய்ததன் பலன் இவரது போராட்டம் தோல்வி கண்டது. தமிழிலக்கியத்தில் சிலப்பதிகாரம் எனும் காப்பியத்தைப் பட்டி தொட்டிகளில் எல்லாம் பிரச்சாரம் செய்த பலன் இன்று அந்த காப்பியம் தமிழர் நாவிலெல்லாம் மணம் வீசுகிறது. கம்பனைச் சிலர் சிறுமைப் படுத்தியும், கம்பராமாயணத்தை எரித்தும் வந்த நேரத்தில், இவர் கம்பனின் பெருமையை உலகறியச் செய்து, தனது 'தமிழரசுக்கழக' மாநில மாநாட்டின் போதெல்லாம் முதல் நாள் மாநாடு இலக்கிய மாநாடு என்று பெயரிட்டு, இலக்கியங்களை பரவச் செய்த பெருமை இவருக்கு உண்டு. இப்படிப் பல பெருமைகள், பல முதன்மையான செயல்பாடுகள் சொல்லிக்கொண்டே போகலாம். கட்டுரை நீண்டுவிடும். அந்தப் பெருமகனார் தமிழக வரலாற்றில் அழியாத இடத்தைப் பிடித்த புடம் போட்டெடுத்த தியாக புருஷன். அவர் வரலாற்றைச் சிறிது பார்ப்போமா?
வளமையான குடும்பத்தில் பிறந்து, வாய்ப்பும் வசதியும் நிரம்பப்பெற்றதன் பயனாகப் பல பெருந்தலைகளோடு பழக்கம் வைத்துத் தலைவனானவர்கள் பலர். கல்வியில் சிறந்து பட்டம் பெற்று, புகழ் பரவிநின்றதன் பயனாகப் பொது வாழ்க்கையிலும் தலையிட்டு முன்னேறியவர்கள் பலர். பெருந்தலைகளின் உதவியால் கைதூக்கி விடப்பட்டு பிரபலமானவர் சிலர். இப்படி எதுவும் இல்லாமல், மிகமிக ஏழைக் குடும்பத்தில் பிறந்து, வறுமை ஒன்றையே சொத்தாகக் கொண்ட ஒருவர், ஆரம்பக் கல்வியைக்கூட முடிக்கமுடியாத சூழலில், தான் பிறந்த குடியினரின் குலத்தொழிலான கள்ளிறக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர்களின் எதிர்ப்பைத் தனது கள் எதிர்ப்பினால் ஏற்படுத்திக் கொண்டு திண்டாடிய ஒரு தொழிலாளியின் வரலாறு இது.
இவர் செய்த தொழில்கள் பல. அதிலெல்லாம் இவர் முத்திரை பதித்தார். பின் எப்படிப் படித்தார். இவர் ஏற்றுக்கொண்ட அச்சுக்கோர்க்கும் தொழிலில்தான் அவருக்கு இந்த பலன் கிட்டியது. இப்போது போல அல்லாமல் அன்றைய தினம் அச்சடிப்பதற்கு விஷயத்தை ஒவ்வொரு எழுத்தாக அச்சு கோர்த்துத்தான் செய்து வந்தார்கள். அந்த பணி இவருக்கு. அங்கு விஷயம் அச்சில் ஏற ஏற இவர் மனத்தில் தமிழ் படிப்படியாக அரங்கேறத் தொடங்கியது. முதலில் இவரை 'கிராமணி' என்றும் 'கிராமணியார்" என்றும்தான் அழைத்தனர். அவ்வளவு ஏன்? ராஜாஜி கடைசி வரை இவரை 'கிராமணி' என்றுதான் அழைத்து வந்தார். இவர் அவரை ராமராகவும், தன்னை அனுமனாகவும் வர்ணித்து எழுதியும் பேசியும் வந்த உண்மையான ராஜாஜி தொண்டன் இவர். இவரது பணி சிறக்கச் சிறக்க சிலப்பதிகாரத்தை இவர் பிரபலமாக்க "சிலம்புச் செல்வர்" என்ற அடைமொழி இவர் பெயருக்கு முன் சேர்ந்து கொண்டது. வாழ்க்கையில் எதிர் நீச்சல் போட்டு மிக உயர்ந்த இடத்தைப் பிடித்தவர் சிலம்புச்செல்வர்.
V.O.Chidambaram Pillai
சென்னையில் தேனாம்பேட்டைப் பகுதியில் வாழ்ந்த பொன்னுச்சாமி கிராமணியார்தான் இவரது தந்தை. தாயார் சிவகாமி அம்மையார். இவர்தான் ம.பொ.சியை உருவாக்கியவர். இவர் சொன்ன புராணக் கதைகள், நீதிக் கதைகள், பாடல்கள் இவைதான் இவரை ஓர் சத்திய புருஷராக உருவாகக் காரணமாக இருந்தன. இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் ஞானப்பிரகாசம். பிந்நாளில் ஞானப்பிரகாசமாக விளங்குவார் என்று எப்படித்தான் அவர்களுக்குத் தெரிந்ததோ? பெற்றோரிடம் இவருக்கு அதீதமான பக்தி, அதிலும் தாயார் என்றால் அவருக்குக் கடவுளாகவே நினைப்பு. இவரும் படிக்கத்தான் பள்ளிக்குச் சென்றார். ஆனால் உடன் பிறந்த வறுமை, இவரால் புத்தகம் வாங்கக்கூட முடியாமல் மூன்றாம் வகுப்பிலிருந்து துரத்தப்பட்டார். ஆனாலும் அன்னை கொடுத்த கல்வி, அவரது ஆயுளுக்கும் பயன்பட்டது.
முன்னமேயே சொன்னபடி இவர் பல தொழில்களை வயிற்றுப் பிழைப்புக்காகச் செய்தார். நெசவுத்தொழில் செய்தார். அச்சுக்கோக்கும் பணியினைச் செய்தார். இவர் காந்திஜி, ராஜாஜி இவர்களைப் பின்பற்றி மதுவிலக்குக் கொள்கையில் மிக திடமாக இருந்த காரணத்தால் இவரது உறவினர், ஜாதியினர் கூட இவரை வெறுத்து ஒதுக்கும் அளவுக்குப் போய்விட்டார்கள். இவரை ஜாதிப்பிரஷ்டம்கூட செய்து விட்டனர். இவ்வளவு கஷ்ட தசையிலும் இவர் நாட்டை நினைத்தார், குடிப்பழக்கத்தினால் அழிந்து போய்க்கொண்டிருக்கும் ஏழை எளியவர்களை நினைத்தார், நம்மை அடக்கி ஆண்டுகொண்டிருக்கும் வெள்ளை பரங்கியர்களை எப்படி விரட்டுவது என்று எண்ணமிட்டார்.
பதினைந்து ஆண்டுகள் வசித்துவந்த இவர்களது ஓலைக்குடிசை ஒருநாள் தீப்பற்றிக்கொண்டது. இவரது ஆழ்ந்த இறை நம்பிக்கை இவரைக் காப்பாற்றியது. 1928இல் இவருக்குத் திருமணம் ஆயிற்று. மிகக் குறைந்த நாட்களிலேயே அந்த இளம் மனைவி கூற்றுக்கு இரையாகி விட்டார். இனி தேச சேவைதான் நமக்கு என்று மறுபடி திருமணம் செய்து கொள்ளாமலேயே நாட்டுப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். என்றாலும் பெற்றோரும் சுற்றத்தாரும் விடுவார்களா? 1937இல் தனது 31ஆம் வயதில் தனது மாமன் மகளான 17 வயது ராஜேஸ்வரியைத் திருமணம் செய்து கொண்டார்.
அன்றைய பிரபலமான தேசபக்தரும், தமிழ்நாட்டுப் பெருந்தலைவர்களில் ஒருவரும், "தமிழ்நாடு" எனும் தினப்பத்திரிகையை நடத்தி வந்தவருமான டாக்டர் வரதராஜுலு நாயுடுவிடம் இவர் அச்சுக்கோக்கும் பணியில் சேர்ந்தார். அங்கு ஒரு தொழிலாளர் பிரச்சினை. அது முடிந்ததும் தொழிலாளர்கள் அனைவரும் வேலையில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். போராடிய ம.பொ.சி. மட்டும் வெளியேற்றப்பட்டார். விதி விளையாடியது. மறுபடியும் வேலை தேடி அலையும் நிலைமை. அப்போது அவரது உறவினர் இவரைத் தன் கள்ளுக்கடையில் கணக்கு எழுத அதிக சம்பளம் ரூ.45 கொடுத்துக் கூப்பிட்டார். இவருக்கு கள்ளுக்கடைக்குப் போக இஷ்டமில்லை. மறுபடி அச்சுக்கோக்கும் பணியில் ரூ.18 சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்தார்.
இவருக்கு சொத்து பத்து எதுவும் கிடையாது. மனைவியின் வழியில் வந்த ஒரு வீட்டில் இவர் வாழ்ந்தார். இவரது பொது வாழ்க்கை விடுதலைப் போரில் செலவழிந்தது. இருபதாண்டு காங்கிரஸ் உறவில் இவர் ஆறுமுறை சிறை சென்றார். முதல் வகுப்பு கைதியாக அல்ல. மூன்றாம் தர கிரிமினல்களுடன் வாழும் 'சி' வகுப்பு கைதியாக. கடைசி காலத்தில் இவரது புகழ், அந்தஸ்து இவை உயர்ந்த காலத்தில்தான் இவருக்கு 'ஏ' வகுப்பு கிட்டியது.
இவர் கைதாகி அமராவதி சிறையில் இருந்த காலத்தில் உடல் நலம் குன்றி, உயிருக்குப் போராடும் நிலைமைக்கு வந்து விட்டார். சிறையில் இவருடன் இருந்த பல தலைவர்களும் இவருக்கு வைத்தியம் செய்ய ஏற்பாடுகளைச் செய்தனர். வி.வி.கிரி அவர்கள் இவருடன் சிறையில் இருந்தார். அவர்தான் இவரை அவ்வூர் மருத்துவ மனைக்குக் கொண்டு சென்று சிகிச்சை அளிக்க உதவினார். சிறையில் இவர் நடைப்பிணமாகத்தான் இருந்தார். மகாகவி பாரதியைப் போல இவரும் தனது முப்பத்தியொன்பதாம் வயதில் கிட்டத்தட்ட உயிரை விட்டுவிடும் நிலைமைக்கு வந்து விட்டார். இவரை மேலும் அங்கே வைத்திருந்தால் இறந்து போனாலும் போய்விடுவார் என்று இவரை வேலூர் சிறைக்கு மாற்றினர். இவர் பரோலில் வீடு சென்றபோது இவரை யாருக்குமே அடையாளம் தெரியவில்லை. அந்த அளவுக்கு இவர் உடல் மெலிந்து, முகத்தில் மீசை மட்டும்தான் இருந்தது. 1942 ஆகஸ்ட் 13ம் தேதி இவர் சிறை செல்லும்போது இவரது எடை 119 பவுண்டு. வேலூர் சிறையில் 1944 ஜனவரியில் இவரது எடை 88 பவுண்டு. அங்கிருந்து இவர் மீண்டும் தஞ்சை சிறப்பு சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இங்கு இவர் கிட்டத்தட்ட இறக்கும் தருவாய்க்கு வந்து விட்டார். அதனால் இவரை உடனடியாக விடுதலை செய்து சென்னைக்கு ரயில் ஏற்றிவிட்டனர். தஞ்சை சிறையிலிருந்து குறுக்கு வழியாக தஞ்சாவூர் ரயில் நிலையத்துக்கு இரவு 10-30க்குக் கிளம்பும் ராமேஸ்வரம் போட்மெயிலில் ஏற்றிவிட இருவர் இவரை ஒரு ஸ்ட்ரெச்சரில் போட்டுத் தூக்கிக்கொண்டு போகும் போது அரை நினைவிலிருந்த இவருக்கு யாரோ சாலையில் போனவர் சொன்னது காதில் விழுந்ததாம். "ஐயோ பாவம்! ஏதோ ஒரு அனாதை பிணம் போலிருக்கிறது" என்று. என்ன கொடுமை?
மறுநாள் சென்னை எழும்பூரில் இவரை அழைத்துச் சென்றனர். இவரது சிறை வாழ்க்கை, பட்ட துன்பங்கள், இவரது உடல் நிலை இவற்றைச் சொல்லிக் கொண்டிருந்தால் முடிவே இருக்காது. அடுத்ததைப் பார்ப்போம். இவர் வடசென்னை மதுவிலக்குப் பிரச்சாரக் குழு, ஹரிஜன சேவை, கதர் விற்பனை இப்படியெல்லாம் பணி செய்திருக்கிறார். வடசென்னை காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராக இருந்திருக்கிறார். பல ஆண்டுகள் சிறை வாசம், பலமுறை சிறைப் பிரவேசம், உடல்நிலைக் கோளாறு, இப்படி மாறிமாறி துன்பம் துன்பம் என்று அனுபவித்த ம.பொசிக்கு சுதந்திரம் கிடைத்த பிறகாவது நல்ல காலம் பிறந்ததா என்றால், அதுவும் இல்லை. அதுவரை அவருக்கு அதாவது சுதந்திரம் வரை ஆங்கிலேய ஏகாதிபத்தியம்தான் எதிரி. சுதந்திரத்துக்குப் பிறகு ஏராளமான எதிரிகள், உள் கட்சியிலும், எதிர் கட்சியிலும். எல்லாம் அவர் பிறந்த நேரம்.
சுதந்திரத்துக்குப் பிறகு சென்னை மாகாணத்தைப் பிரித்து விஷால் ஆந்திரா வேண்டுமென்று உண்ணாவிரதமிருந்து உயிரைவிட்டார் பொட்டி ஸ்ரீராமுலு என்பவர். உடனே கலவரம். நேரு மாநிலங்களைப் பிரிக்க ஒரு குழு அமைத்தார். அதன் சிபாரிசுப்படி தமிழ்நாடு தனியாகவும், ஆந்திரம் தனியாகவும் பிரிக்கப்பட்டது. அப்போதைய சித்தூர் மாவட்டம் முழுவதும் ஆந்திரத்துக்குப் போயிற்று. அந்த மாவட்டத்தில்தான் புகழ்மிக்க க்ஷேத்திரங்களான திருப்பதி, திருத்தணி முதலியன இருந்தன.
இவர் திருப்பதியை மீட்க போராட்டம் தொடங்கினார். காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டு இதுபோன்ற கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்பது தமிழ்நாடு காங்கிரசின் கொள்கை. என்ன செய்வது. காங்கிரசை விட்டு வெளியேறினார். அவர் அதற்கு முன்பே கலாச்சார கழகமாக ஆரம்பித்திருந்த "தமிழரசுக் கழகத்தை" எல்லைப் போராட்டதில் ஈடுபடுத்தித்தானும் போரில் ஈடுபட்டார். எந்த காங்கிரசுக்காகத் தன் வாழ்நாள் முழுவதும் தியாகம் செய்தாரோ அந்தக் கட்சி இவரை தூக்கி வெளியில் எறிந்து விட்டது. போர் குணம் இவருக்கு உடன் பிறந்ததாயிற்றே. விடுவாரா. இவரும் முழு மூச்சுடன் போராட்டத்தில் இறங்கினார். திருப்பதி கிடைக்காவிட்டாலும் திருத்தணி தமிழ்நாட்டுக்குக் கிடைத்தது. அதில் இவருக்கு கே.விநாயகம் எனும் ஒரு தளபதியும் கிடைத்தார். இவர் திருத்தணியில் வழக்கறிஞராக இருந்தவர். பின்னாளில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் சிங்கம் போல நின்று வாதிட்டவர்.
ம.பொ.சிக்குத் துணையாக அன்று காங்கிரசிலிருந்து சின்ன அண்ணாமலை, ஜி.உமாபதி, கவி கா.மு.ஷெரீப், கு.மா.பாலசுப்பிரமணியம், கு.சா.கிருஷ்ணமூர்த்தி, வேலூர் கோடையிடி குப்புசாமி போன்றவர்கள் தமிழரசுக் கழகத்துக்கு வந்தனர். முன்பே கூறியபடி தெற்கெல்லை போராட்டத்திலும் ஈடுபட்டார். தேவிகுளம் பீர்மேடு பகுதிகளைத் தமிழகத்தில் சேர்க்க வேண்டுமென்று போராடினார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கேரள முதலமைச்சர், கேரள காங்கிரஸ் இவற்றோடு பேசிய பின், குளமாவது, மேடாவது என்று பேச, அந்தப் போராட்டம் தோல்வியில் முடிந்தது. இவர் எந்த இயக்கத்துக்காகத் தன் வாழ்நாள் முழுவதும் போராடினாரோ, அங்கு இவருக்கு எந்த பெருமையும் கிடைக்கவில்லை. ஆனால் இவர் 'திராவிட இயக்க எதிர்ப்பு மாநாடு" என்று அடிக்கடி நடத்தினார். அந்த திராவிட இயக்கத்தைச் சேர்ந்த எம்.ஜி.ஆர். காலத்தில் இவருக்கு மேலவைத் தலைவர் பதவி கொடுக்கப்பட்டது. இவரை அப்போது எல்லோரும் கேலி செய்தனர். எதிரியின் காலடியில் விழுந்து விட்டார் ஆதாயம் தேடி என்று. போற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றலும் போகட்டும் இறைவனுக்கே என்று இவர் ஒரு கர்ம வீரராக வாழ்ந்தார்.
சுதந்திரதின பொன்விழாவை முன்னிட்டு தமிழ்நாட்டில் சுதந்திரப் போடில் சிறப்பிடம் வகித்த சில இடங்களிலிருந்தெல்லாம் புனித மண் எடுத்து அதையெல்லாம் டில்லியில் காந்திசமாதி ராஜ்காட்டுக்குக் கொண்டு செல்ல ஏற்பாடாகியது. அந்த இயக்கத்தில் 1930இல் ராஜாஜி உப்பெடுத்து சத்தியாக்கிரகம் செய்த வேதாரண்யத்தில் புனித மண் எடுக்கும் பொறுப்பினை எம்.ஜி.ஆர். ம.பொ.சிக்குக் கொடுத்தார். தள்ளாத வயதிலும் அவர் அங்கு சென்று புனித மண் எடுத்து வந்து டில்லியில் சேர்த்தார். அதைப்பற்றி அவர் எழுதிய நூலில் அந்த பயணம் முழுவதிலும் காங்கிரஸ்காரர்கள் யாரும் வந்து கலந்து கொள்ளவோ, சந்திக்கவோ இல்லை என்று எழுதியிருந்தார். ஒரு கம்யூனிஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர் மட்டும் உடனிருந்தாராம். தஞ்சை ரயில் நிலையத்தில் அன்றைய நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் சிங்காரவடிவேல் அவர்கள் டில்லி செல்வதற்காக நின்றிருந்த போது ம.பொ.சியைச் சந்தித்துப் பேசினாராம். தன் வாழ்நாள் எல்லாம் ராஜாஜியின் அந்தரங்க தொண்டராக இருந்தவர் இவர். எந்த பதவியையும் கேட்டுப் பெறாதவர் இவர். ராஜாஜி சுதந்திரா கட்சி தொடங்கிய போது எவ்வளவோ கூப்பிட்டும் ம.பொ.சி. அந்தக் கட்சிக்குப் போகவில்லை.
ராஜாஜி 1952இல் மந்திரிசபை அமைத்தபோது தஞ்சை நிலசீர்திருத்த சட்டம் 60:40 அவசரச்சட்டம் அமலாகியது. அந்த அவசரச் சட்டம் அமலாகிய தினம் ராஜாஜி தஞ்சை ராமநாதன் செட்டியார் ஹாலில், தஞ்சை நிலப்பிரபுக்கள் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசுவதாக ஏற்பாடு. அதுவரை இப்படியொரு சட்டம் வருகிறது என்பது யாருக்கும் தெரியாது. காலையில் ராஜாஜி வந்து விட்டார். அன்றைய "தி ஹிந்து" பத்திரிகையில் அவசரச்சட்டம் பற்றிய செய்தி வருகிறது. கூட்டம் ஏற்பாடு செய்தவர்கள் மத்தியில் என்ன செய்வது கூட்டத்தை ரத்து செய்வதா என்ற நிலை. ராஜாஜி கூட்டத்தில் எதிர்ப்புக்கிடையே பேசினார். அந்தக் கூட்டத்தில் சி.சுப்பிரமணியமும், ம.பொ.சியும்தான் அவசரச் சட்டத்தை விளக்கிப் பேசினர். ஒருவழியாக நிலப்பிரப்புக்கள் சமாதானமாகி கூட்டம் முடிந்தது. ஆனால் தஞ்சை மாவட்டம் முழுவதும் எதிர்ப்பு அதிகமானதால், ராஜாஜி ம.பொ.சியிடம் நீங்கள் தஞ்சை மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு எல்லா இடங்களிலும் சட்டத்தை விளக்கிப் பேசி அனைவரும் ஒப்புக்கொள்ளச் செய்ய வேண்டுமென்று பணித்தார். அவரும் அதுபோலவே ஊர் ஊராகச் சென்று பிரச்சாரம் செய்தார். மாயவரத்தில் பேசும்போது இவர் கற்களால் தாக்கப்பட்டு காயமடைந்தார். பொதுத் தொண்டில் சுதந்திர இந்தியாவிலும் அடிபட்ட தேசபக்தர் ம.பொ.சி.மட்டும்தான்.
இந்த மாமனிதன் நெடுநாள் வாழ்ந்தார். மூன்றாம் வகுப்புப் படித்திருந்தாலும் டாக்டர் பட்டம் இவரைத் தேடி வந்தது. இவர்1995ஆம் வருடம் அக்டோபர் 3ம் தேதி தனது 89ஆம் வயதில் காந்தி பிறந்த நாளுக்கு அடுத்த நாள் உயிர் நீத்தார். வாழ்க ம.பொ.சி. புகழ்! வாழ்க தமிழ்!
Tuesday, September 24, 2013
Monday, September 23, 2013
நவராத்திரி
ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் அமாவாசை முடிந்தவுடன் அடுத்த முதல் நாளான பிரதமை தொடங்கி ஒன்பது நாட்கள் நடைபெறுவது நவராத்திரி. மனித வாழ்க்கைக்கு முக்கிய தேவையான வீரம், செல்வம், கல்வி ஆகியவற்றுக்கு உரிய கடவுளர்களான துர்கா (சக்தி), லட்சுமி, சரஸ்வதி ஆகியவர்களை வணங்கும் முகத்தான் இவை கொண்டாடப் படுகிறது. பூஜையின் போதுகூட அம்மனை "துர்கா லக்ஷ்மி சரஸ்வதி" என்று மூவர் பெயரையும் சேர்த்தே சொல்லிதான் பூஜை செய்வர். மன்னன் கொலுவீற்றிருந்தான் என்று சொல்வார்கள் அல்லவா அதுபோல புழு பூச்சி முதல் இறைவன் வரை சகல ஜீவராசிகளும் கொலுவிருந்து தேவியரை நினைவு படுத்தும் நாட்கள் இவை.
இந்த ஒன்பது நாளில் முதல் மூன்று நாட்களும் தீமையை அழித்து நன்மையைக் கொடுக்கும் துர்காபரமேஸ்வரியை வணங்குமுகத்தான் கொண்டாடப்படுகிறது. தேவி பாகவதத்தில் சொல்லப்பட்ட அசுரர்களான சும்பன், நிசும்பன், மஹிஷாசுரன், மதுகைடபன், தும்ரலோசனன், ரக்தபீஜன் போன்ற அசுரர்களை வதம் செய்து துர்கா பரமேஸ்வரி, மஹிஷாசுரமர்த்தனியாகத் தன் வீரத்தைக் காட்டிய நாட்களாகக் கருதி வழிபடுகிறோம். துர்க்கையை க்ரியா சக்தி எனவும், லக்ஷ்மியை இச்சா சக்தி எனவும், சரஸ்வதியை ஞான சக்தி எனவும் வழிபடுவது வழக்கம். சில ஆலயங்களில் முச்சத்தி அம்பிகை சந்நிதிகள் உண்டு (திருவையாற்றிலும் இருக்கிறது)
அடுத்த மூன்று நாட்களையும் செல்வத்துக்கும், மங்களகரமான செயல்களுக்கும் காரணமான இலட்சுமி தேவியைக் கொண்டாடுகிறோம். கடைசி மூன்று நாட்களையும் கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியை வழிபட்டு கடைசியில் விஜயதசமி நாளை அக்ஷராப்பியாசம் எனும் கல்வி தொடங்கும் நாளாகக் கருதி வழிபடுகிறோம். சரஸ்வதி கலைகளுக்கு அதிபதி என்பதால் இந்த ஒன்பது நாட்களும் கொலுவைக் காணவரும் அண்டை அயல் பெண்கள், குழந்தைகள் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் விதத்தில் பாடல்களைப் பாடுகிறார்கள். கொலு பொம்மைகளில் பல அரிய காட்சிகளை உருவாக்கி, திருமண ஊர்வலம், இந்திர சபை, முருகன் கொலுவீற்றிருத்தல், நம் நாளில் பிரபலமான கிரிக்கெட் ஆட்டம் முதல் பல பொம்மைக் காட்சிகளையும் மின் விளக்குகளால் அலங்கரித்து, அழகிய கோலமிட்டு அலங்காரம் செய்கிறார்கள்.
இந்த மூன்று தெய்வங்களுமே பெண் தெய்வங்களான படியால் இந்த விழா பெண்கள் கொண்டாடும் விழாவாகவே நடத்தப் படுகிறது. இந்த ஒன்பது நாட்களையும் பெண்கள் தவமிருக்கும் நாட்கள் என்பர். இந்த நாட்களில் இந்த மூன்று தெய்வங்களுக்கும் சிறப்பான பூஜைகள் செய்யப்படும். பூமியில் உயிரினங்களின் படைப்பு அனைத்துமே கடவுளின் செயல் என்பதைக் குறிக்கும் வகையில் பிறப்பையும், அது படிப்படியாக பரிணாம வளர்ச்சியடைந்து மனிதன் தெய்வ கதிக்குச் செல்வதைக் குறிக்கும் வகையில் பொம்மைகள் அடுக்கி வைத்து அண்டை அயலாரை அழைத்துப் பாடி மகிழ்ந்து, வருவோர்க்கு சுண்டல் முதலானவற்றைப் பிரசாதமாக வழங்கி வருகிறோம்.
கொலு வைப்பதிலும் ஒரு ஒழுங்கு இருக்கிறது. முதல் மூன்று படிகளில் மரம் செடி கொடிகள், ஊர்வன, பறப்பன, மிருகங்கள் போன்ற பொம்மைகள், அடுத்த மூன்றில் மனித உருவங்கள், கடைசி மேல் மூன்று படிவங்களில், அவதாரங்கள், தெய்வங்கள் படிமங்கள் வைக்கப்படுகின்றன. அதாவது மாணிக்கவாசக சுவாமிகள் சொன்னதைப் போல பிறவிகள் புல்லாய், செடிகளாய், தாவரங்களாய், பறவை, மிருகங்கள், மனிதர்கள் என்று படிப்படியாய் போய் தெய்வ நிலைக்கு உயரவேண்டுமென்பதைக் குறிப்பதாகும்.
பத்தாம் நாள் விஜயதசமி. மகாபாரதத்தில் பஞ்சபாண்டவர்கள் ஓராண்டு காலம் அக்ஞாத வாசம் புரிய விராட தேசத்தில் மாறுவேஷத்தில் ஐவரும் வெவ்வேறு பணிகளில் அரண்மனையில் வேலைக்கு அமர்கிறார்கள். தருமன் அரசனுடன் சொக்கட்டான் ஆடும் நண்பனாக, பீமன் சமையற்காரனாக, அர்ஜுனன் அலியாக ராஜகுமாரிக்கு நடனம் சொல்லிக் கொடுப்பவனாக, நகுலன் குதிரை லாயத்திலும், சகாதேவன் மாட்டுத் தொழுவத்திலும், திரெளபதி ராணியின் தோழியாக பணிக்கு அமர்கிறார்கள். அப்படி மாறுவேஷம் பூணுவதற்கு முன்பாக அர்ஜுனனும் மற்றவர்களும் தங்கள் ஆயுதங்களை ஒரு வன்னிமரத்துப் பொந்தில் சுடுகாட்டுக்கருகில் மறைத்து வைத்துவிடுகிறார்கள். பிறகு துரியோதனாதியர் விராட ராஜன் மீது படையெடுத்து வரும்போது அந்த ராஜகுமாரனுடன் அலியாக இருக்கும் அர்ஜுனன் போருக்குப் போகிறான். மரப் பொந்திலிருந்து அவனுடைய காண்டீபம் எனும் வில்லை எடுத்துப் போர் புரிகிறான். அப்படி எடுத்த நாள்தான் விஜயதசமி. அந்த விஜயதசமியில் தொடங்கும் செயல் வெற்றி பெறும் என்பது நம்பிக்கை.
கொலு வைப்பது என்பது தமிழகத்தில் கடந்த 500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்து வந்திருப்பதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன. விஜயநகர சாம்ராஜ்யம் தென்னகம் எங்கும் பரவியபோது நாயக்கர்கள் ஆட்சி எங்கும் பரவிய காலம். அவர்கள் காலத்தில் கொலு வைக்கும் பழக்கம் இங்கு பரவியிருக்கிறது. அரச வம்சத்தாரில் மைசூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய இடங்களில் நவராத்திரி சிறப்பாகக் கொண்டாடப் பட்டிருக்கிறது.
நவராத்திரி கொலு படிகள் மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது என்று ஒற்றைப்படையில் வைப்பார்கள். காரணம் இது ஒன்பது எனும் ஒற்றைப்படை நாட்கள் விழா. இந்த விழா சக்தி வழிபாட்டைக் குறிப்பதாகும். இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகிய இவை மூன்றில் இச்சா சக்தி என்பது ஆன்ம உணர்வும், இறை உணர்வையும் வளர்க்கவும், கிரியா சக்தி வாழ்நாளில் தர்மங்களைச் செய்து பிறர் வாழ நன்மைகள் செய்யவும், ஞான சக்தி கல்வி கற்கவும், ஞானத்தை வளர்த்துக் கொள்ளவும் பயன்படும் விழா.
தத்துவார்த்தக் கருத்துக்களோடு, குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் உத்சாகம் தரும் பண்டிகை இது. உறவினரும், நட்பும் கலந்து ஒருவர் இல்லம் ஒருவர் சென்று உறவாடவும் இந்த பண்டிகை இடம் தருகிறது. பழைய நாட்களில் புனிதம் அதிகம் இருந்தது. தற்போதைய நாகரிக வளர்ச்சியில் ஆடம்பரமும் செல்வச் செறுக்கும் வெளிப்படுகிறது. புனிதமும், பக்தியும் நிலவ வேண்டிய சூழ்நிலைகளுக்கு பதிலாக ஆடம்பர கொண்டாட்டங்களாக மாறி வருவது இதன் உண்மையான ஆன்மிக நோக்கத்தைச் சிதற அடித்துவிடுமோ என்கிற அச்சமும் நமக்கு ஏற்படுகிறது.ஆயினும் பெண் குழந்தைகள் விரும்பி கலந்து கொள்ளும் விழா இந்த நவராத்திரி விழா.
Tuesday, September 17, 2013
கீசகன் வதம்.
கீசகன் வதம்.
பாரத புண்ணிய பூமியின் தலைசிறந்த இதிகாசங்களுள் மகாபாரதம் ஒன்று. அதில் பாண்டவர்களின் மூத்தவன் யுதிஷ்டிரன் சகுனியோடு சூதாடி தோற்றதன் விளைவாக ஓராண்டு காலம் அக்ஞாத வாசம் அதாவது தாங்கள் யார் என்பதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தலைமறைவாக இருத்தல் வேண்டுமென விதிக்கப்பட்ட நிபந்தனைக்கு உட்பட்டு மறைந்திருந்த காலம். தாங்கள் யார் கண்ணிலும் படாமல் ஒரு வருஷ காலத்தை ஓட்ட வேண்டுமானால் அதற்குத் தக்க இடம் விராட மன்னன் ஆண்ட மத்சிய நாடு என்பதை முடிவு செய்தார்கள். அவர்கள் அந்த ஊரினுள் நுழையுமுன் ஊருக்கு வெளியே இருந்த ஒரு வன்னிமரப் பொந்தில் தங்களுடைய ஆயுதங்களையெல்லாம் மறைத்து வைத்துவிட்டுத் தனித்தனியாகப் பிரிந்து போய் நகரத்தினுள் நுழைந்தார்கள். தங்கள் முயற்சி வெற்றி பெற வேண்டுமென்று யுதிஷ்டிரன் துர்க்கையிடம் வேண்டிக் கொண்டான்.
விராட ராஜாவிடம் சென்று யுதிஷ்டிரன் தன்னை கனகன் எனும் பெயர் கொண்ட ஒரு பிராமண பண்டிதன் என்று சொல்லிக் கொண்டு பகடை ஆட்டத்திலும் வல்லவன் என்று சொல்லி அரசனின் தோழனாகச் சேர்ந்து கொண்டான். பீமன் தன்னை வல்லாளன் என்று சொல்லிக் கொண்டு, மல்யுத்தமும் செய்வேன் என்று சொல்லி விராட ராஜாவின் அரண்மனையில் சமையல் செய்பவனாகச் சேர்ந்தான். அர்ஜுனன் பெண் வேடமணிந்து கொண்டு சற்று ஆண்மை வெளிக்காட்ட தன் பெயர் பிரஹன்னளை என்றும் தான் ஒரு பேடு எனத் தெரிவித்து அந்தப்புரத்தில் வேலைக்கு அமர்ந்தான். நகுலனோ தமக்ரந்தி எனும் பெயரோடு அரண்மனை குதிரை லாயத்தில் குதிரைகளைப் பழக்கும் பணியில் ஈடுபட்டான். சகாதேவனோ தந்திரிபாலன் எனும் பெயரோடு மாட்டுத் தொழுவத்தில் பணியாற்றத் தொடங்கினான்.
இப்படி பாண்டவர்கள் ஒருவருக்கொருவர் தங்களை வெளிக்காட்டிக் கொள்ளாமல் விராட மன்னனிடம் வெவ்வேறு பணிகளில் அமர்ந்து கொண்ட அதே நேரத்தில் விராட நகரத்து வீதிகளில் ஒரு வேலைக்காரி போல பாஞ்சாலி நடந்து செல்கிறாள். வேலைக்காரி என்பதை 'சைரந்திரி' என்று தன்னைக் கூறிக் கொண்ட பாஞ்சாலி அதற்கேற்ப கிழிந்த உடைகளை அணிந்திருந்தாள். பேரழகியான திரெளபதி என்னதான் கந்தை உடைக்குள் தன்னை மறைத்துக் கொண்டாலும் அழகு வெளிப்படாமல் போகுமா? தெருவில் போவோர் வருவோர் எல்லாம் அவள் மீது கவனம் செலுத்தினார்கள். அரண்மனை மேல்தட்டில் நின்று பார்த்துக் கொண்டிருந்த ராணி சுதேசனா என்பாள் கண்களில் இந்த சைரந்திரி தென்பட்டாள். அவள் நிலைமையைக் கண்டு மனமிரங்கி அவளை அழைத்துவரச் செய்து அவள் வரலாற்றைக் கேட்டாள். அதற்கு சைரந்திரி சொன்னாள், "மகாராணி! எனக்கு ஐந்து கந்தர்வர்கள் கணவன்களாக இருக்கிறார்கள். ஒரு சாபத்தின் காரணமாக ஒரு வருஷ காலம் நான் அவர்களிடமிருந்து பிரிந்து வாழ வேண்டும். இந்த ஒரு வருஷ காலம் முடிந்ததும் அவர்கள் என்னை வந்து அழைத்துச் செல்வார்கள். அதுவரை எனக்கு அடைக்கலம் தாருங்கள். நான் தங்களுக்கு மலர்மாலைகள் தொடுத்தும், அழகுபடுத்தியும் தோழியாக இருந்து பணிவிடை செய்வேன்" என்றாள்.
ராணி சுதேசனா உடனே ஒப்புக்கொண்டாலும், இவளது அழகு தொல்லை கொடுத்தால் என்ன செய்வது என்று யோசனை செய்தாள். அவளது சந்தேகத்தை சைரந்திரியிடமே கேட்டாள் ராணி. அதற்கு அவள் சொன்னாள், "தாயே! நான் தங்களுடனேயே தங்கிக்கொள்கிறேன். பிரிந்து சென்றாலல்லவோ தொல்லை. இருந்தாலும் எனது கந்தர்வக் கணவர்கள் எனக்கு எப்போதும் காவலாக இருந்து காப்பாற்றுவார்கள். முறைதவறி யாரேனும் நடக்க முயன்றால், அவர்களை என் கணவன்மார்கள் கொன்றுவிடுவார்கள், ஆகையால் அஞ்ச வேண்டாம்" என்றாள். ராணியின் பரிபூரண சம்மதத்தோடு சைரந்திரி அங்கேயே ராணியின் தோழியாகத் தங்கிக் கொண்டாள்.
விராட நாடு, அற்புதமான வளம் மிகுந்த நாடு. அங்கு எப்போதும் திருவிழாக்கள் நடந்து கொண்டிருக்கும். மகாசிவராத்திரி அங்கு விமரிசையாகக் கொண்டாடப்படும். பத்து நாட்கள் நடைபெறும் சிவராத்திரி விழாவில் பல போட்டிகள் நடக்கும். அவற்றில் மற்போரும் ஒன்று. பல தேசங்களில் இருந்தெல்லாம் மல்லர்கள் வந்து அங்கு குவிந்தனர். அந்த ஆண்டில் நடந்த மற்போரில் வேற்று நாடு ஒன்றிலிருந்து வந்திருந்த மல்லன் ஒருவன் எல்லா போட்டிகளிலும் வெற்றி பெற்றதோடு தன்னை எதிர்க்க எவரும் இல்லையென்று முழக்கம் செய்து கொண்டிருந்தான். மன்னருக்கு இந்தச் செய்தி மனவருத்தத்தைக் கொடுத்தது. அயலானான இவனை எதிர்த்து மல் யுத்தம் செய்ய நம் நாட்டில் எவரும் இல்லையா? என வருந்தினான். அப்போது கனகன் எனும் பெயரில் மன்னனிடம் நண்பனாக விளங்கிய யுதிஷ்டிரன் சொல்கிறார், "மன்னா! கவலை வேண்டாம். தங்கள் அரண்மனை மடைப்பள்ளியில் பணியாற்றிக் கொண்டிருக்கும் சமையற்காரன் வல்லாளன் சிறப்பாக மற்போர் புரிவதை நான் பார்த்திருக்கிறேன். அவனை இந்த வேற்று நாட்டானோடு போட்டியிட்டு வேற்றி பெறச் செய்யலாம், அவன் நிச்சயம் வெல்வான்" என்றார்.
அரசர் உடனே வல்லாளனை அழைத்தார். அவனை புதிய மற்போர் வீரனை எதிர்த்து மற்போர் புரிய முடியுமா என்றார். வல்லாளன் ஒப்புக்கொண்டான். அங்ஙனமே வல்லாளன் புதியவனை எதிர்த்துக் களம் இறங்கினான். இரண்டு யானைகள் மோதிக்கொண்டது போல இருவரும் மோதிக் கொண்டனர். எடுத்த எடுப்பில் வல்லாளன் தன் திறமைகளை வெளிக்காட்டவில்லை. மெல்ல மெல்ல அவன் தன் வேலையைக் காட்ட ஆரம்பித்தான். ஆணவத்தோடு புதியவன் போரிடத் துவங்கும் சமயம் வல்லாளன் தன் திறமையை எடுத்து விட்டான். கூட்டம் ஆர்ப்பரிக்க புதியவன் மண்ணைக் கவ்வ, வல்லாளன் வெற்றி வீரனாக மார்பில் முஷ்டியால் குத்திக் கொண்டு தன் வெற்றியைக் கொண்டாடினான்.
விராட தேசத்து ராணி சுதேசனாவுக்கு ஒரு தம்பி இருந்தான். அவன் பெயர் கீசகன். மக பயங்கரமான பலசாலி அவன். அந்த நாட்டுப் படைத்தலைவன், அதோடு அரசரின் மைத்துனன் என்கிற திமிர் வேறு உண்டு அவனுக்கு. பாண்டவர்களின் அக்ஞாத வாசம் பத்து மாதங்கள் முடிந்த நிலையில் அவர்களுக்கு ஒரு சோதனை உண்டானது கீசகன் வடிவத்தில். ஒரு நாள் அவன் தன் சகோதரியின் அந்தப்புரத்துக்குச் சென்றான். அங்கு ராணிக்கு உதவி புரிந்து கொண்டிருந்த தோழி சைரந்திரியைப் பார்த்து விட்டான். அவளுடைய அழகில் மயங்கி அந்தப் பணிப்பெண்ணைத் தன்னிடம் ஒப்படைக்கும்படி சகோதரி சுதேசனாவிடம் கேட்டான். அவள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் பிடிவாதமாக அந்த வேலைக்காரிதான் வேண்டுமென்று கீசகன் அடம் பிடித்தான். அவளுடைய கணவன்மார்கள் தீங்கு செய்வார்கள் எனும் எச்சரிக்கை செய்தும் அவன் கேட்பதாயில்லை.
வேறு வழியறியாத ராணி தன் சேடியான சைரந்திரியை கீசகன் மாளிகைக்குச் சென்று சிறிது மதுபானம் எடுத்து வரும்படி கட்டளையிட்டாள். மறுத்துப் பேசமுடியாத சைரந்திரி எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தாள், தனக்குப் பதிலாக வேறு யாரையாவது அனுப்பும்படி, ராணி கேட்கவில்லை, பிடிவாதமாக அவளையே போகச்சொன்னாள். கீசகன் கொடுத்த அழுத்தம் அல்லவா? வேறு வழியில்லை. இறைவன் மீது பாரத்தைப் போட்டுவிட்டுத் தன் கணவன்மார்கள் மீதிருந்த நம்பிக்கையில் தாம் எப்படியும் காப்பாற்றப்படுவோம் என்ற நம்பிக்கையில் சைரந்திரி கீசகன் அரண்மனைக்குச் சென்றாள்.
தான் விரும்பிய பெண் தன் அரண்மனைக்குள் வருவது கண்டதும் இன்ப உணர்வு மேலிட கீசகன் தன்னை மறந்து அவளைக் கட்டி அணைக்க முயன்றான். மிக நளினமாக அவன் பிடியிலிருந்து தப்பினாள் சைரந்திரி. ஓடி அரண்மனையின் சபைக்கு நடுவே சென்று உதவி கேட்டு அலறினாள். அப்போது அங்கு குழுமியிருந்த விராட ராஜா உட்பட அனைவரும் பயத்தில் உறைந்து போயிருந்தனர். கீசகனைக் கண்டு அவர்களுக்கெல்லாம் அத்தனை பயம். அருகிலிருந்த யுதிஷ்டிரரும், பீமனும் கூட தங்களை வெளிக்காட்டிக் கொள்ளாமல் வாளாவிருந்தனர். பீமன் கட்டுப்பாட்டை இழந்து பொறுமை இழக்கும் நிலைக்கு வந்தது கண்டு அருகிலிருந்த யுதிஷ்டிரர் அவனை சமையற்கட்டில் விறகு பிளக்க வேண்டுமாம் போ என்று அனுப்பி வைத்தார்.
எப்படியும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள நினைத்த சைரந்திரி சமையற்கூடத்தில் பீமனை ரகசியமாகச் சந்தித்துத் தன்னைக் காப்பாற்ற வேண்டினாள். சூழ்நிலைகளை நன்கு ஆராய்ந்து பீமன் சைரந்திரியிடம் சொன்னான், "கீசகன் ஆசைக்கு இணங்குவது போல பாசாங்கு செய்து, நள்ளிரவில் தனித்து வந்து உன்னை சந்திக்கும்படி சொல். நான் அங்கு மறைந்திருந்து மற்றவைகளை கவனித்துக் கொள்கிறேன்" என்றான்.
வலாளனாக இருந்த பீமன் சொன்ன ஏற்பாட்டின்படி திரெளபதி எனும் சைரந்திரி நடந்து கொண்டாள். அவள் சம்மதத்தைக் கேட்டு கீசகன் மட்டற்ற இன்ப அதிர்ச்சி அடைந்தான். இரவை எண்ணி தவமிருந்தான். இரவும் வந்தது. சைரந்திரி சொன்ன நாட்டியசாலைக்குள் எதிர்பார்ப்புகளோடும், இன்பக் கனவுகளோடும் நுழைந்தான். உள்ளே மங்கிய வெளிச்சம். அருகில் கட்டிலில் ஒரு உருவம் போர்வையால் மூடிக்கொண்டு படுத்திருந்ததைப் பார்த்தான் கீசகன். அவன் இதயம் மிக வேகமாக படபடவென்று அடித்துக் கொண்டது. உடலெங்கும் இன்ப உணர்பு பரவியது. கட்டிலுக்கருகில் சென்றான், மெல்ல போர்வையால் மூடிய தேகத்தைத் தொட்டான், அந்த உருவம் அசைந்தது, எழுந்தது பலம் மிகுந்த ஒரு ஆண் கீசகனோடு போரிடத் தொடங்கினான்.
இருவரும் பலமாக மோதிக் கொண்டார்கள். ஒருவன் உள்ளம் காம இச்சையால் களி கொண்டிருந்தது. மற்றொருவன் உள்ளமோ பழிவாங்கும் உணர்வில் ரத்தப்பசி கொண்டு போராடியது. கையில் கிடைத்த கீசகனை மாவு பிசைவது போல பிசைந்து கொன்றான் வல்லாளன். பிறகு சென்று குளிர்ந்த நீரில் நீராடிவிட்டு உடலெங்கும் சந்தனம் பூசிக் கொண்டு படுத்து நன்கு உறங்கினான்.
பொழுது விடிந்தது. ஊரெங்கும் செய்தி பரவியது. காம வெறி பிடித்த கீசகனை ஏதோ கந்தர்வர்கள் வந்து பிசைந்து கொன்றுவிட்டார்கள் என்று. விராட ராஜாவும், ராணி சுதேசனாவும், நாட்டு மக்களும், அரண்மனையில் பணியாற்றிக் கொண்டிருந்த ஐந்து ஜீவன்களைத் தவிர அனைவருமே கீசகனை கந்தர்வர்கள் வந்து கொன்றுவிட்டார்கள் என்று நம்பினார்கள். பாண்டவர்களும் எஞ்சியிருந்த ஒரு மாத காலத்தை அஞ்சாத வாசமிருந்து முடித்துக் கொண்டார்கள். கீசகன் வதம் மகாபாரதத்தில் வரும் ஒரு சுவையான கதை.
Monday, September 16, 2013
தமிழ் நடிகை டி.பி.ராஜலக்ஷ்மி
தமிழ் நடிகை டி.பி.ராஜலக்ஷ்மி
தமிழ் நாட்டின் முதல் நடிகை, இயக்குனர் டி.பி.ராஜலக்ஷ்மியின் நூற்றாண்டு விழாவை இந்த மாதம் 19ஆம் தேதி கொண்டாட தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார். இவர் தஞ்சை மாவட்டம் திருவையாற்றில் 1911ஆம் ஆண்டில் பிறந்தவர். இவர் பிறந்த தேதி ஒரு மேஜிக் எண்ணாக இருக்கிறது 11 11 1911.திருவையாறு பஞ்சாபகேச சாஸ்திரி ராஜலக்ஷ்மி என்பதன் சுருக்கம்தான் டி.பி.ராஜலக்ஷ்மி என்ற பெயர். தன் இளமைக்காலம் முதல் இசை, நாட்டியம், நாடகம் என்று கலைத்துறையில் ஆர்வம் கொண்டவர். நாடகக் கலை மேதை சங்கரதாஸ் சுவாமிகளிடம் இவர் நாடகங்களில் நடித்து வந்தார். 1936இல் (ஆம் 1936இல்தான்) இவர் மிஸ் கமலா என்று இவரே எழுதிய நாவலைப் படமாக இயக்கினார். முதல் பெண் இயக்குனர் எனும் பெருமையைப் பெற்றார். ராஜா சாண்டோ எடுத்த உஷாசுந்தரி, ராஜேஸ்வரி ஆகிய படங்களிலும் நடித்தார்.
இவர் நடித்த படங்கள் 23. இதில் இரண்டை இவர் இயக்கியிருக்கிறார்.
அவை முறையே "உத்தமி" (1943), பரஞ்ஜோதி (1945), காளிதாஸ் (1931), பாமா பரிணயம் (1936), சீமந்தினி (1936), தமிழ் தியாகி (1939), பூர்ணசந்திரா (1935), சுகுண சரசா (1939), ராஜேஸ்வரி (1930), அநாதைப் பெண் (1938), இதயகீதம் (1950), மிஸ் கமலா (1936), லலிதாங்கி (1935), உஷா சுந்தரி (1930), பக்த குசேலா (1935), பக்த குமரன் (1939), மதுரை வீரன் (1938), குலேபகாவலி (1935), கெளசல்யா பரிணயம் (1937), சாவித்ரி சத்யவான் (1933), நந்தகுமார் (1938), கோவலன் (1929), ஜீவஜோதி (1947). இவற்றில் இரண்டு மட்டும் இவர் இயக்கியவை.
இவருடைய 11ஆவது வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்டார். நாடகக் கலையில் ஈடுபட்டதோடு இந்திய சுதந்திரப் போராட்டத்திலும் கலந்து கொண்டார். இந்த பணிகளினால் இவர் குடும்ப வாழ்க்கையில் தொடர முடியவில்லை. திருமணமான அடுத்த வருஷமே இவர் கணவனைப் பிரிந்துவிட்டார். நாடகங்களை இவர் இயக்கத் தொடங்கினார். அந்தக் காலத்தில் ஸ்பெஷல் நாடகம் எனப்படும் நாடகங்களை நடத்தினார். சாதாரணமாக நாடகக் கம்பெனிகள் தங்கள் நடிக நடிகர்களை நிரந்தரமாகத் தங்களுடன் வைத்திருப்பார்கள். ஸ்பெஷல் நாடகம் என்றால் எப்போது நாடகம் போடுகிறார்களோ அப்போது தகுந்த நடிக நடிகைகளைக் கூப்பிட்டு நாடகம் நடத்துவார்கள்.
1930இல் இவர் சினிமாத் துறைக்குள் நுழைந்தார். அந்தக் காலத்தில் இவருடைய அழகைக் கண்டு இவரை "சினிமா ராணி" என்று புகழ்ந்தனர். இவர் தனது 20ஆம் வயதில் தன்னுடைய சக நடிகராக இருந்த டி.வி.சுந்தரம் என்பவரிடம் காதல் கொண்டார். ராஜலக்ஷ்மியிடம் தைரியமும், குறிக்கோளும் இருந்தன. அந்த நாட்களிலேயே இவர் குழந்தைத் திருமணத்தையும், சிசுக் கொலையையும் எதிர்த்திருக்கிறார். பெண் சிசுக் கொலையை சும்மா வாயால் எதிர்த்ததோடல்லாமல், அப்படி கொலை செய்யப்படவிருந்த ஒரு பெண் சிசுவை தத்து எடுத்து வளர்த்தும் வந்தார். அதன் பெயர் மல்லிகா. அந்த குழந்தை மல்லிகாவை தத்தெடுத்து, வளர்த்துத் திருமணமும் செய்து கொடுத்தார். இது தவிர இவரிடம் உதவி கேட்டு வந்த பல பெண்மணிகளுக்கு அவர் பல உதவிகளைச் செய்திருக்கிறார். இவருக்கே ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. 1936இல் பிறந்த அந்தக் குழந்தையின் பெயர் டி.எஸ்.கமலா. இந்தப் பெயரில்தான் மிஸ்.கமலா என்று அவர் தன்னுடைய முதல் சினிமாவை இயக்கினார்.
இவர் காலத்தில் வெளியான "குலேபகாவலி" என்று மூன்று மொழிகளில் எடுக்கப்பட்ட படத்தில் நடித்தார். இவர் தன் சொந்த சினிமா கம்பெனியையும் வைத்திருந்தார். அதன் பெயர் ராஜம் டாக்கீஸ். சென்னையில் இவர் வசித்த ராஜரெத்தினம் தெருவில் இவர் 10க்கும் மேற்பட்ட வீடுகள் வைத்திருந்தார். அந்தத் தெருவில் முதல் எண் உள்ள தனது வீட்டிற்கு "ராஜ்மஹால்" என்று பெயரிட்டிருந்தார். "இந்தியத் தாய்" எனும் பெயரில் ஒரு தேசபக்தி படத்தை இவர் இயக்கினார். அது தோல்வியைக் கண்டது. காரணம் அதில் இவர் வயது முதிர்ந்த பெண்ணாக நடித்ததுதான். இவருக்கு வயதாகிவிட்டது, கிழவியாகி விட்டார், அழகெல்லாம் போய்விட்டது என்று மக்கள் நினைத்து விட்டனர். அதற்குப் பிறகு அதிக பட வாய்ப்புகள் இவருக்குக் கிடைக்கவில்லை. படங்கள் இல்லை, வருமானம் இல்லை, கீழ்ப்பாக்கத்தில் இவருக்கு இருந்த சொத்துக்களை யெல்லாம் விற்கத் தொடங்கினார். வறுமையெனும் கொடிய வாழ்க்கையில் சிக்கினார்.
இவருக்கு கலைமாமணி விருது கொடுக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சிக்குப் போகக்கூட வாகன வசதி இல்லாமல் இருந்த நிலையில் எம்.ஜி.ஆர் ஒரு காரையும் அதனுடன் தன்னுடைய உதவியாளரையும் அனுப்பி அவரை விழா மேடைக்கு அழைத்து வந்து கெளரவித்ததாக அவருடைய மகள் திருமதி கமலா சொல்லியிருக்கிறார்.
வாழ்வின் உச்சத்தையும், தாழ்வையும் பார்த்து அவர் உடல்நலம் கெட்டது. ரத்த அழுத்த நோய்க்கு ஆளானார். அதன் விளைவாக கைகால்கள் இயங்காமல் படுத்த படுக்கையானார். பெண் திருமதி கமலா தன் தாயாரை நன்கு கவனித்துக் கொண்டார். டி.பி.ராஜலக்ஷ்மி தன் எல்லா சொத்துக்களையும் விற்றுவிட்டாலும் ஒரே ஒரு வீட்டை மட்டும் வைத்துக் கொண்டிருந்தார். அதைத் தன் மகள் கமலாவுக்குக் கொடுத்து விட்டார். அப்படி கொடுக்கும்போது தன் மகளிடம் ஒரு வாக்குறுதி வாங்கிக் கொண்டார், அது எந்த நிலையிலும் அந்த வீட்டை மட்டும் விற்கக்கூடாது என்பதுதான் அது. வறுமை காரணமாக அந்த வீட்டையும் விற்க நேர்ந்தது. மனமொடிந்து போன டி.பி.ராஜலக்ஷ்மி நினைவிழந்த நிலையில் வாடகை வீட்டுக்குக் கொண்டு போகப்பட்டார். நினைவு வந்து தான் எங்கிருக்கிறோம் என்பதறியாமல் மகளிடம் கேட்டபோது அந்த அறை மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாகப் பொய் சொல்லி சமாளித்திருக்கிறார். தான் இன்னமும் அந்த "ராஜ்மஹால்" இல்லத்தில்தான் இருக்கிறோம் என்ற நினைவிலேயே இருந்தார்.
கமலாவின் மகனுடைய ஆண்டு நிறைவைக் கொண்டாட இவர் முயன்றபோது பணத்துக்கு என்ன செய்வது என்று யோசித்து தனக்கு பரிசாக வந்த கேடயமொன்றை உருக்கி குழந்தைக்கு மோதிரமும், நகையும் செய்து போட்டார். புகழின் உச்சியிலும், செல்வச் செழிப்பிலும் தவழ்ந்த டி.பி.ராஜலக்ஷ்மி அவர்களின் கடைசி நாட்கள் மகிழ்ச்சிக்குரியதாக இல்லை. வறுமை யாரை விட்டது? இந்த அற்புதமான பெண்மணி 1964இல் காலமானார். அவரை நினைவு கூர்ந்து தமிழக முதல்வர் அவருடைய நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவதை கலைஞர்கள் அனைவரும் வரவேற்று மகிழவேண்டும்.
குறிப்பு: திருவையாறு ஊரை ஒரு சுற்றுலாத் தலமாக உருவாக்கிட வேண்டுமென்று திருவையாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மரியாதைக்குரிய திரு ரத்தினசாமி அவர்களும், திருவையாறு ஊராட்சித் தலைவர் அவர்களும் வேறு சிலரும் முயற்சி எடுத்து பல தகவல்களை அரசுக்கு அளித்திருக்கின்றனர். அதில் திருவையாறு பாலாஜி எனும் சித்திரக் கலைஞர் கொடுத்த மனுவில் டி.பி.ராஜலக்ஷ்மி எனும் அரிய கலைஞர் பிறந்த ஊர் திருவையாறு என்றும், அவருக்கு அங்கு ஒரு சிலை நிறுவ வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.
தமிழ் நாட்டின் முதல் நடிகை, இயக்குனர் டி.பி.ராஜலக்ஷ்மியின் நூற்றாண்டு விழாவை இந்த மாதம் 19ஆம் தேதி கொண்டாட தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார். இவர் தஞ்சை மாவட்டம் திருவையாற்றில் 1911ஆம் ஆண்டில் பிறந்தவர். இவர் பிறந்த தேதி ஒரு மேஜிக் எண்ணாக இருக்கிறது 11 11 1911.திருவையாறு பஞ்சாபகேச சாஸ்திரி ராஜலக்ஷ்மி என்பதன் சுருக்கம்தான் டி.பி.ராஜலக்ஷ்மி என்ற பெயர். தன் இளமைக்காலம் முதல் இசை, நாட்டியம், நாடகம் என்று கலைத்துறையில் ஆர்வம் கொண்டவர். நாடகக் கலை மேதை சங்கரதாஸ் சுவாமிகளிடம் இவர் நாடகங்களில் நடித்து வந்தார். 1936இல் (ஆம் 1936இல்தான்) இவர் மிஸ் கமலா என்று இவரே எழுதிய நாவலைப் படமாக இயக்கினார். முதல் பெண் இயக்குனர் எனும் பெருமையைப் பெற்றார். ராஜா சாண்டோ எடுத்த உஷாசுந்தரி, ராஜேஸ்வரி ஆகிய படங்களிலும் நடித்தார்.
இவர் நடித்த படங்கள் 23. இதில் இரண்டை இவர் இயக்கியிருக்கிறார்.
அவை முறையே "உத்தமி" (1943), பரஞ்ஜோதி (1945), காளிதாஸ் (1931), பாமா பரிணயம் (1936), சீமந்தினி (1936), தமிழ் தியாகி (1939), பூர்ணசந்திரா (1935), சுகுண சரசா (1939), ராஜேஸ்வரி (1930), அநாதைப் பெண் (1938), இதயகீதம் (1950), மிஸ் கமலா (1936), லலிதாங்கி (1935), உஷா சுந்தரி (1930), பக்த குசேலா (1935), பக்த குமரன் (1939), மதுரை வீரன் (1938), குலேபகாவலி (1935), கெளசல்யா பரிணயம் (1937), சாவித்ரி சத்யவான் (1933), நந்தகுமார் (1938), கோவலன் (1929), ஜீவஜோதி (1947). இவற்றில் இரண்டு மட்டும் இவர் இயக்கியவை.
இவருடைய 11ஆவது வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்டார். நாடகக் கலையில் ஈடுபட்டதோடு இந்திய சுதந்திரப் போராட்டத்திலும் கலந்து கொண்டார். இந்த பணிகளினால் இவர் குடும்ப வாழ்க்கையில் தொடர முடியவில்லை. திருமணமான அடுத்த வருஷமே இவர் கணவனைப் பிரிந்துவிட்டார். நாடகங்களை இவர் இயக்கத் தொடங்கினார். அந்தக் காலத்தில் ஸ்பெஷல் நாடகம் எனப்படும் நாடகங்களை நடத்தினார். சாதாரணமாக நாடகக் கம்பெனிகள் தங்கள் நடிக நடிகர்களை நிரந்தரமாகத் தங்களுடன் வைத்திருப்பார்கள். ஸ்பெஷல் நாடகம் என்றால் எப்போது நாடகம் போடுகிறார்களோ அப்போது தகுந்த நடிக நடிகைகளைக் கூப்பிட்டு நாடகம் நடத்துவார்கள்.
1930இல் இவர் சினிமாத் துறைக்குள் நுழைந்தார். அந்தக் காலத்தில் இவருடைய அழகைக் கண்டு இவரை "சினிமா ராணி" என்று புகழ்ந்தனர். இவர் தனது 20ஆம் வயதில் தன்னுடைய சக நடிகராக இருந்த டி.வி.சுந்தரம் என்பவரிடம் காதல் கொண்டார். ராஜலக்ஷ்மியிடம் தைரியமும், குறிக்கோளும் இருந்தன. அந்த நாட்களிலேயே இவர் குழந்தைத் திருமணத்தையும், சிசுக் கொலையையும் எதிர்த்திருக்கிறார். பெண் சிசுக் கொலையை சும்மா வாயால் எதிர்த்ததோடல்லாமல், அப்படி கொலை செய்யப்படவிருந்த ஒரு பெண் சிசுவை தத்து எடுத்து வளர்த்தும் வந்தார். அதன் பெயர் மல்லிகா. அந்த குழந்தை மல்லிகாவை தத்தெடுத்து, வளர்த்துத் திருமணமும் செய்து கொடுத்தார். இது தவிர இவரிடம் உதவி கேட்டு வந்த பல பெண்மணிகளுக்கு அவர் பல உதவிகளைச் செய்திருக்கிறார். இவருக்கே ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. 1936இல் பிறந்த அந்தக் குழந்தையின் பெயர் டி.எஸ்.கமலா. இந்தப் பெயரில்தான் மிஸ்.கமலா என்று அவர் தன்னுடைய முதல் சினிமாவை இயக்கினார்.
இவர் காலத்தில் வெளியான "குலேபகாவலி" என்று மூன்று மொழிகளில் எடுக்கப்பட்ட படத்தில் நடித்தார். இவர் தன் சொந்த சினிமா கம்பெனியையும் வைத்திருந்தார். அதன் பெயர் ராஜம் டாக்கீஸ். சென்னையில் இவர் வசித்த ராஜரெத்தினம் தெருவில் இவர் 10க்கும் மேற்பட்ட வீடுகள் வைத்திருந்தார். அந்தத் தெருவில் முதல் எண் உள்ள தனது வீட்டிற்கு "ராஜ்மஹால்" என்று பெயரிட்டிருந்தார். "இந்தியத் தாய்" எனும் பெயரில் ஒரு தேசபக்தி படத்தை இவர் இயக்கினார். அது தோல்வியைக் கண்டது. காரணம் அதில் இவர் வயது முதிர்ந்த பெண்ணாக நடித்ததுதான். இவருக்கு வயதாகிவிட்டது, கிழவியாகி விட்டார், அழகெல்லாம் போய்விட்டது என்று மக்கள் நினைத்து விட்டனர். அதற்குப் பிறகு அதிக பட வாய்ப்புகள் இவருக்குக் கிடைக்கவில்லை. படங்கள் இல்லை, வருமானம் இல்லை, கீழ்ப்பாக்கத்தில் இவருக்கு இருந்த சொத்துக்களை யெல்லாம் விற்கத் தொடங்கினார். வறுமையெனும் கொடிய வாழ்க்கையில் சிக்கினார்.
இவருக்கு கலைமாமணி விருது கொடுக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சிக்குப் போகக்கூட வாகன வசதி இல்லாமல் இருந்த நிலையில் எம்.ஜி.ஆர் ஒரு காரையும் அதனுடன் தன்னுடைய உதவியாளரையும் அனுப்பி அவரை விழா மேடைக்கு அழைத்து வந்து கெளரவித்ததாக அவருடைய மகள் திருமதி கமலா சொல்லியிருக்கிறார்.
வாழ்வின் உச்சத்தையும், தாழ்வையும் பார்த்து அவர் உடல்நலம் கெட்டது. ரத்த அழுத்த நோய்க்கு ஆளானார். அதன் விளைவாக கைகால்கள் இயங்காமல் படுத்த படுக்கையானார். பெண் திருமதி கமலா தன் தாயாரை நன்கு கவனித்துக் கொண்டார். டி.பி.ராஜலக்ஷ்மி தன் எல்லா சொத்துக்களையும் விற்றுவிட்டாலும் ஒரே ஒரு வீட்டை மட்டும் வைத்துக் கொண்டிருந்தார். அதைத் தன் மகள் கமலாவுக்குக் கொடுத்து விட்டார். அப்படி கொடுக்கும்போது தன் மகளிடம் ஒரு வாக்குறுதி வாங்கிக் கொண்டார், அது எந்த நிலையிலும் அந்த வீட்டை மட்டும் விற்கக்கூடாது என்பதுதான் அது. வறுமை காரணமாக அந்த வீட்டையும் விற்க நேர்ந்தது. மனமொடிந்து போன டி.பி.ராஜலக்ஷ்மி நினைவிழந்த நிலையில் வாடகை வீட்டுக்குக் கொண்டு போகப்பட்டார். நினைவு வந்து தான் எங்கிருக்கிறோம் என்பதறியாமல் மகளிடம் கேட்டபோது அந்த அறை மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாகப் பொய் சொல்லி சமாளித்திருக்கிறார். தான் இன்னமும் அந்த "ராஜ்மஹால்" இல்லத்தில்தான் இருக்கிறோம் என்ற நினைவிலேயே இருந்தார்.
கமலாவின் மகனுடைய ஆண்டு நிறைவைக் கொண்டாட இவர் முயன்றபோது பணத்துக்கு என்ன செய்வது என்று யோசித்து தனக்கு பரிசாக வந்த கேடயமொன்றை உருக்கி குழந்தைக்கு மோதிரமும், நகையும் செய்து போட்டார். புகழின் உச்சியிலும், செல்வச் செழிப்பிலும் தவழ்ந்த டி.பி.ராஜலக்ஷ்மி அவர்களின் கடைசி நாட்கள் மகிழ்ச்சிக்குரியதாக இல்லை. வறுமை யாரை விட்டது? இந்த அற்புதமான பெண்மணி 1964இல் காலமானார். அவரை நினைவு கூர்ந்து தமிழக முதல்வர் அவருடைய நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவதை கலைஞர்கள் அனைவரும் வரவேற்று மகிழவேண்டும்.
குறிப்பு: திருவையாறு ஊரை ஒரு சுற்றுலாத் தலமாக உருவாக்கிட வேண்டுமென்று திருவையாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மரியாதைக்குரிய திரு ரத்தினசாமி அவர்களும், திருவையாறு ஊராட்சித் தலைவர் அவர்களும் வேறு சிலரும் முயற்சி எடுத்து பல தகவல்களை அரசுக்கு அளித்திருக்கின்றனர். அதில் திருவையாறு பாலாஜி எனும் சித்திரக் கலைஞர் கொடுத்த மனுவில் டி.பி.ராஜலக்ஷ்மி எனும் அரிய கலைஞர் பிறந்த ஊர் திருவையாறு என்றும், அவருக்கு அங்கு ஒரு சிலை நிறுவ வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.
Wednesday, September 11, 2013
பாரதியின் சொல்லாட்சி.
மகாகவி பாரதியின் சொல்லாட்சி.
மகாகவி பாரதியின் சொல்லாட்சி.
கட்டுரை: ஆக்கியோன் தஞ்சை வெ.கோபாலன்
இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம்,
-------------------------------------------
பழமைப் புழுதியில் புரண்டு கொண்டும், மகா பண்டிதர்களின் புரியாத கடின தமிழ் நடையில், சொற்களைக் கோத்துக் கோத்து புலவர்களுக்கு மட்டுமே பொருள் விளங்கும் செய்யுள்களை இயற்றிக் கொண்டும், தமிழறிஞர்கள் வாழ்ந்து கொண்டிருந்த இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழ் நாட்டின் மொழி இருளை நீக்க இளசையில் உதித்த கதிரவன்தான் மகாகவி பாரதி. பாரதிதாசன் சொற்களால் சொல்லவேண்டுமென்றால் அவன் ஓர் வையத்து மாகவிஞன், புது நெறிகாட்டிய புலவன், தமிழுக்குத் தகும் உயர்வளிக்கும் தலைவன், பைந்தமிழ்த் தேர்ப்பாகன், செந்தமிழ் தேனீ, சிந்துக்குத் தந்தை இப்படிப் பலப்பல சொல்லிக்கொண்டே போகலாம்.
ஒரு மொழி உயிர்ப்போடு சிலிர்த்தெழ வேண்டுமானால் புதுப்புதுச் சொற்கள், புதிய புதிய இலக்கியங்கள், பிறமொழியிலிருந்து பெயர்த்துக் கொணர்ந்த புத்தம் புதிய மொழியாக்கங்கள் இவைகளைக் கொண்டு நாளுக்கு நாள் மொழியின் கட்டமைப்பை இளமைத் துடிப்போடு வைத்திருக்க வேண்டும். அந்தப் பணியைத் துவக்கி வைத்த பெருமை நம் மகாகவிக்கே உரித்தானது. அவன் படைப்புகளில்தான் எத்தனை யெத்தனை புதிய சொற்கள், எளிய சொற்கள், அதுமட்டுமல்லாமல் பழைய சொற்களை கையாண்ட விதம், தனித்து எழுதினால் பொருள் கிடைக்காத பல ஒலிச் சொற்களுக்கு புதிய பொருளைக் கொடுத்தது, இப்படி பற்பல பெருமைகளுக்கு உரியவன் மகாகவி பாரதி. அந்த வகையில் மகாகவி பயன்படுத்திய புதிய சொல்லாக்கம் சிலவற்றையும் அவன் எழுத்துக்கள் அமைத்துக் காட்டிய எழிலுறு சித்திரங்கள் சிலவற்றையும் இந்த கட்டுரையில் காணலாம்.
மகாகவியின் பெருமையை உலகறியும்படிச் செய்தவர்கள் பலர். அவர்களில் சிலர் அவன் காலத்திலேயே அவனது பெருமையை உணர்ந்தவர்கள், அதனை உலகறியப் பறை சாற்றியவர்கள். அப்படிப்பட்ட சிலரில் எஸ்.ஜி.இராமானுஜுலு நாயுடு என்பவர் ஒருவர். அந்தக் காலத்தில் வெளிவந்த "அமிர்த குண போதினி" எனும் பத்திரிகையில் 1928, 1929 ஆண்டுகளில் வெளியான தொடர் கட்டுரையில் அவர் மகாகவியின் ஆற்றலையும், பெருமையையும் போற்றிப் புகழ்ந்திருப்பதைக் காணலாம். பர்மா மாகாணம் இந்திய நாட்டின் ஒரு பகுதியாக இருந்ததும், அங்கு மகாகவியின் பாடல்கள் தடை செய்யப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட வரலாறும், அந்த பறிமுதல் நிகழ்ச்சியின் எதிரொலியாக சென்னை மாகாண சட்டசபையில் தீரர் சத்தியமூர்த்தியின் எதிர்ப்புக் குரல் ஓங்கி முழங்கியதையும் பழைய ஆவணங்களிலிருந்து அறிய முடிகிறது. மகாகவியின் சொற்கள் எவ்வளவு வலிமையுடையதாக இருந்திருந்தால் இப்படிப்பட்ட தடையுத்தரவும் பறிமுதல் நிகழ்ச்சியும் நடந்திருக்கும்? அது மட்டுமா? தன் கட்டுரையில் இராமானுஜுலு நாயுடு குறிப்பிடும் வேறு சில நிகழ்ச்சிகளும் மகாகவியின் சொற்களின் ஆற்றலை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. அவர் சொல்கிறார்:
"இந்தியா பத்திரிகை பிரபலப்பட்ட பொழுது அது மிகவும் உக்கிரக வாசமுள்ளதாயிருந்தது. சிறிதும் அச்சமின்றி எழுதப்படலானது. அந்த அம்ஸம்தான் கடைசியில் அப்பத்திரிகைக்கு ஆபத்தாய் முடிந்தது. பத்திரிகை என்றைக்கும் நடக்கும்படியான ரீதியில் சாந்தமாய் சட்ட வரம்புக்கு உட்பட்டு நடக்கும்படி பல நண்பர்கள் கூறியும் பாரதியாரின் எழுதுகோல் பழையபடியே இருந்தது. பத்திரிகைக்கு ஆபத்து நிச்சயமென்று பலர் கூறினர். ஒரு சமயம் பாரதியார் டிராம் வண்டியில் செல்லுகையில் 'இந்தியா' பத்திரிகையைப் படித்துக் கொண்டிருந்த ஒரு உத்தியோகஸ்தர் மிக்க கோபாவேசமாய் இப்பத்திரிகையின் ஆசிரியரை அவசியம் தண்டிக்க வேண்டுமென்று பாரதியாரிடமே கூறினார். பாரதியார் பதிலுக்கு "அப்படியா?" என்றார். இந்த ஸம்பவத்திற்குப் பிறகு 'இந்தியா' பத்திரிகை தனக்கென்று ஒரு புது காரியாலயமும் அச்சுக்கூடமும் அமைத்துக்கொண்டு வேறாய் விட்டது. பத்திரிகையே வேறு கை மாறினும் அதன் கொள்கை எப்போதும்போல் இருக்கும் என்று ஒரு தனிக்குறிப்பும் வெளியிடப்பட்டது".
அடுத்து, நாயுடு அவர்கள் மற்றொரு சம்பவத்தையும் விளக்குகிறார். அது: "இந்தியா பத்திரிகை வரவர 'காரமாகிவிட்டது'. சிவாஜி தன் சைநியத்தாருக்குக் கூறியது என்று அகவல் ரூபமாய் 'பாஞ்சாலி சபதம்' போல் பெருங்காவியமாகத் தொடர்ச்சியாய் பத்திரிகையில் எழுதி வந்தார். அது முற்றும் வீர ரஸமாய் இருந்தது. அதனைத் தனிப் புஸ்தக உருவமாய் வெளியிடுவதற்குப் பாரதியார் விரும்பினார். அது ஆபத்தென அவரது நண்பர்களால் தடுக்கப்பட்டது. 'இந்தியா' பத்திரிகைக்குப் பாரதியார் அந்தரங்கத்தில் ஆசிரியராக இருந்தாரேயன்றி வெளிப்படையாக அன்று. ஸ்ரீ ஸ்ரீநிவாஸன் என்பவர் ஆசிரியரும் பிரசுரிப்பவருமென்று பத்திரிகைகளில் வெளிவந்து கொண்டிருந்தது. பாரதியார் ஒரு நிருப நேயர் போன்று, இந்தியா பத்திரிகையில் பாடல்களை மட்டும் தமது பெயருடன் வெளியிட்டு வந்தார். 1907ஆம் வருஷத்தில் ஸ்ரீ லஜபதிராயைத் தேசப்பிரஷ்டம் செய்த காலையில் அவர் தம்மைப் பற்றி இரங்கிப் பிரலாபிப்பதாகப் பாரதியார் 'இந்தியா பத்திரிகையில் அரிய பாடல்களை வரைந்து அதற்குத் தெளிபொருள் விளக்கமும் குறிப்பிட்டார். அந்த விளக்கம் இப்போது வெளிவந்துள்ள அவரது நூல்களில் இல்லை. பாடல்கள் மட்டுமே உள்ளன."
'இந்தியா' பத்திரிகையில் மகாகவிதான் எழுதி வந்தாரேயன்றி, அதன் ஆசிரியராகவும், பிரசுரம் செய்பவராகவும் அரசாங்க இலாகாக்களில் பதிவு செய்யப்பட்டிருந்த ஸ்ரீ ஸ்ரீநிவாசன் அல்ல. எனினும் 'இந்தியா' பத்திரிகையின் கடுமையான விமரிசனங்களைத் தாங்கமுடியாத அரசாங்கம், அதன் ஆசிரியரைக் கைது செய்வது என்று வந்தபோது ஸ்ரீ ஸ்ரீநிவாசன்தான் கைதானாரேயன்றி, மகாகவி அல்ல. இதன் காரணமாகவே நண்பர்கள் ஆலோசனைகளின்படி மகாகவி புதுச்சேரி செல்லும்படி நேர்ந்தது என்பது வரலாற்றுச் செய்தி.
'இந்தியா' பத்திரிகை ஆசிரியர் மீது நடந்த விசாரணை, தீர்ப்பு இவற்றைப் பற்றி 16-11-1908இல் வெளிவந்த 'சுதேசமித்திரன்' ஒரு துணை தலையங்கம் எழுதியது. எழுத்தின் வலிமை எப்படிப்பட்டது, அந்த எழுத்துக்குச் சொந்தக்காரர் யார் என்பதை ஓரளவு மறைமுகமாக அந்தத் தலையங்கம் சுட்டிக்காட்டியிருக்கிறது. அது வருமாறு:
"சென்னையிற் பிரசுரமாய் வந்த 'இந்தியா' வென்ற வாராந்தர தமிழ் பத்திரிகையில் சென்ற மார்ச்சு மாதம் முதல் ராஜத் துவேஷமான வியாசங்கள் தோன்றி வருவதாக அதன்பேரில் ராஜத்துவேஷக் குற்றஞ்சாட்டி, அதை அச்சிட்டுப் பிரசுரப்படுத்துவோரான (Printer & Publisher) ஸ்ரீ ஸ்ரீநிவாஸய்யங்காரைக் கைதிப்படுத்தி, விசாரணை செய்ததில் ஐகோர்ட்டில் அவருக்கு ஐந்து வருஷ தீவாந்தர சிக்ஷை விதிக்கப்பட்டது. இப்படி விதிக்கப்படுமென்றே பொதுவாக எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ராஜத் துவேஷக் குற்றம் செய்ததாகக் கவர்ன்மெண்டார் யாரை நினைக்கிறார்களோ அவர்களைப் பிடித்து விசாரணைக்குக் கொண்டு வருவதும் ஜட்ஜுகள் கொடுந்தண்டனை விதிப்பதும் இப்போது சாதாரணமாய்விட்டது. குற்றஞ் செய்தவர்களைத் தண்டித்தல் அவசியமென்று எல்லோரும் ஒப்புக் கொள்வார்கள். ஆனால் ராஜத்துவேஷக் குற்றம் செய்கிறவர்கள் படித்தவர்காளாயும் கெளரவமான நிலைமையில் இருப்பவர்களாயும் இருப்பதால், அவர்களிடத்தில் கவர்ன்மெண்டாரும் ஜட்ஜுகளும் அவ்வளவு கொடுமை காட்டாமல் இருக்கக்கூடும். ஸ்ரீ ஸ்ரீநிவாஸய்யங்கார் குற்றமுள்ள வியாசங்களை யெழுதினவரல்ல; எழுதினவரும் அந்தப் பேப்பருக்குச் சொந்தக்காரரும் அகப்படாமல் மறைந்து போனார்கள். ஸ்ரீ ஸ்ரீநிவாஸய்யங்கார் பெயர் போலீஸ் ஆபீசில் பதிவு செய்யப்பட்டிருந்ததால் அவர் அகப்பட்டுக் கொண்டாரே யன்றி, குற்றத்துக்கு முதல் உத்திரவாதம் அவர் பேரில் தாங்கியதல்ல. இந்த ஒரு காரணத்தினாலேயே அவருக்குக் கொடுந்தண்டனை விதிக்காமல் இலகுவான தண்டனை விதித்திருக்கக்கூடும் அல்லது இந்தியா பத்திரிகையில் ராஜத்துவேஷக் குற்றமுள்ள வியாஸங்கள் தோன்றின துவக்கத்திலேயே கவர்ன்மெண்டார் எச்சரித்திருந்தார்களானால், இப்போது ஓடிப் போயிருக்கிற எடிட்டரும் புரொப்பரைட்டரும் அப்படிப்பட்ட வியாஸங்கள் தோன்ற இடங்கொடுத்திருக்க மாட்டார்கள். அவைகளால் விளையும் தீங்கும் குறைந்திருக்கும்" இதில் ஓடிப்போய்விட்ட 'இந்தியா' பத்திரிகை ஆசிரியராக வர்ணிக்கப்படுபவர் நமது மகாகவி பாரதியார்தான்.
இப்படிப் போகிறது அந்தத் தலையங்கம். இதிலிருந்து மகாகவி அதன் ஆசிரியராக இருந்து, அவர் இந்தியாவில் எழுதிய கட்டுரைகளின் கடுமை காரணமாக அரசாங்கம் விதித்த தண்டனையை ஸ்ரீநிவாசன் என்பவர் ஏற்றுக் கொள்ளும்படியும், மகாகவி புதுச்சேரி சென்று தங்கும்படியாகவும் ஆயிற்று. இவ்வளவுக்கும் அவரது கட்டுரையில் அவர் கையாண்ட 'சொற்கள்' அவைகளின் ஆற்றல், வலிமை இவைகள்தான் என்பது தெளிவு. இந்தச் செய்திகள் அனைத்தும் இப்போது அனைவருக்கும் தெரிந்த உண்மைகள்தான் என்றாலும்கூட, அவர் காலமான ஒரு சிறிது காலத்திலேயே கட்டுரை வடிவில் கொடுத்திருக்கும் ஸ்ரீ ராமானுஜுலு நாயுடு தரும் தகவல்கள் உண்மையாகவும், அவர் காலத்திய பிரதிபலிப்பாகவும் இருப்பதை உணரலாம்.
இனி மகாகவி தனது பாடல்களில் கையாண்டுள்ள ஒருசில சொற்களையும், அவை கொடுக்கும் புதிய உத்வேகம், புத்துணர்ச்சி, அவர் கூற்றால் சொல்ல வேண்டுமானால், புதிய சொற்கள், புதிய சிந்தனை இவற்றைப் படித்து மகிழ முடியும். 'பாரதமாதா திருப்பள்ளியெழுச்சி' என்றொரு பாடல். குவளை கிருஷ்ணமாச்சாரியின் தாயார் மகாகவியை ஓர் திருப்பள்ளியெழுச்சி பாடும்படி கேட்க, அன்று மடுவுக்குச் சென்று குளித்துவிட்டுத் திரும்பும்கால் களியாட்டத்தோடு இந்த கவிதையைப் பாடி முடித்ததாக பாரதிதாசன் குறிப்பிடுகிறார். அந்தக் கவிதையில் "எழுபசும் பொற்சுடர்" என்று காலைக் கதிரவனைக் குறிப்பிடுகிறார். காலைக் கதிரவன் எழுகிறான். கதிரவனின் கிரணங்கள் சூடானவை. காலை வேளையென்பதால் உதிக்கின்றபோது அவன் கிரணங்கள் பொன்னிறமாக இருக்கிறது, ஆனால் அது எப்படிப் பசும்பொற் கிரணங்களாகிறது. அதுதான் சூடான கதிரவன் கிரணங்களையும்கூட பசுமையும் குளுமையும் உள்ளதாக நம்மை உணரச்செய்கிறது. புற உடம்பில் சுடும் அக்கிரணம், மனதைக் குளுமைப்படுத்தும் பசும் பொற்கிரணமாக அந்த மகா கவிஞனுக்குத் தோன்றுவதில் என்ன வியப்பு? எழும் ஞாயிறை வணங்குகிறான். உடனே மலருக்கு எங்கே போவது. அவனுக்குக் கிடைத்த "கனிவுறு நெஞ்சம்" எனும் மலர்கொண்டு கதிரவனைப் போற்றுகிறான். மனமே மலர். அந்த மனத்தைக் கனிவும், இரக்கமும், கருணையும், அன்பும் உள்ளதாக வைத்துக் கொண்டால், அந்த மனம் கொண்டே இறைவனை அர்ச்சிக்க முடியும். என்னே அவன் சொல்லாட்சி!
புத்தம் புதிய வார்த்தை ஜாலங்களை பரவ விட்டிருக்கும் மகாகாவியம்தான் "குயில் பாட்டு". இந்த அரிய காவியத்தில் அவன் தூவியிருக்கும் அரிய சொற்கோவைகள், அடடா! படித்துப் படித்து இன்புறத்தக்கன. காலைப் பொழுது. கீழைக் கடற்கறை. கதிரவன் உதிக்கும் காட்சி, நீலக்கடலில் நெருப்பு எழும் நேர்த்தியான காட்சி அவன் மனதை உருக்குகிறது. அந்த நாள், பறவைகளுக்கு விருந்துத் திருநாள். ஏன் தெரியுமா? அவைகளை வேட்டையாட வேடர்கள் வராத நாள். அதனாலேயே அந்த நாளை அந்தப் பறவைகள் விருந்துத் திருநாளாகக் கொண்டாடுகின்றன. அங்கே ஓர் மரக்கிளையில் ஓர் சின்னக் குயில் "மேனி புளகமுற; ஆற்றல் அழிவுபெற; உள்ளத்தனல் பெருக" தன் தேனினும் இனிய குரலெழுப்பி காதல் கீதம் இசைக்கிறது. அக்கீதம் 'இன்னமுதைக் காற்றிடை கலந்ததுபோல்' சுவைக்கிறது. அது சரி! அமுதை காற்றில் கலப்பது எப்படி? அதுதான் மகாகவியின் சொல்லோவியம்.
மனத்தில் இன்ப வெறி. அத்தோடு துன்பம் எனும் சோக கீதம் உள்ளத்தின் ஆழத்தில் ஒலிக்கிறது. இன்பத்திற்குக் காரணமான இசை, அதனை எழுப்பும் குயில் தனக்கு வசப்படவில்லையே என்ற ஏக்கம் தரும் சோகம், இவை ஒருங்கிணைந்து தரும் "இன்ப வெறியும் துயரும்" எனும் சொல்லாட்சி. 'தீ' உஷ்ணமானது. அது சுடுவது. துன்பத்தைத் தருவது. குளிரில் அதே தீயின் சுடர்கள் உடலுக்கு சுகம் தருவது. அது என்ன "இன்பத் தீ"? இது எங்ஙனம் சாத்தியமாகும்? அக்குயிலின் இசை கவிஞரின் மனத்தில் 'இன்பத் தீயை' மூட்டி வதைக்கிறது. கானகத்தில் மரங்களிலும், கிளைகளிலும் தங்கியுள்ள பறவைகள் குரலெழுப்புகின்றன. எத்தனையெத்தனை வகை பறவைகள், அத்தனை யத்தனை குரல் ஒலிகள். அவை 'கலகலெனும்' ஓசைகளாக கவிஞன் காதில் விழுகின்றன. ஒருங்கிணைந்த பறவைக் குரல்கள், அதன் ஒலி 'கலகல' வென்கிறது.
பாட்டில்தான் எத்தனை வகை. மனிதன் தன் உழைப்பின் வருத்தம் தெரியாமலிருக்க பாட்டிற் மனம் பதித்த அரிய செயல். கைகொட்டிப் பண் இசைக்கும் பழகு தமிழ் கும்மி, கோலாட்டப் பாடல்கள், இப்படிப் ஏற்றம் இறைக்கும் பாட்டு, நெல்லிடிக்கும் பாட்டு, இது நடுவில் உரலை வைத்து இரு புறமும் பெண்கள் கையில் உலக்கைகளை ஏந்தி மாற்றி மாற்றி நெல்லை இடிக்கும்போது அந்த இசையின் காலப் பிரமாணமும், உரல் வயிற்றில் உலக்கை விழும் சமச்சீர் நேரக் கணக்கும், இசையினால் விளைவதன்றோ? சுண்ணமிடிப்பார் தம் சுவை மிகுந்த பாடல்கள், பண்ணையில் பணிபுரியும் பெண்டிர் பாடும் பாடல்கள், பெண்கள் பற்பல இசை வடிவங்களைப் பட்டியலிட்டு, நமது பாரம்பரிய மரபு வழி இசை நாட்டத்தை மகாகவி அரிதான சொற்களால் விளக்குவதைப் படித்து இன்புறமுடிகிறது.
காதல் இனியது. காதலினால் மனிதர்க்குக் கலவியுண்டு; கலவியினால் மானுடர்க்குக் கவலை தீரும்; காதலினால் கவிதையுண்டாம்; கானமுண்டாம்; சிற்பமுதல் கலைகளுண்டாம்; ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே என்று பறை சாற்றிய மகாகவி குயிலியின் மீது கொண்ட காதலினால் அனுபவித்தது "வெம்மைக் கொடுங்காதல்". இது சாத்தியமா? காதல் வெம்மையானதா? கொடுமையானதா? ஆம், கோவலனைப் பிரிந்த மாதவி கடற்கரையில் குளுமையான முழுமதியின் ஒளிகூட பிரிந்தவர்க்கு 'வெங்கதிராக' மாறியதாகவும், கூடியவர்க்கு 'தண்ணொளி'யாக இருப்பதாகவும் கூறியதிலிருந்து, காதல் நிறைவேறாதாருக்கு அது 'வெம்மைக் கொடுங்காதல்' என்பதை மகாகவி சிறப்பாக எடுத்துரைக்கிறார்.
ஓர் ஆங்கில கவிதையின் தாக்கம். மகாகவியின் சொல்லோவியத்தில் பிரதிபலிக்கிறது. இசையின் ஆற்றல் என்ன தெரியுமா? காட்டில் விலங்கறியும், கைக்குழந்தை தானறியும், பாட்டின் சுவைதனை பாம்பறியும்" என்றுரைப்பர் என்பதால் இது ஓர் கவிதையின் எடுத்துக்காட்டு என்கிறார். காதல் மனத்தின்பாற்பட்டது. பேசியோ, எழுதியோ காதல் உணர்வுகளை வெளிக்கொணர முடியுமா? எனவேதான் "பேசமுடியாப் பெருங்காதல்" என்ற சொற்றொடரை உதிர்க்கிறார். 'கண்ணோடு கண் ஒன்று பட்டால்" அங்கு வாய்ச் சொற்களுக்குப் பயன் என்ன?
தங்கத்தை உருக்கி, தழலைக் குறைத்து மிதமான சூட்டில் அந்தத் தங்கக் குழம்பை எங்கும் பரப்பினால் எப்படியிருக்கும்? மகாகவி விவரிக்கும் அந்த மாலைப்பொழுது நம் மனக்கண்ணில் அந்த வானத்துக் காட்சியைக் கொண்டு வந்து நிறுத்துகிறது. கதிரவன் செயல்பாடுகள்தான் எத்தனை? புல்லை நகையுறுத்துகிறான், பூவை வியப்பாக்கி உருவாக்குகிறான்; மண்ணை தெளிவாக்குகிறான், நீரில் வெளிச்சம் தருகிறான், விண்ணை வெளியாக்குகிறான். கதிரவனின் ஜோதி செய்யும் மாயா ஜாலங்களைத் தன் வார்த்தை ஜாலங்களால் மகாகவி விளக்கும் இடங்கள் இவை.
அமைதியில் இன்பமுண்டா? உயிர்கள் இருக்குமிடங்களில் உயிர்ப்பும் உண்டு. எங்கும் மயான அமைதி இருக்குமானால் மனத்தில் பீதி உண்டாகும். இயங்கும் உயிர்கள் ஆர்ப்பரிப்புக்கு இடையே மனிதன் தனித்து இருந்தாலும் அந்த உயிர்களின் நாதங்கள் ஓங்கி ஒலித்திடவும், இன்பக் களி இயல்பாக வந்து சேர்ந்து இந்தப் புவி இயங்கிடக் காண முடியும்.
இறைவன் இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்தான். உலகத்தைப் படைத்தான். இந்த உலகத்தில் நீர் நெருப்பு, ஆகாயம், காற்று, மண் இவற்றையும் படைத்தான். இந்த பஞ்ச பூதங்கள் ஒருங்கிணைந்த பற்பல தோற்றங்களை, உயிர்களைத் தோற்றுவித்தன. இவற்றில் எதுவும் புதிதாகத் தோன்றுவதுமில்லை, அழிவதுமில்லை. இந்த பஞ்ச பூதங்கள் மட்டுமே மாறி மாறி, உருமாறி இருப்பதும், பின்னர் மாறுவதும், வேறொரு உருவெடுப்பதுமாக இயக்குகின்றது. இதைத்தான் நீரைப் படைத்து, நிலத்தைத் திரட்டி வைத்தான், நீரைப் பழைய நெருப்பில் குளிர்வித்தான், காற்றை முன்னே ஊதினான், கான்றிய வானவெளி தோற்றுவித்தான் என்று இந்த பிரபஞ்சத்தின் தோற்றத்தைத் தன் வாக்கு வன்மையில் விவரிக்க முன்வந்தான் மகாகவி. மண்ணைத் தெளிவாக்கி, நீரில் மலர்ச்சி தந்து, விண்ணை வெளியாக்கி விந்தை செய்யும் காட்சியை விமரிசையாக விளக்குகின்றான்.
உலகத்தில் எத்தனையோ அதிசயங்கள். அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். இவ்வதிசயங்களில் எல்லாம் பேரதிசயமாக விளங்குகின்றது இசை என்ற இறைவன் நமக்களித்த வரம். மகாகவியின் வாக்கால் இந்த செய்தியை "இறைவனின் அதிசயங்கள் யாவினும் கானாமுதம் படைத்த காட்சி விந்தை", "பாட்டு என்று ஒன்று உண்டானதைப் போன்ற அதிசயம் வேறு எதுவுமில்லை", "நாதங்கள் சேரும் நயத்துக்கு எது நிகர்?", "ஓசை தருகின்ற இன்பத்துக்கு எதுதான் நேராகும்?" இவையெல்லாம் கவிஞரைப் பொறுத்தவரை "உவமையிலா இன்பம்".
மழை பொழிந்துகொண்டுதான் இருக்கின்றது. நமக்கு அது ஒன்றும் புதிதல்ல. எனினும் அந்த மழையை மகாகவி பார்க்கும் பார்வை என்ன? மின்னலடிக்கிறது. இடி முழங்குகின்றது. இவையெல்லாம் இயற்கையின் வெளிப்பாடுகள். இவைகள் சில நேரம் அச்சம் தருவனவாகவும் இருக்கிறது. கவிஞருக்கு இவை தரும் உணர்வு என்ன? அவர் சொல்லுகிறார், இடியின் நாதம் தாளவாத்தியத்தின் 'தீம்தரிகிட, தீம்தரிகிட, தீம்தரிகிட, தீம்தரிகிட' என்று இசையின் முழக்கமாகத் தெரிகிறதாம். மழையின் காரணமாக எங்கும் வெள்ளம், பள்ளங்கள் எல்லாம் நீரால் மூழ்குகின்றன. அவைகளின் தாளகதி 'தக்கத் ததிங்கிடத் தோம்' என்று கவிஞருக்குத் தோன்றுகிறது. காற்று அடிப்பதைத்தான் நாம் பார்ப்போம், உணர்வோம். அது 'கூ கூ' வென்று அழகிய ஓசை நயத்தோடு வெளிப்படுவதை எத்தனை பேர் கூர்ந்து கவனித்திருக்கிறோம். இடி முழக்கம் நமக்கெல்லாம் பழக்கப்பட்ட ஓசைதான். அதன் ஓசையை, ஒலி வடிவத்தை எழுத்தில் வடிக்க முடியுமா? முடியுமாம் மகாகவிக்கு. அந்த இடியோசை அவருக்குச் 'சட்டச்சட, சட்டச்சட, சட்டச்சட டட்டா" என்று கேட்கிறது. ஒரு முறை முழங்கிப் பாருங்கள், இடியோசை உங்கள் காதுகளில் ஒலிக்கும்.
முன்பே குறிப்பிட்டதைப் போல சில பொருளற்ற ஒலிகள்கூட கவிஞன் வாக்கால் உயிர் பெற்று விளங்குகின்றன. அவ்வொலிக் குறிப்புகள் பொருள் சேர்ந்து வெளிப்படுகின்றன. ஓர் தென்னை மரம். அதன் படர்ந்த மட்டையின் மீது அமர்ந்த செல்வப் பசுங்கிளி. அருகே 'கீச்சிட்டுப்' பாயும் சின்னஞ்சிறு குருவி. அது கிளைவிட்டுத் தாவி மேலே மேலே பறந்து ஏறுகிறது எப்படி? 'ஜிவ்' வென்று பாய்கிறது. இந்த 'ஜிவ்' எனும் ஒலி, இங்கே அந்தக் குருவி பறந்து செல்லும் விரைவின் வெளிப்பாடு அன்றோ?
'ரிக்' வேதம் பழமையானது. அதுதான் முதல் வேதம். மனிதன் இயற்கையைக் கண்டு மனதில் அச்சம் கொண்டான். சூரிய சந்திரர்களைக் கண்டு பயந்தான். இடியும் மழையும் மின்னலும் அவனுக்கு அச்சம் தந்தன. காற்றும் தீயும் பஞ்ச பூதங்களின் அங்கம் என்பதை அவன் முதலில் உணரவில்லை. இவற்றை எல்லாம் கண்டு அச்சம் கொண்டான். அவற்றை தங்கள் சக்திக்கு மீறியவைகளாக இருப்பதால் தெய்வங்களெனப் போற்றினான். அதன் வெளிப்பாடுதான் 'ரிக்' வேதம். ஆதிமனிதனின் அறிவுலகப் பிரவேசம். 'ரிக்' வேதத்தின் 100 பாடல்களை (ஸ்லோகங்களை) ஸ்ரீ அரவிந்தரிடம் பாடம் கேட்ட மகாகவியின் கற்பூர புத்தி அவற்றை சுவீகரித்துக் கொண்டது. விளைவு? ஞாயிறு என்றும், சக்தி என்றும், காற்று என்றும், கடல் என்றும் ஜகத்சித்திரம் வரைத்து வைத்துவிட்டார். ரிக் வேதம் ஓசை நயத்துடன் பாடப்படுபவை. அதே ஏற்ற இறக்கத்தோடு மகாகவியின் வசன கவிதைகளைப் பாடிப் பார்த்தால் என்ன? பாடிப்பார்த்தீர்களா? என்ன கண்டீர்கள்? ஆம் அதே ரிக் வேத ஒலி அமைப்புக்களோடு ஏற்ற இறக்கங்களோடு பாடத்தகுந்த படைப்புகள் அவை. மகாகவியின் பரிமாணம்தான் என்ன. தோண்டத் தோண்ட உட்புக உட்புக, பாரதியின் வீச்சு, வானத்தின் எல்லைகளையும் தாண்டி எங்கோ எங்கோ போய்க்கொண்டிருப்பதைக் காணமுடிகிறது. மகாகவியை முழுமையாக ஆய்வு செய்து புரிந்து கொள்வதுதான் எப்போது? அது இன்னும் பல தலைமுறைகள், புதிய புதிய அறிவாளிகள் படித்துப் படித்துத் தெளிந்து பதில் சொல்ல வேண்டிய கேள்வி. பார்க்கலாம். என்றாவது ஒரு நாள் மகாகவி பற்றிய ஆய்வு நிறைவு பெற்றதா என்று தெரிந்து கொள்ளலாம்.
நாமெல்லாம் இப்பூவுலகின் பிரளயகால அழிவைப் பார்க்கப்போகிறோமா. அல்லது இன்னும் பல நூற்றாண்டுகள் காத்திருக்க வேண்டுமா? தெரியவில்லை. ஆயினும் அந்த பிரளய கால தோற்றத்தைப் பாஞ்சாலி செய்த சபதத்தின் முடிவில் இப்பூவுலகம் கண்டதாக மகாகவி கூறும் சொற்கள் இதோ. 'ஓம் ஓம்' என்று உரைத்தனர் தேவர். வானம் உறுமிற்று - அதுவும் 'ஓம் ஓம்' என்றுதான் உறுமிற்று. பூமி அதிர்ச்சி உண்டாச்சு, விண்ணைப் பூழிப் படுத்தியது சுழற் காற்று. பிரளய காலம். மறுபடி அழிவு, மறுபடி உதயம், பிரபஞ்சத்தின் தடைபடாத சக்தி விளையாட்டை மகாகவி மிகச் சுலபமாக நமக்கு உருவகப் படுத்திக் காட்டிவிட்டார்.
மகாகவியின் சொற்சித்திரங்களை, சொல் பிரயோகங்களை நாளெல்லாம் வியந்து பாராட்டிக் கொண்டே இருக்கலாம். வருங்கால தலைமுறையினர் அந்த ஆய்வை மேற்கொள்ளட்டும். மேன்மேலும் புதிய கண்டுபிடிப்புக்களை வெளிஉலகுக்குக் கொண்டு வரட்டும். வாழ்க மகாகவியின் புகழ்!
Tuesday, September 10, 2013
நினைவு நாள்
வாழ்வு ஓர் கனவு!
வாழ்வு ஓர் கனவு!
"உலகெலாமோர் பெருங்கனவு அஃதுளே
உண்டு உறங்கி இடர்செய்து செத்திடும்
கலக மானுடப் பூச்சிகள் வாழ்க்கையோர்
கனவினும் கனவாகும் இதனிடை
சிலதினங்கள் உயிர்க்கு அமுதாகிய
செப்புதற்கரிதாக மயக்குமால்
திலத வாணுதலார் தரு மையலாம்
தெய்விகக் கனவன்னது வாழ்வே."
பாரதியின் நினைவு நாள் இன்று. ஆண்டுகள் பல ஆனாலும், அவன் வாழ்வு மட்டும் பொய்யாய் பழங்கதையாய் ஆகிவிடாது. உண்மை! வெறும் புகழ்ச்சியில்லை.
"உலகெலாமோர் பெருங்கனவு அஃதுளே
உண்டு உறங்கி இடர்செய்து செத்திடும்
கலக மானுடப் பூச்சிகள் வாழ்க்கையோர்
கனவினும் கனவாகும் இதனிடை
சிலதினங்கள் உயிர்க்கு அமுதாகிய
செப்புதற்கரிதாக மயக்குமால்
திலத வாணுதலார் தரு மையலாம்
தெய்விகக் கனவன்னது வாழ்வே."
பாரதியின் நினைவு நாள் இன்று. ஆண்டுகள் பல ஆனாலும், அவன் வாழ்வு மட்டும் பொய்யாய் பழங்கதையாய் ஆகிவிடாது. உண்மை! வெறும் புகழ்ச்சியில்லை.
Sunday, September 8, 2013
விநாயகர் நான்மணி மாலை
விநாயகர் சதுர்த்தி சிறப்புப் பாடல்.
பாரதியாரின் விநாயகர் நான்மணி மாலையில் இருந்து சில: ..............
1. அகவல்
கற்பக விநாயகக் கடவுளே, போற்றி!
சிற்பர மோனத் தேவன் வாழ்க!
வாரண முகத்தான் மலர்த்தாள் வெல்க!
ஆரண முகத்தான் அருட்பதம் வெல்க!
படைப்புக் கிறையவன் பண்ணவர் நாயகன்
இந்திர குரு, எனது இதயத் தொளிர்வான்
சந்திர மவுலித் தலைவன் மைந்தன்
கணபதி தாளைக் கருத்திடை வைப்போம்;
குணமதிற் பலவாம்; கூறக் கேளீர்:
உட்செவி திறக்கும்; அகக்கண் ஒளிதரும்;
அக்கினி தோன்றும்; ஆண்மை வலியுறும்;
திக்கெலாம் வென்று ஜெயக்கொடி நாட்டலாம்;
கட்செவி* தன்னைக் கையிலே எடுக்கலாம்;
விடத்தையும் நோவையும் வெம்பகை யதனையும்
துச்சமென் றெண்ணித் துயரிலா திங்கு
நிச்சலும் வாழ்ந்து நிலைபெற்றோங்கலாம்;
அச்சம் தீரும்; அமுதம் விளையும்
வித்தை வளரும்; வேள்வி ஓங்கும்;
அமரத் தன்மையும் எய்தவும்
இங்கு நாம் பெறலாம்; இஃதுணர்வீரே!
*கட்செவி=பாம்பு.
2. விருத்தம்:
எனக்கு வேண்டும் வரங்களை
இசைப்பேன் கேளாய் கணபதி!
மனத்திற் சலன மில்லாமல்
மதியில் இருளே தோன்றாமல்,
நினைக்கும் பொழுது நின்மவுன
நிலை வந்திட நீ செயல் வேண்டும்,
கனக்குஞ் செல்வம், நூறு வயது
இவையும் தர நீ கடவாயே!
3. வெண்பா:
நமக்குத் தொழில்கவிதை, நாட்டிற் குழைத்தல்
இமைப்பொழுதுஞ் சோரா திருத்தல் - உமைக்கினிய
மைந்தன் கணநாதன் நங்குடியை வாழ்விப்பான்!
சிந்தையே, இம்மூன்றும் செய்.
4. அகவல்:
பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்,
கேட்கா வரத்தைக் கேட்க நான் துணிந்தேன்,
மண் மீதுள்ள மக்கள், பறவைகள்,
விலங்குகள், பூச்சிகள், புற்பூண்டு, மரங்கள்,
யாவும் என் வினையால் இடும்பை தீர்ந்தே
இன்பமுற்று அன்புடன் இணங்கி வாழ்ந்திடவே
செய்தல் வேண்டும், தேவ தேவா!
ஞானாகாசத்து நடுவே நின்று நான்
'பூமண்டலத்தில் அன்பும் பொறையும்
விளங்குக; துன்பமும், மிடிமையும் நோவும்,
சாவும் நீங்கிச் சார்ந்த பல்லுயிரெலாம்
இன்புற்று வாழ்க!' என்பேன்! இதனை நீ
திருச்செவிக் கொண்டு திருவுளம் இரங்கி,
'அங்ஙனே யாகுக'* என்பாய் ஐயனே!
இந்நாள் இப்பொழுது எனக்கு இவ்வரத்தினை
அருள்வாய்! ஆதிமூலமே! அனந்த
சக்தி குமாரனே! சந்திரமவுலீ!
நித்தியப் பொருளே! சரணம்
சரணம் சரணம், சரணமிங் குனக்கே!
(* 'ஸ்வஸ்தி மந்திரம்' சொன்னவுடன் மற்றவர்கள் 'ததாஸ்து' அதாவது அங்ஙனமே ஆகுக என்பர். அப்படி இறைவன் பாரதி சொல்லும் வாழ்த்துக்களுக்கு ததாஸ்து சொல்ல வேண்டும் என்கிறான்.)
5. விருத்தம்:
மொய்க்குங் கவலைப் பகைபோக்கி
முன்னோன் அருளைத் துணையாக்கி
எய்க்கும் நெஞ்சை வலியுறுத்தி,
உடலை இரும்புக் கிணையாக்கி
பொய்க்குங் கலியை நான் கொன்று
பூலோகத்தார் கண் முன்னே
மெய்க்குங் கிருத யுகத்தினையே
கொணர்வேன்; தெய்வ விதியிஃதே!
6. அகவல்:
விதியே வாழி! விநயகா வாழி!
பதியே வாழி! பரமா வாழி!
சிதைவினை நீக்கும் தெய்வமே, போற்றி!
புதுவினை காட்டும் புண்ணியா போற்றி!
மதியினை வளர்க்கும் மன்னே, போற்றி!
இச்சையும் கிரியையும் ஞானமும் என்றாங்கு
மூல சக்தியின் முதல்வா போற்றி!
பிறைமதி சூடிய பெருமான் வாழி!
நிறைவினைச் சேர்க்கும் நிர்மலன் வாழி!
காலம் மூன்றையும் கடந்தான் வாழி!
சக்தி தேவி சரணம் வாழி!
வெற்றி வாழி! வீரம் வாழி!
பக்தி வாழி! பலபல காலமும்
உண்மை வாழி! ஊக்கம் வாழி!
நல்ல குணங்களே நம்மிடை அமரர்
பதங்களாம், கண்டீர்! பாரிடை மக்களே!
கிருத யுகத்தினைக் கேடின்றி நிறுத்த
விரதம் நான் கொண்டனன், வெற்றி
தருஞ்சுடர் விநாயகன் தாளிணை வாழியவே!
- மகாகவி பாரதியார்.
பாரதியாரின் விநாயகர் நான்மணி மாலையில் இருந்து சில: ..............
1. அகவல்
கற்பக விநாயகக் கடவுளே, போற்றி!
சிற்பர மோனத் தேவன் வாழ்க!
வாரண முகத்தான் மலர்த்தாள் வெல்க!
ஆரண முகத்தான் அருட்பதம் வெல்க!
படைப்புக் கிறையவன் பண்ணவர் நாயகன்
இந்திர குரு, எனது இதயத் தொளிர்வான்
சந்திர மவுலித் தலைவன் மைந்தன்
கணபதி தாளைக் கருத்திடை வைப்போம்;
குணமதிற் பலவாம்; கூறக் கேளீர்:
உட்செவி திறக்கும்; அகக்கண் ஒளிதரும்;
அக்கினி தோன்றும்; ஆண்மை வலியுறும்;
திக்கெலாம் வென்று ஜெயக்கொடி நாட்டலாம்;
கட்செவி* தன்னைக் கையிலே எடுக்கலாம்;
விடத்தையும் நோவையும் வெம்பகை யதனையும்
துச்சமென் றெண்ணித் துயரிலா திங்கு
நிச்சலும் வாழ்ந்து நிலைபெற்றோங்கலாம்;
அச்சம் தீரும்; அமுதம் விளையும்
வித்தை வளரும்; வேள்வி ஓங்கும்;
அமரத் தன்மையும் எய்தவும்
இங்கு நாம் பெறலாம்; இஃதுணர்வீரே!
*கட்செவி=பாம்பு.
2. விருத்தம்:
எனக்கு வேண்டும் வரங்களை
இசைப்பேன் கேளாய் கணபதி!
மனத்திற் சலன மில்லாமல்
மதியில் இருளே தோன்றாமல்,
நினைக்கும் பொழுது நின்மவுன
நிலை வந்திட நீ செயல் வேண்டும்,
கனக்குஞ் செல்வம், நூறு வயது
இவையும் தர நீ கடவாயே!
3. வெண்பா:
நமக்குத் தொழில்கவிதை, நாட்டிற் குழைத்தல்
இமைப்பொழுதுஞ் சோரா திருத்தல் - உமைக்கினிய
மைந்தன் கணநாதன் நங்குடியை வாழ்விப்பான்!
சிந்தையே, இம்மூன்றும் செய்.
4. அகவல்:
பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்,
கேட்கா வரத்தைக் கேட்க நான் துணிந்தேன்,
மண் மீதுள்ள மக்கள், பறவைகள்,
விலங்குகள், பூச்சிகள், புற்பூண்டு, மரங்கள்,
யாவும் என் வினையால் இடும்பை தீர்ந்தே
இன்பமுற்று அன்புடன் இணங்கி வாழ்ந்திடவே
செய்தல் வேண்டும், தேவ தேவா!
ஞானாகாசத்து நடுவே நின்று நான்
'பூமண்டலத்தில் அன்பும் பொறையும்
விளங்குக; துன்பமும், மிடிமையும் நோவும்,
சாவும் நீங்கிச் சார்ந்த பல்லுயிரெலாம்
இன்புற்று வாழ்க!' என்பேன்! இதனை நீ
திருச்செவிக் கொண்டு திருவுளம் இரங்கி,
'அங்ஙனே யாகுக'* என்பாய் ஐயனே!
இந்நாள் இப்பொழுது எனக்கு இவ்வரத்தினை
அருள்வாய்! ஆதிமூலமே! அனந்த
சக்தி குமாரனே! சந்திரமவுலீ!
நித்தியப் பொருளே! சரணம்
சரணம் சரணம், சரணமிங் குனக்கே!
(* 'ஸ்வஸ்தி மந்திரம்' சொன்னவுடன் மற்றவர்கள் 'ததாஸ்து' அதாவது அங்ஙனமே ஆகுக என்பர். அப்படி இறைவன் பாரதி சொல்லும் வாழ்த்துக்களுக்கு ததாஸ்து சொல்ல வேண்டும் என்கிறான்.)
5. விருத்தம்:
மொய்க்குங் கவலைப் பகைபோக்கி
முன்னோன் அருளைத் துணையாக்கி
எய்க்கும் நெஞ்சை வலியுறுத்தி,
உடலை இரும்புக் கிணையாக்கி
பொய்க்குங் கலியை நான் கொன்று
பூலோகத்தார் கண் முன்னே
மெய்க்குங் கிருத யுகத்தினையே
கொணர்வேன்; தெய்வ விதியிஃதே!
6. அகவல்:
விதியே வாழி! விநயகா வாழி!
பதியே வாழி! பரமா வாழி!
சிதைவினை நீக்கும் தெய்வமே, போற்றி!
புதுவினை காட்டும் புண்ணியா போற்றி!
மதியினை வளர்க்கும் மன்னே, போற்றி!
இச்சையும் கிரியையும் ஞானமும் என்றாங்கு
மூல சக்தியின் முதல்வா போற்றி!
பிறைமதி சூடிய பெருமான் வாழி!
நிறைவினைச் சேர்க்கும் நிர்மலன் வாழி!
காலம் மூன்றையும் கடந்தான் வாழி!
சக்தி தேவி சரணம் வாழி!
வெற்றி வாழி! வீரம் வாழி!
பக்தி வாழி! பலபல காலமும்
உண்மை வாழி! ஊக்கம் வாழி!
நல்ல குணங்களே நம்மிடை அமரர்
பதங்களாம், கண்டீர்! பாரிடை மக்களே!
கிருத யுகத்தினைக் கேடின்றி நிறுத்த
விரதம் நான் கொண்டனன், வெற்றி
தருஞ்சுடர் விநாயகன் தாளிணை வாழியவே!
- மகாகவி பாரதியார்.
Wednesday, September 4, 2013
ஸ்ரீசுதர்சன மகா சக்கரம்.
ஸ்ரீமகா விஷ்ணுவை நினைக்கின்ற போது நமக்கு அழகொழுக நிற்கும் நாராயணனோடு, அவரது திருக்கரங்கள் தாங்கி நிற்கும் சங்கும் சக்கரமும் காட்சி தருகின்றதல்லவா? அந்த சக்கரமே சுதர்சன சக்கரம்; அது 108 கூர்மையான முனைகளைக் கொண்ட சக்கரம் என்கிறது புராணங்கள். ஸ்ரீமன் நாராயணனுடைய நான்கு கரங்களில் வலது பின் கரத்தில் தாங்கியிருப்பது சுதர்சன சக்கரம். இடது முன் கரத்திலிருப்பது சங்கு. மற்ற இரு கரங்களிலும் ஒன்றில் கதையும் மற்றதில் தாமரையும் இருப்பதை நாம் தரிசனம் செய்திருக்கிறோம்.
நாராயணனுடைய கரத்தில் தங்கியிருக்கும் இந்த சுதர்சனமே எதிரிகளை சம்ஹாரம் செய்யும் வலிமையான ஆயுதமாகப் புராணங்கள் விளக்குகின்றன. இந்த சுதர்சனத்தைத் தாங்கியிருப்பதிலிருந்தே உயிர்களைக் காக்க எதிரிகளை சம்ஹாரம் செய்யும் காக்கும் கடவுளாக மகாவிஷ்ணு திகழ்வது தெரிகிறதல்லவா?
இந்த 'சுதர்சனம்' எனும் சொல் இருவேறு சம்ஸ்கிருத சொற்களால் உருவானது. இதில் 'ஸு' என்பது தெய்வீகத் தன்மையுள்ள என்பதையும், 'தர்ஸனம்' என்பது காட்சி என்பதும் பொருள் தருகிறது. புனிதமான அல்லது நன்மை பயக்கும் காட்சி என்று இதற்குப் பொருள் கொள்ளலாம். புனிதமான ஹோமங்களை நடத்தும்போது சுதர்சனம் வழிபாடு செய்யப்படுகிறது. இதனால் தீமைகளையும், தீயசக்திகளையும், எதிர்மறையான செயல்பாடுகளையும் நீக்கி நன்மைகளைப் பயக்கச் செய்கிறது. சக்கரம் ஒரு உருளை, அது ஓரிடத்தில் தங்காதது என்பதும் தெரிகிறதல்லவா, அதுபோலவே சுதர்சன சக்கரம் வேதகால ஆயுதங்களில் ஓரிடத்தில் தங்காது சுழன்று தீமைகளை அழிக்க வல்லது என்பது புலனாகிறது.
சுதர்சன சக்கரம் குறித்து பல்வேறு செய்திகள் சொல்லப்பட்டாலும், வைணவ சம்ப்ரதாயத்தின்படி மகாவிஷ்ணுவின் கையில் இருக்கும் ஆயுதமாக, தீமைகளை வென்று நன்மை பயக்கும் ஆயுதமாக இது பார்க்கப் படுகிறது. ஒரு வரலாற்றுச் செய்தியின்படி மகாவிஷ்ணுவுக்கு சிவபெருமான் இந்த சக்கரத்தைக் கொடுத்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறது. மற்றொரு செய்தியின்படி விஸ்வகர்மா தயாரித்துக் கொடுத்தது இந்த சுதர்சனம் என்பர்.
சுதர்சன சக்கரத்தின் பயன்பாடு இந்து புராணங்களில் மிகக் குறைவாகவே காணப்படுகின்றது. ரிக், யஜுர், சாமவேதங்களிலும், புராணங்களிலும் இது தீமையை அழித்து நல்லோரைக் காக்கும் சக்கரமாக விமர்சிக்கப்பட்டிருக்கிறது. மகாபாரதத்தில் சிசுபாலனின் தலை ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவால் இந்த சுதர்சன சக்கரம் கொண்டு வெட்டப்பட்டதாகக் கூறப்பட்டிருக்கிறது. சிசுபாலனின் 100 தவறுகள் வரை பொறுத்துக் கொண்ட கிருஷ்ண பரமாத்மா அந்த எல்லையை அவன் தாண்டியதும் இந்த தண்டனையை அவனுக்கு அளித்ததாக மகாபாரதம் கூறுகிறது. பாற்கடலைக் கடைய மந்தர மலையை இந்த சுதர்சனம் கொண்டுதான் வெட்டி கடலைக் கடைய பயன்படுத்தியதாகப் புராணம் கூறுகிறது.
சுதர்சன சக்கரத்தை தமிழில் ஆழ்வார்களும், வைணவர்களும் சக்கராத்தாழ்வார் என்ற பெயரில் வணங்கி வருகிறார்கள். எப்போதெல்லாம் தாங்கமுடியாத துன்பங்களாலும், எதிரிகளாலும் வேதனைப் படுகிறார்களோ அப்போதெல்லாம் சுதர்சனத்தை வழிபட்டு துன்பத்திலிருந்து விடுபெறுகிறார்கள். அப்படி சுதர்சனத்தின் கருணையை, பாதுகாப்பைப் பெறுவதற்காக சுதர்சன ஹோமம் செய்கிறார்கள். அக்னி மூட்டி, அதில் சுதர்சனரையும், விஜயவல்லியையும் அதில் ஆவாஹனம் செய்து ஹோமத்தீயில் நெய் முதலான ஹோம திரவியங்களைப் பெய்து வழிபாடு செய்வதன் மூலம் வேண்டிய பலன் கிட்டுகிறது.
சுதர்சனருக்கு முக்கியத்துவம் தந்து பல ஆலயங்கள் இருக்கின்றன. குறிப்பாக தென் இந்தியாவில் நாகமங்கலம் எனுமிடத்தில் ஸ்ரீ சுதர்சன பகவான் கோயிலிலும், ஸ்ரீரங்கப்பட்டினத்தில் ஸ்ரீ சுட்ஹர்சன சன்னிதியிலும், கும்பகோணம் சக்ரபாணி ஆலயத்திலும், மதுரைக்கருகிலுள்ள திருமோகூர் ஆலயத்திலும், ஒப்பிலியப்பன் ஆலயத்திலும், காஞ்சிபுரம் ஸ்ரீ தேவனாதசாமி ஆலயத்திலும் சுதர்சனர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
எதிரிகளாலும், கெட்ட ஆவிகளாலும், உடல் நலக் குறைவினாலும், வியாதிகளினாலும் துன்பம் மிக உழன்று வருந்துவோர் சுதர்சன ஹோமம் செய்விப்பதன் மூலம் அந்த துன்பங்களிலிருந்து விடுதலை அடைகிறார்கள் என்பது நாம் அறிந்ததொன்று. அவை தவிர தொழிலில் முன்னேறவும், வர்த்தகம் பெருகவும் இந்த ஹோமத்தை சிரத்தையுடன் செய்கின்றனர். இந்த ஹோமத்தை எப்போது செய்யலாம்? மகாவிஷ்ணுவுக்கு பிரிதீயான நாட்களில் இந்த ஹோமத்தைச் செய்வது சாலச் சிறந்தது. குறிப்பாக ஏகாதசி, த்வாதசி, பெளர்ணமி ஆகிய நாட்களில், அதிலும் இவை புதன் அல்லது சனிக்கிழமைகளில் இருந்தால் சிறப்பானது என்று சொல்லப்படுகிறது. இந்த சுதர்சன ஹோமத்தை மிகுந்த சிரத்தையுடன் செய்திட வேண்டும். ஏனோதானோ வென்று செய்திடமுடியாது. இது மிக சக்திவாய்ந்த ஹோமம் என்பதால், எண்ணத்தாலும், நடத்தையாலும், உடையாலும் சுத்தமாக இருந்து, மந்திரங்களை அக்ஷரப் பிசகில்லாமல் சொல்லிச் செய்ய வேண்டும். தகுந்த, அதற்கான சிரேயஸ் பெற்றிருக்கிற ஆச்சார்யார்களைக் கொண்டு செய்வது சாலச் சிறந்தது. அப்படிப்பட்ட, இதனைச் செய்யக்கூடிய அருகதையுள்ள ஆச்சார்யார்கள் யார் என்பதை நன்கு அறிந்து தெரிந்து செய்திட வேண்டும்.
இந்த ஹோமத்தால், அல்லது ஜபத்தால் ஆகும் நன்மைகள் எவை? பீடா பரிஹாரம் முதலாவது. அடுத்து பாப நாசனம், செய்த வினைகள் தீருவது, நாராயணனிடம் அடிபணிந்து வேண்டி செய்த பாபங்களைத் தீர்த்துவிடுதல் இதன் மூலம் முடியும். உடல் நலம் தளர்தல், மன உளைச்சல், பிரம்ம ராக்ஷஸ் தொல்லை போன்றவற்றிலிருந்து காக்கும் வல்லமை படைத்தது இது. சுதர்சன அஷ்டகம் எனும் பெயரில் ஒரு ஸ்லோகத்தை ஸ்வாமி தேசிகன் இயற்றித் தந்திருக்கிறார். ஒரு முறை கிராமம் ஒன்றில் பிளேக் எனும் கொடிய தொற்று நோய் பரவியதாம். அப்போது தேசிகன் இந்த அஷ்டகத்தை இயற்றிப் பாட, அது உடனே அடங்கி ஒடுங்கியதாக வரலாறு.
இந்த ஹோமத்தின் நிறைவில், கர்த்தா நல்ல ஆரோக்கியமும், செல்வமும், வாழ்வில் முன்னேற்றமும் அடைவார் என்பது உறுதி. சுதர்சன மூலமந்திரம் குரு உபதேசத்தின் மூலம் பெற்றவர்களால் உரிய முறையில் பயன்படுத்தப் படுகிறது. பலகோடி முறை சுதர்சன மந்திரம் உச்சாடனம் செய்து, சுதர்சனத்தின் மூலம் அரிய பெரிய காரியங்களை அவர்களால் செய்ய முடிகிறது.
Subscribe to:
Posts (Atom)