பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, December 19, 2013

சுவாமி விவேகானந்தரின் 150ஆவது ஜெயந்தி விழா.

                      சுவாமி விவேகானந்தரின் 

                     150ஆவது ஜெயந்தி விழா.

பாரதி இயக்கமும், தஞ்சை நியுடவுன் ரோட்டரி சங்கமும் இணைந்து நடத்தும் சுவாமி விவேகானந்தரின் 150ஆவது ஜெயந்தி விழா. கல்லூரி மாணவர் பயிலரங்கம்.

நாள்:              22-12-2013 ஞாயிற்றுக் கிழமை காலை 10-00 மணி முதல்.
இடம்:              சரஸ்வதி அம்பாள் பள்ளி, மேட்டுத் தெரு, திருவையாறு.
கலந்து கொள்வோர்:                கல்லூரி மாணவர்கள்.

காலை 9-30 மணி.    மாணவர்கள் பதிவு.
10-00 மணி.               சுவாமி விவேகானந்தரின் வாழ்வும் வாக்கும்
உரை:                         பேராசிரியர் கி.கண்ணன், கோவை
உரை:                         திரு கி.முத்துராமகிருஷ்ணன், லால்குடி

1-00 மணி உணவு இடைவேளை

2-00 மணி      "சுவாமி விவேகானந்தர்"     திரைப்படம்
                          சென்னை இராமகிருஷ்ண மடம் தயாரிப்பு.

4-30 மணி நிறைவு விழா
சான்றிதழ் வழங்கல்: சுவாமி கிருஷ்ணானந்தா, அம்மன்பேட்டை
நிறைவுரை:              பேராசிரியர்  கி.கண்ணன்.


நன்றியுரை:            நீ.சீனிவாசன், செயலர், பாரதி இயக்கம்.

அழைப்பின் மகிழ்வில்

பாரதி இலக்கியப் பயிலகம்.   பாரதி இயக்கம், திருவையாறு   நியுடவுன் ரோட்டரி சங்கம்,
தஞ்சாவூர்.                                                                                              தஞ்சாவூர்.

Please SHARE























Please SHARE this message with all your friends..! RBI- FROM 1st JANUARY 2014 ANY BANK WILL NOT ACCEPT ANYTHING WRITTEN ON NOTE RBI Guidelines: Because of writing on Indian currency notes, Indian Govt loses Rs 2,638 cr each year, so please don't write anything on currency note as they can't be used for STD transactions e.g. We can't find written Notes in ATM. When will we learn to value & respect our own currency? Have you seen a dollar bill or a Pound with anything written on it? SPREAD THIS NEWS ITS IMPORTANT...SHA RE IT..!

Tuesday, December 3, 2013

பண்டித மா. கோபாலகிருஷ்ண ஐயர்

"உதிரிப்பூ" எனும் பெயரில் ஒரு வலைப்பூவை இயக்கி வரும் திரு A.இராஜகோபாலன் அவர்கள் "மின் தமிழ்" குழுமத்தில் வெளியிட்டிருந்த ஒரு தமிழ் அறிஞருடைய வாழ்க்கை வரலாறு இது. எத்தனையோ தமிழறிஞர்களைத் தெரிந்து வைத்திருக்கிறோம். சிலர் குறித்து யாரும் அதிகம் பேசுவதில்லை அதனால் இளைஞர்கள், ஏன் முதியவர்கள்கூட தெரிந்து கொள்ள முடிவதில்லை. இதோ ஒரு தமிழறிஞர். தமிழகம் தந்த கொடையாக வந்து தோன்றியவர்கள். இப்படி பலர் உண்டு. இப்போது இவரைத் தெரிந்து கொள்வோம்.

இந்தக் கட்டுரையை மீள்பதிவு செய்துகொள்ள அனுமதியளித்த திரு A.இராஜகோபாலன் அவர்களுக்கு நன்றி. 
                       Courtesy: Mintamil group.


                  பண்டித மா. கோபாலகிருஷ்ண ஐயர்
சுதேசமித்திரனில் எனக்குத் துணை செய்ய நல்ல தமிழ் எழுதக்கூடிய உணர்வு பெற்ற வாலிபர் ஒருவர் தேவை என்று ஜி.சுப்பிரமணிய ஐயர் கேட்ட போது அத்தகைய ஒருவரை நான் அறிவேன் என்று கூறிபாரதியாரை அழைத்து வந்து அறிமுகப்படுத்தி வைத்தவர் பண்டித மா. கோபாலகிருஷ்ண ஐயர். இவர் தமிழ்ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் புலமை பெற்றிருந்தவர். பேராசிரியர்பத்திரிகையாளர்கவிஞர்,மொழிபெயர்ப்பாளர்நிர்வாகி என்று பன்முகத் திறமை கொண்டிருந்தவர். நல்லதமிழ்ப் ற்றாளராகவும்,தேசாபிமானியாகவும்நல்ல ஆன்மிக வாதியாகவும் வாழ்ந்து மறைந்த பெரியார்.
1878ம் ஆண்டு திருச்சி அருகே லால்குடியில்திரு மகாதேவன்,   ப்ரவர்த்த ஸ்ரீமதி தம்பதியர்க்கு மகவாகப் பிறந்தவர். அந்தக்காலத்திலேயே F.A  தேர்வில் தேறி  ஆங்கிலப் புலமை பெற்றதோடு,  தொல்காப்பியப் பாயிர விருத்தி ஆசிரியர்,சோழவந்தான் வித்வான் அ.சண்முகம் பிள்ளையிடம் தமிழையும் பழுதறக்கற்றுப் புலமை மிகப் பெற்றார்.
சுவாமி விவேகானந்தரோடு கொண்ட தொடர்பால் இராமகிருஷ்ணர் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டார். விவேகானந்தரைப் பாம்பனில் வரவேற்றபோதுராமநாதபுர மன்னர் பாஸ்கரசேதுபதியோடுகோபாலகிருஷ்ண ஐயரும் உடனிருந்ததாகத் தமது கவிக்குயில் பாரதியார் என்ற நூலில் கவியோகி சுத்தானந்த பாரதியார் குறிப்பிட்டிருக்கிறார் . விவேகானந்தர் ஆங்கிலத்தில் இயற்றிய 'Song of sanyasin  என்ற 13கவிதைகள் அடங்கிய தொகுதி முழுவதையும் கோபாலகிருஷ்ண ஐயர் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் என்பதும்அது 'விவேக சிந்தாமணி' 1904 ஜூலை இதழில் வெளிவந்தது என்பதும்அறிஞர் பெ.சு. மணி அவர்கள் மூலம் தெரிய வருகின்றன.
இவரது நண்பர் மு.ரா. கந்தசாமிக் கவிராயர் 1909 ல் மதுரையில் தொடங்கிய 'வித்யா பாநுஎன்ற மாத இதழில், இவர் அதன் துணையாசிரியராகப் பணியாற்றினார். 1916 ல் மதுரை மாணவர் செந்தமிழ்ச் சங்கம் என்ற அமைப்பின் தலைவராயிருந்தபோது அந்த அமைப்பின் சார்பிலேயே, 'விவேகோதயம்என்னும் இதழைத் தானே தொடங்கி நடத்தினார். பெரும் தமிழறிஞர்களாகப் போற்றப்பட்ட ந.மு. வேங்கடசாமி நாட்டார்,அரசஞ்சண்முகனார் போன்றோர் எழுதிய அரிய கருத்துக்களடங்கிய கட்டுரைகளைத் தாங்கி விவேகோதயம் வெளிவந்தது. பின்னர், 1923 ல் திருச்சி நேஷனல் கல்லூரியில் பேராசிரியராகவும்தமிழ்த் துறைத் தலைவராகவும் பணியாற்றிய காலத்தில் ஆரம்பித்த  'நச்சினார்க்கினியர்'என்னும் இலக்கிய இதழைத் தன் இறுதிக்காலம் வரை தொடர்ந்து நடத்தினார்.
                             கவிதா ரசனை மிகுந்த இவர்தமிழில் கவிதை இயற்றுகிற வல்லமை பெற்றவராகவும் இருந்தார். ஷேக்ஸ்பியர் நாடகங்களில் வருகிற பாடல்கள் சிலவற்றையும்,  ஷெல்லிடென்னிசன்,  எஸ்.டி.கொலெரிட்ஜ்அலெக்சான்டர் போப்சர் வால்டர் ஸ்காட்,  தாமஸ் க்ரே,  வில்லியம் கௌபர் போன்ற பிற ஆங்கிலக் கவிஞர்களின் பாடல்களில் தாம் பெரிதும் ரசித்தவற்றையும் தமிழில் மொழிமாற்றம் செய்திருக்கிறார். பொருள் சிறிதும் சிதைவுறாவண்ணம் செய்யுள் நடையிலே மொழி பெயர்த்திருப்பது வியக்கத்தக்கது.
                       வில்லியம் கௌபெர்ன் 'தி டாஸ்க்என்ற பாடலின் ஒரு பகுதியை, 'ராஜபக்தி (யதார்த்தமும் போலியும்)என்று தலைப்பிட்டு இவர் மொழிபெயர்த்திருந்தது 1907 ல் 'இந்தியா'இதழில் பிரசுரமானது. அதைப்பற்றி பாரதி, "இதை நாம் முதலில் வாசித்தவுடன் மொழிபெயர்ப்பு என்றே நினைக்கவில்லை. சாதாரணமாய் மொழிபெயர்க்கப்பட்ட வசனங்கள் விசேஷமாய்ச் செய்யுள்கள், பாறைக்காட்டில் குதிரைவண்டி போவதுபோலக் கட புட என்று ஒலிக்கும். ஆனால் ஐயர் செய்திருக்கும் மொழிபெயர்ப்பானதுதெரிந்தவர்க்கன்றி மற்றவர்க்கு மொழிபெயர்ப்பெனவே தோன்றாது." "இச் செய்யுளில் விளங்கும் சொற்பொலிவும்பொருட்சிறப்பும்நடையின் தெளிவும் ஸ்ரீ ஐயரின் தமிழறிவையும்யாப்புத்திறனையும் நன்கு விளக்குகின்றன" என்று பாராட்டி எழுதி இருப்பதைபாரதி அன்பர் சீனி. விஸ்வநாதன் குறிப்பிடுகிறார்.
              சர் வால்டர் ஸ்காட் எழுதிய பாடல் ஒன்றின் இவருடைய மொழிபெயர்ப்பைப் படித்த போப் ஐயர், "ஸ்காட்டின் மூலப்பாடலை நான் அறிந்திராது போயிருப்பேனாயின்இவர் பாடலே மூலப்பாடல் என்று கருதியிருப்பேன்" என்று கூறியதாகச் சேக்கிழார் அடிப்பொடி பேரா. தி.ந. இராமச்சந்திரன் குறிப்பிடுகிறார்.
           அறிஞர் பெ.சு மணி அவர்களின் அரிய முயற்சியால் கிடைத்த கவிதை ஒன்றின் பிரதியிலிருந்து, 1919 ல் கவி ரவீந்திரநாத் தாகூர் மதுரை வந்திருந்த போது ம.கோ அவர்கள்அவரை வாழ்த்தி வரவேற்றுக் கவிதை எழுதியிருந்ததை அறிய முடிகிறது.  புதல்வர் கடமைவிஸ்வநாதன் (அ) கடமை முரண்,அரும்பொருட்டிரட்டுசாணக்கிய சாகஸம் ஆகியவை இவர் எழுதிய  நூல்களில் சிலவாகும். அவற்றில் விஸ்வநாதன் (அ) கடமை முரண் ஒரு நாடக நூல். புதல்வர் கடமை நூலும்விஸ்வநாதன் (அ) கடமை முரண் நூலும், 1921ம் ஆண்டில் அரசால் பாடப்புத்தகங்களாக அங்கீகரிக்கப்பட்டிருந்தன. அரும்பொருட்டிரட்டின் ஒரு பகுதி தற்போது  தனி நூலாகமறுபடியும் வெளியிடப்பட்டிருக்கிறது.
            கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவராகவும்மதுரை மாணவர் செந்தமிழ்ச் சங்கத்தின் தலைவராகவும்மதுரை தமிழ்ச் சங்கத்தின் பரீக்ஷாதிகாரிகளில் ஒருவராகவும் இவர் ஆற்றிய பணிகள் அளவிடற்கரியன. இத்தகைய பெருந்தகை 1927 லேயே இயற்கை எய்தியது தமிழகத்திற்கு மிகப் பெரிய இழப்பு.
குறிப்பு: தகவல்கள் 'அரும்பொருட்டிரட்டுநுலிலிருந்து தொகுக்கப் பட்டவை.
அ. இராஜகோபாலன்.

-- 

Monday, December 2, 2013

வான்மீகி இராமாயணம்



இராமாயண காப்பியம் இந்திய மொழிகள் பலவற்றில் பலரால் இயற்றப்பட்டிருந்தாலும், அவைகளுக்கெல்லாம் மூலநூலாகக் கருதப்படுவது வான்மீகி முனிவரின் மூலநூலான இராமாயணம்தான். நாரத முனிவரின் அனுக்கிரகத்தினால் பிரம்ம ரிஷியாக ஆனவர் வான்மீகி. இராமபிரானும் சீதையும் வாழ்ந்த நாளிலேயே வாழ்ந்தவர் வான்மீகி என்பதால் இவரது இராமாயணம் காப்பியமானது.

இராமாயணத்தையும் இந்தக் காப்பிய நாயகர் நாயகியான இராமன் சீதையைப் பற்றிக் கேள்விப்பட்டிராத மனிதரே இமயம் தொடங்கி குமரி வரையிலான நம் பாரத நாட்டில் இருக்க முடியாது. இராமபிரான் பிறந்த நாளை இப்போதும் ஸ்ரீ ராம நவமி என்று கொண்டாடுகிறோம். ஆங்காங்கே ஆலயங்களிலும், மடாலயங்களிலும் இராம காப்பியத்தைப் புலவர்களும், பாகவதர்களும் சொற்பொழிவாற்றிக் கொண்டிருக்கிறார்கள். எத்தனை முறை கேட்டாலும் அவற்றைத் திரும்பத் திரும்ப கேட்கும் பழக்கம் நம் மக்களிடையே இருந்து வருகிறது.

இராமனுடைய பயணம் என்பதே இராம அயணம் என்று சொல்கிறோம். வான்மீகி இராமாயணத்தை வடமொழியில் இயற்றியிருக்கிறார். கவிதை வடிவில்தான் நம் நாட்டுக் காப்பியங்கள் எல்லா மொழிகளிலும் சிறப்பாக இயற்றப்பட்டிருக்கின்றன, இராமாயணமும் அதற்கு விதிவிலக்கல்ல. பாரதத் திருநாட்டின் தலைசிறந்த காப்பியங்களில் ஒன்றான இராமாயணம்தான் முதன் முதல் இப்படி வடமொழியில் இயற்றப்பட்ட நூல் என்பதால் இதனை 'ஆதி காவியம்' என்றும், வான்மீகியை ஆதிகவி என்றும் அழைக்கிறோம்.

இசையோடு பாடக்கூடிய வகையில் அமைக்கப்பட்டிருப்பது இராமாயணம். குயில் கூவுவதை நாம் அறிவோம். இராமாயணத்தை இசையோடு கூடி பாடும்போது குயிலின் குரல் நமக்குக் கேட்கும் வகையில் பாடல்கள் அமைந்துள்ளன. இராமாயணத்தைப் படிக்கத் துவங்குவோர், அதன் ஆதிகவியான வான்மீகியை வணங்கிவிட்டுத்தான் படிக்கத் துவங்குகின்றனர். வடமொழியில் வான்மீகம் என்றால் கரையான்  புற்று என்று பொருள்படும். தான் தவமியற்ற ஓரிடத்தில் உட்கார்ந்து தியானத்தில் இருந்தபோது அவரைச் சுற்றி கரையான் புற்று எழுப்ப அதனுள் இருந்த தவமியற்றியதால் இவருக்கு அந்தப் பெயர் வந்தது என்பர். வான்மீகி அந்த கரையான் புற்றினின்றும் எப்படி வெளிப்போந்தார் என்பதே ஒரு சுவாரசியமான வரலாறு.

இராம பிரான் காலத்தில் வாழ்ந்தவர் வான்மீகி என்பதைப் பார்த்தோம். அவருடைய காலம் திரேதா யுகம் என்பர். அப்போது எங்கும் அடர்ந்த காடுகளும், அந்தக் காடுகளினூடே கங்கை நதியும் இருந்தன. அந்தக் காட்டின் கங்கைக் கரையோரம் பல தவசிகள் வாழ்ந்து வந்தனர். அவர்களில் ஒருவர் பிரசேதசர். அவருடைய புதல்வன் இரத்னாகரன். இந்த மகன் இளம் வயதினனாய் இருந்தபோது ஒரு நாள் காட்டின் உட்பகுதிக்குள் செல்கிறான். அங்கு இவன் விளையாடிக் கொண்டிருந்த போது வழிதவறிப் போய் பயந்து அழத் தொடங்கினான். அப்போது காட்டில் வேட்டையாடிக் கொண்டிருந்த ஒரு வேடன் அங்கு வந்தான். காட்டில் அழுதுகொண்டிருந்த அந்த அழகிய குழந்தையை தனக்கு பிள்ளை இல்லை என்பதால் அந்த வேடன் குழந்தையைத் தன்னுடன் எடுத்துச் சென்றான்.

குழந்தையைக் காணாமல் அவன் தந்தை குழந்தையைத் தேடத் தொடங்கினார். எங்கும் தேடியும் அவன் கிடைக்காததால் அவனை ஏதோ மிருகம் அடித்துச் சாப்பிட்டுவிட்டது என்று பெற்றோர் எண்ணி மிகுந்த வருத்தமடைந்து கதறினர். குழந்தையை எடுத்துச் சென்ற வேடன் குழந்தையைத் தன் மனைவியிடம் கொடுத்து அருமை பெருமையாக அதனை வளர்த்தனர். குழந்தை ரத்னாகரன் வேடர் தம்பதியினரின் அன்பில் தன் சொந்த பெற்றோரை மறந்தான். வேட்டுவரிடையே வளர்ந்த ரத்னாகரனும் நல்ல திறமையான வேடனாக உருவெடுத்தான்.

காட்டில் திறமையான வில்லாளனாக வளர்ந்த ரத்னாகரன் வளர்ந்து கட்டிளம் காளையாக இருந்தபோது அவனுக்குத் திருமணம் செய்விக்க வேட்டுவ தம்பதியர் முயற்சியில் ஈடுபட்டனர். மற்றொரு வேட்டுவரின் மகளைப் பார்த்து இவனுக்குத் திருமணம் செய்வித்தனர். சில ஆண்டுகளில் ரத்னாகரன் தம்பதியருக்குச் சில குழந்தைகள் பிறந்தன. அவன் குடும்பம் பெரிதானது. அத்தனை பேருக்கும் உணவும் உடையும் இருக்கையும் தேவை இருந்ததால் அவன் கொள்ளை அடிக்கத் தொடங்கினான். காட்டு வழியில் பயணம் செய்வோரைக் குறிவைத்து வழிப்பறி செய்து வந்தான்.

ஒரு நாள் ரத்னாகரன் காட்டில் வழிப்போக்கர் யாரும் வருகிறார்களா என்பதை ஒளிந்திருந்து கவனித்து வந்தான் இரத்னாகரன். அந்த நேரத்தில் நாரத முனிவர் தன் வாத்தியத்தை இசைத்துக் கொண்டு ஸ்ரீமன் நாராயணனின் திருநாமத்தைச் சொல்லிக்கொண்டு அந்த வழியில் வந்தார். அவரை இரத்னாகரன் வழிமறித்தான். தன் கையில் இருந்த தடியை ஓங்கிக் கொண்டு நாரதரிடம் இருப்பதை தந்துவிடு இல்லையேல் உன்னைக் கொன்றுவிடுவேன் என்றான் இரத்னாகரன். தேவலோகத்துக்கும் பூமிக்கும் சர்வ சாதாரணமாக பயணம் செய்யும் நாரதர் இவனைக் கண்டு அஞ்சவில்லை. புன்னகையுடன் நாரதர் இரத்னாகரனைப் பார்த்துச் சொன்னார், "அன்பனே, என்னிடம் இருப்பதெல்லாம் இந்த பழைய வீணை ஒன்றுதான். இடையில் பார், கிழிந்த உடைகள். இவை உனக்குத் தேவை என்றால் எடுத்துக் கொள்" என்றார்.

திகைத்துப் போன இரத்னாகரன் நாரதரை ஏறிட்டுப் பார்த்தான். அவர் முகத்தில் பயமோ, கோபமோ இல்லை. அமைதியாகக் காணப்பட்டார். இந்த சூழ்நிலையில் இப்படி அமைதி காக்கும் இவர் யார் என்று எண்ணத் தொடங்கினான் இரத்னாகரன். நாரதர் அருகிலிருந்த மரத்தடியில் அமர்ந்து கொண்டு இசைக்கத் தொடங்கினார். அந்த இசையில் மயங்கி இரத்னாகரன் கீழே அமர்ந்து கேட்டான். இசைத்து முடித்த பின் நாரதர் அவனிடம் சொன்னார், "இளைஞனே! திருடுவது பாவமல்லவா? மிருகங்களைக் கொல்வது அதனினும் மகாபாவமல்லவா. நீ ஏன் இப்படிப்பட்ட பாவச் செயல்களில் ஈடுபட்டிருக்கிறார்?" என்றார்.

"நான் என்ன செய்வேண் ஐயா! எனக்குப் பெரிய குடும்பம். வயதான பெற்றோர்கள். இப்படி இவர்கள் அனைவரையும் காப்பாற்ற வேண்டுமே, அவர்களுக்காக அல்லவா நான் இந்தப் பாவச் செயல்களில் ஈடுபட நேர்ந்துவிட்டது. இது பாவம்தான் ஆனால் என்ன செய்வது?" என்றான்.

புன்னகையுடன் நாரதர் சொன்னார், "அன்பனே! நீ செய்யும் பாவங்களில் பயன்பெறும் உன் குடும்பத்தார் எவரேனும் உன் பாவத்தில் பங்கு பெறுவார்களா, போய் அவர்களிடம் கேட்டுவிட்டு வந்து என்னிடம் சொல்" என்று சொல்லி அவனை அனுப்பி வைத்தார்.

இவர் ஏதோ தந்திரம் செய்து என்னை அனுப்பிவிட்டுத் தப்பிக்கப் பார்க்கிறாரோ என்றெண்ணி சந்தேகம் கொண்டு நாரதரைப் பார்த்தான் இரத்னாகரன். இவன் எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்டு நாரதர் சொன்னார், அன்பா! நான் தப்பி ஓடிவிடுவேன் என்று நீ சந்தேகப்படுவது போல் தெரிகிறது. உனக்கு அப்படி சந்தேகமிருந்தால் என்னை இந்த மரத்தில் கட்டிவைத்துவிட்டுப் போ" என்றார்.

அதுவும் சரிதான் என்று இரத்னாகரன் நாரதரை அந்த மரத்தில் வைத்து கொடிகளால் கட்டிவிட்டுப் போனான். வீடு சென்ற அவன் தன் தந்தையிடம் சென்று, "அப்பா! நான் வழிப்பறி செய்து வழிப்போக்கர்களிடம் கொள்ளை அடித்து வருகிறேன். இதெல்லாம் உங்களுக்காகத்தான் செய்கிறேன். இது பாவம் என்பது எனக்குப் புரிகிறது. இதனால் எனக்குக் கிடைக்கும் பாவத்தை நீங்களும் பங்கு போட்டுக்கொள்ளத் தயாரா?" என்றான் இரத்னாகரன்.

தந்தைக்குக் கோபம் வந்தது, அவர் சொன்னார், "பாவங்களை நீ புரிந்துவிட்டு, அதன் பலனை என்னை ஏற்றுக் கொள்ளச் சொல்கிறாயா? போ! முட்டாளே, உன் பாவங்களை நான் பங்கிட்டுக் கொள்ள முடியாது. உன் வினைகளின் பலன் உனக்கே ஆகும், போ" என்றார். இதுபோலவே அவன் தன் தாயிடமும், மனைவியிடமும், தன் பிள்ளைகளிடமும் கேட்க அவர்களும் அவன் பாவத்தைப் பங்கிட்டுக் கொள்ள தயாரில்லை எனத் தெரிவித்து விட்டனர்.

இரத்னாகரனின் அறிவுக்கண்கள் திறந்து கொண்டன. அவரவர் செய்யும் பாவத்துக்கு அவரவர்களே பொறுப்பு என்பதை உணர்ந்து கொண்டான். அதை வேறு எவரும் பங்கிட்டுக் கொள்ளமாட்டார்கள் என்பதையும் புரிந்து கொண்டான். ஓடினான், தான் கட்டிவைத்துவிட்டு வந்த நாரத முனிவரிடம். அவர் கட்டுகளை அவிழ்த்துவிட்டுச் சொன்னான், "முனிவரே, நான் தவறிழைத்துவிட்டேன், நான் செய்த பாவங்களின் பலனை வேறு எவரும் பங்கிட்டுக் கொள்ள மறுத்துவிட்டனர். எனக்கு நல்ல வழிகாட்டுங்கள், உங்கள் திருவடிகளே சரணம்" என்றான் நாரதரிடம்.

நாரதர் அவனை அன்போடு தூக்கி அரவணைத்துக் கொண்டு சொன்னார், "பயம் கொள்ளாதே இளைஞனே, உன் பாவங்களைக் களைய நான் ஒரு வழி சொல்லுகிறேன், கேள்." என்று சொல்லி ஓரிடத்தில் அமர்ந்து இராம நாமத்தை ஜபம் செய்யச் சொல்லிக் கொடுத்தார். அவனும் ஓர் மரத்தடியில் அமர்ந்து 'ராம' மந்திரத்தைக் கண்மூடி ஜபம் செய்யத் தொடங்கினான்.

உட்கார்ந்த இடத்தைவிட்டு அசையாமல், ஊண், உறக்கம் இல்லாமல் ராம நாம ஜபத்தில் மூழ்கிக் கிடந்தான் இரத்னாகரன். அப்படி அவன் பல காலம் தவமிருந்த சமயத்தில் அவனைச் சுற்றி கரையான் புற்று ஒன்றை உருவாக்கிவிட்டது. அந்த புற்றினுள் இரத்னாகரன் குரல் மட்டும் 'ராம' நாமம் ஒலிப்பது கேட்டுக் கொண்டிருந்தது.

பல ஆண்டுகள் கழித்து நாரத முனிவர் மீண்டும் அந்த வழியில் வந்தார். வழியில் இருந்த கரையான் புற்றிலிருந்து ஜபம் செய்யும் ஒலிமட்டும் கேட்டுக் கொண்டிருந்தது. நாரதர் அந்த புற்றின் அருகில் வந்து அவரும் இராம நாமத்தைச் சொல்லியதும் கண்விழித்த இரத்னாகரன் நாரதரை வணங்கினான். அவனுடைய கடுமையான தவத்தைக் கண்டு மகிழ்ந்து நாரதர் அவனுக்கு பிரம்மரிஷி என்று சொல்லி ஆசி வழங்கினார். புற்றினுள் இருந்ததால் அவனை வான்மீகி என்றும் பெயரிட்டு அழைத்தார். அப்படிப்பட்ட வரலாற்றையுடைய வான்மீகி காட்டினுள் கங்கைக் கரையில் ஆசிரமம் வைத்து வாழ்ந்து வரும் போது அவர் ஆசிரமத்துக்கு ராமனும் சீதையும் வந்திருந்து அவர் ஆசியைப் பெற்றுச் சென்றனர்.

பின்னர் அவர் இராமாயணத்தை இயற்றிய வரலாறும் குறிப்பிடத் தக்கது. ஒருநாள் நாரதர் வான்மீகியின் ஆசிரமத்துக்கு எழுந்தருளினார். வந்த விருந்தினரை முனிவர் அன்போடும் மரியாதையோடும் வரவேற்றார். அப்போது நாரதரிடம் வான்மீகி கேட்டார், "ஐயனே! தாங்கள் மூவுலகுக்கும் சஞ்சரிக்கிறீர்கள். அங்கு நடப்பவைகள் எல்லாம் உங்களுக்குத் தெரியுமல்லவா, ஆகையால் உங்களிடம் கேட்கிறேன், இம்மூன்று உலகிலும் மிக உயர்ந்த பண்புடையோன் யார் என்பதைச் சொல்லுங்கள்" என்றான். அதற்கு நாரதர் நீ நினைக்கும் அனைத்து நல்ல பண்புகளும் கொண்ட ஒருவன் ஸ்ரீ ராமனே என்றார். அப்படியென்றால் அவரைப் பற்றி எனக்கு விரிவாக எடுத்துரையுங்கள் என்றார் வான்மீகி. நாரதரும் அவ்வாறே இராமனது வரலாற்றை விரிவாக எடுத்துரைத்தார். இதனைக் கேட்ட வான்மீகி மகிழ்ந்தார், நாரத முனிவரை வணங்கி ஆசி பெற்றார். நாரதரும் வான்மீகியை வாழ்த்திவிட்டுச் சென்றார்.



சில நாட்கள் கழிந்தபின் வான்மீகி கங்கைக்கு நீராடச் சென்றார். பாரத்வாஜர் எனும் பெயருடைய அவருடைய சீடர் ஒருவரும் உடன் இருந்தார். வழியில் தமசா நதி நிர்மலமான் நீரோடு ஓடிக் கொண்டிருந்ததைச் சீடரிடம் காட்டி, இதோ பார் இந்த நதி எத்தனை தூய்மையாக ஓடிக் கொண்டிருக்கிறது என்றார். இங்கு இன்று நான் நீராடுவேன் என்றார்.

அந்த ஆற்றினுள் இறங்குவதற்கு ஏற்ற இடத்தை அவர் தேடினார். எங்கும் பறவைகளின் இன்னிசையும், ஒன்றையொன்று அழைக்கும் ஒலிகளும் கேட்டுக் கொண்டிருந்தன. அப்போது உயரே ஒரு மரத்தின் கிளையில் இரு பறவைகள் ஒன்றையொன்று அன்போடு குலவிக் கொண்டு உட்கார்ந்திருப்பதைக் கண்டு மனம் மகிழ்ந்தார். அப்போது திடீரென்று ஒரு பறவை அம்பு ஒன்றினால் தாக்கப்பட்டு கீழே விழுந்தது. அது ஆண் பறவை. இதைக் கண்டு பெண் பறவை கீச் கீச்சென்று கத்திக் கொண்டு துக்கத்தோடு கீழே விழுந்த பறவையைச் சுற்றிச்சுற்றி வந்தது. வான்மீகியின் உள்ளம் உருகிவிட்டது. சுற்றிலும் பார்த்தார் யார் இந்த பறவை மீது அம்பு எய்தது என்று. அப்போது ஒரு வேடன் தன் கையில் வில் அம்புகளுடன் வந்து அந்த பறவை தனக்கு என்றான். அசாத்திய கோபமடைந்த வான்மீகி அவனுக்கு சாபமிட்டார், "அன்போடு கொஞ்சிக் கொண்டிருந்த இந்த ஜோடிப் பறவைகளில் ஒரு பறவையை அம்பு எய்து கொன்ற நீ விரைவில் இறந்து போவாய்" என்றார். அப்படி அவர் இட்ட சாபம் வடமொழியில் ஒரு கவிதை வடிவாக உருவெடுத்து வந்தது. அவருடைய வருத்தம் அரியதொரு சம்ஸ்கிருத ஸ்லோகமாக வெளிவந்தது.



காதல் ஜோடிப் பறவைகளில் ஒன்றை அம்பு எய்து கொன்றது வான்மீகியின் உள்ளத்தை வாட்டியது, அந்த வருத்தம் சாபமாக உருவெடுத்தது. கோபப்பட்டு அந்த வேடனை சபித்தமைக்கு அவர் மனம் வருத்தமடைந்தது, அதைத் தன் சீடன் பாரத்வாஜரிடமும் சொன்னார். அவர் சொன்ன சாபத்தின் வரிகளைக் கேட்டு சீடமும் வியந்தான், இது ஒரு கவிதையாக உருவெடுத்திருக்கிறதே என்று. அந்த வரிகளே அவர் மனத்தில் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது.

இப்படி அந்த சாப வரிகளில் மனத்தை செலுத்தியபடி ஆசிரமம் வந்த வான்மீகி முனிவர் எதிரில் பிரம்ம தேவன் தோன்றினான். பிரம்மா வான்மீகியிடம் "ஓ, பிரம்ம ரிஷியே! உன் வாக்கில் உதித்த அந்த சாப வரிகள் என் அருளினால் உன் நாவில் உருக்கொண்டது. இந்த கவிதை வடிவிலேயே நீ இராமாயணத்தை இயற்றுவாயாக" என்றார் பிரம்மா. நாரதர் உமக்கு இராம காதையைச் சொல்லியிருக்கிறார் அல்லவா? அதை நீ எழுத எழுத அந்த இராமாயணக் காட்சிகள் அனைத்தும் மீண்டும் உமது மனக் கண்களில் தோன்றும் என்றார் பிரம்மா. நீ சொல்லும் ஒவ்வொரு சொல்லும் சத்திய வாக்காக அமையும். இந்த பூவுலகில் மலைகளும், நீரும், நதிகளும், சூரிய சந்திரர்களும் இருக்கும் வரை நீ இயற்றும் இராமாயணமும் இருக்கும். மக்கள் அதனைப் படித்தும் கேட்டும் மகிழ்வார்கள் என்று வரமளித்தார் பிரம்மா.



வான்மீகி மணையின் மீதமர்ந்து இராமனை வணங்கி இராமாயணத்தை எழுதத் தொடங்கினார். அந்த கவிதை வரிகளை பின்னர் இராமனின் மக்களாக இரட்டையர்களாகப் பிறகு லவன் குசனுக்குத்தான் சொல்லி வைத்தார். அவர்கள் வான்மீகியின் ஆசிரமத்துக்கு வந்த கதை இன்னொரு பெரிய கதை. அதைத் தனியாகப் பார்க்கலாம்.

Sunday, December 1, 2013

ஐயாறப்பர் ஆலய வரலாறு

                                                    ஐயாறப்பர் ஆலய வரலாறு
 
தஞ்சை மாவட்டத்தில் காவிரியின் வடகரையில் அமைந்துள்ள சிவத்தலம் திருவையாறு.  திருவையாற்றுக்கு பஞ்சநதம், பூலோக கைலாசம், ஜெப்பேசம், ஜீவன் முக்திபுரம் எனப் பல பெயர்கள் உண்டு. 'ஐ' என்றால் மேலான, உயர்வான என்றும் 'ஆறு' என்பதற்கு வழிகள், மார்க்கங்கள் என்றும் பொருள் உண்டு. இவற்றை மூலாதாரம், ஸ்வாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞை எனும் ஆறு ஆதாரங்கள் என்றும் சொல்லுகிறார்கள். இப்படிப் பலப்பல பெயர்க்காரணங்கள் கூறப்பட்டாலும், திருவையாறு எனும் பெயர் பல நூற்றாண்டுகளாக மக்கள் பயன்பாட்டில் இருக்கிறது.

வரலாற்றுச் செய்திகளின்படி இந்த ஆலயம் முதன்முதலில் கரிகால்பெருவளத்தான் எனும் புகழ்மிக்க சோழமன்னனால் கட்டப்பட்டது என்பது தெரிகிறது. அவனுடைய காலத்திற்குப் பிறகு பல்வேறு மன்னர்கள் குறிப்பாக பாண்டியர்கள், பல்லவர்கள், முத்தரையர்கள், நாயக்க மன்னர்கள், மராட்டிய அரசர்கள் என்று பலராலும் பல்வேறு காலகட்டத்தில் புதுப்பிக்கப்பட்டும், விரிவுபடுத்தப்பட்டும் வந்திருக்கிறது. 2009ம் ஆண்டு ஜுலை மாதம் இவ்வாலயத்தின் திருப்பணிக்கான தொடக்க பூஜைகள் தொடங்கி பலகோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டு இப்போது பிப்ரவரி 7ஆம் தேதி குடமுழுக்கு நடைபெறுகிறது. இதற்கு முன்பு 1971இல் குடமுழுக்கு நடைபெற்றது, அதற்குப் பிறகு 42 ஆண்டுகள் கழிந்து இப்போது நடைபெறுகிறது.

சோழப்பேரரசன் கரிகால் பெருவளத்தான்
சோழப்பேரரசன் கரிகால்பெருவளத்தான் இந்தப் பகுதியைக் கடந்து செல்லும்போது இவனது தேர் பூமியில் அழுந்தி நகரவில்லை. எவ்வளவு முயன்றும் பயனளிக்காத நிலையில் இந்த இடத்தில் ஏதோவொரு சக்தி ஈர்க்கிறதென்று உணர்ந்து, பூமியை அகழ்ந்து பார்த்தான். அங்கே சிவலிங்கம், சக்தி, ஆதிவிநாயகர், முருகன், சப்தகன்னியர், சண்டர், சூரியன் ஆகிய திருவுருவங்களும் யோகி ஒருவரின் சடைகள் பரந்து விரிந்து புதைந்து வேரூன்றி கிடப்பதையும் கண்டான். மேலும் அகழ்ந்து பார்க்க அங்கு நியமேசர் எனும் அகப்பேய்ச் சித்தர் நிஷ்டையில் இருப்பது கண்டு மெய்விதிர்ப்பெய்தி அவர் காலடியில் வீழ்ந்து வணங்கினான்.

அவர் கரிகாலன்பால் இரக்கம் கொண்டு, இங்கு தேவர்களும் நந்தீசரும் வழிபட்ட மகாலிங்கமும் மற்றைய மூர்த்தங்களும் இருக்கின்றன; இவற்றிற்கு ஓர் கோயில் எடுப்பாயாக எனக் கூறி எவராலும் வெல்ல முடியாத தண்டமொன்றையும் அளித்து, கோயில் கட்டுவதற்கான பொன் முதலான பொருட்கள் நந்தியின் குளம்படியில் கிடைக்குமெனவும் அருள் புரிந்தார். அவ்வாறே கரிகால் சோழன் சிறப்பாக ஆலயத் திருப்பணி செய்து, குடமுழுக்கு செய்து, நிவந்தங்களும் அளித்தான்.


திருப்பணி செய்த ஏனைய மன்னர்கள்

பிறகு கி.பி. 825-850 தெள்ளாறெறிந்த நந்திவர்ம பல்லவன், கி.பி. 982இல் வேங்கி நாட்டு விமலாதித்த தேவர், 1006இல் புகழ்மிக்க முதலாம் ராஜராஜ மன்னரின் (985-1014) மனைவியான ஒலோகமாதேவியார் "வடகைலாயம்" எனும் 'ஒலோகமாதேவீச்சரத்தை'யும் பின்னர் முதலாம் இராஜேந்திர சோழன் (1014-1042) மனைவியான பஞ்சவன்மாதேவியார் 'தென்கைலாயம்' கோயிலையும் அமைத்தார்.

கிருஷ்ணராஜ உடையாரால் இக்கோயிலின் திருச்சுற்று மாளிகை எடுக்கப்பெற்றது. பிறகு 1118-1135இல் இருந்த விக்கிரம சோழன் காலத்தில் மூன்று, நான்காம் திருச்சுற்றுகளும், மதில், கீழைக்கோபுரம் எடுக்கப்பட்டன. கி.பி. 1381இல் சடையவர்ம சுந்தர பாண்டியன் ஆட்சிக்காலத்தில், இக்கோயில் திருமண்டபத்தின் மதில் சீர்திருத்தம் பெற்றது. கி.பி. 1530இல் அச்சுதப்ப நாயக்க மன்னர் நின்றுபோன நூற்றுக்கால் மண்டபத்தை 144 தூண்களுடன் எழுப்பி முடித்தார்.

1971இல் திருக்கயிலாய பரம்பரை திருத்தருமையாதீனம் 25ஆவது குருமகா சந்நிதானம் கயிலைக் குருமணி ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அவர்களால் திருக்கோயில் முழுவதும் செப்பமிட்டுத் திருப்பணி முடிக்கப்பட்டது. 31-3-1971இல் திருக்குடமுழுக்கு நடைபெற்றது. அதன் பிறகு இப்போது நடைபெறுகிறது.

ஐயாறப்பர் ஆலயம் - கிழக்கு ராஜகோபுரம்.

ஐயாறப்பர் ஆலய இராஜ கோபுரம் வானளாவி உயர்ந்து ஊருக்கே அழகு செய்கிறது. ராஜகோபுரம் தவிர இங்கு மேலும் ஏழு கோபுரங்கள் உண்டு. இந்த கோபுரம் ஏழு நிலைகளை உடையது. இங்கு அதிக அளவில் சுதைச் சிற்பங்கள் இருக்கின்றன. இந்த கோபுரம் 16, 17ஆம் நூற்றாண்டில் நாயக்க மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டதாகும்.


விக்கிரம சோழன் கோபுரம்.
இரண்டாம் கோபுரம் விக்கிரம சோழன் கோபுரம். அழகிய வேலைப்பாடுகள் எதுவுமின்றி எளிமையாகத் தோன்றுகிறது. இரண்டாம் பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் நின்று குரல் கொடுத்தால் ஏழு முறை அது எதிரொலிக்கும். இங்கு வரும் பக்தர்கள் இங்கு நின்று 'ஐயாறப்பா" என்று குரல் கொடுக்க அது பலமுறை திரும்பத் திரும்ப எதிரொலிப்பதை இன்றும் கேட்கலாம். 'ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே' எனும் வாகீசப்பெருமானின் வாக்கிற்கேற்ப இங்கு ஆலயம் அமைக்கப்பட்டிருப்பது மிகவும் வியப்பான செய்தி. இந்த ஆலயத்தின் சிறப்புக்களில் இதுவும் ஒன்று.

பிரகாரத்தின் வடக்குப் பகுதியில் முச்சத்தி மண்டபம் காணலாம். இங்கு மலைமகள் (துர்க்கை) அலைமகள் (இலக்குமி) கலைமகள் (சரஸ்வதி) ஆகியோர் மூன்று சக்திகளாக இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி எனும் முச்சக்தியாக வீற்றிருப்பதால் முச்சந்தி மண்டபம் எனப்பெயர் பெற்றது.

ஐயாறப்பர் - மூலஸ்தானம்.

ஐயாறப்பர் கருவறையில் திருக்காட்சியருளும் சிவலிங்க தரிசனம் மிகவும் சிறப்பானது. இவர் சுயம்புமூர்த்தியாக உருவானவர். புற்று மண்ணால் ஆனவர். முற்காலத்தில் மக்கள் கல், உலோகம் இவற்றைப் பயன்படுத்தத் துவங்குவதற்கு முன்பு மரம். புற்று இவற்றை வழிபட்டார்களாம். எனவே புற்றாலான இறைவனது உருவை வழிபடுவது மிகத் தொன்மையானது எனலாம். ஆகவே வரலாற்றில் மிக தொன்மையானது இந்த ஐயாறப்பர் மூலத்தானத்து சிவன். இவருக்கு வெள்ளிக் கவசமிட்டு தரிசனம் அளிக்கிறார். இந்த வெள்ளிக் கவசத்தில் பசுவின் உருவமும், அதன்மீது சூலமும் பொறிக்கப்பட்டுள்ளன. இதன் காரணம் கொண்டே சுவாமிக்கு 'திரிசூலி' என்ற திருப்பெயர் உண்டு. இங்கு மூலவருக்கு, அபிஷேகம் கிடையாது. புனுகுச் சட்டம் மட்டுமே சாத்தப்படுகின்றது. அபிஷேகமெல்லாம் ஆவுடையாருக்கு மட்டுமே.

முதல் பிரகாரத்தில் தக்ஷிணாமூர்த்தி மிகச் சிறப்புடைய மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். இங்குள்ள தக்ஷிணாமூர்த்திக்கு ஸ்ரீ ஹரிகுருசிவயோக தக்ஷிணாமூர்த்தி என்று பெயர். இந்தச் சுற்றிலேயே எல்லாப் பரிவார மூர்த்தங்களும், உமாமகேசர், சங்கரநாராயணர், பிரமதேவர் முதலிய மூர்த்தங்களும் உள்ளன. இந்த பிரகாரம் வலம் வருவதற்குரியதன்று. சிவபெருமான் சடாமுடி எங்கும் பரவியிருப்பதால் இந்த பிரகாரத்தை, அதாவது மூலஸ்தானத்தையடுத்த வெளிப்பிரகாரம் தக்ஷிணாமூர்த்தி சந்நிதியைத் தாண்டி செல்வதற்கில்லை. இவ்விடத்தை மிதிக்கக்கூடாது என்பதால் தக்ஷிணாமூர்த்தியைத் தரிசித்தவுடன் திரும்ப வந்துவிட வேண்டும்.

அறம்வளர்த்தநாயகி அம்மன் சந்நிதி.

அறம்வளர்த்தநாயகி அம்மன் கோயிலுக்கென்று ஒரு ராஜகோபுரமும், தனி வழியும் கீழவீதியிலிருந்து அமைக்கப் பட்டிருக்கிறது. இங்கு அன்னை அறம்வளர்த்தநாயகி அலங்கார கோலத்துடன் காட்சி தருகிறாள். அம்பாளுக்கு திரிபுரசுந்தரி, தர்மாம்பிகை எனும் திருப்பெயர்களும் வழங்கப்படுகிறது.

இந்த அறம்வளர்த்தநாயகி ஆலயத்தை செட்டிநாட்டிலுள்ள தேவகோட்டையைச் சேர்ந்த சேவுகன் செட்டியார் அவர்கள் இங்கிருந்த பழைய அம்மன் கோயிலை மாற்றி புதிதாக கருங்கல் தளியாக அமைத்துத் திருப்பணி செய்து கொடுத்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஆலயங்களின் சிறப்புக்குச் சிறிதும் குறைவில்லாமல் இந்த அம்மன் ஆலயம் கருங்கற்களால் கட்டப்பட்டு புகழ்பரப்பி நிற்கிறது.



புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில்.

                                          சித்தரின் சித்து விளையாட்டு. 
       

                           
புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில்.

தஞ்சாவூர் மாரியம்மன் என்று பெரும்பாலான மக்களால் அழைக்கப்படும் இந்த மாரியம்மன் கோயில் இருக்குமிடம் புன்னைநல்லூர். தஞ்சையிலிருந்து கிழக்கே சுமார் 3 கி.மீ. தூரத்தில் இருக்கும் இவ்வூர் வழியாகத்தான் திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகள் செல்லும். இந்த மாரியம்மன் மிகவும் பிரசித்தி பெற்ற மாரியம்மன். இவ்வாலயம் எழுந்த வரலாற்றையும், இவளை வழிபட்டு பலனடைந்த பலருடைய வரலாற்றுச் செய்திகளும் ஏராளம். ஒரு ஆங்கிலேய அதிகாரிகூட இவளை வழிபட்டு தன் கண்பார்வை பெற்றதாக செவிவழிச் செய்திகள் உண்டு. இன்னொரு சிறப்பும் இந்த கோயிலுக்கு உண்டு. நாகூர் தர்காவுக்கு இந்துக்களும் சென்று வழிபடுவது போல, இந்த மாரியம்மனை இதர மதத்தாரும் வந்து வழிபடுவதை நாம் பார்க்க முடிகிறது.

ஒரு முறை மராத்திய மன்னன் தன் குதிரையிலேறி தன் சிறு பெண் குழந்தையுடன் இராமேஸ்வரம் சென்று திரும்பினார். ஊர் திரும்பிய பின் அந்தப் பெண் குழந்தையின் கண்களிலிருந்து இரத்தம் கசியத் தொடங்கியது. அரச குடும்பத்தினர் கவலையில் ஆழ்ந்தனர். அரண்மனையில் சித்த வைத்தியம், யுனானி வைத்தியம், ஆயுர்வேதம் ஆகியவைகள் இருந்தும் எந்த வைத்தியராலும் எதுவும் செய்ய முடியவில்லை. அப்போது சமயபுரம் மாரியம்மனின் நினைவு மன்னனுக்கு வந்தது. சமயபுரத்தாள் பக்தன் மன்னன். உடனே அந்த மாரியம்மனிடம் வேண்டிக் கொண்டான், தன் மகளின் கண் உபாதையை அம்மா சரிசெய்ய வேண்டுமென்றும், தங்கத்தால் ஒரு கண் செய்து அம்மனுக்குக் காணிக்கை அளிப்பதாகவும் அம்மனிடம் வேண்டிக் கொண்டான். அப்போது அவன் கனவில் சமயபுரம் மாரியம்மன் தோன்றி, நீ சமயபுரம் தேடி அத்தனை தூரம் வருவானேன், உன் அருகிலேயே புன்னைமரக் காட்டில் நான் இருக்க வெறு இடம் தேடி போவானேன், என்றாள். கண் விழித்துப் பார்த்த மன்னனுக்கு மர்மம் புரியவில்லை. தன் ராஜ்யத்திலேயே புன்னைமரக் காட்டில் இருப்பதாகச் சொன்னாளே, அது எங்கிருக்கிறது. அங்கு அன்னை மாரியம்மா எங்கிருக்கிறாள் என்பதை அறியாமல் போனேனே என்று வருந்தி, அந்த இடத்தைக் கண்டுபிடிக்கத் தன் புரவியில் ஏறி புன்னைமரக் காடு இருக்கும் திசை நோக்கிச் சென்றான்.

தஞ்சை நகரத்திலிருந்து சில கல் தொலைவிலேயே இருந்த ஒரு பகுதி புன்னை மரக்காடாக இருந்து வந்தது. அந்த காட்டிற்குள் அன்னை சொன்ன இடம் எது என்றறிய மன்னன் தேடிப் போனான். அப்போது வழியில் ஒரு சிறு பெண் நின்று கொண்டிருக்க, அந்தப் பெண் அந்தக் காட்டிற்குள் எப்படி வந்தாள் என்று வியந்து மன்னன் அந்தப் பெண்ணை விசாரிக்க, அவள் தன்னுடைய இருப்பிடம் இங்குதான் என்று ஓரிடத்தைக் காண்பித்து ஓடிவிட்டாள். அந்த இடத்தில் ஒரு புற்று வளர்ந்திருந்தது. அதனருகில் ஒரு மரத்தினடியில் அவதூதராக ஒரு சித்தர் ஆழ்ந்த தியானத்தில் இருப்பதைக் கண்டான். அவரைக் கண்டதுமே அவர் ஒரு மகான் என்பதை உணர்ந்த மன்னன் அவரை வணங்கி தொழுது நின்றான். கண்விழித்துப் பார்த்த அவரை மீண்டும் மன்னன் வணங்கி அவர் ஆசி வேண்டி நின்றான். தன்னுடைய கனவில் சமயபுரம் மாரியம்மன் தோன்றி சொன்ன செய்தியையும் சொல்லி, பின்னர் தன்னை அங்கு ஒரு சிறு பெண் அழைத்து வந்து தன் இருப்பிடம் இதுதான் என்று அந்த புற்றைக் காட்டிவிட்டு மறைந்து போனாள் எனும் செய்தியைச் சொல்ல, அந்த மகான் எழுந்து அந்த புற்றை மாரியம்மனாக உருவாக்கினார். மன்னனுடைய எண்ணத்தை உணர்ந்த அந்த மகான் அஷ்ட கந்தங்கள் எனும் எட்டு வாசனை திரவியங்களான சாம்பிராணி, புனுகு, ஜவ்வாது, கஸ்தூரி, கோரோஜனை, அகில், சந்தனம், குங்குமப்பூ, பச்சை கற்பூரம் ஆகியவைகளைக் கொண்டு அந்த புற்று மண்ணோடு கலந்து புற்றை மாரியம்மன் உருவம் சமைத்தார். உடனே சர்வ சக்தி படைத்த ஜன ஆகர்ஷண சக்கரம் ஒன்றை தயார் செய்து அம்மன் முன்பாக வைத்து அதனைத் தொடர்ந்து பூஜை செய்து வருவோர்க்கு மனக்குறை தீரும் என்று சொன்னார். சமயபுரம் மாரியம்மனே இங்கும் வந்து கொலுவீற்றிருப்பதையும், மருந்துகளாலும், ஆகர்ஷண சக்கரத்தாலும் சக்தி படைத்த அந்த புற்று மாரியம்மன் வேண்டிய வரம் தருவாள் என்பதை மன்னன் உணர்ந்தான். அப்படி புற்றை அம்மனாக மாற்றியவர்தான் சதாசிவ பிரம்மேந்திரர். சித்தர் பெருமான் சொன்னபடி அந்த மாரியம்மனைப் பணிந்து வேண்டி வந்த மன்னனுக்கு அவன் மன சஞ்சலம் விலகும்படி அவன் பெண் குழந்தையின் கண் பார்வை சரியானது. மாரியம்மனின் சக்தியையும், சித்தரின் திருவிளையாடலையும் எண்ணி மன்னன் மனம் மகிழ்ந்தான்.

அந்தப் புற்றின் மேல் ஒரு ஆலயத்தை எழுப்பச் செய்தான் மன்னன். அங்கு முறையாக பூஜைகள் நடைபெற கட்டளை பிறப்பித்தான். மன்னன் குடும்பத்தாருக்குக் குல தெய்வமாக இருந்து புன்னைநல்லூர் மாரியம்மன் காத்து வந்தாள். இந்த அம்மனுக்கு ஐந்தாண்டுகளுக்கொரு முறை தைலாபிஷேகம் எனும் புனுகுச் சட்டம் அணிவிப்பது நடைபெறுகிறது. 

இங்கு வந்து வேண்டிக் கொண்டவர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறுவதைக் கேள்விப்பட்டு மக்கள் வெள்ளம் போல இங்கு வந்து தரிசித்துச் செல்கிறார்கள். சதாசிவ பிரம்மேந்திரரின் அருள் விளையாட்டுக்களில் இந்த புன்னைநல்லூர் மாரியம்மன் உருவமும் ஒன்று என்பதை இன்றும் மக்கள் வியந்து போற்றி வணங்கி வருகிறார்கள்.

Sunday, November 24, 2013

டி.பி.ராஜலட்சுமி நூற்றாண்டு விழா

                          திரையுலகில் சாதனை படைத்த 
டி.பி.ராஜலட்சுமி அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு நூலை வெளியிடுகிறார் தமிழ்ப்பல்கலைக்கழக நூலக முன்னாள் இயக்குனர் திரு தி.பத்மநாபன், நூலைப் பெற்றுக் கொள்பவர் தஞ்சை மாவட்ட நாணயவியல் குழுமம் தலைவர் நல்லாசிரியர் திரு துரைராசு அவர்கள். உடன் இருப்போர்: பாரதி இலக்கியப் பயிலக இயக்குனர் தஞ்சை வெ.கோபாலன், டி.பி.ராஜலட்சுமியின் மகள் டி.எஸ்.கமலா, தமிழ்ப் பல்கலைக்கழக நாடகத்துறை முன்னாள் தலைவர் திரு இராமானுஜம், கலை பண்பாட்டுத் துறை துணை இயக்குனர் திரு இரா.முத்து, பாரதி இயக்கம் திரு முத்துக்குமார் ஆகியோர்.

                       டி.பி.ராஜலட்சுமி நூற்றாண்டு விழா

திரையுலகின் முதல் மெளனப் படக் கதாநாயகி, முதல் பெண் இயக்குனர், தேசபக்தர், சமூக ஆர்வலர் எனப் பன்முகப் பரிமாணம் கொண்ட டி.பி.ராஜலட்சுமியின் நூற்றாண்டு விழா திருவையாறு பாரதி இயக்கம் தில்லைத்தானம் மரபு பவுண்டேஷன் ஆகியவை சார்பில் திருவையாற்றில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு கலை பண்பாட்டுத் துறை துணை இயக்குனர் இரா.முத்து தலைமை தாங்கினார். தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழக நூலகத்துறை மேனாள் இயக்குனர் தி.பத்மநாபன் டி.பி.ராஜலட்சுமி பற்றி வெ.கோபாலன் தொகுத்த நூலை வெளியிட்டுப் பேசினார். நூலின் முதல் பிரதியை தஞ்சை நாணயவியல் குழுமத்தின் தலைவர் நல்லாசிரியர் துரைராஜ் பெற்றுக் கொண்டார். தி.பத்மநாபன் தன்னுடைய பேச்சில் இதுவரை தமிழ் நாட்டில் வெளியான திரைப்படங்களின் பட்டியலும், அத்தனைப் படங்களின் பாட்டுப் புத்தகங்களைத் தான் பாதுகாத்து வருவதாகவும் தெரிவித்தார். இரண்டாம் உலக யுத்தம் தொடங்கிய காலத்தில் தேசபக்தியை ஊட்டும் திரைப்படமொன்றை டி.பி.ராஜலட்சுமி எடுத்ததாகவும், அரசாங்கம் தடைசெய்யும் எனும் நிலை இருந்த போதும் துணிச்சலாக அந்தத் திரைப்படத்தை அவர் வெளியிட்டார் எனவும் அவர் தெரிவித்தார்.

தமிழ்ப் பல்கலைக் கழக நாடகத்துறையின் மேனாள் தலைவர் பேராசிரியர் சே.இராமானுஜம் டி.பி.ராஜலட்சுமியின் நாடகத்துறை, திரைத்துறையின் பங்களிப்பை விரிவாக எடுத்துரைத்தார். டி.பி.ராஜலட்சுமி ஒரு திரைப்பட நடிகையாக, கதை, திரைக்கதை, பாடல்கள், இயக்கம் என எல்லா துறைகளிலும் பரிணமித்தது போலவே சமூகப் பிரச்சினைகளிலும் அக்கறை காட்டினார் என்றார் அவர். அவர் காலத்தில் பரவலாக நிலவி வந்த பால்ய விவாகத்தை இவர் கடுமையாக எதிர்த்து வந்திருக்கிறார். பெண் சிசுக் கொலையை இவர் கண்டித்ததோடு மட்டுமல்ல, அப்படியொரு பெண் குழந்தையைத் தானே எடுத்து வளர்த்து, படிக்க வைத்துத் திருமணமும் செய்து வைத்ததாகக் கூறினார். நூறு ஆண்டுகளுக்கு முன்பு பெண் ஒருவர் தனியாக இந்த சமூகத்தில் சாதனைகளைப் புரிந்து தலை நிமிர்ந்து நின்றிருக்கிறார் என்பதே பெண்களுக்குப் பெருமை சேர்க்கும் செயலாகும் என்று இராமானுஜம் குறிப்பிட்டார்.
                            
                 டி.பி.ராஜலட்சுமி அவர்களின் மகள் கமலா அவர்களைப் பாராட்டி நினைவுப் பரிசை வழங்குகிறார் தமிழக அரசின் முன்னாள் வணிகவரித்துறை அமைச்சர் திரு சீ.நா.மீ.உபயதுல்லா அவர்கள். டி.எஸ்.கமலாவைச் சுற்றி நிற்பவர்கள் அவரது மகன் திரு ராகவன், மருமகள், பேரப்பிள்ளைகள் ஆகியோர். படத்தில் மற்றவர்கள் பாரதி இலக்கியப் பயிலக இயக்குனர் தஞ்சை வெ.கோபாலன், தமிழ்ப்பல்கலைக்கழக நாடகத்துறை முன்னாள் தலைவர் திரு இராமானுகம், தமிழ்ப்பல்கலைக்கழக நூலகத்துறை முன்னாள் இயக்குனர் திரு டி.பத்மநாபன், கலை பண்பாட்டுத்துறை துணை இயக்குனர் திரு இரா.முத்து, பாரதி இயக்கத் தலைவர் திரு நீ.சீனிவாசன் ஆகியோர்.


சாதனைப் பெண்மணி டி.பி.ராஜலட்சுமியின் மகள் கமலா மணியைப் பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசினை வழங்கி முன்னாள் அமைச்சர் சீ.நா.மீ.உபயதுல்லா சொற்பொழிவாற்றினார். டி.பி.ராஜலட்சுமி பிறந்த 11.11.1911 என்ற நாளே ஒரு புதுமையைக் காட்டுகிறது என்றார் அவர். அவர் காலத்திய பல நடிகைகள் இன்று நினைவில் இல்லாதபோதும் டி.பி.ராஜலட்சுமி முதல் பெண் நடிகை, பாடலாசிரியர், இயக்குனர் என்பது பெருமைதரக் கூடிய சாதனை என்றார் அவர். புராணப் படமொன்றில் மார்பு கச்சை அணிந்து நடிக்கவேண்டுமென்ற நிலை வந்தபோது தான் அப்படி நடிக்க இயலாது, ரவிக்கை அணிந்துதான் நடிப்பேன், இல்லையேல் இந்த வாய்ப்பே எனக்கு வேண்டாம் என்று மறுத்து தமிழ் இனத்தின் மானத்தைக் காத்த வீரப்பெண்மணி டி.பி.ராஜலட்சுமி என்றார் அவர்.

பாராட்டுகளுக்கு நன்றி தெரிவித்துப் பேசிய டி.பி.ராஜலட்சுமியின் ஒரே மகளான கமலா மணி, திருவையாற்றில் பிறந்த என் தாய் திரையுலகில் பெரும் புகழோடு வாழ்ந்த காலத்தை அவருடைய நூற்றாண்டு விழா நேரத்தில் திருவையாற்று அன்பர்கள் பாராட்டி நினைவு கூர்ந்தமைக்கும், நீங்கள் எனக்களித்துள்ள இந்த பாராட்டுக்கும் நான் எங்கள் குடும்பத்தினரின் இதயம் நெகிழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். தன்னுடைய தாயின் திரையுலகப் பணியைப் பாராட்டி அவருடைய 75ஆம் ஆண்டு நிறைவு விழா சமயத்தில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் ஒரு பாராட்டு விழா நடந்ததையும், நூற்றாண்டு விழாவை தமிழக மக்களின் சார்பில் தமிழக அரசு ஒரு பிரம்மாண்ட விழா நடத்தி பாராட்டியதையும் கமலா மணி நினைவு கூர்ந்தார். தன் தாய் 1964இல் காலமாகிவிட்டதால் அவர் சம்பந்தப்பட்ட பல ஆவணங்கள் தங்களிடம் இல்லை, அவர் நடித்த படங்கள், அந்த படங்கள் சம்பந்தப்பட்ட பாட்டுப் புத்தகங்கள், புகைப்படங்கள் ஆகியவை இருந்தால் அவற்றை எங்களுக்கு அளித்தால் அவற்றை ஆவணப்படுத்த ஏதுவாக இருக்குமென்றார் அவர். திருவையாறு பாரதி இயக்கம், தில்லைத்தானம் மரபு பவுண்டேஷன், இங்கு வந்து பாராட்டிய பெரியோர்கள், விழாவில் கலந்துகொண்ட அன்பர்கள் அனைவருக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவர் சார்பிலும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார் கமலா.

முன்னதாக விழாவுக்கு வந்திருந்தவர்களை வரவேற்று உரையாற்றினார் பாரதி இலக்கியப் பயிலக இயக்குனர் வெ.கோபாலன். டி.பி.ராஜலட்சுமி பற்றிய வரலாற்றுச் செய்திகளையும், அவர் நடித்த சில திரைப்படக் காட்சிகளையும் பாரதி இயக்கம் ஆவணப்படுத்தி திரையிட்டது. விழாவில் தேனிசைச் செல்வன் ராஜாஸ்ரீவர்ஷன் குழுவினரின் பழைய திரையிசைப் பாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

பாரதி இயக்கத்தின் தலைவர் நீ.சீனிவாசன் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை வழக்கறிஞர் நா.பிரேமசாயி, நீ.சீனிவாசன், பாரதி இலக்கியப் பயிலகத்தின் இயக்குனர் வெ.கோபாலன், பாரதி இயக்க அறங்காவலர் ப.இராஜராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.


Thursday, November 21, 2013

நாணயங்கள் எங்கே தயாரிக்கப் படுகின்றன

இந்திய நாணயங்கள் எங்கே தயாரிக்கப் படுகின்றன என்பது தெரியுமா?


இந்திய ரூபாய் நோட்டுக்கள் நாசிக் நகரத்தில் அச்சிடப்படுகிறது என்பது தெரியும். இந்திய நாணயங்கள் எங்கே தயாரிக்கப்படுகின்றன என்பது தெரியுமா?

டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் ஐதராபாத் ஆகிய நகரங்களில் தயாரிக்கப்படுகின்றன. எந்தக் காசு எந்த நகரத்தில் தயாரிக்கப்பட்டது என்பதற்கும் ஒரு குறி இடப்படுகிறது. நாணயங்களின் அடியில் அது தயாரிக்கப்பட்ட ஆண்டு குறிப்பிடப்பட்டிருக்கும், அதைப் பார்த்திருப்பீர்கள்.

அத்தோடு அதன் கீழ் ஒரு குறியும் இடம்பெற்றிருக்கும். அந்தக் குறியை வைத்து அந்த நாணயம் எந்த ஊரில் தயாரிக்கப்பட்டது என்பதை அறியமுடியும். நாணயத்தில் உள்ள ஆண்டுக்குக் கீழே

ஒரு புள்ளி இருந்தால் அது டெல்லியிலும்

டைமண்ட் வடிவம் இருந்தால் அது மும்பையிலும்

நட்சத்திர வடிவம் இருந்தால் அது ஐதராபாத்திலும்

எந்தக் குறியீடும் இல்லாமல் இருந்தால் அது கொல்கத்தாவிலும் தயாரிக்கப்பட்டது ஆகும்.

சரி!.............. உங்கள் பையில் உள்ள நாணயத்தினை எடுங்கள்; எந்தக் குறி இருக்கிறது என்று பாருங்கள். அது எந்த ஊரில் தயாரானது என்பது தெரிந்துவிடும்.

நன்றி: "கோமுகி கல்வி" பத்திரிகை நவம்பர் 2013. ஆசிரியர் திரு கி.முத்தையன்.

Wednesday, November 20, 2013

T.P. ராஜலக்ஷ்மி அவர்களின் நூற்றாண்டு விழா

தமிழ்த்திரை உலகின் முதல் கதாநாயகி
    

                   T.P. ராஜலக்ஷ்மி அவர்களின்
                                       நூற்றாண்டு விழா
                       இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா

அன்புடையீர்!

வணக்கம். இந்திய நாத்தின் கலை, கலாச்சாரம், நாகரிகம் மற்றும் அரசியல் இவைகளின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்து வந்துள்ள இந்திய சினிமா அதன் நூற்றாண்டு விழாவினை கொண்டாடி வருகிறது. அத்துடன் இணைந்து தமிழ் சினிமாவின் முதல் கதாநாயகி, முதல் பெண் திரைப்பட இயக்குனர், "சினிமா ராணி" எனும் விருது பெற்ற திருமதி T.P.ராஜலக்ஷ்மி அவர்களின் நூற்றாண்டு விழாவும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இசை, நா
கம், சலனப்படம், பேசும்படம் என அவர் சென்ற இங்களிலெல்லாம் சாதனைகள் நிகழ்த்திய அந்தப் பெருமைக்குரிய பெண்ணின் நூற்றாண்டு விழா அவர் பிறந்த திருவையாறு நகரத்தில் கொண்டாடப் படவுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் திருமதி T.P.ராஜலக்ஷ்மி அவர்களின் திருமகள் திருமதி கமலா மணி அவர்கள் பாராட்டப் படவுள்ளார்கள். இந்நிகழ்ச்சியில் அவர் நடித்த சில படக்காட்சிகளும், வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கமும் வெளியிடப் படவிருக்கின்றன. பெருமை மிகு இவ்விழாவில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறோம்.


நாள்: 23-11-2013 சனிக்கிழமை மாலை 4.30 மணி
இடம்: A.N.S. திருமண மண்டபம், பேருந்து நிலையம் அருகில், திருவையாறு.

நிகழ்ச்சி நிரல்:
23-11-2013 சனிக்கிழமை:

மாலை 4.30 மணி: படக்காட்சி "சினிமாராணியின் சினிமா"
மாலை 5.15 மணி: திரை இசை அரங்கு.
தேனிசைச் செல்வன் திரு ராஜாஸ்ரீவர்ஷன்

மாலை 6.00 மணி பாராட்டரங்கம்:

வரவேற்புரை: திரு வெ.கோபாலன், இயக்குனர்,
பாரதி இலக்கியப் பயிலகம்.

தலைமை: முனைவர் குமாரசாமி தம்பி
ரான் சுவாமிகள்
கட்டளை விசாரணை, தருமையாதீனம், திருவையாறு.

சிறப்புரை: திரு
டெல்லி கணேஷ், திரைப்படக் கலைஞர்.

டி.பி.ராஜலக்ஷ்மி அவர்களின் வாழ்க்கை வரலாற்று இதழை வெளியிட்டு வாழ்த்துரை:
திரு இரா. முத்து, அரசு கலை பண்பாட்டுத் துறை 

பாராட்டுரை: தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக நாடகத்துறை முன்னாள் தலைவர்
திரு சே. இராமானுஜம் அவர்கள்.

ஏற்புரை: திருமதி டி.பி.ராஜலக்ஷ்மி அவர்களின் புதல்வியார்
திருமதி கமலா மணி அவர்கள்.
நன்றியுரை: திரு நீ.சீனிவாசன், செயலாளர், பாரதி இயக்கம்.
அனைவரும் வாரீர்! 
அழைப்பின் மகிழ்வில்
பாரதி இலக்கியப் பயிலகம் - பாரதி இயக்கம், திருவையாறு
மரபு பஃவுண்டேஷன், தில்லைஸ்தானம்.

Saturday, November 16, 2013

பாரத ரத்னா விருதுகள்



இந்தியப் பிரதமர் இன்று இருவருக்கு பாரத ரத்னா விருது அளிக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். இவ்விருவரில் ஒருவர் விளையாட்டுத் துறையில் சிறப்பான சாதனைகளைச் செய்துள்ள டெண்டுல்கர், மற்றொருவர் விஞ்ஞானி. பாரத ரத்னா விருது இந்திய அரசு வழங்கும் தலையாய விருது. இதுவரை இவ்விருதினைப் பெற்றவர்கள் 41பேர். இப்போது வழங்கப்படுகின்றவர்களையும் சேர்த்து 43 பேராக ஆகின்றனர்.

பாரத ரத்னா விருது 1955 ஜனவரி மாதம் இரண்டாம் தேதியன்று அப்போதைய குடியரசுத் தலைவர் பாபு ராஜேந்திர பிரசாத் அவர்களால் தொடங்கப்பட்டது. தொடக்க காலத்தில் உயிரோடு இருப்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்ட காரணத்தால் மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், வல்லபாய் படேல் போன்ற தலைசிறந்த தலைவர்களுக்கு இது வழங்கப்படவில்லை. இந்தக் காரணத்தையொட்டி 1966ஆம் ஆண்டில் காலஞ்சென்ற சாதனையாளர்களுக்கும் இவ்விருது வழங்கப்படத் தொடங்கியது. அதன் பிறகு காலஞ்சென்ற 12 சாதனையாளர்கள் இவ்விருதினைப் பெற்றிருக்கிறார்கள்.

இதில் ஒரு நிகழ்ச்சி குறிப்பிடத் தக்கது.1992இல் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களுக்கு இவ்விருது அறிவிக்கப்பட்டது. அவருடைய மரணம் சந்தேகத்துக்குரியதாக வரலாற்றில் பேசப்படுவதால் ஒருவர் வழக்கு தொடர்ந்திருந்தார். அதனையொட்டி அந்த ஆண்டில் அவருக்குக் கொடுக்க வேண்டிய விருது தவிர்க்கப்பட்டது.

இந்திரா காந்தி தேர்தலில் தோற்று ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்தில் அதாவது 13-7-1977 தொடங்கி 1980 குடியரசு நாள் வரையிலான காலகட்டத்தில் இந்த விருது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்த விருதை உலகத்தின் எந்தப் பகுதியைச் சேர்ந்தவராயினும் பெறும் தகுதியுடையவராவர். இந்தியர்களுக்கு மட்டும் எனும் விதி இல்லை. அப்படி வெளி நாட்டில் பிறந்த அன்னை தெரசாவுக்கு 1980ஆம் ஆன்டிலும், கான் அப்துல் கபார் கான் அவர்களுக்கு 1987லும் தென் ஆப்பிரிக்க சுதந்திரப் போராட்ட வீரர் காந்திஜியைத் தன் குருவாக ஏற்றுக் கொண்டிருந்த நெல்சன் மண்டேலாவுக்கு 1990லும் இவ்விருது வழங்கப்பட்டது.

இவ்விருது வழங்கப்படுவது குறித்து சில சட்டச் சிக்கல்கள் ஏற்பட்டு இருக்கின்றன. அவைகளையெல்லாம் கடந்துதான் இப்போதும் இது வழங்கப்பட்டு வருகிறது.

இந்த "பாரத ரத்னா" விருது என்பது வட்டவடிவிலான ஒரு தங்க மெடலில், தேசிய சின்னம் பொறிக்கப்பட்டு, நாட்டுக் குறிக்கோளும் எழுதப்பட்டிருக்கும். தொடக்க காலத்தில் அரசிலை வடிவில் அமைக்கப்பட்டு அதில் பாரத ரத்னா எனும் எழுத்துக்கள் தேவ நாகரி எழுத்தில் பொறிக்கப்பட்டிருந்தன. மெடலின் பின்புறம் தேசிய சின்னமும் குறிக்கோளும் பொறிக்கப்பட்டிருந்தன.

2011ஆம் ஆண்டில் இந்த விருதுகளை விளையாட்டுக்களில் சாதனை புரிந்த வீரர்களுக்கும் அளிக்கலாம் என்று தீர்மானித்து முடிவு செய்தனர். தேசியப் பணிகளில் முன்னிலை வகித்தவர்கள், சிறப்பாகச் செயல்பட்டவர்களுக்கு மட்டும் கொடுக்கப்பட்ட இந்த விருது அதன் பின் விளையாட்டு வீரர்களுக்கும் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. கலை, இலக்கியம், அறிவியல் துறைகளில் சாதனையாளர்கள் தவிர இப்போது சச்சின் டெண்டுல்கருக்குக் கொடுக்கப்பட விருப்பதன் மூலம் விளையாட்டு வீரர்களும் இந்த விருதால் கெளரவிக்கப்பட விருக்கின்றனர். இந்த விருது பெறும் இளைய வயதினராக தன்னுடைய 40ஆவது வயதில் டெண்டுல்கர் இதனைப் பெறுகிறார்.

இந்த விருது பெற்றவர்களில் வயதில் மிகவும் மூத்தவர் தோண்ட் கேஷவ் கார்வே தான் தன்னுடைய 100ஆவது வயதில் இதனைப் பெற்றவர். காலஞ்சென்றவர்களுக்கு வழங்கப்பட்ட வகையில் சர்தார் வல்லபாய் படேல் 75 வய்தானவர் இதனைப் பெற்றவர். இவ்விருதினை பெற்றவர்களின் விவரமும், பெற்ற ஆண்டும் கீழே காணலாம்.

வ.எண்.                                   பெயர்                                                               வாழ்ந்த காலம்        விருது பெற்ற ஆண்டு.

1. சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார்          1878 1972                1954
2. சர் சி.வி.ராமன்                                                          1887 1970                1954
3. டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்             1888 1975                1954
4. பகவான் தாஸ்                                                           1869 1958                1955
5. விஸ்வேஸ்வரையா                                              1861 1962                 1955
6. பண்டிட் ஜவஹர்லால் நேரு                              1889 1964                 1955
7. கோவிந்த் வல்லப் பந்த்                                          1887 1961                 1957
8. டி.கே.கார்வே                                                              1858 1962                 1958
9. டாக்டர் பி.சி.ராய்                                                       1882 1962                 1961
10. பி.டி.தாண்டன்                                                          1882 1962                 1961
11. பாபு ராஜேந்திர பிரசாத்                                         1884 1963                 1962
12. டாக்டர் ஜாகிர் உசேன்                                           1897 1969                 1963
13. பி.வி.கானே                                                                1880 1972                1963
14. லால் பகதூர் சாஸ்திரி                                          1904 1966                 1966
15. இந்திரா காந்தி                                                           1917 1984                 1971
16. வி.வி.கிரி                                                                     1894 1980                 1975
17. கு.காமராஜ்                                                                  1903 1975                1976
18. மதர் தெரசா                                                                 1910 1997                1980
19. வினோபா பாவே                                                      1895 1982                1982
20. கான் அப்துல் கஃபார் கான்                                    1890 1988                1987
21. எம்.ஜி.ராமச்சந்திரன்                                                1917 1987               1988
22. பி.ஆர்.அம்பேத்கர்                                                     1891 1956                1990
23. நெல்சன் மண்டேலா                                               1918                         1990
24. ராஜீவ் காந்தி                                                               1944 1991                1991
25. வல்லபாய் படேல்                                                    1875 1950                1991
26. மொரார்ஜி தேசாய்                                                    1896 1995                1991
27. மெளலானா அபுல் கலாம் ஆசாத்                      1888 1958                1991
28. ஜே.ஆர்.டி.டாட்டா                                                     1904 1993               1992
29. சத்யஜித் ரே                                                                  1922 1992                1992
30. ஏ.பி.ஜே.அப்துல் கலாம்                                          1931                         1997
31. குல்ஜாரிலால் நந்தா                                                1898 1998                1997
32. அருணா ஆசஃப் அலி                                               1908 1996                1997
33. எம்.எஸ்.சுப்புலட்சுமி                                               1916 2004                1998
34. சி.சுப்ரமணியம்                                                          1910 2000                 1998
35. ஜெயப்பிரகாஷ் நாராயண்                                     1902 1979                1999
36. பண்டிட் ரவிஷங்கர்                                                 1920 2012                 1999
37. அமர்த்தியா சென்                                                      1933                          1999
38. கோபிநாத் போர்டோலோய்                                 1890 1950                 1999
39. லதா மங்கேஷ்கர்                                                      1929                          2001
40. பிஸ்மில்லா கான்                                                     1916 2006                 2001
41. பீம்சேன் ஜோஷி                                                        1922 2011                 2008
42. சி.என்.ஆர்.ராவ                                                           1934                          2014
43. சச்சின் டெண்டுல்கர்                                                1973                          2014

மெளலான அபுல் கலாம் ஆசாத் இந்த விருதுக்கு ஆட்களைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் இருந்த போது, அவருக்குக் கொடுக்க வேன்டுமெங்கிற கோரிக்கை எழுந்தபொது அதனை அவர் வாங்க மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத் தக்கது. அந்தக் காலத்தில் எத்தனை நேர்மையோடு தலைவர்கள் இருந்தார்கள் என்பதற்கு இது ஒரு எடுத்துக் காட்டு.

புதிதாக இந்த ஆண்டு விருதுகள் அறிவித்திருக்கிற இந்த நேரத்தில் விருது பெற்ற அத்தனை பேரையும் நினைவில் கொண்டு வந்து வாழ்த்துவோம், வணங்குவோம்.