இராமாயண காப்பியம் இந்திய மொழிகள் பலவற்றில் பலரால் இயற்றப்பட்டிருந்தாலும், அவைகளுக்கெல்லாம் மூலநூலாகக் கருதப்படுவது வான்மீகி முனிவரின் மூலநூலான இராமாயணம்தான். நாரத முனிவரின் அனுக்கிரகத்தினால் பிரம்ம ரிஷியாக ஆனவர் வான்மீகி. இராமபிரானும் சீதையும் வாழ்ந்த நாளிலேயே வாழ்ந்தவர் வான்மீகி என்பதால் இவரது இராமாயணம் காப்பியமானது.
இராமாயணத்தையும் இந்தக் காப்பிய நாயகர் நாயகியான இராமன் சீதையைப் பற்றிக் கேள்விப்பட்டிராத மனிதரே இமயம் தொடங்கி குமரி வரையிலான நம் பாரத நாட்டில் இருக்க முடியாது. இராமபிரான் பிறந்த நாளை இப்போதும் ஸ்ரீ ராம நவமி என்று கொண்டாடுகிறோம். ஆங்காங்கே ஆலயங்களிலும், மடாலயங்களிலும் இராம காப்பியத்தைப் புலவர்களும், பாகவதர்களும் சொற்பொழிவாற்றிக் கொண்டிருக்கிறார்கள். எத்தனை முறை கேட்டாலும் அவற்றைத் திரும்பத் திரும்ப கேட்கும் பழக்கம் நம் மக்களிடையே இருந்து வருகிறது.
இராமனுடைய பயணம் என்பதே இராம அயணம் என்று சொல்கிறோம். வான்மீகி இராமாயணத்தை வடமொழியில் இயற்றியிருக்கிறார். கவிதை வடிவில்தான் நம் நாட்டுக் காப்பியங்கள் எல்லா மொழிகளிலும் சிறப்பாக இயற்றப்பட்டிருக்கின்றன, இராமாயணமும் அதற்கு விதிவிலக்கல்ல. பாரதத் திருநாட்டின் தலைசிறந்த காப்பியங்களில் ஒன்றான இராமாயணம்தான் முதன் முதல் இப்படி வடமொழியில் இயற்றப்பட்ட நூல் என்பதால் இதனை 'ஆதி காவியம்' என்றும், வான்மீகியை ஆதிகவி என்றும் அழைக்கிறோம்.
இசையோடு பாடக்கூடிய வகையில் அமைக்கப்பட்டிருப்பது இராமாயணம். குயில் கூவுவதை நாம் அறிவோம். இராமாயணத்தை இசையோடு கூடி பாடும்போது குயிலின் குரல் நமக்குக் கேட்கும் வகையில் பாடல்கள் அமைந்துள்ளன. இராமாயணத்தைப் படிக்கத் துவங்குவோர், அதன் ஆதிகவியான வான்மீகியை வணங்கிவிட்டுத்தான் படிக்கத் துவங்குகின்றனர். வடமொழியில் வான்மீகம் என்றால் கரையான் புற்று என்று பொருள்படும். தான் தவமியற்ற ஓரிடத்தில் உட்கார்ந்து தியானத்தில் இருந்தபோது அவரைச் சுற்றி கரையான் புற்று எழுப்ப அதனுள் இருந்த தவமியற்றியதால் இவருக்கு அந்தப் பெயர் வந்தது என்பர். வான்மீகி அந்த கரையான் புற்றினின்றும் எப்படி வெளிப்போந்தார் என்பதே ஒரு சுவாரசியமான வரலாறு.
இராம பிரான் காலத்தில் வாழ்ந்தவர் வான்மீகி என்பதைப் பார்த்தோம். அவருடைய காலம் திரேதா யுகம் என்பர். அப்போது எங்கும் அடர்ந்த காடுகளும், அந்தக் காடுகளினூடே கங்கை நதியும் இருந்தன. அந்தக் காட்டின் கங்கைக் கரையோரம் பல தவசிகள் வாழ்ந்து வந்தனர். அவர்களில் ஒருவர் பிரசேதசர். அவருடைய புதல்வன் இரத்னாகரன். இந்த மகன் இளம் வயதினனாய் இருந்தபோது ஒரு நாள் காட்டின் உட்பகுதிக்குள் செல்கிறான். அங்கு இவன் விளையாடிக் கொண்டிருந்த போது வழிதவறிப் போய் பயந்து அழத் தொடங்கினான். அப்போது காட்டில் வேட்டையாடிக் கொண்டிருந்த ஒரு வேடன் அங்கு வந்தான். காட்டில் அழுதுகொண்டிருந்த அந்த அழகிய குழந்தையை தனக்கு பிள்ளை இல்லை என்பதால் அந்த வேடன் குழந்தையைத் தன்னுடன் எடுத்துச் சென்றான்.
குழந்தையைக் காணாமல் அவன் தந்தை குழந்தையைத் தேடத் தொடங்கினார். எங்கும் தேடியும் அவன் கிடைக்காததால் அவனை ஏதோ மிருகம் அடித்துச் சாப்பிட்டுவிட்டது என்று பெற்றோர் எண்ணி மிகுந்த வருத்தமடைந்து கதறினர். குழந்தையை எடுத்துச் சென்ற வேடன் குழந்தையைத் தன் மனைவியிடம் கொடுத்து அருமை பெருமையாக அதனை வளர்த்தனர். குழந்தை ரத்னாகரன் வேடர் தம்பதியினரின் அன்பில் தன் சொந்த பெற்றோரை மறந்தான். வேட்டுவரிடையே வளர்ந்த ரத்னாகரனும் நல்ல திறமையான வேடனாக உருவெடுத்தான்.
காட்டில் திறமையான வில்லாளனாக வளர்ந்த ரத்னாகரன் வளர்ந்து கட்டிளம் காளையாக இருந்தபோது அவனுக்குத் திருமணம் செய்விக்க வேட்டுவ தம்பதியர் முயற்சியில் ஈடுபட்டனர். மற்றொரு வேட்டுவரின் மகளைப் பார்த்து இவனுக்குத் திருமணம் செய்வித்தனர். சில ஆண்டுகளில் ரத்னாகரன் தம்பதியருக்குச் சில குழந்தைகள் பிறந்தன. அவன் குடும்பம் பெரிதானது. அத்தனை பேருக்கும் உணவும் உடையும் இருக்கையும் தேவை இருந்ததால் அவன் கொள்ளை அடிக்கத் தொடங்கினான். காட்டு வழியில் பயணம் செய்வோரைக் குறிவைத்து வழிப்பறி செய்து வந்தான்.
ஒரு நாள் ரத்னாகரன் காட்டில் வழிப்போக்கர் யாரும் வருகிறார்களா என்பதை ஒளிந்திருந்து கவனித்து வந்தான் இரத்னாகரன். அந்த நேரத்தில் நாரத முனிவர் தன் வாத்தியத்தை இசைத்துக் கொண்டு ஸ்ரீமன் நாராயணனின் திருநாமத்தைச் சொல்லிக்கொண்டு அந்த வழியில் வந்தார். அவரை இரத்னாகரன் வழிமறித்தான். தன் கையில் இருந்த தடியை ஓங்கிக் கொண்டு நாரதரிடம் இருப்பதை தந்துவிடு இல்லையேல் உன்னைக் கொன்றுவிடுவேன் என்றான் இரத்னாகரன். தேவலோகத்துக்கும் பூமிக்கும் சர்வ சாதாரணமாக பயணம் செய்யும் நாரதர் இவனைக் கண்டு அஞ்சவில்லை. புன்னகையுடன் நாரதர் இரத்னாகரனைப் பார்த்துச் சொன்னார், "அன்பனே, என்னிடம் இருப்பதெல்லாம் இந்த பழைய வீணை ஒன்றுதான். இடையில் பார், கிழிந்த உடைகள். இவை உனக்குத் தேவை என்றால் எடுத்துக் கொள்" என்றார்.
திகைத்துப் போன இரத்னாகரன் நாரதரை ஏறிட்டுப் பார்த்தான். அவர் முகத்தில் பயமோ, கோபமோ இல்லை. அமைதியாகக் காணப்பட்டார். இந்த சூழ்நிலையில் இப்படி அமைதி காக்கும் இவர் யார் என்று எண்ணத் தொடங்கினான் இரத்னாகரன். நாரதர் அருகிலிருந்த மரத்தடியில் அமர்ந்து கொண்டு இசைக்கத் தொடங்கினார். அந்த இசையில் மயங்கி இரத்னாகரன் கீழே அமர்ந்து கேட்டான். இசைத்து முடித்த பின் நாரதர் அவனிடம் சொன்னார், "இளைஞனே! திருடுவது பாவமல்லவா? மிருகங்களைக் கொல்வது அதனினும் மகாபாவமல்லவா. நீ ஏன் இப்படிப்பட்ட பாவச் செயல்களில் ஈடுபட்டிருக்கிறார்?" என்றார்.
"நான் என்ன செய்வேண் ஐயா! எனக்குப் பெரிய குடும்பம். வயதான பெற்றோர்கள். இப்படி இவர்கள் அனைவரையும் காப்பாற்ற வேண்டுமே, அவர்களுக்காக அல்லவா நான் இந்தப் பாவச் செயல்களில் ஈடுபட நேர்ந்துவிட்டது. இது பாவம்தான் ஆனால் என்ன செய்வது?" என்றான்.
புன்னகையுடன் நாரதர் சொன்னார், "அன்பனே! நீ செய்யும் பாவங்களில் பயன்பெறும் உன் குடும்பத்தார் எவரேனும் உன் பாவத்தில் பங்கு பெறுவார்களா, போய் அவர்களிடம் கேட்டுவிட்டு வந்து என்னிடம் சொல்" என்று சொல்லி அவனை அனுப்பி வைத்தார்.
இவர் ஏதோ தந்திரம் செய்து என்னை அனுப்பிவிட்டுத் தப்பிக்கப் பார்க்கிறாரோ என்றெண்ணி சந்தேகம் கொண்டு நாரதரைப் பார்த்தான் இரத்னாகரன். இவன் எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்டு நாரதர் சொன்னார், அன்பா! நான் தப்பி ஓடிவிடுவேன் என்று நீ சந்தேகப்படுவது போல் தெரிகிறது. உனக்கு அப்படி சந்தேகமிருந்தால் என்னை இந்த மரத்தில் கட்டிவைத்துவிட்டுப் போ" என்றார்.
அதுவும் சரிதான் என்று இரத்னாகரன் நாரதரை அந்த மரத்தில் வைத்து கொடிகளால் கட்டிவிட்டுப் போனான். வீடு சென்ற அவன் தன் தந்தையிடம் சென்று, "அப்பா! நான் வழிப்பறி செய்து வழிப்போக்கர்களிடம் கொள்ளை அடித்து வருகிறேன். இதெல்லாம் உங்களுக்காகத்தான் செய்கிறேன். இது பாவம் என்பது எனக்குப் புரிகிறது. இதனால் எனக்குக் கிடைக்கும் பாவத்தை நீங்களும் பங்கு போட்டுக்கொள்ளத் தயாரா?" என்றான் இரத்னாகரன்.
தந்தைக்குக் கோபம் வந்தது, அவர் சொன்னார், "பாவங்களை நீ புரிந்துவிட்டு, அதன் பலனை என்னை ஏற்றுக் கொள்ளச் சொல்கிறாயா? போ! முட்டாளே, உன் பாவங்களை நான் பங்கிட்டுக் கொள்ள முடியாது. உன் வினைகளின் பலன் உனக்கே ஆகும், போ" என்றார். இதுபோலவே அவன் தன் தாயிடமும், மனைவியிடமும், தன் பிள்ளைகளிடமும் கேட்க அவர்களும் அவன் பாவத்தைப் பங்கிட்டுக் கொள்ள தயாரில்லை எனத் தெரிவித்து விட்டனர்.
இரத்னாகரனின் அறிவுக்கண்கள் திறந்து கொண்டன. அவரவர் செய்யும் பாவத்துக்கு அவரவர்களே பொறுப்பு என்பதை உணர்ந்து கொண்டான். அதை வேறு எவரும் பங்கிட்டுக் கொள்ளமாட்டார்கள் என்பதையும் புரிந்து கொண்டான். ஓடினான், தான் கட்டிவைத்துவிட்டு வந்த நாரத முனிவரிடம். அவர் கட்டுகளை அவிழ்த்துவிட்டுச் சொன்னான், "முனிவரே, நான் தவறிழைத்துவிட்டேன், நான் செய்த பாவங்களின் பலனை வேறு எவரும் பங்கிட்டுக் கொள்ள மறுத்துவிட்டனர். எனக்கு நல்ல வழிகாட்டுங்கள், உங்கள் திருவடிகளே சரணம்" என்றான் நாரதரிடம்.
நாரதர் அவனை அன்போடு தூக்கி அரவணைத்துக் கொண்டு சொன்னார், "பயம் கொள்ளாதே இளைஞனே, உன் பாவங்களைக் களைய நான் ஒரு வழி சொல்லுகிறேன், கேள்." என்று சொல்லி ஓரிடத்தில் அமர்ந்து இராம நாமத்தை ஜபம் செய்யச் சொல்லிக் கொடுத்தார். அவனும் ஓர் மரத்தடியில் அமர்ந்து 'ராம' மந்திரத்தைக் கண்மூடி ஜபம் செய்யத் தொடங்கினான்.
உட்கார்ந்த இடத்தைவிட்டு அசையாமல், ஊண், உறக்கம் இல்லாமல் ராம நாம ஜபத்தில் மூழ்கிக் கிடந்தான் இரத்னாகரன். அப்படி அவன் பல காலம் தவமிருந்த சமயத்தில் அவனைச் சுற்றி கரையான் புற்று ஒன்றை உருவாக்கிவிட்டது. அந்த புற்றினுள் இரத்னாகரன் குரல் மட்டும் 'ராம' நாமம் ஒலிப்பது கேட்டுக் கொண்டிருந்தது.
பல ஆண்டுகள் கழித்து நாரத முனிவர் மீண்டும் அந்த வழியில் வந்தார். வழியில் இருந்த கரையான் புற்றிலிருந்து ஜபம் செய்யும் ஒலிமட்டும் கேட்டுக் கொண்டிருந்தது. நாரதர் அந்த புற்றின் அருகில் வந்து அவரும் இராம நாமத்தைச் சொல்லியதும் கண்விழித்த இரத்னாகரன் நாரதரை வணங்கினான். அவனுடைய கடுமையான தவத்தைக் கண்டு மகிழ்ந்து நாரதர் அவனுக்கு பிரம்மரிஷி என்று சொல்லி ஆசி வழங்கினார். புற்றினுள் இருந்ததால் அவனை வான்மீகி என்றும் பெயரிட்டு அழைத்தார். அப்படிப்பட்ட வரலாற்றையுடைய வான்மீகி காட்டினுள் கங்கைக் கரையில் ஆசிரமம் வைத்து வாழ்ந்து வரும் போது அவர் ஆசிரமத்துக்கு ராமனும் சீதையும் வந்திருந்து அவர் ஆசியைப் பெற்றுச் சென்றனர்.
பின்னர் அவர் இராமாயணத்தை இயற்றிய வரலாறும் குறிப்பிடத் தக்கது. ஒருநாள் நாரதர் வான்மீகியின் ஆசிரமத்துக்கு எழுந்தருளினார். வந்த விருந்தினரை முனிவர் அன்போடும் மரியாதையோடும் வரவேற்றார். அப்போது நாரதரிடம் வான்மீகி கேட்டார், "ஐயனே! தாங்கள் மூவுலகுக்கும் சஞ்சரிக்கிறீர்கள். அங்கு நடப்பவைகள் எல்லாம் உங்களுக்குத் தெரியுமல்லவா, ஆகையால் உங்களிடம் கேட்கிறேன், இம்மூன்று உலகிலும் மிக உயர்ந்த பண்புடையோன் யார் என்பதைச் சொல்லுங்கள்" என்றான். அதற்கு நாரதர் நீ நினைக்கும் அனைத்து நல்ல பண்புகளும் கொண்ட ஒருவன் ஸ்ரீ ராமனே என்றார். அப்படியென்றால் அவரைப் பற்றி எனக்கு விரிவாக எடுத்துரையுங்கள் என்றார் வான்மீகி. நாரதரும் அவ்வாறே இராமனது வரலாற்றை விரிவாக எடுத்துரைத்தார். இதனைக் கேட்ட வான்மீகி மகிழ்ந்தார், நாரத முனிவரை வணங்கி ஆசி பெற்றார். நாரதரும் வான்மீகியை வாழ்த்திவிட்டுச் சென்றார்.
சில நாட்கள் கழிந்தபின் வான்மீகி கங்கைக்கு நீராடச் சென்றார். பாரத்வாஜர் எனும் பெயருடைய அவருடைய சீடர் ஒருவரும் உடன் இருந்தார். வழியில் தமசா நதி நிர்மலமான் நீரோடு ஓடிக் கொண்டிருந்ததைச் சீடரிடம் காட்டி, இதோ பார் இந்த நதி எத்தனை தூய்மையாக ஓடிக் கொண்டிருக்கிறது என்றார். இங்கு இன்று நான் நீராடுவேன் என்றார்.
அந்த ஆற்றினுள் இறங்குவதற்கு ஏற்ற இடத்தை அவர் தேடினார். எங்கும் பறவைகளின் இன்னிசையும், ஒன்றையொன்று அழைக்கும் ஒலிகளும் கேட்டுக் கொண்டிருந்தன. அப்போது உயரே ஒரு மரத்தின் கிளையில் இரு பறவைகள் ஒன்றையொன்று அன்போடு குலவிக் கொண்டு உட்கார்ந்திருப்பதைக் கண்டு மனம் மகிழ்ந்தார். அப்போது திடீரென்று ஒரு பறவை அம்பு ஒன்றினால் தாக்கப்பட்டு கீழே விழுந்தது. அது ஆண் பறவை. இதைக் கண்டு பெண் பறவை கீச் கீச்சென்று கத்திக் கொண்டு துக்கத்தோடு கீழே விழுந்த பறவையைச் சுற்றிச்சுற்றி வந்தது. வான்மீகியின் உள்ளம் உருகிவிட்டது. சுற்றிலும் பார்த்தார் யார் இந்த பறவை மீது அம்பு எய்தது என்று. அப்போது ஒரு வேடன் தன் கையில் வில் அம்புகளுடன் வந்து அந்த பறவை தனக்கு என்றான். அசாத்திய கோபமடைந்த வான்மீகி அவனுக்கு சாபமிட்டார், "அன்போடு கொஞ்சிக் கொண்டிருந்த இந்த ஜோடிப் பறவைகளில் ஒரு பறவையை அம்பு எய்து கொன்ற நீ விரைவில் இறந்து போவாய்" என்றார். அப்படி அவர் இட்ட சாபம் வடமொழியில் ஒரு கவிதை வடிவாக உருவெடுத்து வந்தது. அவருடைய வருத்தம் அரியதொரு சம்ஸ்கிருத ஸ்லோகமாக வெளிவந்தது.
காதல் ஜோடிப் பறவைகளில் ஒன்றை அம்பு எய்து கொன்றது வான்மீகியின் உள்ளத்தை வாட்டியது, அந்த வருத்தம் சாபமாக உருவெடுத்தது. கோபப்பட்டு அந்த வேடனை சபித்தமைக்கு அவர் மனம் வருத்தமடைந்தது, அதைத் தன் சீடன் பாரத்வாஜரிடமும் சொன்னார். அவர் சொன்ன சாபத்தின் வரிகளைக் கேட்டு சீடமும் வியந்தான், இது ஒரு கவிதையாக உருவெடுத்திருக்கிறதே என்று. அந்த வரிகளே அவர் மனத்தில் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது.
இப்படி அந்த சாப வரிகளில் மனத்தை செலுத்தியபடி ஆசிரமம் வந்த வான்மீகி முனிவர் எதிரில் பிரம்ம தேவன் தோன்றினான். பிரம்மா வான்மீகியிடம் "ஓ, பிரம்ம ரிஷியே! உன் வாக்கில் உதித்த அந்த சாப வரிகள் என் அருளினால் உன் நாவில் உருக்கொண்டது. இந்த கவிதை வடிவிலேயே நீ இராமாயணத்தை இயற்றுவாயாக" என்றார் பிரம்மா. நாரதர் உமக்கு இராம காதையைச் சொல்லியிருக்கிறார் அல்லவா? அதை நீ எழுத எழுத அந்த இராமாயணக் காட்சிகள் அனைத்தும் மீண்டும் உமது மனக் கண்களில் தோன்றும் என்றார் பிரம்மா. நீ சொல்லும் ஒவ்வொரு சொல்லும் சத்திய வாக்காக அமையும். இந்த பூவுலகில் மலைகளும், நீரும், நதிகளும், சூரிய சந்திரர்களும் இருக்கும் வரை நீ இயற்றும் இராமாயணமும் இருக்கும். மக்கள் அதனைப் படித்தும் கேட்டும் மகிழ்வார்கள் என்று வரமளித்தார் பிரம்மா.
வான்மீகி மணையின் மீதமர்ந்து இராமனை வணங்கி இராமாயணத்தை எழுதத் தொடங்கினார். அந்த கவிதை வரிகளை பின்னர் இராமனின் மக்களாக இரட்டையர்களாகப் பிறகு லவன் குசனுக்குத்தான் சொல்லி வைத்தார். அவர்கள் வான்மீகியின் ஆசிரமத்துக்கு வந்த கதை இன்னொரு பெரிய கதை. அதைத் தனியாகப் பார்க்கலாம்.
No comments:
Post a Comment